World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

sraeli Prime Minister Olmert resigns

இஸ்ரேலியப் பிரதம மந்திரி ஒல்மேர்ட் இராஜிநாமா செய்கிறார்

By Ann Talbot
2 August 08

Back to screen version

இஸ்ரேலிய பிரதம மந்திரி எகுட் ஒல்மேர்ட் ஆளும் கடிமாக் கட்சியின் தலைவர் என்பதில் இருந்து செப்டம்பர் மாதம் இராஜிநாமா செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். ஏராளமான ஊழல் குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

2006ல் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்த ஒல்மேர்ட்டின் மீது நிறைய ஊழல் புகார்கள் எழுந்துள்ளது. இஸ்ரேலிய போலீசார் தற்பொழுது அவர் பற்றித் தனித்தனியே ஆறு வழக்குகளை விசாரித்து வருகின்றனர். குற்றம் சாட்டப்படும் வரை தான் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று அவர் முன்பு கூறிவந்தார். இப்பொழுது அவர் இராஜிநாமா செய்ய முடிவு எடுத்துள்ளது, நியூ யோர்க் வணிகர் மோஷே அல்லது மோரிஸ், டாலன்ஸ்கி ஒரு இஸ்ரேலிய நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டதை அடுத்து வெளிவந்துள்ள மோசமான, அதிக, புதிய சேதம் விளைவிக்கக்கூடிய குற்றச் சாட்டுக்களினால்தான்.

ஜெருசலம் போஸ்ட் ஏட்டின்படி, ஒல்மேர்ட்டிற்கு நெருக்கமான ஆதாரம் சில மாதங்களுக்கு முன்பு நாட்டின் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரி Micha Lindenstrauss இடம் டாலன்ஸ்கியுடன் ஒல்மேர்ட் கொண்டுள்ள நிதிய விவகாரங்கள் பற்றி கூறி, அந்நடவடிக்கைகளுக்கான ஆதாரம் பற்றிய ஆவணங்களை அளித்ததாகவும் தெரிகிறது. முன்னதாகவே ஓல்மேர்ட் மீதான மற்ற குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரணை நடத்திவரும் அரசு கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியின் அலுவலகம் தனது சொந்த விசாரணையை தொடக்கியதுடன், போலீசாரையும் எச்சரித்துள்ளது.

மிகத் தீவிர குற்றச்சாட்டு ஒல்மேர்ட் பல நூறாயிரக்கணக்கான டாலர்களை வெகுமதியாகவும், கடன்களாகவும் டாலன்ஸ்கியிடம் வாங்கியுள்ளார் என்பதாகும். அரசியல் பிரச்சாரங்களுக்காக தான் 150,000 டாலர்கள் ஓல்மேர்ட்டிற்கு நிதி கொடுத்ததாக டாலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். பணம் எதற்குப் பயன்படுத்தப்பட்டது என்பது பற்றி தனக்குத் தெரியாது என்றும் ஒருவேளை ஓல்மேர்ட்டின் ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்பட்டிருக்கலாம் என்றார்.

ஓல்மேர்ட்டிற்கு சொந்தப் பயணங்களுக்காக மூன்று முறை பணம் கடன் கொடுத்ததாக டாலன்ஸ்கி கூறுகிறார். ஒருமுறை கொடுக்கப்பட்ட 25,000 டாலர்கள் கடன் திருப்பித் தரப்படவில்லை; இத்தாலி, கிரேக்கம் ஆகிய நாடுகளுக்கு குடும்பத்துடன் விடுமுறையைக் கழிக்க அக்கடன் வாங்கப்பட்டது. வாஷிங்டனில் ரிட்ஸ் கார்ல்டனில் தங்குவதற்கு ஒரு முறை 4,717.49 டாலர்கள் வாங்கப்பட்டது; பின்னர் மற்றொரு முறை அமெரிக்க பயணத்திற்காக 15,000 டாலர்கள் வாங்கப்பட்டது.

