line decor
   WSWS : Tamil : Library
line decor
 
 
 
 

 
 
1930ம் ஆண்டு பிரெஞ்சு மொழிப் பதிப்பிற்கு முன்னுரை

 

இந்த நூல் தனித்தனியே உள்ள நான்கு பகுதிகளை கொண்டது; ஆயினும்கூட பிரிக்கமுடியாத ஐக்கியம் இதில் இழைந்து ஓடுகிறது; முழு நூலும் கம்யூனிச அகிலத்தின் அடிப்படை பிரச்சினைகளை பற்றி ஆராய்கிறது. கம்யூனிச அகிலத்தின் செயற்பாடுகள் பற்றிய கூறுபாடுகளான அதன் வேலைத்திட்டம், மூலோபாயம், தந்திரோபாயம், அமைப்பு முறை, தலைமையின் உறுப்பினர்கள் அனைத்தையும் இந்நூல் உள்ளடக்கியுள்ளது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் ஒன்றியத்தின் அரசாங்கக் கட்சியாக இருப்பதால், கம்யூனிச அகிலத்தின் முதன்மையான கட்சி என்ற வகையில் ஒவ்வொரு செயற்பாட்டிலும் உறுதியான பங்கை ஆற்றியது, இந் நூல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மிகச் சமீபத்திய காலத்தில் கொண்டிருந்த உள்வாழ்வு பற்றிய மதிப்பீட்டையும் கொடுக்கிறது; இது லெனினின் நோய்வாய்ப்படல் மற்றும் மரணத்துடன் ஆரம்பிக்கிறது. அவ்விதத்தில், இந் நூல் போதுமான அளவு ஒரு ஒருங்கிணைந்த முழுமைத்தன்மை உடையது என்று நான் நம்புகிறேன்.

எனது இந்த நூல் ரஷ்ய மொழியில் வெளியிடப்படவில்லை. தற்கால விஷயங்களை பற்றிக் கூறும் இலக்கிய வடிவிலான மார்க்சிச நூல்கள் சோவியத் குடியரசில் மிகவும் தடைசெய்யப்பட்ட காலத்தில் (1928) இந் நூல் எழுதப்பட்டது. என்னுடைய நூல்களுக்கு ஓரளவு பரவுதலுக்கு உதவும் வகையில் நான் இந் நூலின் முதல் இரு பகுதிகளை கடந்த ஆண்டு கோடை கடைசியில் மாஸ்கோவில் கூடிய கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆறாம் பேரவைக்கு மொழியப்பட்ட உத்தியோகபூர்வ ஆவணங்களாக அனுப்பிவைத்தேன். மூன்று மற்றும் நான்காம் பகுதிகள் 1* அகில பேரவைக்கு பின்னர் எழுதப்பட்டவை; கையெழுத்துவடிவில் ஒருவரிலிருந்து ஒருவருக்கு கைமாற்றப்பட்டது. இது பிறருக்குக் கொடுத்து பரப்பப்படுவது, அவர்கள் சைபீரியாவின் ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு கடத்தப்பட்டுவிடுவர் என்ற தண்டனையை கொடுத்தது, இன்றும் கொடுக்கிறது; சமீபத்தில் டோபோல்ஸ்க் சிறையில் தனிமையில் அடைக்கப்படும் தண்டனையை கொடுத்தது.

இரண்டாம் பகுதிதான் 2*, அதாவது, "கம்யூனிச அகிலத்தின் வரைவு வேலைத்திட்டம் - அடிப்படைகளை பற்றிய ஒரு விமர்சனம்" என்பது ஜேர்மன் மொழியில் பிரசுரிக்கப்பட்டது. இதுவரை இந்நூல் கையெழுத்துவடிவில் கருநிலையிலான ஒரு வாழ்வைத்தான் கொண்டுள்ளது. இப்பொழுது முதல் தடவையாக பிரெஞ்சு பதிப்பால் கொடுக்கப்பட்ட வடிவத்தில் தோன்றுகிறது. ஆனால் என்னுடைய கையெழுத்துப் பிரதிகள் ஐரோப்பாவில் பல நாடுகள் மற்றும் அமெரிக்கா, மேற்கு சீனப் பகுதி ஆகிய பல இடங்களிலும், பல விதங்களிலும் ஊடுருவி இருப்பதால், தற்போதைய பிரெஞ்சு பதிப்பு ஒன்றுக்குத்தான் நான் வாசகர்கள் முன் பொறுப்பேற்க கடமைப்பட்டுள்ளேன் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

