World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Bitter dispute among Indian elites ignores vital dam safety issues

இந்திய மேற்தட்டில் நிலவும் கசப்பான மோதல்கள் முக்கிய அணை பாதுகாப்பு பிரச்சினைகளைப் புறக்கணிக்கிறது

By Arun Kumar and Kranti Kumara
7 January 2012
Back to screen version

கேரளாவில், அண்டை மாநிலமாக விளங்கும் இந்தியாவின் தென்மாநிலமான தமிழ்நாட்டின் எல்லைக்கருகில், அமைந்துள்ள ஒரு 116 ஆண்டுகால பழைய அணை மீது நீண்டகாலமாக முரண்பாடு தேசிய-இனவாத மோதல்களை  கிளறிவிடுகிறது. இந்நிலையில் அம்மாநிலங்களின் ஆளும் மேற்தட்டுக்கள் அணை பாதுகாப்பு மற்றும் நீர் கையிருப்பு குறித்த உண்மையான மக்களின் கவலைகளை மோசமான அரசியல் தேவைகளுக்குப் பயன்படுத்த விரும்புகின்றன.     

கேரள நீர்பாசன மற்றும் பராமரிப்பு சட்டத்தில், 2006இல் கேரள சட்டமன்றம் ஒரு தீர்மானம் கொண்டு வந்ததிலிருந்து இந்த பிரச்சினை அரசியல் வடிவத்தை எடுத்தது. அந்த தீர்மானம், முல்லை பெரியாறு அணை பூகம்ப அச்சுறுத்தல்களால் "அபாயத்திற்குள்ளாகி" இருப்பதாக அறிவித்தது.

கடந்த ஆண்டின் மாநில சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர், ஒரு சிறு பெரும்பான்மையில் தங்கியுள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி (UDF) அரசாங்கம், அணையின் நீர்மட்டத்தை தற்போதைய 136 அடியிலிருந்து 120 அடியாக குறைக்க வேண்டுமென கோரியது. இருந்தபோதினும், இப்போதிருக்கும் அணையை உடைத்துவிட்டு, இன்னும் கீழ்பிரதேசத்தில் அதாவது கேரளவிற்கு உட்புறம் மற்றொரு புதிய அணையைக் கட்ட வேண்டுமென்பதே கேரள மேற்தட்டால் முன்மொழியப்படும் நீண்டகால தீர்வாக உள்ளது.  

1895இல் பிரிட்டிஷ் காலனித்துவ நிர்வாகத்தால் கட்டப்பட்ட முல்லை பெரியாறு அணை, பெரியாறு ஆற்றுநீரை பங்கீடு செய்கிறது. தொழில்நுட்பரீதியில் அந்த அணை கேரளாவில் அமைந்துள்ள போதினும், அது தமிழ்நாட்டின் வறண்ட தென்பிராந்தியங்களுக்கு விவசாய நீர்பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கேரளாவுடனான ஒரு குத்தகை உடன்படிக்கையின் அடிப்படையில் அந்த அணையை நிர்வகித்துவரும் தமிழ்நாடு அரசு, நீர் மற்றும் நில பயன்பாட்டிற்காகவும், மின்சார உற்பத்திக்காகவும் கேரளாவிற்கு வரிகளைச் செலுத்திக் கொண்டு, அணை செயல்பாடுகளின் மீது முழு கட்டுப்பாட்டையும் கொண்டுள்ளது.   

தமிழ்நாட்டு விவசாயத்திற்கு அத்தியாவசியமான அந்த நதிநீர் மீது கேரளா அதன் பிடியைப் பெறும் நோக்கத்தோடு கேரள மேற்தட்டால் பாதுகாப்பு பிரச்சினை கிளப்பிவிடப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டுவதில், தமிழ்நாடு அரசாங்கமும், தமிழ்நாட்டு அரசியலின் ஏனைய பிரிவுகளும் ஒன்றிணைந்துள்ளன. தமிழ்நாட்டு அரசாங்கத்தின் மற்றும் ஏனைய பல அதன் ஆதரவாளர்களின் கருத்துப்படி, ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக உடையாமல் இருந்துவருவதே அந்த அணையின் பாதுகாப்புக்கு "போதுமான சான்றாக" உள்ளது

கேரள அரசால் வலியுறுத்தப்படும் புதிய அணையும் அதே பூகம்பம் ஏற்படக்கூடிய பிரதேசத்திற்குள்ளேயே கட்டப்படுமென்பதால், அதுவும் பூகம்ப அபாயங்களைத் தவிர்த்துவிடவில்லை. சுற்றுச்சூழல் நிபுணர்களால் குறிப்பிடப்படுவதைப் போல, “அந்த அணையும் அதே பூகம்ப அபாய பிரச்சினைக்கு உட்பட்டிருக்கும்". அதற்கும் மேலாக, “முன்மொழியப்பட்ட புதிய அணை, பெரியாறு புலிகள் சரணாலயத்தின் இதயதானத்தில் உள்ளது. அது நூற்றுக்கணக்கான ஏக்கர் வனப்பகுதிகளை உள்ளடக்கும் என்பதால், அப்பகுதியிலுள்ள மாற்று உயிர்வாழ்விடத்தையும் (bio-diversity) அழிப்பதாக இருக்கும்.” அங்கிருக்கும் விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களையும் மூழ்கடிக்கும் என்பதால், அவர்கள் வெளியேற நிர்பந்திக்கப்படுவதோடு, அதன்மூலம் பல விவசாயிகள் மற்றும் இதர உழைப்பாளிகளின் வாழ்வாதாரங்களும் அழிக்கப்படக்கூடும்.      

தமிழ்நாடு மற்றும் கேரள மேற்தட்டு இரண்டினாலும் எழுப்பிவிடப்பட்டு வரும் சூடான வார்த்தைப்பிரயோகங்கள், எல்லையோர பகுதிகளில் ஒரு பதற்றமான அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது. பல தமிழ் தொழிலாளர்களும், அவர்களின் குடும்பங்களும் கேரளாவிலுள்ள அவர்களின் சொந்த வீடுகளில் இருந்து விரட்டப்பட்டிருப்பதாகவும், அதேபோன்ற முறையில், தமிழ்நாட்டிலுள்ள தேசியவாத வெறியர்களால் (chauvinists) கேரளாவினருக்கு சொந்தமான கடைகளையும், கேரளாவிற்கு பயணமாகும் பேருந்துகளையும் தாக்குவதாகவும் அங்கிருந்து செய்திகள் வருகின்றன. இந்த தாக்குதல்களோடு எந்தவொரு அரசியல் கட்சியையோ அல்லது கட்சிகளையோ சம்பந்தப்படுத்தி எவ்வித ஆதாரமும் இதுவரை வரவில்லை என்றபோதினும், இரண்டு மாநிலங்களின் அரசியல் மேற்தட்டுகளின் அனைத்து பிரிவுகளும் இந்த தேசியவெறி உணர்வுகளைத் தூண்டிவிடுவதற்கு பொறுப்பாகின்றன.   

நீர்-பற்றாக்குறையில் இருக்கும் தமிழ்நாடு மாநிலம் அதன் விவசாய உற்பத்திக்கு தேவையான அதன் பாசனத்திற்காக அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உற்பத்தியாகிவரும் நதிகளின் நீரை கடுமையாக சார்ந்துள்ளது. நீர்வரத்துக்காக சார்ந்திருக்கும் இந்த தன்மையை, பல தடவைகளிலும், மாநிலங்களின் ஆளும் மேற்தட்டுக்களின் அனைத்து பிரிவுகளும் அவற்றின் அரசியல் நோக்கங்களுக்காகவும், வறுமை, பொருளாதார இடர்ப்பாடு மற்றும் அல்லல்படுத்தும் போதிய உள்கட்டமைப்பு இல்லாமை போன்ற முக்கிய பிரச்சினைகளிலிருந்து மாநிலங்களின் மக்களை திசைதிருப்ப பயன்படுத்திக் கொண்டுள்ளன. இம்மாநிலம் தற்போது அனைத்து அண்டை மாநிலங்களிடையேயும் நீர் பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளது.    

நூற்றாண்டு பழமையான முல்லை பெரியாறு அணை தொடர்ந்து நில நடுக்கங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஒரு மரணகரமான அபாயத்தைக் கொண்டுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பூகம்ப ஆய்வு வல்லுனர்களால் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, அந்த அணை 6.5 ரிக்டர் அளவிற்கு மேல் ஏற்படும் நில அதிர்வுகளைத் தாங்க முடியாது. 2011இல், 3.9 ரிக்டர் அளவிலான ஒரு நில அதிர்வு பதிவாகியது. மேலும் பல அதற்கு குறைந்த அளவிலான நில அதிர்வுகளும் பதிவாகியுள்ளன.

1979இல் ஏற்பட்ட ஒரு சிறிய நில நடுக்கத்திற்குப் பின்னர் கேரள மாநில அரசால் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுப்பப்பட்ட போது, பாதுகாப்பு-பராமரிப்பு பணிகளை மேற்கோள்வதற்கு ஏற்ப தமிழ்நாடு அரசு அந்த அணையின் மொத்த கொள்ளளவான 142.2 அடியிலிருந்து தற்போதைய 136 அடிக்கு குறைக்க வேண்டியதாகிற்று.

இந்த பிரச்சினையில் தலையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு இணங்க, இந்திய உச்சநீதிமன்றம் பிரச்சினைகளை ஆய்வு செய்ய, பெரும்பாலும் அதிகாரத்துவவாதிகளை உள்ளடக்கிய, ஐந்து உறுப்பினர்கள் கொண்ட ஒரு "சுய-அதிகார குழுவை" நியமித்தது. அதைத் தொடர்ந்து அக்குழு நீர்மட்டத்தை 120அடிக்கு குறைவாக குறைக்க வேண்டுமென்ற கேரளாவின் கோரிக்கையை நிராகரித்தது. பத்திரிகை செய்திகளின் அடிப்படையில், கடந்த ஆண்டு நில அதிர்வுகளுக்குப் பின்னர் அணை ஏதாவது பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளதா என ஆராய இரண்டு உறுப்பினர்கள் கொண்ட "சுய-அதிகார குழு" கேட்டுக்கொள்ளப்பட்டது. அவர்கள், அணையில் எவ்வித கண்ணுக்குத் தெரியும் பாதிப்பும் இல்லையென்ற முடிவிற்கு வந்தனர்.

இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கம், கொழுந்துவிட்டுவரும் மாநிலங்களுக்கு இடையிலான பல பிரச்சினைகளிலும் அது இனரீதியில் இருந்தாலும் சரி அல்லது "பொருளாதார பின்தங்கிய நிலைமையின்" அடிப்படையில் இருந்தாலும் சரி, அல்லது புதிய மாநிலங்களை உருவாக்க வேண்டுமென்ற அழைப்புகளாக இருந்தாலும் சரி, அதன் அரசியல் பலவீனத்தைக் காட்டும் விதத்தில், அது ஸ்தம்பித்து நிற்கிறது. கேரளாவின் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் அணை பிரச்சினையை தூண்டிக்கொண்டிருக்கின்ற நிலையில், தேசிய காங்கிரஸ் தலைமையானது தமிழ்நாட்டு மேற்தட்டுடன் உறவை முறித்துக்கொள்ளவோ அல்லது அணை பிரச்சினையில் ஒருதரப்பு சார்பாக பார்க்கப்பட்டு மாநில-மத்திய உறவுகளை அபாயத்திற்கு உட்படுத்துவதையோ விரும்பவில்லை.     

புதிய அணை கட்டவேண்டுமென்று கோரி போராட்டங்களை ஒழுங்கமைக்கும் முதன்மையானவர்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில பிரிவும் ஒன்றாக உள்ளது. அது அவ்வாறு செய்வதன் மூலமாக, வெளித்தோற்றத்தில் அதன் முக்கிய-எதிர்ப்பாளராக விளங்கும் காங்கிரஸ் கட்சி உட்பட, அனைத்துவித வலதுசாரி முதலாளித்துவ மற்றும்  தேசியவாத வெறி குழுக்களோடு கைகோர்த்துள்ளது.

கடந்த மே மாத தேர்தலில் தோற்கடிக்கப்படும் வரையில் மாநில சிபிஎம் தலைமையிலான கூட்டணிக்குத் தலைமையேற்றிருந்த V.S. அச்சுதானந்தன் தலைமையின்கீழ், இடுக்கி மாவட்டத்தின் எல்லையில் சிபிஎம் முன்னெடுத்த போராட்டங்கள், தமிழ்பேசும் தொழிலாளர் மத்தியில் பயச்சூழலை உருவாக்கியுள்ளது. கேரளாவின் ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி அரசாங்கம் போதிய தீவிரத்தோடு கேரளாவின் "நலன்களை" காப்பாற்ற தவறி வருவதாக குற்றஞ்சாட்டி, அச்சுதானந்தன் வலதிலிருந்து அதையும் தாக்கியிருந்தார்.   

சிபிஎம் அரசியற்குழு முல்லை பெரியாறு அணை மீதான மோதலைக் கையிலெடுக்க தவறுவதன் மூலம் “[கேரள] மக்களின் உணர்வுகளுக்கு" குரல் கொடுக்க தவறுவதாகவும் அச்சுதானந்தன் விமர்சித்துள்ளார்.

சிபிஎம் இன் மத்திய தலைமை, அணை பிரச்சினை குறித்து தீர்க்கமாக எதையும் கூறவில்லை; அது மாநிலத்தின் தேசிய வெறி போராட்டங்களுக்கு எதிராக கொள்கைரீதியிலும் எந்தவொரு எதிர்ப்பையும் காட்டவில்லை; அல்லது உள்ளூர் காங்கிரஸ் கட்சியுடனான சக்திகளுடன் சேர்வதற்கு அது தயாராக இருப்பதை காட்டவில்லை. ஏனென்றால், அது 2011 மாநில சட்டமன்ற தேர்தல்களில் தமிழ்நாட்டில் செய்த "அரசியல் கூட்டுகளுக்கு" கேடு விளைவித்து கொள்ள விரும்பவில்லை.

கடந்த ஆட்சியின் போது அரசு தொழிலாளர்களின் ஒரு வேலைநிறுத்தத்தை உடைக்க கருங்காலிகளையும், பெரும் கைது நடவடிக்கைகளையும் பயன்படுத்தியதும், அதன் அரசியல் எதிர்ப்பாளர்களை சிறையிலடைக்க "பயங்கரவாத-எதிர்ப்பு சட்டங்களை" கொண்டுவந்ததுமான அஇஅதிமுக உடனான சிபிஎம் மற்றும் அதன் நீண்டகால இடது முன்னனி கூட்டாளியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு தேர்தல் கூட்டணிக்கு தான் இதற்காக நன்றி கூற வேண்டும். அந்த தேர்தலில் அவை கூடுதலாக 4 இடங்களை வென்றெடுக்க முடிந்தது. அது கூட்டாக மொத்தம் 19 இடங்களை அவற்றிற்கு கொண்டு வந்தது.  

முல்லை பெரியாறு பிரச்சினை இந்திய முதலாளித்துவ அரசியலின் பிற்போக்குத்தனமான மற்றும் படுமோசமான குணாம்சத்தை எடுத்துக்காட்டுகின்றது. மேற்தட்டின் அனைத்து பிரிவுகளும் அவற்றின் பணத்தாசை மற்றும் அதிகாரத்திற்கான கன்னை போராட்டங்களை முன்னெடுக்கவும் மற்றும் இந்திய உழைப்பாளிகளின் அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக விருப்பங்களைப் பூர்த்தி செய்ய முடியாத இந்திய முதலாளித்துவத்தின் தோல்வியால் உண்டான மக்களின் கோபத்தைப் பிற்போக்குதனமான போக்குகளில் திசைதிருப்பவும், அவை தேசியவெறி, பிராந்தியவாத, வகுப்புவாத, ஜாதிய அழைப்புகளை விடுத்துவருகின்றன.