டாலான்ஸ்கி கொடுத்த தகவலை தொடர்ந்து போலீசார் விசாரணையின் பரப்பை அதிகரித்து, ஜெருசலம் மேயராக இருந்தபோது ஓல்மேர்ட் மோசடி செய்ததாக குற்றச் சாட்டுக்களையும் சேர்த்துள்ளனர்.

"எங்களுடைய சந்தேகங்களின்படி, ஜெருசலம் மேயர் மற்றும் வணிக, தொழில்துறை மந்திரியாக இருந்தபோது, ஓல்மேர்ட் தன்னுடைய வெளிநாட்டுப் பயணத்திற்காக அரசு நிறுவனங்கள் உட்பட பொது நிறுவனங்களில் இருந்து ஒரேவிஷயத்திற்கு நிதி கேட்பார் என்றும், ஒவ்வொரு அமைப்பிடமும் ஒரே காரணம் கூறப்படும் என்றும் தெரிகிறது" என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இத்தகைய இரட்டை வசூல் மூலம் "கணிசமான பணம்" கிடைத்ததாகவும் இவை ஒரு தனி கணக்கில் வைக்கப்பட்டு பின்னர் ஓல்மேர்ட் மற்றும் அவருடைய குடும்பம் வெளிநாடுகள் செல்ல பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் போலீசார் கூறியதாகத் தெரிகிறது. இந்த வழக்கிற்கு "ஓல்மேர்ட்டின் பயணங்கள்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஒல்மேர்ட்டின் தனிச்செயலரும் கடந்த 30 ஆண்டுகளாக அவருடைய உதவியாளராக இருப்பவருமான Shula Zaken ஓல்மேர்ட்டுடனான டாலன்ஸிகியின் நிதிய செயற்பாடுகளை "சலவை மனிதர்" என்ற பெயரில் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய பதவியை தவறாகப் பயன்படுத்தி வரி அதிகாரிகளை செல்வாக்கிற்கு உட்படுத்தியதாக ஜாகென் மீதும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பாஸ் ஓவரின் (யூத திருவிழா) போது இஸ்ரேலுக்கு வந்திருந்த டாலன்ஸ்கி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இஸ்ரேலிய அதிகாரிகள் ஆரம்பத்தில் டாலன்ஸ்கியின் பெயர் அல்லது நாடு பற்றி செய்தி ஊடகம் தகவல் கொடுப்பதை நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் நியூ யோர்க் டைம்ஸ் இவருடைய பெயரை மே மாதம் வெளியிட்டவுடன் கதையை மூடிமறைக்க முடியாமல் போயிற்று.

டாலன்ஸ்கியின் சாட்சியம் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு ஒல்மேர்ட்டின் வக்கீல் Uri Messer மற்றும் ஜாகென் மீது அழுத்தம் கொடுக்க உதவியுள்ளது. ஒல்மேர்ட் மெசர் மற்றும் ஜார்கெனும்தான் டாலன்ஸ்கியின் நன்கொடைகளை கையாளுவது பற்றியதில் பொறுப்பாவர் என்று கூறியிருந்தார். மெசரோ, ஜாகென் மட்டுமே பணத்தைக் கையாண்டார் என்றும் அது அவ்வம்மையார் அலுவலகத்தில் பேப்பர் உறைகளில் வைக்கப்பட்டிருந்தன என்றும் கூறினார்.

விசாரணையை பொறுத்தவரையில் ஜாகென் இதுவரை ஒத்துழைக்கவில்லை; ஆனால் மாசர் மற்றும் ஜாகென் இருவரும் ஒல்மேர்ட்டிற்கு எதிராக சாட்சியம் கூறும் வாய்ப்பு கொடுக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. போலீசார் இதுவரை ஒல்மேர்ட்டை நான்கு முறை விசாரித்துள்ளனர்.