ஆறாம் அகல் பேரவை எடுத்த முடிவின்படி, இந்த நூலில் விமர்சிக்கப்பட்டுள்ள வரைவு வேலைத்திட்டம் அகிலத்தின் உத்தியோகபூர்வ வேலைத்திட்டமாகிவிட்டது. ஆனால் இதையொட்டி என்னுடைய விமர்சனம் அதன் பெறுமதி எதையும் இழக்கவில்லை. இதற்கு மாறாகத்தான் நடந்துள்ளது. வரைவு வேலைத்திட்டத்தில் இருந்த பெரும் தவறுகள் அனைத்தும் தக்க வைக்கப்பட்டுள்ளன; அவற்றிற்கு ஒரு சட்ட அடிப்படை கொடுக்கப்பட்டுள்ளன; விசுவாசமான விதிகள் போல் புனிதப்படுத்தப்பட்டுள்ளன. கம்யூனிச அகிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது மட்டும் அல்லாமல், மத்திய ஆசியாவிற்கு நாடு கடத்தப்பட்டும் உள்ள உறுப்பினரின் விமர்சனத்தை என்ன செய்யப்பட வேண்டும் என்ற வினாவை அகல் பேரவையில் வேலைத்திட்ட குழு முன்வைத்தது. ஒருவருடைய எதிர்ப்பாளர்களிடம் இருந்தும் சிலவற்றை கற்றுக் கொள்ள வேண்டும் என்று சில தயக்கத்துடன், தனிமைப்படுத்தப்பட்ட குரல்கள் எழுந்தன; வடிவமைத்தவரிடமிருந்து சுதந்திரமான வகையில் சரியான சிந்தனைகள் சரியாகத் தொடர்ந்து நீடித்திருக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் மற்றொரு, கூடுதலான வலிமையுடைய குழுவின் தீர்மானம் எந்த எதிர்ப்பும் போராட்டமும் இல்லாமல் வெற்றியடைந்தது. ஒரு கௌரவமான, வயதான மூதாட்டியார் (முன்பு Klara Zetki) என்பவராக இருந்தார்) ட்ரொட்ஸ்கியிடம் இருந்து வரும் எந்தக் கருத்துக்களும் சரியாக இருக்க முடியாது என்று கூறினார். திரைக்குப் பின்னால் அவருக்கு கொடுக்கப்பட்ட பணியைத்தான் அவர் செய்தார். சவால் விடமுடியாத வகையில் புகழ் பெற்றிருப்போருக்கு கௌரவமற்ற செயலை கொடுத்தல்தான் ஸ்ராலின் முறையாகும். தயக்கத்துடன் எழுந்த பகுத்தறிவின் குரல் உடனே அமுக்கப்பட்டு விட்டது; தன்னுடைய கண்களை மூடிக் கொண்டு வேலைத்திட்டக்குழு எனது "விமர்சனத்தை" கடந்து சென்றது. எனவே தற்போதைய உத்தியோகபூர்வ வேலைத்திட்டத்திற்காக வரைவு வேலைத்திட்டம் பற்றி நான் கூறியவை அனைத்தும் முழு ஆற்றலுடன் உள்ளன. இவ்வேலைத்திட்டம் தத்துவார்த்த ரீதியாக நேர்மையற்றதும், அரசியல் ரீதியாக தீமை பயக்கக் கூடியதுமாகும். இது மாற்றப்பட வேண்டும்; மாறும். ஆனால் வழக்கம்போல், ஆறாம் பேரவையின் உறுப்பினர்கள் "ஒருமனதாக" மீண்டும் "ட்ரொட்ஸ்கிசத்தை" கண்டித்தனர். அதற்காகத்தான் அவர்கள் மாஸ்கோவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் நேற்று அல்லது அதற்கு முந்தைய தினம்தான் அரசியல் அரங்கிற்கு வந்தவர்கள். இவர்களில் ஒருவர்கூட கம்யூனிச அகிலம் ஸ்தாபிக்கப்பட்ட நிகழ்வுகளில் பங்கு கொண்டவர்கள் அல்லர். லெனினுடைய தலைமையில் நடந்த நான்கு பேரவைகளில் ஒரு சிலர்தான் ஓரிரு பேரவைகளில் கலந்து கொண்டிருந்தனர். புதிய அரசியல் பாதைக்காக அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர்; புதிய அமைப்பு முறை ஆட்சியின் முகவர்கள் ஆவர். லெனினிச கொள்கைகளை மீறியவர் என்று என்மீது குற்றம் சாட்டுவதில் -இன்னும் துல்லியமாக எனக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் கையெழுத்திட்ட வகையில்- ஆறாம் பேரவை பிரதிநிதிகள் தத்துவார்த்த ரீதியாக சிந்திப்பதில் தெளிவையோ அல்லது கம்யூனிச அகிலத்தின் வரலாறு பற்றிய அறிவையோ கொண்டிராது தாழ்ந்து பணிந்து நிற்கும் தன்மையைத்தான் காட்டினர்.

