World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil

Oppose Imperialist War & Colonialism!


ஏகாதிபத்திய யுத்தத்தையும் காலனி ஆதிக்கத்தையும் எதிர்ப்போம்!
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் விஞ்ஞாபனம்

Back to screen version | Email this page! | Email the author

1. லியோன் ட்ரொட்ஸ்கியால் நிறுவப்பட்ட சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது ஏகாதிபத்திய யுத்தத்திற்கும் அதன் காலனி ஆதிக்கத்திற்கும் எதிராக உலக தொழிலாளர் மாநாட்டைக் கூட்டுமாறு 1991, மே தினத்தன்று அழைப்பு விடுத்தது.

இந்த மாநாடு 1991 நவம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் அனைத்துலகக் குழுவின் வழிகாட்டுதலின் பேரில் பேர்லின் நகரில் நடைபெற்றது. இந்நகரில்தான் 75 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவது ஏகாதிபத்தியப் போரைப் பற்றிய தனது அழியாப் புகழ் பெற்ற கண்டனத்தை கார்ல் லீப்னெஹ்ட் வெளியிட்டிருந்தார். இந்த மாநாடனது வெற்று ஆரவாரச் சொல்லுக்கும், வார்த்தை ஜாலத்திற்குமான காட்சி அறை அல்ல, அந்த வகையான நாடகப் பேச்சினால் தொழிலாள வர்க்கத்திற்கு எந்தவித பலனும் இல்லை. பதிலாக அனைத்துலகக் குழுவால் தீர்மானிக்கப்பட்டிருக்கும் மாநாடானது, ஏகாதிபத்திய முதலாளிகளின் தலைவர்களால் முனமொழியப்பட்ட பரந்த வறுமை, அடிமையாக்கல், 'புதிய ஒழுங்குக்கான போர்' ஆகியவற்றுக்கெதிராக, தொழிலாள வர்க்கத்தை, புரட்சிகரமாக அணிதிரட்டுவதற்கான சோசலிச வேலைத்திட்டத்தைப் பற்றி விவாதிக்கவும் சேர்த்துக் கொள்ளவுமிருக்கிறது. உலகத் தொழிலாள வர்க்கத்தினுள் சமூக ஜனநாயக வாதிகள், ஸ்டாலினிஸ்டுகள் மற்றும் சந்தர்ப்ப வாதத்தின் அனைத்து பிரதிநிதிகளாலும் காட்டிக் கொடுக்கப்பட்ட சோசலிச சர்வதேசிய வாதத்தின் மரபியத்தை புதுப்பிப்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

2. பாரசீக வளைகுடா யுத்தமானது, தொழிலாள வர்க்கத்தின் பாரம்பரிய தொழிற்சங்கங்களின் மதிப்பிழந்த தன்மையை அம்பலமாக்கிவிட்டது. ஈராக்கிற்கெதிரான போருக்கு எதிராக அணிதிரட்டப்பட்ட தொழிலாள வர்க்க எதிர்ப்பு என்று குறிப்பிடத்தக்க ஒன்று உலகில் எங்குமே இருக்கவில்லை. கோடிக்கணக்கான தொழிலாளர்களின் உண்மையான வெறுப்பும், தூஷித்தலும் இருந்தபோதிலும், ஏகாதிபத்திய வெறியாட்டத்துக்கு எதிரான வர்க்க எதிர்ப்பு, அமைப்பு ரீதியான, சுதந்திரமான அரசியல் வெளிப்பாட்டை எடுப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை, ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்புக்கள் முழுமையாக தவிர்க்கப்பட முடியாத இடங்களில் சமூக ஜனநாயகவாதிகளும், தொழிற்சங்க அதிகாரத்துவங்களும், அதேபோல் ஸ்டாலினிசவாதிகளும் "அவர்களுடைய" அரசாங்கங்களின் போர்க் கொள்கைகளுக்கு அவை அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வடிவத்தை எடுக்காத வகையில் பார்த்துக் கொண்டனர். ஆயிரக்கணக்கான குட்டி முதலாளித்துவ சோம்பேறி வேலையாட்களைக் கொண்ட, தொழிலாளர் இயக்கத்தில் உத்தியோகபூர்வமாக அனுமதிக்கப்பட்ட எல்லாவகையான பழமையான அமைப்புக்கள் அனைத்தும் முதலாளித்துவ அரசின் தொங்கு சதைகளாக மாறின, அவர்களது செயல்முறை மற்றும் அவர்களது அதிகாரபூர்வ வேலைத்திட்டம் ஆகியவற்றைப் பொறுத்த அளவில் ஸ்டாலினிஸ்டுகள், சமூக ஜனநாயகவாதிகள், மற்றும் அதிகாரபூர்வ முதலாளித்துவ கட்சிகள் அனைத்துக்கும் உள்ள அரசியல் வேறுபாடுகள் உண்மையில் இல்லாது போய்விட்டன. பிரான்சுவா மித்திரோனின் "சோசலிச" அரசாங்கம், பாரிசில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதித்ததுடன், ஈராக்கில் பெண்கள் மற்றும் குழந்தைகளின்மேல் குண்டுகளைப் போட விமானங்களை அனுப்பியது, பிரிட்டனில் சமூக ஜனநாயகவாதிகள் அதிகாரத்தில் இல்லை என்ற ஒன்றுதான் அவர்களையும் அதே மாதிரி செய்யவிடாமல் தடுத்தது என்பதே உண்மை. இருந்த போதிலும் தொழிற் கட்சித் தலைவர் கின்னக் கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் டோரிக் கட்சி பிரதமரின் பாதத்தை வணங்குவதிலும், பிரிட்டனின் தேசியக் கொடி (யூனியன் ஜக்) யின் முன்னால் மண்டியிடுவதிலும் ஈடுபடுத்திக் கொண்டார்.

ஜேர்மன் சமூக ஜனநாயகவாதிகளைப் பொறுத்தவரை CDU-உடன் சேர்ந்து ஈராக்கிற்கெதிரான போரை ஆமோதித்துக் கையெழுத்திட்டதுடன், தொழிலாளர், இளைஞர் மத்தியில் எழுந்த போருக்கான எதிர்ப்பின் குரல் வளையை நெரிப்பதற்கு தமது சக்தியிலான அனைத்தையும் செய்தனர். ஸ்ராலினிஸ்டுகளைப் பொறுத்த வரையில் இந்த யுத்தமானது, உலக அரசியலில் சோவியத் அதிகாரத்துவம் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்தியின் பிரதிநிதி என்ற முந்தைய கட்டுக்கதையின் மிச்சசொச்சத்தையும் அழித்தொழித்தது. சோவியத் யூனியனுக்குள் முதலாளித்துவத்தை மீளக் கொணர்வதற்கான கொர்பச்சேவ் அரசாங்கத்தின் வெளிப்படையான திட்டமானது, ஈராக்கிற்கெதிரான போரை கிரெம்ளின் ஆமோதித்துக் கையெழுத்திட்டதில் மிகக் கொடிய குற்றத்தின் சர்வதேச வெளிப்பாட்டைக் காட்டிக் கொண்டது. ஏகாதிபத்திய வாதிகளின் பின்னால் தொழிலாளர் அதிகாரத்துவத்தின் அவமானகரமான கூட்டானது, ஒவ்வொரு வர்க்க நனவுள்ள தொழிலாளிக்கும் ஒரு எச்சரிக்கை ஆகும். அதாவது ஏகாதிபத்திய இராணுவ மயமாக்கலுக்கு எதிராக போராட்டத்தைக் கூர்மைப்படுத்தும் புதிய புரட்சிகரத் தலைமையைக் கட்டுவதில் இனியும் காலம் கடத்தக்கூடாது எனபதுதான் அது.

3. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் எதிர்கொண்ட அனைத்து விதமான மகத்தான வரலாற்று மற்றும் அரசியல் பணிகள் இப்போது மிக ஸ்தூலமான வடிவத்தில் முன்னுக்கு வந்துள்ளன. ஈராக் மீதான கொடூரமான குண்டுவீச்சும், அதனுடைய தொழிற்துறைக் கட்டமைப்பை முழுமையாக அழித்ததும் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித் தனத்தின் புதிய கொந்தளிப்பின் ஆரம்பத்தைக் குறிக்கின்றது. லட்சக்கணக்கானோரை அழிக்காமலும், அடிமைப்படுத்தாமலும் முதலாளித்துவத்தால் உயிர்வாழ முடியாது. இந்த நூற்றாண்டில் 1914லும் 1939லும் ஏகாதிபத்தியம் மனிதகுலத்தை, கோடிக்கணக்கான மனித உயிர்களைப்பலி கொண்ட இரண்டு போர்களில் தோய்த்தெடுத்தது. பாரசீக வளைகுடா யுத்தத்தில் மடிந்தவர்களின் எண்ணிக்கையை இன்னும் கணக்கு எடுக்கவேண்டி இருப்பினும், அந்த யுத்தமானது அதைவிட பெரிய அளவிலான உலகப் போருக்கான தயாரிப்பு இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெரியப்படுத்தி உள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு பெரும் நாடக ஆசிரியன், மனித குலத்தினை தனது பார்வையாளராகக் கொண்டு, இருபதாம் நூற்றாண்டின் முதற்பாதி இரத்தம் தோய்ந்த நிகழ்ச்சிகளை மீண்டும் அரங்கேற்ற தீர்மானித்திருப்பதைப் போலிருக்கிறது.

4. ஆகஸ்ட் 1990ல் இருந்து இவை எல்லாம் இடம் பெற்ற பின்னரும் பாரசீக வளைகுடா யுத்தம் ஒரு வெறும் தனித்த சம்பவம் எனவும், அது எந்தவொரு பரந்த ஏகாதிபத்திய நலன்களுடனும் தொடர்புபட்டது அல்ல எனவும், ஈராக் குவைத்தினை இணைத்துக் கொண்டதால் மட்டுமே அது தூண்டி விடப்பட்டது எனவும் தெளிவுப்படுத்த முடியாத அப்பாவி ஒருவரால்தான் இன்னும் நம்பமுடியும். எண்ணெய் வளமிக்க வளைகுடாப் பிராந்தியங்களை அமெரிக்காவின் பாதுகாப்பு வலயங்களாக மாற்றியதைத் தொடர்ந்து, போருக்குப் பிறகு ஏகாதிபத்திய சக்திகளின் இராணுவங்களினால் ஈராக்கின் வடபகுதி கைப்பற்றப்பட்டுள்ளது. நடப்பில் துண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் ஈராக், ஏகாதிபத்தியவாதிகளால் உலகம் புதிய பகுதிகளாக பிரிக்க ஆரம்பிக்கப்பட்டு விட்டதைத்தான் சமிக்ஞை காட்டுகின்றது. முன்னாளைய காலனிகள் மீண்டும் அடிமை நிலைக்கு கொண்டு வரப்பட இருக்கின்றன. ஏகாதிபத்தியத்தின் சந்தர்ப்பவாதிகளாலும் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களாலும், கடந்த காலத்துக்குரியது எனக் கூறிக்கொள்ளப்பட்ட கைப்பற்றல்களும் இணைப்புக்களும் திரும்பவும் இன்றைய நாளின் நடப்பாக இருக்கின்றன.

5. ஈராக்கை அழிக்கவும் கொள்ளையிடவும் ஏகாதிபத்தியவாதிகள் ஆச்சரியப்படத்தக்க அளவு உள்நோக்கத்தோடு ஒற்றுமையை வெளிக்காட்டிக் கொண்டார்கள்: இராணுவ வேசித்தனத்தை கௌரவமாகக் கருதும், ஏகாதிபத்தியத்தின் ஒழுக்கக்கேட்டின் விளைநிலமான ஐக்கிய நாடுகள் அவையில், பலஜோடி முதலாளித்துவ ராஜதந்திரிகள் பாதுகாப்புச் சபையின் கதவுக்குப்பின் வரிசையாக நின்று கொண்டு "வேலையில் இறங்கத் தயாராக இருந்தனர்". ஈராக்கிற்கு எதிரான தாக்குதலுக்காக அமெரிக்கா விடுத்த அழைப்பிற்கு பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான் மட்டு மல்ல - அதைவிட சிறிய ஏகாதிபத்திய சக்திகளும் செவிசாய்த்தன. ஆஸ்திரேலியா, கனடா, இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, பெல்ஜியம், டென்மார்க் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியன அவற்றில் சிலவாகும். டைனமைட் கண்டுபிடித்தவரின் நினைவாக ஆண்டுதோறும் கௌரவமான "அமைதிப் பரிசு" வழங்கும் நார்வே கூட - ஈராக் எதிர்ப்பு புனிதப்போரில் பங்களிப்பு செய்தது. இந்த கூட்டில் பரந்த அளவிலான பங்களிப்பு, ஈராக்கிற்கு எதிரான யுத்தம் எல்லா ஏகாதிபத்திய சக்திகளதும் காலனித்துவக் கொள்கையை புதுப்பிப்பதை சட்டரீதியாக்கும் என்ற மறைமுக விளக்கத்தின் அடிப்படையிலேயே ஏற்பட்டது. அமெரிக்கா தலைமையிலான இந்த யுத்தத்துக்கு ஆதரவளிப்பதை ஏனைய ஏகாதிபத்திய அரசுகள் ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா முதலான இடங்களில் தமது எதிர்கால யுத்தங்களுக்கு அமெரிக்காவின் பூரண ஆதரவை அல்லது அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான முற்கொடுப்பனவாக (Down payment) கருதிக் கொண்டன. ஸ்பெயின் அரசாங்கம், செவில்லே அருகில் உள்ள மொரொன் விமானதளத்தில் அமெரிக்காவிற்கு வசதிகள் செய்து கொடுத்ததானது, மாக்ரெப்பில் தனது சொந்த திட்டத்திற்காக 'பெரும் வல்லரசை' வென்றெடுப்பதற்கே ஆகும், அமெரிக்காவிற்கு ஆதரவளிபப்தற்காக டச்சு அரசாங்கம் தனது முன்னாள் காலனியான சூரிநாமின் வெளிவிவகாரக் கொள்கையின் மீதான கட்டுப்பாட்டினை புதுப்பிப்பதற்கான ஆதரவினைப் பெற்றுக்கொண்டது. புஷ்சும் பேக்கரும் தமது கூட்டினைக் கூட்டியபோது, இத்தகைய எத்தனை கைமாறுகள் இடம்பெற்றனவோ என ஒருவர் கற்பனை செய்யலாம். ஆனால் திருடர்களுக்குள் நட்பு என்று ஏதும் கிடையாது, காலனித்துவத்தின் மறு உயிர்ப்பானது, நீண்டதும் பாரதூரமானதுமான விளைபயன்களைக் கொண்டிருக்கும். 1914க்கும் 1939க்கும் முன்னர்போன்று சிறியதும், பாதுகாப்பற்றதுமான நாடுகளைக் கொள்ளையடிப்பதும் அடிமைப்படுத்துவதும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையில் தகராறுகளையும் போராட்டங்களையும் ஆழப்படுத்துவதுடன் பிரிக்க முடியாதபடி இணைக்கப்பட்டுள்ளது.

6. 1945லிருந்து உலக முதலாளித்துவத்தின் வடிவத்திலும் கட்டமைப்பிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்ததுடன் நின்றுவிடவில்லை. முதலாம், இரண்டாம் உலகப்போருக்கு வழிவகுத்த சந்தைகள், கச்சாப்பொருட்களின் வளங்கள் மற்றும் "மலிவான கூலி உழைப்பு" க்கான தேடல் இவற்றுக்கான அதே மோதல்கள் - மூன்றாவது உலகப் போருக்கும் ஈவிரக்கமற்ற முறையில் இட்டுச் செல்கின்றன. இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானம் பல "அற்புதங்களை" சாதித்திருக்கிறது பிரபஞ்சத்தின் விதிகளைப் பற்றிய மனிதனின் புரிதலில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது; அது அண்ட வெளியின் வெடிப்பைப்பற்றிய செயல்பாடுகளின் ஆய்வினை ஆரம்பித்து வைத்துள்ளது; அது மனித உயிரின் மரபியல் கட்டமைப்பை மிக நுட்பமாக வரைந்து காட்டியிருக்கிறது, இதன் மூலம் உயிரியல் ரீதியிலாவது மனித இனத்தின் "பூரணத்துவத்திற்கு" வழிவகுக்க முடியும், ஆனால் விஞ்ஞானத்தால் முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியை சமாதான முறையில் தீர்த்து வைப்பதற்கான வழியை கண்டுப்பிடிக்கவும் முடியாது; காணப்போவதும் இல்லை. உலகச் சந்தையின் தேவைகளையும் தூண்டுதல்களையும் உற்பத்தியானது, முதலாளித்துவ அமைப்புமுறை வரலாற்று ரீதியாக வேருன்றி உள்ள உபயோகத்தில் இல்லாத தேசிய அரசு வடிவத்தின் வரையறைகளை உடைத்து நொருக்குகிறது. இந்த முரண்பாடானது, சிறிய எண்ணிக்கையிலான முதலாளித்துவ கும்பல்களினால் ஆளப்படும் உற்பத்தி சக்திகளைக் கொண்ட தனிச்சொத்துடமைக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்களை அமைப்பு ரீதியாகவும், திட்டமிட்டும் என்றுமில்லாத அளவு அதிக சிக்கலான வடிவத்தில் தன்னகத்தே கொண்டுள்ள உற்பத்தி முறைகளின் சமூகத் தன்மைக்கும் இடையேயான அடிப்படை மோதலை ஆழப்படுத்தியும் முடுக்கியும் விட்டுள்ளது.

