World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Former Sri Lankan president makes bid for power

முன்னாள் இலங்கை ஜனாதிபதி அதிகாரத்திற்கு முயல்கிறார்

By Saman Gunadasa
23 July 2015

Back to screen version

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (ஸ்ரீ..சு..) தலைவர்களும் மற்றும் அதன் பாராளுமன்ற அணிகளும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (..சு.கூ.), ஆகஸ்ட் 17 பொது தேர்தலில் அவர்களது பிரதம மந்திரி வேட்பாளராக முன்னாள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை நிறுத்தி உள்ளனர். இந்த அறிவிப்பு கடந்த வெள்ளியன்று ..சு.கூ. இன் (UPFA) உத்தியோகபூர்வ அனுராதபுர தேர்தல் பிரச்சார தொடக்கக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு, ஸ்ரீ..சு. மற்றும் ..சு.கூ. இன் தலைவராகவும் உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நான்கு நாட்களுக்கு முந்தைய ஓர் அறிக்கையை பகிரங்கமாக நிராகரிப்பதாக இருந்தது. பாராளுமன்ற பெரும்பான்மையை கட்சி வென்றால் பிரதம மந்திரியாக இராஜபக்ஷவின் நியமனத்தை தடுக்கவிருப்பதாக அதில் அவர் அறிவித்திருந்தார்.

சிறிசேன அவரது அரசியல் போட்டியாளர்களுக்கு எதிராக, ஜனாதிபதியாக அவரது பலமான கூடுதல் அதிகாரங்களை பிரயோகிக்க தயாராக இருப்பது, பல்வேறு உயர்மட்ட மத்தியதர வர்க்க குழுக்களும் மற்றும் போலி-இடது அமைப்புகளும் கூறிவரும், தற்போதைய ஜனாதிபதி "ஜனநாயகம்" மற்றும் "நல்லாட்சிக்காக" இருக்கிறார் என்ற வாதங்களை அம்பலப்படுத்துகின்றன.

சிறிசேன மற்றும் இராஜபக்ஷவுக்கு இடையிலான தீவிர விரோதம், இலங்கை ஆளும் வர்க்கத்திற்குள் நிலவும் ஆழ்ந்த பிளவுகளை பிரதிபலிக்கின்றன. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான சிறிசேன கடந்த நவம்பரில் இராஜபக்ஷவின் அரசாங்கத்திலிருந்து விலகி, ஜனவரி ஜனாதிபதி தேர்தல்களில் இராஜபக்ஷவை தோற்கடித்தார்.

இராஜபக்ஷவின் வெளியேற்றமானது, அமெரிக்க ஆதரவு ஐக்கிய தேசிய கட்சி (UNP) தலைவர் ரணில் விக்கிரசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரகா குமாரதுங்க ஆகியோரின் ஒத்துழைப்போடு வாஷிங்டனால் முடுக்கிவிடப்பட்ட, கவனமாக திட்டமிட்ட ஓர் ஆட்சிமாற்ற நடவடிக்கையாகும். இராஜபக்ஷவின் கீழ் தழைத்தோங்கிய பெய்ஜிங் மற்றும் கொழும்பிற்கு இடையிலான உறவுகளைக் கலைக்கவும், மற்றும் அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" மற்றும் சீனாவை இராணுவரீதியில் சுற்றிவளைக்கும் அணியில் இலங்கையை முழுமையாக கொண்டு வரவும் ஒபாமா நிர்வாகம் தீர்மானகரமாக இருந்தது.

தொழிலாளர்களது வாழ்க்கை நிலைமைகளை முன்னேற்றுவது மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான அதன் வாக்குறுதிகளை உடைத்துக் கொண்டமை உட்பட பல்வேறு பிரச்சினைகளில், சிறிசேன மற்றும் தற்போதைய ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் மீது பரந்த மக்கள் அதிருப்தி கொண்டிருப்பதால், பதவிக்காக ஒரு புதிய முயற்சியை செய்ய இராஜபக்ஷ அரசியல்ரீதியில் துணிவு பெறுகிறார். போராடும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஏழைகளை ஒடுக்க பொலிஸ் மற்றும் இராணுவத்தை ஒன்றுதிரட்டுவதற்கும் சிறிசேன நிர்வாகம் தயக்கம் காட்டவில்லை.

சிறிசேன அவரது கட்சி மீது கட்டுப்பாட்டை இழந்துவிட்டார் என்பதற்கு ஒரு தெளிவான அறிகுறியாக, ஸ்ரீ..சு.. எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபாலா டி சில்வா அனுராதபுரம் கூட்டத்தில் கூறுகையில், தேர்தலில் இராஜபக்ஷவின் தலைமை, கட்சியின் பெரும்பான்மை வெற்றியை உறுதிப்படுத்துமென தெரிவித்தார். “SLFPக்கு ஒரு பலமான தலைவர் தேவைப்படுகிறார், ஆகவே நாங்கள் உங்களை பிரதம மந்திரியாக நியமிக்கிறோம்,” என்றவர் தெரிவித்தார்.

பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளின் 2009 தோல்வியைக் குறிப்பிட்டு, ஸ்ரீ..சு.. பொது செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா அறிவிக்கையில், “பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து" நாட்டைக் காப்பாற்றியதற்காக இராஜபக்ஷவுக்கு நன்றிக்கடன் செலுத்தியாக வேண்டுமென அறிவித்தார்.

நாட்டிற்கு வாழ்வளிப்போம்; புதிதாக தொடங்குவோம்" என்ற ஸ்ரீ..சு.. இன் தேர்தல் பிரச்சார முழக்கமானது, இராஜபக்ஷ பதவியிலிருந்தபோது நடத்திய அவரது நடவடிக்கைகளையும், வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களையும் மற்றும் அவரது அரசாங்கத்தின் பொலிஸ்-அரசு ஆட்சி முறைகளையும் மூடிமறைப்பதற்கு ஓர் ஆத்திரமூட்டும் முயற்சியாகும்.

அவரது தலைமையின் கீழ் இலங்கை அரசாங்கம் "ஒரு புதிய வெளியுறவுக் கொள்கை மற்றும் புதிய பொருளாதார திசையில் இயங்குமென" அக்கூட்டத்தில் இராஜபக்ஷ தெரிவித்தார்.

அவரது "புதிய வெளியுறவு கொள்கை" குறித்து அவர் விபரமாக தெரிவிக்கவில்லை என்றபோதினும், இராஜபக்ஷ மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெய்ஜிங் உடன் நெருக்கமான உறவுகளுக்கு திரும்ப விரும்புகின்றனர், அதுவும் குறிப்பாக, சீனாவிடமிருந்து முதலீடு மற்றும் மலிவுக் கடன்களை பெறவும் விரும்புகின்றனர். சீன முதலீடுகளை "மீளாய்வு செய்வதற்காக" மற்றும் "தடுப்பதற்காக", இராஜபக்ஷ ஏனைய கூட்டங்களில் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தை விமர்சித்துள்ளார், மேலும் சீனாவிடமிருந்து நிதி உதவிகளை ஊக்குவிக்கவும் உறுதியளித்துள்ளார்.

2009 மற்றும் 2014க்கு இடையே, இராஜபக்ஷ அரசாங்கம் சீனாவிடமிருந்து கடன்கள் மற்றும் முதலீடுகளாக மதிப்பிடப்பட்ட அளவில் 5 பில்லியன் டாலர் பெற்றது, அது முன்னாள் ஜனாதிபதி, அவரது குடும்பம், அரசியல் ஒத்துழைப்பாளர்கள் மற்றும் பெரு வணிக தலையாட்டிகளுக்கு ஆதாயமளித்தது. ஆளும் உயரடுக்கின் இந்த அடுக்கு இத்தகைய கொள்கைகளின் ஒரு தொடர்ச்சியை விரும்புகின்றன.

அவரது அரசாங்கம் இலங்கை பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்திருப்பதாகவும் மற்றும் அவர் ஜனாதிபதியாக இருந்த 10 ஆண்டுகளின் போது ஏழைகளின் சமூக நிலைமைகளை அபிவிருத்தி செய்ததாகவும் இராஜபக்ஷ வாதிட்டார். “எனது அரசாங்கம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகளை வழங்கியது, பாடசாலைகள், மருத்துவமனைகளைக் கட்டியதோடு, நகரங்களை அபிவிருத்தி செய்தது,” என்றார்.

இவை அப்பட்டமான பொய்களாகும். இராஜபக்ஷ அரசாங்கம் அடிப்படை வாழ்க்கை நிலைமைகள் மீது பரந்த தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டதுடன், அத்தியாவசிய பண்டங்களின் விலைகளை திட்டமிட்டு உயர்த்தியது, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை நடத்தியதுடன், அத்தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்தியது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு எதிராக இராஜபக்ஷ அரசாங்கம் 2011 இல் பொலிஸ் கமாண்டோக்களை ஒன்றுதிரட்டியது, அதில் ஒருவர் கொல்லப்பட்டார். சிலாபம் மீனவர்களது ஆர்ப்பாட்டத்தை பொலிஸ் தாக்கியபோது மற்றொரு போராட்டக்காரர் கொல்லப்பட்டார். கொழும்பின் புறநகர் பகுதியான வெலிவேரியாவில் தூய நீர் கோரிய குடியிருப்போர் மீது இராணுவம் துப்பாகிச்சூடு நடத்தியது. அந்த தாக்குதலில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

அவரது ஆட்சிக்கு எதிரான எதிர்வினைகள் மோசமடைந்து மட்டுமே செல்லுமென அஞ்சி, இராஜபக்ஷ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்புவிடுக்க முடிவெடுக்கும் அளவிற்கு அவரது அரசாங்கத்திற்கு விரோதம் இருந்தது. அவரது அரசாங்கம் புதிய உள்கட்டமைப்புக்கும் ஏனைய கட்டிட திட்டங்களுக்கும் பாதையைத் திறந்துவிட்டது என்ற வாதங்களை பொறுத்த வரையில், இது முதலீட்டாளர்களுக்கு அதிருஷ்ட இலாபங்களை கொண்டு வந்தது, சாமானிய மக்களுக்கோ மிகச் சிறியளவே நன்மையளித்தது.

இராஜபக்ஷ தேர்தல் பிரச்சாரத்தின் பிரதான அடித்தளமாக இருப்பது சிங்கள பேரினவாதமாகும், அவரது அரசாங்கத்தின் நிஜமான கணக்குகளிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதே அதன் நோக்கமாகும். சிங்கள பேரினவாதத்தை தீவிரப்படுத்துவது ஒரு பழைய தந்திரமாகும், இது தொழிலாள வர்க்கத்தை இனரீதியில் பிளவுபடுத்த இலங்கை ஆளும் உயரடுக்கின் அனைத்து பிரிவுகளாலும் பயன்படுத்தப்பட்டது.

பண்டைய சிங்கள மன்னர்களின் முதல் தலைநகராக விளங்கிய அனுராதபுரத்தை, ..சு.கூ. இன் முதல் தேர்தல் கூட்டத்திற்குரிய இடமாக தேர்ந்தெடுத்தமையே சிங்கள பேரினவாதத்திற்கு முறையிடுவதற்காக வடிவமைக்கப்பட்டது. அனுராதபுரம் "ஒரு தலைச்சிறந்த நகரமாகும், [இங்கே தான்] பண்டைய மன்னர்கள் அன்னிய படையெடுப்பாளர்களை தோற்கடித்தார்கள்" அதனால்தான் இது தேர்ந்தெடுக்கப்பட்டது என்று கூறி இராஜபக்ஷ அவரது உரையை தொடங்கினார்.

தேசிய பாதுகாப்பை" அபாயத்தில் நிறுத்துவதாக இராஜபக்ஷ மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிறிசேன மற்றும் .தே.. (UNP) அரசாங்கத்தை குற்றஞ்சாட்டி உள்ளனர். “நான் ஏனைய அரசியல்வாதிகளைப் போல தாய்மண்ணை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டேன், நான் ஒருபோதும் இரகசிய உடன்படிக்கைகள் செய்து கொண்டதில்லை. 1978 இல் தொடங்கி 2005 வரையில் ஒவ்வொரு தலைவரும் [தமிழீழ விடுதலை புலிகள் தலைவர்] பிரபாகரனுக்கு முன்னால் மண்டியிட்டுள்ளனர்,” என்றார்.

அக்கூட்டத்தை தூண்டிவிட்டும், தன்னைத்தானே சிங்கள மக்களின் ஒரு பாதுகாவலராக சித்தரித்துக்காட்டியும், இராஜபக்ஷ தொடர்ந்து கூறுகையில், “எல்.டி.டி.. இன் திடீர் குண்டுவீச்சுக்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்பவர்கள் மரத்தடியில் உறங்குகின்றனர். போர்களத்தில் கொல்லப்பட்ட சிப்பாய்களின் உடல்கள் எவ்வாறு கிராமங்களுக்கு கொண்டு வரப்பட்டன என்பதை நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும், உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா?”

அந்த போரின் இறுதி கட்டங்களின் போது, இலங்கை இராணுவம் ஆயிரக் கணக்கான அப்பாவி தமிழ் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்றது. ஐநா வல்லுனர்கள் கருத்துப்படி, 40,000 அப்பாவி மக்கள் என்று மதிப்பிடப்பட்டவர்கள் அந்த காட்டுமிராண்டித்தனமான இராணுவ தாக்குதல்களில் உயிரிழந்தனர். தற்போதைய ஜனாதிபதி சிறிசேன மற்றும் அவரது .தே.. ஆதரவாளர்களோடு சேர்ந்து, அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகள் முழுமையாக இந்த தாக்குதலை தழுவியிருந்தன.

சீனா உடனான இராஜபக்ஷ அரசாங்கத்தின் உறவுகளை உடைக்க அழுத்தமளிப்பதற்கு வழிவகையாக மட்டுமே, வாஷிங்டன் அந்த போர் மற்றும் அதனோடு இணைந்த மனித உரிமைமீறல்களைப் பற்றி கவலைகளை உயர்த்தியது.

இராஜபக்ஷ மற்றும் சிறிசேன முகாம்கள் அந்நாட்டின் வெளியுறவு கொள்கையினது நோக்குநிலை மீது முரண்படுகின்ற போதினும், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான அவற்றின் தாக்குதல்களைத் தொடர்வதிலும் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் கோரப்படும் சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதிலும் அவை உறுதியாக ஒருங்கிணைந்துள்ளன.

இந்த தேர்தலில் கொழும்பு, யாழ்பாணம் மற்றும் நுவரேலியாவில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ள சோசலிச சமத்துவ கட்சி (சோ...) ஆளும் உயரடுக்கின் அனைத்து கன்னைகளையும் எதிர்க்கிறது. தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகள் சர்வதேச நிதியியல் மூலதனத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற இராஜபக்ஷ மற்றும் சிறிசேன முகாம்களை நிராகரித்து, சோ... பிரச்சாரத்தை ஆதரித்து, அதன் சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க கட்சியில் இணைய முன்வரவேண்டும்.