World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Picked to direct the Wall Street bailout: Who is Neel Kashkari?

வோல்ஸ்ட்ரீட் பிணை எடுப்பை இயக்க தெரிவுசெய்யப்பட்டவர்: யார் இந்த நீல் காஷ்காரி?

By Alex Lantier
8 October 2008

Back to screen version

அமெரிக்க நிதி மந்திரி ஹென்றி போல்சன் அக்டோபர் 6ம் தேதி நீல் காஷ்காரியை கருவூலத்தின் புதிய நிதிய உறுதிப்பாடு அலுவலகத்தின் (Office of Financial Stability) தலைமையை தாங்க நியமித்துள்ளார். இந்த அலுவலகம் வோல் ஸ்ட்ரீட் வங்கிகள் மற்றும் நிதிய நிறுவனங்களுக்கு $700 பில்லியன் பிணை எடுப்பிற்கு கொடுக்கும் பொறுப்பை கொண்டுள்ளது; இதற்கு ஈடாக அக்டோபர் 3ம் தேதி ஜனாதிபதி புஷ்ஷினால் சட்டம் எனக் கையெழுத்திடப்பட்ட பிணை எடுப்பு சட்டத்தின் விதிகளின் கீழ், செலுத்தமுடியாத அடைமான ஆதரவு சொத்துக்கள் இந்த அலுவலகத்திற்கு பரிமாறிக் கொள்ளப்படும்.

காஷ்காரியின் பெயர் இவ்விதத்தில் கணிசமான பொது ஆர்வத்தை தூண்டியுள்ளது. 35 வயதில், 2006ம் ஆண்டு காஷ்காரி நிதி அமைச்சரகத்தில் நிதி மந்திரி ஹென்றி எம். போல்சனுக்கு மூத்த ஆலோசகராக சேர்ந்தார்" என்று அவரைப் பற்றிய உத்தியோகபூர்வ நிதியமைச்சரக வாழ்க்கை குறிப்பு கூறுகிறது. அதே நேரத்தில் போல்சன் தன்னுடைய வோல் ஸ்ட்ரீட் முதலீட்டு வங்கி நிறுவனமான Goldman Sachs இனை விட்டு விலகி நிதி மந்திரியானார்.

வாழ்க்கை குறிப்பு தொடர்கிறது; "கருவூலத் துறையில் சேர்வதற்கு முன்பு திரு.காஷ்காரி கோல்ட்மன் சாஷ்ஸ் நிறுவத்தின் துணைத் தலைவராக சான் பிரான்ஸிஸ்கோவில் இருந்தார்; அங்கு அவர் கோல்ட்மனின் IT பாதுகாப்புப் பத்திரங்கள், வங்கிகள் நடைமுறைக்கு தலைமை தாங்கி பொது, தனியார் நிறுவனங்களுக்கு இணைப்புக்கள், நிதிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசனைகள் கூறிவந்தார்.

மிக உயர்ந்த அந்தஸ்து இருந்தபோதிலும், நிதித் துறையில் காஷ்காரிக்கு ஒரு சில ஆண்டுகள் அனுபவம்தான் உண்டு. ஆரம்பத்தில், இல்லிநோய்ஸ் பல்கலைக்கழகத்தின் வான் வழி பொறியியல் படித்தபின் இவர் TRW என்னும் பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றினார்; அது அமெரிக்க விண்வெளி அமைப்பான NASA வின் ஒப்பந்த நிறுவனங்களுள் ஒன்றாகும்; இதன் பின் அவர் வேலையை மாற்றிக் கொண்டு பிலடெல்பியாவில் இருக்கும் Wharton Schol of Business ல் படித்தார். 2002 இல் வார்ட்சனில் பட்டப்படிப்பை முடித்தபின் கோல்ட்மன் சாஷ்ஸில் சேர்ந்தார்.

கருவூலத்திற்கு வந்த பின்னர், காஷ்காரி சமீபத்திய பிணை எடுப்புத் தயாரிப்பில் உதவினார். வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பின்வருமாறு எழுதியது: "காங்கிரசுடன் சொத்துக்கள் மறு வாங்கல் திட்டம் பற்றி பேச்சுவார்த்தை நடத்திய குழுவில் காஷ்காரியும் ஒருவர்[...] திட்டத்தை முதலில் தயாரித்தவர்களில் அவரும் ஒருவர். கடந்த ஆண்டு அவரும் பொருளாதாரக் கொள்கைப் பிரிவில் உதவி செயலாளரான பிலிப் ஸ்வாகெலும் 'கண்ணாடியை உடையுங்கள்' (Break the glass -முன்னைய நிலைக்கு திரும்பமுடியாத) என்ற ஒரு திட்டத்தை இயற்றினர். (இது அத்தகைய ஒரு திட்டத்தை பயன்படுத்துவதை குறிக்கும் அவசர தன்மையை குறிக்கிறது). இது செலுத்தமுடியாத கடன்கள் மற்ற சொத்துக்களை நிதி அமைச்சரகம் வாங்குவதற்கு திட்டமிட்டது.

காஷ்காரியின் வரலாறு மிக அசாதாரண முறையில் Goldman Sachs உடைய செல்வாக்கை உயர்த்திக் காட்டுகிறது; இந்த நிறுனம்தான் நிதி அமைச்சரகம் ஏற்பாடு செய்துள்ள பிணை எடுப்புத் திட்டத்தில் இருந்து இதன் முன்னாள் நிர்வாகிகள் மிகப் பெரிய அளவில் நலன்களை பெறும் விதத்தில் உள்ளது. இதன் திரும்பபெறமுடியாத அடைமான ஆதரவு உடைய சொத்துக்களை நிதி அமைச்சகத்திடம் தள்ளிவிடும் விருப்புரிமையை Goldman கொண்டிருக்கிறது என்று மட்டும் இல்லாமல், பிணை எடுப்புத் திட்டத்தின் கீழ் உண்மையான செயற்பாடுகள் பலவற்றை செய்து முடிப்பதிலும் ஏராளமான பணத்தை இது ஈட்டும் வாய்ப்பு உள்ளது.