மற்றும் ஒரு தனி வழக்கில் போலீசார் ஒல்மேர்ட் வணிக, தொழில்துறை மந்திரியாக இருந்தபோது செய்த நியமனங்கள் பற்றி விசாரித்து வருகின்றனர். அரசியல் நண்பர்களை அரசாங்க அமைப்புக்களில் அவர் நியமித்ததாகக் குற்றச் சாட்டு வந்துள்ளது; இதில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனப் பொறுப்பு (Medium and Small Enterprises Authority) என்ற அமைப்பும் அடங்கும். ஒல்மேர்ட் தான் தொழில்துறை மந்திரியாக இருந்தபோது நண்பர்களுக்கு முதலீட்டு வாய்ப்புக்களுக்கு ஏற்பாடு செய்ததாகவும் ஒரு முன்னாள் வணிகப் பங்காளிக்கு ஆலை ஒன்றுக்கு சிறப்பு நிதி கொடுத்ததாகவும் குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

"Cremieux Street affair" என்பது இன்னும் நடைபெற்று வருகிறது. இந்த தெருவில் இருக்கும் ஒரு சொத்திற்கு நடப்புச் சந்தை விலையை விட 325,000 டாலர்கள் குறைவாக ஒல்மேர்ட் கொடுத்ததாக கூறப்படுகிறது. தேசிய மோசடிப் பிரிவு, ஜாகெனை பல மணி நேரம் இந்த 1.2 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய உறைவிடம் வாங்குதல் பற்றிய விசாரணைக்கு உட்படுத்தியது. தான் பிரதம மந்திரியாக தற்காலிகமாக இருக்கையில் ஒல்மேர்ட் அதிகாரத்துவ வழிவகையை விரைவுபடுத்தி வீடுகள், சொத்துக்கள் இவற்றின் முகவர்களுக்கு உதவியதாகவும் அதற்கு என பதிலுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீத தொகை பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஒரு விசாரணை எந்தக் குற்றச் சாட்டும் இல்லாமல் முடிவிற்கு வந்துவிட்டது. நிதி மந்திரியாக இருக்கும்போது ஒல்மேர்ட் Bank Leumi யில் அரசாங்கத்திற்கு உரிமையாக இருந்த கட்டுப்பாட்டு பங்குகளை தன்னுடைய நண்பர் ஒருவருடைய நலனுக்காக விற்பனையில் செல்வாக்கு செலுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. கடந்த நவம்பரில் இந்த வழக்கை போலீசார் கைவிட்டனர்; குற்றச் சாட்டு கொண்டுவருவதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று அவர்கள் கூறினர்.

ஒல்மேர்ட்டின் அரசியல் வாழ்வு 1970 களில் இருந்து ஆரம்பிக்கிறது. 1993ல் அவர் ஜெருசலேம் மேயர் பதவியை ஏற்றார். இவருடைய ஊழல் குற்றங்கள் பல அவர் இந்தப் பதவியில் இருந்த தசாப்தத்தில் இருந்தே தொடங்குகின்றன. ஒரு மேயராக விரும்பிய பிரச்சாரத்தில் ஈடுபட்ட காலத்திலேயே இவர் டாலன்ஸ்கியை சந்தித்ததாகத் தெரிகிறது. லிக்குட் கட்சியின் அரியேல் ஷரோனுடன் இவர் நெருக்கமாக ஒத்துழைத்தார்; 2005ல் அவருடன் லிக்குட்டை விடுத்து கடிமாவை அமைத்தார். 2006 ல் ஷரோன் பக்கவாதத்தில் வீழ்ந்தபோது, ஒல்மேர்ட் தலைவரானார்.

2006ல் லெபனான் மீது இஸ்ரேலிய இராணுவம் படையெடுத்து ஹெஸ்போல்லாவிடம் தோற்றதில் இருந்து ஓல்மேர்ட் அதிகாரம் இல்லாத பதவியில்தான் இருக்கிறார். லெபனான்மீது படையெடுத்தது, மற்றும் அவர் போரை நடத்தியவிதத்திற்காக ஒரு உத்தியோகபூர்வ குழு அவர்மீது குறைகூறியுள்ளது. இஸ்ரேலிய துருப்புகளின் உடல்களுக்காக நடந்த சமீபத்திய கைதிகள் பரிமாற்றம் அவருடைய இழிவைப் பெருக்கியது.

சமீபத்திய கருத்துக் கணிப்புக்கள் ஒல்மேர்ட்டிற்கு 14 சதவீத மதிப்பீட்டைத்தான் கொடுத்துள்ன; ஐந்தில் மூன்று இஸ்ரேலியர்கள் அவர் இராஜிநாமா செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர். அவர்களுள் பாதிப்பேர் அவரை ஊழல் பேர்வழி என்றுதான் கருதுகின்றனர்.

ஆனால் ஓல்மேர்ட் மட்டும் தனியே இப்படி இல்லை. இஸ்ரேலிய அரசியல் வாழ்வு இழிந்த முறையில் ஊழல் மிகுந்ததாக உள்ளது; நிதிய விவகாரங்கள் பற்றி ஒரு சில அரசியல் வாதிகள் கூட கடுமையான விசாரணையில் இருந்து தப்பிக்க முடியாது. ஓல்மேர்ட்டின் நடவடிக்கைகள் பெரும் பொதுச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் ஆளும் உயரடுக்கின் முழு நடைமுறைகளுக்கும் அவை அடையாளமாகத்தான் உள்ளன. இவருடைய வழக்கு அதிகம் பேசப்படுவது இந்த மெல்லிய அடுக்கில் இருக்கும் மிகத் தீவிர அழுத்தங்களை வெளிக் கொண்டு வந்துவிட்டது. இது பொதுமக்களிடம் இருந்து முற்றிலும் ஒதுங்கி இருக்கும் அடுக்கு ஆகும்; பொது மக்களோ நீண்ட காலமாக உத்தியோகபூர்வ பொதுவாழ்வில் இருந்து அன்னியப்பட்டு வெளியே நிற்கின்றனர்.

ஓல்மேர்ட் இஸ்ரேலிய அரசியல் உயரடுக்கு மற்றும் வாஷிங்டனில் அரசியல் மதிப்பை ஓரளவு பெற்றுள்ளதால் லெபனான் சங்கடத்தில் இருந்து தப்பிப் பிழைக்க முடிந்தது.

ஷரோனை போலவே, பாலஸ்தீனியர்கள் பால் இவரும் கூரிய பார்வையைத்தான் கொண்டிருந்தார். ஷரோனுடைய செய்தித்தொடர்பாளர் என்ற முறையில் இவர்தான் முன்னாள் PLO தலைவர் யாசர் அராஃபத்தை படுகொலை செய்யத் தயார் என்று அறிவித்திருந்தார். ஆனால் ஒரு பிரதம மந்திரி என்ற முறையில் இவர் பாலஸ்தீனியர்களுடன் உடன்பாடு காணவும் இஸ்ரேலின் அண்டை நாடுகளுடன், குறிப்பாக சிரியாவுடன், நட்பு உடன்படிக்கைக்கும் தொடர்பு கொள்ள வேண்டிவந்தது.

இது வாஷிங்டனுடைய நலன்களுக்கு நன்கு பொருந்துகிறது. புஷ் நிர்வாகம் சமாதான வழிவகை நடக்கிறது என்று கூறிக்கொள்ள இது உதவுகிறது. ஐரோப்பாவில் இருக்கும் அமெரிக்க நட்பு நாடுகளுக்கு இது முக்கியம்; ஏனெனில் அரேபிய ஆட்சிகளுக்கு இடையே அமெரிக்காவிற்கு ஆதரவைப் பெறுதல், அதுவும் ஈராக் படையெடுப்பிற்கு பின்னர் அதி முக்கியமானதாகிவிட்டது.

பேச்சுவார்த்தைகள் நடந்தபோது, யூதக் குடியிருப்புக்களை விரிவாக்கம் செய்தல், பாலஸ்தீனியர்களை தனிமைப்படுத்த சுவரெழுப்புதல் மற்றும் பாலஸ்தீனிய குடிமக்கள் மீது இராணுவத் தாக்குதலை தொடங்குதல் மூலம் இன்னும் அகன்ற இஸ்ரேலை தோற்றுவிக்கும் வழிவகையை தொடர்தல் சாத்தியமாக இருந்தது.

சிரியாவுடன் தான் பிரதம மந்திரியாக இருக்கும் வரை பேச்சு வார்த்தைகளை தொடர இருப்பதாக ஓல்மேர்ட் வலியுறுத்தியுள்ளார். ஊடகத்தில் சிலர் இதை சமாதானத்திற்கு அறிகுறி எனக் காண்கின்றனர். கார்டியனில் Rache Shabi எழுதும்போது ஒல்மேர்ட் சிரியர்களுடனும் பாலஸ்தீனியர்களுடனும் உடன்பாடு காண்பதை அடுத்து "சாத்தியமான வேகத்தில்" செல்வார் என்று கூறியுள்ளார். "ஆனால் பிரதம மந்திரி பதவியை காத்துக் கொள்ள வேண்டிய கவலை இப்பொழுது அவருக்கு இல்லை; அதில் அவருக்கு ஆர்வம் உண்டு; செயல்படுத்துவதற்கு ஆணை உள்ளது; இழப்பு ஏதும் இல்லை" என்று Haaretz கட்டுரையாளர் Akiva Eldear கூறியதாக Rachel மேற்கோளிட்டுள்ளார்.

ஷபி முடிவுரையாகக் கூறுவது: "ஓல்மேர்ட்டிற்கு வெற்றி என்பது தொழிற்கட்சி மற்றும் கடிமா இவருக்கு துணை நின்று இஸ்ரேலியர்களையும் --பாலஸ்தீனியர்களையும்-- மற்ற அனைத்தையும் மன்னிக்குமாறு செய்வதற்கான அவற்றின் விருப்பை சார்ந்துள்ளது. இப்பகுப்பாய்வின்மூலம் பாலஸ்தீனியர்களும் சிரிய பங்காளிகளும் இந்த இணையான பேச்சுக்கள் மூலம் இறுதி உடன்பாடுகளை காகிதத்தில் அவர் பிரதமராக இருக்கும் இன்னும் சில வாரங்களிலேயே பெறுவதற்கு விரைவாக செயல்பட வேண்டும். இது ஒரு சிறிய, நடுங்கிக் கொண்டிருக்கும், தோட்டாக்கள் துளைக்கப்பட்ட சன்னல், ஆனால் இன்னும் சில மாதங்களில் துளைக்கப்பட முடியாத காங்க்ரீட் சுவர் வந்துவிடும்."

சிரியர்களுடன் உடன்பாட்டிற்கு ஓல்மேர்ட் விரைந்து போவதாகத்தான் தோன்றுகிறது. வெள்ளியன்று Maarv தகவல்படி, இரு கட்சிகளும் உடன்பாட்டை நெருங்கிவிட்டதாக தெரிகிறது. சிரியாவும் இஸ்ரேலும் தங்களுக்கு இடையே இருக்கும் போரை முடித்துக் கொள்ளும்; வாடிக்கையான தூதரக உறவுகளை நிறுவும். தன் பங்கிற்கு இஸ்ரேல் கோலன் குன்றுகளில் இராணுவத்தை நிறுத்தாது; சிரியா கோலன் குன்றுகள் மற்றும் டமாஸ்கஸுக்கு இடையே இருக்கும் படைகளை குறைத்துக் கொள்ளும்.

ஆனால் ஒரு சமாதான நடவடிக்கை என்பதற்கு பதிலாக உடன்பாட்டில் உட்குறிப்பாக சிரியா ஈரானுடன் தன் நெருக்கமான உறவுகளை முடித்துக் கொள்ளும் விருப்பம் இருக்கும்; இதைத்தான் ஜெருசலமும் வாஷிங்டனும் விரும்புகின்றன. "ஈரானியப்பிடி" அவர்களுடைய "தீமை அச்சுடன்" பங்காளித்தனம் அல்லது சமாதானம் நாட "நாடுகளின் குடும்பம்" "பொருளாதார வளர்ச்சி என்ற இரண்டில் ஒன்றை சிரியர்கள் விரும்பித் தேர்ந்தெடுக் வேண்டும் என்று ஓல்மேர்ட் தெளிவாக்கியுள்ளார்.

சிரியாவில் அணுவாயுதத் தளம் ஒன்றை இஸ்ரேல் குண்டுவீச்சிற்கு உட்படுத்தியபின் சிரியா இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இஸ்ரேலுடன் உடன்பாட்டை அடைந்தது, பஷர் அசாத்தின் ஆட்சிக்கு அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றுடன் உறவுகளை சீராக்கிக் கொள்ள, குறிப்பாக பிரான்சுடன், ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஜூலை மாதம் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் மத்தியதரைக் கடல் மன்றத்திற்கு அசாத் வரவேற்கப்பட்டார்.

பேச்சுவார்த்தையின் நோக்கம் சிரியாவை ஈரானுடனான அதன் கூட்டிலிருந்து துண்டிப்பதாகும் மற்றும் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலால் தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியத்தை முன்னெடுக்கும் விதமாக அல்லது இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தை தெஹ்ரான் ஏற்றுக்கொள்ள குறைந்த பட்சம் அதன் மீது உச்சபட்ச அழுத்தத்தை வைப்பதற்கு ஈரானை இராஜதந்திர ரீதியாக தனிமைப்படுத்துவதாகும்.

ஆயினும், ஓல்மேர்ட்டின் இராஜிநாமா உத்தியோகபூர்வ இஸ்ரேலிய அரசியலில் இன்னும் வலதிற்கு மாற்றம் என்பதை கொண்டுவரும் என்பதுதான் குறிப்பாகும் என்பதில் ஐயம் எதுவும் இல்லை.

ஓல்மேர்ட்டிற்கு பதிலாக கடிமாத் தலைவர் பதவிக்கு வரக்கூடிய வேட்பாளர்கள் இருவருக்குமே வலுவான வலதுசாரி சான்றுகள் உள்ளன. வெளியுறவு மந்திரி Tzip Livni இப்பொழுது ஓல்மேர்ட்டிற்கு பதிலாக வரக்கூடும் என்று தெரிகிறது. இவர் ஒரு வேட்பாளர் என்ற முறையில் ஊழல் கறை ஏதும் இல்லாமல் உள்ளார்; கூட்டணி "மக்கள் நம்பிக்கையை இஸ்ரேலிய அரசியலுக்கு மீட்க வேண்டும்" என்று அழைப்பு விடுத்துள்ளார். ஒரு முன்னாள் மொசாத் முகவரான இவ்வம்மையார் ஒல்மேர்ட்டின் பாதுகாப்பு மந்திரிசபையில் தன் பங்கை வலியுறுத்தியுள்ளார்.

ஓல்மேர்ட் திங்களன்று இராஜிநாமா செய்வதற்கு முன்பு லிவ்னி புகைப்படக் கருவிகளுக்கு முன்பு இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் (Knesset) அவருடன் பகிரங்கமாக பூசலிட்டார். சிரியாவிற்கு அதிக சலுகைகள் கொடுப்பதாக இந்த அம்மையார் அவரைக் குற்றம் சாட்டினார். அவ்வாறு அவர் செய்தது அவருக்கு முக்கிய போட்டியாளராக இருக்கும் போக்குவரத்து மந்திரி Shaul Mofaz ஐ விட தன் நிலையை வலுப்படுத்திக் கொள்ளுவதற்காக செய்யப்பட்டது ஆகும்.

பாலஸ்தீனியர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைகளுக்கு லிவ்னி தலைமை தாங்கினார்; பாலஸ்தீனிய பிரச்சினையில், இரு நாடுகள் தீர்விற்கு ஆதரவு கொடுக்கிறார். ஓல்மேர்ட்டுடன் நடந்த பகிரங்க மோதலுக்கு முன்பு அவரது சிரியாவுடனான பேச்சு வார்த்தைகளுக்கு ஆதரவு கொடுப்பதாக கருதப்பட்டது.

கோலன் குன்றுகள் மற்றும் ஜெருசெலம் பற்றி கடின நிலைப்பாட்டை கொண்டுள்ள மொபஸ் முன்னாள் தலைமைத் தளபதியாகவும் பாதுகாப்பு மந்திரியும் ஆவார். மேற்கு கரை இராணுவத் தளபதிகளிடம் 2001ல் ஒவ்வொரு நிலப்பகுதி பிரிகேட்டிலும் "10 பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட வேண்டும்" என்று கூறியதாகத் தெரிகிறது. Boomerang என்ற நூலில் Ofer Shelah, Raviv Drucker எழுதியதின்படி, ஒரு மூத்த அதிகாரி மொபாஸின் கட்டளை ஒவ்வொரு நாளும் 70 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட வேண்டும் என்று சேர்த்தது என்பதை சுட்டிக் காட்டினார்.

வியாழனன்று மொபாஸ், அமெரிக்கா, ஈரானிடம் தன்னுடைய நிலைப்பாட்டை மிருதுவாக்கிக் கொள்ளக் கூடாது என்று எச்சரித்தார்; இது அமெரிக்க தூதர்கள் ஈரானிய அதிகாரிகளை சந்தித்தபின் கூறப்பட்டது. துணை ஜனாதிபதி செனி மற்றும் வெளியுறவு மந்திரி கொண்டலிசா ரைஸ் ஆகியோரையும் இவர் சந்தித்து அமெரிக்கர் கூடிப்பேசியது பற்றி எதிர்ப்புத் தெரிவித்தார். மொபாஸின் செய்தித் தொடர்பாளர் இஸ்ரேலின் "வலுவான கவலைகள்" பற்றி அவர் குரல் எழுப்பியதாக தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் மொபாஸ் ஒரு அணுவாயுத ஈரானை இஸ்ரேல் தாக்குவது "தவிர்க்க முடியாதது" என்று கூறினார்.

அடிப்படையில் லிவ்னிக்கும் மொபாஸுக்கும் இடையே நடக்கும் போட்டி ஒரு போர்த் தலைவராக எவர் சிறந்து இருப்பர் என்பதுதான். எவர் தலைமைப் போட்டியில் வெற்றி பெற்றாலும், அவர் மற்றொரு கூட்டணியை அமைக்க வேண்டும். அதிக வலுவற்ற கடிமா கட்சி, ஷரோனால் தோற்றுவிக்கப்பட்டது தொழிற்கட்சியின் ஆதரவுடன் வெற்றிபெற்றது, ஒரு தலைமை போட்டிக்கு பின்னர் தப்பிப் பிழைக்க முடியாது.

அதிகாரம் நேரடியாக லிக்குட்டின் தலைவர் பெஞ்ஞமின் நேதன்யாகுவின் கரங்களை அடையலாம். அவர் 1996ல் இருந்து 1999 வரை பிரதம மந்திரியாக இருந்து, ஷரோனிடம் நிதி மந்திரியாகவும் இருந்தார். இவர் காசாவில் இருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டதை எதிர்த்து இராஜிநாமா செய்தார். உடனடித் தேர்தல் வேண்டும் என்று நேதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். பாதுகாப்பு மந்திரி பதவிக்கு ஈடாக மொபாஸ் ஒரு கூட்டணியை நெதன்யாகுவுடன் அமைக்கலாம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved