World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistan intensifies military operations in Afghan border areas

ஆப்கான் எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகின்றது

By Vilani Peiris
4 November 2003

Back to screen version

வாஷிங்டனிலிருந்து வரும் அழுத்தத்திற்கு செவிமடுக்கும் வண்ணம் சென்றமாதம் பாகிஸ்தான் தனது எல்லையைத் தாண்டி ஆயுதம் தாங்கிய போராளிகள் ஆப்கனிஸ்தானுக்குள் புகுந்துவிடாது தடுக்கும் வகையில் தனது இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கின்றது. அமெரிக்காவிற்கு எதிரான சக்திகள் ஆப்கனிஸ்தானுக்குள் திடீர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடுவதை தடுப்பதற்கு தேவைப்படுகின்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு பாகிஸ்தான் தவிறிவிட்டதாக அமெரிக்க இராணுவமும், ஆப்கான் அரசாங்கமும் குற்றம் சாட்டி வந்தன.

பாக்கிஸ்தான் இராணுவத்தின்படி, அக்டோபர் மாதம் எல்லைப் பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் தலிபான் மற்றும் அல்கொய்தா அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் என்று சந்தேகப்படும் 230-பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் 10பேர் கொல்லப்பட்டனர். பத்து துருப்புக்கள் மாண்டனர். அக்டோபர் 2-ந்தேதி நடவடிக்கைகள் தொடங்கின. ஆப்கனிஸ்தானில் உள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் ஒருங்கிணைப்போடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தப்பியோடுகின்ற வழித்தடங்களை பீரங்கி பொருத்தப்பட்ட அமெரிக்க ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பு செய்தன.

பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளைச் சார்ந்த படைப்பிரிவுகளின் தளபதி ஜெனரல் அவ்ரக் ஜாய் பாகிஸ்தான் தரப்பில் இருந்து ஆப்கனிஸ்தானுக்கு செல்லுகின்ற ஏழு கணவாய் பகுதிகள் தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் எல்லைப்பகுதிகளில் வேலிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அக்டோபர் மாதம் எல்லைப்புற நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக 589-கண்காணிப்பு சாவடிகள் அமைக்கப்பட்டிருப்பதாக வடமேற்கு எல்லைப்புற மாகாண கவர்னர் Syed Iftikhar Hussain Shah குறிப்பிட்டார்.

ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் 25-இராணுவ ஹெலிகாப்டர் உதவியோடு பாகிஸ்தானின் விரைவு பதிற்செயல் படைப்பிரிவுகளை சேர்ந்த 100-க் கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். எல்லைப்பகுதி முழுவதிலும் எல்லை தாண்டிய நடமாட்டங்களை தடுக்க எடுக்கப்பட்டு வரும் விரிவான புலனாய்வு மற்றும் விமான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக ஆயிரக் கணக்கான கூடுதல் துருப்புக்கள் நிறுத்தப்பட்டன.

பாகிஸ்தானிய படைகள் கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டி வந்தது. அக்டோபர் ஆரம்பத்தில் மிகக் கடுமையான சண்டை நடைபெற்றதாக BBC- தகவல் தந்தது. அந்த மோதலில் ''அல்கொய்தா'' இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட 18-பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் எட்டுபேர் கொல்லப்பட்டனர். அடுத்தவாரம் ஆப்கான் எல்லைப் பகுதி நகரமான அங்கோர் அட்டாவில் இராணுவம் வீடுகளை அழித்தது, வாகனங்களை பறிமுதல் செய்தது. இந்த நடவடிக்கைகளால் உள்ளூர் மலைவாழ் மக்கள் ஆத்திரமும், வியப்பும் கலந்த உணர்விற்கு ஆட்பட்டதாக BBC வர்ணித்தது.

"அல்கொய்தா இயக்கத்தில் மிச்சம் இருக்கும் சக்திகள் தொடர்பாக நம்பகத் தன்மையுள்ள தகவல்கள் கிடைத்ததன்" அடிப்படையில்தான் நடவடிக்கைகள் தொடக்கப்பட்டதாக பாகிஸ்தான் வலியுறுத்திக் கூறியது. ''அல்கொய்தா'' இயக்கத்திற்கு பண உதவி செய்துவருவதாக கூறப்படும் எகிப்தில் பிறந்த கனடா நாட்டு குடிமகனான அபு அப்துர் ரஹ்மான் என்கின்ற அஹமது செய்யது காதிர் என்கின்ற அபு அப்துர் ரெஹ்மான் என்பவரைத் தேடுகின்ற முயற்சியில் இறங்கியிருப்பதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் ஆப்கான் எல்லைப்பகுதிகளில் ஒசாமா பின்லாடன் மற்றும் அவரது அதிகாரம் பெற்ற பதில் நபரான ஹய்மன் அல்சவாரி ஆகியோருடன் தலைமறைவாக உள்ளதாக கருதப்படுகின்றார் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அல்கொய்தா தலைவர் எவரும் கைது செய்யப்படவில்லை எனவே பாகிஸ்தான் இராணுவம் யாரைக் கொன்று வருகின்றது, கைது செய்வது யாரை என்பது தெளிவாகத் தெரியவில்லை. செச்சன்யர்கள், உஸ்பெக்கிகள், அல்ஜீரியர்கள் மற்றும் சில அரபுமொழி பேசுகின்றவர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்று அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள நான்கு பெண்கள் மற்றும் ஆறு குழந்தைகள் "வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்" என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் வகையில் எந்தவித ஆதாரத்தையும் அரசாங்கம் தரவில்லை.