ஆறாம் அகல்பேரவை வரை, அகிலம் ஒரு தொகுப்பான திட்டம் ஒன்றையும் கொண்டிருக்கவில்லை. கொள்கைகள் பற்றிய விஞ்ஞாபனங்களும் தீர்மானங்களும் கொடுக்கப்பட்டன: முதல் மற்றும் இரண்டாம் அகல் பேரவைகள் விஞ்ஞாபனங்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோக்கியதாக இருந்தன (இரண்டாம் அகல் பேரவையின் அறிக்கை, குறிப்பாக அதன் அனைத்து அம்சங்களிலும் ஒரு வேலைத்திட்டத்தின் தன்மையைக் கொண்டிருந்தது). அந்த ஆவணங்களை நான் எழுதினேன்; இவை எமது மத்திய குழுவினால் எந்தத் திருத்தமும் இல்லாமல் ஒப்புக் கொள்ளப்பட்டு நிறுவன சட்டமியற்றும் அவைகள் என்ற வகையில் முதல் இரு அகல்பேரவைகளால் ஒப்புதலும் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் அகல்பேரவை இந்த வேலைத்திட்டம், தந்திரோபாயங்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளை ஏற்றன; இவை உலகத் தொழிலாள வர்க்க இயக்கத்தின் அடிப்படை பிரச்சினைகளுக்கு பொருந்தி இருந்தன. மூன்றாம் அகல்பேரவையில் நான் தயாரித்திருந்த இந்தக் ஆய்வுக் கட்டுரைகள் விவாதத்தில் நான் அவற்றை பாதுகாக்க குறுக்கிட்டேன். முன்மொழியப்பட்ட திருத்தங்கள் நல்ல நம்பிக்கையுடன் வராமல் எனக்கு எதிராக என்ற வகையில் அந்த அளவிற்கு லெனினிற்கு எதிராகவும் திருப்பப்பட்டன. அந்த நேரத்தில் தால்மன், பேலா குன், பெப்பர் மற்றும் பிற குழப்பவாதிகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட அந்நேரம் இருந்த எதிர்ப்பிற்கெதிராக உறுதியாக இருந்த நிலையில் நாங்கள், லெனினும் நானும், என்னுடைய ஆய்வுக் கட்டுரைகள் கிட்டத்தட்ட ஒருமனதாக பேரவையால் ஒப்புக் கொள்ளும் வகையில் வெற்றி அடைந்தோம்.

நான்காம் அகல் பேரவைக்கு பிரதான அறிக்கை அளிப்பதில் லெனின் என்னுடன் பங்கு கொண்டார்; இந்த அறிக்கை சோவியத் குடியரசில் இருந்த நிலைமை மற்றும் உலகப் புரட்சி பற்றிய முன்னோக்குகளை கொண்டிருந்தது. இந்த இரு அறிக்கைகளையும் சுருக்கிக் கூறும் உரைகளை கொடுக்கும் பொறுப்பு என்னுடையதாயிற்று. கம்யூனிச அகிலத்தின் அஸ்திவாரங்களான இந்த ஆவணங்கள் என்னால் அல்லது என்னுடைய ஒத்துழைப்பால் வரையப்பட்டு மார்க்சிசத்தின் அடிப்படை கருத்துக்களில் முன்வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தன என்று மேலும் கூற வேண்டியது தேவையற்றது. இவைதான் இப்பொழுது "ட்ரொட்ஸ்கிசம்" என்று ஸ்ராலின் காலத்தில் புதிதாக ஆள்சேர்க்கப்பட்டவர்களால் கண்டிக்கப்படுபவையாகும்.

ஆனால் இப்படி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளவர்களின் தற்போதைய தலைவர், கம்யூனிச அகிலத்தின் பணியில் நேரடியாகவோ, மறைமுகமாகவே, பேரவைகளிலோ அல்லது குழுக்களிலோ, தயாரிப்பு பணிகளிலோ கூட சிறிதும் பங்கு பெறவில்லை என்பதைக் கூறுவது தேவையற்றது அல்ல; அத்தகைய பணிகள் பெரும்பாலும் ரஷ்ய கட்சியின்மீது விழுந்தன. முதல் நான்கு அகல் பேரவைகள் அல்லது அத்தகைய பணி பற்றிய எந்தத் தீவிர அக்கறையும் ஸ்ராலினால் காட்டப்படவில்லை; எந்த நேரத்திலும் அவருடைய படைப்பாற்றலுக்கு சான்றாக ஒரு ஆவணமும் இருந்ததும் இல்லை.

விஷயங்கள் இத்துடன் நின்றுவிடவில்லை. முதல் நான்கு அகல்பேரவைகளுக்கு வந்த பிரதிநிதிகளுடைய பட்டியலை ஆராய்ந்தால், அதாவது அக்டோபர் புரட்சியின் முதலும் முக்கியமானதுமாக அர்ப்பணித்த நண்பர்கள் மற்றும் கம்யூனிச அகிலத்தின் ஸ்தாபகர்களுடைய பட்டியல், லெனினுடைய மிக நெருக்கமான சர்வதேச ஒத்துழைப்பாளர்கள் பட்டியலை ஆராய்ந்தால், லெனினுடைய மறைவிற்கு பின்னர், ஒருவரை தவிர அனைவரும் தலைமையில் இருந்து அகற்றப்பட்டது மட்டும் அல்லாமல், கம்யூனிச அகிலத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்டதை காண்கிறோம். இது எந்த அளவிற்கு சோவியத் ஒன்றியத்திற்கு உண்மையாக இருக்கிறதோ அதேபோல்தான் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஸ்கன்டிநேவியா அல்லது செக்கோஸ்லாவாக்கியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலும் உள்ளது. எனவே, லெனினுடன் ஒத்துழைத்தவர்கள் லெனினிச வழிவகையை தாக்கினார்கள் என்பதை நாம் நம்ப வேண்டுமா? இதையொட்டி லெனின் உயிரோடு இருந்தபோது அவருடைய வழிவகையை எதிர்த்தவர்கள், அல்லது கம்யூனிச அகிலத்தில் கடந்த சில ஆண்டுகளில் சேர்ந்தவர்கள், முன்பு என்ன நடந்தது என்பதை அறியாதவர்கள், பின்னர் நடக்க இருப்பதைப் பற்றி சிந்திக்காதவர்கள் லெனினிச வழிவகையை காப்பாற்றுபவர்கள் என்றும் நாம் நம்ப வேண்டுமா?

கொள்கை மற்றும் தலைமை தாங்குபவர்களில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவு நன்கு அறியப்பட்டதுதான். 1923 ஆரம்பத்தில் இருந்து கம்யூனிச அகிலம் ஜேர்மனி, பல்கேரியா, பிரிட்டன் மற்றும் சீனாவில்தான் தோல்விகளை அடைந்துள்ளது. மற்ற நாடுகளில் வியப்புத் தரும் முறையில் இல்லை என்றாலும் பின்னடைவுகள் மிகவும் முக்கியமானவை. தலைமையின் சந்தர்ப்பவாத குருட்டுத்தனம்தான் எல்லா இடத்திலும் உடனடிக் காரணமாக இருந்தது. இந்தக் தோல்விகளில் மிகவும் முக்கியமானது சோவியத் குடியரசிற்காக ஸ்ராலின் தயாரித்துக் கொண்டிருப்பதுதான்: அதாவது, தோல்விகளை மிகப் பெரிய அளவில் ஒழுங்கமைத்தவர் என்ற இலக்கை வரலாற்றில் அவர் தனக்கு வைத்துக் கொண்டுள்ளார் என நம்பலாம்.

சோவியத் குடியரசில் லெனினிச கம்யூனிச அகிலத்தின் போராளிகள் நாடுகடத்தப்படுகின்றனர், சிறையில் வைக்கப்படுகின்றனர் அல்லது விரட்டி அடிக்கப்படுகின்றனர். ஜேர்மனியிலும் பிரான்சிலும் விஷயங்கள் அந்த அளவிற்குச் செல்லவில்லை; ஆனால் அது உண்மையில் தால்மன்கள் அல்லது கஷான்களின்3* தவறு அல்ல. இந்த தலைவர்கள், முதலாளித்துவ போலீசாரிடம் பூர்சுவா ஜனநாயக நாட்டில் நடக்கும் போராட்டத்தில் லெனினுடைய தோழர்களை பொறுத்துக் கொள்ளாதீர்கள் என்று கோருகின்றனர். 1916ம் ஆண்டு பிரான்சில் இருந்து நான் வெளியேற்றப்பட்டதை, கடுமையான சோவினிச வாதங்களை முன்வைத்து கஷான் நியாயப்படுத்தினார். இன்று அவர் நான் பிரான்சிற்குள் வரக்கூடாது என்று கோருகிறார். இந்தவகையில் அவர் நான் என் வேலையைச் செய்வது போல் அவர் அவருடைய வேலையைத்தான் செய்கிறார்.

நன்கு அறியப்பட்டுள்ளதுபோல், முதல் நான்கு அகல்பேரவைக் காலத்தில் நான் பிரெஞ்சு விவகாரங்களில் குறிப்பாக தொடர்பு கொண்டிருந்தேன்; பிரெஞ்சு தொழிலாளர்களின் இயக்கம் பற்றி லெனினுடன் சேர்ந்து பலமுறையும் ஆராய நேர்ந்தது. சில நேரம் நகைச் சுவையுடன் ஆனால் அடிப்படையில் மிகுந்த கவனத்துடன் லெனின் என்னிடம் "பாராளுமன்ற முறைக்கு ஆதரவாக இருக்கும் சமயத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும் கஷான் போன்றவர்களை நீங்கள் மிகவும் பெருந்தன்மையுடன் ஏன் நடத்துகிறீர்கள்?" என கேட்பார். பிரெஞ்சு உழைக்கும் மக்கள் திரளை அடைவதற்கு ஒரு தற்காலிக நடைவழி பாலம் போன்றவர்கள்தான் கஷான் என்றும், முக்கியமான புரட்சியாளர்கள் எழுந்து இறுதியில் தம்மை ஒழுங்கமைக்கையில் அவர்கள் கஷான்கள் மற்றும் அவருடன் இருப்பவர்களை தெருக்களில் இருந்து அகற்றி விடுவர் என்று கூறினேன். இந்த நூலில் ஆராயப்பட்ட காரணங்களை ஒட்டி விஷயங்கள் இழுத்துக் கொண்டே போயின; ஆனால் சந்தர்ப்பவாதிகள் அவர்களுக்கு உரிய விதியை எதிர்கொள்ளுவர் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை: பாட்டாளி வர்க்கத்திற்கு தகரத்தால் செய்யப்படாத ஆனால் எஃகினால் செய்யப்பட்ட கருவிகள் வேவை.

லெனினுடைய தோழர்களுக்கு எதிரான ஸ்ராலின், பூர்ஷ்வா போலீஸ், தால்மன், மற்றும் கஷான் ஆகியோரின் ஐக்கிய முன்னணி இன்றைய ஐரோப்பிய அரசியல் வாழ்வில் மறுப்பதற்கியலாத மற்றும் முக்கியமான உண்மை ஆகும்...

இந் நூலில் இருந்து என்ன பொதுவான முடிவுகள் எடுக்கப்பட முடியும்? பல பக்கங்களிலும் ஒரு நான்காம் அகிலத்தை தோற்றுவிக்கும் திட்டம் எங்களுக்கு இருப்பதாகக் கூறும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அக்கருத்து முற்றிலும் தவறானதாகும்.4* கம்யூனிசமும் ஜனநாயக "சோசலிசமும்" வர்க்க உறவுகளில் ஆழ்ந்த வேர்களை உடைய இரு முக்கியமான வரலாற்றுப் போக்குகள் ஆகும். இரண்டாம், மூன்றாம் அகிலங்களின் இருப்பும் மற்றும் போராட்டமும் ஒரு நீண்ட நிகழ்வுபோக்கு மட்டுமல்லாது முதலாளித்துவ சமூகத்தின் தலைவிதியுடன் மிக நெருக்கமாகப் பிணைந்திருந்தது. சில குறிப்பிட்ட கணங்களில் இடைப்பட்ட கருத்துக்கள் அல்லது "மத்தியவாதப் போக்குகள்" பெரும் செல்வாக்கை பெற முடியும், ஆனால் அது நீண்டகாலத்திற்கு அல்ல.

பிரெடெரிக் ஆட்லர் மற்றும் குழுவினர் ஒரு இடைப்பட்ட அகிலத்தை (இரண்டரையாம் அகிலம் எனலாம்) கொண்டுவர மேற்கொண்ட முயற்சிகள் ஆரம்பத்தில் அதிகம் உறுதிமொழி கொடுப்பதாக தோன்றினாலும், வெகுவிரைவிலேயே அவை திவாலாகி விட்டது. ஸ்ராலினின் கொள்கை வேறு அடித்தளங்களையும், வேறு வரலாற்று மரபியங்களிலும் இருந்து தொடங்கும் அதேவேளை, அது அதே மத்தியவாதப் போக்கின் ஒரு பிரிவுதான். கையில் அடிக்கோலையும், திசைகாட்டியையும் வைத்துக்கொண்டு, பிரெடெரிக் ஆட்லர் போல்ஷிசத்திற்கும் சமூக ஜனநாயகத்திற்கும் இடையே ஒரு அரசியல் மூலைவிட்டத்தை கட்டமைக்க முற்பட்டார். மார்க்ஸ், வொல்மார், லெனின் மற்றும் சியாங் கேய் ஷேக், போல்ஷிவிசம் தேசிய சோசலிசம் இவற்றிற்கு இடையே தொடரான அனுபவாத வளைவுநெளிவே ஸ்ராலினிச கொள்கை ஆகும். ஆனால் இந்த நிலையற்றதன்மை அவற்றின் அடிப்படை வெளிப்பாட்டு மொத்தத்தில் சுருக்கிக் கூற நாம் முற்பட்டால், இதே எண்கணித சம்பந்தமான கூட்டுத் தொகைக்குத்தான் வருவோம்; இரண்டரை என்பதே அது. இது செய்துள்ள தவறுகள், இது காரணமாக இருந்த கொடூரமான தோல்விகள் ஆகியவற்றில் ஸ்ராலினிச மத்தியவாதம் நீண்ட நாட்கள் முன்பே அரசியல் ரீதியாக அழிக்கப்பட்டிருக்கும்; ஆனால் அது இன்னமும் அக்டோபர் புரட்சியில் இருந்து வெளிப்பட்டு வந்துள்ள ஒரு அரசின் கருத்தியல் மற்றும் சடரீதியான வளங்களில் தங்கியிருப்பதால் நீடிக்கிறது.

ஆனால் மிகச் சக்தி வாய்ந்த கருவிகளால்கூட ஒரு அவநம்பிக்கையான கொள்கையை காப்பாற்ற முடியாது. மார்க்சிசத்திற்கும் சமூக தேசப்பற்று வாதத்திற்கும் இடையே ஸ்ராலினிசத்திற்கு இடம் கிடையாது. பல தொடர்ச்சியான சோதனைகள், நெருக்கடிகளை கடந்த பின் கம்யூனிச அகிலம், சிந்தனைக் கோட்பாடுகள் இல்லாத, ஊசலாடும், உரசல்களை உருவாக்கும், அடக்குமுறையை மேற்கொள்ளும், தோல்விகளை தயாரிக்கும் அதிகாரத்துவத்தின் தளைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும். ஒரு நான்காம் அகிலத்தைக் கட்டமைக்க வேண்டிய தேவை நமக்கு இல்லை. நாம் போர்க்காலத்தில் தயாரிப்பு செய்து அதன் அடிப்படையில் நாம் லெனினுடன் அக்டோபர் புரட்சிக்கு பின்னர் பங்கு பெற்றிருந்த மூன்றாம் அகிலத்தின் வழியை தொடர்வோம், அபிவிருத்தி செய்வோம். கருத்தியல் மரபியத்தின் இழையை நாம் ஒரு கணமேனும் நழுவவிடவில்லை. எமது கணிப்பு மற்றும் முன்கூட்டி அறியும் தன்மை மிகப் பெரிய வரலாற்று முக்கியத்துவம் கொண்ட உண்மைகளால் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த துன்புறுத்தப்படல், நாடுகடத்தப்படல் ஆகியவற்றைக் கொண்ட இவ்வாண்டுகளில் நாம் எமது சிந்தனைகளின் சரியான தன்மை பற்றியும் அவற்றின் தவிர்க்கமுடியாத வெற்றி பற்றியும் அசைவிற்கிடமில்லாத வகையில் நம்பிக்கையுடன் உள்ளோம்.

லியோன் ட்ரொட்ஸ்கி
Constantinople,
15 April 1929

1* 1930 பிரெஞ்சுப் பதிப்பின் மூன்றாம் பகுதி (ஆறாம் அகல் பேரவைக்குப் பின்னரான சீனப் பிரச்சினை) இந்த பதிப்பிலிருந்து நீக்கப்பட்டது ஆனால் சீனப்புரட்சியின் பிரச்சினைகளில் காணப்படுகின்றது (நியூ பார்க், 1968) பக்கம் 120-184. 1930 பிரெஞ்சுப் பதிப்பின் நான்காம் பகுதி (இன்று கொமின்டேர்னை வழிநடத்துவது யார்?) இந்தப் பதிப்பில் இறுதிப் பகுதியாக சோன்றுகிறது. ஆ-ர்.

2* அதாவது இந்த பதிப்பின் முதல் பகுதி. ஆ-ர்

3* பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் முன்னணி நபர் 1920ல் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார், ஆனால் வலதுசாரியாக நின்றார் மற்றும் உறுதியான ஸ்ராலினிஸ்டாக ஆனார்.

1929ல் ட்ரொட்ஸ்கி துருக்கிக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் அவர் பிரிட்டன் உள்பட பல முதலாளித்துவ நாடுகளிலிருந்தும் ஒரு வதிவிட இசைவு பத்திரத்தை பெறுவதற்கு முயற்சித்து கிட்டாமற்போனார். அத்தகைய இசைவு அவருக்கு வழங்கப்படுவதற்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரச்சாரம் செய்தன.

4* ட்ரொட்ஸ்கியும், போல்ஷிவிக் லெனினிஸ்டுகளான எதிர்ப்பினரும் 1933ல் மூன்றாம் அகிலம் தொடர்பாக தங்களின் தந்திரோபாயங்களை, கிட்லர் அதிகாரத்திற்கு உதவியிருந்த ஜேர்மனியில் அதன் கொள்கையை கருத்தில் கொண்டு மீளாய்வு செய்தனர். முன்னுரையைப் பார்க்க.

1923 மற்றும் 1933க்கு இடையிலான காலகட்டத்தின்போது ட்ரொட்ஸ்கி ஸ்ராலினுடைய பொதுவான கொள்கையை 'அதிகாரத்துவ மத்தியவாதத்தில்' ஒன்றாக பண்பிட்டார். இந்தப் பிரச்சினை' ஏகாதிபத்திய சகாப்தத்தில் மூலோபாயமும் தந்திரோபாயங்களும்' என்று தலைப்பிடப்பட்ட பகுதியில் முழுமையாக விவாதிக்கப்படுகிறது.