7. சமூக உற்பத்திக்கும் தனிச்சொத்துடமைக்கும் இடையிலும் உற்பத்தியின் உலகத்தன்மைக்கும் தேசிய அரசு முறைக்கும் இடையிலுமான - இந்த முரண்பாடுகள்தான், இருபதாம் நூற்றாண்டின் காலப்பகுதியில் இந்தப் பூகோளத்தை திரும்பவும் குலுக்கி எடுக்கும் பலாத்கார அரசியல் வெடிப்புக்களுக்கும் பொருளாதார ஸ்தம்பித்தல்களுக்கும் அடித்தளமாக இருக்கின்றன. அவற்றை அமுக்கிவைப்பதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்தபோதும், அவை மீண்டும் ஒரு முறை வெடிப்பை நோக்கி எழுகின்றன. முதலாளித்துவத்தைத் தூக்கி வீசும் சர்வதேச பாட்டாளி வர்க்கப் புரட்சியின் வெற்றி மூலம் அல்லாமல், மூன்றாவது உலகப்போரைத் தடுப்பதற்கான வேறு வழி ஏதும் இல்லை. போரைத் தவிர்ப்பதற்கான எல்லா ஆலோசனைகளும் "அணு ஆயுதக் கட்டுப்பாடு" ஒப்பந்தங்களுக்கான அழைப்புக்கள் முதல் ஆயுதக்குறைப்பிற்காக முதலாளித்துவ வாதிகளிடம் விடுக்கும் அமைதி வேண்டுகோள், மனசாட்சிப்படியான எதிர்ப்பு, கூட்டு வழிபாடுகள் வரை- அனைத்துமே தன்னையே ஏமாற்றிக்கொள்ளும் அல்லது மோசடி செய்யும் பயிற்சிகள்தான்.

வரலாற்றின் படிப்பினைகள்

8. ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்கப் போராட்டம், இருபதாம் நூற்றாண்டின் புறநிலை அனுபவங்கள் படிப்பினைகள் பற்றிய ஆய்வினை அடித்தளமாகக் கொள்ள வேண்டும். முதலாம், இரண்டாம் உலக யுத்தங்கள் இரண்டும், இறுதி ஆய்வுகளின்படி முக்கிய ஏகாதிபத்திய வல்லரசுகளிடையேயான பொருளாதார, அரசியல் தகராறுகளை தீர்க்கவே தொடுக்கப்பட்டன. 1914ல் வெடித்த யுத்தமானது, 19-ம் நூற்றாண்டின் கடைசி முப்பதாண்டுகளில் முதலாளித்துவ அமைப்பின் தன்மையில் ஏற்பட்ட அடிப்படை மாற்றங்களில் வேரூன்றியிருந்தது, 1870பதுகளுக்கு முன்னர் முதலாளித்துவத்தின் பண்பாக விளங்கிய சார்பு ரீதியான சுதந்திரப் போட்டியானது, பிரமாண்டமான கார்ட்டல்கள், டிரஸ்டுகளின் கைகளில் குவிந்த பொருவாரியான உற்பத்தியால் பதிலீடு செய்யப்பட்டது. நிதி மூலதனத்தின் சகாப்தம் வந்துவிட்டது. தேய்ந்து வந்த காலனித்துவம், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளால் உற்பத்தி செய்யப்பட்ட பெருவாரியான பண்டங்களை நுகர்வதற்கு பாதுகாக்கப்பட்ட புதிய சந்தைகளுக்கான தேவை எழுந்ததால், திடீரென வெடித்துச் சிதறும் மறுமலர்ச்சிக்குள்ளாகியது. பிரெஞ்சு ஏகாதிபத்திய இயக்கத்தின் ஸ்தாபகர்களுள் ஒருவரான பெரி 1880களில் "ஐரோப்பிய நுகர்வு உறிஞ்சப்பட்டு வருகின்றது" என்று எச்சரித்தார். "பூகோளத்தின் ஏனைய பாகங்களில் பெருமளவிலான புதிய நுகர்வோர்களை அதிகரிப்பது அவசியம், இல்லையேல் நாம் நவீன சமுதாயத்தை திவால் நிலைக்குள் தள்ளி விடுவதோடு ஒருவரால் கணித்துச் சொல்ல முடியாத விளைபயன்களைக் கொண்ட ஒரு பெரும் புரட்சிகர எழுச்சியின் சமூக முடிவுக்கான இருபதாம் நூற்றாண்டின் உதயத்துக்கு தயார் செய்வோம்" என்றார்.

9. ஐரோப்பாவில் மாபெரும் சக்திகள் -முக்கியமாக பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி ஆகியன - ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு, ஆசிய மக்களைக் கைப்பற்றிச் சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்டு காலனித்துவ பேரரசுகளை ஈட்டிக்கொண்டன. இந்நூற்றாண்டின் தொடக்கத்திற்கு முன்னர், பெரிதும் இளைய முதலாளித்துவ சக்திகளான அமெரிக்காவும் ஜப்பானும் தமது சொந்த ஏகாதிபத்திய விரிவாக்கல் வேலைத் திட்டங்களில் இறங்கின. உத்தியோகபூர்வமான வெளிப்பூச்சு நாகரீகங்களுக்கு இடையேயும் ஏகாதிபத்திய ராஜதந்திரமானது, தமது உலகப் பொருளாதார மூலோபாய அந்தஸ்தை பலப்படுத்தும் பொருட்டு தேசிய முதலாளித்துவக் குழுக்களிடையே ஈவிரக்கமற்றதும் ஆளை ஆள் கொல்வதுமான போராட்டங்களை மையமாகக் கொண்டிருந்தது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான போட்டா போட்டிகளால் ஆயுத தளவாடங்கள்மேல் பிரம்மாண்டமாகச் செலவிடப்பட்டன, தமது நலன்களின் அடிப்படையில் இடம் பெற்ற ஒவ்வொரு மோதலின் பின்னணியிலும் அகில ஐரோப்பிய யுத்த மட்டுமின்றி உலகளாவிய யுத்தத்தின் சாத்தியமும்கூட மறைந்திருந்தது. தமது மேலாதிக்கத்தினை நிலைநாட்ட ஏகாதிபத்திய வாதிகளிடையே இடம்பெற்ற இடைவிடாத போராட்டத்தில், தூர ஒதுக்குப் பிராந்தியங்கள் கூட மூலோபாய சிறப்பு முக்கியத்துவம் பெற்றன. அவை அடிக்கடி அவற்றின் பொருளாதார முக்கியத்துவங்களுக்கு முக்கியத்துவம் தந்தன. ஏகாதிபத்திய சக்திகள் மிகவும் சிறிய மேம்பாட்டிற்காகக் கூட தத்தமக்கிடையே சூழ்ச்சி செய்து வந்ததால், கூட்டுக்கள் தொடர்ந்து இடம் பெயர்ந்தன. 19-ஆம் நூற்றாண்டின் பெரும்பாலான பகுதியில் 'நண்பர்களாக' விளங்கிய பிரிட்டனும், பிரான்சும், வடஆபிரிக்காவிலும், மத்திய கிழக்கிலும் போட்டி நலன்களின் தாக்கத்தால் எதிரிகளாக மாற்றப்பட்டன. எகிப்தில் பிரிட்டனின் மேலாதிக்கத்தை அங்கீகரிக்கும் பிரான்சின் தீர்மானம் மட்டுமே இரண்டு சக்திகளையும் யுத்தத்தின் விளிம்பில் இருந்து இழுத்தெடுத்து வந்ததோடு, திரும்பவும் அவர்களை "நண்பர்களாக" மாற்றியது. இதே சமயத்தில் பிரான்சுக்கு எதிராக ஐக்கியப்பட்ட பிரிட்டனும் ஜேர்மனியும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கடும் எதிரிகளாக மாறினர். சமாதானத்தைப் பேண ஏகாதிபத்தியம் தங்கி இருந்த "சமநிலை சக்தியை" மோதல்களின் தாக்கங்கள் உடைத்து எறிந்தன. சூடேறிய பால்கனில் ஒரு சிறிய சம்பவம் -1914 ஜுனில் செரஜீவோ நகரில் ஆஸ்திரியப் பிரபு ஒருவர் படுகொலை செய்யப்பட்டது- உலக யுத்தத்தினை வெடிக்கச் செய்தது.

10. புரட்சிகர சோசலிச இயக்கத்தின் அபிவிருத்தியானது, ஏகாதிபத்தியத்துக்கும் அதன் யுத்த வெறிக் கொள்கைகளுக்கும் எதிரான போராட்டத்துடன் பிரிக்க முடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளது. 1889-ல் நிறுவப்பட்ட இரண்டாம் அகிலத்தின் தலைசிறந்த பிரதிநிதி, ஏகாதிபத்தியம் ஒரு ரத்தம் தோய்ந்த பேரழிவுக்கு தயாரிப்பு செய்து வருவதாகவும், அது தொழிலாள வர்க்கத்தினுள் புரட்சிகரப் போராட்டத்தினால் மட்டுமே தவிர்க்ப்பட முடியும் எனவும் எச்சரிக்கை செய்தார். 1911ல் ரோசாலுக்சம்பேர்க் பிரகடனம் செய்ததாவது: "உலக அரசியலும் இராணுவ வாதமும், சர்வதேச முரண்பாடுகளை அபிவிருத்தி செய்யவும் தீர்க்கவும் செய்கின்ற முதலாளித்துவத்தின் ஒரு குறிப்பிட்ட விதிமுறையே அன்றி வேறு ஒன்றும் அல்ல.... வர்க்கப் பகைமைகளை மென்மைப்படுத்தலாம், மழுங்கடிக்கலாம், முதலாளித்துவப் பொருளாதார அராஜகங்களை அடக்கி வைக்கலாம் என்று யார் நம்புகிறார்களோ, அவர்களே இந்த சர்வதேச மோதல்களைத் தணிய வைக்கலாம், ஆறச் செய்யலாம் அல்லது கலைக்கலாம் என நினைக்க முடியும். முதலாளித்துவ அரசுகளின் சர்வதேசப் பகைமைகள் வர்க்கப் பகைமைகளின் அன்பளிப்புக்களே. உலக அரசியல் அராஜகம், முதலாளித்துவ உற்பத்தி முறை அராஜகத்தின் மறுபக்கமே அன்றி வேறு அல்ல. "(ஒரு புரட்சிகர சர்வதேசியத்துக்கான லெனினின் போராட்டம், பாத் பைண்டர் அச்சகம், நியூயோர்க் 1981)

இரண்டாம் அகிலத்தின் மாநாடுகளில், அதிலும் குறிப்பாக 1907ல் ஸ்ருட்கார்ட், 1912ல் பாசில் மாடுகளில், யார் முதலில் சுடுகிறார்கள் என்பதைக் கணக்கில் கொள்ளாமல் ஏகாதிபத்தியப் போருக்கும் அதனைத் தொடுக்கும் அரசாங்கங்களுக்கும் எதிராக உறுதி எடுக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏகமனதாக பாசிலில் அங்கீகரிக்கப்பட்ட அறிக்கை அழைப்பதாவது; "ஏகாதிபத்தியத்தின் முதலாளித்துவவாதிகளுக்கு எதிராக சர்வதேசப் பாட்டாளி வர்க்க ஐக்கியத்தின் சக்தியை அணிதிரட்ட எல்லா நாடுகளின் தொழிலாளர்களையும் அழைக்கிறோம்." அது போரைத் தொடுத்தல் புரட்சிகர போராட்டங்களின் எழுச்சிக்கு வழிவகுக்கும் என முதலாளித்துவவாதிகளை எச்சரித்தது.ஆனால் இந்த வார்த்தைகளின் உள்ளடக்கம், இரண்டாம் அகிலத்தின் கட்சிகளுக்குள் ஏற்பட்ட சந்தர்ப்பவாதத்தின் வளர்ச்சியால் குன்றி விட்டது. இந்தக் கட்சிகள் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை மேலும் மேலும் வெளிப்படையாக முதலாளித்துவ 'தாய்நாட்டின்' நலன்களுடன் இனங்காட்டிக் கொண்டன. எனவே 1914 ஆகஸ்டில் யுத்தம் வெடித்ததும் இரண்டாம் அகிலத்தின் முக்கியக் கட்சிகள், தமது பிரகடனம் செய்யப்பட்ட கொள்கைகளை மீறி தமது முதலாளித்துவ அரசாங்கங்களின் யுத்தக் கடன்களுக்கு ஆதரவாகத் தத்தம் பாராளுமன்றங்களில் வாக்களித்தனர். இது இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சியைக் குறித்தது. இந்த ஏகாதிபத்திய தேசிய வெறிஅலைக்கு சந்தர்ப்பவாதிகளின் வெட்கங்கெட்ட அடிபணிவினை விரல் விட்டு எண்ணக்கூடிய சோசலிஸ்டுகளே எதிர்த்தனர்; இந்த புரட்சிகர சர்வதேசியவாதிகளில் மிகத் தொலைநோக்குக் கண்ணோட்டம் மிக்கவராக போல்ஷேவிக் கட்சியின் தலைவரான லெனின் விளங்கினார். அவர் மூன்றாம் அகிலத்தினை நிறுவுவதற்கான அழைப்பினை விடுத்தார்.

முதலாம் உலக யுத்தத்தின் தாக்கங்கள்

11. யுத்தத்தினைத் தொடுத்த எந்த ஒரு ஏகாதிபத்திய அரசாங்கங்களும் யுத்தத்தின் விளைபயன்களை முன் அறிந்து கொண்டிருக்கவில்லை. ஐரோப்பா இலட்சோப இலட்சம் பேரின் சவக்காடாக மாற்றப்பட்டது. இவர்கள் யுத்தத்தினால் அல்லது நோய்களால் அழிந்தனர். இறுதியில் பிரிட்டனும், பிரான்சும் ஜேர்மன் எதிரியின் வெற்றியாளர்களாக வெளிப்பட்டனர். ஆனால் அவர்களின் போலி வெற்றியின் பயங்கரச் செலவானது, அவர்கள் யுத்தத்தில் காக்கச் சென்ற எல்லா சாம்ராஜ்யங்களின் இறுதித் தோல்வியையும் உத்தரவாதம் செய்தது. யுத்தத்தில் பலப்படுத்தப்பட்ட ஏகாதிபத்திய சக்திகளாக அமெரிக்காவும் குறைந்த அளவுக்கு ஜப்பானும் தோன்றின. 1914க்கு முந்தைய ஐரோப்பாவில் பழைய அரசியல் மற்றும் சமுக சமநிலை சீர் செய்யமுடியாதவாறு சிதறுண்டு போயிற்று. போல்ஷிவிக்குகள் ரஷ்யாவில் ஆட்சியைக் கைப்பற்றியதானது, முதலாம் உலக யுத்தத்தின் தீக்கனவுக்குப் பொறுப்பான பொருளாதார அமைப்புடன் தொடர்புபடுத்துவதற்குக் கூட பயன்படுத்த முடியாத வார்த்தையான "முதலாளித்துவ நாகரிகத்தின்" உயிர் வாழ்க்கையையே கேள்விக்குரியதாக்கியது. தனது சொந்தக் குற்றங்களாலேயே ஒரு சமுதாயம் குற்றவாளி என்று கண்டனத்திற்கு ஆளாகியிருப்பின் அது உண்மையில் முதலாளித்துவத்தால் உண்டு பண்ணப்பட்டதே ஆகும். ஆனால் ரஷ்ய முதலாளி வர்க்கத்தைத் தூக்கி வீசிய கட்சியுடன் ஒப்பிடக்கூடிய ஒரு புரட்சிக் கட்சி மேற்கு ஐரோப்பாவில் எங்குமே இருக்கவில்லை. இதனால் ஆளும் வர்க்கங்கள் சமூக ஜனநாயக வாதிகளின் தீர்க்கமான உதவியுடன் சோசலிசப் புரட்சியின் அச்சுறுத்தலை விரட்டியடிக்க முடிந்தது, ஆனால் அவை ஐரோப்பிய முதலாளித்துவம் மீட்சியும் விஸ்தரிப்பும் பெறும் வகையிலான ஒரு புதிய சமநிலை அடிப்படையை உண்டு பண்ணும் நிலையில் இருக்கவில்லை. கெயின்சின் (Keynes) வார்த்தையில் சொன்னால் யுத்தத்தில் இருந்து தலையெடுத்த ஐரோப்பா, ஒரு பைத்தியக்கார வீட்டினை ஒத்திருந்தது.

12. 1980களின் இறுதியில் யுத்தத்தின் பின்னைய நொருங்கக்கூடிய ஒழுங்கு முறையானது, நியூயோர்க் பங்குச் சந்தையின் சரிவுடன் அம்பலமாகியது. இது உலகளாவிய மந்தத்தின் தொடக்கத்தினைக் குறித்தது. சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தில் ஒரு திறமை வாய்ந்த புரட்சிகரத் தலைமை இருந்திருக்குமானால் சோசலிசப் புரட்சியின் வெற்றி ஐரோப்பா முழுவதிலும், இறுதியாக உலகிலும் உத்தரவாதம் செய்யப்பட்டிருக்கும். ஆனால் 1919ல் லெனினின் தலைமையில் நிறுவப்பட்ட கம்யூனிஸ்ட் அகிலம்,1930களின் தொடக்கத்தில் ஒரு பயங்கர சீரழிவுக்குள்ளாகியது. 'தனி நாட்டில் சோசலிசம்' என்ற பிற்போக்குக் கோட்பாட்டின் அடிப்படையில் ஸ்ராலின் தலைமையிலான சோவியத் அதிகாரத்துவம், கம்யூனிஸ்ட் அகிலத்தை உலக ஏகாதிபத்தியத்துடனான கிரெம்ளினின் இராஜதந்திர சூழ்ச்சிகளின் கருவி ஆக்கியது, ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் மேல் கிரெம்ளின் கொண்டிருந்த பிடியானது வரிசைக்கிரமமான பேரழிவுகளுக்கு இட்டுச் சென்றது. எல்லாவற்றுக்கும் மேலாக 1933 ஜனவரியில் நாஜிக்கள் ஆட்சிக்கு வந்தனர். இந்த வரலாற்றுக் காட்டிக் கொடுப்பே ட்ரொட்ஸ்கியை நான்காம் அகிலத்தினை நிறுவுவதற்கான அழைப்பினை விடுக்கச் செய்தது. ஆனால் தனிமைப்படுத்தல்கள், ஸ்ராலினின் ரகசியப் போலீசாரல் மட்டுமன்றி, பாசிஸ்டுகளதும் இடைவிடாத கொலைகளின் நிலைமைகளின் கீழ் நான்காம் அகிலத்தினால் அப்பிற்போக்கின் அலைவீச்சை பின்வாங்கச் செய்ய முடியவில்லை. ஹிட்லரின் வெற்றியைத் தொடர்ந்து வந்த வருடங்களில் ஆஸ்திரேலிய, பிரெஞ்சு பாட்டாளி வர்க்கங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டமையும் இறுதியாக ஸ்பானிய பாட்டாளி வர்க்கம் காட்டிக் கொடுக்கப்பட்டமையும் இரண்டாம் ஏகாதிபத்திய உலக யுத்தத்தின் வெடிப்பிற்கான பாதையைத் திறந்தன.

இரண்டாம் உலக மகாயுத்தம்

13. ஜேர்மனி 21 ஆண்டுகளுக்கு முன்னாளைய தனது தோல்வியின் விளைவுகளை பின் வாங்கச் செய்து, ஐரோப்பாவில் தனது ஆளுமையை நிலைநாட்டும் ஒரு முயற்சியாக 1939 செப்டம்பரில் யுத்தத்தை ஆரம்பித்தது. எவ்வாறெனினும் இரண்டு ஆண்டுகள் சற்று அதிகரிப்பதற்குள் யுத்தம் ஒரு உலகளாவிய மோதலாக மாற்றம் செய்யப்பட்டது. பிரிட்டிஷ் சாம்ராஜியத்துடன் ஒரு நீண்ட போராட்டத்துக்கும், அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்காவுடனும் போரிட தேவையான வளங்களைப் பெறும் பொருட்டு, ஹிட்லர் ஸ்ராலினுடனான "ஆக்கிரமிப்பு இல்லா உடன்படிக்கைகளை", இரத்துச் செய்துவிட்டு, தனது ராணுவத்தினை 1941 ஜுனில் சோவியத் யூனியனுக்கு எதிராகத் திருப்பினார். இதற்கிடையே ஜப்பானிய ஏகாதிபத்தியம் தனக்கு ஆசியாவில் கிடைத்த வெற்றிகளுக்கு இடையேயும் பசிபிக்கில் அமெரிக்க ஆதிக்கத்தை சவால் செய்யாமல் முக்கிய மூலப்பொருட்கள் கிடைப்பதை உத்தரவாதம் செய்ய வழி கிடையாது என்பதை உணர்ந்தது, அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் அது தமக்கிடையேயான வேறுபாடுகளை ஜப்பானுடன் சமாதான வழியில் தீர்த்துக் கொள்ளுவதற்கான சாத்தியங்களை அடைத்து மூடுவதற்கு தனது சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்தது, பேர்ள் துறைமுகம் மீதான தாக்குதல், ரூஸ்வெல்ட் நிர்வாகத்திற்கு ஜப்பானுடன் கணக்கு வழக்குகளை தீர்த்துக் கொள்ளவும், ஐரோப்பாவில் இடம் பெறும் யுத்தத்தில் நுழையவும் இறுதி வாய்ப்பினைத் தந்தது.

14. ரூஸ்வெல்ட்டினதும் சேர்ச்சிலினதும் ஜனநாயக "பாசிச எதிர்ப்பு" வாய்ச் சவடால்களுக்கு மத்தியிலும் அமெரிக்க, பிரிட்டிஷ் யுத்த இலக்குகளுக்கு அடிப்படையாக விளங்கிய புறநிலை நலன்கள், ஜேர்மனி, ஜப்பானிய ஏகாதிபத்திய நலன்களுக்கு ஒன்றும் குறைந்தவை அல்ல. பிரிட்டன் தனது ஏகாதிபத்திய சொத்துக்களை தன்னால் முடிந்த மட்டும் காப்பாற்றிக்கொள்ள போராடிக் கொண்டிருந்தது. அமெரிக்கா முன்னணி ஏகாதிபத்திய சக்தியாக தனது அந்தஸ்தினை நிலைநாட்டும் நோக்கத்தைக் கொண்டிருந்தது, சோவியத் யூனியனைப் பொருத்த மட்டில் ஹிட்லருக்கு எதிரான போராட்டம், கிரெம்ளின் அதிகாரத்துவத்தின் நம்பிக்கை மோசடிகளுக்கு இடையேயும் ஒரு நிஜ முற்போக்கு, ஏகாதிபத்திய எதிர்ப்பை உள்ளடக்கியிருந்தது. ஜேர்மன் ஏகாதிபத்தியம் சோவியத் யூனியனைக் கைப்பற்றி, அக்டோபர் புரட்சியின் அடிப்படையில் 1917-ல் நிலை நிறுத்தப்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட சொத்து உறவுகளை நிர்மூலமாக்கியிருக்குமாயின், அது சோவியத் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்துக்கு கடுமையான தோல்வியை பிரதிநிதித்துவம் செய்திருக்கும். தமது புரட்சியைப் பேணுவதில் சோவியத் மக்கள் கொண்டிருந்த திடசங்கற்பம் நாஜி படைகளைத் தோற்கடிக்க அவர்கள் செய்த மாபெரும் தியாகங்களை பறை சாற்றுகின்றன.

15. எவ்வாறெனினும் சோவியத் மக்களின் வீரதீரத்திற்கு இடையிலும் யுத்தத்தினை வழிநடத்த கிரெம்ளின் கடைப்பிடித்த கொள்கைகள், அடிப்படையில் பிற்போக்குப் பண்பு கொண்டவை. பிரிட்டன், அமெரிக்கா ஆகிய "ஜனநாயக" ஏகாதிபத்திய வாதிகளுடன் அணி திரண்ட சோவியத் அதிகாரத்துவம், யுத்தத்தின் முடிவில் ஒரு பொது புரட்சிகர கிளர்ச்சி வெடிக்கும் சாத்தியத்தை எண்ணி அஞ்சியது. ஜேர்மன், இத்தாலி, பிரான்சில் சோசலிசப் புரட்சி அல்லது அதே விஷயத்திற்காக யுத்தத்தினால் சிதற அடிக்கப்பட்ட எந்த ஒரு முதலாளித்துவ அரசும் சோவியத் தொழிலாள வர்க்கத்திற்கு சக்தியூட்டும் எனவும், அதுவே கிரெம்ளின் மாஃபியாவுடன் கணக்கு வழக்கைத் தீர்த்துக் கொள்ளத் தூண்டும் எனவும், ஸ்ராலின் கணித்தார். எனவே ஸ்ராலின், சேர்ச்சில், ரூஸ்வெல்ட் (1945-ஏப்ரலில் ரூஸ்வெல்டின் மரணத்திற்குப்பின்) ட்ரூமனுக்கிடையே டெஹ்ரான், யால்டா, போர்ட்ஸ்டாம் ஆகிய இடங்களில் நடைபெற்ற வரிசைக்கிரமமான மாநாடுகளின் பின்னர், சோவியத் பிராந்தியங்களில் தலையிடாதிருக்கச் செய்யும் திட்டவட்டமான உத்தரவாதங்களுக்கு பதிலாக, மேற்கு ஐரோப்பாவிலும் மூலோபாய முக்கியத்துவம் காரணமாக கிரீசிலும் முதலாளித்துவ ஆட்சியைக் காப்பதில் ஏகாதிபத்தியத்துடன் தான் ஒத்துழைக்கும் என்பதை கிரெம்ளின் தெளிவு படுத்தியது. பின்னர் சேர்ச்சில் தமது நினைவு குறிப்புக்களில் 1944-ல் மாஸ்கோவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தின்போது, தாம் எங்ஙனம் ஒரு துண்டுச் சீட்டில் யுத்தத்தின் பின்னைய ஐரோப்பிய அரசியல் பிராந்திய பிரிவினையைக் கோடிட்டுக் காட்டினார் என்பதை நினைவு கூர்ந்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான அணியினர் நாஜி ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்ததோடு கிரீசில் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் இருந்தனர், இது சேர்ச்சிலின் கோட்டில் பிரிட்டனின் செல்வாக்குப் பிராந்தியத்தில் தொடர்ந்து இருக்குமாறு குறிப்பிடப்பட்டது. சேர்ச்சில் எழுதியதாவது: "நான் இதை ஸ்ராலின் பக்கம் தள்ளினேன். அச்சமயம் அவர் மொழிபெயர்ப்பைக் கேட்டுக் கொண்டிருந்தார். அங்கு சற்றுத் தயக்கம் காணப்பட்டது. பின்னர் அவர் தமது நீலப்பென்சிலை எடுத்து அதன் மேல் குறிபோட்டு அனுப்பினார். தீர்ப்பதற்கு என்று எடுக்கும் நேரத்தைவிட குறைந்த நேரத்துள் அவை எல்லாமே தீர்க்கப்பட்டுவிட்டன". (Churchill, Memoirs of the Second World War [Boston,1987],P.886)

போருக்குப் பிந்தைய ஒழுங்குமுறை

16. முதலாம் உலக யுத்தத்தினைத் தொடர்ந்து அடைய முடியாது போய்விட்டதை -அதாவது முதலாளித்துவ ஒழுங்கு முறையைப் புதுப்பிக்கவும், விரிவுபடுத்தவும் அடிப்படையான மாறுபட்ட சூழ்நிலையிலும், தாக்குப்பிடிக்கும் சர்வதேச சமநிலையை- அடைவதில் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் முதலாளி வர்க்கம் வெற்றி கண்டது. முதலாம் உலக யுத்தத்தின் வெடிப்பு முதலாளித்துவம் ஒரு உலக அமைப்பு என்ற முறையில் அதன் விவகாரங்களில் நீண்ட நிலையற்ற காலப்பகுதியின் தொடக்கத்தைக் குறித்தது. உலகப் பொருளாதாரத்தின் இடைநிலை செயல்பாட்டு பகுதிகளுக்கிடையிலான, முதலாளித்துவ அரசுகளுக்கிடையிலும், முதலாளித்துவ நாடுகளின் உள்ளே சமூக வர்க்கங்களுக்கிடையிலும் உறவுகளை ஒழுங்குபடுத்தும் நுண்மையான சிக்கலான பொறி முறையில், முன் நடந்திராத விதத்திலும் கட்டுப்படுத்த முடியாத வகையிலும் உடைவு ஒன்று ஏற்பட்டது, இரண்டாம் உலக யுத்தத்தினைத் தொடர்ந்து அது இறுதியாகக் கட்டுப்பாடுக்குள் கொண்டு வரப்படும் வரை, உலக முதலாளித்துவ அமைப்பு முப்பதாண்டுகளாக உருகி வந்தது.

17. சமநிலையை மீண்டும் கொண்டு வருவதற்கான அவசியமான அரசியல் முன் நிபந்தனைகள், கிரெம்ளின் அதிகாரத்துவம் மற்றும் அதன் துணைக்கோள் கட்சிகளின் துரோகத்தினால் வழங்கப்பட்டன. அவர்கள் ஐரோப்பாவிலும் சர்வதேச ரீதியாகவும் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களை மும்முரமாக எதிர்த்து நாசமாக்கினர். பிரான்சிலும் இத்தாலியிலும் ஸ்ராலினிஸ்டுகள் தமது சக்தியை செல்வாக்கிழந்த முதலாளி வர்க்கத்தை புனருத்தாரணம் செய்வதிலும் முதலாளித்துவ அரசினை மறு நிர்மாணம் செய்வதிலும் செலவிட்டனர், கிழக்கு ஐரோப்பாவில் அவர்களின் பாத்திரம் முக்கியத்துவம் குறைந்ததாக இருக்கவில்லை. அங்கே மேற்கு ஐரோப்பாவைப் போலவே சோவியத் யூனியனின் அரசியல் தலையீடு, எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாள வர்க்கத்துக்கு எதிராகவும் ஒரு நிஜ சோசலிசப் புரட்சியின் சாத்தியத்திற்கு எதிராகவும் திருப்பப்பட்டது. தொழிலாளர் இயக்கத்தினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை சோவியத் அதிகாரத்துவத்திற்கும் உலக ஏகாதிபத்தியத்திற்கும் இடையேயான பேரங்களுக்கு கீழ்ப்படுத்துவதிலேயே கிரெம்ளின் முக்கிய அக்கறை காட்டியது. இறுதியில் கிரெம்ளின், தான் முதலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிக தூரம் செல்லுமாறு தள்ளப்பட்டது -அதாவது ஸ்ராலினிசக் கட்சிகள் ஆட்சியைத் தங்கள் கைகளுக்குள் எடுக்குமாறு கட்டளையிடப்பட்டன. உள்ளூர் முதலாளி வர்க்கத்தின் உடைமைகளை பறிமுதல் செய்தது பற்றி ஏகாதிபத்திய வாதிகளின் முறைப்பாடுகள் கிளம்பிய போதிலும் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச மேலாதிக்கம், ஒட்டோமான் பேரரசு வீழ்ச்சி கண்டதன் பின்னர் இப்பிராந்தியத்தில் நிலவியிராத ஒரு குறிப்பிட்ட அரசியல் ஒழுங்கினைத் திணிக்க காரணமாகியது. இந்தப் பிராந்தியத்தில் ஆழமாக வேரூன்றிய அதன் சமூக முரண்பாடுகள், 1990-- 1945க்கு இடையே ஐரோப்பாவின் பொருளாதார ஸ்திரமின்மைக்கு பெருமளவில் பங்களிப்பு செய்தன. அத்தோடு ஐரோப்பா பிரிவினை செய்யப்பட்டது சிறப்பாக ஜேர்மனி பிரிவினை செய்யப்பட்டது ஏகாதிபத்தியவாதிகளின் உடனடி நலன்களுக்கு சேவகம் செய்தது. முப்பது ஆண்டுகளுக்கும் குறைவான கால இடைவெளிக்குள் இரண்டு உலக யுத்தங்களுக்கு இட்டுச்சென்ற முரண்பாடுகளைத் தணிக்க எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் வரவேற்பதில் ஏகாதிபத்தியவாதிகள் ஆர்வம் காட்டினர். ஜேர்மனி துண்டாடப்பட்டமை, இந்த சக்தி வாய்ந்த அரசினை யுத்தத்தின் பிந்தைய ஐரோப்பியக் கூட்டமைப்புக்குள் எப்படி இணைப்பது என்று குழப்பமான பிரச்சனைக்கு ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஒரு பதிலை வழங்கியது. மேலும் யுத்தத்தின் பிந்தைய அரசியல் தீர்வுகள் ஐரோப்பிய அரசுகளை கிழக்கு மேற்காகப் பிரித்ததோடு தொழிலாள வர்க்கத்தினை முள்ளுக்கம்பிகள், சீமேந்து சுவர்கள், கண்ணி வெடிகளைக் கொண்டு காட்டுமிராண்டித்தனமாக பிளவுப்படுத்தியது, இதுவே சோசலிசத்திற்கான போராட்டத்தினை மிகவும் கடினமாக்கிய அரசியல் காரணி என்பதை நிரூபித்தது.

18. உலக யுத்தத்தின் பின்னர் உடனடியாய் உருவான புரட்சிகர அச்சுறுத்தலை ஒடுக்கியதானது, ஐரோப்பாவில் முதலாளித்துவ ஆட்சிக்கான மறு நிர்மாணத்திற்கு புதியதோர் அடித்தளத்தைத் தயாரிப்பதற்கான வாய்ப்பினை ஏகாதிபத்தியத்திற்கு வழங்கியது. அது இல்லாமல் ஏகாதிபத்தியம் ஒரு உலக அமைப்பு என்ற முறையில் உயிர் பிழைப்பது சாத்தியமாகியிராது. இங்கு அமெரிக்கா தீர்க்கமான பாத்திரத்தை வகித்தது. 1945-ன் பின்னர் அதன் மிகப்பெரும் தொழிற்துறை சக்தியையும் பரந்த அளவிலான பொருளாதார கையிருப்புக்களையும் அடிப்படையாகக் கொண்டு மேலாதிக்கப் பாத்திரத்தினை வகிக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு இருந்த வல்லமையானது, முதலாளித்துவ அரசுகளுக்கு இடையிலான சமநிலையைப் பேணும் தீர்க்கமான அரசியல் பொருளாதார நெம்புகோலை வழங்கியது. இது முதலாம் உலக யுத்தத்தின் முடிவில் உலக முதலாளி வர்க்கம் இட்டு நிரப்ப முடியாது நழுவிப்போனதாக இருந்தது. இரண்டு உலக யுத்தங்களுக்கு இட்டுச் சென்ற ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான கசப்பான போட்டியானது, இறுதியில் உலக ஏகாதிபத்தியத்தின் விவகாரங்களை நிர்வகிக்கும் சர்ச்சைக்கிடமற்ற நடுவராக அமெரிக்காவை தோன்றச் செய்தது. இது மார்ஷல் திட்டம், நேட்டோ மற்றும் அதனுடன் தொடர்புடைய ராணுவ உடன்படிக்கைகள், ஐக்கிய நாடுகள் சபை, பன்னாட்டு நிதியம், உலக வங்கி, சுங்கவரி வர்த்தகம் பற்றிய பொது உடன்படிக்கை போன்ற அரசியல் பொருளாதார நிறுவனங்களை ஏற்படுத்தியது. இவை போருக்குப் பிந்தைய உலக முதலாளித்துவம் உயிர் பிழைக்கவும், விரிவடைவதற்குமான அடித்தளத்தை வழங்கின.

போருக்குப் பிந்தைய ஒழுங்குமுறையின் நெருக்கடி

19. அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கத்தினை சவால் செய்யக்கூடிய வேறு ஒரு முதலாளித்துவ அரசோ அல்லது முதலாளித்துவ அரசுகளின் கூட்டோ இல்லாதிருந்தாலும், சோவியத் யூனியனுடன் மோதிக்கொள்ளும் நிலையில் சர்வதேச முதலாளித்துவம் அமெரிக்க இராணுவ பலத்தில் தங்கியிருந்ததாலும், போருக்குப் பிந்திய தீர்வுகளின் அடிப்படையில் உலக முதலாளித்துவம் அதன் சமநிலையைப் பராமரித்துக்கொள்ள முடிந்தது. எவ்வாறெனினும் உலக வர்த்தகத்திற்கு புத்துயிரளிப்பதிலும் ஐரோப்பிய, ஜப்பானிய முதலாளித்துவத்தை திரும்பக்கட்டி எழுப்புவதிலும் அது கண்ட வெற்றிகளே, உலக அமைப்பின் உறுதிப்பாடு தங்கியிருந்த சமநிலையைக் கீழறுத்தது. அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கத்தில் ஏற்பட்ட படிப்படியான வீழ்ச்சி 1950களின் கடைப்பகுதியில் செலாவணி, வர்த்தகப் பற்றாக்குறைகளின் அதிகரிப்பாக பதிவாகியது. 1971-ல் அமெரிக்கா, போருக்குப் பிந்தைய பொருளாதார முறையின் இணைப்பு ஆணியாக விளங்கிய டாலர் - தங்க மாற்றீடு முறையை கைவிடும்படி நெருக்கப்பட்டது, ஒன்றன்பின் ஒன்றாக தொழில் துறையில் அமெரிக்க மேலாதிக்கம் தாக்குதலுக்கு ஆளாகியது. 1979களிலும் 1980களிலும் அமெரிக்காவின் வருடாந்தர வர்த்தகப் பற்றாக்குறை - குறிப்பாக ஜப்பான் தொடர்பான அதன் வர்த்தகப் பற்றாக்குறை கோணல்மானலாக வடிவமெடுக்கத் தொடங்கியது.

முதலாம் உலக யுத்தத்துக்குப்பின் 1985-ல் முதன் முறையாக அமெரிக்கா ஒரு கடனாளி நாடாக ஆகியது. அமெரிக்காவின் உலக அந்தஸ்தில் ஏற்பட்ட வீழ்ச்சியானது, பிந்தைய சமநிலையின் தாக்குப்பிடிக்கும் தன்மையை தவிர்க்க முடியாத வகையில் பிரச்சனைக்குள்ளாக்கியது. மோசமடைந்து வந்த வர்த்தகத் தகராறுகளும் பகைமையுள்ள பிராந்தியக் கூட்டுக்களுக்கிடையே (வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா) உலகச்சந்தை பங்கீடு செய்யப்பட்டமையும், இரண்டாம் உலக யுத்தத்துக்கு முந்தைய வருடங்களின் வர்த்தக யுத்தத்தின் பண்பினை ஒத்திருக்கின்றன.

20. மேலும் விஞ்ஞானத்திலும் தொழில் நுட்பத்திலும் ஏற்பட்ட அபிவிருத்திகள் உலக முதலாளித்துவத்தின் ஸ்திரமின்மைக்கு தீர்க்கமான மூலகமாயின. பொருளாதார சமபல நிலையின் மாற்றங்கள் முதலாளித்துவ அரசுகளுக்கிடையேயான மோதலை உக்கிரமாக்குவதோடு மேலும் அவற்றை தள்ளிவிடுகின்றன. உற்பத்திச் சாதனங்களிலும் அவற்றின் செயல்முறைகளிலும், வரைவு, திட்டமிடல், போக்குவரத்து, செய்தித் தொடர்பு ஆகியவற்றில் 'நுண் சில்லுகள்' (மைக்ரோசிப்) புரட்சியானது, உலகப் பொருளாதாரத்தினை முன்னொரு போதும் இல்லாத முறையில் ஒன்றிணைத்துள்ளது. பொருளாதார நிலைப்பாட்டில் இருந்து பார்ப்போமாயின் நவீன டிரான்ஸ் நாஷனல் கூட்டுத்தாபனமானது, தேசிய அரசின் பழையதும் அற்பமானதுமான திட்ட அளவுகோலைத் தாண்டி வளர்ந்துவிட்டன. இதனுடைய இயக்குநர்கள் உலக உற்பத்தி, உலகச்சந்தை, உலகநிதி, உலக வளங்கள் என்ற அடிப்படையில் சிந்தித்துச் செயற்படுமாறு நெருக்கப்பட்டிருக்கிறார்கள். உள்நாட்டுச் சந்தைக்கும் உலகச் சந்தைக்கும் இடையேயான பழைய வேறுபாடுகள் இத்தொடரில் இருந்து, மறைந்து வருகின்றன. நவீன 'டிரான்ஸ் நாஷனல்' கூட்டுத்தாபனங்கள் அதன் சொந்த உள்நாட்டு தளத்தின் புவியியல் இருப்பிடத்தைப் பாராமல், உலகச் சந்தையில் மேலாதிக்கம் செய்வதற்கான வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால் தேசிய அரசு என்ற வகையில் அதன் புறநிலைப் பொருளாதார முக்கியத்துவத்தினை அது இழந்து கொண்டு வருகையிலும், போட்டி தேசிய முதலாளித்துவக் கும்பல்களின் அரசியல் - இராணுவ கருவி என்ற வகையில், உலக மேலாளுமைக்கான போராட்டம் பேரளவில் வளர்ச்சி காண்கின்றது. இந்த உண்மையானது, ஒரு புதிய உலகக் கிளர்ச்சிக்காக முடுக்கி விடப்பட்டுள்ள தயாரிப்புகளில் நன்கு பலம் வாய்ந்த முறையில் வெளிப்பாடாகின்றது.

ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான குரோதங்களின் வளர்ச்சி

21. முதலாளித்துவத்தின் பிரமாண்டமான உலகளாவிய விரிவாக்கத்திற்கு அரசியல் அடித்தளத்தை வழங்கிய ஏகாதிபத்தியத்தின் போருக்குப் பிந்தைய சமநிலை உடைந்து நொருங்கி உள்ளது. பழைய சமநிலையைக் கொண்டிருந்த சகல இணைப்புப் பகுதிகளுக்கும் இடையிலான உறவுகள் மாற்றம் செய்யப்பட்டுவிட்டதால் இதனைச் சமாதான வழியில் திரும்பக் கொணர முடியாது. இது முதலாளித்துவ அரசுகளின் தனிப்பட்ட தலைவர்களின் அகநிலை விருப்பங்கள் பற்றிய பிரச்சனை அல்ல, மாறாக அவர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பொருளாதார சமூக முரண்பாடுகளின் புறநிலை விளைவுகளாகும்.

22. உலக ஏகாதிபத்தியத்தின் ஸ்திரமின்மைக்கு மத்தியில் அமெரிக்காவின் நெருக்கடி உள்ளது. முதலாளித்துவத்தின் கீழ் எதை எல்லாம் ஈட்டிக் கொள்ள முடியும் என்பதற்கு சோவியத் அதிகாரத்துவம் அமெரிக்காவை புகழ்ந்தேற்றிக் கொண்டிருக்கும்போதே, இடம் பெறும் வரலாற்றின் விசித்திரமான திருவிளையாடல்களுள் ஒன்றாக அது இருக்கிறது. "சுதந்திர நிறுவனம்" முறையின் அனைத்து நிறுவனங்களையும் அழுகச் செய்யும் ஒரு சமூக நெருக்கடியினால் அமெரிக்கா பீடிக்கப்பட்டுள்ளது. 16 ஆண்டுகளுக்குள் மூன்றாவது பிரமாண்டமான பொருளாதாரப் பின்னடைவானது, 1980களில் பேரளவிலான கடன்களின் அடிப்படையில் விஸ்தரிக்கப்பட்ட எண்ணற்ற வங்கிகளையும் கூட்டுத்தாபனங்களையும் சரித்து வீழ்த்த அச்சுறுத்திக் கொண்டுள்ளது. பழைய சீர்திருத்தவாத கைமருந்துகளான புதிய கொடுக்கல் வாங்கல்கள், புதிய எல்லைகள், மாபெரும் சமுதாயம் ஆகியன எல்லாம் மிகக் கடந்த காலத்துக்கு உரியனவாகிவிட்டன. எந்த ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சமூகச் சட்டமும் இருபதாண்டுகளுக்கு மேலாக காங்கிரசில் இயற்றப்படவில்லை. பழைய சமூக வேலைத்திட்டங்களில் எஞ்சிக் கிடந்தவற்றை பிரமாண்டமான வரவு-செலவுத்திட்ட வெட்டுக்கள் அழித்துவிட்டன: குற்றங்கள் பற்றிய புள்ளி விபரங்கள் சமூக உறவுகளின் உயிராபத்தான அறிகுறிகளை நன்கு எடுத்துக் காட்டுகின்றன. விரைந்து வளரும் வேலையின்மை, வேலையில் இன்னும் உள்ளவர்களின் சம்பள வீழ்ச்சி, கல்வி, வீட்டு வசதி, மருத்துவ பராமரிப்பு போன்றவற்றின் நிலைமையும் பேரழிவுக்கு ஒன்றும் குறைந்ததல்ல. மக்கட் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் நடைமுறையில் கல்வி அற்றவர்களாக உள்ளனர். வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் கூட சமூக நெருக்கடியின் தாக்குதலினால் அழிக்கப்பட்ட வாழ்க்கைகளின் 'பயங்கரக் கதைகளை': வீடற்ற மக்கள் காட்போட் பெட்டிக்குள் முடங்கிக் கிடத்தல், மருத்துவ காப்புறுதி இல்லை என்பதற்காக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டமை, வேலை அற்ற தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் தற்கொலை போன்றவற்றை-- தினசரி அறிவிக்காமல் இருக்க முடியாதுள்ளது. அமெரிக்காவின் அரசியல் தலைவர்கள் அதன் சமூக அமைப்புக்களது சீரழிவினையும், மக்கள் தொகையின் பரந்த அளவிலான தட்டினரின் வறுமையையும் கட்டுப்பாட்டுக்குள் கொணர எதுவும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு நீண்ட காலத்துக்கு முன்பே வந்து விட்டனர் என்று, நன்கு பிரபலமான உண்மையை சாதாரணமாக அறிவிப்பதுபோல் ஒரு முன்னணி முதலாளித்துவப் பத்திரிகையின் நிருபர் குறிப்பிட்டிருந்தார். சமூக உறுதிப்பாட்டினைப் பேணுவதற்கு அமெரிக்க முதலாளி வர்க்கம் போலீசாரிலும் தொழிலாளர் இயக்கத்தில் உள்ள அதன் ஏஜெண்டுகளின் அளவற்ற துரோகத்திலும் தங்கியிருக்கும்படி தள்ளப்பட்டுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான போராட்டத்தின் ஒவ்வொரு அடையாளத்தையும் நசுக்கி ஒடுக்குவதே அவர்களின் சமூக செயல்பாடாகும்.

23. மோசமடைந்து வரும் சமூக நெருக்கடியின், அதில் கருக்கொண்டிருக்கும் ஆழமான புரட்சிகர விளைபயன்களின் பின்னணியில் உலக ஆளுமையில் தனது அந்தஸ்தினைப் புதுப்பிக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் தள்ளப்பட்டுள்ளதானது, உலக அரசியலில் வெடித்துச் சிதறும் தனியொரு போக்கைக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் சர்வதேசக் கொள்கையானது, ஐரோப்பிய, ஜப்பானிய போட்டியாளர்களின் செலவில் தனது பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துக்கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ஓர் ஆண்டுக்கு சற்றுக்கூடிய காலத்துக்குள் புஷ் நிர்வாகம் இரண்டு தடவை - முதலில் பனாமாவுக்கு எதிராகவும் பின்னர் ஈராக்குக்கு எதிராகவும் யுத்தத்துக்குச் சென்றுள்ளது. இறுதி ஆய்வில் பார்க்கையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிகரித்த அசட்டுத் துணிச்சலும் போர் வெறியும், இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தனது பொருளாதார வீழ்ச்சியைச் சீர்செய்யவும் பழைய நிலைக்கு கொண்டு வரவும் முயற்சிப்பதை பிரதிநிதித்துவம் செய்கிறது. இந்த இராணுவ பலத்தில் மட்டுமே அமெரிக்கா கேள்விக்கிடமில்லாத வகையில் ஆதிக்கத்தினை இன்னமும் பிரயோகிக்கின்றது. குவைத்தின் "விடுதலையை" காட்டிலும் அமெரிக்காவிற்குப் பெரிதும் முக்கியமானது, அமெரிக்க அழிக்கும் தன்மையை அனைத்துலகுக்கும் காட்ட ஒரு சந்தர்ப்பம் வழங்குவதே ஆகும். யுத்தத்தின் போது புஷ், பாரசீக வளைகுடா எண்ணெயில் அமெரிக்காவின் முக்கிய வர்த்தகப் போட்டியாளர்கள் தங்கி உள்ளதைப் பகிரங்கமாக சுட்டிக் காட்டியதோடு, யுத்தம் அமெரிக்காவின் "தன்வயமாக்கலை" கூட்டி, "அமைதியான வர்த்தக உறவுகளுக்கு இட்டுச்செல்லும்" என சிபாரிசு செய்தார். உண்மையில் ஐரோப்பியர்கள் மற்றும் ஜப்பானியர்களிடமிருந்து அதிக சலுகைகளைப் பிடுங்கிக்கொள்ள இராணுவ பலத்தைப் பயன்படுத்த முடியும் என்ற கருத்து அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பரந்த பிரிவினரிடையே செல்வாக்குப் பெற்றுள்ளது. யுத்தத்தின் முடிவில் வோல்ஸ்ட்ரீட் பத்திரிகை "பலாத்காரம் கொள்கையின் ஒரு நியாயமான ஆயுதம், அது செயற்படுகின்றது" என பிரகடனம் செய்தது. மேல் அதிகாரத்தில் உள்ளவருக்கே வந்த செய்தி: "அமெரிக்காவினால் தலைமை வகிக்க முடியும், சந்தோஷக் கணைப்பை நிறுத்து, மேலும் துணிவாக சிந்தி, இப்பொழுதே தொடங்கு" என்றும் குறிப்பிட்டது.

24. புஷ்ஷின் பகட்டான "புதிய உலக ஒழுங்குமுறை" பற்றிய வாயளப்புகள் இருந்தபோதிலும், அமெரிக்கா உலக முதலாளித்துவத்தின் விவகாரங்களில் தனது ஆளுமை அந்தஸ்தினை மீண்டும் நிலைநாட்டுவதற்கு தேவையான சட்ட ரீதியான மூலவளங்கள் இல்லாதிருக்கிறது. யுத்தத்தின் செலவினங்களை நிதியீட்டம் செய்ய தனது கூட்டுக்களை பணத்துக்காக ஆட்டிப் படைத்தமையானது, அமெரிக்காவின் ராணுவப் பகட்டுகளுக்கும் அதன் நிதி வளங்களுக்கும் இடையேயான சமத்துவமின்மையை உலகின் கவனத்துக்கும் கொண்டு வந்தது. மேலும் நவீன தொழில் நுட்பத்திற்கு அடிப்படையான மேலாதார பண்டமான-செமிகண்டக்டருக்கான உலகச் சந்தையில் ஜப்பான் கொண்டிருக்கும் முன்னணி அந்தஸ்தினை திரும்பக் கைப்பற்றுவதைவிட, பாதுகாப்பற்ற பாக்தாத்தின்மேல் குண்டு வீசுவது அமெரிக்காவிற்கு சுலபமானது. ஏகாதிபத்திய அரசுகளுக்கிடையேயான உறவுகளில் ஒரு புதிய ஒழுங்கினை உண்டு பண்ணுவதற்கு மாறாக யுத்தம் பழைய மரணத்தினை மேலும் நிரூபித்துள்ளது. அமெரிக்கப் பொருளாதாரப் பலவீனங்கள் வெளிப்படையாகியதும் ஐரோப்பிய ஜப்பானிய முதலாளி வர்க்கங்கள் தமது சொந்த நலன்களை மிக மூர்க்கமாக வலியுறுத்துகின்றன. மத்திய கிழக்கில் தமது சொந்த மூலோபாய நலன்களைக் காக்கும் பொருட்டு குர்துகளின் நிலைமையை ஐரோப்பிய முதலாளி வர்க்கம் வெற்றிகரமாக சுரண்டிக்கொள்கின்றது என்பதை புஷ் நிர்வாகம் உணர்ந்து கொண்டதும், "பாலைவனப் புயலின்" வெற்றியினைத் தொடர்ந்து அமெரிக்க முதலாளி வர்க்கத்தின் வெற்றிக் கூச்சல்கள் திடீர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன. பாரசீக வளைகுடாவிலும் ஈராக்கின் தெற்கு எல்லையிலும் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகளை எதிர்கொள்வது போன்று ஐரோப்பியர்கள் தமது படைகளை வடஈராக்கிலும் நகர்த்தத் தொடங்கினர். ஐரோப்பிய ஜப்பானிய ஏகாதிபத்தியவாதிகள் அமெரிக்காவின் கைகளில் தமது தலைவிதியை விட்டுவைக்க எண்ணவில்லை, யுத்தத்தின் பின்னர் ஐரோப்பியர்கள், அமெரிக்கா இன்னமும் முன்னணிப் பாத்திரம் வகிக்கும் "நேட்டோ" அமைப்பில் இருந்து சுதந்திரமாக, தமது சொந்த "அதிரப்படைகளை" நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜேர்மன் ஆளும் வர்க்கம், 21-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அடைந்த ராணுவத் தோல்வியால் நிர்ணயம் செய்யப்படுவதை அங்கீகரிக்க முடியாது என்பதைத் தெளிவுப்படுத்தியது. குர்துகளுக்கு மனிதாபிமான உதவி வழங்கும் சாக்கில் ஜேர்மன் ராணுவம், ஹிட்லரின் வேர்மட் தோல்யின் பின்னர் முதல் தடவையாக ஐரோப்பாவுக்கு வெளியே தனது முதல் நடவடிக்கையை ஆரம்பித்தது. நோட்டோவுடன் ஜேர்மன் செயலதிபரான மான்பிரட் வோர்னர், பழைய பிஸ்மார்க்கின் "இரத்தமும் இரும்பும்" பேச்சினை நினைவூட்டி, "வாள் இல்லாமல் இராஜதந்திரம் மலடாகிப் போன சமயங்களும் உண்டு" எனப் பிரகடனம் செய்தார். அதே சமயம் ஜப்பானிய அரசாங்கம் இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்னர் முதன் முதலாக தனது படைகளை சொந்த எல்லைகளுக்கு அப்பால் நிறுத்தத் தொடங்கியது.

25. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவினைத் தொடர்ந்து சர்வதேச உறவுகளில் அந்த அளவுக்கு ஸ்திரத்தன்மை நிலவி வரவில்லை. உள்நாட்டு யுத்தத்தின்போது சர்வதேச ராஜதந்திரம் பெருக்கெடுத்த முன்கணித்த வழிகளை சம்பவங்கள் தாண்டிச்சென்றன. பழைய கூட்டுக்கள் உடைந்து செல்கின்றன: புதியவை இன்னமும் உருவாகிக்கொண்டு இருக்கின்றன. உலக மேலாளுமைக்கான சக்திவாய்ந்த 'டிரான்ஸ் நேஷ்னல்' கூட்டுத்தாபனங்களின் போராட்டமானது, பயங்கர பதட்டத்தில் இருந்து சர்வதேச விவகாரங்களுக்கு செல்கின்றது. அமெரிக்காவிற்கும் ஜப்பானிற்கும் இடையேயான யுத்தத்தின் சாத்தியங்கள் ஏற்கனவே உலகப் பத்திரிகைகளின் பக்கங்களில் கலந்துரையாடப்பட்டு வருகின்றன. அமெரிக்க அரசியல்வாதிகளின் தேசிய வெறிதொனிக்கும் பேச்சுக்கள் அதிகரித்துள்ளதன் நோக்கம், ஜப்பான் தனது பிரமாண்டமான பொருளாதார பலத்தினையும் அமைப்புத் திறமைகளையும் பயன்படுத்தி அமெரிக்காவை எதிர்த்து நிற்கக்கூடிய ஒரு இராணுவ சக்தியை உண்டாக்கிக் கொள்வதற்கு முன்னதாகவே, அதனைத் தாக்குவதற்குச் சாதகமான ஒரு பொதுஜன அபிப்பிராயத்தைத் தயார் செய்வதற்காகவே ஆகும். ஆனால் இன்றைய சமயத்தில் இது எவ்வளவு தான் சாத்தியமாகத் தோன்றிடினும் பொருளாதார நலன்களின் மோதல்கள் முதலில் அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான ஒரு இராணுவ மோதலுக்கே இட்டுச் செல்லும் என முன்கணித்துக் கூறிவிட முடியாது. அமெரிக்காவிற்கும் பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய சக்திகளுக்கும் இடையேயான ஒரு யுத்தமும் கூடச் சாத்தியமானதுதான். மேலும் எதிர்கால யுத்தம் ஐரோப்பிய அரசுகளைத் தம்மிடையே பிளவுபடுத்தி, வேறுபட்ட தடை முகாம்களில் நிற்க வைக்கவும் கூடும் என்ற சாத்தியத்தினையும் நீக்கிவிட முடியாது. ஜேர்மனியின் ஒன்றிணைப்பானது, ஐரோப்பியக் கண்டத்தில் பழைய சமபல நிலையை அடியோடு மாற்றி விட்டது. "நண்பர்களதும்" "எதிரிகளதும்" கூட்டுக்கள் இன்னமும் எதிர்பாராத வடிவத்தை எடுக்க உள்ளன. ஆனால் ஏகாதிபத்தியத்தின் நலன்களின் மோதல் தவிர்க்க முடியாத விதத்தில் ஒரு யுத்தத்துக்கு இட்டுச் செல்கின்றது. இன்றுள்ள தொழில் நுட்பங்களால் விளைவுகள் பயங்கரமாக இருக்குமாதலால் ஏகாதிபத்தியவாதிகள் அத்தகைய தீவிரமான பெறுபேறுகளை தவிர்த்துக் கொள்வார்கள் என எண்ணுவது ஆபத்தான அரசியல் தவறாகும். பேரழிவு பற்றிய அச்சமானது சர்வதேச உறவுகளின் நடத்தையில் சில செல்வாக்கை செலுத்துகின்றது என்பது உண்மைதான். உலக ஏகாதிபத்தியத்தின் தலைவர்கள் புத்தி சுவாதீனமான வேளையில், மூன்றாம் உலக யுத்தம் மனித நாகரிகத்துக்கு சமாதி கட்டுவதாகும் என்பதை உண்மையில் உணரவே செய்வார்கள். ஆனால் வரலாற்று அனுபவம், முதலாளித்துவ அரசியல்வாதிகளின் அகநிலைப் பயமோ அல்லது ஒழுக்கவியல் மனசாட்சியோ அல்லாமல், ஏகாதிபத்தியத்தின் புறநிலை முரண்பாடுகளே பிரச்சினைகளை தீர்மானம் செய்கின்றன என்பதை நிரூபிக்கின்றது. இன்னொரு உலக யுத்தத்தினைத் தடுக்கக்கூடிய உலகில் உள்ள ஒரே சக்தி புரட்சிகரத் தொழிலாள வர்க்கமே ஆகும்.

கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகளின் வீழ்ச்சி

26. இறுதி ஆய்வுகளின்படி ஏகாதிபத்திய சமநிலையின் சரிவுக்குக் காரணமாக உள்ள அதே அடிப்படை முரண்பாடுகளே -உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய அரசு முறைக்கும் இடையேயான முரண்பாடுகளே- அனைத்து ஸ்ராலினிச ஆட்சிகளின் வெடித்துச் சரிதல்களுக்கும் காரணமாகும். கான்கிரீட் மதிற்சுவர்களோ அல்லது அரசினால் திணிக்கப்பட்ட ஊடுருவ முடியாத வர்த்தகத் தடைகளோ, உலகச் சந்தையின் அழுத்தங்களுக்கு எதிராக கிழக்கு ஐரோப்பிய பொருளாதாரங்களுக்கு தடுப்பு ஊசி ஏற்ற முடியவில்லை. ஸ்ராலினிச ஆட்சிகளின் சரிவுக்கான பொறுப்பினை மார்க்சிசத்தின்மேல் போடும் முயற்சிகள், பொருளாதார ரீதியில் பின்தங்கிய தேசிய அரசுகளில் சோசலிசத்தைக் கட்டி எழுப்புவதாக ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள் குறிப்பிட்ட முந்தைய கூற்றுக்களைப் போன்றே மோசடியானவை. புரட்சிகர வேலைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதினின்று விலகி, உலகச் சந்தையில் இருந்தும், உலக உழைப்புப் பிரிவினையிலிருந்தும் கிழக்கு ஐரோப்பிய அரசுகளை செயற்கையாகத் தனிமைப்படுத்துவதானது, பின்தங்கிய தேசியப் பொருளாதாரங்களுக்கும் உலக ஏகாதிபத்தியத்துக்கும் இடையே விநோதமான விதிமுறைகளை நிலைநாட்டும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் கையாலாகாத தனமான முயற்சியை பிரதிநிதித்துவம் செய்கிறது. ஸ்ராலினிச போக்கிரிகளின் குழப்பமூட்டும் வீண்பேச்சை நீக்கிவிட்டு, அவர்களின் தேசிய பொருளாதார வேலைத் திட்டத்தினை ஆராய்ந்தால், நிஜ சோசலிச நிர்மாணத்திற்கு உலகப் பொருளாதார அபிவிருத்தியை தொடக்கப் புள்ளியாகக் கொள்ளும் மார்க்சிசத்திற்கு முற்றிலும் எதிரான கொள்கையே அவர்களது கொள்கை என்பதைக் காட்டும். கிழக்கு ஐரோப்பிய ஆட்சிகளின் சரிவும், சோவியத் ருஷ்யாவில் ஸ்ராலினிச ஆட்சியின் வெடிப்பும், 1924-ல் இருந்து டிராட்ஸ்கிச இயக்கம், மார்க்சிச விரோத பிற்போக்கு வேலைத்திட்டமான "தனி ஒரு நாட்டில் சோசலிசத்துக்கு" எதிராகத்தொடுத்து வந்த சளைக்காத போராட்டத்தை மிகவும் சக்தி வாய்ந்த முறையில் ஊர்ஜிதப்படுத்துகிறது.

27. கிழக்கு ஐரோப்பிய, சோவியத்யூனியன் சம்பவங்கள் உலக முதலாளித்துவத்தின் சமநிலையின்மையை உக்கிரமாக்கியுள்ளன. கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகள் சரிந்ததைத் தொடர்ந்து, சர்வதேச முதலாளித்துவம் அளவிலா மகிழ்ச்சியடைந்தது. முதலாளித்துவம், தான் ஒரு பிரமாண்டமான வெற்றி கண்டுள்ளதாக நம்பியது. பொது நல மனோநிலையால் தூண்டப்பட்ட ஒரு கல்விமான் "வரலாற்றின் முடிவு வந்துவிட்டது" எனப் பிரகடனம் செய்தார். முதலாளித்துவ ஜனநாயகத்தின் வெற்றியை கற்பனை செய்வதைத் தவிர மனித இனத்துக்கு எதுவும் மிஞ்சவில்லை என்றார். இன்று மிகவும் எச்சரிக்கையான குரல்கள் கேட்கத் தொடங்கி உள்ளன, ஸ்ராலினிச ஆட்சிகள் விட்டுச் சென்றுள்ள அரசியல் பொருளாதார சீரழிவுகளை ஆய்வு செய்கையில் முதலாளித்துவ வர்க்கத்தில் உள்ள சிந்தனை மிகுந்த பிரிவினர், போருக்குப் பிந்தைய கிழக்கு ஐரோப்பா ஸ்ராலினிச ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது, உலக முதலாளித்துவத்தின் புனர்நிர்மாணத்திற்கு அது செய்துள்ள தீர்க்கமான பங்களிப்பினை நினைவுகூரத் தொடங்கியுள்ளனர், ஓட்டோமான். ஹப்ஸ்பேர்க் பேரரசுகளின் வீழ்ச்சியின் பின்னர் நீண்டகாலமாக அடக்கப்பட்டதும், தீர்வு காணப்படாததுமான தேசிய இன மோதல்கள் கிழக்கு ஐரோப்பாவையும் பால்கனையும் பற்றிப் படர்ந்துள்ளன. இவை சர்வதேச அரசியல் சூழ்நிலைகளில் பழைய, இன்னமும் நச்சுத்தன்மை கொண்ட விஷத்தினை கக்கிக்கொண்டிருக்கின்றன.

28. பால்கன் பிராந்தியத்தில் இருந்து கிடைக்கும் சமகாலச் செய்திகள் -1930-ல் அல்லது 1910-ல் எழுதப்பட்டவை போன்று இருக்கின்றன. கொசோவாவின் தலைவிதியைப் பற்றிய போராட்டங்கள், சேர்பிய, குரோஷிய, சுலோவினிய, பொஸ்னியன் முஸ்லீம்களுக்கு இடையேயான மோதல்கள் பற்றியும், மசிடோனியரின் தேசிய அடையாளம் பற்றிய வரைவிலக்கணம் தொடர்பான தகராறுகள் பற்றிய அறிக்கைகளாலும் சர்வதேசப் பத்திரிகைகள் நிரம்பி வழிகின்றன. எல்லைத் தகராறுகள், தேசிய அரசுகளின் தேசிய இனக்கலப்பு பற்றிய மோதல்கள் ஒவ்வொன்றும் சர்வதேச ரீதியில் கூறுகூறாக வெடித்துச் சிதறும் (ஸிணீனீவீயீவீநீணீtவீஷீஸீ) அரசியல் தொடர் விளைவுகளை இயக்கும் சாத்தியக்கூறை உள்ளடக்கிக் கொண்டிருக்கின்றன, செக்குகளுக்கும் ஸ்லோவேனியர்களுக்கும் இடையிலான தகராறுகளை ஜேர்மனி, ஹங்கேரி, போலந்து மற்றும் உக்ரேனிய தேசியப் பிரச்சினைகளில் இருந்தும்கூட பிரித்துவிட முடியாது. ஹங்கேரியிலும் ருமேனியாவிலும் உள்ள தேசிய சிறுபான்மையினரின் அதிருப்தியானது, அவ்விரு நாடுகளுக்கும் இடையே யுத்தம் வெடிக்கும் அச்சுறுத்தலைக் கொண்டிருக்கிறது. யூகோஸ்லாவியாவிற்குள் வெடித்துச் சிதறும் தகராறுகள் இன்றைய அல்பேனியா, ருமேனியா, கிரீஸ் எல்லைகளின் ஸ்திரத்தன்மையை கேள்விக்குரியதாக்கியுள்ளன. கிழக்கு ஐரோப்பா மற்றும் சோவியத் யூனியனுடைய தகராறுகள் பெரும் ஏகாதிபத்திய சக்திகளின் சதிகளில் தவிர்க்க முடியாத வகையில் சிக்க வைத்துவிடும், உள்ளூர்ப் போட்டிகள், பல்வேறு தேசியக் குழுக்களின் ஆரம்ப எதிர்பார்ப்புக்களைப் பொருட்படுத்தாமல், அப்பிராந்தியத்தில் ஏகாதிபத்தியவாதிகள் தமது சொந்த ஊடுருவலை விஸ்தரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

29. கிழக்கு ஐரோப்பிய நெருக்கடியானது, தேசிய அரசு முறையினை மற்றும் தேசிய சுயநிர்ணயத்துடன் தொடர்புடைய பிரச்சனைகளின் சர்வதேச நெருக்கடியை தெளிவான முறையில் எடுத்துக்காட்டியுள்ளது. முதலாளித்துவத்தின்கீழ் இவற்றுக்கு உண்மையான ஜனநாயகத் தீர்வினை காண முடியாது. முற்றிலும் ஓரின மக்கட்தொகையினரை உள்ளடக்கி வைக்க தேசிய எல்லைகளைத் திரும்பி வரையும் எண்ணமானது, ஒரு மோசடியான பிற்போக்கு கோமாளித்தனமாகும். ஆனால் முதலாளித்துவம் செல்வம், மூலவளங்களின் அநீதியான பங்கீடு பற்றிய மக்களின் கவனத்தைத் திருப்ப, அவர்களை தேசிய இனத்தகராறுகள் போன்ற முட்டுச் சந்துக்குள் தள்ளிவிடுகின்றது. தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தினைத் தடுக்கவும் வர்க்கப் போராட்டத்தின் வேகமான அபிவிருத்தியைத் தடுக்கவும், ஆளும் வர்க்கங்கள் ஏதோ ஒரு வகையான இனவாதத்தின் வீரர்களாக சேவை செய்ய ஆர்வம் காட்டும் குட்டி முதலாளித்துவ வாய்வீச்சுக்காரர்களை அமர்த்துகின்றது. அத்தகைய பிரச்சாரத்தின் வெற்றியானது, தேசியவாதத்தின் புத்திஜீவி மற்றும் ஒழுக்கநெறிப் பலத்தின் காரணமாக அமையவில்லை; மாறாக முதலாளித்துவ முறையின் நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கான வழியைக்காட்டாத, தொழிலாள வர்க்கத்தின் பாரம்பரிய இயக்கங்களின் அடிபணிவினால் உண்டான அரசியல் இடைவெளியினாலேயே அமைகின்றது.

30. நான்காம் அகிலமானது, தேசிய சுயநிர்ணயத்துக்கான கோரிக்கை எங்கெல்லாம் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தைத் தூக்கி வீசவோ அல்லது எந்த ஒரு தேசிய இனக்குழுவின் ஜனநாயக உரிமைகள் ஒடுக்கப்படுவதை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவோ முற்றிலும் நியாயமானதும் முற்போக்கு விருப்பத்தினை வெளிக்காட்டுகிறதோ அங்கெல்லாம் அதற்கு உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் ஆதரவளிக்கின்றது. ஆனால் நான்காம் அகிலம், உலக சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தில் அனைத்து தேசிய இனங்களையும் சார்ந்த தொழிலாள வர்க்கத்தினை ஐக்கியப்படுத்துவதன் மூலம் தனது ஜனநாயக வேலைத் திட்டத்தின் இந்த முக்கிய அம்சத்தினை நிறைவேற்ற முன் மொழிகிறது. இது தொழிலாள வர்க்கம். முதலாளித்துவ தேசியவாதத்தின் பிற்போக்கு வாய் வீச்சுக்காரர்களை ஒதுக்கித் தள்ளுவதையும், சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தை சர்வதேச வர்க்க ஐக்கியத்தின் உலகளாவிய செய்தியுடன் முன்னெடுப்பதையும் குறிக்கிறது. இந்த வழியில் மட்டுமே தேசிய சுயநிர்ணயமானது, மனித இனத்தின் பொருளாதார, கலாச்சார அபிவிருத்தியில் எல்லா மக்களையும் சமாதான முறையில் ஐக்கியப்படுத்தும் ஒரு கருவியாக முடியும், 57 ஆண்டுகளுக்கு முன்னர் லியோன் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டது போல்: "தேசியப் பிரச்சினை எங்கும் சமூகப் பிரச்சினையுடன் இணைந்துகொள்கிறது. உலகத் தொழிலாள வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே பூகோளத்தின் அனைத்து தேசிய இனங்களுக்குமான உண்மையானதும் உறுதியானதுமான சுதந்திரத்தை உத்தரவாதம் செய்ய முடியும்".

பின்தங்கிய நாடுகளில் பாட்டாளி வர்க்கமும் காலனித்துவத்துக்கு எதிரான போராட்டமும்

31. மிதவாத சீர்திருத்தவாதிகளையும் போலி சோசலிச சந்தர்ப்பவாதிகளையும் பொறுத்தமட்டில், யுத்தத்தின் பின்னர் ஐரோப்பிய சக்திகள் தமது பழைய காலனி ஆதிக்கத்திலிருந்து பின்வாங்கியமையும், குடியேற்ற நாடுகளுக்கு அரசியல் சுதந்திரம் வழங்கியமையும், முதலாளித்துவத்தின் தன்மையில் சாதகமானதும் அடிப்படையானதுமான மாற்றத்தினைப் பிரதிநிதித்துவம் செய்தது, இது பொருளாதார ரீதியில் முன்னேறிய நாடுகளுக்கும் "முன்றாம் உலக" நாடுகளுக்கும் இடையில் அதிக மனிதாபிமான, ஜனநாயக உறவுகள் ஏற்படுவதை விரும்பி-காலாவதியாகிப்போன, செல்வாக்கிழந்துவிட்ட அரசியல் ஆதிக்கத்தை கைவிடுவதைக் குறிப்பதாகும் என்றனர். இந்த பழைய அர்த்தமற்ற திணிப்புக்கள் பற்றிய கருத்து- ஏகாதிபத்தியம் என்பது திட்டவட்டமான பொருளாதாரத் தோற்றப்பாட்டினை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அபிவிருத்தியின் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டம் என்பதற்கு பதிலாக, அது வெறுமனே ஒரு கொள்கைதான் என்பது- நீண்ட காலத்திற்கு முன்னரே லெனினால் விஞ்ஞான ரீதியில் மறுக்க முடியாத வகையில் அம்பலப்படுத்தப்பட்டது.

காலனிகளுக்கு பெயரளவிலான சுதந்திரத்தை வழங்கியமையானது, ஏகாதிபத்தியத்தின் தன்மையில் எந்த மாற்றத்தினையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. ஆனால் நிதிமூலதனம் இந்த ஒடுக்கப்பட்ட நாடுகளில் தனது ஆளுமையைப் பிரயோகித்த அரசியல் வடிவங்களில் மட்டுமே மாற்றத்தினை ஏற்படுத்தியது. ஆபிரிக்கா, மத்திய கிழக்கு ஆசியாவினை ஊடறுத்துக் சென்ற காலனித்துவத்திற்கெதிரான வெகுஜன இயக்கத்தின் எதிரே ஏகாதிபத்தியவாதிகள், காலனித்துவ முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதிகளுடன் ஒரு அரசியல் சமரசத்தினை செய்து கொள்ள தீர்மானித்தனர். தொழிலாள வர்க்கத்திற்கான அதிகார மாற்றத்தில் போய் முடியும் கட்டுப்படுத்த முடியாத புரட்சிகர எழுச்சியைவிட, ஏகாதிபத்தியத்தின் அத்தியாவசிய "ஒழுங்கான அதிகார மாற்றம்" விரும்பத்தக்கதாக விளங்கியது. இவ்வாறாக காற்றடிக்கும் திசைக்கு ஏற்றவாறு அவசியமான விதத்தில் ஒத்துப்போனது, போருக்குப் பிந்தைய உடன்படிக்கைகளின் முக்கியமான தந்திரோபாய அங்கமாகும். இதில்தான் புதிய ஏகாதிபத்திய சமநிலை தங்கி நின்றது.

32. பெயரளவிலான சுதந்திரம் பரந்த அளவிலான தொழிலாளர், விவசாயிகளுக்கு அவர்களின் சமூக நிலைமைகளில் முன்னேற்றத்தினைக் கொண்டு வரவில்லை. தேசிய முதலாளித்துவம், தமது நாடுகளை ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கவோ அல்லது ஜனநாயகப் புரட்சிகளுடன் வரலாற்று ரீதியில் இணைந்த எந்த ஒரு அடிப்படைக் கடமைகளையும் நிறைவேற்றவோ தகுதியற்றது என்பதை நிரூபித்தது. எவ்வாறெனினும் தேசிய முதலாளித்துவ வர்க்கம், குளிர் யுத்தத்தால் (Cold War) வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, வெகு ஜனங்களிடையே தமது செல்வாக்கை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, தனது "ஏகாதிபத்திய எதிர்ப்பு" நற்சான்றுகளைப் பற்றிப் பிதற்றிக் கொண்டது. சோவியத் அதிகாரத்துவத்தின் ஆதரவினை வளர்த்துக்கொண்டதன் மூலம் தேசிய முதலாளி வர்க்கம், சிறப்பாக மத்திய கிழக்கில் ஏகாதிபத்தியத்திடமிருந்து சாதாரணமாக பெற்றுக்கொள்ளக்கூடியதைக் காட்டிலும் அதிக உதவியைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. வியட்னாமில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை தொடர்ந்து அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் ஆளும் வட்டாரங்களில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, தேசிய முதலாளித்துவ வர்க்கத்திற்கு மூச்செடுக்கும் மேலதிக வாய்ப்பினை வழங்கியது. எவ்வாறெனினும் இந்நிலைமையானது, விசித்திரமானதும் இயற்கையாகவே ஆட்டம் கண்டு கொண்டிருந்ததுமான அனைத்துலக இணைப்பினை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் நின்று பிடிக்க முடியவில்லை. ஸ்ராலினிச, சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களின் முடிவில்லாத காட்டிக் கொடுப்புக்களின் தாக்கமானது, சர்வதேச தொழிலாளர் இயக்கத்தினை பெருமளவில் பலவீனமடையச் செய்தது இவை ஏகாதிபத்தியம் ஒடுக்கப்பட்ட நாடுகள் மேலான அரசியல் அழுத்தத்தினை உக்கிரமாக்குவதற்கான வாய்ப்பினை வழங்கியது. வியட்னாம் தோல்வியின் படிப்பினைகள் ஏகாதிபத்தியவாதிகளின் அனைத்து இராணுவ கல்வி நிறுவனங்களிலும் கவனமாக ஆராயப்பட்டன. மல்வினாஸ் தொடர்பாக ஆர்ஜெண்டினாவுக்கு எதிரான பிரிட்டனின் யுத்தம் (1982). லெபனான் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பும் பெய்ரூட்டிலிருந்து பி.எல்.ஒ, வெளியேற்றப்பட்டமையும் (1982), அமெரிக்கா 1983லிருந்து ஈடுபட்ட வரிசைக் கிரமமான இராணுவ நடவடிக்கைகள் -லெபனானில் தலையீடு, கிரெனடா ஆக்கிரமிப்பு, லிபியா மீதான குண்டு வீச்சு, பனாமா மீதான ஆக்கிரமிப்பு இறுதியாக ஈராக்குக்கு எதிரான ஆக்கிரமிப்பு, - எல்லாமே மொத்தத்தில் ஏகாதிபத்தியம் ஒடுக்கப்படும் நாடுகளில் தனது நலன்களைக் காக்க பாரம்பரிய வழி முறைகளுக்கு திரும்புவதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. சோவியத் அதிகாரத்துவம் தனது நீண்டகால "வாடிக்கையாளர்களை" ஆபிரிக்காவிலும், மத்திய கிழக்கிலும், ஆசியாவிலும், இலத்தீன் அமெரிக்காவிலும் எரிச்சலுடன் கைகழுவி விட்டமையானது ஏகாதிபத்தியவாதிகள் கடைப்பிடித்த கட்டுப்பாடுகள், சமரசங்களுக்கான எல்லாக் காரணங்களையும் அகற்றிவிட்டது என்பதில் கேள்விக்கே இடமில்லை.

33. சர்வதேச சூழ்நிலையில் ஏற்படும் மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, தேசிய முதலாளி வர்க்க தலைவர்கள், தம்மைத் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க அனுமதிக்கும் வகையில் ஏகாதிபத்தியத்துடன் ஒரு உடன்பாட்டை செய்து கொள்ளும் ஆற்றொணா நிலையில் இருக்கிறார்கள். ஈராக்கிற்கு எதிரான தாக்குதலில் அராபிய ஆட்சியாளர்களின் பங்கேற்பு, தேசிய முதலாளி வர்க்கம் அரைக்காலனிய அடிபணிவு அந்தஸ்திற்கு ஏற்கனவே இணங்கிக்கொண்டு விட்டதைக் காட்டுகின்றது. "சுதந்திர" எகிப்தின் ஜனாதிபதி ஹாஸ்னி முபாரக்கைவிட, அமெரிக்காவில் பிறந்த காலனித்துவ நிர்வாகி ஒருவர் அதிக விசுவாசத்துடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்ய முடியாது. தேசிய முதலாளி வர்க்கத்தின் அரசியல் கெஞ்சலுக்கு, இராணுவத் தாக்குதல் பற்றிய அச்சம் ஒரு பகுதிக் காரணமே ஆகும். இது ஏகாதிபத்திய முதலீடுகளின் மீது சார்ந்திருக்கும் ஒடுக்கப்படும் நாடுகளின் பொருளாதார சார்பின் நேரடி வெளிப்பாடாகும். இந்தியாவின் நேரு, இந்தோனேசியாவின் சுகர்னோ, கானாவின் நிக்ரூமா, எகிப்தின் நாசர் போன்ற முதலாளித்துவ தேசியவாதிகளால், சுதந்திரத்தின் ஆரம்ப காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தேசிய தன்னிறைவு எனும் பாசாங்கு வேலைத்திட்டங்கள், நீண்ட காலத்திற்கு முன்பே திவாலாகிப்போய்விட்டன. தமது நாடுகளை சர்வதேச நிதி மூலதனத்தின் பிடியிலிருந்து விடுதலை செய்ய முயற்சிப்பதற்கு மாறாக தேசிய முதலாளி வர்க்கத்தினர், "சிறப்பு தொழில் வலயங்களை" நிறுவுவதற்காக கெஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள். இவற்றில் ஏகாதிபத்தியவாதிகள் பிராந்தியத்தின் இயற்கை மற்றும் மனிதவளங்களை தடையின்றி சுரண்ட அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

34. ஒடுக்கப்பட்ட நாடுகள் ஒவ்வொன்றின் கதையும் ஒரே மாதிரிதான் இலத்தின் அமெரிக்காவில் பழைய முதலாளித்துவ தேசிய இயக்கங்களான -மெக்சிக்கோவின் PRI, பெருவின் APRA,, ஆர்ஜெண்டினாவின் பெரோனிசம்- வோல்ஸ்ட்ரீட் வங்கிகளுக்கு மூலதனத்தை ஏற்றுமதி செய்வதற்காக மக்களை பட்டினி போட வைக்கும் பன்னாட்டு நிதியத்தின் நேரடி ஏஜெண்டுகளாக ஆகிவிட்டன. பெரோனிசத்தைப் பொறுத்தவரை, அதன் ஸ்தாபகர் முன்பொருமுறை முதலாளித்துவத்திற்கும் கம்யூனிசத்திற்கும் இடையிலான "மூன்றாவது வழி" கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றார், அதனுடைய தற்போதைய பிரதிநிதியான ஜனாதிபதி கார்லோஸ்மெனம், திவாலாகிப் போன ஆர்ஜென்டினாவின் மூலதனத்திற்காக குவைத்தில் சில ஒப்பந்தங்கள் பெறவும் அல்லது பன்னாட்டு நிதியத்தை சாதகமாக்கிக் கொள்வதற்கும் நம்பிக்கையைப் பெறும் பொருட்டும், பாரசீக வளைகுடாவிற்கு போர்க் கப்பல்களை அனுப்பி வைத்தார்.

35. இடதுசாரி முதலாளித்துவ தேசிய இயக்கங்கள் மத்தியில் சில ஆயுதப் போராட்டத்தை ஆதரிப்பன இவற்றுள் -பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் (பி.எல்.ஒ), நிகராகுவாவின் சாண்டினிஸ்டா மற்றும் சிறிலங்காவின் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய ஒவ்வொன்றும் கடந்த காலங்களில் ஒரே மாதிரியான சரணாகதிப் பாதையைத்தான் கண்டிருக்கின்றன. ஏகாதிபத்தியத்தால் திணிக்கப்பட்ட பிற்போக்கு தேசிய பிரிவினைகளை தழுவிக்கொண்டும், வாஷிங்டன் உருவாக்கும் ஏதாவதொரு "சமாதான" திட்டத்திற்கு ஆதரவு தரும்பொழுது, அவர்கள் அனைவருமே ஏகாதிபத்தியத்தினின்று சுதந்திரம் பெறுதல் மற்றும் தேசிய சுயநிர்ணய உரிமை பெறுதல் ஆகிய மிக அடிப்படையான கடமைகளை கைவிட்டுவிடுகின்றனர், முதலாளித்துவ தேசிய வாதத்தின் மற்றொரு வகை என அம்பலமாகியுள்ள பிடல் காஸ்ட்ரோவின் அரசும் இவர்களுடன் சேர்ந்து கொள்கிறது. வளைகுடாப் போருக்கான தயாரிப்பின்போது, ஆக்கிரமிப்புக்கான அமெரிக்க ஏகாதிபத்தியப் போரை சட்ட ரீதியாக்கும் முக்கியமான தீர்மானத்தின்போது, கியூபாவின் பிரதிநிதி திரும்பத்திரும்ப விலகியே இருந்தார். தமது சோவியத் ரட்சகரின் ஆதரவை இழந்துள்ள நிலையில், காஸ்ட்ரோ அரசு தனது தேசிய சோசலிச நடிப்புக்களை நிலை நிறுத்த முடியாது என்பதைக் கண்டுகொண்டு, கியூபாவை ஏகாதிபத்திய உலக சந்தையுடன் திரும்ப ஒன்றிணைக்க விரைந்து செல்கின்றது.

36. தொழிலாள வர்க்கம், தேசிய முதலாளி வர்க்கத்தின் எந்த ஒரு பிரிவினரின் அரசியல் ஆளுமையின் கீழிருக்கும் வரையில், ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிரான ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடியாது. இந்த விதி எகிப்திய தொழிலாளர்களுக்கு பிரயோகிக்கப்படுவதற்கு எந்த விதத்திலும் குறையாத வகையில் ஈராக் தொழிலாளர்களுக்குப் பிரயோகமாகின்றது. சதாம் குசேனுக்கும் ஹாஸ்னி முபாரக்கிற்கும் உள்ள வேறுபாடுகள், கொள்கை சார்ந்த பண்பைவிட தந்திரோபாயம் சம்பந்தப்பட்டதாகும். ஏகாதிபத்தியத் தாக்குதலில் இருந்து ஈராக்கைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கம் கடமைப்பட்டுள்ள அதே வேளையில், அது சதாம் குசேன் ஆட்சிக்கு அணுவளவும் அரசியல் ஆதரவை அளிக்க முடியாது: குசேன் குவைத்தினை ஆக்கிரமித்தது, ஏகாதிபத்தியத்திற்கு ஒரு தாக்குதல் கொடுப்பதற்காக அல்ல; ஏகாதிபத்தியத்துடனான ஈராக்கிய முதலாளித்துவத்தின் பேரம்பேசும் நிலையைப் பலப்படுத்துவதற்கே ஆகும். அதே விதத்திலேயே குசேன் யுத்தத்தில் ஈடுபட்டார். அந்தப் போர் அவரது ஆட்சியின் அரசியல் முன்னுரிமைகளை அம்பலப்படுத்தியது. அவரின் மிகவும் அனுபவம் வாய்ந்த படையினர், ஏகாதிபத்திய படைகளுக்கு எதிராக அல்லாமல் தொழிலாள வர்க்கத்திற்கும் தேசிய சிறுபான்மையினருக்கும் எதிராக ஈராக்கிற்குள் பயன்படுத்தப்படுவதற்காக பின்னணியிலும், சேமிப்பு நிலையிலும் வைக்கப்பட்டனர்.

37. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டம் தொழிலாள வர்க்கத்தினால் சர்வதேச புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும். நாட்டுக்கு நாடு சார்பாக எல்லைகளை மாற்றுவதன் மூலம் வெகு ஜனங்களின் சுதந்திரத்தினைத் தூக்கி வீசி, தேசிய அரசு முறையில் ஏகாதிபத்தியவாதிகளால் வரையப்பட்ட எல்லைகளை அழிக்க வேண்டும். அவை ஒடுக்கப்படும் நாடுகளின் பொருளாதார அபிவிருத்திக்கு முற்றிலும் தடைக்கல்லாக உள்ளன. பொருளாதார ரீதியிலான மூடத்தனமான இந்த ஒட்டு வேலைகளுக்குப் பதிலாக, நான்காம் அகிலம் அரைக்காலனித்துவ நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தை இலத்தீன் அமெரிக்க, ஆசிய, ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு ஐக்கிய சோசலிசக் குடியரசுகளை அமைக்கப் போராடுமாறு அழைக்கின்றது.

சோவியத் அதிகாரத்துவத்தினை தூக்கிவீசலும் அக்டோபர் வெற்றியின் நலன்களை காத்தலும்

38. பாரசீக வளைகுடாவில் சோவியத் அதிகாரத்துவம் வகித்த பாத்திரத்தின் கொலைகாரப் பரிமாணத்தை தெரிவிக்க "துரோகம்", "காட்டிக் கொடுப்பு" என்ற வார்த்தைகளே போதாதிருக்கின்றன. ஈராக்கிய மக்களுக்கு எதிராக ஏகாதிபத்தியம் இழைத்த அட்டூழியங்களுக்கு கொர்பச்சேவ் ஆட்சியே முழுப் பொறுப்பாகும். ஐக்கிய நாடுகள் சபையில் இது முதலில் ஈராக்கிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்கவும், பின்னர் இராணுவ பலத்தை பயன்படுத்தவும் அளித்த வாக்குகள் ஏகாதிபத்தியம் தனது தாக்குதலை தயார் செய்வதற்கு அவசியமான அரசியல் மூடுதிரையை வழங்கியது. ஈராக்கிற்கு எதிரான ஏகாதிபத்திய யுத்தத்தில் கிரெம்ளினின் ஒத்துழைப்பானது, ஸ்ராலினிசம் சோவியத் யூனியனிலும் அனைத்துலகிலும் அரை நூற்றாண்டுக்கு மேலாக வகித்த எதிர்ப்புரட்சிப் பாத்திரத்தின் வரலாற்று முடிவினைக் காட்டுகின்றது.

39. கொர்பச்சேவ் ஆட்சி உலக ஏகாதிபத்தியத்துடன் வெளிப்படையாகவும் வெட்கங்கெட்ட முறையிலும் கூட்டுச்சேர்ந்தமையானது, சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவத்தினைப் புணருத்தாரணம் செய்யும் சோவியத் அதிகாரத்துவத்தின் முயற்சியின் தர்க்க ரீதியான விளைவாகும். கடந்த காலத்தில், தனது சொந்த சடரீதியான (பொருளாயத) சலுகைகள் தேசியமயமாக்கப்பட்ட சொத்துறவுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தவரை, ஸ்ரானினிசம் அதனைக் காக்குமாறு தள்ளப்பட்டது. அது சோவியத் யூனியனை ஏகாதிபத்திய ஆத்திரமூட்டல்களிலிருந்தும், நேரடி இராணுவத் தாக்குதல்களில் இருந்தும் பேணிக்காக்க முயன்றது. எவ்வாறெனினும் ஏகாதிபத்தியத்தினை எதிர்க்க கிரெம்ளின் கையாண்ட விதிமுறைகள், லெனின் கடைப்பிடித்த புரட்சிகர சர்வதேசியத்துக்கு முற்றிலும் எதிரானதாகும். சோவியத் அதிகாரத்துவம் சோவியத் யூனியனின் அரசு எல்லைகளுக்குள் தனது சடரீதியான சலுகைமிக்க நலன்களைக் காப்பதை பற்றி மட்டுமே அக்கறை காட்டியது. ஏகாதிபத்தியத்துடன் ஒரு உடன்பாட்டுக்கு வரும் பொருட்டு சர்வதேச தொழிலாளர் இயக்கத்தை காட்டிக் கொடுக்கவும் அது ஒரு போதும் தயங்கியது கிடையாது, 1930களில் ஸ்பெயின் புரட்சி வேண்டுமென்றே நாசமாக்கப்பட்டமையும், ஹிட்லருடனான ஆக்கிரமிப்பு தவிர்ப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டமையும், கிரேக்க உள்நாட்டு யுத்தத்தின்போது கம்யூனிஸ்ட் கட்சியை கைவிட்டமையும் ஏகாதிபத்தியத்துடனான தனது சொந்த பிற்போக்கு சந்தர்ப்பவாத உறவுகளுக்காக கிரெம்ளின், சர்வதேச தொழிலாளர் போராட்டத்தினை கீழ்மைப்படுத்தியதற்கு மிகக் கேவலமான உதாரணங்களாகும். "மூன்றாம் உலக" அரசுகளுக்கு வரையறுக்கப்பட்ட இராணுவ நிதி உதவிகளை இது வழங்கியதுகூட, சோவியத்யூனியன் மீதான ஏகாதிபத்திய அழுத்தத்தினை திசை திருப்புவதற்காகத்தான்.

40. சோவியத் யூனியனில் முதலாளித்துவத்தினை மீளக்கொணரும் முயற்சியானது, தவிர்க்கமுடியாத வகையில் தொழிலாள வர்க்கத்திடமிருந்து பிரம்மாண்டமான எதிர்ப்பினைத் தோற்றுவிக்கும் என்பதை சோவியத் அதிகாரத்துவம் நன்கு அறியும். இதே காரணத்துக்காகத்தான் அது உலக ஏகாதிபத்தியத்துடன் மிகவும் நெருக்கமான கூட்டினை வேண்டி நிற்கிறது. எனவே, கிரெம்ளினின் வெளிநாட்டுக் கொள்கையின் மைய இலக்கு, சோவியத் யூனியன் மீதான ஏகாதிபத்திய அழுத்தத்தினை திசை திருப்புவதைவிட, உக்கிரமாக்குவதாகவே இருக்கிறது. எனவேதான் சோவியத் அதிகாரத்துவம் சோவியத் யூனியனின் தெற்கு எல்லையில் இருந்து சில நூறு மைல்களுக்கு அப்பால் லட்சக்கணக்கான ஏகாதிபத்திய படைகளைக் குவிப்பதை வரவேற்றுள்ளது. அமெரிக்க முதலாளித்துவத்தின் முன்னணி பத்திரிகையான டைம் தேசிய குடியரசுகளினுள் கடும்தேசிய இன மோதல் இடம்பெறுமானால், சோவியத் யூனியனுக்குள் அமெரிக்கா இராணுவ நடவடிக்கைக்கு திட்டமிட்டு வருவது பற்றி ஒரு விரிவான: அறிக்கையை வெளியிட்டது. கிரெம்ளின் இதுபற்றி ஒரு பகிரங்க எதிர்ப்பு அறிக்கையைக்கூட இதுவரை வெளியிடவில்லை.

41. கிரெம்ளினின் ரகசிய உடந்தையோடு ஏகாதிபத்தியம் சோவியத் யூனியனின் பரந்த பிராந்தியத்தினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் தனது உரிமையை, அதிகரித்த உறுதியோடு வலியுறுத்துகின்றது. சோவியத் யூனியனின் மூலப்பொருட்கள், பரந்தளவிலான உற்பத்தித்திறன், பிரம்மாண்டமான சந்தை என்பவற்றின் பொருளாதார முக்கியத்துவத்தினை ஏகாதிபத்தியவாதிகள் புறக்கணித்துவிட முடியாது சோவியத் யூனியனினதும் கிழக்கு ஐரோப்பாவினதும் இறுதி முடிவு ஏற்கனவே ஏகாதிபத்திய அரசுகளின் கணிப்பீடுகளிலும் போட்டிகளிலும் ஒரு முக்கிய இடத்தினைப் பிடித்துக்கொண்டுள்ளது. அதிகாரத்துவங்களின் உள்ளும், தேசிய குடியரசுகளுக்கு இடையிலுமான உள்ளார்ந்த மோதல்களில் ஏகாதிபத்தியவாதிகளின் போட்டி நலன்கள் மேலும் மேலும் வெளிப்படையாகவே உறுதிப்படுகின்றன. ஜேர்மனியர்கள் கொர்பச்சேவினூடாக செயற்பட்டு கிரெம்ளினில் அதிக செல்வாக்கை ஈட்டிக்கொண்டதைக்கண்டு பயந்த அமெரிக்கா, ரஷ்யக் குடியரசுகளதும் ஜெல்ட்சினதும் பரிந்துரையாளனாகத் தொடங்கியுள்ளது.

42. ஏகாதிபத்தியம் சோவியத் யூனியனைத் துண்டாடவும், முதலாளித்துவத்தினை மீளக்கொணரவும், தேசியக் குடியரசுகளை அப்பட்டமாகப் பயன்படுத்துகின்றது என்ற உண்மை, தேசியக் குழுக்களின் சுயநிர்ணயத்துக்கான உரிமையை செல்லுபடியற்றதாக்கிவிடாது. அதிகாரத்துவத்தினுடைய போலீஸ் அரசு ஆட்சியின் அடிப்படையில் சோவியத் ரஷ்யாவின் (USSR) "பிராந்திய ஒருமைப்பாட்டை" காப்பதன் மூலமும், தேசிய உணர்வினை கர்வத்துடன் ஒடுக்குவதன் மூலமும், சோவியத் யூனியன் சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்திற்கு சேவை செய்ய முடியாது. ஆனால் சுயநிர்ணயம் ஏகாதிபத்தியத்தின் ஆட்சிக்குட்பட்ட முதலாளித்துவத்தின் மீட்சிக்கும் சோவியத் யூனியனை மலட்டுத்தனமான அரச துண்டுகளாகப் பிரிவினை செய்வதற்குமான ஒரு பெரும் மூடுதிரையாக இல்லாதிருக்கவேண்டுமாயின், இப்போராட்டம் ஒரு சர்வதேச, சோசலிச, தொழிலாள வர்க்க வேலைத் திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படல் வேண்டும்.

43. சோவியத் யூனியன் உள்ளோ அல்லது அதன் துண்டாடலிருந்து எஞ்சிய பால்கன் துண்டுதுணுக்குகளிலோ முதலாளித்துவம் புனருத்தாரணம் செய்யப்படுவதானது, ரஷ்யன், உக்ரேனியன், ஜோர்ஜியன் மற்றும் சோவியத் யூனியனில் இன்று அடங்கியுள்ள அனைத்து தேசிய இனங்களினதும் வரலாற்றில் ஒரு துக்கரமான அத்தியாயத்தின் தொடக்கத்தினைக் குறிக்கும். போலந்தினதும், கிழக்கு ஜேர்மனியினதும் நிகழ்வுகள் ஏற்கனவே எடுத்துக்காட்டுவதுபோல், "சந்தைப் பொருளாதாரத்தின்" விளைவுகள் சோவியத் மக்களின் சமூக, கலாச்சார மட்டத்தில் ஒரு பயங்கர வீழ்ச்சியாக இருக்கும். எவ்வாறெனினும் சோவியத் அதிகாரத்துவத்தின் இந்த புனருத்தாரணக் கொள்கைக்கும், பணவெறிகொண்ட தரகு முதலாளிகளின் வர்க்கத் தோற்றத்திற்குமான பதிலீட்டினை (Alternative) இன்றைய பேரழிவுகளுக்கு களம் சமைத்த "தேசிய சோசலிஸ்டுகளின்" கொள்கைகளைப் புதுப்பிப்பதில் கண்டுவிட முடியாது. 1917 அக்டோபர் புரட்சியின் அடிப்படை வெற்றிகளை பாதுகாப்பதும் அவற்றிற்கு சோசலிசப் பாதையில் புத்துயிரூட்டுவதும் போல்ஷிவிக் கட்சியின் மகத்தான வருடங்களில் அதன் பணியை வழி நடத்த லெனினும் ட்ரொட்ஸ்கியும் கடைப்பிடித்த உலகப் புரட்சிகர வேலைத் திட்டத்திற்கு புத்துயிரூட்டுவதில்தான் தங்கி உள்ளது.

44. சோவியத் யூனியனின் இறுதி முடிவு இன்னமும் தீர்மானிக்கப்பட்டு விடவில்லை; உலகில் உள்ள வர்க்க நனவு கொண்ட ஒவ்வொரு தொழிலாளியினதும் பெரிதும் அக்கறைக்குரிய விஷயமாக அதன் எதிர்காலம் விளங்குகின்றது சோவியத் யூனியனில் முதலாளித்துவத்தை மீளக் கொணர்தலும் அதனை ஒரு அரைக்காலனி மட்டத்திற்கு இறக்குவதும், சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பயங்கரத் தோல்வியையே பிரதிநிதித்துவம் செய்யும். அதிகாரத்துவத்தின் முதலாளித்துவ மீட்சிக் கொள்கைகளுக்கு எதிரான சோவியத் தொழிலாள வர்க்கத்தின் போராட்டமும், ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்திற்கெதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டமும், ஒரே உலகப் போராட்டத்தின் இணைந்த பாகங்களாகும். அவற்றின் இன்றியமையாத ஐக்கியமானது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சோவியத் பகுதியின் வளர்ச்சியினூடாகத்தான், நனவானமுறையில் நிறைவேற்றப்பட வேண்டும்.

நான்காம் அகிலமும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும்

45. 50 ஆண்டுகளுக்கு முன்னர், இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பமான அன்றும், ஒரு ஸ்ராலினிச ஏஜெண்டின் கைகளால் தாம் கொலை செய்யப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர், லியோன் ட்ரொட்ஸ்கி எழுதியதாவது:

"நீண்டதொரு மரண ஓலத்தைத் தவிர முதலாளித்துவ உலகுக்கு வேறு வழியே கிடையாது. தசாப்தங்கள் இல்லாது போகினும் நீண்ட கால யுத்தம், எழுச்சிகள், குறுகிய யுத்த நிறுத்தம், புதிய யுத்தங்கள், புதிய எழுச்சிகளுக்கு தயார்செய்வது அவசியம், ஒரு இளம் புரட்சிக்கட்சி இந்த முன்னோக்கினை அடிப்படையாகக் கொண்டாக வேண்டும். அத்தகைய ஒரு கட்சி தன்னை பரீட்சித்துக் கொள்ளவும், அனுபவங்களைத் திரட்டவும், முதிர்ச்சி அடையவும், வரலாறு அதற்குப் போதிய வாய்ப்புக்களையும் சாத்தியங்களையும் வழங்கும். முன்னணிப்படையினர் எந்த அளவுக்கு மின் கடத்திபோன்று இருக்கிறார்களோ அந்த அளவுக்கு இரத்தம் தோய்ந்த கலகங்களை குறுகியதாக்கலாம். எமது பூகோளத்தின் அழிவுகளையும் குறைக்கலாம். ஆனால் பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமையை புரட்சிக் கட்சி கொடுக்காதிருக்கும் வரை, பெரும் வரலாற்றுப் பிரச்சினைகளை எவ்விதத்திலும் தீர்க்க முடியாது. வளர்ச்சி வேகமும், கால இடைவெளியும் முக்கியத்துவம் பெறுகின்றன; ஆனால் இது பொது வரலாற்று நோக்கினையோ, அல்லது எமது கொள்கையின் திசையையோ மாற்றிவிடாது. முடிவு மிகவும் எளிதான ஒன்றுதான்; பாட்டாளி வர்க்க முன்னணிப் படையை பத்து மடங்கு சக்தியுடன் கல்வி அறிவூட்டி, அணிதிரட்டும் வேலையை நடைமுறைப்படுத்துவது அவசியம். நான்காம் அகிலத்தின் பணி இதில்தான் தங்கி உள்ளது என்பது தெளிவு".

"ஏகாதிபத்திய யுத்தமும் பாட்டாளி வர்க்கப் புரட்சியும் பற்றிய நான்காம் அகிலத்தின் அரசியல் அறிக்கை" (-லியோன் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்கள் 1939-40).

46. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, உலகத் தொழிலாள வர்க்கத்தின் மிகவும் வர்க்கநனவு கொண்ட பிரதிநிதிகளை எதிர்வரும் நவம்பரில் பேர்லினில் கூடும்படியும், ஏகாதிபத்திய யுத்தத்துக்கும் காலனி ஆதிக்கத்துக்கும் எதிரான சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் பங்கு கொள்ளும்படியும், அழைப்புவிடுவதன் மூலம் புரட்சிகரத் தலைமை நெருக்கடியைத் தீர்ப்பதில் தீர்க்கமான பணியைத் தயார்செய்கின்றது. எமது இலக்கு, நான்காம் அகிலத்தின் முழு வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில், உலகத் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தினை உருவாக்கும் போராட்டம் அடிப்படையாகக் கொள்ளவேண்டிய கொள்கைகளை உறுதியாக நிலைநாட்டுவதே ஆகும்.

47. சர்வதேச தொழிலாளர் இயக்கம் அதன் மாபெரும் நெருக்கடியினூடாக சென்று கொண்டிருக்கிறது. இதில் விவாதத்திற்கு இடமில்லை. ஆனால் இந்த நெருக்கடியினுள், இப்போதிருக்கின்ற காரியாளர்களைக் கொண்ட நான்காம் அகிலத்தினை - லியோன் ட்ரொட்ஸ்கி எதிர்பார்த்த சோசலிசப் புரட்சியின் பரந்த உலகக் கட்சியாக உருமாற்றம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளடங்கி இருக்கிறது. ஸ்ராலினிச ஆட்சிகளின் வீழ்ச்சி மார்க்சிசத்தின் தோல்வியைப் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை, மாறாக அதனை மாபெரும் விதத்தில் ஊர்ஜிதம் செய்கின்றது. நான்காம் அகிலத்தின் ஸ்தாபக பத்திரத்தில் ட்ரொட்ஸ்கி தீர்க்கதரிசனமாகக் குறிப்பிட்ட, வரலாற்றின் விதிகள் அதிகாரத்துவத்தின் எந்திரங்களைவிட அதிக சக்தி வாய்ந்தவை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 1930களில் இருந்து தொழிலாள வர்க்கம் அனுபவித்த அனைத்து தோல்விகளுக்கும் முக்கிய காரணமாக விளங்கிய ஸ்ராலினிசம் ஒரு காலத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின்மேல் கொண்டிருந்த செல்வாக்கு சிதறுண்டுபோய்விட்டது.

48. ட்ரொட்ஸ்கிசத்திற்கும் (அதாவது உண்மையான மார்க்சிசத்திற்கும்), ஸ்ராலினிசத்திற்கும் இடையே மாற்றம் அடைந்துள்ள உறவானது, சோவியத் யூனியனுள் மிகவும் சக்தி வாய்ந்த முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சோவியத் யூனியனில் தொழிலாள வர்க்கம், அதிகாரத்துவத்தின் விலங்குகளை உடைத்துஎறிகிறாற்போல், முதல் தடவையாக தனது புரட்சிகர மரபியத்தின் உண்மையையும் கண்டு கொண்டுள்ளது. லியோன் ட்ரொட்ஸ்கியின் நூல்கள் இன்று சோவியத் யூனியன் முழுமையும் ஆயிரக்கணக்கானோரால் வாசிக்கப்பட்டு வருகின்றன. மொஸ்கோ, லெனின்கிராட், கீவ், ல்வோவ், கார்க்கோவ் முதலிய இடங்களில் இருந்து கடிதத் தொடர்புகள், அனைத்துலகக் குழுவின் அலுவலகங்களுக்குள் பெருக்கெடுத்து வருகின்றன. ட்ரொட்ஸ்கியின் இளையமகன் உட்பட நான்காம் அகிலத்தின் ஆதரவாளர்கள் படுகொலை செய்யப்பட்ட, முன்னர் ஸ்ராலினிச கடூழியச்சிறை ('லேபர் காம்ப்') ஆக விளங்கிய தூரப்பகுதியான வொர்க்குதாவில்கூட சோவியத் சுரங்கத் தொழிலாளர்கள் அனைத்துலகக் குழுவின் பத்திரங்களை படித்தும் விநியோகித்தும் வருகிறார்கள்.

49. சமூக ஜனநாயக மற்றும் சீர்திருத்த அமைப்புக்களின் அரசியல் ஆளுமையின் வீழ்ச்சி அதிகமாக கண்ணுக்குப் புலனாகாவிட்டாலும், அவை எந்த விதத்திலும் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தவை அன்று. எந்த ஒரு முக்கிய அரசியல் விவகாரத்திலும் 'மத்திய - வலதுசாரி கட்சிகளுக்கும் சமூக ஜனநாயகவாதிகளுக்கும் இடையே இனம் காணக்கூடிய முதலாளித்துவ வேறுபாடு இல்லாத முறையில் இந்த அமைப்புக்கள் முதலாளித்துவ அரசினுள் முழுமையாக இணைந்து கொண்டுள்ளன. தொழிற்சங்கங்களைப் பொறுத்தமட்டில், முதலாளித்துவ சிக்கனக் கொள்கைகளை திணிப்பதே அவற்றின் முக்கியக் கடமையாக உள்ளது.

50. ஸ்ராலினிச, சமூக ஜனநாயகக் கட்சிகளதும் தொழிற் சங்கங்களதும் வீழ்ச்சிக்கு அடிப்படையானது, தொழிலாள வர்க்க இயக்கத்தினுள் தேசிய வேலைத் திட்டத்தினை அடித்தளமாகக் கொண்டிருக்கும் அந்த அமைப்புக்கள் எல்லாவற்றினதும் வரலாற்று திவால் தன்மையேயாகும். முதலாளித்துவ தேசிய அரசின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் அடையக்கூடிய சிறிய நலன்களின் சாத்தியம் கூட முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. கடந்த காலப்போராட்டங்கள் மூலம் தொழிலாள வர்க்கம் வென்றெடுத்த வெற்றிகளை அதிகாரத்துவம் ஒன்றன்பின் ஒன்றாக முதலாளி வர்க்கத்திடம் தாரை வார்த்து வருகின்றது. இறுதியில் சீர்திருத்தவாத அதிகாரத்துவங்களின் தேசிய வேலைத் திட்டங்கள் தொழிலாள வர்க்கத்தினை ஏகாதிபத்திய யுத்தத் தயாரிப்புகளுக்கு கீழ்ப்படுத்துகின்றது.

51. நான்காம் அகிலத்தின் மாபெரும் வரலாற்று நிகழ்வின் உள்ளுறைந்த சாத்தியப்பாடானது, அதன் வேலைத்திட்டம் உலகப் பொருளாதார அபிவிருத்தியின் உள்ளார்ந்த தர்க்கவியலுடன் ஒத்துப்போவதிலும் சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் உலக வரலாற்றுப் பாத்திரத்தினை நெறிப்படுத்துவதிலும் புறநிலையாக வேரூன்றி உள்ளது. எவ்வாறெனினும் அதன் வேலைத்திட்டத்தின் வெற்றியை தன்னியல்பான புறநிலை பொருளாதார செயல்முறைகளினாலோ அல்லது பழைய தலைமையுடன் வெகுஜனங்கள் வெறுப்படைவதாலோ தானாகவே அடைந்துவிட முடியாது. புரட்சிகர வேலைத்திட்டத்திற்காகப் போராடியாக வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்குழு, தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப் படையை மார்க்சிசத்தின் பதாகையின் கீழ் புரட்சிகரமான முறையில் மீள அணிதிரட்ட அனைத்தையும் செய்யும். இது தொழிலாள வர்க்கத்தின் தினசரிப் போராட்டத்தில் நடைமுறைத் தலையீடுகளை மட்டும் அல்லாமல், எல்லாவகையான சந்தர்ப்பவாதங்களுக்கு எதிரான விடாப்பிடியான தத்துவார்த்தப் போராட்டத்தினையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. ஏகாதிபத்திய யுத்தத்துக்கும் காலனித்துவத்துக்கும் எதிரான பேர்லின் தொழிலாளர் மாநாடு, 1953-ல் அனைத்துலகக்குழு நிறுவப்பட்ட காலத்தில் இருந்து பப்லோவாத திரிபு வாதத்திற்கு எதிராக அது தொடுத்துவந்த வளம்மிக்க மரபுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஏகாதிபத்தியம், முதலாளித்துவ தேசியவாதம், ஸ்ராலினிசம் - இவற்றின் சகாக்கள் என்ற முறையில் பப்லோவாதத்தின் நாசகரமான அரசியல் பாத்திரம் முழுமையாக அம்பலமாக்கப்பட வேண்டும். அனைத்துலகக் குழு பேர்லின் மாநாட்டினால் வழங்கப்படும் வாய்ப்புக்களை - மண்டேல், சுலோட்டர், டோரன்ஸ் லோரா மற்றும் ரொபேட்சன் தலைமையிலான பல்வேறு வகையான சந்தர்ப்பவாதங்களில் இருந்தும் தெளிவான எல்லைக்கோட்டினை வரைந்துகொள்ள பயன்படுத்திக்கொள்ள எண்ணுகிறது. இந்தவிதத்தில் அனைத்துலகக் குழு 1915, 16-ல் சிம்மர்வால்ட் மற்றும் கிந்தல் ஆகியவற்றின் மாபெரும் யுந்த எதிர்ப்பு மாநாடுகளில் லெனினால் கடைப்பிடிக்கப்பட்ட உதாரணத்தினைப் பின்பற்றும். எல்லா வகையான சந்தர்ப்பவாதம், இடைநிலைவாதங்களுக்கு எதிரான போராட்டம், ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தொழிலாள வர்க்கத்தினை அணிதிரட்டவும் புரட்சிகர அகிலத்தினைக் கட்டி எழுப்பவும் அத்தியாவசியமான முன்நிபந்தனையாகும் என அம் மாநாடுகளில் லெனின், வலியுறுத்தினார்.

52. பேர்லின் மாநாட்டுக்கான தயாரிப்பின்போது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரதிநிதிகள், உலகம் முழுமையும் உள்ள தொழிலாளர்களுடன் பரந்த அளவிலான கலந்துரையாடலில் ஈடுபடுவர். அந்நிலைமைகளின் கீழ் லியோன் ட்ரொட்ஸ்கியின் கருத்துக்கள் முன்னொருபோதும் இல்லாத அளவில் பரந்த அளவில் மக்களைச் சென்றடையும், ஏற்கனவே தம்மை நான்காம் அகிலத்தின் பங்காளர்கள் எனக் கருதும் குழுக்களை, போக்கினரை, அதன் வேலைத் திட்டத்தினைப் புரிந்து கொள்ளும் நிலையில் இருப்போரை நாம் ஒரு கலந்துரையாடலுக்கு அழைக்கிறோம்.

53. தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தினூடாக மட்டுமே ஏகாதிபத்தியம், காலனித்துவம், யுத்தத்தின் அவலம் ஆகியவை தோற்கடிக்கப்படுவதை உத்தரவாதம் செய்ய முடியும். இந்த ஐக்கியத்தினை சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தைக் கட்டி எழுப்புவதன் மூலமே அடையமுடியும். ஏகாதிபத்திய யுத்தம், காலனி ஆதிக்கத்துக்கு எதிரான தொழிலாளர் மாநாட்டை நோக்கி முன்னேறு!.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved