World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The way forward in the fight against Wall Street

வோல் ஸ்ட்ரீட்டிற்கு எதிரான போராட்டத்தில் முன்னேற்றப் பாதை

WSWS Editorial Board
15 October 2011

 Back to screen version

வோல் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிக்கவும் இயக்கம் இப்பொழுது அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் மில்லியன் கணக்கான மக்களிடையே சக்தி வாய்ந்த உணர்வை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான நகரங்களுக்குப் பரவியுள்ள இந்த வளரும் இயக்கத்தின் மையத்தில், அமெரிக்க மற்றும் உலக சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் கூறுபாடான பாரிய சமூக சமத்துவமின்மைக்கான ஆழமாக வேரோடிய எதிர்ப்பு இருக்கிறது.

பெருமந்த நிலைக்குப் பின்னரான மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பான உயர்மட்டத்தில் உள்ள 1 சதவிகிதத்தினர் (உண்மையில் உயர்மட்ட 0.1%) இதை பயன்படுத்தி இன்னும் கூடுதலாகத் தங்கள் செல்வக்கொழிப்பை அதிகரித்துக் கொண்டுள்ளனர். மிக அதிக செல்வம் படைத்த 400 அமெரிக்கர்கள் 1.3 டிரில்லியன் டாலரைக் கட்டுப்படுத்துகின்றனர். ஆனால் பெரும்பான்மையான அமெரிக்க மக்கள் வறுமையில் தள்ளப்படுகின்றனர். அமெரிக்கர்களுடைய சராசரி வருமானம் 2007ல் இருந்து 10 சதவிகிதம் சரிந்துவிட்டது. ஆனால் பெருநிறுவனங்களும், செல்வந்தர்களின் வங்கி இருப்புகளும் பெரிதும் உயர்ந்துவிட்டன. இளைஞர்கள் வேலையின்மை என்ற எதிர்காலத்தை முகங்கொடுக்கின்றனர், அவர்களுடைய கல்விக்காக அவர்கள் பல்லாயிரக்கணக்கான டாலர்கள் கடனை தவிர வேறு எதையும் பெறவில்லை.

அமெரிக்காவில் நடைபெறும் எதிர்ப்புக்கள் இத்தகைய பொறுக்க இயலாத நிலைமகளுக்கு எதிரான ஒரு சர்வதேச இயக்கத்தின் பகுதிதான். இந்த ஆண்டு துனிசியா மற்றும் எகிப்தில் புரட்சிகளுடனும், விஸ்கான்சினில் வெகு ஜன எதிர்ப்புக்கள் வெடிப்புடனும் தொடங்கியது. இது கிரேக்கம், ஸ்பெயின், இஸ்ரேல், பிரித்தானியா இன்னும் மற்ற நாடுகளில் தொடர்ந்த அதிர்ச்சியளிக்கும் போராட்டங்களாகத் தொடர்கிறது. இந்த இயக்கம் வரவிருக்கும் மாதங்களில் விரிவடையும், இன்னும் அதிகமாகும்.

இப்பொழுது முக்கியமான பிரச்சினை இதுதான்: முன்னேற்றப் பாதை எது? இங்கு அரசியல் பிரச்சினை மையமாக உள்ளது.

அரசியல், அரசியல் கட்சிகள், வேலைத்திட்டங்கள் பற்றிய விவாதங்கள் எதையும் ஒதுக்குவதின் மூலம்தான் இயக்கம் நீட்டிக்கப்பட முடியும் என்று எதிர்ப்பியக்கத்தை சேர்ந்த சிலர் கருதுகின்றனர். “அரசியல் கூடாது என்னும் கோரிக்கை தொழிலாளர்கள், இளைஞர்கள் இடையே ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்திற்கான விருப்பத்திற்கு ஒரு அழைப்பை கொடுக்கிறது; ஆனால் அதுவே ஒரு அரசியல் செயற்பட்டியலை மறைக்கிறதுஅதாவது பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இரு-கட்சி முறைக்கு எதிரான போராட்டத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கிறது.

ஜனநாயகக் கட்சியும் அதன் முக்கிய ஆதரவாளர்களும் ஆக்கிரமிப்பு இயக்கத்தில் நுழைந்துள்ளனர். அவர்களுடைய நோக்கம் எதிர்ப்புக்கள் இருக்கும் பொருளாதார, அரசியல் ஒழுங்கிற்கு எதிரான ஒரு பரந்த போராட்டத்திற்கு வழிவகுத்துவிடக்கூடாது என்பதை உறுதி செய்வதுதான். AFL-CIO இன்னும் பிற ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புடைய குழுக்கள் வோல் ஸ்ட்ரீட்-எதிர்ப்புக்களை, மூன்று ஆண்டுகளாக  வங்கிகளின் ஆணைகளை விசுவாசத்துடன் செயல்படுத்தி வரும் ஜனாதிபதி ஒபாமா மறுதேர்தலுக்கான பிரச்சாரமாக மாற்ற விரும்புகின்றனர்.

அரசியல் என்பது எதிரிடையான வர்க்கங்கள் மற்றும் சமூக நலன்களுக்கு இடையே நடக்கும் போராட்டங்கள் பற்றியதுதான். ஆளும் வர்க்கத்தின் திட்டமான வங்கிகள் பிணை எடுப்புக்கள், சமூகநலச் செலவுகளில் சிக்கனம், போர், ஜனநாயக உரிமைகளை அழித்தல் ஆகியவை தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நலன்களைத் தளமாகக் கொண்ட ஓர் அரசியல் வேலைத்திட்டத்தினால்தான் எதிர்க்கப்பட வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள்

சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கம் ஒரு சிக்கல் வாய்ந்த நவீன சமுதாயத்தில் வாழ்விற்கு அடிப்படையான சமூக உரிமைகள் உள்ளன என்ற கருத்தாய்வை ஏற்க வேண்டும் என்பதை முன்வைக்கிறது. இதனால் அந்த உரிமைகள் மாற்றத்தக்கவை அல்ல, விட்டுக்கொடுக்கப்படக்கூடியவையும் அல்ல எனக் கூறுகிறது.

இந்த உரிமைகளில் கீழ்க்கண்டவையும் அடங்கும்:

1     ஒரு வேலைக்கான உரிமை, வாழ வசதியான வருமானத்திற்கான உரிமை

2     உயர்ந்த தரம் உடைய பொதுக் கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றை இலவசமாகபெறும் உரிமை

2     வீடுகள் மற்ற வசதிகளுக்கான உரிமை

3     உரிய பாதுகாப்புக் கொண்ட ஓய்வைப் பெறும் உரிமை

4     சுகாதாரமான சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரக்கூறுபாடுகளை அடையும் உரிமை

தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள் பெருநிறுவனங்களின் உரிமைகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும். பெருநிறுவன உரிமைகள் இருகட்சி முறையால் நிபந்தனையற்ற முறையில் பாதுகாக்கப்படுகின்றன. பெருநிறுவனங்கள் வேலைகளை அழிக்கும், ஊதியங்களைக் குறைக்கும்உரிமையைக் கொண்டுள்ளதுடன், வங்கிகள் வீடுகளில் இருந்து மக்களை விரட்டி அடிக்கும்உரிமையைக் கொண்டுள்ளன. அரசியல் அமைப்புமுறையோ மில்லியன் கணக்கான மக்கள் நம்பியிருக்கும் சமூகநலத் திட்டங்களை அழிக்கும்உரிமையை நாடுகின்றன.

வங்கிகள் மற்றும் முக்கிய பெருநிறுவனங்களை பொதுவுடமையாக்குதல்!

அதன் பெயரின்மூலமே வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் என்பது தொழிலாள வர்க்கத்தின் அனைத்துத் தேவைகளும் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் பொருளாதார, அரசியல் வாழ்வின் மீது கொண்டுள்ள சர்வாதிகாரத்திற்கு எதிரான மோதலில் உள்ளன என்னும் அடிப்படை அறிந்துகொள்ளுதலைத்தான் வெளிப்படுத்துகிறது. இப்பெருநிறுவனங்கள் பெரும்பாலான வளங்களைக் கட்டுப்படுத்திகின்றன. அவையோ உலகம் முழுவதும் இருக்கும் பில்லியன் கணக்கான மக்களின் கூட்டு உழைப்பின் விளைவு ஆகும்.

பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கு சமூகம் மற்றும் அரசியல்மீது கொண்டுள்ள இரும்புப்பிடியை முறிப்பதற்கு, வங்கிகள் மற்றும் முக்கிய பெருநிறுவனங்கள் பொது உடைமையின்கீழ் வைக்கப்பட வேண்டும், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட வேண்டும். அதுதான் பல டிரில்லியன் டாலர்கள் மதிப்புடைய பொதுப் பணித்திட்டத்திற்கான ஆதாரங்கள் கிடைக்கும்படி செய்து, முழு வேலை நிலையை உறுதி செய்து, வறுமையை அகற்றவும், அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் சமூகத் தேவைகளையும் நிறைவேற்ற முடியும்.

சமூக சமத்துவத்திற்காக! நெருக்கடிக்கு முதலாளித்துவத்தினர் விலை கொடுக்க வைக்க!

முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்குபவர்கள் சமத்துவமின்மை ஒன்றும் பொருளாதார நெருக்கடியுடன் தொடர்பு கொண்டதில்லை எனக் கூறுகின்றனர். ஏதோ உற்பத்தி திறனில் இருந்து விளைந்த டிரில்லியன் கணக்கான டாலர்களை எடுத்துக் கொள்ளுவது பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என்பது போல் கூறுகின்றனர். நிதியப் பிரபுத்துவத்தின் இன்னும் கூடுதலான பணம் தேவை என்னும் தீராத பேராசை உந்துதல் ஒன்றன்பின் ஒன்றாக ஊக நடவடிக்கைகளை கொண்டுவந்து நாட்டைத் திவாலாக்கிவிட்டது. கௌரவமான ஊதியங்களை கொடுப்பதற்குப் பணம் இல்லை என்றும் கூறும் இதே தலைமை நிர்வாக அதிகாரிகள்தான், ஊதிய வெட்டுக்களை செயல்படுத்தித் தங்களுக்கும் மற்ற உயர்மட்ட நிர்வாகிகளுக்கும் மில்லியன் கணக்கில், சில நேரம் பல மில்லியன் கணக்கான டாலர்களையும் ஒவ்வொரு ஆண்டும் கொடுத்துக்கொள்ளுகின்றனர்.

தொழிலாள வர்க்கம் அடிப்படைச் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்வதற்குபணம் இல்லை என்னும் கூற்றை இகழ்ச்சியுடன் நிராகரிக்க வேண்டும். சமூக சமத்துவத்தை நிறுவுவதற்கு உடனடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதில் மீண்டும் படிப்படியாக உயரும் வருமான வரிகளை அறிமுகப்படுத்துதல், 500,000 டாலருக்கும் மேலான வருமானங்கள் அனைத்தையும் 90% வரிகளுக்கு உட்படுத்துதல் (அதுதான் 1950 ல் இருந்து வரிவிகிதம் ஆகும்) மற்றும் பல மில்லியன், டிரில்லியன் கொண்டவர்கள்மீது சொத்துவரி விதித்தல் ஆகியவை தேவையாகும்.

சோசலிசத்திற்கான போராட்டத்திற்காக தொழிலாள வர்க்கம் ஐக்கியப்பட வேண்டும்!

அமெரிக்காவிலும் உலகம் முழுவதும் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவம் தோல்விக்கு உட்படுத்திவிட்டது. இப்பொழுது சமூகத்தின் பொருளாதார அமைப்பிற்கு வேறுபட்ட அணுகுமுறைக்காகத் தொழிலாள வர்க்கம் போராடும் நேரம் வந்துவிட்டது. முதலாளித்துவத்திற்கு மாற்றீடாக செயல்படக்கூடிய ஒரே முறை சோசலிசம்தான். அதாவது பொருளாதார வாழ்வைத் தனியார் இலாபங்களுக்கு என்று இல்லாமல் சமூகத் தேவைகளுக்கு உதவுவதற்கு, ஜனநாயக கட்டுப்பாட்டின்கீழ் மறு சீரமைத்தல் என்பதே அது.

சமத்துவத்திற்கான போராட்டம் என்பது சோசலிசத்திற்கான போராட்டம் ஆகும். பொருளாதார வாழ்வை சோசலிச மாற்றம் செய்தல் என்பது ஒரு போராட்டம் இல்லாமல் சாதிக்கப்பட முடியாது. வரலாறு அனைத்தும் செல்வந்தர்கள் தங்கள் அதிகாரம், சலுகைகள் ஆகியவற்றைப் போராடாமல் கைவிட்டதில்லை என்பதைத்தான் நிரூபிக்கிறது.

சமூக மாற்றத்திற்கான பெரும் சக்தியும், புரட்சிக்கான பெரும் சக்தியும்  தொழிலாள வர்க்கம்தான். மக்களில் பெரும்பாலானவர்கள் இப்பிரிவில்தான் உள்ளனர். ஆலைகளில் வேலைபார்த்தாலும், கட்டமைப்புப் பிரிவுகள், அலுவலகங்கள், மருத்துவ மையங்கள், வணிக நிலையங்கள், பள்ளிகள், பல்கலைக்கழக வளாகங்கள் அல்லது விஞ்ஞான ஆய்வுக் கூடங்களில் பணிபுரிந்தாலும், டிரக்குகள், பஸ்கள், இரயில்களை ஓட்டினாலும், வணிக விமானங்களை ஓட்டினாலும், பெரும்பாலான மக்கள் ஒவ்வொரு மாதமும் பெரும் காசோலை மூலம்தான் வாழ்க்கையை நடத்துகின்றனர்.

வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு என்பது ஆலைகளை ஆக்கிரமித்தல் என்று விரிவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பணியிடமும் தொழிலாளர்களின் உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக வெகுஜன எதிர்ப்பின் மையமாக விளங்க வேண்டும்.

இத்தகைய போராட்டக்கை அமைத்திட, ஒருங்கிணைத்திட, அவற்றை முதலாளித்துவ முறைக்கு எதிராக இயக்கிட, ஒரு புதிய கட்சி கட்டமைக்கப்பட வேண்டும். அமெரிக்க அரசியல் இரு முதலாளித்துவக் கட்சிகளால் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளது; அவை அமைதியாகச் செயல்பட்டு பெரும்பாலான மக்களுடைய நலன்களுக்கு எதிரான உண்மையான வெளிப்பாடுகளை நசுக்குகின்றன.

சோசலிச சமத்துவக் கட்சி முதலாளித்துவ முறையின் இருகட்சி முறைக்கு எதிரான ஒரு போராட்டத்திற்குத் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமான தொழில்துறை அரசியல் திரட்டிற்காக வழிகாட்டி நிற்கிறது. வோல் ஸ்ட்ரீட்டுடன் போராடுவதற்கு ஒரு பாதை காண விரும்பும் அனைத்துத் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நாங்கள் எங்கள் வேலைத்திட்டங்களைப் படிக்குமாறும் SEP யில் சேருமாறும், சோசலிசத்திற்கான போராட்டத்தில் ஈடுபடுமாறும் வலியுறுத்துகிறோம்.

சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை

சனிக்கிழமை அன்று அமெரிக்க முழுவதும் உள்ள நகரங்களில் நடக்கும் வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு ஆர்ப்பாட்டங்களில் இந்த அறிக்கை விநியோகிக்கப்படுகிறது. இது PDF வடிவமைப்பிலும் கிடைக்கும். நம் வாசகர்களை இதை பதிவிறக்கம் செய்து இயன்ற அளவு பரந்த முறையில் விநியோகிக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.