"அல்கொய்தா மற்றும் தலிபான் இயக்கங்களைச் சார்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள்" என்ற பதம், ஆப்கனிஸ்தானில் அமெரிக்க படைகளுக்கும் அமெரிக்காவின் ஆதரவு பெற்ற ஜனாதிபதி ஹமீதுகர்சாய் ஆட்சிக்கும் உருவாகிக் கொண்டிருக்கும் மக்களது எதிர்ப்புக்களை குறிப்பதற்காகத்தான் அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டின் ஏழ்மை மிக்க தென்கிழக்கில் உள்ள பஷ்துன் மலைவாழ் இனத்தவரிடையே ஆப்கனிஸ்தானில் அமெரிக்க படைகளுக்கு எதிராக குரோத உணர்வு அதிகரித்துக் கொண்டு வருகிறது, கடந்த 2-ஆண்டுகளாக இங்கு அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆளாகி வருகிறது.

பாக்கிஸ்தான் அமெரிக்காவின் பெயரை அப்படியே தாங்கி நிற்கின்றது. ஆப்கனிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தான் பகுதிகளில் வாழுகின்ற மக்கள் பஷ்துண்கள் தான். அவர்களுக்கு இரண்டு நாடுகளிலுமே நெருக்கமான வலுவான உறவுகள் உண்டு. இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் காலனி ஆதிக்கவாதிகள் எந்தவிதமான நெறிமுறையும் இல்லாமல் ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் எல்லையைப் பிரித்து விட்டார்கள். பஷ்துன் இனத்தவர்களில் பலர் வர்த்தகம் மற்றும் சிறிய அளவில் கடத்தல்களில் ஈடுபடுபவர்கள்.

பாகிஸ்தான் அரசாங்கமே தனது எல்லைப்பகுதியில் தனித்தன்மையை அங்கீகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கின்றது. அந்த மண்டலத்தில் வாழுகின்ற 50-லட்சம் மக்களுக்கு பாகிஸ்தான் அரசியலில் தன்னாட்சி உரிமையை வழங்கும்படி நிர்பந்திக்கப்பட்டது. முன்னர் பஷ்துன் இனத்தைச் சேர்ந்த மக்கள் அவரவர் குழுக்களில் சொந்த நிர்வாக அமைப்புக்கள் நீதிமன்றங்கள் மற்றும் சட்ட கட்டுக்கோப்பில் வாழ்ந்து வந்தார்கள். இந்த பகுதிகளில் பாகிஸ்தான் துருப்புக்கள் 2001-டிசம்பரில் வாஷிங்டனிலிருந்து வந்த அழுத்தத்தின் கீழ்தான் நுழைந்தார்கள். தலிபான் ஆட்சிக்கு எதிராக அமெரிக்க இராணுவம் தனது நடவடிக்கையை தொடக்கிய பின்னர் இந்த நிர்பந்தம் பெருகியது.

செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஐ.நா-பொதுச்சபை கூட்டத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி புஷ் பாகிஸ்தான் ஜனாதிபதி ஜெனரல் பெர்வெஸ் முஷாரஃபிடம் ஆப்கனிஸ்தானுக்குள் "எல்லை தாண்டி ஊடுருவலை" தடுக்க வேண்டும் என்று பகிரங்கமாக கேட்டுக் கொண்டார். செப்டம்பர் 21-அன்று நியூயோர்க் டைம்ஸ் தனது தலையங்கத்தில் "ஜெனரல் முஷாரஃப்பை சார்ந்திருப்பதை குறைத்துக் கொள்வதில் அமெரிக்கா மாற்று வழிகளைக் கண்டாக வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தது.

முஷாராஃப் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அரசியல் ஆதரவை பெரிதும் நம்பியிருந்தார். புஷ்ஷின் கோரிக்கையை அவர் உடனடியாக ஏற்றுக் கொண்டார். பாகிஸ்தான் தனது இராணுவ நடவடிக்கையை தொடங்கிய சில நாட்களில் அமெரிக்க அரசுத் துறையின் இரண்டு தலைமை அதிகாரிகளான ரிச்சார்ட் ஹார்மீடேஜ் மற்றும் கிறிஸ்டினா ரோக்கா ஆகியோர் அக்டோபர் 5-ந் தேதி பாகிஸ்தான் வந்தனர். "அல்கொய்தா மற்றும் தலிபான் இயக்கங்களை கட்டுப்படுத்த முடியுமா" என்பதில் முஷாரஃப்பின் விருப்பம் பற்றி இதற்கு முன்னர் சந்தேகங்களை தெரிவித்துவந்த ரிச்சார்ட் ஹார்மிடேஜ், இப்போது "மகத்தான நடவடிக்கை" எடுக்கப்பட்டு வருவதாகப் பாராட்டினார்.

அக்டோபர் 23-முதல் 25-வரை, 17-நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் பாகிஸ்தானின் எல்லைப்புற பிராந்தியங்களில் சுற்றுப்பயணத்திற்கு இஸ்லாமாபாத் ஏற்பாடு செய்தது. இவர்களைக் கவரும் வண்ணம் எல்லையை மூட நடவடிக்கையை எடுத்தது. பிரதான கடக்கும் பகுதியான சாமான் பகுதிகளில் பாகிஸ்தான் தொடரான பல்வேறு சோதனைச் சாவடிகளை அமைத்திருக்கிறது மற்றும் புதிய கண்காணிப்பு கூண்டுகளை அமைத்திருக்கிறது. எல்லை கடத்தலைத் தடுப்பதற்காக 40-கிலோ மீட்டர் நீளத்திற்கு உயரமான தடுப்பு கரையும் அமைக்கப்பட்டிருக்கின்றது.

மலைவாழ் இனங்களை சேர்ந்தவர்கள் வாழுகின்ற பகுதிகளில், "அல்கொய்தா அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை" பற்றிய தகவல்களை பெறுவதற்கு பாகிஸ்தான் அதிகாரிகள் லஞ்சம் கொடுக்கிறார்கள் மற்றும் அச்சுறுத்தல் செய்கிறார்கள். ஒத்துழைக்க மறுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்கிறார்கள். அந்தப் பகுதி மேம்பாட்டிற்கு மானியம் வழங்குவதாக அக்டோபர் கடைசியில் அரசாங்கம் உறுதிமொழி அளித்திருந்தது. அரசாங்கம் 21-மருத்துவ முகாம்கள் அமைத்திருக்கின்றது மற்றும் கண்நோய்களுக்கு ஐந்து கண் மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது மற்றும் 596-கிலோ மீட்டர் சாலைகளை அமைக்கவும், 18-பள்ளிகள் மற்றும் நான்கு கல்லூரிகளை அமைக்கவும் திட்டமிட்டிருக்கின்றது.

இத்தகைய வசதிகள் நீண்ட காலத்திற்கு முன்பே கிடைத்திருக்க வேண்டும் மற்றும் இவை இராணுவம் தங்கள் பகுதிகளில் நடமாடுவதற்கும் பாக்கிஸ்தான் அமெரிக்காவிற்கு ஆதரவு காட்டி வருவதற்கும் மலைவாழ் இனத்தவர் மத்தியில் வளர்ந்து வரும் குரோதத்தை தடுக்கத் தவறியது. "அரசாங்கம் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும், அமைத்து தருவதாக உறுதியளித்தது, குடிதண்ணீர் வழங்குவதாக கூறியது, ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. எங்களது பெண்கள் பிள்ளைப்பேறு மருத்துவமனைகளுக்கு செல்வதற்கு முன்னரே செத்துக்கொண்டிருக்கிறார்கள். எங்கள் பிள்ளைகள் பள்ளிக்கூடம் இல்லாததால் மரத்தடியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று அப்பகுதியைச் சேர்ந்த இரு முதியவர்கள் பத்திரிகை நிருபர்களிடம் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதன் மூலம் முஷாரஃப் தனது சொந்த அரசியல் நிலைப்பாட்டையே பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறார். குறிப்பாக எல்லைப்பகுதிகளில் அவருடைய அரசியல் செல்வாக்கு பலவீனமாகிக் கொண்டு வருகின்றது. ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள இரண்டு பாகிஸ்தான் மாகாணங்களிலும் Mutahida Majilis-e-Amal (MMA) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டணியில் 6-இஸ்லாமிய அடிப்படைவாத கட்சிகள் இணைந்துள்ளன. பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இராணுவம் நடவடிக்கைகளை எடுத்து வருவதற்கு எதிராக MMA- யும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கும் அரசியல் இயக்கம் நடத்தப் போவதாக அச்சுறுத்தியுள்ளன.

தலிபான் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அமெரிக்கா இராணுவ நடவடிக்கைகளை எடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர்தான், ஆப்கனிஸ்தான் போட்டி போர் பிரபுக்களாலும், போராளிகுழுக்களாலும், மலைவாழ் இன தலைவர்களாலும் மேலாதிக்கம் செய்யப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு குழுவும் தனது சொந்த ஆதிக்கத்தை நிலைநாட்டவே நடவடிக்கை எடுத்து வருகின்றது. இப்படி அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையால் தூண்டப்பட்ட ஸ்திரமின்மை எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் வழிந்தோடுவதற்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved