The political economy of American militarism
   
WSWS : Tamil : நூலகம்

 

 

Part 1 | Part 2


Use this version to print | Send this link by email | Email the author

சோவியத் ஒன்றியத்தின் பொறிவு, அமெரிக்காவிற்குத் தன்னுடைய நீண்ட நாள் மூலோபாய நோக்கங்களைப் அடைய சூழ்நிலைகளை அளித்தபோதிலும், சந்தர்ப்பவாத அரசியல் நோக்கங்களுக்கு ஏகாதிபத்திய வன்முறை வெடிப்பினை காரணமாக நாம் எளிதாகக் கூறிவிட முடியாது.

நாம் இங்கு ஆய்ந்துகொண்டிருக்கும் உலக முதலாளித்துவ ஒழுங்கின் சர்வதேச உறவுகளில் வந்த பெரும் மாற்றங்கள், முதலாளித்துவ அமைப்பின் அடித்தளங்களிலேயே தங்கள் தோற்றங்களைக் கொண்டுள்ள வகையில், இறுதி ஆய்வில், அவை அதற்குள்ளேயே உள்ள ஆழ்ந்த முரண்பாடுகளின் வெளிப்பாடாகும்.

இது நமக்கு ஓர் சவால் போன்றதை வைக்கிறது: நாம் எவ்வாறு முதலாளித்துவ முறையின் இயக்கு சக்திகளுக்கும் வரலாற்று நிகழ்வுப் போக்குகளுக்கும் இடையிலான உறவை உள்வாங்கி விளக்குவது?

ஈராக்கியப் போரின் போது, உலக சோசலிச வலைத் தளம் உட்பட, போரை எதிர்த்தவர்கள் பலர் எண்ணெயின் இறுதியான முக்கியத்துவத்தைச் சரியான முறையில் சுட்டிக்காட்டினர். உலக எண்ணெய் வழங்குதலில், எல்லாவற்றுக்கும் மேலாக மத்திய கிழக்கின் வளத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் உலக மேலாதிக்கத்தை நிறுவுதற்கு இன்றியமையாதது என்பதில் கேள்விக்கிடமில்லை. அப்படித் தெரிவித்தபின்னரும்கூட, இப்போரின் மத்திய பகுதியில் உள்ள பொருளாதார இயக்கு சக்திகளும் உலக ஆதிக்கத்திற்கான பரந்த துடிப்பும் எண்ணெய்க்கும் அப்பால் நீண்டு கிடந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவை முதலாளித்துவ முறையின் வரலாற்று நெருக்கடியிலேயே வேரூன்றியுள்ளன.

இதை நன்கு விளக்குவதற்கு, நாம் முதலாளித்துவ உற்பத்தி முறையின் மத்தியில் இடம்பெறும் நிகழ்ச்சிப் போக்குகளுக்கும் -எல்லாவற்றுக்கும் மேலாக, இலாபம் திரளுதலின் ஆளுமை செய்யும் விதிகளுக்கும்- வரலாற்று அபிவிருத்தி போக்குகளிற்கும் இடையிலான உறவை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இதனால் ஒவ்வொரு வரலாற்று நிகழ்ச்சியும் ஏதேனும் ஒரு பொருளாதார நலனுடைய உடனடிச் செயல்பாட்டின் பின்னணியில் இயைந்துள்ளது என்று நான் கூறுவதாக நினைக்க வேண்டாம். இன்னும் சொல்லப் போனால், எவ்வாறு பொருளாதார நிகழ்ச்சிப்போக்குகள் ஒவ்வொரு வரலாற்றுச் சகாப்தத்தையும் உருவாக்குகின்றன என்பதும், சிக்கல்களை ஏற்படுத்துகின்றன என்பதும், அவை பின்னர் அரசியல் அரங்கில் கையாளப்படுகின்றன என்பதும் எடுத்துக் காட்டப்படவேண்டிய பணியாக இருக்கின்றது.

முதலாளித்துவ பொருளாதாரத்தின் பொருளாதார இயக்கத்தை நாம் ஆராய்ந்தால், முதலில் நாம் காண்பது மாறி மாறித் தொடர்ந்துவரும் செழுமைகள், நெருக்கடிகள், பொருளாதாரப் பின்னடைவுகள், தேக்கம் மற்றும் மீட்சி என்பவற்றை கொண்ட வாணிப சுழற்சியாகும். இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே இது நன்கு புலனாகியுள்ளது.

ஆனால் நாம் சற்று பின் சென்று பரந்த கண்ணோட்டத்தில் காண்போமானால், இந்தக் குறுகிய கால வணிகச் சுழற்சியுடன் கூட, முழு சகாப்தங்களின் பொருளாதார சூழ்நிலைமையை வடிவமைக்கும் நீண்டகால நிகழ்ச்சிப் போக்குகள் அங்கு இருக்கின்றன.

1945 லிருந்து 1973 வரை போருக்குப்பின் ஏற்பட்ட பொருளாதார செழுமை தற்போதைய காலத்தைவிட தன்மையில் மாறுபட்டது ஆகும். அதேபோன்றுதான் 1873-1896 காலகட்டம் 1896-1913 காலகட்டத்தைவிடத் தன்மையில் வேறுபட்டிருந்தது. முந்தையது வரலாற்றில் 19ம் நூற்றாண்டின் பாரிய பொருளாதார மந்தம் என்ற பெயரில் வரலாற்றில் குறிப்பிடப்படும்போது, பிந்தையது சீரிய வளர்ச்சி காலம் (belle époque) எனப்பெயர் பெற்றதாகும். ஆனால் இந்தக் காலம், போருக்கு முந்தைய விரிவாக்கத்திற்குத் திரும்ப முதலாளித்துவ அரசாங்கங்களின் அனைத்து பெருமுயற்சிகளும் இருப்பினும், 1920 கள் மற்றும் 1930 களைவிட அடிப்படையில் வேறுபட்டிருந்தது.

ட்ரொட்ஸ்கி, முதலாளித்துவ முறையின் வளைகோடு எனக் கூறிய இந்த நீண்ட கட்டங்கள் அல்லது பகுதிகளின் பொருளாதார அடிப்படைதான் என்ன?

இவை அடிப்படை நிகழ்ச்சிப்போக்குகளில் ஆழ்ந்து வேரூன்றி உள்ளவை ஆகும். தொழிலாள வர்க்கத்திடமிருந்து உபரி மதிப்பை கறந்தெடுத்துக்கொள்வதே முதலாளித்துவ பொருளாதாரத்தின் இயக்கு சக்தியாகும். இது இலாபம் என்ற பெயரில் மூலதனத்தால் திரட்டிவைக்கப்படுகிறது. முதலாளித்துவ உற்பத்தி பயன்பாட்டிற்கான உற்பத்தியாகவோ, அல்லது அந்தவாறு பொருளாதார வளர்ச்சிக்கானதாகவோ இல்லை, மாறாக இலாபத்திற்கானதாக இருக்கிறது என்பது வலியுறுத்தப்பட்டாக வேண்டும்- இதுதான் மூலதனத் திரட்சிக்கு அடிப்படையாகும். எந்த அளவில் இந்தத் திரட்சி நடைபெறலாம் என்பது இலாப விகிதத்தைக் கொண்டு பொதுவாக அறியப்பட முடியும் -இதுதான் முதலாளித்துவ பொருளாதாரத்தினுடைய நலனின் முக்கிய குறியீடும், அதன் ஒட்டு மொத்த ஒழுங்கமைப்பாளனும் ஆகும்.

முதலாளித்துவ அபிவிருத்தியின் வளைகோட்டில் முதலாளித்துவ ஏற்ற காலங்கள்-Upswing) மூலதனத்திரட்சி உயர்ந்து கொண்டிருக்கும் அல்லது உறுதியாய் ஒரே அளவில் இயங்கும் உற்பத்தி வழிமுறைகளால் அல்லது ஆட்சியால் பண்பிடப்படுகிறது. இக்கால கட்டத்தில் வணிகச் சுழற்சி தனது இயக்கத்தை நிறுத்துவதில்லை. உண்மையில், ஏற்றத்திற்கு உதவுகின்றவாறு தொழிற்படுகிறது. பொருளாதாரப் பின்னடைவுகள் (Recessions) உற்பத்தியின் குறைந்த திறமுள்ள வழிமுறைகளை துடைத்துக்கட்டி, இலாப வீதத்தை அதிகரிக்கும் கூடிய முன்னேற்றகரமான நிகழ்ச்சிப் போக்குகளுக்கு வழிவிடும். அதனால், ஏற்றக் காலத்தில், சிறு பொருளாதாரப் பின்னடைவுகளுடன் செழிப்புக்காலகட்டம் நீளமாக இருக்கும், இதற்கு முன் இருந்ததைவிட அதிகமான விரிவாக்கத்திற்கு எப்போதும் வழிவிடும்.

வீழ்ச்சிக் காலங்களில் (Downswing) இதனுடைய எதிர்விளைவுகளை நாம் பொதுவாகக் காண்கிறோம். செழிப்புக்கால அளவு குறைந்தும் வலுவற்றும் விளங்குவதோடு, பொருளாதாரப் பின்னடைவுகள், தேக்கங்கள் இவற்றின் கால அளவு, ஆழ்ந்தும் நீண்டும் காணப்படும்.

பொருளாதார மாற்றங்கள்

இப்பொழுது பின்வரும் கேள்வி எழுகிறது: ஒரு பகுதி வளர்ச்சியிலிருந்து, அடுத்த பகுதிக்கு மாறுதல்களை எது ஏற்படுத்துகிறது? இந்த மாறுதல் காலம் பொருளாதாரப் பின்னடைவு அல்லது செழிப்பால் அறிவிக்கப்படுகின்ற பொழுதும் --அவை எல்லாக் காலங்களிலும் நிகழ்வதால் -வணிகச் சுழற்சிகள் மட்டுமே இதைச் செய்ய முடியாது என்பது தெளிவு.

ஏற்றக் காலத்திலிருந்து இறக்கக் காலங்களுக்கு மாறுவது மூலதனதிரட்சியின் நிகழ்ச்சிப்போக்கில் வேரூன்றி உள்ளது. மூலதனத்திரட்சி வழிவகைகள் நடைபெறும்போது, மூலதன அளவு உழைப்பின் தேவைக்கு ஏற்ப விரிவடையும்பொழுது இலாபம் குறையும் போக்கைக் காட்டும். ஏனெனில் , உபரி மதிப்பினதும் மற்றும் அனைத்து இலாபத்தினுடைய அடிப்படை ஆதாரமும், தொழிலாள வர்க்கத்தின் உயிருள்ள உழைப்புத்தான்; இந்த உயிருள்ள உழைப்பு மொத்த மூலதன அளவையொத்துக் குறையும்பொழுது விரிவடையுமாறு கட்டாயப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தப் போக்கு உற்பத்தித்திறன் அதிகரிப்பு மூலமும் எதிர்க்கப்பட்டுச் சரிசெய்யப்பட்டுவிடுகிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட ஆட்சி அல்லது உற்பத்தி முறையில் உற்பத்தித்திறனை குறிப்பிட்டளவிற்கு மேல் அதிகரிப்பை அடைய முடியாது; ஏனென்றால் அவை குறைந்த அளவில் இருந்து இலாப வீதத்தின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தும் அளவு ஆற்றல் பெற்றிருக்காது. இந்தக் கால அளவில், முதலாளித்துவ வளைகோடு கீழ் நோக்கிச் சரியத் தொடங்கும்.

ஏற்றப் போக்கினை உத்தரவாதப்படுத்த தேவைப்படும் சூழ்நிலைகளை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது. உற்பத்தி நிகழ்வுப்போக்குகளின் தன்மையையே மாற்றும் புதிய வழிமுறைகளின் வளர்ச்சியை ஒட்டித்தான் இது ஏற்படும். வேறு விதமாகக் கூறினால், அத்தகைய வழிமுறைகள் வெறும் அளவின் மாற்றத்தைக் குறிப்பதில்லை மாறாக பண்பின் மாற்றத்தைக் குறிக்கின்றன. பல உதாரணங்கள் நம்முடைய மனத்திற்குத் தோன்றுகின்றன: இரண்டாவது தொழிற் புரட்சியென அழைக்கப்படும் 19ம் நூற்றாண்டின் கடைசி காற்பகுதியில் பெருமளவு தொழில்துறை வழிமுறைகள் பெருகிய அளவில் 1890களின் நடுப்பகுதியில் ஏற்றப்போக்கிற்கு வழிவகுத்தன. அந்த நூற்றாண்டில் அதற்கு முன்பு, நீராவி ஆற்றல் பயன்படுத்தப்பட்டு இரயில் போக்குவரத்தின் வளர்ச்சி, பரந்த அளவில் புதிய சந்தைகளை ஏற்படுத்தி ஏற்றப்போக்கிற்கு வழிவகுத்து, 1830களிலும் 1840களிலும் இருந்த மந்தநிலையைப் போக்கியது மற்றும் நூற்றாண்டின் நடுப்பகுதியில் விக்டோரியா காலத்து செழிப்புநிலைச் சூழ்நிலைகளை (Victorian-era boom) உருவாக்கியது.

இறக்கப்போக்கிலிருந்து ஏற்றப்போக்கிற்கு மாறும் காலத்தின் மிகக் குறிப்பிடத்தக்க சான்று இரண்டாம் உலகப்போருக்குப் பின் முதலாளித்துவ முறை வளைகோட்டில் ஏற்பட்ட உயர்நிலையாகும். இது ஐரோப்பியப் பொருளாதாரம் முழுவதுமே சீரமைக்கப்பட்டதின் விளைவேயாகும். மேலும் அமெரிக்காவில் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளில் உற்பத்தி முறையில் பெரிய முன்னேற்றத்தைக் கொண்டுவந்த வரிசை இணைப்பு முறை (Assembly-line) ஐரோப்பாவில் பரவியதும் இதற்கு ஒரு காரணமாகும். இந்த வழிமுறைகள் முதலாளித்துவ முறையில் பெரிய விரிவை ஏற்படுத்தக்கூடிய திறனைக் கொண்டிருந்தது, ஏனெனில் அவை உற்பத்தி செய்த உபரி மதிப்பில் பெரும் அதிகரிப்பை செய்தது, நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பாவில் பிரயோகிக்க முடியாது. சந்தைகள் அளவுக்கு அதிகமாய் சுருங்கி இருந்தன, தேசிய எல்லைகளாலும், எல்லைப்புறங்களாலும் துண்டிக்கப்பட்டு இருந்தன, காப்பு வரிகள் (Protectionist tariffs) சுமத்தப்பெற்றது, வணிகக் குழுக்கள் உறபத்தியைக் கட்டுப்படுத்தின.

எனவே போருக்குப்பிந்தைய சீரமைப்புக்கு முக்கியமானது, அமெரிக்காவிலிருந்து மார்ஷல் திட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்ட $13 பில்லியன் டொலர்கள் மூலதனத்தால் மட்டும் நிகழவில்லை. சந்தைச் சீரமைப்பு அதையொட்டி நிகழ்ந்ததால்தான் -ஐரோப்பாவிற்குள் படிப்படியாகக் குறைக்கப்பட்ட தடைகள், புதிய கூடுதலான உற்பத்தித்திறன் கொடுக்கும் உற்பத்தி வழிமுறைகளின் வளர்ச்சி போன்றவை அதற்கு உதவின. இதன் விளைவு உலக முதலாளித்துவ வரலாற்றிலேயே நீண்டகாலம் நிலவிய உயர்நிலை ஆகும்.

ஆனால், இந்தப் "பொற்காலம்" முதலாளித்துவ பொருளாதாரத்தின் முரண்பாடுகளை தீர்த்துவிடவில்லை, மீண்டும் அவை இலாப வீத வீழ்ச்சி, ஆழ்ந்த மந்தநிலை, நிதியளவிலான கொந்தளிப்பு வடிவில் தவிர்க்க முடியாத அளவு மேல்மட்டத்திற்கு வெடித்து வந்தன. 1970களின் தொடக்கம் முதலாளித்துவமுறை வளைகோட்டில் புதிய காலகட்டத்தின் இறக்க நிலையை குறித்தது.

இந்த இறக்கநிலை கடந்த கால் நூற்றாண்டுகளாக பரந்த அளவில் மற்றும் நடந்துகொண்டிருக்கும் பூகோள முதலாளித்துவ பொருளாதாரத்தினை சீரமைத்தல் மற்றும் மறு ஒழுங்கு செய்தலுக்கான கட்டமைப்பை அமைத்தது. பெரிய முதலாளித்துவ நாடுகளில் தொழில் துறையில் பெரும்பகுதிகள் மூடப்பட்டன, புதிய கணினி சார்ந்த தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன, எல்லாவற்றிற்கும் மேலாக, புதிய உற்பத்தி முறைகளும் தகவல் பரிமாற்றமும் வளர்ச்சியுற்றன; இவையனைத்தும் உற்பத்தி முறையையே பூகோளமயமானதாக மாற்றியுள்ளது.

இந்த மாறுதல்களுடன் உழைக்கும் மக்கள் திரளினரின் சமூகநிலை மீதான இடையறாத் தாக்குதல்களும் நடந்த வண்ணம் இருந்தன: உண்மை ஊதியங்களின் உறுதியான சரிவு, முழுநேர வேலைத் தகர்ப்பு, அவற்றை பகுதி நேரம் அல்லது ஒப்பந்த வேலை முறைகளால் பதிலீடு செய்தது, சுகாதாரம், கல்வி, சமூகப் பணிகள் இவற்றின் செலவுகளில் வெட்டு இவற்றுடன் சேர்ந்து முன்பு பொதுப்பணித்துறையாக இருந்தவை தனியார்மயமாக்கப்பட்டது போன்றவை ஏற்பட்டன.

முன்னாள் காலனித்துவ நாடுகளில் கடந்த 20 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டிருந்த முந்தைய திட்டங்கள் அழிக்கப்பட்டு, புதிய அடிப்படையிலான மாறுதல்களுடைய திட்டங்கள் சர்வதேச நாணய நிதியத்தால் உலகளாவிய வங்கிகள் சார்பாக திணிக்கப்பட்ட நிலையில், உதாரணமாக இன்று, துணை சஹாரா ஆபிரிக்க நாடுகள் மொத்தத்தில் சுகாதாரத்திற்கும் கல்விக்கும் செலவழிக்கும் தொகையைவிட கடன் தொகையைத் திருப்பிக் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலைமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த நடவடிக்கைகள் அனைத்துமே இலாபத் தொகையின் திரளை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். ஆனால் அவை புதிய முதலாளித்துவ ஏற்றநிலையைக் கொண்டுவருவதில் தோல்வி அடைந்துள்ளன. முக்கிய நடவடிக்கையான இலாப விகிதத்தைக் காண்போம். 1950லிருந்து 1970ன் நடுப்பகுதி வரை, இலாப வீதம் 22 சதவிகிதத்தில் இருந்து 12ஆக வீழ்ச்சி அடைந்தது. -கிட்டத்தட்ட 50 சதவிகிதம் வீழ்ச்சி ஆகும். அதற்குப் பின்னர் உண்மை ஊதியம் 10 சதவிகிதம் குறைந்திருக்கக்கூடும் என்ற போதிலும் முந்தைய சரிவிலிருந்து மூன்றில் ஒரு பங்கு திரும்பப் பெற்றது. 1990 இன் நடுப்பகுதிகளில் சற்று உயர்ந்த பின்னர் 1997லிருந்து மீண்டும் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

போருக்குப் பிந்தைய அமெரிக்கப் பொருளாதாரத்தில் இலாப வீதம்

(Reproduced from Fred Moseley, "Marxian Crisis Theory and the Post-war US Economy" in Anti-Capitalism, a Marxist Introduction, Alfredo Saad-Filho, ed., p. 212)

1990களில் முதலாளித்துவம்

இப்பொழுது சற்றுப் பின்நோக்கி 1990களில் உலக முதலாளித்துவம் பற்றிய பரந்த பார்வையைக் கொள்வோம். சோவியத் ஒன்றியத்தின் பொறிவு முதலாளித்துவ வர்க்கத்தின் பேச்சாளர்களால் பெரும் வெற்றிக்களிப்புடன் ஒருமித்த குரலில் வரவேற்கப்பட்டது. இந்த 15 ஆண்டுகளில் உலக முதலாளித்துவம் எவ்வாறு செயல்பட்டுள்ளது?

இதில் தெளிவின்மைக்கு இடமில்லை: இதன் நிலை வியக்கத்தக்க அளவு மோசமாகியுள்ளது. அமெரிக்காவில் தொழிற்துறை பயன்பாட்டுத் திறன் சுமார் 72 சதவிகிதம் ஆகும், முதலீட்டுத்தொகை அதிகமாகிறது என்பதற்கான அடையாளங்கள் தெரியவில்லை, பொருளாதாரத்தை நிலைநிறுத்திக்கொண்டு இருப்பது Federal Reserve Board சார்பில் பூச்சிய வட்டிவிகித கொள்கைதான். நிதிப் பொறிவு ஏற்படும் அச்சங்கள் ஏற்பட்டுள்ளன; கூட்டாட்சியின் வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை 300 பில்லியன் டொலர்களாக உள்ளதோடு இன்னமும் உயரக்கூடும்; பெரும்பாலான மாநில அரசாங்கங்கள் திவாலாகும் நிலையின் விளிம்பில் உள்ளன. செலுத்துமதி நிலுவையின் (Balance of payments) பற்றாக்குறை 500 பில்லியன் டொலர்கள் ஆகும், இது இன்னும் கூடுதலான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடுக்கவேண்டிய பண இடைவெளிக்காக அமெரிக்கா உலகின் ஏனைய பகுதிகளிலிருந்து நாள் முழுவதும், ஒவ்வொரு நாளும் நிமிடத்திற்கு 1 மில்லியன் டொலர்களை உறிஞ்சவேண்டும்.

ஜப்பான் இப்பொழுது தேக்கநிலையில் இரண்டாவது பத்தாண்டில் அடியெடுத்து வைத்துள்ளதோடு அதனுடைய பெரிய வங்கிகள், நிதி நிறுவனங்களைப் பற்றிய பொருளாதார நிலை அவற்றை நடத்த இயலுமா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. ஐரோப்பாவில் பொருளாதார வளர்ச்சி அப்படியே நின்று போய்விட்டது; ஜேர்மனி பொருளாதாரப் பின்னடைவுக்கு அல்லது அதன் விளிம்பிற்குத் தள்ளப்பட்டு உள்ளது.

ஒருவேளை நான் நிலைமையை மிகைப்படுத்துகின்றேனா என்ற குற்றச்சாட்டு எழக்கூடும்; அதைத் தவிர்க்கும் வகையில் நன்கு தெரிந்த உலகப் பொருளாதார அறிஞர்களில் ஒருவரான மோர்கன் ஸ்ரான்லி நிறுவனத்திலுள்ளவர் சொல்வதைக் கேட்போம்: "பூகோள அளவில் சமச்சீரற்ற நிலை இந்த அளவு கடுமையாக இருந்தது கிடையாது. பூகோளரீதியாக பணச்சுருக்கம் இந்த அளவிற்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடியது போல் எப்போதும் இருந்ததில்லை. ஜப்பானிலிருந்து அமெரிக்கா வரை சொத்துக்களின் குமிழ்கள் (Asset bubbles) இந்த அளவு சேர்ந்து இருந்ததில்லை. மேலும், அதிகாரிகள் வழக்கமாக பின்பற்றும் முறைகளை எப்போதும் கையாளுவதில், அந்த அளவு பற்றாக்குறை இருந்தது இல்லை.

கொள்கை வகுத்திடுவோர் இதைப் பற்றி ஆழ்ந்த கவனம் செலுத்துகிறார்கள் என்ற போதிலும், "அவர்கள் பொதுவில் பேசுவது, தனி உரைகளில் அவர்கள் கொண்டுள்ள ஆழ்ந்த கவலையை, வெளிப்படுத்தவில்லை. உண்மையென்னவென்றால் பன்முகப் பிரச்சினைகளான அயல்நாட்டுச் சமசீரற்ற முறைகள், பணச்சுருக்கத்தின் ஆபத்து, குமிழிக்கு பிந்தைய அதிர்ச்சிகள் (Post-bubble shocks) இவற்றின் கூட்டிற்கு நம்பத்தகுந்த நிவாரணச் செயல்பாடுகள் இல்லை." மேலும், நிதிக் கொள்கை வகுப்போர் மத்தியில் "மரபு சாராக் கொள்கைகள்" பயன்பாடு பற்றி விவாதிப்பது "நிலைமை எந்த அளவிற்கு மோசமாகிவிட்டது என்பதற்கு அடையாளமாக இருப்பதைக் காட்டுகின்றது" என்றும் "மனப்பாங்கு 1930களுக்குப் பிறகு காணப்படாத நிலையில் உள்ளது" என்றும் இவற்றையொட்டி "பூகோள பொருளாதார நிலை தற்காலத்தில் பார்த்திராத ஆபத்திற்கு உட்பட்டுள்ளது" என்றும் கூறியிருக்கிறார். (Stephen Roach, An Historic Movement, June 23, 2003).

உலகப் பொருளாதாரத்தைப் பற்றிய அதன் சமீபத்திய அறிக்கையில், Bank for International Settlements, "மிகப்பெரிய அளவிலான கொள்கை உந்துதல் உலகின் பெரும் பகுதிகளில்" கொடுக்கப்பட்ட போதிலும் பூகோள பொருளாதாரம் பற்றிய நம்பிக்கைகள் மீண்டும் மீண்டும் ஏமாற்றத்தையே அளிக்கின்றன என்றும், ஒருகால் "இன்னும் கூடுதலான ஆழ்ந்த சக்திகளின் வேலைப்பாடுகள் இருக்குமோ" என்பதில் கவனம் செலுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த மதிப்பீடுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, முதலாளித்துவம் 1990களின் தொடக்கத்தில் தெரிவித்த அமைதியான மற்றும் உலகம் முழுவதிலுமான செல்வக்கொழிப்பு வருங்காலம் என்பது சற்று கூடுதலான அளவில் விற்பனையாகி விட்டதோ என ஒருவர் முடிவுக்கு வந்திருக்கலாம்.

இந்த நிகழ்வுப்போக்கு -ஆழ்ந்த பணச்சுருக்கம், தொடர்ச்சியான தேக்கநிலை, நிதிப்பெருக்க ஊகங்கள், நேரடிக் கொள்ளை, தொழில்துறையின் மிகை திறன், மிகப்பெரிய அளவிலான பொருளாதார சமச்சீரற்ற நிலை-- அனைத்தும் முதலாளித்துவ திரட்சி நிகழ்ச்சிப்போக்கிலேயே கடுமையான நெருக்கடி உள்ளதைச் சுட்டிக்காட்டும் அடையாளங்களாகும். வேறுவிதமாகக் கூறினால், மூலதன வளர்ச்சி வளைகோட்டில் 30 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இறக்க நிலை, மிகக்கடுமையான முயற்சிகள் அதைத் திருப்ப எடுக்கப்பட்டபோதிலும், கூடுதல் சரிவையே காட்டுகின்றது; முதலாளித்துவ பொருளாதாரத்தின் மையப்பகுதியில் இது ஒரு நெருக்கடியைக் காண்பிக்கிறது. மேலும், இந்த நெருக்கடி அனைத்துப் பொருளாதாரங்களிலும் வலிமையான அமெரிக்காவை அடர்ந்து பற்றியுள்ளது. இதுதான் அமெரிக்க ஏகாதிபத்திய வெடிப்பிற்குப் பின்னணியில் உள்ள இயங்கு சக்தியாகும்.

70 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா, பூகோள ஆளுமையைக் கொள்ளத் தொடங்கிய நேரத்தில் ட்ரொட்ஸ்கி எழுதிய தீர்க்கதரிசனமான சொற்களை நாம் இப்பொழுது நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். அமெரிக்காவில் ஒரு நெருக்கடி ஏற்பட்டால் பழைய நிலைக்கு அது திரும்பிச் செல்லாது என்று அவர் விளக்கினார். "இதற்கு முரண்படாகத்தான் அது நடந்துகொள்ளும். நெருக்கடிக் காலத்தில் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் மேலாதிக்கம் முழுமையான அளவில், இன்னும் வெளிப்படையான அளவில், இன்னும் செழுமைக் காலத்தைக் காட்டிலும் கூடுதலான ஈவு இரக்கமின்றிச் செயல்படும். அமெரிக்கா, தன்னை அதனுடைய கஷ்டங்கள் மற்றும் துன்பங்களிலிருந்து வெளியே வரவும், காப்பாற்றிக் கொள்ளவும் ஐரோப்பாவின் இழப்பிலிருந்து முயற்சி செய்யும்; இந்த இழப்பு ஆசியாவிலோ, கனடாவிலோ, தெற்கு அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ தோன்றினாலும் அல்லது அமைதியான முறையிலோ அல்லது போரின் மூலமோ என்பது பற்றி பொருட்படுத்தப் போவதில்லை." (Trotsky, The Third International After Lenin,p.8).

நில வாடகையின் அரசியல் பொருளாதாரம்

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உந்து சக்திகளை வெளிப்படுத்துவதற்கும், அதன் பூகோள ஆதிக்கத் திட்டங்கள் பற்றித் தெளிவாக அறிவதற்கும், முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு உள்ளே உள்ள சில அடிப்படை உறவுகளைக் கோடிட்டாவது ஆய்வது இன்றியமையாததாகும்.

மூலதனத் திரட்சிக்கு அடிப்படையான, உபரி மதிப்பின் ஒரே மூலம் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் உயிருள்ள உழைப்புத்தான். இந்த உபரி மதிப்பு இலாபம், வட்டி, நிலவாடகை( வாரம்) என பல்வேறு வகையான சொத்து வடிவங்களிடையே பகிர்ந்து அளிக்கப்படுகிறது. நாம் "பகிர்ந்து" என்று கூறும்போது இது ஓர் அமைதியான செயல் என்று நினைத்துவிடக்கூடாது. சந்தைகளுக்கும் ஆதாரவளங்களுக்கும் இடையே நிகழும் ஓய்வற்ற கடுமையான போராட்டமாக அது அமையும்.

இந்த நிகழ்ச்சிப்போக்கிற்கு உள்ளேதான் நிலவாடகை (Rent) ஒரு முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது. இது நிலச்சொத்துடைமை வழியான செல்வத்திரட்சியை வெறுமனே குறிக்கவில்லை. பொதுவாக அது, குறிப்பிட்ட மூலவளத்தின் ஏகபோக உடைமை மூலம் கறந்தெடுக்கப்படக்கூடிய வருவாய் ஆகும், அல்லது அரசியல் அதிகாரத்தின் மூலமோ கிடைக்கும் வருவாயாகும்.

நிலவாடகை மூலம் கிடைக்கும் வருவாய் செல்வம் உருவாக்கப்படுவதை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இன்னும் சொல்லப் போனால், அது ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்ட உபரி மதிப்பை சொத்துடைமை உரிமை என்ற முறையிலோ அல்லது அரசியல் வழிமுறைகள் மூலமாகவோ எடுத்துக்கொள்வதேயாகும். முழுமையாக மூலதனத்திற்கு கிடைக்கவுள்ள உபரி மதிப்பில் இருந்து அது கழித்து எடுக்கப்படுகிறது. எனவே வாடகை கொள்வோருக்கும் மூலதனத்திற்கும் இடையே எப்பொழுதும் ஒரு விரோத உணர்வு இருக்கும்.

முதலாளித்துவ வளர்ச்சியின் மேல்நோக்கும் வளைகோட்டில் இலாபம் உயர்ந்து கொண்டிருக்கும் போதோ அல்லது ஏற்கனவே நல்ல அளவில் உயர்ந்திருந்தால், நிலவாடகையின் இருப்பினால் அதிக முக்கியத்துவம் ஏற்பட்டுவிடாது. ஆனால் முதலாளித்துவ வளர்ச்சியின் வளைகோடு கீழே சரியும்போதோ, இலாப வீதங்கள் குறையத் தொடங்கினாலோ நிலைமை விரைவில் மாறிவிடும். நிலவாடகை பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு போய்விடும் ஆதலால் - தொழில்துறை மற்றும் நிதி மூலதனம் "சந்தை உரிமை வேண்டும்" என போர் முழுக்கமிடத் தலைப்பட்டு விடும், இது வாடகையை அபகரிப்பவர்களிடம் வருவாய் ஓட்டம் சிறுகச்சிறுக சேருவதைத் திசைதிருப்புவற்கான அவற்றின் முயற்சி ஆகும்.

இப்பொழுது நடைபெறும் போர் மற்றும் ஈராக்கிய ஆதாரங்களைப் பெறுவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கடுமையான முயற்சிகளும், நிலவாடகையின் அரசியல் பொருளாதாரத்தோடு உடனடியான பங்கைக் கொண்டவையாகும். அமெரிக்கா தேவைப்பட்டால் ஈராக்கிய எண்ணெயை உலகச் சந்தையில் வாங்கிக்கொள்ளலாம் என்று சுட்டிக்காட்டி, போரின் ஆதரவாளர்கள் போர் எண்ணெய்க்கானது என்ற கூற்றை மறுத்தனர்; மேலும் எண்ணெய்தான் உந்துதலுக்குக் காரணம் என்றால், அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கும் அதன் விளைவாக ஈராக்கிய எண்ணெய் உற்பத்தி மீண்டும் தொடங்கவும், அதன் மூலம் உலகச் சந்தையில் அளிப்பு அதிகரிக்கும் என்றும் எண்ணெய் வாங்குவோருக்கு விலை குறைந்து நன்மை பயக்கும் என்றும் கூறுகின்றனர்.

இவ்வாறான விவாதங்கள் அனைத்தும், அடிப்படைப் பொருளாதார உந்துதல் தனியே எண்ணெய்க்கு மட்டுமல்ல, மாறாக மாறுபட்ட இயற்கைச் சூழ்நிலைக் காரணங்களால் தோன்றியுள்ள, மிகப்பெரிய அளவிலான வாடகை வருவாய் வேறுபாடுதான் முக்கியமாகும் என்ற உண்மையை மூடிமறைக்கும் நோக்கம் கொண்டவை. வேறு வார்த்தைகளில் சொன்னால், ஈராக்கை வென்று கைப்பற்றியது அமெரிக்க SUV க்களுக்கு அந்த அளவு எரிவாயுவைக் கொடுப்பதைப் பொறுப்பெடுத்துக்கொள்ள அல்ல, மாறாக அமெரிக்க நிறுவனங்களுக்கு உபரிமதிப்பையும் இலாபத்தையும் வழங்குவதற்குத்தான்.

ஈராக்கிய எண்ணெய் உற்பத்திப் பொருளாதாரத்தை ஆராய்ந்தால் என்ன இருக்கின்றது என்பது பற்றியதை அறிய ஓரளவு வழிகாட்டுதலைப் பெற முடியும். நிரூபிக்கப்பட்ட ஈராக்கிய எண்ணெய் இருப்பு கிட்டத்தட்ட 112 பில்லியன் பீப்பாய்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. ஆனால் மொத்த இருப்புக்கள் 200 பில்லியன் பீப்பாய்கள், 400 பில்லியன் பீப்பாய்கள் என்ற அளவிலோகூட உயர்ந்து இருக்கலாம். இந்த இருப்புக்களின் கவர்ச்சி என்னவென்றால், அதை எடுக்கக்கூடிய செலவினம் மிகக்குறைவு என்பதால் மிகப்பெரிய அளவு வாடகையை அவை அளிக்கும்.

அமெரிக்க ஆற்றல் துறையின்படி, "ஈராக்கிய எண்ணெய் உற்பத்திச் செலவினங்கள் உலகத்திலேயே குறைந்த அளவில் ஒன்றாகும்; எனவே அது ஒரு கவர்ச்சிகரமான எண்ணெய் வருவாய் தரும்." ஒரு பீப்பாய் ஈராக்கிய எண்ணெய் உற்பத்திக்கு ஆகும் செலவு 1.50 டாலர் தான்; 1 டாலர் ஆகவும் குறைந்திருக்க சாத்தியமுண்டு. இது பீப்பாய்க்கு 5 டாலர்கள் என்ற மலேசியா, ஓமன் போன்ற மற்ற குறைந்த செலவுப் பகுதிகளோடும், 6 டாலர்களிலிருந்து 8டாலர்கள் வரை பிடிக்கும் மெக்சிகோ மற்றும் ரஷியாவுடனும், ஒரு பீப்பாய் எண்ணெய் உற்பத்திக்கு 12 டாலர்களிலிருந்து 16 டாலர்கள் வரை பிடிக்கும் வடகடல் பகுதிகளுடனும், அதேவேளை 20 டாலர்கள் வரை பிடிக்கும் அமெரிக்க எண்ணெய் கிணறுகளுடனும் ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கது.

எண்ணெய் விலை, உண்மை அளவில் ஒரு பீப்பாய்க்கு 25 டாலர்கள் என்று ஒருவர் கொண்டால், ஈராக்கிய எண்ணெய் வளத்தின் மொத்த மதிப்பு, உற்பத்திச் செலவுகளைக் குறைத்தபின்னர் $3.1 டிரில்லியன் ஆகும். (See James A. Paul, Oil in Iraq: The Heart of the Crisis, Global Policy Forum December 2002).

1970 களின் முதலாண்டுகளில் ஈராக் உட்பட எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் பல அவற்றின் எண்ணெய் உற்பத்தியைத் தேசியமயமாக்கின. அதாவது வாடகையில் கிடைக்கும் பெரும்பான்மையான பங்கு தேசிய முதலாளித்துவ ஆட்சிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிலை முக்கிய ஏகாதிபத்திய சக்திகளுக்குப் பொறுத்துக்கொள்ள முடியாமல் போயிற்று.

கடந்த 15 ஆண்டுகளில் உலகம் முழுவதும் தனியார்மயமாக்கும் அலை பரவியுள்ளது. IMF உத்தரவின் பேரில் "மறுசீரமைக்கும்" திட்டத்தின் ஒரு பகுதியாக, பழைய குடியேற்ற நாடுகளிலும் இது நடைபெற்று வருகிறது. இந்த முடிவு இன்னமும் எண்ணெய்க்கு வரவில்லை. ஆனால் அதுதான் முக்கிய இலக்கு. கிளின்டன் நிர்வாகத்தின் கடைசி நாட்களில் ஒரு காங்கிரஸ் விசாரணை: "OPEC இன் கொள்கைகள்: அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு ஓர் அச்சுறுத்தல்" என்பது பற்றி நடாத்தப்பட்டது. அதனுடைய தலைவர், கிளிண்டன் நிர்வாகத்தை "OPEC இன் தொடர்ந்த தாக்குதல் நம் தடையற்ற சந்தை முறையின் மீதும் நம்முடைய டிரஸ்ட் எதிர்ப்பு விதிமுறைகள் (Anti-trust norms) மீதும் இருக்கும்போது" குறிப்பிடத்தக்க அளவில் ஏதும் செய்யாமல் இருப்பதற்காக கண்டனம் தெரிவித்தார். (See George Caffentzis, In What Sense, "No Blood for Oil").

இந்தப் பொருளாதாரப் பிரச்சினைகள் ஆராயப்படும்பொழுது "ஆட்சி மாற்றம்" என்றால் என்ன என்பது தெளிவாகப் புலப்படுகிறது. குறிப்பிட்ட நபர்களை பலர் ஒரு காலத்தில் அமெரிக்க நண்பர்களாக இருந்திருக்கலாம், அவர்களுக்குப் பெரும் பக்கபலமாக இருந்திருக்கலாம், இப்பொழுது அதோடு பூசல் ஏற்பட்டுவிட்டிருப்பவர்களை பதவியிலிருந்து அகற்றுவது மட்டும் நோக்கமல்ல. ஆட்சி மாற்றம் முழுமையான அளவு பொருளாதாரத்தை மாற்றியமைப்பதைக் குறிக்கிறது.

சமீப காலம்வரை அமெரிக்க அரசுத்துறையில் இயக்குனராக இருந்த ரிச்சார்ட் ஹாஸ் (Richard Haass), தலையீடு (Intervention) என்னும் தன்னுடைய புத்தகத்தில் இதைத் தெளிவுபடுத்தியுள்ளார். தனிநபர்கள் தாக்கப்படுவதால் பயன் ஏதுமில்லை என்றும், வலிமை ஒன்றுதான் தேவையான அரசியல் மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார். "அப்படிப்பட்ட மாறுதல்களை அதிகரிக்க வைக்கும் ஒரே வழி, தேசத்தைக் கட்டி எழுப்பல் என்பது போன்ற, உயர்ந்த அளவிலான வலிந்து புந்து தலையீடு செய்தல் மூலம் செய்வதாகும். இதில் சம்பந்தப்படுவது அனைத்து எதிர்ப்புக்களையும் முதலில் அகற்றுவது பின்னர் இன்னொரு சமுதாயத்தை மாற்றியமைப்பதை அனுமதிக்கும் தொழிலில் ஈடுபடுவது." (Cited in John Bellamy Foster, "Imperial America and War" in Monthly Review, May 2003).

சமீபத்திய உரைகளில் ஹாஸ் 21ம் நூற்றாண்டில், "அமெரிக்காவின் வெளிறவுக் கொள்கையின் முக்கிய நோக்கம், மற்ற நாடுகளையும் அமைப்புக்களையும் அமெரிக்க நலன்களுக்கும் மதிப்புக்களுக்கும் தொடர்ந்து வளர்ச்சியளிக்கும் ஒழுங்குகளுக்குள் ஒருங்கிணைப்பதாக இருக்கவேண்டும்" என்று விளக்கினார். "மூடிய பொருளாதார முறைகள்" குறிப்பாக மத்திய கிழக்கில், "ஆபத்தளிக்கும் தன்மையானவை" என்று அவர் கூறியிருப்பது "ஆபத்தை முன்வைப்பது" குறிப்பிடத்தக்கது; எனவேதான் புஷ் அமெரிக்கா - மத்தியகிழக்கு இணைந்த தடையிலா வர்த்தக முறையை பத்து ஆண்டுகளுக்குள் ஏற்படுத்திவிடத் திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலத்தைச் சுட்டெரிக்கும் கொள்கை என்ன என்பதை ஈராக்கில் காணலாம்; இங்கு அமெரிக்கப் பெருநிறுவனங்கள் எண்ணெய் விற்பனையில் இலாபம் ஈட்ட வரிசையில் நிற்கின்றன. Halliburton -எண்ணெய்த் தீயைத் தடுப்பதற்கும், ஈராக்கிய எண்ணெய் எடுக்க, விநியோகம் செய்யவும் இரண்டு ஆண்டு கால ஒப்பந்தம், அதிக அளவுத் தொகை 7 பில்லியன் டாலர்கள்; Kellogg, Brown & Root, எண்ணெய் கிணறுகளைப் பழுதுபார்த்து, இயக்குவதற்காக 71 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தம்; Bechtel, மீண்டும் மின் சக்தி உற்பத்தி செய்ய, நீர்ப்போக்குவரத்து முறைக்காக தொடக்க ஒப்பந்தம் 34.6 மில்லியன் டாலர்களைக் கொண்டது, 680 மில்லியன் டாலர்கள் வரை போகும்; MCI World Com, ஈராக் முழுவதும் கம்பியில்லாத் தந்தி இணைதள அமைப்பிற்காக 30 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தம்; Stevedoring Services ofAmerica, ஓராண்டு ஒப்பந்தம் 4.8 மில்லியன் டாலர்களைக் கொண்டது, ஈராக்கிய துறைமுகங்கள் பழுதுபார்த்தல், நிர்வகித்தல், ஆழத்துறைமுகம் Umm Qasr உட்பட; ABT Associates, தொடக்க 10 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தம், சுகாதாரப் பணிகளுக்காக ஆகும்; Creative Associates International, 1 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தம், $62.6 மில்லியன் வரைபோகும் உடனடி கல்வித் தேவைகளுக்காக, ஈராக்கிய தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளித் தேவைகளுக்காக ஆகும்; Dyncorp, பல மில்லியன் பெறுமான ஒப்பந்தம் 50 மில்லியன் டாலர்கள் மதிப்புடையதாய் இருக்கும், ஈராக்கிய அரசாங்கத்திற்கு திறமையான சட்டப் பராமரிப்பு, நீதித்துறை, சிறைத்துறை அமைப்புக்களுக்காக ஆகும்; International Resource Group, தொடக்கத்தில் 7.18 மில்லியன் டாலர்கள் கொண்ட அவசரத் திட்டம், உடனடித் தேவைகள், குறுகிய கால சீரமைப்புத் திட்டங்கள் இவற்றுக்கானது; இவற்றைத் தவிர ஏராளமான சிறிய ஒப்பந்தங்களும் மற்றைய நிறுவன அமைப்புக்களும், பெரிய ஒப்பந்தக்காரரிடமிருந்து துணை ஒப்பந்தம் பெறும் சிறு ஒப்பந்தக்காரர்கள் ஆகியன உள்ளடங்குவன. (See The Corporate Invasion of Iraq: Profile of US Corporations Awarded Contracts in US/British Occupied Iraq.Prepared by US Labour Against the War).

பூகோள மீள் சீரமைப்பு

இது ஒரு எண்ணெய் வாடகை மட்டும் அல்ல; ஈராக்கில் நடந்து கொண்டிருப்பது பூகோள நிகழ்ச்சிப் போக்கின் வன்முறை வெளிப்பாடு -அமெரிக்க மூலதனத்தின் பூகோள மேலாதிக்கம் மற்றும் அமெரிக்க கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான தடைகள் அடித்து நொருக்கப்படும். 1980களில் தொடங்கிய "மறு சீரமைப்பு" கொள்கைகள் பரம ஏழை நாடுகளின் கருவூலத்திலிருந்த பல பில்லியன் டாலர்கள் பணக்கார வங்கிகளுக்கு மாற்றப்பட்ட நிலையை ஏற்படுத்தியது. தனியார்மயமாக்குதல் மூலம் அடிப்படைத் தேவைகள் -தண்ணீர், மின்சார வசதி, சுகாதாரப் பணிகள், கல்வி- இவையும் இலாப நோக்கில் பணம் கறப்பதற்கு திறந்து விடப்பட்டிருக்கிறது.

இந்த பூகோள சீரமைப்பிற்கு எதுவும் கட்டாயம் குறுக்கே நிற்க விடப்படக்கூடாது -தேசிய அரசாங்கங்களால் தடைகள் நிச்சயமாக ஏற்படுத்தப்படக் கூடாது. இந்தச் சிந்தனைப்போக்கின் பல ஆதரவாளர்கள் கூறியுள்ளவாறு, இங்கிலாந்து 19ம் நூற்றாண்டில் தலைமை செலுத்தி அமைத்ததுபோல் இப்பொழுது அமெரிக்கா, சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்கினை உருவாக்க வேண்டும்.

American Enterprise Institute ஆல் வெளியிடப்பட்ட, In Defence of Empiresஎன தீபக் லால் என்பவரால் தலைப்பிடப்பட்ட கட்டுரையின்படி, அத்தகைய ஒழுங்குமுறை தேசிய அளவில் இல்லாமல், சொத்து உரிமையை சர்வதேச அளவில் உறுதி செய்யும். இந்த ஒழுங்கு, முதல் உலகப்போரில் பொறிந்த அளவில்தான் 1920, 1930 களில் ஒழுங்கின்மை ஏற்பட்டு, போருக்குப் பிந்தைய காலத்தில், தேசிய நாடுகள் தங்கள் நாட்டின் இறையாண்மையை சர்வதேச சொத்து உரிமைகளுக்கு எதிராக உறுதி செய்தன. லாலின் படி, இன்று, இந்த நிலைமை, ஐக்கிய அமெரிக்க அரசுகளின் எந்த எதிர்ப்பும் இல்லாத அளவு உலக மேலாதிக்கத்துடன், கடந்து வரப்பட்டிருக்கிறது.

பூகோளம் முழுவதும் அடைவதற்கும், ஒவ்வொரு பகுதியிலும் ஆதிக்கம் செலுத்துவதற்குமான சர்வதேச மூலதனத்தின் தேவைகள், குறிப்பாக அமெரிக்க மூலதனத் தேவைகள், தேசிய இறையாண்மை வரம்பிற்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டது என்று வலியுறுத்தும் புதிய கொள்கையில் அரசியல் விளக்கத்தைக் கொடுக்கின்றன.

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா ஈராக்கின் மீதான போருக்குத் தயாராகத் தொடங்கியபோது, ஓர் உரையில் ரிச்சார்ட் ஹாஸ் தற்காலத்திய வளர்ச்சிகளில் முக்கியமானது "இறையாண்மை என்பது தொகை பூர்த்தி செய்யப்படாத காசோலை போன்றது அல்ல" என்று கூறினார். தியோடர் ரூஸ்வெல்ட்டின் சொற்களை நினைவுகூர்ந்து: "இறையாண்மைத் தகுதி ஒவ்வொரு நாடும் தன்னுடைய மக்களுக்கும், உலகச் சமுதாயத்திற்கும் சில அடிப்படைக் கடமைகளைச் செய்வதற்கு உட்பட்டது அவர் சொன்னார். ஓர் ஆட்சி இந்தப் பொறுப்புக்களைச் செய்யத் தவறினாலோ, அதன் சிறப்புச் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தினாலோ, ..சில தீவிர நேரங்கங்களில் அதனுடைய போர்த் தலையீடு இல்லாமல் இருத்தல் என்பது உட்பட... அது தன் இறையாண்மை உரிமைகளை இழந்துவிடும் ஆபத்திற்குத் தள்ளப்படும்... தலையிடாக் கொள்கை உயர்ந்த நெறியில், மீறமுடியாத உரிமையல்ல....`` (Richard Hass Sovereignty: Existing Rights, Evolving Responsibilities, January 14, 2003).

ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி அலெக்சாந்தர் டௌனர் இதே கருத்துக்களை, ஹாவர்ட் அரசாங்கம் சொலமன் இல் இராணுவத் தலையீட்டிற்காக இராணுவத்தை அனுப்ப முடிவெடுத்தபொழுது, எதிரொலித்துப் பேசினார். தேசிய பத்திரிகையாளர் சங்கத்தில் அவர் பேசுகையில், இப்பொழுது பன்முகத்தன்மை வாதம் "திறமையற்ற இலக்கில்லாத கொள்கைக்கு" மறு பெயராகிவிட்டது. "விருப்பமுடையோர் கூட்டணியில்" ஆஸ்திரேலியா அவசரப் பாதுகாப்பிற்காகவும் மற்ற அறைகூவல்களுக்காகவும், சேரத் தயார் என்றார். "எங்கள் பார்வையில் இறையாண்மை முற்ற முழுதானது அல்ல. மனித இன நன்மைக்குச் செயலாற்றுவது கூடுதலான முக்கியத்துவம் வாய்ந்தது."

ஆனால் ஒரு நாடு, தன் இறையாண்மை உரிமைகளை இழந்துவிட்டது என்றோ "விரும்புவோர் கூட்டணி" மனித குலத்தின் நலன்களுக்காகச் செயல்படும் என்பதையோ யார் நிர்ணயம் செய்வது? தெளிவாய் சொன்னால் ஆதிக்கம் செலுத்தும் வல்லரசுகள்தாம், அமெரிக்கா தலைமையில் அது நடத்தப்படும், விரும்புவோர் அதன் சுற்றுப்பாதையில் சேர்ந்துகொள்ளலாம்.

உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய அரசிற்கும் இடையிலான முரண்பாடு

முதலாளித்துவத் திரட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் தான் அமெரிக்காவின் பூகோள, ஆதிக்கத்திற்கான உடனடி உந்துதல் வேரூன்றியுள்ளது; இலாப வீத தொடர்ந்து இறங்குமுக அழுத்துதலும், கடந்த 25 ஆண்டுகளாக அதைக் களைய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் தோல்வியும் இந்நெருக்கடியின் வெளிப்பாடுதான். ஆனால் இதையும்விடக் கூடுதலானது ஒன்றும் உள்ளது. மிக அடிப்படையான அளவில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பானது; கடந்த நுற்றாண்டின் சிறந்த பகுதியில் முதலாளித்துவ அமைப்பை பேயாய் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த மைய முரண்பாட்டை, பிற்போக்கான முறையிலும் கூட, எப்படியும் கடக்கப்பட்டே ஆகவேண்டும் என்று நம்பிக்கையற்ற உறுதிப்பிடிப்பில் ஈடுபடும் செயலைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

முதலாம் உலகப்போர் வெடித்துத் தோன்றிய அளவில் அமெரிக்கா, அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கத்தை அடைந்தது. ட்ரொட்ஸ்கி ஆய்வு செய்தவாறு, போரானது, பூகோள அளவிலான உற்பத்தி சக்திகளின் அபிவிருத்திகளுக்கும் போட்டியிடும் பெரும் வல்லரசுகள் இடையே உலகம் கூறுபோடப்பட்டிருப்பதற்கும் இடையிலான முரண்பாட்டில் வேரூன்றி இருந்தது. இந்த வல்லரசுகள் ஒவ்வொன்றும் தத்தம் சொந்த ஆதிக்கத்தை நிலைநாட்டுவதன் மூலம் இந்த முரண்பாட்டைத் தீர்க்க முயன்றன, அதனால் அதன் போட்டியாளர்களுடன் மோதலுற நேரிட்டது.

உலக சோசலிசப் புரட்சியில், முதல் படியாக கருக்கொண்டு செயல்படுத்தப்பட்ட ரஷ்ய புரட்சி, இந்த உலகப் பொருளாதாரத்திற்கும் காலாவதியாகிப் போய்விட்ட தேசிய அரசு கட்டமைப்பிற்கும் இடையேயான முரண்பாட்டைத் தீர்க்கும் முயற்சியில், முற்போக்கான அடிப்படையில் கையாண்ட, தொழிலாள வர்க்கத்தின் ஒரு தனிச்சிறப்பான பகுதியின் முதல் முயற்சியாகும். இறுதியில் முதலாளித்துவ சக்திகள் அதிக வலிமை கொண்டவையாக நிரூபித்தன, தவறவிட்ட வாய்ப்புக்களும், நேரடி நம்பிக்கைத் துரோகங்களும் கொண்ட துன்பகரமான இணைப்பின் விளைவாகத் தொழிலாள வர்க்கம் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியாமற் போனது.

ஆனால் அத்தகைய எரிமலை ஆற்றல்போல் வெடித்திருந்த இந்த வரலாற்றுப் பிரச்சினை - பூகோள அளவில் வளர்ந்துள்ள மனித குலத்தின் உற்பத்தி சக்திகளைப் புதிய மற்றும் உயர்ந்த அஸ்திவாரத்தில் மறு ஒழுங்கமைப்பதற்கான தேவை, அழிவுகரமான தனிச்சொத்துடைமை மற்றும் தேசிய அரசு அமைப்பு இவற்றின் அழிவுகரமான விலங்குகளிலிருந்து அவற்றை விடுவிப்பதற்கான தேவை - மறைந்துவிடவில்லை. சிறிது காலம் மட்டுமே அது அடக்கி வைக்கப்பட முடிந்தது. முதலாளித்துவ உற்பத்தி முறையின் வளர்ச்சியே இப்பிரச்சினையை, முன்னையும் விடக் கடுமையான அளவில் மேல் மட்டத்தில் மீண்டும் தலைதூக்க வழிவகுத்து நின்றது.

இந்த வரலாற்று மற்றும் அரசியல் உள்ளடக்கத்திற்குள்ளேதான் ஈராக்கை அமெரிக்கா வென்று கைப்பற்றலைக் வைத்தாக வேண்டும். அமெரிக்க மூலதனத்தின் தேவைகளுக்கும் நலன்களுக்கும் பொருந்துமாறு விளக்கம் கூறப்பட்டுள்ள "சுதந்திர சந்தை" விதிகளைச் செயல்படுத்துகின்ற, ஒரு வகைப்பட்ட அமெரிக்க பூகோள பேரரசைத் தோற்றுவிப்பதன் மூலம், உலக முதலாளித்துவத்தின் மைய முரண்பாட்டைத் தீர்த்துவைத்துவிட முடியும் என்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் செய்யப்படும் முயற்சியைத்தான் பூகோள மேலாதிக்கத்திற்கான உந்துதல் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

பூகோள ஒழுங்கு பற்றிய இந்த மனநிலை குன்றிய பார்வைதான், வெஸ்ட் பாயின்ட் (நியூயோர்க்கில் உள்ள மிகபிரசித்திபெற்ற இராணுவ பல்கலைக்கழகம்) பட்டதாரிகளுக்கு ஜூன் 1, 2002ல் புஷ்ஷால் தன் உரையில் தெரிவிக்கப்பட்டது. "உலக வல்லரசுகள் போரின் தயாரிப்புக்காக இல்லாமல், அமைதியை நிலைநிறுத்தப் போட்டியிடுகின்ற உலகைக் கட்டி எழுப்ப" பதினேழாம் நூற்றாண்டில் தொடங்கிய தேசிய-அரசுகளின் எழுச்சிக் காலத்திற்குப் பின்னர் அருமையாகக் கிடைத்துள்ள இந்த சிறந்த வாய்ப்பை இப்பொழுது அமெரிக்கா பெற்றிருக்கின்றது. நாடுகளுக்கிடையே போட்டிகள் தோன்றுவது தவிர்க்கப்பட முடியாதவைதான்; ஆனால் போர்கள் தவிர்க்கக்கூடியவையேயாகும். ஏனெனில், "பிறரால் சவால்விட முடியாத அளவிற்கு அமெரிக்கா தன்னுடைய இராணுவ ஆற்றல்களைக் கொண்டுள்ளது, தொடர்ந்து வைத்திருக்கவும் நோக்கம் கொண்டுள்ளது. எனவே மற்ற சகாப்தங்களின் ஆயுதப் போட்டியை அர்த்தமற்றதாகச்செய்துள்ளது மற்றும் வர்த்தகம் ஏனைய அமைதியைப் பின்பற்றலில்தான் போட்டிகள் இருக்கும்."

இந்த உலகத்தை மறுஒழுங்கமைக்கும் முன்மொழிவு, 1914ல் முதன் முதலாக முன்னெடுக்கப்பட்தைவிட பிற்போக்கானதாகும். பூகோள ஆதிக்கத்திற்கான அமெரிக்க உந்துதல், இலாப அமைப்பின் இதயத்தானத்தில் உள்ள நெருக்கடியின் விளைவினால் ஏற்பட்டுள்ளது; இதனால் அமைதியையோ, செல்வக்கொழிப்பையோ உலக மக்களுக்குக் கொடுக்க முடியாது; மாறாக இராணுவம் மற்றும் சர்வாதிகார ஆட்சியினை வலிந்து திணித்து அதன் மூலம் உலக மக்கள் மீதான தாக்குதல்களை ஆழப்படுத்தவே முடியும்.

முன்னேற்ற வழி என்பது என்ன? உலக மேலாதிக்கத்திற்காக உந்துதல் கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதன் பேரழிவு தரக்கூடிய விளைவுகளையும் எவ்வாறு எதிர்த்து நிற்பது? இதுதான் இப்பொழுது நமக்கு வரலாறு முன்வைத்துள்ள பிரச்சினையாகும்.

மார்க்ஸ் குறிப்பிட்டவாறு, எவ்வாறாயினும், வரலாறானது, ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சட ரீதியான நிலைமைகளை வழங்காமல் ஒருபோதும் அப்பிரச்சினையை முன்வைப்பதில்லை.

உற்பத்தி பூகோளமயமாக்கலுக்கு, அமெரிக்க ஏகாதிபத்திய வெடிப்பானது கொள்ளையடிக்கும் மற்றும் பிற்போக்கான ஒரு பதிலாகும். அதே நேரத்தில், அது முன்னர் ஒருபோதும் சாத்தியமாயிருந்திராத, மற்றும் கடந்த காலத்தில் கனவு மட்டுமே கண்டு வந்த, சர்வதேச அளவில் சாதாரண உழைக்கும் மக்கள் திரளை ஐக்கியப்படுத்துவதன் மூலம் வரலாற்று ரீதியாய் முன்னேற்றகரமான பதிலை உருவாக்குவதற்கான சூழ்நிலைமைகளையும் உருவாக்கியுள்ளது.

ஈராக் ஆகிரமிப்புக்கு முன்னால், உலகம் முழுவதும் ஏற்பட்ட ஆர்ப்பாட்ட எதிர்ப்பு ஊர்வலங்களின் வெடிப்பு இந்த புறநிலை முக்கியத்துவத்தைத்தான் கொண்டுள்ளது - ஆர்ப்பாட்ட எதிர்ப்பு ஊர்வலங்களில் பங்கேற்றோர் தாங்கள் பூகோள இயக்கத்தின் பகுதியாக சரியான முறையில் தம்மைப் பார்த்தனர், மற்றும் அந்தப் புரிதலில் இருந்து பலம் பெற்றனர். உற்பத்திச் சக்திகள் மட்டும் பூகோள முறையில் அமைந்துவிடவில்லை, போராடிக்கொண்டிருக்கும் மனிதகுலத்தின் அரசியல் நடவடிக்கைகளும் பூகோளமயமாக்கப்பட்டுவிட்டன என்பதையே அவை வெளிப்படுத்தியுள்ளன.

இந்தப் புதிய நிலைமைதான், நியூயோர்க் டைம்ஸின் வர்ணனையான, உலகிலுள்ள இரு சக்திகள் தற்பொழுது அமெரிக்காவும் உலக மக்களின் கருத்தும் ஆகும் என்ற கருத்தின் முக்கிய கருப்பொருளாக உள்ளது. அல்லது, பைனான்சியல் டைம்ஸ் இல் சமீபத்தில் வந்துள்ள ஒரு வர்ணனையின்படி, கார்ல் மார்க்ஸின் கருத்து பொருள் பொதிந்த கடைசிச் சிரிப்பாக இருக்கக்கூடும் -ஏனெனில் பூகோள முதலாளித்துவம் "அரசியலை பூகோளமயமாக்கலுக்கு இறுதியில் தள்ளக்கூடிய அழுத்தங்களைத் தோற்றுவித்திருக்கிறது."

பூகோள போரெதிர்ப்பு முறைகளின் படிப்பினைகள்

ஆனால் ஐந்து மாதங்கள் கடந்தபின்னராவது என்ன நடந்ததோ அதைப் பற்றி நாம் மதிப்பீடு செய்தாக வேண்டும். இந்த இயக்கம் மிகப்பெரிய அளவு திறன் பொதிந்துள்ளதைக் காட்டுகிறது, ஆனால் அந்தத் திறன் செயல்படுத்தப்படுவதற்கிடையில் கடக்கப்பட வேண்டிய தடைகளையும் புலப்படுத்துகிறது. இறுதியில் இவையனைத்தும் ஒரே பிரச்சினையாகக் குறைந்துள்ளன: அரசியல் முன்னோக்கின் நெருக்கடி.

ஒரு தெளிவாகத் திட்டமிட்டுச் செயலாக்கப்படவேண்டிய வேலைத்திட்டமும், முன்னோக்கும் இல்லாமற்போயின என்பதையே ஆர்ப்பாட்ட எதிர்ப்பு ஊர்வலங்கள் காட்டியுள்ளன. ஏதாவது ஒரு கருத்து இருந்தது என்றால் அது, போதுமான அழுத்தம் எப்படியேனும் கொடுக்க முடியுமென்றால் போர் நிறுத்தப்படக்கூடும் என்ற உணர்வுதான். அந்த அளவில் எதிர்ப்பு அரசியலின் செல்தகைமைக்கு நடத்தப்பட்ட மிகப்பெரிய பரிசோதனையாக ஆர்ப்பாட்ட எதிர்ப்பு ஊர்வலங்களைக் கொள்ள முடியும்.

இது வரலாறு இவ்வாறு கூறியதுபோல் அமைந்தது: உன் மேல் பிழையில்லை, ஆனாலும் கடந்தகாலப் படிப்பினைகள் இருந்தபோதிலும், மக்கள் அதிக அளவில் அழுத்தம் கொடுத்தால் ஆளும் சக்திகளைச் செல்வாக்கிற்கு உட்படுத்திவிட முடியும் என்று நீ நம்புகிறாய். நன்று, உலகம் இதுவரை கண்டிராத அளவிற்கு மிக மிகப்பெரிய பூகோள எதிர்ப்புக்களை, ஒரு பரிசோதனையாக உனக்கு முன் நான் வைக்கிறேன். அதை மட்டும் செய்யாமல், இந்தப் போரை நிராகரித்து ஐ.நா. வாக்களிப்பதையும் உனக்குக் காட்டுகிறேன் -இந்த அமைப்பின் செல்தகைமையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் - ஆக்கிரமிப்பு இடம்பெறுவதைத் தடுக்க முடிகிறதா என்பதை நாம் பார்ப்போம். ஆனால் வரலாறு இதையும் கூறியிருக்கும்: இதற்குப் பதிலாக நான் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உன்னிடம் கேட்கிறேன். இந்தப் பரிசோதனை முடிந்தவுடன் இதன் தோல்வியிலிருந்து தக்க பாடங்களை நீ எடுத்துக்கொள்ளவேண்டும்.

இந்தப் படிப்பினைகள் என்ன? பெரும் மக்கள் இயக்கம், ஓர் ஒழுங்கான வேலை திட்டத்தையும், முன்னோக்கையும், ஆளும் வர்க்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதற்காக அல்லாமல், அரசியல் அதிகாரத்தையே வெற்றிகொள்ளும் அளவிற்கு இலக்காகக் கொள்ளவேண்டும்.

இந்த முன்னோக்கு அபிவிருத்திக்கு எளிதான விடைகள் கிடையாது. ஒரு புதிய புத்திசாலித்தனமான முழக்கமோ, இதையும் விடக் கூடுதலான ஆற்றலுடைய எதிர்ப்புக்களோ கொள்வதன் மூலம் பயனடைவதற்கும் இல்லை. மனித குலத்தை எதிர்கொண்டுள்ள மிகக்கடினமான, சிக்கல் வாய்ந்த பிரச்சினைகள், சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் அரசியலதிகாரம் வென்று கைப்பற்றப்படுவதன் மூலம் மட்டுமே வெற்றி கொள்ளப்பட முடியும் என்ற புரிதலுடன் வெகுஜன இயக்கம் ஆயுதபாணியாக்கப்பட்டாக வேண்டும். அதற்கு, அனைத்திற்கும் மேலாக, இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றை உட்கிரகித்துக் கொள்ளல் தேவைப்படுகின்றது. உலக சோசலிச வலைத் தளத்தின் அனைத்துப் பணிகளுக்கும் இந்தப் பணிதான் அடிப்படையை வடிவமைக்கிறது.

இந்த முடிவுகளைத் தெளிவுறுத்தும் வகையில், பூகோள நீதி இயக்கம் என்று அழைக்கப்படக் கூடியதன் பிரபலமான பிரிட்டிஷ் எழுத்தாளர்களில் ஒருவரான ஜோர்ஜ் மொன்பியோட் இன் சமீபத்திய கட்டுரை ஒன்றை ஆராய விரும்புகிறேன். ஜூன் 17ம் தேதி, கார்டியனில் எழுதிய கட்டுரையில், பொருளாதார பூகோளமயமாக்கல் தனக்கு முன் உள்ளவை அனைத்தையும் ஒதுக்கித்தள்ளுவதுபோல், இதுகாறும் காணப்படாத எழுச்சிக்கான வாய்ப்புக்களை உலக மக்களுக்குக் கூடுதலாக அளிக்கும் வகையில், ஆக்கவும் அழிக்கவும் ஆற்றலைக் கொடுக்கும் என்று சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளார். மொன்பியோட்டும் மற்றவர்களும் "பூகோளமயாக்கல்" தீமையானது என கடுமையாகச் சாடியபோதும் உலக சோசலிச வலைத் தளம் இக் கருத்தைத்தான் துல்லியமாக எடுத்துரைத்தது. வர்த்தகம், தன்னுடைய பேரரசை விரிவு செய்வதின் மூலம் உலக மக்கள் அதற்கான தங்களின் சவால்களை ஒருங்கிணைக்கக்கூடிய சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது என்று இப்போது அவர் எழுதியுள்ளார். அப்படியானால் நாம் ஒரு "புரட்சிகர இயக்கத்தின் வழியை" அணுகிக் கொண்டிருக்கிறோம் என்பது பொருளாகும்.

ஆயினும், இயக்கம் ஒரு திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதுதான் ஒரு பிரச்சினை மற்றும் இதைத் தான் முக்கியமான பலவீனம் என்று அவர் சரியாக அடையாளம் காட்டியுள்ளார். மேலும் அவர், நம்முடைய பணி "பூகோளமயமாக்கல் முறையைத் தூக்கி எறிவது அல்ல, அதை வெற்றிகொள்வது ஆகும்; பூகோள ஜனநாயகப் புரட்சியை (Global Democratic Revolution) மனிதகுலம் தோற்றுவிக்க அதைக் கருவியாகக்கொள்ள வேண்டும்" என தொடர்ந்து கூறியுள்ளார்.

இந்தப் பரந்த உணர்வுகளுடன் ஒருவர் உடன்பட்டுப் போனாலும், பூகோள ஜனநாயகப் புரட்சியின் தன்மையைப் பற்றி மொன்பியோட் கூறுவதை நாம் ஆராயும்பொழுது சிக்கல்கள் எழுகின்றன.

இதற்காக அவர் இரண்டு முக்கிய வழிமுறைகளைக் கூறுகிறார். முதல் வழியின்படி International Monetary Fund, World Bank அகற்றப்பட்டு, 1944ல் கெயின்ஸ் (Keynes), பிரெட்டன் வூட்ஸ் மாநாட்டில் தெரிவித்த முறையிலான அமைப்பு ஏற்கப்பட வேண்டும்; அந்த அமைப்பு மிகப்பெரிய அளவிலான வர்த்தக உபரிகளையும், பற்றாக்குறைகளையும் ஏற்படாமல் தடுப்பது அதன் நோக்கமாகும். இரண்டாவதாக, ஐ.நா.வின் பாதுகாப்புக் குழு (UN Security Council) கலைக்கப்பட்டு, சீர்திருத்தப்பட்ட ஐ.நா. பொதுமன்றத்திற்கு (UN General Assembly) அதன் அதிகாரங்கள் வழங்கப்படும் -இந்தப் புதிய மன்றத்தில் உறுப்பு நாடுகள் தங்கள் மக்கள் தொகைக்கேற்பவும் அவர்களுடைய "பூகோள ஜனநாயகக் குறியீட்டின்" அடிப்படையிலும் வாக்குரிமை பெற்றிருக்கும்.

"பூகோள ஜனநாயகப் புரட்சி" பற்றி ஒருவர் கூறக்கூடியதெல்லாம், மலை அளவு சிரமப்பட்டு இறுதியில் கொண்டுவந்தது... எலியைத்தான்.

புதிய ஜனநாயக வடிவங்களிலான பூகோள ஆட்சி முறை ஏற்படுத்தவேண்டும் என்று மொன்பியோட் வலியுறுத்துவது சரியானதுதான். ஆனால் ஜனநாயகம் என்ற சொல்லிற்கு ஏதாவது உண்மையான பொருள் வேண்டுமென்றால், மாபெரும் நாடுகடந்த கூட்டு நிறுவனங்கள், வங்கிகள், பூகோள நிதி நிறுவனங்கள் முதலியவை தனியார் கைகளில் இருந்து அகற்றப்பட்டு, ஜனநாயக முறையில் பொதுச் சொத்துடைமைக்கு உட்படுத்தப்படவேண்டும், ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும். சுருங்கக்கூறுவதெனில், உண்மையான ஜனநாயகம் --மக்கள் ஆட்சி- மூலதனத்தின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே அடையப்பட முடியும். இவை இரண்டும் இயைந்து இயங்க முடியாதனவை ஆகும்.

இதை மார்க்கரெட் தாட்சர் நன்கு அறிந்திருந்தார். "சமுதாயம்" என்று ஒன்றும் கிடையாது என்றும் "சுதந்திர சந்தை" யின் நடவடிக்கை என்பதற்கு "வேறு மாற்று வழி இல்லை" என்ற சொற்றொடரில் சுருக்கமாகக் கூறி முடித்தார். அம்மையார் கூறியது சரியே.

ஆனால், இதுதான் துல்லியமான பிரச்சினை: மாற்றீடு இல்லை என்று சொன்னால் அது ஜனநாயகம் ஆகாது. ஜனநாயகமுறை என்பது, மாற்றுமுறைகளில் ஏதேனும் ஒன்றைக் கொள்ளுவதும், முடிவு எடுப்பது, மாற்றுவது, திருத்தியமைப்பது, வளர்ப்பது போன்றவற்றால் தடையின்றி இயக்கப்படும். மாற்றீடு இல்லாவிட்டால் சர்வாதிகாரமுறை அமைந்துவிடும், மூலதனத்தின் சர்வாதிகாரமும் அதன் முடிவிலா இலாப உந்துதலுக்காக உலக மக்களின் நலன்கள், தேவைகள், விழைவுகள் ஆகியவை கீழ்ப்படுத்தப்பட்டுவிடும் நிலையும் ஏற்பட்டுவிடும்.

முடிவாக, பெப்ரவரியில் வெடித்த மக்கள் இயக்கம், 20ம் நூற்றாண்டின் கசப்பான அனுபவங்களை உள்ளடக்கித் தேவையான அரசியல் படிப்பினைகளைக் கருத்திற்கொண்டு, ஏகாதிபத்தியம், போர் இவற்றை எதிர்க்கும் போராட்டத்திற்கு திறவுகோல் சர்வதேச சோசலிசப் புரட்சி ஒன்றுதான் என்ற புரிதலோடு நடத்தப்பட்டிருந்தால் நிலைமை எவ்வாறு மாறியிருக்கும் என்பதை நீங்கள் ஆராயவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இப்போதுள்ள அரசியல் அரங்கு முற்றிலும் மாறுபட்ட தன்மையைப் பெற்றிருந்திருக்கும்.

ஆனால் இப்பொழுது ஏகாதிபத்திய சக்திகள் கொடூரமான குற்றத்தை இழைத்துவிட்டு தப்பித்துவிட்டதாகத் தோன்றுகிறது மற்றும் அங்கு ஏதோ அரசியல் இடை ஓய்வமைதி இருப்பதாகத் தோன்றுகிறது. அது கடந்து செல்லப்படும். புதிய போராட்டங்கள் வளர்ச்சியுறும். ஆனால் முக்கிய கேள்வி தொடர்ந்து இருக்கும்: எந்தத் வேலைத்திட்டத்தில் மற்றும் முன்னோக்கில்? செய்யவேண்டிய பணி இந்த அல்லது அந்த அரசாங்கத்திற்கோ, ஐ.நா.விற்கோ அழுத்தம் கொடுப்பது அல்ல, அல்லது ஒரு காலத்தில் மக்கள் ஆதரவு பெற்ற பழைய கட்சிகளையும் அமைப்புக்களையும் உயிர்ப்பிப்பது சாத்தியம் என்று அழுத்தம் கொடுப்பது அல்ல, மாறாக 20ம் நூற்றாண்டு கற்றுக்கொடுத்த அத்தனை படிப்பினைகளிலும் அடித்தளமிட்டுள்ள 21ம் நூற்றாண்டின் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச சோசலிச இயக்கத்தை வளர்த்தெடுப்பது என்ற கருத்துருவை அடிப்படையாகக் கொண்டிருக்கும் மட்டத்திற்கு அவர்கள் முன்செல்வார்கள்.

உலக சோசலிச வலைத் தளத்தின் நோக்கம் அத்தகைய இயக்கத்திற்குத் தேவையான திசைவழியை அளிப்பதும் அதற்குத் தலைமை தாங்க சர்வதேச புரட்சிக் கட்சியைக் கட்டி எழுப்புவதும் ஆகும். இந்த மாநாடு அந்த இலக்கை நோக்கி அடி எடுத்து முன்வைக்க உதவும் என்ற தோற்றத்தை நாங்கள் காண்கிறோம்.

(முடிவுற்றது)


World Socialist Web Site
All rights reserved