World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Australian Federal Police aid Sri Lankan unit implicated in torture

சித்திரவதைக்கு உடந்தையாய் இருந்த இலங்கை பிரிவுக்கு ஆஸ்திரேலிய மத்திய பொலிஸ் உதவுகிறது

By Oscar Grenfell
10 August 2015

Back to screen version

கடந்த செவ்வாயன்று ஆஸ்திரேலிய ஒளிபரப்பு கூட்டுஸ்பானத்தின் 7.30 மணி நிகழ்ச்சி, இலங்கையின் குற்ற புலனாய்வுத்துறைக்கும் (CID) மற்றும் ஆஸ்திரேலிய மத்திய பொலிஸிற்கும் (AFP) இடையிலான ஒத்துழைப்பை அம்பலப்படுத்தியது. இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பாளர்களை சித்திரவதை செய்ததிலும், வன்முறையாக கையாண்டதிலும் இந்த இலங்கை குற்றப் புலனாய்வுத்துறை பிரிவு உடந்தையாய் இருந்தது.

ஆஸ்திரேலியாவின் முந்தைய தொழிற்கட்சி அரசாங்கத்தின் கீழ், 2009க்கு மத்தியில் தொடங்கி, ஆஸ்திரேலிய மத்திய பொலிஸ் இலங்கை குற்றப்புலனாய்வுத்துறைக்கு அலுவலக சாதனங்கள், வாகனங்கள் மற்றும் உளவுபார்க்கும் கருவிகளை வழங்கியது, இவை அதன் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு நேரடியாக உதவியிருக்கலாம். மக்களைச் சட்டவிரோதமாக வேறுநாட்டிற்கு அழைத்து செல்பவர்களை எதிர்கொள்வதற்காக" என்ற போலிக்காரணத்தின் அடிப்படையில், ஆஸ்திரேலிய பொலிஸ் முகமைகள், இடர்பாடுகளிலிருந்து தப்பிப்பதற்கு முயன்ற தஞ்சம் கோரியோரை தடுப்பதிலும், அவர்களைப் பழிவாங்குவதிலும் இலங்கை அமைப்புகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்தன.

மிக முக்கியமாக இந்த உறவு, இலங்கை அரசாங்கத்தின் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ ஆல், பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளுக்கு  எதிரான அதன் மூர்க்கமான போரின் இறுதிக்கட்டத்திலும் மற்றும் அதற்குப் பின்னரும், சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிராகவும், அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் இதழாளர்களுக்கு எதிராகவும் திருப்பிவிடப்பட்ட ஒரு கொடூர ஆட்சிமுறையின் உச்சக்கட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. அந்த போரின் இறுதி மாதங்களில் 40,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது, அதேவேளையில் 300,000க்கும் அதிகமான தமிழர்கள் சிறை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.

விடுதலை புலிகள் மே 2009 இல் தோற்கடிக்கப்பட்டது. அதே மாதத்தின் போது, மக்களை சட்டவிரோதமாக வேறுநாடுகளுக்கு அழைத்து செல்வதை நோக்கிய ஆஸ்திரேலியாவின் அணுகுமுறையை விரிவாக்குதல்ஃபியூஷன் & கொழும்பு புதிய கொள்கை முனைவு" என்ற தலைப்பில் ரூட் தொழிற் கட்சி அரசாங்கத்தின் வரவு-செலவு திட்டக்கணக்கில் இலங்கை புலனாய்வுத்துறை உடனான ஆஸ்திரேலிய மத்திய பொலிஸின் ஒத்துழைப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆஸ்திரேலிய மத்திய பொலிஸிற்கு நான்காண்டுகளுக்கும் மேலாக 2.8 மில்லியனுக்குச் சிறப்பு நிதிஒதுக்கீடு இருந்தது. ஜூன் 2009 இல், இலங்கை புலனாய்வுத்துறை மற்றும் ஏனைய பொலிஸ் முகமைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட ஆஸ்திரேலிய மத்திய பொலிஸ் கொழும்பில் ஓர் அலுவலகத்தை திறந்தது.

அந்த 7.30 நிகழ்ச்சி, ஒரு தகவல் கோரும் சுதந்திரம் மூலமாக பெறப்பட்ட, 2011 இல் இருந்து தேதியிட்ட ஆணவங்களின் அடிப்படையில் அதன் அம்பலப்படுத்தல்களை எடுத்துக்காட்டியது. நிகழ்ச்சியாளர் டைலன் வெல்ச் (Dylan Welch) கூறுகையில், ஆஸ்திரேலிய மத்திய பொலிஸ் இலங்கை பொலிஸிற்கு அனுப்பிய சாதனங்கள் குறித்து அவர்களிடம் முதலில் 2011 இல் கோரியதாகவும், ஆனால் அவரது கோரிக்கைகள் மறுக்கப்பட்டு, நான்காண்டுகளாக தடுக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

இலங்கை குற்ற புலனாய்வுத்துறைக்கு வழங்கிய பொருட்களில், அதிநவீன உளவுபார்ப்பு கணினி நிரல்களும் உள்ளடங்கும். காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகளை ஒன்றோடொன்று இணைத்து பன்முக ஆய்வுக்குட்படுத்த அனுமதிக்கும் Jade Investigator என்பதும், மற்றும் IBM இன் பகுப்பாய்வுக்குரிய மடிக்கணினியும், மற்றும் இலக்கில் வைக்கப்பட்டவர்களின் வலையமைப்பைக் குறித்து வரைபடமாக தகவல்களை வழங்கும் ஒரு "விஷூவல் பகுப்பாய்வு கருவியும்" கூட உள்ளடங்கும். அத்துடன் மின்னஞ்சல்கள், எழுத்துச் சேதிகள் மற்றும் செல்பேசிகளிலிருந்து தகவல்களை பிரித்தெடுக்கும் மற்றும் அழிக்கப்பட்ட இடத்தகவல்களை பிரித்தெடுக்கும் ஓர் இயந்திரமும் வினியோகிக்கப்பட்டது

ஏனைய பல வாகனங்களோடு சேர்ந்து, ஆஸ்திரேலிய மத்திய பொலிஸ் இலங்கை குற்றப் புலனாய்வுத்துறைக்கு நவம்பர் 2011இல் ஒரு புதிய வெள்ளை வாகனமும் வழங்கியது. அத்தகைய வாகனங்கள், இலங்கையில் பல தசாப்தங்களாக கடத்தல்கள், சித்திரவதை, விசாரணைக்குட்படுத்தப்படாத படுகொலைகளுடன் அடையாளப்படுத்தப்பட்டிருந்தன.

சட்டவிரோத கைது நடவடிக்கைகள் மற்றும் சித்திரவதைகளுக்கு அவப்பெயரெடுத்த ஓர் இடமான இலங்கை குற்றப் புலனாய்வுத்துறையின் கொழும்பு தலைமையகத்தில் குறைந்தபட்சம் நான்கு அலுவலகங்களை ஆஸ்திரேலிய மத்திய பொலிஸ் அமைத்துக் கொடுத்தது, அல்லது புதுப்பித்து கொடுத்தது. எண்ணிறைந்த மனித உரிமை அமைப்புகள் அத்தகைய குற்றங்களை ஆணவப்படுத்தி உள்ளன.

இலங்கை குற்றப் புலனாய்வுத்துறையின் சித்திரவதை திட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களோடும் அந்த 7.30 மணி நிகழ்ச்சியில் கலந்துரையாடப்பட்டது, அவர்கள் அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூரமான துஷ்பிரயோகங்களை எடுத்துக்கூறினர். நிக்" என்பவர், அந்நிகழ்ச்சியில் இவரது அடையாளம் காட்டப்படவில்லை, இவர் ஒரு புகைப்படக்காரராக அரசாங்க ஒடுக்குமுறையை ஆணவப்படுத்திய போது, 2010 மற்றும் 2012க்கு இடையே அதிகாரிகளால் ஐந்து முறை கடத்தப்பட்டார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அவரைக் கடத்திச் சென்றவர்கள் இலங்கை குற்றப் புலனாய்வுத்துறை உறுப்பினர்களாவர்.

காவலில் வைக்கப்பட்டிருந்த போது, நிக்" இன் கைகள் கட்டப்பட்டு, சிகரெட்களால் சுடப்பட்டு, பலாத்காரத்திற்கும், பாலியியல் சித்திரவதைக்கும் உட்படுத்தப்பட்டார். பல தருணங்களில் அவர் துப்பாக்கியைக் கொண்டு அச்சுறுத்தப்பட்டார். ஒரு சித்திரவதைச் சம்பவத்தை வர்ணிக்கையில், அவர் கூறினார்: எனது முதுகில் சுமார் ஆறு இடங்களில் ஒரு கொதிக்கும் இரும்பு கம்பியால் சூடு வைக்கப்பட்டதை உணர்ந்தேன், அது தீக்காயங்களை உண்டாக்கியது. அந்த வலி பொறுக்க முடியாதளவிற்கு இருந்தது, என்றார்.

மற்றொரு தமிழர், இராஜா, இவரும் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் சித்திரவதை மற்றும் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார், இவர் அந்நிகழ்ச்சியில் கூறுகையில், அவரது 16 வயது சகோதரர் வெறுமனே மூன்று வாரங்களுக்கு முன்னர் தான் அந்த அமைப்பால் கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய பொலிஸ் மற்றும் இலங்கை ஆணையங்களுக்கு இடையே நெருக்கமான உறவுகள் ஏற்படுத்தப்பட்டமை, அகதிகளின் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு பரந்த தாக்குதலின் பாகமாகும். கெவின் ரூட் மற்றும் ஜூலியா கில்லார்டின் தொழிற் கட்சி அரசாங்கங்கள் கடல்கடந்து காவலில் வைக்கும் கொள்கையை மறுஅறிமுகம் செய்தன, அந்நடவடிக்கை நடைமுறையில் வறிய பசிபிக் தீவுகளிலிருந்த சிறை முகாம்களில் தஞ்சம் கோருவோரை ஒப்படைப்பதாக இருந்தது.

சித்திரவதை மற்றும் துன்புறுத்துதல் குறித்து மனித உரிமை அமைப்புகளால் ஆதாரங்கள் எடுத்துக்காட்டப்பட்ட போதினும், ரூட் அரசாங்கமோ உள்நாட்டு போர் முடிந்ததோடு சித்திரவதைகளும் துன்புறுத்தல்களும் முடிந்துவிட்டதாக அறிவித்து, 2010 இன் தொடக்கத்தில், இலங்கையிலிருந்து தஞ்சம் கோரிவரும் விண்ணப்பங்களை "முடக்கியது.

டிசம்பர் 2012 இல், கில்லார்ட் அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை மந்திரி, பாப் கார், இலங்கை விஜயம் செய்து, உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன்" மீதான விரிவாக்கம், மற்றும் அத்துடன் "உளவுத்துறைசார் திறன்களில்" மற்றும் "கடல்சார் வான்வழி உளவுபார்ப்பு" ஆகியவற்றில் பயிற்சி வழங்கல் ஆகியவற்றைக் கொண்டு வந்தார்.

இலங்கை அகதிகளின் நூற்றுக் கணக்கான தஞ்சம் கோரிய விண்ணப்பங்களை தொழிற் கட்சி நிராகரித்த நிலைமைகளின் கீழ் தான் அந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் விசாரணை மற்றும் துஷ்பிரயோகத்திற்காக சாத்தியமான அளவிற்கு இலங்கை குற்றப் புலனாய்வுத்துறை மற்றும் ஏனைய அரசு முகமைகளின் கரங்களுக்குள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட மனித உரிமைகள் சட்ட மையத்தின் அறிக்கை ஒன்று, அக்டோபர் 2012 மற்றும் செப்டம்பர் 2014க்கு இடையே, ஆஸ்திரேலிய அதிகாரிகளால் 1,248 அகதிகளுக்கு தஞ்சம் மறுக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக குறிப்பிட்டது. திருப்பியனுப்பும் இந்த நடைமுறை அவர்கள் எந்த நாட்டிலிருந்து வந்தார்களோ அதே நாட்டிற்கு தஞ்சம் கோருவோரைத் திருப்பி அனுப்புவது அகதிகள் குறித்த சர்வதேச ஷரத்தை வெளிப்படையாக மீறுவதாகும்.

கடந்த செப்டம்பரில் சிறப்பு ஒளிபரப்பு கூட்டுஸ்பானத்தின் "டேட்லைன்" எனும் நிகழ்ச்சி, தஞ்சம் மறுக்கப்பட்டு அவர்கள் சித்திரவதைக்கு உள்ளான இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் அகதிகளைக் குறித்து எடுத்துக்காட்டியது. தகவல் கோரும் சுதந்திரத்தின் கீழ் அந்நிகழ்ச்சியில் பெறப்பட்ட ஆவணங்கள், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூறிய கருத்துக்களைக் குறித்து ஆஸ்திரேலிய மத்திய பொலிஸிற்கு தெரியும் என்றாலும், அது "இலங்கை விசாரணைகளிலிருந்து தம்மை விலக்கிவைத்திருக்கும் ஆர்வத்தில், அவரைச் சந்திக்க விரும்பவில்லை என்பதை எடுத்துக்காட்டின.

நவம்பர் 2013 இல், ஆஸ்திரேலியாவின் தற்போதைய தாராளவாத-தேசிய கூட்டணி அரசாங்கம் அகதிகளை இடைமறிப்பதற்கும் மற்றும் தஞ்சம் கோருபவர்களுக்கு அவர்களின் உரிமையைப் பெறுவதிலிருந்து அவர்களை தடுப்பதற்கும் இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டு ரோந்து படகுகளை வழங்கியது. கொழும்பில் இருந்த போது, பிரதம மந்திரி டோனி அபோட் இலங்கை அரசாங்கத்தின் மீது பாராட்டுகளை அள்ளிப் பொழிந்தார், அவ்விதத்தில் நடைமுறையில் சித்திரவதைகளுக்கும் அனுமதியளித்தார், அதேவேளையில் அத்தீவில் உள்நாட்டு போரின் போது இருந்ததை விடவும் "அதிக சுதந்திரம்" இருப்பதாகவும் அவர் எடுத்துரைத்தார். நன்கு ஆவணப்படுத்தப்பட்ட சித்திரவதை குற்றச்சாட்டுக்களை ஓர் இதழாளர் சுட்டிக்காட்டிய போது, அபோட் குறிப்பிடுகையில், அவரது அரசாங்கம் "சித்திரவதை பிரயோகத்தைக் கண்டிக்கின்ற" அதேவேளையில், சில சிக்கலான தருணங்களில் சிக்கலான விடயங்கள் நடக்கின்றன என்பதையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம், என்றார்.

ஆசிய-பசிபிக்கில் சீனாவிற்கு எதிராக திருப்பிவிடப்பட்ட அமெரிக்க இராணுவ ஆயத்தப்படுத்தலில் ஆஸ்திரேலிய முழுமையாக ஒருங்கிணைந்துள்ளதுடனும், அவ்விரு அரசாங்கங்களுக்கு இடையே நெருக்கமான உறவுகள் பிணைந்துள்ளன. சீனா சார்ந்துள்ள இந்திய பெருங்கடல் கப்பல் போக்குவரத்து பாதைகளுக்கு அருகாமையில், இலங்கை மூலோபாயரீதியில் ஒரு முக்கிய இடத்தில் உள்ளது, இதனால் போர் சமயத்தில் அப்பாதைகளைத் தடுப்பதற்கு அமெரிக்கா திட்டமிடுகிறது.

மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கம் சீனாவுடன் அதன் உறவுகளை ஆழப்படுத்தியதும், ஆஸ்திரேலியா உட்பட அதன் பிரதான கூட்டாளிகளின் ஆதரவுடன் அமெரிக்கா அதிகரித்தளவில் அதன் மீது அழுத்தத்தை உண்டாக்கியது. தமிழ் மக்களுக்கு எதிராக இராஜபக்ஷ இன் வகுப்புவாத போரை ஆதரித்திருந்த நிலையில், அவை உடந்தையாய் இருந்த அதே மனித உரிமைமீறல்களை எதிர்க்கும் பதாகையின் கீழ், அவை பாசாங்குத்தனமாக அவற்றின் பிரச்சாரத்தை நடத்தின.

இலங்கையில் இந்த ஜனவரி ஜனாதிபதி தேர்தலில், இராஜபக்ஷவை வெளியேற்றி இராஜபக்ஷவின் முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக கொண்டு வருவதை உள்ளடக்கிய ஓர் ஆட்சி-மாற்ற நடவடிக்கையை அமெரிக்கா ஆதரித்தது. இவை அனைத்துமே ஜனநாயகத்தை மீட்டமைப்பதற்காக என்ற பெயரில் செய்யப்பட்டன.

ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் மீதான துஷ்பிரயோகங்களோ தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. சித்திரவதையிலிருந்து விடுதலை (Freedom From Torture) அமைப்பின் கொள்கை மற்றும் ஆலோசனைக்கான இயக்குனர் சோன்யா சீட்ஸ் 7.30 மணி நிகழ்ச்சிக்குக் கூறுகையில், "இலங்கையில் அத்தகைய சித்திரவதை தொடர்ந்து கொண்டிருப்பதை" அவரது அமைப்பால் "ஆணித்தரமாக கூற முடியுமென்றார். அமெரிக்காவினால் முடுக்கிவிடப்பட்ட இராஜபக்ஷவின் நீக்கத்திற்கு, "மனித உரிமைகள்" என்பது சாக்குபோக்காக கூறப்பட்டது என்பதை இது மலைப்பூட்டும் அளவிற்கு அம்பலப்படுத்துகிறது.

குறிப்பிடத்தக்களவிற்கு, ஆஸ்திரேலியாவின் பிரதான பெருநிறுவன ஊடகங்கள் எதுவுமே 7.30 நிகழ்ச்சி வெளியீடுகளைக் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும், அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்களுடன் ஸ்தாபித்த ஒடுக்குமுறை உறவுகளைத் தொடரவும் மற்றும் மூடிமறைக்கவும் முயன்று வருகின்றன.