அக்டோபர் 7ம் தேதி நியூ யோர்க் டைம்ஸ் காஷ்காரியின் அலுவலகம் "முழு பிணை எடுப்பு திட்டத்தையும் பிறர் மூலம் செய்ய" முயல்கிறது என்று எழுதியது. அது தொடர்ந்து கூறியதாவது: "ஒரு நிறுவனத்தை "நிதிய முகவர்" என்ற முறையில் அடிப்படை கட்டமைப்பை நிறுவ உள்ளது; அதில் ஏலங்கள் நடத்துவது, பல சொத்துக்கள் பற்றி தொடர்ந்து கண்காணிப்பது, நடைமுறைப் பிரச்சினைகளை கண்காணித்தல் அனைத்தும் அடங்கும்". நிதிய உறுதிப்பாடு அலுவலகம் (OFS) "அனுபவம் முதிர்ந்த முதலீட்டு மேலாளர்களிடம்" மதிப்பு பற்றி கேட்டு, தோல்வியுற்ற சொத்துக்களை விற்கும்; இந்த மேலாளர்கள் முன்னர் "அடைமான ஆதரவு உடைய பத்திரங்களை விற்ற அல்லது வாங்கிய நிறுவனங்களில் வேலை பார்த்திருப்பர்."

நிதி அமைச்சரகம் நிறுவனங்களின் ஏலங்களை "நிதிய முகவர்" பதவிக்காக ஏற்கும் கடைசி தினம் இன்றுதான்; கருவூலம் அதன் விருப்பத்தை அக்டோபர் 10ம் தேதி அறிவிக்கும்.

கோல்ட்மன் சாஷ்ஸ் உடைய போட்டியாளர்கள் செய்தி ஊடகத்தில் முன்னாள் கோல்ட்மன் சாஷ்ஸ் நிர்வாகிகள் இந்த இலாபம் அதிகம் கொடுக்கும் அரசாங்க ஒப்பந்தங்களுக்கான போட்டியில் பங்கு பற்றித் தெரிவித்த எதிர்ப்பு கருத்துக்களை கசிய விட்டுள்ளனர். காஷ்காரி பற்றிய கட்டுரையில் பைனான்சியல் டைம்ஸ் எழுதியது: "கோல்ட்மன் நிறுவனத்தில் முன்பு இருந்தவர்கள் நிர்வாகத்திற்குள் பெற்றிருக்கும் முக்கியத்துவம் பல போட்டியிடும் வோல் ஸ்ட்ரீட் வங்கிகளை புருவங்களை உயர்த்த வைத்துள்ளது; இவை தனிப்பட்ட முறையில் கொள்கை பற்றி கோல்ட்மன்ஸின் அளவுக்கு அதிகமான செல்வாக்கு பற்றி கவலை கொண்டுள்ளனர்."

இந்தக் குறைகள் சிலவற்றை எதிரொலிக்கும் வகையில் செய்தி ஊடகம் அரசாங்கம் சில திருத்தும் நடவடிக்கைகளை மேற்கோள்ள இருப்பதாக கூறியுள்ளது. வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் கூறியது: "நிதி அமைச்சரகம் திட்டத்தில் உள்ள இந்த நலன்கள் மோதல்களை எப்படிக் கையாள்வது என்பது பற்றி நிர்ணயிக்கிறது. குறிப்பாக இது வேலைக்கு அமர்த்த உள்ள சொத்து மேலாளர்கள் பற்றி. இந்த அடைமானச் சொத்துக்கள் பற்றி நேரடி அனுபவம் உடைய எவருக்கும், சொத்துக்களில் பொறுப்பு இருக்கும் நிறுவனங்களில் பணிக்கு ஆர்வம் இருக்கும் [...] அனைத்து எதிர் நலன்களும் அகற்றப்படும் என்பது முடியாது என்றாலும், நிதி அமைச்சரகம் இந்த போட்டி நலன்களை நிர்வகிக்க கடுமையான வழிகாட்டு முறைகளை கொள்ளும் என்று இவ்விஷயத்தை பற்றி அறிந்தவர்கள் கூறுகின்றனர்."

நிதிய உறுதிப்பாடு அலுவலகம், திட்டத்தில் நலன்களின் மோதலை முற்றிலும் அகற்றவோ கட்டுப்படுத்தவோ முடியாது; ஏனெனில் முழு பிணை எடுப்புத் திட்டமும் (நிதியத் தொழில்துறை ஆணையிட்டு முழு $700 பில்லியனையும் அமெரிக்க நிதியமைச்சரகத்தில் இருந்து பெறுகிறது) என்பதே ஒரு பெரும் நலன்கள் மோதலின் விளைவுதான்.

குறிப்பாக ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் பராக் ஒபாமா உட்பட இந்த பிணை எடுப்பிற்கு உந்துதல் கொடுத்ததில் அதன் ஆதரவாளர்கள் "வெளிப்படைத்தன்மை", "கண்காணிக்கும்" பாதுகாப்பு முறைகள் இருக்கும் என்று கூறினர். ஆனால் காஷ்காரியின் நியமனம் நிதிய உயரடுக்கு இந்த முழு வழிவகையையும் தன்னுடைய நலன்களுக்காகத்தான் இயக்கிச் செயல்படுத்தும் என்ற உண்மையைத்தான் அம்பலப்படுத்தியுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved