முதலாளித்துவத்தின் நிலைமுறிவும் அமெரிக்காவில் சோசலிசத்திற்கான போராட்டமும்

சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டம்

WSWS : Tamil : நூலகம்
சோசலிச சமத்துவக் கட்சி மாநாட்டின் தீர்மானம் லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட எழுபதாம் நினைவாண்டில்

சோசலிச சமத்துவக் கட்சி மாநாட்டின் தீர்மானம் தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவிற்குப் பின் 25 ஆண்டுகள்

முதலாளித்துவத்தின் நிலைமுறிவும் அமெரிக்காவில் சோசலிசத்திற்கான போராட்டமும் சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டம்

The Breakdown of Capitalism and the fight for Socialism in the United States

Program of the Socialist Equality Party

முதலாளித்துவத்தின் நிலைமுறிவும் அமெரிக்காவில் சோசலிசத்திற்கான போராட்டமும்

சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டம்

Program of the Socialist Equality Party
6 September 2010

Use this version to print | Send feedback

பின்வரும் ஆவணம் மிச்சிகன், ஆன் ஆர்பரில் ஆகஸ்டு 11-15, 2010ல் நடந்த சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) முதல் தேசிய காங்கிரசில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.

பொருளாதார நெருக்கடியும் அதன் சமூக தாக்கமும்

1. உலக முதலாளித்துவ அமைப்புமுறை 1930களின் பெருமந்த நிலைக்குப் பின்னரான தனது மிகப்பெரும் நெருக்கடியில் சிக்குண்டிருக்கிறது. வால் ஸ்ட்ரீட் வணிக அடையாளங்களின்  திடீர் செயலிழப்புடன் செப்டம்பர் 2008ல் தொடங்கிய நிதியியல் குழப்பம் ஒரு உலகளாவிய பொருளாதார நிலைமுறிவாக உருமாறிப் பரவியிருக்கிறது. அமெரிக்க மாதிரியிலான தடையில்லா வாணிபம் தான் பொருளாதார ஒழுங்கமைப்புக்கான மிகச் சிறந்த வடிவம் என்று முதலாளித்துவத்திற்கு வக்காலத்துவாங்குபவர்கள் பல தசாப்தங்களாக பிரகடனப்படுத்தி வந்திருக்கின்றனர்.  நெருங்கிக் கொண்டிருந்த நெருக்கடியின் பல அறிகுறிகளையும் அவர்கள் அலட்சியப்படுத்திய அதே நேரத்தில், பெருநிறுவனக் கட்டுப்பாட்டில் இருந்த ஊடகங்களோ எதைப்பற்றியும் அக்கறையற்ற நிதி ஊகம் மற்றும் பொறுப்பற்ற வகையில் தன்னுடைய செல்வத்தைப் பெருக்கிக் கொள்வது ஆகிய தன்மைகளை - ஆளும் வர்க்கத்தின் வர்த்தக செயல்பாடுகள் மற்றும் தனிநபர் வாழ்க்கைமுறைகளுக்கான வரையறைக் குணங்கள் இவை - கொண்டாடின. இறுதியாக 2008ல் பொருளாதாரப் பேரழிவு தாக்கியபோது, அமெரிக்க அரசாங்கம் திக்குத் தெரியாமல் வங்கி அமைப்பை பொறிவில் இருந்து காப்பாற்ற நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை உட்செலுத்தி பிரம்ம பிரயத்தனம் செய்து தலையிட்டது. முதலாளித்துவ அமைப்பு உயிர் வாழ்வதே அபாயத்தில் இருப்பதாய் அமெரிக்க ஜனாதிபதி பொதுவில் ஒப்புக் கொண்டார். அவசர கால பிணையெடுப்பு பணக்கார முதலீட்டாளர்களின் செல்வத்தைப் பாதுகாத்தது என்றாலும் நெருக்கடியைக் கட்டுப்படுத்துவதில் தோற்றுப் போனது.

2. மந்தநிலையின் முதுகெலும்பை முறித்து விட்டதாய் ஒபாமா நிர்வாகம் கூறிக் கொள்வது, எதை வேண்டுமானாலும் மக்களை நம்ப வைத்து விட முடியும் என்பதில் உறுதி கொண்டிருக்கும் சிடுமூஞ்சித்தன அரசியல்வாதிகள் கூறும், தனக்குத் தானே சேவை செய்து கொள்ளக் கூடிய பொய்யே ஆகும். பெருகும் சமூக துயரத்தின் யதார்த்தம் அவ்வளவு எளிதில் மறைக்கப்பட முடியாதது. அமெரிக்காவில் சுமார் 26 மில்லியன் மக்கள் வேலைவாய்ப்பற்று இருக்கின்றனர் அல்லது முழுநேர வேலை பெற முடியாதிருக்கின்றனர். உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை பதிவில் கணக்கிடப்பட்டவர்களில் பாதிப்பேர் ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் கூடுதலான காலத்திற்கு வேலை இன்றி இருந்து வருகின்றனர். 1930களுக்குப் பின் மிகப்பெரும் நீண்டகால வேலைவாய்ப்பின்மை விகிதம் இதுவே. தங்களது கல்விக்காகப் பெற்ற கடன் சுமையைக் கொண்டுள்ள இளைஞர்கள் கல்லூரியில் பட்டம் பெற்று கண்ணியமான ஊதியமளிக்கும் வேலைகளைப் பெற முடியவில்லை, அல்லது எந்த வேலையையுமே பெற முடியவில்லை.

3. வீட்டு ஏலங்கள் (ஜப்திகள்) ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியன் தொழிலாளர்களை அவர்களது வீடுகளில் இருந்து துரத்திக் கொண்டிருக்கிறது. 1970களின் ஆரம்ப காலம் முதல் சரிந்து வந்திருக்கும் அமெரிக்க தொழிலாளர்களின் வருவாய் இப்போது மூழ்கிக் கொண்டிருக்கிறது. மந்தநிலையின் ஆரம்பத்திலிருந்து  ஊதியக் குறைப்பின் ஒரு அலை இருந்து வருகிறது. மில்லியன்கணக்கான தொழிலாளர் வர்க்க குடும்பங்களால் வரவுசெலவை சமாளிக்க முடியவில்லை. கெடுக்காலத்திற்குள் தங்களது கட்டணங்களை செலுத்த முடியாதவர்கள் மனிதாபிமானமற்ற ஒரு மூர்க்கத்தனத்துடன் கையாளப்படுகின்றனர். டெட்ராயிட் போன்ற நகரங்களில் வறுமைப்பட்ட தொழிலாளர்களுக்கு நிறுவனங்கள் எரிசக்தியையும் மின்சாரத்தையும் துண்டிப்பது தொடர்கதையாகி, நாடு முழுவதும் எண்ணற்றோர் மரணத்திற்கு அது காரணமாகி இருக்கிறது.  

4. ஏறக்குறைய ஒவ்வொரு மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கமும் நிதி நெருக்கடியால் பீடிக்கப்பட்டுள்ளது. சிக்கன ஒழுங்கைக் கோருவது தான் பெருநிறுவன உயர்தட்டினரின் பதிலிறுப்பாய் உள்ளது. நேற்றுத்தான் வங்கிகளை பிணையெடுத்த அரசியல்வாதிகள் இப்போது அத்தியாவசியமான சமூக வேலைத்திட்டங்களுக்கு பணமில்லை என பிரகடனப்படுத்துகின்றனர். ஓய்வூதியத் திட்டங்கள் எல்லாம் கைகழுவப்படுகின்றன, பள்ளிகள் மூடப்படுகின்றன, உள்ளூர் சமுதாயங்களின் நலம் பேண முக்கியமான எண்ணற்ற சமூக சேவைகள் எல்லாம் உடனடியாய் குறைக்கப்பட்டு விட்டன அல்லது அகற்றப்பட்டு விட்டன. சீர்திருத்தம் என்கின்ற பெயரில் சுகாதார பராமரிப்பு கிடைப்பது முன்பை விட பெரும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருக்கிறது.

5. அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் ஒரு உலகளாவிய நிகழ்ச்சிப்போக்கின் ஒருபாகமாகும். செப்டம்பர் 2008ல் ஆரம்பித்த பொருளாதார நிலைமுறிவு 1929ல் நிகழ்ந்த வோல் ஸ்ட்ரீட் பொறிவுடன் ஒப்பிடத்தக்கது. 80 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது போலவே இன்றும் நெருக்கடியானது அமெரிக்காவில் தொடங்கி ஐரோப்பாவிற்கும் மற்றும் உலகெங்கிற்கும் பரவியிருக்கிறது. செப்டம்பர் 2008ல் வோல் ஸ்ட்ரீட் வங்கிகளும் முதலீட்டு நிறுவனங்களும் திவால் நிலைக்கு முகம் கொடுத்தன. 2010 இளவேனில் காலத்திற்குள், ஐரோப்பிய நாடுகளின் கடனைச் செலுத்தும் நிதித் திறன் சந்தேகத்திற்குட்பட்டதாய் ஆகியிருக்க, ஒன்றின் பின் ஒன்றாய் அரசாங்கங்கள் ஒடுக்குமுறை சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான தங்களது உறுதிப்பாட்டை அறிவித்தன.

6. வோல் ஸ்ட்ரீட்டில் 1929 நிலைகுலைவிற்குப் பின், அரசாங்கமும் ஊடகங்களும் செழுமை இதோ வரப் போகிறது என்கிற பல்லவியையே நிறுத்தாமல் திரும்பத் திரும்பப் பாடின. ஆனால் பங்குச் சந்தை பொறிவுடன் தொடங்கிய பெருமந்த நிலை பின் உலகெங்கும் பரவி ஒரு தசாப்தத்திற்கும் அதிகமாய் நீடித்ததோடு முன்கண்டிராத துன்பங்களுக்கும் அழிவிற்கும், இராணுவ சர்வாதிகாரங்கள், பாசிசம் மற்றும் உலகப் போருக்கும் இட்டுச் சென்றது.

7. கடந்த கால துன்பியல் நிகழ்வுகளின் சித்திரம் முன்னை விட பெரிதாகி நிற்கிறது. இரண்டாம் உலகப் போரையொட்டிய தருணத்தில், இருபதாம் நூற்றாண்டு புரட்சிகர சோசலிசத்தின் மிகப்பெரும் மூலோபாய ஆசிரியரான லியோன் ட்ரொட்ஸ்கி, உலக நெருக்கடியை முதலாளித்துவத்தின் மரண ஓலம் என்று வர்ணித்தார். மனிதகுலத்தின் மொத்த கலாச்சாரத்தையும் ஒரு பெருங்கேடு அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது என அவர் எச்சரித்தார். பின்நடந்த பயங்கரங்கள் அவரது வார்த்தைகளை நிரூபணம் செய்தன. உலகத்தை போர் என்னும் பேரழிவுக்குள் அமிழ்த்தித் தான் முதலாளித்துவம் உயிர்பிழைக்க முடிந்தது. 1945ல் போர் முடிவதற்குள் சுமார் 70 மில்லியன் பேர் உயிரிழந்திருந்தனர்.

8. ஒரு புதிய எச்சரிக்கையானது அவசியமான அனைத்து அவசரத்துடனும் எழுப்பப்பட்டாக வேண்டும். நடப்பு நெருக்கடி வெறுமனே எளிதாய் அகன்று விடாது. முதலாளித்துவம் மனிதகுலத்தை இட்டுச் சென்றிருக்கக் கூடிய பொருளாதார மற்றும் சமூக முடக்கத்திற்குள் இருந்து வெளியேறுவதற்கு, எளிதான வழியைக் கூட விடுங்கள் அமைதியான வழியே எதுவும் கிடையாது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஒருமைப்பாட்டுடன் செயல்படும் சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டம் என்பது வலிமறக்கச் செய்யும் மருந்துகள் அல்லது அரைகுறை நடவடிக்கைகளின் ஒரு தொகுப்பு அல்ல. இந்த கட்சியின் நோக்கம் அல்லது நான்காம் அகிலத்தில் உள்ள அதன் சக சிந்தனையாளர்களின் நோக்கம் அமெரிக்க மற்றும் சர்வதேச முதலாளித்துவத்தை சீர்திருத்துவது அல்ல. இருபதாம் நூற்றாண்டின் துன்பியல் சம்பவங்களில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏதேனும் உண்டு என்றால், இருபத்தியோராம் நூற்றாண்டில் இன்னும் கூடுதலான குருதி தோய்ந்த வகையில் இதே பயங்கரங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க சோசலிசத்திற்கான அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டத்தின் மூலமாக மட்டும் தான் முடியும் என்பது தான் அது.

அமெரிக்க முதலாளித்துவத்தின் வரலாற்று வீழ்ச்சி

9. ஒரு அதிமுக்கிய அம்சத்தில் நடப்பு நெருக்கடியானது பெருமந்த நிலை காலத்திலிருந்து வேறுபட்டு நிற்கிறது. நெருக்கடி கடுமையாக இருந்த சமயத்திலும், 1930களின் அமெரிக்கா ஒரு எழுச்சியுற்றுக் கொண்டிருந்த பொருளாதார சக்தியாகவே இருந்தது. முந்தைய அரை நூற்றாண்டு காலத்தில் அசுரவேகத்தில் வளர்ச்சியடைந்திருந்த அமெரிக்க முதலாளித்துவமானது, அப்போதும் உலகில் மிகவும் சக்திவாய்ந்த, தொழில்நுட்பத்தில் முன்னேறிய மற்றும் செயல்திறன் மிக்க தொழில்துறை மற்றும் உற்பத்தி தளத்தைக் கொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வரும் சமயத்தில் எல்லாம், அமெரிக்கா உலகின் மிகப்பெரும் தொழில்துறை சக்தியாகவும் அதன் பிரதான கடன்வழங்குநராகவும் சவாலற்ற இடத்தைப் பிடித்து விட்டிருந்தது. இது தான் உலக முதலாளித்துவம் ஸ்திரமுற்றதற்கும் போரின் முடிவைத் தொடர்ந்து வந்த கால் நூற்றாண்டு காலத்தில் அமெரிக்க தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் துரிதமாக உயர்வு கண்டதற்குமான பொருளாதார அடிப்படையாக அமைந்திருந்தது. ஆயினும் ஐரோப்பாவும் ஜப்பானும் மீட்சி கண்டதானது 1950கள் மற்றும் 1960களில் அமெரிக்க முதலாளித்துவத்தின் மேலாதிக்கத்தினை கொஞ்சம் கொஞ்சமாய் கீழறுத்தது. வர்த்தக சமநிலை சேதாரமுற்றுக் கொண்டு சென்றது போருக்குப் பிந்தைய சர்வதேச நிதி முறைமைக்கான அச்சாணியாக சேவை செய்த அமெரிக்க டாலர் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை மற்றும் சமூக போர்க்குணம் ஆளும் வர்க்கத்திடம் இருந்து சலுகைகளைக் கைப்பற்றியது அமெரிக்க முதலாளித்துவத்தின் நிதியாதாரங்கள் மீது கூடுதலான சுமைகளை வைத்தது. வியட்நாம் மக்களுக்கு எதிராக அமெரிக்கா நிகழ்த்திய வெற்றிபெறாத பிற்போக்குவாதப் போரினால் ஏற்பட்ட திகைப்பூட்டும் செலவுகள் 1960கள் முழுவதிலும் பெருகிக் கொண்டிருந்த பொருளாதார சிக்கல்களை ஒரு முட்டுமோதலான நிலைக்கு கொண்டுவந்திருந்தன. அமெரிக்காவின் சவாலற்ற உலகளாவிய பொருளாதார மேலாதிக்கமானது முடிவுக்கு வந்து விட்டது என்பதை ஒப்புக் கொள்ளும் வகையிலானதொரு விதத்தில், நிக்சன் நிர்வாகம் ஆகஸ்டு 15, 1971 அன்று டாலரை தங்கமாக மாற்றிக் கொள்ளும் (ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கு 35 டாலர் என்கிற வீதத்தில்) சர்வதேச பரிவர்த்தனை முறையை முடிவுக்குக் கொண்டு வந்தது.

10. கடந்த நான்கு தசாப்தங்கள் அமெரிக்க முதலாளித்துவத்தின் தேக்கத்தையும் அதன் சிதைவையும் கண்டிருக்கின்றன. 1970களின் ஆரம்ப காலம் முதல் டாலரின் மதிப்பானது, ஐரோப்பாவில் அமெரிக்காவின் பிரதான முதலாளித்துவ போட்டி நாடுகளின் மற்றும் ஜப்பானின் நாணய மதிப்புகளுடன் ஒப்பிடுகையில், மிகப் பெருமளவில் வீழ்ச்சி கண்டிருக்கிறது. அமெரிக்கா உலகில் மிகப் பெரும் கடனாளி நாடாக ஆகியிருக்கிறது. வர்த்தக பற்றாக்குறை மற்றும் செலுத்துமதி நிலுவையின் மாதாந்திர தொகையே பல பத்து பில்லியன் டாலர்களாகின்றது. சர்வதேச போட்டிக்கும் மற்றும் இலாபவிகித வீழ்ச்சிக்குமான இடைத்தொடர்பின் விளைவால் அமெரிக்க முதலாளித்துவத்தின் தொழிற்துறை மற்றும் உற்பத்தி அடித்தளம் சிதைந்து போனது நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தின் பாரிய வளர்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்கியது. முப்பது வருடங்களுக்கு முன்பாக, நிதித்துறை பெருநிறுவன வருவாயில் வெறும் ஆறு சதவீதம் மட்டுமே பங்களித்தது. இன்று, பெருநிறுவன வருவாயில் நாற்பது சதவீதத்திற்கும் மேலாக வட்டிக்கு விடுவது, பங்குச் சந்தை ஊக வணிகம் மற்றும் தொடர்புடைய நிதிய ஏமாற்றுதல் வடிவங்களின் வழியே உருவாக்கப்படுகின்றன. மேலும், நிதி தனவான்களின் உயர்தட்டினர் அமெரிக்காவிலும் சர்வதேசரீதியாகவும் உற்பத்தியில் முதலீடு செய்வதைப் பொறுத்தவரை, அது வெகு குறைந்த காலத்தில் மிகப்பெரும் இலாபங்களையும் தனிநபர் சொத்துகளையும் உருவாக்குவதற்கே அன்றி வேறெதற்காகவும் அல்ல. இது தான் வேலை அகற்றத்தை, ஊதியம் குறைத்து உற்பத்தித் திறனை அதிகரிப்பதை, மற்றும் சமூக செலவினங்களை வெட்டுவதை நோக்கி தளர்ச்சியற்று செலுத்தப்படுவதற்கான பொருளாதார மூலவளம் ஆகும். ஒவ்வொரு தொழிலாளரின் சதை, எலும்புகள் மற்றும் தசைநார்களில் இருந்தும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இலாபத்தை பிழிந்தெடுக்க தலைப்படும் ஒரு உலகளாவிய சுரண்டல் அமைப்பின் உச்சத்தில் அமெரிக்க நிதி பிரபுத்துவ உயர்தட்டு நிற்கிறது.

11. வெறுமனே பணவெறியும் அளவற்ற தனிநபர் செல்வத்தை நோக்கிச் செல்வதும் மட்டுமே அமெரிக்க ஆளும் வர்க்கத்தை சுரண்டலை தீவிரப்படுத்துவதை நோக்கி செலுத்தவில்லை. அமெரிக்க முதலாளித்துவத்தின் நீடித்த பொருளாதாரச் சிதைவு தான், இறுதிப் பகுப்பாய்வில், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக நிலைமைகள் மீதான தாக்குதலுக்குப் பிரதான காரணமாக இருக்கிறது. அமெரிக்கா இனியும் தன்னை எல்லையற்ற வாய்ப்புகளுக்கான இடம் என்பதாய் கூறிக் கொள்ள முடியாது. உண்மையில், இந்த பிரபல கூற்றானது ஒரு அவலட்சணமானதும் கடுமையானதுமான உண்மையை மறைத்த ஒரு மூடநம்பிக்கையாகவே இருந்தது. ஆனால் 1930களில், பிராங்ளின் ரூஸ்வெல்ட் தலைமையின் கீழ், தொழிலாளர்களுக்கு ஒரு புதிய உடன்படிக்கையை (New Deal) வாக்குறுதியளிப்பது அமெரிக்க முதலாளித்துவத்திற்கு அப்போதும் சாத்தியமானதாய் இருந்தது. அப்போதும் கூட, சீர்திருத்த சிந்தனை கொண்ட ஒரு நிர்வாகம் அதிகாரத்தில் இருந்த நிலையில், ரூஸ்வெல்டின் மேம்போக்கான மற்றும் பெரும்பாலும் உதட்டளவிலான வாக்குறுதிகளை யதார்த்தத்திற்கு கொண்டு வர தொழிலாள வர்க்கம் கடுமையான போராட்டங்களை நிகழ்த்த வேண்டியிருந்தது. இன்று, ஒபாமா நிர்வாகம் வழங்குவதற்கு எந்த புதிய உடன்படிக்கையும் இல்லை. ஆம் நம்மால் முடியும் என்பது அவரது பிரச்சார கால முழக்கமாய் இருக்க, இல்லை நம்மால் முடியாது என்பது தான் அவரது ஜனாதிபதிப் பதவியின் கீழான யதார்த்தமாய் ஆகியிருக்கிறது.

ஒபாமா நிர்வாகத்தின் தோல்வி

12. ஜோர்ஜ் W.புஷ் காலத்தின் பிற்போக்கான கொள்கைகளை ஒபாமா நிர்வாகம் திரும்பப் பெறும் என்ற நம்பிக்கையில் தான் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் ஒபாமாவிற்கு வாக்களித்தனர். ஆனால் உண்மை அனுபவமோ இந்த நம்பிக்கைகளை மறுப்பதாக அமைந்திருக்கின்றன. பயங்கரவாதத்தின் மீதான போர் என்கிற மோசடியான பதாகையின் கீழ், ஒபாமா நிர்வாகம் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் உலகளாவிய ஏகாதிபத்திய நிகழ்ச்சிநிரலை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஈராக்கில் துருப்புகள் தொடர்ந்து இருந்து வருகின்றன, ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் இராணுவ நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆட்களற்ற டிரொன் ஏவுகணைகள் (drone missiles) பயன்படுத்தப்பட்டு ஆப்கானிய மற்றும் பாகிஸ்தானின் அப்பாவி பொதுமக்கள் இலக்கு நிர்ணயித்து கொல்லப்படுவது அன்றாட நிகழ்வாகி இருக்கிறது. அதே சமயத்தில், ஈரானுக்கு எதிராக நெருக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வரும் ஒபாமா நிர்வாகம், ஏதேனும் ஒரு சாக்கில், பெருங்கேடான பின்விளைவுகளை அளிக்கக் கூடிய ஒரு இராணுவத் தாக்குதலுக்கு முகாந்திரங்களை தயாரித்து வருகிறது. ஒபாமா, தனக்கு முன் இருந்தவர்கள் போலவே, உலகளாவிய பொருளாதார வல்லமையில் அமெரிக்கா கண்டிருக்கும் வீழ்ச்சியின் விளைவுகளை அமெரிக்க இராணுவ வல்லமையைப் பயன்படுத்தி சமப்படுத்துவதில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

13. தகவல்தொடர்பு மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களில் உருவாகியுள்ள முன்னேற்றங்கள் பொருளாதார வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உலகளாவிய வகையில் ஒருங்கிணைப்பு செய்வதற்கான சடரீதியான அடித்தளங்களை உருவாக்கியிருக்கின்றன. ஆனால் பொருளாதார பூகோளமயமாக்கலின் முற்போக்கு அம்சங்களும் உற்பத்தித்திறன் ரீதியான சாத்தியங்களும் உலகம் தொடர்ந்து தேசிய அரசுகளாய் பிளவுபடுத்தப்பட்டிருக்கும் தன்மையால் பயனற்றுப் போகின்றன. இந்த பூமிப்பந்தின் அரசியல் வாழ்க்கை இந்த முரண்பாட்டால் தான் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. போட்டி போடும் முதலாளித்துவ தேசங்களுக்கு இடையிலான சண்டையின் மிகப் பயங்கரமான பின்விளைவுகளை முதலாம் உலகப் போரிலும் இரண்டாம் உலகப் போரிலுமாய் வரலாறு ஏற்கனவே விளங்கப்படுத்தியிருக்கிறது. உலகின் எந்த பகுதியிலும் சாத்தியமான எதிரிகளின் பொருளாதார வளர்ச்சியை அமெரிக்கா கவலையுடன் கூர்ந்து பார்க்கிறது. குறிப்பாக, சீனாவின் துரிதமான பொருளாதார அபிவிருத்தியானது அமெரிக்காவின் அரசியல் மற்றும் இராணுவ ஸ்தாபகத்திற்குள்ளாக சீனாவுடன் போர் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் அத்தகைய போரின் தாக்கங்கள் என்னவாய் இருக்கும் என்பது குறித்தும் பரவலான விவாதத்தைத் தூண்டியிருக்கிறது.

14. இத்தகையதொரு போரின் விளைவு, கேள்விக்கிடமின்றி, கற்பனை செய்ய முடியாத பரிமாணங்கள் கொண்ட ஒரு பேரழிவாய் இருக்கும் என்றாலும் இது நடக்க முடியாத ஒன்றல்ல. ஏகாதிபத்தியத்தின் தர்க்கம் இராணுவ மோதலுக்கு இட்டுச் செல்கிறது, போரை நோக்கிய உந்துதலோ கடுமையான பொருளாதார மற்றும் புவி-மூலோபாய கருதல்களால் தீர்மானிக்கப்படுகின்றன. அதேபோல் சீனா தான் ஒரே சாத்தியமான விரோதி என்பதல்ல. மத்திய ஆசியா, கருங்கடல் பிராந்தியம், பால்கன்கள் மற்றும் கிழக்கு ஐரோப்பிய பகுதியில் மோதுகின்ற நலன்களும் இலட்சியங்களும் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான தொடர்ந்த பதட்டங்களுக்கு இட்டுச்செல்கின்றன. பொருளாதார கொள்கைகள் மீது பெருகும் கருத்துவேறுபாடுகள் அமெரிக்காவுக்கும் ஜேர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான பழைய குரோதங்களின் மறுஎழுச்சிக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கின்றன என்பதற்கான தெளிவான அறிகுறிகளும் தோற்றமளிக்கின்றன. அதன் சொந்த அரைக்கோளத்திலேயே, அமெரிக்காவிற்கும் இலத்தீன் அமெரிக்க அரசுகளுக்கும் இடையிலான உறவுகள் சேதாரமுற்று வருகின்றன.

15. உலகளாவிய முதலாளித்துவ அமைப்பில் தனது மேலாதிக்க நிலையை தக்கவைத்துக் கொள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம் தீர்மானகரமாக இருப்பதானது பல வேறுபட்ட நாடுகளுடன் இராணுவ மோதலுக்கு இட்டுச்செல்கிற எண்ணற்ற சூழ்நிலைகளை உருவாக்குகிறது. இந்த சூழல்களில் ஏதேனும் ஒன்றோ, அல்லது கற்பனைபண்ணியிராத ஒரு மாறுபட்டவகையோ, இறுதியாக யதார்த்தத்தில் நிகழ்த்தப்படும். இதைத்தான், உண்மையில், அமெரிக்க இராணுவம் எதிர்பார்த்திருக்கிறது. அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைமையகத்தால் வெளியிடப்பட்ட கூட்டுச் செயல்பாட்டு சூழல் (JOE) குறித்த உத்தியோகப்பூர்வ 2010 ஆய்வறிக்கை தனது அறிமுகத்தில் இவ்வாறாக பட்டவர்த்தனமாய் அறிவிக்கிறது: போர் என்பது வரலாற்றின் பாதையில் மாற்றத்திற்கான முக்கிய உந்துசக்தியாக இருந்திருக்கிறது, வருங்காலம் இதிலிருந்து மாறுபட்ட வகையில் இருக்கும் என்று நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை. இன்னுமொரு பெருந்துயரம் விளைவிக்கக் கூடிய உலகப் போரானது தடுக்கப்பட வேண்டுமாயின் அதற்கு ஒரே ஒரு வழி தான் உள்ளது, சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அரசியல்ரீதியாக அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே அது முடியும். இந்த சர்வதேச போராட்டத்தில் அமெரிக்க தொழிலாள வர்க்கம் கட்டாயமாக முக்கிய பங்கு வகிக்கும்.

16. பல பத்து மில்லியன் கணக்கான தொழிலாள வர்க்க அமெரிக்கர்களின் பொருளாதார துயர்துடைக்க எந்த குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளையும் எடுக்காத ஒபாமா நிர்வாகத்தின் தோல்வியானது சாட்சியம் கூறும் அமெரிக்க அரசியல் வாழ்க்கையின் உச்ச யதார்த்தம் இது தான்: அரசாங்கத்தின் அனைத்து துறைகளிலும் மற்றும் இரு-கட்சி ஆட்சியமைப்பு முறையின் மீதும் பில்லியன்-டாலர் பெருநிறுவனங்கள் மற்றும் பெரும் செல்வந்தர்கள் முழுக் கட்டுப்பாட்டை தக்க வைத்துள்ளனர். நிறைவேற்றுத்துறை, நாடாளுமன்றம், சட்டவாக்கத்துறை மற்றும் மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் எல்லோருமே பெருநிறுவன நலன்களுக்கே சேவகம் செய்கின்றனர். முதலாளித்துவ வர்க்கம் தனது நலன்களுக்கும் சொத்துக்கும் அச்சுறுத்தலாகக் கருதும் எந்த சட்டமும் நிறைவேற்றப்பட்டு விட முடியாது, எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டு விட முடியாது. அமெரிக்க ஜனநாயகம் முன்னெப்போதையும் விட அப்பட்டமாய் பணக்காரர்களுக்காக, பணக்காரர்களால், பணக்காரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசாங்கமாய் நின்று கொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் வேறு எந்த முன்னேறிய முதலாளித்துவ நாட்டையும் விட அதிகமாய் சமூக ஏற்றத்தாழ்வை உருவாக்கியிருக்கும் தனிநபர் செல்வத்தின் வளர்ச்சி மற்றும் குவிப்பு என்பது, வரி வெட்டுகள் மற்றும் ஒரு சமயத்தில் பெருநிறுவனங்களின் சுரண்டல் நடவடிக்கைகள் மீது வைக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டது ஆகியவற்றின் விளைவே ஆகும்.

17. உற்பத்தி சாதனங்கள் தனியார் உடைமைகளாய் இருப்பதன் பின்விளைவாய் திகைப்பூட்டும் அளவு செல்வம் மக்கள் தொகையின் வெகு சிறு எண்ணிக்கையிலானோரிடம் குவிந்திருப்பது என்பது சமூகரீதியாய் அருவெறுப்பூட்டுகிறது என்பது மட்டுமல்ல. இன்னும் குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்காவிலும் சரி சர்வதேசரீதியாகவும் சரி பொருளாதார ரீதியாக அழிவூட்டக் கூடியதாகவும் சமூகத்தின் முக்கிய தேவைகளுடன் இயைவற்றதாயும் இருக்கிறது. இது உலகளாவிய ஒருங்கிணைப்பு கொண்ட வெகுஜன சமூகத்தின் காலம். நமது கோளத்தில் சுமார் ஏழு பில்லியன் மக்கள் வசிக்கின்றனர். முந்நூறு மில்லியன் மக்கள் அமெரிக்காவில் வாழ்கின்றனர். உணவு மற்றும் பிற அடிப்படை வசதிகளை வழங்குதல், கல்வி, மருத்துவப் பராமரிப்பு, வீட்டு வசதி, சமூக உள்கட்டமைப்பு, இயற்கை வளங்களின் அபிவிருத்தி என நவீன சமூகம் முகம் கொடுக்கும் அத்தனை பெரும் சமூகப் பிரச்சினைகளுக்கும் தனிநபர் தன்மையுடனானவை அல்லாது ஒரு கூட்டு தன்மையுடனான தீர்வுகள் அவசியமாயிருக்கின்றன. உலகளாவிய பொருளாதார வளங்களை பகுத்தறிவுடன் அபிவிருத்தி செய்வதும் அவற்றை உலக மக்களின் நலன்களின் பேரில் பயன்படுத்துவதும் நடந்தாக வேண்டிய அவசியங்களாக உள்ளன. மேலும், வறுமையை ஒழிப்பதற்கும் அதிகரித்துக் கொண்டே செல்லும் மக்களின் சமூக மற்றும் கலாச்சார தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அவசியமாகத் திகழும் தொழில்நுட்ப முன்னேற்றங்களும் பொருளாதார வளர்ச்சியும் நமது கோளத்தை எதிர்கொண்டிருக்கும் சிக்கலான மற்றும் வாழ்வை அச்சுறுத்துகிற சுற்றுசூழல் பிரச்சினைகள் குறித்த விஞ்ஞானத்தில் வேரூன்றிய விழிப்புணர்வு இல்லாமல் சாதிக்கப்பட முடியாது.

18. அனைத்து முக்கிய பொருளாதார முடிவுகளும் தனியார் உடைமைகளான பெருநிறுவனங்களால் எடுக்கப்படுகிற ஒரு நாட்டில் அல்லது ஒரு உலகத்தில் இந்த பிரச்சினைகளில் எதுவும் நிவர்த்தி செய்யப்பட முடியாது. 2008 உலகளாவிய நிதிப் பொறிவை மிகவிரைவாக்கிய வீட்டு அடமானப் பத்திரங்களிலான வெறிபிடித்த ஊகமானது, உலகப் பொருளாதாரம் எத்தகைய வகையில் தனிநபர் செல்வத்திற்காக வெறிகொண்டும் மற்றும் சமூக குற்றமாகும் வகையிலும் நடைமுறைப்படுத்துவோரின் தயவில் விடப்பட்டுள்ளது என்பதை விளங்கப்படுத்தியது. இன்னும், அந்த படிப்பினை போதுமானதல்ல என்றால், மெக்சிகோ வளைகுடாவில் நூற்றுக்கணக்கான மில்லியன் காலன்களில் கச்சா எண்ணெய் கசிந்து மாசுபட்டு சுற்றுச்சூழல் பெருங்கேடு நிகழ்ந்ததானது தனியார் உடைமை பெருநிறுவனங்களின் சமூகரீதியான நச்சுக் குணத்தின் வரலாற்று அம்பலப்படுத்தல் ஆகும். பிரிட்டிஷ் பெற்றோலியம் (BP) நிறுவனம் இலாபத்தைக் கருதி மிக அடிப்படையான பாதுகாப்பு நடைமுறைகளைக் கூட அலட்சியப்படுத்தியிருந்தது அல்லது தெரிந்தே மீறியிருந்தது என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் பெற்றோலிய நிறுவனத்தின் குற்ற நடத்தைக்கு அடுத்தடுத்த அமெரிக்க குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி நிர்வாகங்கள் துணைபோயிருக்கின்றன.

19. பிரிட்டிஷ் பெற்றோலியத்தின் டீப்வாட்டர் ஹரிசோன் எண்ணெய்க்கிணறு துளையிடும் எந்திரத்தின் வெடிப்பால் உருவான அழிவு இத்தனை பிரம்மாண்டமானதாய் இருந்தும், ஒபாமா நிர்வாகம் பிரிட்டிஷ் பெற்றோலியம் மற்றும் பிற நாடுகடந்த பெருநிறுவனங்கள் செலுத்தும் பாரிய பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கை எதிர்கொள்கையில் முடக்கமுற்று நிற்கிறது. பெருநிறுவன சக்திக்கு முன் தன்னுடைய அடிபணிவை உரத்தகுரலிலும் எதிர்பார்க்கத்தக்க வகையிலும் விளங்கப்படுத்தும் விதத்தில், ஜனாதிபதி, பிரிட்டிஷ் பெற்றோலியத்தின் நிதியியல்ரீதியான செயல்படுதிறனைக் கீழறுக்கும் எண்ணம் ஏதும் தனக்கு இல்லையென அறிவித்து விட்டார். எப்படி வோல் ஸ்ட்ரீட் நிதியாதாரதாரர்கள் அவர்களது பொறுப்பற்ற ஊக வணிகத்தால் விளைந்த பொருளாதாரப் பேரழிவுக்கு ஒருபோதும் குற்றவியல்ரீதியாக பொறுப்பாக்கப்படவில்லையோ, அதே விதத்தில், பிரிட்டிஷ் பெற்றோலியமும் அதன் செயல்பாடுகளின் பின்விளைவுகளில் இருந்து பாதுகாக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் பெற்றோலியம் மற்றும் அதன் நிர்வாகிகளின் தலைவிதியைக் காட்டிலும் முக்கியமானது இந்த பேரழிவின் ஆழமான பொருளாதார வேர்கள். மெக்சிகோ வளைகுடாவின் பேரழிவு மட்டுமல்ல, விரிவடையும் பொருளாதார நெருக்கடி எடுக்கிற எண்ணற்ற வடிவங்கள் அனைத்தின் அடிப்படை மூலவளமும், உற்பத்தி சாதனங்களுக்கு சொந்தக்காரர்களாக அவற்றைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் முதலாளித்துவ பெருநிறுவனங்களின் இலாபத்தையும் தனிநபர் செல்வத்தையும் நோக்கிய வேட்டைக்கு உழைக்கும் வெகுஜன மக்களின் பொருளாதார மற்றும் சமூக நலன்களை இரக்கமற்று அடிபணியச் செய்வதில் தங்கியிருக்கிறது. 

தாராளவாதத்தின் திவால்நிலையும் ஜனநாயகக் கட்சியும்

20. 2008 இலையுதிர் காலத்தில் வெடித்த பொருளாதார நெருக்கடி முடிவு பார்வைக்கு அப்பால் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒபாமா நிர்வாகம் தனது பரிதாபமான அரைகுறை நடவடிக்கைகளின் பயனற்ற தன்மையை வெறுமையான வார்த்தை ஜாலங்களைக் கொண்டு மூடிமறைக்க முயற்சி செய்து வருகிறது. நெருக்கடிக்கான அதன் பதிலிறுப்பு மேலும் மேலும் 1929 பொறிவுக்குப் பின் ஹெர்பெர்ட் ஹூவரின் பதிலிறுப்பை நினைவுகூரச் செய்கிறது. பொருளாதார நெருக்கடியின் அந்த ஆரம்ப காலகட்டத்தில் ஒரு தாராளவாத பத்திரிகையாளர் இவ்வாறு கருத்து கூறினார்: பதினெட்டு மாதங்களாக வேலைவாய்ப்பின்மையானது தொழில்துறையிலும் விவசாயத் துறையிலும் ஒரேவிதத்தில் வறுமையையும் கூரிய துன்பத்தையும் பரப்பிக் கொண்டிருக்கிறது. நடப்பு பொருளாதார பேரழிவு எப்போது முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்பது எவர் ஒருவருக்கும் தெரியவில்லை. பிரமையளித்த ஆண்டுகள் எல்லாம் அச்சுறுத்தத்தக்க பொருளாதார பாதுகாப்பின்மைக்கும் பரந்துபட்ட விரக்திக்குமே பாதை காட்டியிருக்கின்றன. பொருளாதார பாதுகாப்பை சாதிப்பதை நோக்கிய ஒத்துழைப்பு மீது ஜனாதிபதியின் வாக்குறுதி குறித்த கபடநாடகத்தை இந்த பதினெட்டு மாதங்கள் வெளிக் கொணர்ந்திருக்கின்றன. மந்த நிலையின் தீவிரமான தன்மையை குறைத்துக் காட்டுகின்ற முயற்சிகள், வளமையை மீட்சி செய்கிற நடவடிக்கைகள் எடுக்கப்படவிருப்பதாக துணிச்சலான வாக்குறுதிகள், மற்றும் நிர்வாகம் நழுவிக் கொள்வதில் தீர்மானமாய் இருந்த பணிகளை எடுத்துச் செய்வதற்கு தனியார் மற்றும் உள்ளூர் முகமைகளை ஊக்குவிப்பதற்கான பரிதாபகரமாய் வெற்றிகாண முடியாது தோற்ற ஒரு வேலைத்திட்டம் ஆகியவை தான் பொருளாதார பாதுகாப்பை சாதிப்பதற்கான நிர்வாகத்தின் முயற்சிகளில் இருந்தவை ஆகும்.1

21. 1931ல் எழுதப்பட்ட இந்த வார்த்தைகள் ஹூவர் நிர்வாகத்தின் கொள்கைகள் மீதான குற்றச்சாட்டு ஆகும். பொருளாதார மற்றும் சமூகப் பேரிடருக்கு ஒபாமா நிர்வாகத்தின் பதிலிறுப்பு குறித்த விவரிப்பாகவும் இதே வார்த்தைகள் சேவை செய்யத்தக்கவையாக இருக்கின்றன. இந்த தோல்வி வெறுமனே ஒரு ஜனாதிபதி அலுவலகத்தின் தோல்வி அல்ல, அது பாதுகாக்கும் ஒட்டுமொத்த அரசியல் அமைப்பு மற்றும் முதலாளித்துவ பொருளாதார ஒழுங்கமைப்பின் தோல்வி ஆகும். நிர்வாகம் திடீரென்று பாதை மாற்றிக் கொண்டு உரிய வரவேற்புடன் ரூஸ்வெல்டின் புதிய உடன்படிக்கையை மறு பிறப்பை பிரகடனம் செய்யும் என்று நம்பிக்கைக்கு எதிராய் நம்பிக்கை கொண்டிருக்கும் தாராளவாத ஜனநாயகவாதிகளின் எண்ணிக்கை கொஞ்சம் அல்ல. அவர்களின் கனவு எல்லாம் வீண். ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் கொள்கைகளை உத்தரவிடும் பெருநிறுவன மற்றும் நிதியியல் சிலவராட்சி சிக்கன நடவடிக்கைகளை இன்னும் கூடுதல் கடுமையுடன் செயல்படுத்தக் கோருகின்றது.

22. அமெரிக்க ஏகாதிபத்தியமானது தனது உலகளாவிய அதிகாரம் மற்றும் செல்வாக்கின் உச்சத்தை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில், அமெரிக்க அரசியல் சட்டத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் அரசியல் உரிமைகள், தன்னளவில், சமத்துவத்தையும் மகிழ்ச்சி நோக்கிய பயணத்தை அனுமதிப்பதையும் உத்தரவாதமளிக்க போதுமானவையாக இல்லை என்பதை அதன் தலைவர்கள் ஒப்புக் கொண்டனர். ஜனவரி 1944 அன்று ஜனாதிபதி ரூஸ்வெல்ட் வழங்கிய நாட்டு நிலை (State of the Union) உரையில் அறிவித்தார்: நமது மக்களில் ஒரு சிறு தொகையினர் எண்ணிக்கை மூன்றில் ஒரு பகுதியாயினும் அல்லது ஐந்தில் ஒரு பகுதியாயினும் அல்லது பத்தில் ஒரு பகுதியாயினும் சரி - போதுமான உணவின்றி, போதுமான உடையின்றி, போதுமான வீட்டுவசதியின்றி பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிற பட்சத்தில் நம்மால் திருப்தியுற இருக்க முடியாது. பொருளாதார பாதுகாப்பும் விடுதலையும் இன்றி உண்மையான தனிநபர் சுதந்திரம் இருக்க முடியாது என்பது தானாக-வெளிப்படும் உண்மையாகி இருப்பதாக அவர் தெரிவித்தார். பெருமந்தநிலையால் முழுக்கவும் பெரும் அவநம்பிக்கைக்கு ஆளாகியிருந்த முதலாளித்துவத்தை ஊக்குவிக்கும் அவரது முயற்சியின் பகுதியாக, ரூஸ்வெல்ட், இடம், இனம் மற்றும் மதநம்பிக்கை எதுவாக இருந்தாலும் அனைவருக்கும் பாதுகாப்பையும் செழுமையையும் உறுதியளிக்கிற ஒரு புதிய அடிப்படையை வழங்கும் இரண்டாவது உரிமைகள் மசோதாவைக் கொண்டுவர முன்மொழிந்தார்.

23. அடுத்த 20 ஆண்டுகளில், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில், அமெரிக்காவும் உலகப் பொருளாதாரமும் வரலாற்றில் முன்கண்டிராத பொருளாதார வளர்ச்சி வீதங்களைக் கண்டன. அமெரிக்காவிற்குள்ளாக வாழ்க்கைத் தரங்கள் கணிசமாய் உயர்ந்தன. ஆனால் ரூஸ்வெல்டின் இரண்டாவது உரிமைகள் மசோதாவோ முகவரியற்ற கடிதத்தின் நிலையில் இருந்தது. அவர் பிரகடனப்படுத்திய பொருளாதார பாதுகாப்பு என்பது ஒருபோதும் நிறைவேற்றத்தின் கிட்டே நெருங்காத ஒரு உரிமையாகவே தொடர்ந்தது. அமெரிக்க வரலாற்றின் மிக வளமையான காலகட்டத்திலும் கூட, சுமார் 20 சதவீத அமெரிக்கர்கள் வறுமையின் சதுப்பில் தான் வாழ்ந்து கொண்டிருந்தனர். 1964ம் ஆண்டில் ஜனாதிபதி லிண்டன் ஜோன்சன் தனது வறுமை மீதான போரை பிரகடனம் செய்தார். ஆனால் அமெரிக்காவின் உலகளாவிய மற்றும் உள்முக முரண்பாடுகள் பெருகியதால் அந்த பரப்புரையின் வாக்குறுதிகள் கைவிடப்பட்டன. 1970கள் முதல், ஜனநாயகக் கட்சியானது தொடர்ந்து வலது நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது, தாராளவாத சீர்திருத்தம் குறித்த தனது முந்தைய கொள்கைகளை எல்லாம் கைவிட்டது. இந்த நிகழ்போக்கு அமெரிக்காவின் உலக நிலையில் நேர்ந்த வீழ்ச்சிக்கு பொருந்தும் முகமாய் அமைந்தது. கடந்த 40 வருடங்களில், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் தொடர்ந்து சரிந்து வந்திருக்கின்றன. மிக சமீபத்திய பேரழிவு தொடங்குவதற்கு முன்பே கூட 1979-80, 1981-83, 1991-93, மற்றும் 2001-03 ஆண்டுகளின் பெரும் மந்த நிலைகள் உழைக்கும் மக்களுக்கு மிகத் தீவிரமான பொருளாதார இடரை விளைவித்தன. 

24. அமெரிக்க முதலாளித்துவம் தனது மிகப்பெரும் வெற்றிகளுக்கான தசாப்தங்களிலேயே பொருளாதார பாதுகாப்பு மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் திறனற்றதாய் நிரூபணமானது. அப்படியானால், நிலைமுறிவு மற்றும் நெருக்கடியின் ஒரு காலகட்டத்தில், இந்த பொருளாதார அமைப்புமுறையில் இருந்து எதை எதிர்பார்க்க முடியும்?

அமெரிக்க தொழிலாளர்களும் சோசலிசமும்

25. அமெரிக்க தொழிலாளர்களை எதிர்கொண்டிருக்கும் அரசியல் மற்றும் சமூகக் கடமைகளின் வரலாற்றுத் தன்மைக்கும் அவர்களது நடப்பு நனவு மட்டத்திற்கும் இடையே பரந்ததொரு இடைவெளி நிலவுகிறது என்கிற உண்மையை யாரும் மறுப்பதிற்கில்லை. ஆனால் ஒரு உண்மையான புரட்சிகரக் கட்சியின் வேலைத்திட்டம் புறநிலை யதார்த்தத்தின் மீதான ஒரு விஞ்ஞானபூர்வமான பகுப்பாய்வின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டுமே அன்றி தொழிலாளர்கள் எதனை ஏற்றுக் கொள்ள தயாராய் இருப்பார்கள் அல்லது மாட்டார்கள் என்பது குறித்த மனப்பதிவுவாத அடிப்படையில் மற்றும் பொதுவாக போலியான கருத்தாக்கங்களின் அடிப்படையில் அல்ல. நான்காம் அகிலத்தின் ஸ்தாபகரான லியோன் ட்ரொட்ஸ்கி விளக்கியது போன்று: நமது கடமைகள் தொழிலாளர்களின் மனநிலையைச் சார்ந்து அமைவதில்லை. தொழிலாளர்களின் மனநிலையை அபிவிருத்தி செய்வது தான் நமது கடமை. அது தான் நமது வேலைத்திட்டம் சூத்திரப்படுத்த வேண்டியதும் முன்னேறிய தொழிலாளர்கள் முன் வழங்க வேண்டியதும் ஆகும். மேலும், அமெரிக்க தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு புரட்சிகர சவாலை திரட்டி முன்நிறுத்தும் திறனற்றது, அது சோசலிசத்திற்கான அவசியத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று விரக்தி கொண்ட ஐயுறவுவாதிகளின் அனைத்து வகையினராலும் முன்னெடுக்கப்படும் கூற்றினை சோசலிச சமத்துவக் கட்சி திட்டவட்டமாய் நிராகரிக்கிறது. தோல்விவாதத்தின் நோய்பீடித்த மனோநிலை கலந்த, இந்த அரசியல்ரீதியாக திவாலான கண்ணோட்டமானது வரலாற்றின் நியதிகள் மற்றும் கடந்த கால போராட்டங்களின் படிப்பினைகளை நிராகரிப்பதின் அடிப்படையிலானது.

26. அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் வரலாறு, கடினமான தளர்ச்சியற்ற போராட்டங்களில் ஒன்றாகும். முதலாளித்துவ வர்க்கத்தின் மூர்க்கமான எதிர்ப்புக்கு முகம் கொடுத்த நிலையில், அதன் மெதுவான முன்னேற்றத்தின் கதை இரத்தத்தால் எழுதப்பட்டதாகும். 1870களின் இரயில்பாதை தொழிலாளர் போராட்டம் மற்றும் 1880களில் எட்டு மணி நேர வேலைக்கான போராட்டம் ஆகிய ஆரம்பகால வர்க்க போராட்டங்கள் தொடங்கி 1930களில் பாரிய தொழிற்துறை சங்கங்களின் ஸ்தாபிப்பு வரை, தொழிலாள வர்க்கமானது முதலாளிகளின் பட்டவர்த்தனமான கொடுங்கோன்மையை முடிவுக்குக் கொண்டு வர இரத்தம் சிந்தியது, ஏராளமான தனது தீரப் போராளிகளின் இன்னுயிரையும் பறிகொடுத்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில், தொழில்துறையின் ஒவ்வொரு பிரிவையும் தாக்கிய பெரும் போராட்ட அலைகள் முதலாளிகளிடம் இருந்து சலுகைகளைக் கைப்பற்றின, இது வாழ்க்கைத் தரங்களில் ஒரு துரித எழுச்சிக்கு இட்டுச் சென்றது. இந்த போராட்டங்கள் எல்லாம், தம் பங்கிற்கு, 1950கள் மற்றும் 1960களில் மனித உரிமைகளுக்காகப் போராடிய உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களிடையே பரந்த ஆதரவைக் கண்ட ஆபிரிக்க-அமெரிக்க தொழிலாளர்களின் மாபெரும் போராட்டங்களுக்கு புத்துணர்ச்சி தந்தன.

27. ஆனால், மார்க்சிச தத்துவத்தால் வழிகாட்டப்படும் ஒரு சுயாதீனமான வெகுஜன சோசலிச இயக்கம் இல்லாததில் தான் தொழிலாள வர்க்கத்தின் பலவீனம் தங்கியிருந்தது. மிக ஆவேசமான வர்க்கப்போராட்ட காலகட்டத்திலும் கூட, தொழிலாள வர்க்கம் ஜனநாயகக் கட்சிக்கான விசுவாசத்தின் மூலம் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அமெரிக்க தொழிலாள கூட்டமைப்பு (AFL) தனது வெகு ஆரம்ப நாட்களில் இருந்தே பெரும் வணிகக் கட்சிகளுக்கு தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக அடிபணிந்த நிலையில் வைத்திருப்பதற்கு தனது சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்தது. 1930களில் அமெரிக்காவெங்கிலும் பரவிய தொழிற்துறை தொழிற்சங்கவாதத்திற்கான பாரிய போராட்ட அலைகளின் சமயத்திலும் அதற்குப் பின்னரும் இது தான் தொழிற்சங்கங்களின் கொள்கையாகத் தொடர்ந்தது.

28. முதலாளித்துவத்திற்கு எதிராக அரசியல்ரீதியாக சுயாதீனமான ஒரு வெகுஜன சோசலிச இயக்கத்தை அபிவிருத்தி செய்வதில் அமெரிக்க தொழிலாளர்கள் தோல்வியுற்றதின் கீழ் பல காரணிகள் இருக்கின்றன: அமெரிக்க கண்டத்தின் பரந்துபட்டு அமைந்த தன்மை, உலகெங்கிலும் இருந்து அமெரிக்காவை நோக்கி இழுக்கப்படும் தொழிலாள வர்க்கத்தின் பல்படித்தான தன்மை (Heterogeneity), பிரித்தாளுவதற்கு முதலாளிகள் நிறவெறியை பழிக்கு அஞ்சாமல் பயன்படுத்துதல், தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பெரும் பிரிவுகளிடம் இருக்கும் படுபயங்கர ஊழல் மற்றும் குற்றவியல் தன்மை, அரசாங்கம், பெரு வணிகங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட கம்யூனிசத்திற்கு சார்பானவர்களை அச்சுறுத்தும்  கம்யூனிச-விரோத பரப்புரைகள் ஆகியவைகள். மேலும், சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் குற்றங்கள் அமெரிக்க தொழிலாளர்களின் கண்களில் சோசலிசத்திற்கான அழைப்பை படுமோசமாய் கீழறுத்தன.

29. இறுதி ஆய்வில், அமெரிக்க முதலாளித்துவத்தின் பரந்த செல்வமும் அதிகாரமும் தான் பெருநிறுவனக் கட்டுப்பாட்டிலான இருகட்சி அமைப்புமுறைக்கு தொழிலாளர் வர்க்கம் அடிபணிவதற்கான மிகக் குறிப்பிடத்தக்க புறநிலைக் காரணமாய் இருந்தது. அமெரிக்கா ஒரு உயர்ந்து செல்லும் பொருளாதார சக்தியாக இருந்து, அதன் குடிமகன்கள் அது எல்லையற்ற வாய்ப்புகளுக்கான இடம் என்றும் அதில் தேசிய செல்வத்தின் போதுமான ஒரு பங்கு வாழ்க்கைத் தரங்களை அதிகரிப்பதற்கு நிதியாதாரமாய் கிட்டுகிறது என்றும் எண்ணிக் கொண்டிருந்த வரை, சோசலிசப் புரட்சிக்கான அவசியம் குறித்து அமெரிக்க தொழிலாளர்களுக்கு நம்பிக்கை இருக்கவில்லை.

30. ஆயினும் புற நிலைமைகளிலான மாற்றம் அமெரிக்க தொழிலாளர்கள் தங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ளச் செய்யும். முதலாளித்துவத்தின் யதார்த்தம், சமூகத்தின் பொருளாதார ஒழுங்கமைப்பில் ஒரு அடிப்படையான மற்றும் புரட்சிகர மாற்றத்திற்காகப் போராடுவதற்கு தொழிலாளர்களுக்கு ஏராளமான காரணங்களை வழங்கும். உழைக்கும் மக்களின் 1980கள், 1990கள், மற்றும் இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் பிறந்த இளம்தலைமுறையினர் முதலாளித்துவ செழுமையை அறிந்ததுமில்லை, ஒருபோதும் அறியப் போவதுமில்லை. தங்களது பெற்றோரது தலைமுறையின் வாழ்க்கைத் தரங்களை விஞ்சாவிட்டாலும் அதற்கு சமமானதொரு வாழ்க்கைத்தரத்தையேனும் ஓரளவுக்கு எட்டுவதற்கு எதிர்பார்க்க முடியாதிருக்கும் நவீன காலத்தைய முதல் அமெரிக்க தலைமுறை இவர்கள் தான். 1990ல் பிறந்த இளம் வாகனத்துறை தொழிலாளர்கள் தங்களது பெற்றோர் அதே வேலைக்கு ஒருகாலத்தில் பெற்ற ஊதியத்தில் பாதிக்கும் குறைவாகவே பெறுகின்றனர். பெற்றோரைப் பொருத்தவரை, பலரும் தங்களது வேலைகளையும் ஓய்வூதியங்களையும் இழந்துள்ளனர். ஒரு அபிவிருத்தியுறும் வர்க்க போராட்டத்தின் உலகளாவிய சுழற்சிக்குள் அமெரிக்க உழைக்கும் மக்கள் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர், கிரீஸ் முதல் பங்களாதேஷ் வரை உலகெங்கிலும் சமூக எதிர்ப்பின் மனோநிலை எழுச்சியுறுவது குறித்து விழிப்புணர்வு பெற்றவர்களாக ஆகி வருகின்றனர். பல தசாப்தங்களாக அமெரிக்க தொழிலாளர்கள், ஆசிய தொழிலாளர்கள்தான் அவர்களது எதிரிகள், மலிவு விலைப் பொருட்களை உற்பத்தி செய்து அவர்களது வேலைகளை இல்லாது செய்தவர்கள் என்று கூறப்பட்டு வந்திருந்தனர். ஆனால் இப்போதோ சீனாவில் வேலைநிறுத்தங்கள் குறித்து அவர்கள் படிக்கவும் கேட்கவும் செய்கின்றனர், ஆசியத் தொழிலாளர்கள் தங்கள் எதிரிகள் அல்ல, மாறாக தங்களது சகோதர சகோதரிகள் என்பதை அவர்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

31. ஒரு புதிய உலகச் சூழ்நிலை நிலவுகிறது. தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் புறநிலை யதார்த்தம் மீதான புரிதலை, அதாவது முதலாளித்துவ நெருக்கடி மற்றும் வரலாற்றின் படிப்பினைகள் குறித்த விஞ்ஞானபூர்வ புரிதலை, அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்க வேண்டும். அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய முன்னோக்கு, ஒரு புதிய வேலைத்திட்டம் மற்றும் ஒரு புதிய தலைமை அவசியமாய் இருக்கிறது.

32. வரலாறு குறித்த சடவாத கருத்தாக்கத்தின் சுருக்க உரையில், நவீன சோசலிசத்தின் ஸ்தாபகரான கார்ல் மார்க்ஸ் எழுதினார்: ஒரு குறிப்பிட்ட அபிவிருத்தி கட்டத்தில், சமூகத்தின் சடரீதியான உற்பத்தி சக்திகள் நிலவும் உற்பத்தி உறவுகளுடன் மோதலுக்கு வருகின்றன. ... உற்பத்தி சக்திகளின் அபிவிருத்திக்கான வடிவங்களாக இருந்த இந்த உறவுகள் அவற்றின் தளைகளாக மாறுகின்றன. அப்போது சமூகப் புரட்சியின் ஒரு சகாப்தம் தொடங்குகிறது.2 ஆலைகள், அலுவலகங்கள், கருவிகள் மற்றும் விஞ்ஞான அறிவு இவை மட்டுமல்லாது தொழிலாள வர்க்கத்தையும் தனக்குள் கொண்டதாய் இருக்கும் இந்த உற்பத்தி சக்திகள் முதலாளித்துவத்தின் சமூக உறவுகளால், அதாவது தனியார் உடைமைத்துவம் மற்றும் உலகத்தை தேசிய அரசுகளாய் பிளவுபடுத்தி வைத்திருப்பது ஆகியவற்றால் நெரிக்கப்படுகின்றன. உலகளாவிய பொருளாதார நெருக்கடி, உற்பத்தியிலான வீழ்ச்சி, உலக வர்த்தகத்தின் சுருக்கம், வானளாவிய நிதிநிலை பற்றாக்குறைகள், தேசிய நாணயமதிப்புகளின் ஸ்திரமின்மை, நாடுகளுக்கு இடையே உறவுகள் சீர்கெட்டமை, இராணுவவாதத்தின் வளர்ச்சி மற்றும், எல்லாவற்றுக்கும் மேலாய், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மூழ்கியது - ஒன்றுக்கொன்று பிணைந்த இந்த அனைத்து நிகழ்வுப் போக்குகளுமே புரட்சிகர எழுச்சிக்கான ஒரு புதிய சகாப்தத்தின் துவக்கத்தைக் குறிக்கின்றன. உற்பத்தி சாதனங்கள் தனியார்வசமாய் இருப்பதை அடிப்படையாகக் கொண்டு அமைந்த ஒரு அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள்ளாக வெகுஜன சமுதாயத்தின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட முடியாது. உற்பத்தி சக்திகளின் உலகளாவிய அபிவிருத்தியானது முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையால் நெரிக்கப்படுகிறது.

தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் திறன்

33. நவீன சமூகத்தின் பிரதான புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தின் மூலமாக மட்டுமே முதலாளித்துவத்தின் நிலைமுறிவால் உருவாக்கப்பட்ட நெருக்கடிக்கு ஒரு முற்போக்கான தீர்வினைக் காண முடியும். தொழிலாள வர்க்கமே புரட்சிகரமானது ஏனென்றால் 1) இது தான் சமூகத்தின் முக்கிய உற்பத்திசக்தி; 2) முதலாளித்துவ சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைக்கான இதன் எதிர்ப்பின் வரலாற்றுரீதியான மற்றும் அரசியல்ரீதியான மாறா நியதி தான் உற்பத்தி சாதனங்கள் தனியார்மயப்படுவதை தடை செய்வதற்கும், பொருளாதார வாழ்க்கையை கொண்டுசெலுத்தும் கோட்பாடாக இலாப நோக்கத்தை அகற்றி அதற்குப் பதிலாய் சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதை வைப்பதற்கும், மற்றும் அனைத்து மக்களிடையே உண்மையான சமூக சமத்துவம் உணரப்படுவதற்கும் அழைத்துச் செல்கிறது; மற்றும் 3) சர்வதேச வர்க்கமாகிய இதன் வெற்றியானது தேசிய அரசுகளின் சுவர்களை உடைக்கும், மனித குலத்தை அதன் பொதுவான தாயகமான பூமியைப் பாதுகாக்கவும் அபிவிருத்தி செய்யவும் அர்ப்பணித்துக் கொண்ட ஒரு உண்மையான உலக சமுதாயத்தில் ஒன்றுபடுத்தும்.

34. வரலாற்றில் முன்னொருபோதும் தொழிலாள வர்க்கம் மக்கள் தொகையின் இத்தகையதொரு பரந்த அளவைக் கொண்டிருந்ததில்லை. சுமார் 50 வருடங்களுக்கு முன்பாக நவீன தொழிற்சாலைகள் அபூர்வமாக இருந்த நாடுகளில், குறிப்பாக ஆசியாவில், மூலதனத்தின் பாரிய உட்பாய்வு தொழிற்துறை உள்கட்டமைப்பு மற்றும்  தொழிலாள வர்க்கத்தின் தீவிரமான ஒரு வளர்ச்சிக்கு நிதியாதாரமளித்திருக்கிறது. வரலாற்றுரீதியாக ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய முன்னேறிய முதலாளித்துவ மையங்களுக்குள்ளாக தொழிலாள வர்க்கம் மக்கள்தொகையில் மிகப் பெரும்பான்மையாக அமைந்திருக்கிறது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள், சர்வதேசரீதியில் உழைப்பின் பகுப்பில் நேர்ந்த நகர்வுகள், மற்றும் அமெரிக்க அடிப்படையிலான உற்பத்தியின் உலகளாவிய நிலையிலான வீழ்ச்சி ஆகியவை தொழிலாள வர்க்கத்தின் தொகுப்பமைவை மாற்றியிருக்கின்றன. ஆனால் அமெரிக்காவில் பொருளாதார மற்றும் சமூக மாற்றங்கள் தொழிலாள எண்ணிக்கையை விரிவுபடுத்தவோ அல்லது புதிய வகை தொழிலாளர்களை உருவாக்கவோ செய்திருக்கின்றன. ஜோன் எப். கென்னடி ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 1960ல், அப்போதும் பெண்கள் தொழிலாளர்களில் ஒப்பீட்டளவில் சிறு சதவீதத்தில் தான் இருந்தனர். சேவைத் துறை (service industry) அப்போது தன் குழந்தைப் பருவத்தில் இருந்தது. நிரலாக்கம் (Programming) என்பது ஒரு சிறிய எண்ணிக்கையிலான திறன்படைத்த நிபுணர்களின் தொழிலாய் இருந்தது. தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள் (IT workers) குறித்து அப்போது யாரும் பேசவும் தொடங்கியிருக்கவில்லை. 

35. மரபுவழியான நடுத்தர வர்க்கத்தின் - அதாவது சுதந்திரமான சிறு வணிகர்கள் மற்றும் விவசாயிகள் - எண்ணிக்கை பெருமளவில் வீழ்ச்சி கண்டிருக்கிறது. இன்னும் குறிப்பிடத்தக்க வகையில், அதன் கூட்டான பொருளாதார முக்கியத்துவம் 80 வருடம் கூட வேண்டாம் 50 வருடங்களுக்கு முன்பு அது இருந்த நிலையில் ஒரு சிறு பிரிவின் அளவாகத் தான் இருக்கிறது. அமெரிக்க சமூகமானது அசாதாரணமான ஒரு அளவுக்கு பாட்டாளி வர்க்க மயமாக்கப்பட்டு இருக்கிறது. மக்களில் பரந்த பெரும்பான்மையினர் - அவர்கள் ஆலைகளிலோ அல்லது கட்டிடம் கட்டும் இடங்களிலோ வேலை பார்த்தாலும் சரி, அல்லது அலுவலகங்கள், மருத்துவ மையங்கள், வணிக பேரங்காடிகள், ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகள், பல்கலைக்கழக வளாகங்கள் அல்லது அறிவியல் கூடங்களில் வேலை பார்த்தாலும் சரி; அவர்கள் பார ஊர்தி ஓட்டுபவர்களாக, பேருந்து அல்லது தொடர்வண்டி அல்லது விமானங்களை ஓட்டுபவர்களாக இருந்தாலும்  கூட வேலைக்கான உத்திரவாதமின்றி தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த தொழிலாளர்கள் பொதுவான பிரச்சினைகளையே பகிர்ந்து கொள்கின்றனர், பொதுவான எதிரியையே எதிர்கொள்கின்றனர் - இலாப வெறியில் இவர்களை பணிக்கமர்த்தி, சுரண்டி, பின் துரத்தும் பிரம்மாண்டமான நிதித்துறை ஸ்தாபனங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் தான் அந்த எதிரி.

36. தொழிலாள வர்க்கத்தின் பொருளாதார மற்றும் சமூக முக்கியத்துவத்திற்கும் சமூகத்தின் அரசியல் திசை மீதான அதன் மிகக்குறைந்த செல்வாக்கிற்கும் இடையில் திகைப்பூட்டத்தக்க முரண்பாடு இருக்கிறது. சொத்துக் குவிப்பு தவிர்க்கவியலாமல் அரசியல் அதிகாரத்தின் குவிப்புடன் கைகோர்த்ததாய் உள்ளது. அமெரிக்காவிற்குள்ளாக, நிதித்துறை மற்றும் பெருநிறுவனங்களின் சிறு கும்பல் வேறு எந்த முன்னேறிய முதலாளித்துவ நாட்டிலும் ஒப்புமை காண முடியாத மட்டத்திற்கு அரசியல் அதிகாரத்தை ஏகபோகமாக்கி உள்ளது. அமெரிக்க தொழிலாள வர்க்கம் தனது சொந்த வெகுஜன அரசியல் கட்சியை ஸ்தாபிப்பதில் ஒருபோதும் வெற்றி கண்டிருக்கவில்லை. ஜனநாயகக் கட்சிக்கான தனது அடிபணிவுக்கு தொழிலாள வர்க்கம் செலுத்திக் கொண்டிருக்கும் இமாலய விலையை நடப்பு நெருக்கடி அம்பலப்படுத்தியிருக்கிறது.   

37. 1930களில் ஆலைகள் ஆக்கிரமிப்பு மற்றும் பல பெரிய நகரங்களில் போலிசுடன் சண்டையில் இறங்கியது உள்பட மாபெரும் தொழிற்துறை வேலைநிறுத்தங்களின் பாதையில், அமெரிக்க தொழிலாளர்கள் CIO என்கிற ஒரு சக்திவாய்ந்த தேசிய தொழிற்சங்க அமைப்பை உருவாக்கினர். 1955ல், கைவினைத் தொழில்களின் அடிப்படையிலான சங்கங்களின் பழைய கூட்டமைப்புடன் இது இணைவு கண்டதைத் தொடர்ந்து, ஏறக்குறைய தனியார் நிறுவனங்களின் மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள் AFL-CIO உறுப்பினர்களாக இருந்தனர். அப்படியிருந்தும் தனது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உச்சநாட்களிலும் கூட (அமெரிக்காவின் சர்வதேச பொருளாதார மேலாதிக்கமும் இதே காலத்தில் இருந்தது) AFL-CIO தனது பிற்போக்குவாத அரசியலால் முடக்கப்பட்டு இருந்தது. AFL-CIO முதலாளித்துவ இலாப அமைப்பின் அங்கீகாரத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டது, சோசலிசத்திற்கு ஆவேசமான விரோதத்தைக் காட்டியது, அத்துடன் இடது-சாரி, முதலாளித்துவ- விரோத தாக்கங்களுடனான சங்கங்களை, பலசமயங்களில் வன்முறையின் துணை கொண்டும், வெளியேற்ற விழைந்தது. முதலாளித்துவத்துடனான தனது விசுவாசத்தை பராமரிக்கும் விதமாக AFL-CIO தன்னை ஜனநாயகக் கட்சியின் அணிவரிசையில் நிறுத்திக் கொண்டு, தொழிற்சங்கங்களை பெரு வணிகங்களின் அரசியல் ஆதிக்கத்தில் இருந்து விடுவிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்தது. இறுதியில், தொழிற்சங்கங்கள் தீவிரமாக தேசியவாதமயப்பட்டவையாக இருந்ததோடு, தொழிலாள வர்க்கத்தின் நலன்களை ஆளும் வர்க்கத்தின் ஏகாதிபத்தியக் கொள்கைகளுடன் ஒன்றாக அடையாளப்படுத்திக் கொண்டன.

38. இந்த இற்றுப் போன அடித்தளங்களின் மீது தங்கியிருந்த நிலையில், தொழிற்சங்கங்கள், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தக் கூட வேண்டாம், அதன் ஆகக் குறைந்த நலன்களைப் பாதுகாப்பதற்கும் கூட திறனற்றதாய் நிரூபணமாகி இருக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாக, தொழிற்சங்கங்களின் கொள்கைகள் தொழிலாளர்களுக்கு தோல்விகளைத் தவிர வேறு எதனையும் கொண்டுவரவில்லை. 1900களின் ஆரம்பகாலம் தொடங்கி தனியார் துறையில் வேலைபார்க்கும் தொழிற்சங்க பிணைப்பு கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை அதன் மிகக் குறைந்த எண்ணிக்கையளவில் இருக்கிறது! ஆனால், நடுத்தரவர்க்க நிர்வாகிகள் கொண்ட தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் வருவாய்களோ, அது பெருநிறுவனங்களுக்கு ஆற்றும் சேவைகளால் உத்தரவாதமளிக்கப்படுகின்றன. கொள்கைகளையும் நோக்கங்களையும் பொறுத்தவரையில், பெருநிறுவனங்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க எந்த வேறுபாடும் இல்லை.

39. இத்தனை வருட காட்டிக் கொடுப்புகளுக்குப் பின்னர், இந்த ஊழல்படிந்த, பெருநிறுவனக் கட்டுப்பாட்டிலான அமைப்புகள் எல்லாம் சமூகப் போராட்டத்திற்கான சாதனங்களாக மாற்றப்பட முடியும் என்று நம்புவதென்பது, பயனற்ற பிரமைகளில் மூழ்குவதாகவே ஆகும். AFL-CIO-ன் தோல்வியானது, இறுதி ஆய்வில், அதன் தேசியவாத, முதலாளித்துவப்பட்ட மற்றும் வர்க்க-ஒத்துழைப்புவாத வேலைத்திட்டத்தின் திவால்நிலையையே அம்பலப்படுத்துகிறது. முதலாளித்துவ அமைப்புமுறை தோல்வியடைந்திருக்கிறது என்பதை அங்கீகரிக்கும் ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் ஒரு மறுஎழுச்சி இருக்க முடியும். முதலாளித்துவத்தை சீர்திருத்துவதற்கு பெருநிறுவனங்கள் மற்றும் அவை கட்டுக்குள் வைத்திருக்கும் அரசியல்வாதிகளுக்கு கோரிக்கைகள் விடுப்பதில் இந்த நெருக்கடிக்கான விடையைக் காண முடியாது. அதற்குப் பதிலாக, அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேசரீதியாகவும் தொழிலாள அதிகாரத்திற்கான போராட்டத்திற்கும், சமூகம் சோசலிச வழியில் மறுஒழுங்கமைப்பு செய்யப்படுவதற்கும் சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.

சோசலிசம் தான் முன்செல்வதற்கான ஒரே வழி

40. அமெரிக்காவின் மற்றும் ஒட்டுமொத்த உலகின் தொழிலாள வர்க்க விடயத்தில் முதலாளித்துவம் தோல்வியடைந்திருக்கிறது. சமூகத்தின் பொருளாதார ஒழுங்கமைப்பிற்கு ஒரு வேறுபட்ட அணுகுமுறைக்காக போராட தொழிலாள வர்க்கத்திற்கு நேரம் வந்திருக்கிறது. முதலாளித்துவத்திற்கான ஒரே உகந்த மாற்று சோசலிசம் தான், அதாவது பொருளாதார வாழ்க்கை அனைத்தையும் தனியார் இலாபத்திற்கு சேவை செய்ய அல்லாமல் சமூக தேவைகளுக்கு சேவை செய்யும் பொருட்டு தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் மறுஒழுங்கமைப்பு செய்யப்படவேண்டும்.

41. ஆனால் தொழிலாளர்களின் அதிகாரம் ஸ்தாபிக்கப்படுவதன் மூலம் மட்டுமே சோசலிசம் சாதிக்கப்பட முடியும். இதற்கு ஒரு கடினமான போராட்டம் அவசியப்படும். ஆனால் சோசலிசத்தின் இறுதி இலக்கு என்பது, அதாவது பொருளாதார சுரண்டல், ஏற்றத்தாழ்வின் அனைத்து வடிவங்கள், மனிதர்களில் ஒரு குழுவினர் இன்னொரு குழுவினரை ஒடுக்குவது ஆகியவை தடை செய்யப்பட்டு அதன்விளைவாய் தனிநபர் படைப்புத்திறன் மீதான அனைத்து தளைகளும் அகற்றப்பட்டு மனித கலாச்சாரம் மலர்வது என்பது ஒரு மூடநம்பிக்கையுடனான தேடலின் விளைபொருள் அல்ல. சோசலிசத்திற்கான அரசியல் அடிப்படையை இடக் கூடிய புரட்சியானது, தொழிலாளர் வர்க்கம் அமெரிக்காவிலும் சர்வதேசரீதியாகவும் தனது நலன்களைப் பாதுகாக்கவும் நெருக்கடியின் சுமையை வெகுஜனங்களின் மீது திணிக்க நிதித்துறை மற்றும் பெருவணிக தனவான்கள் செய்யும் முயற்சிகளை எதிர்க்கவும் நிகழ்த்தும் எண்ணற்ற போராட்டங்களின் பாதையில் தான் தயாரிப்பு செய்யப்படுகிறது. சோசலிசம் என்பது தொழிலாள வர்க்கத்திற்கு வழங்கப்படவிருக்கும் பரிசு அல்ல. அது தொழிலாள வர்க்கத்தாலேயே தான் போராடப்பட்டு வெல்லப்பட்டாக வேண்டும்.

42. சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டம் தொழிலாள வர்க்கத்தின் முக்கியமான தேவைகளுடன் தொடங்குகிறது. சோ.ச.க.வின் கோரிக்கைகளோ கொள்கைகளோ முதலாளித்துவத்தால் என்ன கொடுக்கமுடியும் என்பதில் இருந்து தொடங்குவதில்லை, மாறாக தொழிலாள வர்க்கத்திற்கும் நமது சிக்கலான உலகளாவிய வெகுஜன சமூகத்திற்கும் என்ன அவசியம் என்பதில் இருந்து தான் தொடங்குகின்றன. அதேபோல் சிறுபுத்தி படைத்த சந்தர்ப்பவாதிகளும் நடைமுறைவாதிகளும் உடனடியாக சாதிக்கத்தக்கவை என்று எதைக் கருதுகிறார்களோ அதற்கேற்றவாறு தனது வேலைத்திட்டத்தை சோ.ச.க. வடிவமைத்துக் கொள்வதில்லை. என்ன சாதிக்க முடியும் அல்லது முடியாது என்பது, எந்த ஒரு சூழ்நிலையிலும், போராட்டத்தால் தீர்மானிக்கப்படுகிறது. போராடத் தயாராய் இல்லாதவர்கள் ஒருபோதும் எதனையும் வெல்ல மாட்டார்கள். தொழிலாளர் வர்க்கத்தின் சமூக மற்றும் அரசியல் நனவினை உயர்த்துவதிலும், அதன் விளைவாக, அதன் போராடும் திறனுக்கு வலுவூட்டுவதிலும் சோ.ச.க.வின் கோரிக்கைகள் ஒரு அத்தியாவசியமான பாத்திரத்தை ஆற்றுகின்றன.

43. சோ.ச.க. எழுப்பும் கோரிக்கைகள் சோசலிசப் புரட்சியின் இலக்கில் இருந்து தனிப்பட்டவை அல்ல. மாறாக, ஒவ்வொரு கோரிக்கையும் அதன் தன்னியல்பாகவே பெருநிறுவன தனவான்களின் சடநலன்களுக்கு ஒரு சவாலை எழுப்புகிறது. தங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு பெருநிறுவனங்களிடம் இருந்தும் முதலாளித்துவ அரசிடம் இருந்தும் எதிர்ப்பை எதிர்கொள்ளும் சமயத்தில், உழைக்கும் மக்கள் சமூகம் புரட்சிகர வகையில் உருமாற்றப்பட வேண்டியிருப்பதன் அவசியத்தை முன்னை விடவும் தெளிவாய்க் காண்பார்கள். இந்த கோரிக்கைகளுக்கான போராட்டம் தொழிலாள வர்க்கத்தை வலிமைப்படுத்துகிறது, அதன் மாறுபட்ட போராட்டங்களை ஒருமைப்படுத்துகிறது, அத்துடன் ஒவ்வொரு விடயத்திலும், உலக பொருளாதாரத்தை சோசலிச வகையில் மறுஒழுங்கமைப்பு செய்வதன் பாகமாக அமெரிக்காவில் அது அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதன் மற்றும் சோசலிசத்தை ஸ்தாபிப்பதன் அவசியத்தை முன்நிறுத்துகிறது. 

தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை சமூக உரிமைகள்

44. ஒவ்வொரு ஆண், பெண் மற்றும் குழந்தையும் வறுமை மற்றும் இல்லாமையின் சாபத்திலிருந்து விடுபட்டு தனது (ஆண் அல்லது பெண்) சொந்த வாழ்க்கையை வாழ்வதற்கும் அனுபவிப்பதற்கும் மற்றும் தனது (ஆண் அல்லது பெண்) திறனை மிக உயர்ந்த மட்டத்திற்கு அபிவிருத்தி செய்வதற்கும் உரிமை கொண்டுள்ளனர். அமெரிக்காவில் பலபத்து மில்லியன்கணக்கான மக்கள் போதுமான உணவின்றி, போதுமான உடையின்றி, போதுமான வீட்டுவசதியின்றி பாதுகாப்பற்று வாழ்கிறார்கள் -இத்தகைய நிலைமைகள் சகிக்க முடியாதவை என்று ஜனாதிபதி ரூஸ்வெல்ட் அறிவித்து சுமார் 70 ஆண்டுகள் கடந்த பின்னர்- என்கிற உண்மையானது அமெரிக்காவின் முதலாளித்துவம் மீதான அது பதில்கூற முடியாத, குற்றமாகும். ஒரு சிக்கலான நவீன சமூகத்தில் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான எனவே அந்நியப்படுத்த முடியாத சமூக உரிமைகள் இருக்கின்றன என்கிற கருத்தை தொழிலாள வர்க்கம் கையிலெடுக்க சோசலிச சமத்துவக் கட்சி முன்மொழிகிறது. பெருநிறுவனக் கட்டுப்பாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிடம் மற்றும் முதலாளித்துவ அரசின் ஸ்தாபனங்களிடம் இருந்து சுயாதீனப்பட்ட வகையிலும் அவைகளுக்கு எதிராகவும் ஒரு வர்க்கமாக தங்களது வலிமையை அணிதிரட்டுவதன் மூலம் இந்த உரிமைகளை அடைய உழைக்கும் மக்கள் தீர்மானமெடுக்க வேண்டும். இந்த உரிமைகளாவன:

வேலைக்கான உரிமை

45. வேலைவாய்ப்புக்கான உரிமை என்பது அனைத்திலும் மிக அடிப்படையானதாகும். ஒரு சீரான நல்ல ஊதியத்துடனான வேலையில்லாமல் மற்ற பிற தேவைகளைப் பூர்த்தி செய்வது சாத்தியமில்லாதது. ஒருவரது வேலை இழப்பு என்றால் சுய மரியாதையும் சமூக இணைப்பும் போய்விடுகிறது, தீவிர உளவியல் உளைச்சல் நேர்கிறது, அத்துடன் ஆரோக்கிய பராமரிப்பு எல்லைக்குள் இருந்து நீங்குதல், ஆயுட்கால சேமிப்பு அழிதல், மற்றும் அவரும் அவரது குடும்பமும் வறுமை மற்றும் வீடின்மை ஆகியவற்றுக்கு இலக்காகும் அபாயம் ஆகியவையும் வந்து சேர்கின்றன.

46. மில்லியன்கணக்கான அமெரிக்கர்கள் இந்த திக்கற்ற நிலையை எதிர்கொள்கின்றனர். ஒருசமயத்தில் அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ள முடியாததாகக் கருதப்பட்டது இன்று புதிய சாதாரணநிலையாகப் பிரகடனப்படுத்தப்படுகிறது. உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை 10 சதவீதத்திற்கு நெருக்கமாய் இருக்கிறது, உண்மையான வேலைவாய்ப்பின்மையோ இன்னும் அதிகம். வேலை பெறாதவர்களில் பாதிப் பேர் 27 வாரங்களுக்கும் அதிகமாய் வேலை இன்றி இருக்கின்றனர், வேலைவாய்ப்பில்லாத சராசரி காலம் ஒன்பது மாதங்கள் - இது பெரு மந்த நிலைக்குப் பின் கண்டிராத நெடிய வேலைவாய்ப்பின்மை மட்டமாகும். சுமார் 26 மில்லியன் மக்கள் வேலைவாய்ப்பு இல்லாதிருக்கின்றனர் அல்லது குறைஊதியம் பெற்றுக் கொண்டு இருக்கின்றனர். சில மாநிலங்களில் உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை 14 சதவீதத்திற்கும் அதிகமாய் உள்ளது, நகர மையங்களில் உண்மையான வேலைவாய்ப்பின்மையோ 50 சதவீதத்தை நெருங்கக் கூடும்.

47. நெடுங்காலம் வேலைவாய்ப்பற்று இருப்பது ஒரு ஒட்டுமொத்த இளம்தலைமுறையின் வருங்காலத்தையும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. அறுபது சதவீத கல்லூரி மாணவர்கள் ஒரு வேலைக்கான வாய்ப்புக் கடிதம் பெறாத நிலையிலேயே பட்டம் பெறுகின்றனர், 16-24 வயது கொண்ட தொழிலாளர்களில் பாதிக்கும் மேலானோருக்கு வேலை இல்லை, இது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தின் மிக உயர்ந்த அளவாகும். இன்றைய இளைஞர்கள் தங்கள் பெற்றோரின் வாழ்க்கைத் தரங்களை விட கணிசமான மட்டத்திற்கு மோசமான வாழ்க்கைத் தரத்திலேயே வாழ்வார்கள் என்பது உலகளாவிய வகையில் ஒப்புக் கொள்ளப்பட்டதாகும்.

48. அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதற்கு உடனடியாக அவசரநிலை பொதுப்பணித் துறை வேலைத்திட்டம் ஒன்று தொடங்கப்பட வேண்டும். பள்ளிகள், மக்கள் குடியிருப்புகள், சாலைகள், வெகுஜனப் போக்குவரத்து, தண்ணீர் மற்றும் சாக்கடை அமைப்புகள், தகவல்தொடர்பு வலைப்பின்னல்கள் மற்றும் பிற பொது வசதிகளை மறுகட்டுமானம் செய்வது, மற்றும் உழைக்கும் மக்களுக்கு வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவது ஆகிய ஏராளமான வேலைகள் செய்வதற்கு இருக்கின்றன. 

49. பாரிய வேலைவாய்ப்பின்மை, வேலைக் குறைப்புகள் மற்றும் தொழிற்சாலை மூடல்கள் இவற்றுக்கு எதிராக, தொழிலாள வர்க்கம் ஒரு வேலைக்கான உரிமையை நிபந்தனையின்றி பாதுகாக்க வேண்டும். வேலைக்குறைப்பு செய்யப்படுகிற ஒவ்வொரு தொழிலாளருக்கும் மற்றும் புதிதாக நுழையும் அனைவருக்கும் ஊதியத்துடனான வேலைப் பயிற்சியும் வேலைவாய்ப்பும் உறுதியளிக்கப்பட வேண்டும்.

வாழத்தக்க வருவாய்க்கான உரிமை

50. தசாப்தங்களாய் ஊதியங்கள் தாக்குதலுக்கு உட்பட்டு வருகின்றன. தொழிற்சாலையை பிரித்துப் போட்டதால் கண்ணியமான ஊதியங்கள், வாழ்க்கைநல ஆதாயங்கள் மற்றும் வேலைப் பாதுகாப்பு ஆகியவற்றுடனான நடுத்தர-வர்க்க உற்பத்தித்துறை தொழில்கள் துடைத்தழிக்கப்பட்டு விட்டன. நெடுங்காலத்திற்கு உற்பத்தித்துறை ஊதியங்களுக்கான அளவுகோலாக அமைந்திருந்த வாகனத் துறையில் புதிய தொழிலாளர்கள் மணிக்கு 14 டாலர் ஊதியத்திற்கு பணியமர்த்தப்படுகின்றனர். இது நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டு அளவிற்கு, வரையறை அளவே போதுமானதல்ல என்கிற நிலையில், கொஞ்சம் தான் மேலே இருக்கிறது. பாரிய வேலைவாய்ப்பின்மை உழைப்புச் செலவைக் குறைப்பதற்கும் இலாபங்களை அதிகரிப்பதற்கும் திட்டமிட்டு பயன்படுத்தப்படுகிறது. பொருளாதார வளர்ச்சிக்கான ஒபாமா நிர்வாகத்தின் மூலோபாயம் அமெரிக்காவை ஏற்றுமதிக்கான ஒரு மலிவு உழைப்புத் தளமாக மாற்றுவதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

51. தற்போதைய அரச குறைந்தபட்ச ஊதியம் (மணிக்கு $7.25) மில்லியன்கணக்கானோரை வறுமைக்கு சபிக்கிறது. அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யத்தக்க ஒரு உத்தரவாதமான வருட வருவாய் கொண்டு அது இடம்பெயர்க்கப்பட வேண்டும். வயது முதிர்வால், உடல் ஊனத்தால் அல்லது ஆரோக்கியக் குறைபாட்டால் வேலை செய்ய முடியாத நிலையில் இருக்கும் பலரும் இதே வருவாயைப் பெற முடிய வேண்டும்.

52. பல தசாப்தங்களாக கடன் அட்டைகளும், இரண்டாம் நிலை அடமானங்களும், மற்றும் மற்ற கடன் வடிவங்களும் வாழ்க்கைத் தரங்களிலான வீழ்ச்சியை மறைத்து வந்திருக்கின்றன. பொதுமக்களின் பணத்தைக் கொண்டு மீட்சி செய்யப்பட்ட அதே பெரும் வங்கிகள் உழைக்கும் மக்களின் மீதே தங்களது பிடிகளை இறுக்குகின்றன. பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, வானளாவிய நிதி நிறுவனங்களுக்கு மறைமுகமான கொத்தடிமைகளாய் வேலை செய்து வரும் மில்லியன்கணக்கான தொழிலாளர்களுக்கு உடனடியாக கடன் நிவாரணம் அளிக்கப்பட வேண்டும். செலுத்த முடிகிற அளவுக்காய் கடன் திருப்பிச் செலுத்த தொகைகளை குறைப்பது மற்றும் மிகப் பெரிய வட்டி வீதங்கள், வங்கிக் கட்டணங்கள் மற்றும் மிகைப்பற்று கட்டணங்கள் ஆகியவற்றை தடை செய்வது ஆகியவை இதில் அடங்கியிருக்க வேண்டும்.

ஓய்வுக்கான உரிமை

53. வரவுசெலவை சரிக்கட்ட மேலதிகவேலைநேரம் மற்றும் பலவேறுபட்ட வேலைகள் செய்வதை மில்லியன்கணக்கான மக்கள் சார்ந்திருக்க, வேலைவாரத்தில் தளர்ச்சியற்ற அதிகரிப்புக்கு தொழிலாளர்கள் ஆட்படுத்தப்பட்டு வருகின்றனர். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னதாக தொழிலாளர்களது இயக்கத்தால் எழுப்பப்பட்ட கோரிக்கையான எட்டு மணிநேர வேலை என்பது இப்போது கடந்த காலத்திற்குரியதாகிவிட்டது. அமெரிக்க தொழிலாளர்கள் பிரெஞ்சு தொழிலாளர்களை விட ஒரு வருடத்தில் 340 மணி நேரங்கள் வேலையில் அதிகம் செலவிடுகிறார்கள், ஏறக்குறைய ஒன்பது முழு வாரங்கள். மில்லியன்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பின்றி இருக்க, முதலாளிகளோ வேலைவாய்ப்பு இல்லாதவர்களை வேலைக்கு அமர்த்த முற்படாமல் ஏற்கனவே வேலையில் இருப்போரினது வேலைநேரத்தை அதிகரிப்பதன் மூலமாக செலவுகளைக் குறைக்கப் பார்க்கின்றனர். இது சகித்துக் கொள்ள முடியாத ஒன்றாகும். வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும் வேலைவாய்ப்பற்றவர்களுக்கு வேலை வழங்கவும் வேலைவாரம் குறைக்கப்பட வேண்டும். 30 மணி நேர வேலைவாரத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் முழுநேர ஊதியம் பெற வேண்டும்.

54. உலகின் மிகவும் பணம் படைத்த 33 நாடுகளில், அமெரிக்கா மட்டும் தான் தொழிலாளர்களுக்கென ஊதியத்துடன் கூடிய ஓய்வு விடுப்பு சட்டபூர்வமாக கட்டாயமாக இல்லாத ஒரே ஒரு நாடு ஆகும். தொழிலாளர்களில் சுமார் பாதிப் பேருக்கு ஊதியத்துடன் கூடிய உடல்நலமின்மை விடுமுறை கிடையாது. குடும்பத்திற்கும், ஓய்விற்கும் மற்றும் தொழில்-சாரா செயல்பாடுகளுக்கும் போதுமான நேரத்திற்கு தொழிலாளர்கள் உரிமை கொண்டுள்ளனர். ஆண்டுக்கு ஐந்து வாரங்கள் ஊதியத்துடனான ஓய்வு விடுப்பு, அத்துடன் போதுமான ஊதியத்துடனான உடல்நலமின்மை விடுமுறைகள் மற்றும் ஊதியத்துடனான குடும்ப விடுமுறைகள் ஆகியவற்றுக்கான உரிமை இதில் அடங்கியிருக்க வேண்டும். குடும்பங்கள் மீதான சுமையைக் குறைக்க, சமூகத்தால் குழந்தைப் பராமரிப்பு மற்றும் பள்ளிநேரத்திற்கு பிந்தைய செயல்கள் இலவசமாக வழங்கப்படவேண்டும்.

கண்ணியமான மற்றும் சுமையளிக்காத வீட்டுவசதிக்கான உரிமை

55. ஆண்டுதோறும் 1 மில்லியன் குழந்தைகள் உட்பட 3.5 மில்லியன் பேர் வீடிழந்து வருவதாக மதிப்பிடப்படுகிறது. 1 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் மீண்டும் பறித்துக் கொள்ளப்பட்டு விட்டன, ஒவ்வொரு ஆண்டும் பலபத்து ஆயிரக்கணக்கானோர் வாடகை வீடுகள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் நிலையை எதிர்கொள்கின்றனர். பெருமந்த நிலை காலத்தின் ஹூவர்வில்லிஸ் பகுதியின் நவீன கால வடிவங்களாக கூறத்தக்க வகையில், முக்கிய பெருநகரங்களுக்கு வெளியே குடில் முகாம் நகரங்கள் எழுவது, இலாப அமைப்பின் மீது சுமத்தப்படத்தக்க மிகக் கண்டிக்கத்தக்க குற்றங்களில் ஒன்று.

56. வீட்டு அடமானக் கடன்களில் ஊக வர்த்தகம் புகுந்து விளையாடியதால் தான் 2008ன் பொருளாதார நெருக்கடி வீழ்படிவுற்றது. பிணைக் கடன் அளிப்போர், பணம் கட்ட முடியாதவர்களிடம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிழிந்தெடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அழுக்கான திட்டத்தின் மூலம் மக்களின் ஒரு வீட்டிற்கான தேவையைப் பயன்படுத்தி சுரண்டினர். இந்த நிகழ்வுப் போக்கில், வீட்டு விலைகள் சாதனை அளவுகளுக்கு உயர்வு கண்டன. கடந்த இரண்டு ஆண்டுகளில் வீட்டு விலைகள் உருக்குலைவுற்றதை அடுத்து, மில்லியன்கணக்கான மக்கள் மூச்சுத்திணறும் நிலையில் தங்களைக் காண்கின்றனர், அவர்கள் வங்கிகளின் வீட்டுக்கடனுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையைக் காட்டிலும் அவர்களது வீடுகளின் மதிப்பு குறைந்து போயிருக்கிறது.

57. வீடில்லா நிலைக்கு ஒரு முக்கிய காரணியாக இருப்பது சுமையளிக்காத வீட்டுவசதி இல்லாததே ஆகும். வீடு கட்டுவதற்கான செலவுகள் அதிகரித்து வருவாயோ வீழ்ச்சி கண்டிருப்பதால், சராசரி அமெரிக்க நுகர்வோர் வருவாயில் 34 சதவீதத்தை வீட்டு வசதிக்கும் இன்னுமொரு 30 சதவீதத்தை போக்குவரத்திற்கும் செலவிடுகின்றார். உணவுக்கும், பிற கட்டணங்களுக்கும், சுகாதாரப் பராமரிப்பிற்கும், கல்வி மற்றும் பிற அடிப்படை அத்தியாவசியங்களுக்கும் வெகு சொற்பமே எஞ்சுகிறது.

58. அனைத்து ஏலங்கள் மற்றும் கட்டாயவெளியேற்றங்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அனைத்து பிணைக் கடன்களும் சுமையின்றி கட்டும் அளவுகளுக்கு மறுஅமைப்பு செய்யப்படுவதோடு, வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு நிலையுடன் பிணைக்கப்பட்டதாய் இருக்க வேண்டும்.

59. வீடு கட்டுதல் மற்றும் நிதியுதவித் துறையை அரசு உடைமையின் கீழ் கொண்டுவருவதன் மூலமும், பொது நிதியங்களில் இருக்கும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை புதிய வீடுகள் மற்றும் குடியிருப்புகள் கட்டுவதிலும் நடப்பு கட்டிடங்களை புதுப்பிப்பதிலும் செலவிடுவதன் மூலமும் மட்டுமே அனைவருக்கும் கண்ணியமான வீட்டுவசதிக்கான உரிமை உறுதியளிக்கப்பட முடியும். 

பயன்பாட்டு சேவைகள் மற்றும் போக்குவரத்திற்கான உரிமை

60. ஆண்டுதோறும், அமெரிக்காவில் மில்லியன் கணக்கான வீடுகளில் கட்டணம் செலுத்தாத காரணத்தைக் காட்டி சேவைகள் துண்டிக்கப்படுகின்றன. வானளாவிய கட்டண சேவை நிறுவனங்களின் இலாப நலன்களுக்கு சேவை செய்கிற இந்த துண்டிப்புகள் நேரடியாக பயங்கர தீவிபத்துகளுக்கும், மக்கள் தங்கள் வீடுகளில் குளிரால் உறைந்து போவதற்கும் மற்றும் பிற சமூக பயங்கரங்களுக்கும் இட்டுச் செல்கின்றன.

61. நாடு முழுவதும் சேவை நிறுவனங்கள் மீதான வரம்புமுறைகள் அகற்றப்பட்டதும் தனியார்மயமாக்கப்பட்டதும் மின்சாரம் மற்றும் எரிசக்தி செலவுகளில் கூர்மையான அதிகரிப்புகளுக்கு இட்டுச் சென்றுள்ளது. இதில் கடுமையாகப் பாதிக்கப்படுவது ஏழை மக்களே. சராசரியாக, துணைப் பாதுகாப்பு வருவாயில் (SSI) வாழும் ஒரு நபர் வருவாயில் சுமார் 20 சதவீதத்தை இந்த கட்டண சேவைகளுக்கு செலவிடுகிறார். பல தொழிலாளர்கள் இந்த சேவைகளுக்கு இன்னும் ஆயிரக்கணக்கான டாலர்கள் செலுத்த வேண்டிய நிலைக்கு முகம் கொடுக்கின்றனர். குறைந்த-வருவாய் பிரிவினருக்கான எரிசக்தி உதவிக்கான மத்திய மற்றும் உள்ளூர் அரசாங்க வேலைத்திட்டங்கள் எல்லாம் போதுமானவையாக இல்லை என்பதோடு அவற்றுக்குப் போதுமான நிதியாதாரமும் அளிக்கப்படுவதில்லை, இந்த ஆண்டு உதவியில் இன்னுமொரு 1.8 பில்லியன் டாலரை வெட்டுவதற்கு ஒபாமா நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.

62. மின்சாரம், எரிசக்தி, தொலைபேசி மற்றும் இணைய சேவை உள்ளிட்ட அனைத்து அடிப்படை சேவை வசதிகளும் ஒவ்வொருவருக்கும் ஒரு அடிப்படை உரிமையாக கிடைக்கும்படி செய்யப்பட வேண்டுமே அன்றி, கட்டண சேவை நிறுவனங்களின் இலாப தேவைகளுக்கு அடிபணியச் செய்யப்பட்டதாய் இருக்கக் கூடாது.

63. இதேபோல், வெகுஜனப் போக்குவரத்து அமைப்புகள், அப்படி ஒன்று இருக்கும் இடங்களில், பொது முதலீடு இன்றி சிதைந்து போக விடப்பட்டுள்ளது. முதியவர்கள், உடல் ஊனமுற்றோர் அல்லது பிறவகையில் தங்களது சொந்த போக்குவரத்துக்கு செலவு செய்ய முடியாத நிலையில் உள்ள பிறரை இது குறிப்பாக கடுமையாக பாதித்திருக்கிறது. குறைந்த செலவில் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து அனைத்து மக்களுக்கும் கிட்ட வேண்டும்.

உயர் தர மருத்துவப் பராமரிப்பிற்கான உரிமை

64. மருத்துவத் தொழில்நுட்பத்திலான முன்னேற்றங்கள் உலக மக்களின் ஆரோக்கியத்தை மிகப் பெருமளவில் மேம்படுத்துவதை சாத்தியமாக்குகின்றன. ஆயினும் அமெரிக்காவில் 46 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எந்த சுகாதாரக் காப்பீடும் இன்றி இருக்கின்றனர், இன்னும் 25 மில்லியன் பேர் குறைகாப்பீடு கொண்டவர்களாய், காப்பீட்டு வரம்பிற்கும் மருத்துவச் செலவுகளுக்குமான இடைவெளியை சரிக்கட்ட இயலாத நிலையில் உள்ளனர். இப்போதிருக்கும் மெடிகேர் மற்றும் மெடிகெய்ட் (Medicare, Medicaid) ஆகியவை உள்ளிட்ட மத்திய ஆரோக்கியப் பராமரிப்பு திட்டங்கள் எல்லாம் போதுமானவையாக இல்லை என்பதோடு, அத்திட்டங்கள் நிதியாதாரம் வற்றியவையாகவும் இரக்கமற்ற தாக்குதலுக்கு ஆட்படுபவையாகவும் உள்ளன.

65. மருத்துவ பராமரிப்பு செலவுகள் மற்ற முன்னேறிய முதலாளித்துவ நாடுகளை விடவும் இரண்டு மடங்கு அல்லது அதற்கும் அதிகமாய் இருக்கும் நிலையிலும், ஆரோக்கிய நிலைகளின் அடிப்படையில் அந்த நாடுகளில் அமெரிக்கா கடைசி இடத்தில் தான் உள்ளது. ஹார்வர்டு ஆய்வாளர்கள் 2009ல் செய்த ஆய்வு ஒன்றின் படி, அமெரிக்காவில் 2005ல் மருத்துவ காப்பீடு இல்லாதது தொடர்பான உயிரிழப்புகளின் எண்ணிக்கை சுமார் 45,000 ஆக இருந்தது. மிக அதிகமான மருத்துவ செலவுகளே தனிநபர் திவால்நிலைகளில் 62 சதவீதத்திற்கு காரணமாக இருக்கின்றன, இதில் 80 சதவீதம் மருத்துவ காப்பீடு கொண்டுள்ள குடும்பங்கள் தான்.

66. பெருநிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் செலவுகளைக் குறைத்ததும் பரந்த மக்களின் பெரும்பான்மையினருக்கு அளவுப்பங்கீட்டு முறையில் மருத்துவ பராமரிப்பு வழங்குவதும் தான் இந்த மருத்துவ பராமரிப்பு நெருக்கடிக்கு ஆளும் வர்க்கம் பதிலிறுப்பு செய்த விதம். ஒபாமா நிர்வாகம், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மருந்து தயாரிப்பாளர்களுடன் நெருக்கமாய் ஆலோசனை செய்து வரையப்பட்டதான மருத்துவ பராமரிப்பு சீர்திருத்தம் என்கிற மோசடியான பதாகையின் கீழ் இந்த பரப்புரைக்கு தலைமையெடுத்துச் செல்கிறது. அதேசமயத்தில் இருகட்சிகளும் பங்குபெறும் நிதிநிலைப் பற்றாக்குறை மேலாண்மைக் குழு ஒன்றை உருவாக்கியிருக்கும் ஒபாமா நிர்வாகம் மத்திய சுகாதாரப் பராமரிப்பு திட்டங்களுக்கும் சமூகப் பாதுகாப்பிற்குமான செலவுகளை வெட்டும் வேலையை அதற்கு அளித்திருக்கிறது. மாநில அளவில், ஆதாரங்கள் வற்றிப் போன நிலையிலுள்ள அரசாங்கங்கள் ஏழைகள், முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கான மருத்துவ உதவி (மெடிகெய்ட்) வசதிகளுக்கான வரம்பையும் தகுதிவகையையும் குறைக்கின்றன.

67. மனித துயரத்தில் இருந்து ஆண்டுக்கு 200 மில்லியன் டாலர் வருவாயைக் குவிக்கும் தனியார் உடைமையாக இருக்கும் மருத்துவ பராமரிப்பு பெருநிறுவனங்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பதிலும், சோசலிச வகையில் மருந்து விநியோகத்தை ஸ்தாபிப்பதிலும் தான் மருத்துவ பராமரிப்பு நெருக்கடிக்கான தீர்வு தங்கியிருக்கிறது. இதன் அர்த்தம் இலாப நோக்கிலான மருத்துவம் என்பதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு இலவசமான, உயர்தரமான அரசு இயக்குகிற மருத்துவ பராமரிப்பை அனைவருக்கும் வழங்குவது ஆகும். தடுப்பு மருத்துவம், பரிந்துரை மருந்துகள், மனோநல மருத்துவப் பராமரிப்பு மற்றும் முன்னேறிய பரிசோதனைகள் மற்றும் மருத்துவமுறைகள் ஆகியவற்றுக்கான உரிமையும், அத்துடன் நாடு முழுவதும் தாக்குதலுக்கு உட்படுவதாய் இருக்கும் கருக்கலைப்புக்கான உரிமையும் இதில் அடங்கியிருக்க வேண்டும். புதிய மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவ பராமரிப்பு சேவை வழங்குநர்களுக்கு பயிற்சியளிக்கவும் அனைவரது தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் புதிய வசதிகளை நிறுவுவதற்கும் பல பில்லியன் டாலர்கள் செலவிடும் ஒரு திட்டம் தொடக்கப்பட வேண்டும்.

ஒரு பாதுகாப்பான ஓய்வுகாலத்திற்கான உரிமை

68. மில்லியன்கணக்கான ஓய்வு பெற்ற தொழிலாளர்களும் முதியவர்களும் அமெரிக்க முதலாளித்துவத்தால் குப்பையில் வீசியெறியப்படுகின்றனர், இனியும் அவர்களால் தங்களது முதலாளிகளுக்கு இலாபம் ஈட்டித் தரவியலாது என்கிற நிலையில் அவர்கள் வறுமைக்குள் தள்ளப்படுகின்றனர். முதியோர் பராமரிப்புக்கான செலவினக் குறைப்போ அல்லது அப்பராமரிப்பு இல்லாமையோ வயதான பெற்றோர் அவர்களது வயது வந்த பிள்ளைகளின் தயவினுள் மீண்டும் தூக்கி வீசப்படுவதையே அர்த்தப்படுத்துகின்றன.

69. சுமார் ஐந்தில் ஒருவர் என்ற விகித்த்தில் 7 மில்லியனுக்கும் அதிகமான வயதான அமெரிக்கர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழாய் வாழ்கின்றனர். அதிகரித்து வரும் மருத்துவ பராமரிப்பு செலவுகள் இதற்கு ஒரு பகுதி காரணம். வயதானோரில் சுமார் 60 சதவீதம் பேர் முழுக்கவும் சமூகநல பாதுகாப்பு திட்டத்தையே சார்ந்து உயிர்வாழ்கின்றனர். சமூகநல பாதுகாப்பு திட்ட சேவைகள் போதுமானதாய் இருப்பதில்லை என்பதால், மேலும் மேலும் அதிகமான எண்ணிக்கையில் வயதான தொழிலாளர்கள் ஓய்வினைத் தள்ளிப் போடுவதற்கோ அல்லது மீண்டும் வேலைக்குச் செல்வதற்கோ -பல சமயங்களில் குறைந்த ஊதிய வேலைகளுக்கு இளம் தொழிலாளர்களுடன் போட்டியிட்டுக் கொண்டு- நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். வயது அடிப்படையிலான பேதத்தையும் வயதான தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர், 2004 மற்றும் 2009க்கு இடையில் நடந்த இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கையில் சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

70. ஆரம்ப காலகட்டத்தில் கண்ணியமான ஓய்வூதியங்களை வெல்ல முடிந்திருந்த தொழிலாளர்கள் இன்று அவை குறைக்கப்படுவதைக் காண்கின்றனர், புதிய தொழிலாளர்கள் வெகுகுறைந்த நல உதவிகளுடன் அல்லது எந்த நல உதவிகளும் இல்லாத வேலைகளையே பெறுகின்றனர். கடந்த மூன்று தசாப்தங்கள், வரையறுத்த-அனுகூலத் திட்டங்களுக்குப் பதிலாக, 401(k) திட்டங்கள் உள்ளிட்ட வரையறுத்த-பங்களிப்பு ஓய்வூதியத் திட்டங்கள் தான் பல்கிப் பெருகியிருப்பதைக் கண்டுள்ளன. இது நிறுவனங்களுக்கான செலவினைக் கணிசமாகக் குறைத்திருப்பதோடு, பங்குச் சந்தையில் பணத்தை இறைப்பதற்கான ஒரு சாதனமாக சேவை செய்கிறது, அங்கு அது நிதி ஊக வர்த்தகர்களின் கருணையில் தங்கியிருக்கும்.

71. வாழ்க்கையின் அனைத்து அவசியங்களையும் பூர்த்தி செய்யத்தக்க ஒரு வருவாயுடனான பாதுகாப்புற்ற ஓய்வினை அனுமதிக்கும் ஓய்வூதியங்கள் அனைத்து தொழிலாளர்களுக்கும் உறுதியளிக்கப்பட்டதாய் இருக்க வேண்டும். தொழிலாளர்கள் 60 வயதில் முழுமையான ஓய்வூதியத்துடன் ஓய்வுபெறுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். முதியோர் பராமரிப்பு திட்டங்கள் விரிவுபடுத்தப்படுவதோடு முழுமையாய் நிதியாதாரம் அளிக்கப்பட வேண்டும். 

கல்விக்கான உரிமை

72. சமூகம் மற்றும் வேலையின் சிக்கலான தன்மை அதிகரித்து வருகின்ற நிலையில் அனைத்து தொழிலாளர்களும் தரமான கல்வி பெற வேண்டியதன் அவசியமும் ஏற்படுகிறது. ஆயினும் கல்வியின் நிலை பரிதாபத்திற்குரியதாகவும் மோசமடைந்து வருவதாகவும் உள்ளது. நிதிப் பற்றாக்குறையால், நாடு முழுவதும் மாநிலங்களும் உள்ளூர் அரசாங்கங்களும் பொதுப் பள்ளிகளை மூடுகின்றன, வெகு முக்கிய கல்வித் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றன. கல்வித்துறை நெருக்கடிக்கு ஆசிரியர்கள் பலியாக்கப்படுகின்றனர். பாரிய வேலைஇழப்புகளையும், நல உதவிகள் மற்றும் ஊதியங்களிலான வெட்டுகளையும், மற்றும் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதையும் ஏற்றுக் கொள்ள அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

73. பொதுப் பள்ளிகளை எதிர்நோக்கும் பெருந்துன்பமானது மூன்று தசாப்த கால தாக்குதல்கள் மற்றும் நிதிவெட்டுகள், அத்துடன் கல்விச் சேவைகளின் தனியார்மயமாக்கம், பொது வளங்கள் இலாப-நோக்குடைய பள்ளிகளுக்கு திசைமாற்றப்பட்டது, மற்றும் செயல்திறன்-அடிப்படையிலான சோதனை பல்கிப் பெருகியது ஆகியவற்றின் விளைபொருளே. பள்ளிகளில் பரிணாம வளர்ச்சி, பிரபஞ்சவியல், மற்றும் பிற அறிவியல்களைக் கற்பித்த இடத்தில் மதரீதியான கல்வியை அறிமுகப்படுத்தியதன் மூலம் திருச்சபைக்கும் அரசுக்கும் இடையில் இருந்த பிரிவுக்கோட்டின் மீதான தாக்குதலும் இவற்றுடன் சேர்ந்து கொண்டது. ஒபாமாவின் உச்சிக்கு விரைக (Race to the Top) திட்டம் புஷ் கையெழுத்திட்டு சட்டமாக்கிய இருகட்சி ஆதரவுடனான எந்த குழந்தையும் விடப்படவில்லை சட்டத்தின் (No Child Left Behind Act) வலதுசாரிக் கொள்கைகளை ஆழப்படுத்தியிருக்கிறது. குறைந்த நிதியாதாரங்களுக்கு போட்டியிடும் பொருட்டு  கல்விமாவட்டங்கள், சார்ட்டர் பள்ளிகளை (charter schools) விரிவாக்குவதன் மூலமும், செயல்திறன் குறைந்த பள்ளிகளில் ஆசிரியர்களை வேலைநீக்கம் செய்வது அல்லது அந்த பள்ளிகளையே ஒட்டுமொத்தமாக மூடி விடுவதன் மூலமும் போட்டிபோட நெருக்கப்படுகின்றன.

74. அமெரிக்காவில் கல்வி எப்போதும் ஏற்றத்தாழ்வு கொண்டதாகவே இருந்து வந்துள்ளது எனினும், அமெரிக்க ஜனநாயகத்தின் விரிவாக்கத்துடன் சேர்த்து கல்விக்கான அணுகல் அதிகரித்தது. அமெரிக்க புரட்சியைத் தொடர்ந்து பொதுக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது, சீர்திருத்தவாதியான ஹோராஸ் மேன் தலைமையில் பொது உயர்நிலைப் பள்ளிக் கல்வியின் விரிவாக்கம், உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு கல்வி கிட்டியது, மற்றும் 20 ஆம் நூற்றாண்டிலான இனப்பாகுபாடு அகற்றம் ஆகியவை இதில் அடங்கும். இந்த ஆரம்ப சீர்திருத்தங்கள் எல்லாம் இப்போது தலைகீழாகிக் கொண்டிருக்கின்றன. பொதுக் கல்வியின் சமநோக்கு அம்சம் தான் வலதுசாரி அரசியல்வாதிகளும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருநிறுவன நலன்களும் அதனைக் குறிவைப்பதற்கான துல்லியமான காரணமாக அமைகிறது.

75. கல்லூரி மற்றும் பல்கலைக்கழக அளவில், இளம் தொழிலாளர்கள் கல்விக்கான பெரும் செலவினைக் காட்டி விரட்டப்படுகிறார்கள், அல்லது பயங்கரமான அளவான கல்விக் கட்டணத் தொகையை செலுத்துவதற்கு பத்தாயிரக் கணக்கான டாலர்களை கடனுதவியாகப் பெறத் தள்ளப்படுகின்றனர். பொதுக் கல்வி நிறுவனங்களில் நான்கு-வருடம் கல்வி பயின்று இளங்கலை பட்டம் பெறும் மாணவர்கள் சராசரியாக 20,000 டாலர் தொகை கடன் கொண்டிருக்கிறார்கள், வேலைவாய்ப்புக்கான நம்பிக்கை மெலிந்து கொண்டு போகும் நிலையிலும். மொத்த கல்லூரி மாணவர் கடன் 1 டிரில்லியன் டாலர் தொகையை நெருங்கிக் கொண்டிருக்கிறது, மொத்த கடன் அட்டைகளின் கடன் தொகையை விடவும் இது அதிகமாகும். இந்த கடன் தடை செய்யப்பட வேண்டும்.

76. கல்விக்கான அணுகல் பெருமளவில் வருவாயின் மூலம் தீர்மானிக்கப்படுகிற ஒரு சமுதாயத்தில் சமத்துவம் குறித்த அனைத்து விவாதமும் ஒரு மோசடியே. பலபத்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்களையும் ஊழியர்களையும் தரமான ஊதிய விகிதங்கள் மற்றும் நல உதவிகளுடன் பணியமர்த்துவது, ஒரு வகுப்பிற்கான மாணவர் எண்ணிக்கையைக் குறைப்பது, பழைய பள்ளிகளை திருத்துவது மற்றும் புதுப் பள்ளிகள் கட்டுவது, மற்றும் அனைத்து பள்ளிகளுக்கும் மிக சமீபத்திய புத்தகங்கள் மற்றும் கல்வி நுட்பத்தை அளிப்பது ஆகியவைக்கான திட்டத்தை உள்ளடக்கிய ஒரு பொதுப்பணித் திட்டம் வேண்டும்.

ஒரு ஆரோக்கியமான பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான உரிமை

77. மானுடத்தின் ஆரோக்கியமும் நலமும் ஒரு ஆரோக்கியமான சுற்றுச்சூழலையே சார்ந்துள்ளது. ஆயினும், ஒவ்வொரு முடிவும் இலாப தேடலால் உத்தரவிடப்படுகிற ஒரு சமுதாயத்தில் சுற்றுச்சூழல் சீரழிவை நிவர்த்தி செய்வது சாத்தியமில்லாதது.

78. மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய்க் கசிவுப் பேரழிவு ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் அடிப்படையையும் தகர்த்திருக்கிறது. கட்டுப்பாடுகள் அகற்றம், பெருநிறுவன செலவுக் குறைப்பு, மற்றும் பிரம்மாண்டமான பெருநிறுவனங்களது இரக்கமற்ற இலாப வேட்டை ஆகியவற்றின் மரணகரமான பின்விளைவுகளின் ஒரு உயிர்ச்சித்திரம் போன்ற வெளிப்பாடாகவே இது அமைந்திருக்கிறது. அமெரிக்க வரலாற்றின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவுக்கு முகம் கொடுக்கிற சமயத்தில், ஒபாமா நிர்வாகமோ எல்லாவற்றையும் பிரிட்டிஷ் பெற்றோலிய நிறுவனத்தின் கரங்களிலேயே விட்டிருக்கிறது, நிறுவனத்தின் இலாப நலன்களை நிபந்தனையின்றி பாதுகாத்தது, அத்துடன் யாரையுமே இந்த துயரத்திற்கு பொறுப்பாக்கவில்லை. இந்த பேரழிவில் உடனடி பாதிப்புக்கு ஆளான தொழிலாளர்கள் மற்றும் வளைகுடா பிராந்தியத்தின் சிறு வர்த்தக உரிமையாளர்கள், அவர்களது வாழ்வாதாரங்கள் சீரழிக்கப்பட்டதற்கு வெகு குறைந்த இழப்பீடையே பெற இருக்கின்றனர்.

79. நகரங்கள் மற்றும் நீர்ப்பாதைகள் மாசடைவது, மழைக்காடுகள் மற்றும் கடற்கரைப் பிராந்தியங்கள் அழிப்பு மற்றும் உயிரியல் பன்முகத்தன்மையின் அழிவு ஆகியவை உள்ளிட மனிதகுலத்தை எதிர்கொண்டிருக்கும் பல சுற்றுச்சூழல் பேரழிவுகளிடையே மிக அபாயகரமானதாக நிற்பது உண்மையில் பூமி வெப்பமடைதல் தான். இது உலக காலநிலையை இடர்படுத்தவும், விவசாய உற்பத்தியை அழிக்கவும், நோய் பரவலை அதிகரிக்கவும், மற்றும் பூகோளத்தின் அனைத்து வாழ்க்கையையும் சங்கடத்திற்குள்ளாக்கவுமான அச்சுறுத்தலை கொண்டிருக்கிறது.

80. சுற்றுச்சூழல் பெருங்கேட்டு நிலைக்கான அவசரகால பதிலிறுப்பு ஒன்று தொடக்கப்படுவதென்றால், உலகளாவிய எரிசக்தி ஜாம்பவான் நிறுவனங்கள் கையகப்படுத்தப்பட்டு தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுவதில் இருந்து தான் அது தொடங்கியாக வேண்டும். இது தான், சமூக தேவைகளைப் பூர்த்தி செய்கிற அதே சமயத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறதான - எரிசக்தியின் மாற்று வடிவங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் ஒரு பாரிய சமூக முதலீடு இதில் அடங்கும் - ஒரு வழியில் எரிசக்தி உற்பத்தி செய்யப்படுவதற்கான ஒரு பகுத்தறிவுற்ற உலகளாவிய திட்டத்தை செயல்படுத்துவதில் அவசியமான முதல் அடி ஆகும். இந்த நிறுவனங்களை கையகப்படுத்துவதானது, சுற்றுச்சூழல் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்கள் மீட்சி செய்யப்படுவதையும் பிரிட்டிஷ் பெற்றோலியம் எண்ணெய்க் கசிவு உட்பட்ட சம்பவங்களில் தங்களது வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட நேர்ந்தவர்கள் மீண்டும் உதவிகள் பெறுவதையும் உறுதி செய்யத்தக்க வகையில் ஆதாரவளங்களையும் சுதந்திரப்படுத்தும்.

81. ஒரு ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமையில் ஒரு பாதுகாப்பான வேலைச் சூழலுக்கான உரிமையும் அடங்கும். பல தசாப்தங்களாக நிகழும் செலவுக் குறைப்பும் அரசாங்க கட்டுப்பாட்டு நீக்கங்களும், வருடத்திற்கு 1 மில்லியன் தொழிலாளர்களை பாதிக்கும் மன உளைச்சல் பாதிப்புகள் தொடங்கி 40 வருடங்களில் மிக மோசமான நிலக்கரி சுரங்க விபத்தான 29 சுரங்கத் தொழிலாளர்களை பலிவாங்கிய அப்பர் பிக் பிராஞ்ச் சுரங்க வெடிப்பு போன்ற மரணகரமான விபத்துகள் வரை, பெருகிய முறையில் துரோகமிழைப்பதாகி இருக்கும் வேலையிட நிலைமைகளுக்கு வழிவகுத்திருக்கின்றன. முதலாளித்துவ அமைப்புமுறை தொழிலாளர்களை தூக்கியெறியத்தக்க பண்டங்களாய் தான் நடத்துகிறது. அவர்களது காயமோ அல்லது மரணமோ கூட அதனைப் பொருத்தவரை இலாபத்தை நோக்கிய நில்லாத செலுத்தத்திற்கும் தனிநபர் சொத்து குவிப்பிற்கும் எதிராக கணக்கில் கொண்டு பார்த்தால் அதிகம் பொருட்படுத்தத்தகாதது.

கலாச்சார உரிமை

82. கலை மற்றும் கலாச்சாரத்திற்கான அணுகல் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தின் அடிப்படையான மூலக்கூறாகும். ஆயினும், பிற ஒவ்வொன்றையும் போலவே, இதுவும் தொடர்ந்து தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்க கலாச்சாரம் - திரைப்படம், தொலைக்காட்சி, இசை - ஒரு சமயத்தில் தனது புதுமைபடைக்கும் திறன் காரணமாகவும் சக்திவாய்ந்த ஜனநாயக மற்றும் மனிதாபிமான தன்மை காரணமாகவும் ஈர்க்கும் துருவமாக இருந்தது. கலாச்சாரத்தை இலாப நோக்கிற்கு அடிபணியச் செய்ததானது தீவிரமான சீரழிவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.

83. கலை வெளிப்பாட்டின் மீதான ஒரு வலது-சாரி தத்துவார்த்த தாக்குதலான கலைகள் மீதான நிதியாதார வெட்டுகள், மற்றும் பொதுவாக அமெரிக்க சமூகத்தை மூர்க்கமாக்குவது ஆகியவற்றால் கலாச்சாரம் பாதிப்புற்றுள்ளது. கலைக்காட்சியகங்கள், இசைக்குழுக்கள், திரையரங்குகள் மற்றும் பொதுத் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகியவற்றுக்கான அரசாங்க மானியங்கள் எல்லாம் உருவப்பட்டு விட்டன. கலை மற்றும் இசைக் கல்வியானது அநேக பொதுப் பள்ளிகளில் மிகப்பெருமளவில் குறைக்கப்பட்டு விட்டது அல்லது நீக்கப்பட்டு விட்டது. நூலக நேரங்கள் மற்றும் சேவைகள் எல்லாம் குறைக்கப்பட்டிருக்கின்றன, கல்விக்கான நிதியாதார வெட்டுகளில் பள்ளி நூலகங்களை மூடுவதும் அடங்கியிருக்கிறது. பிரம்மாண்டமான பெருநிறுவனங்களது உடைமைகளாக இருக்கும் ஊடகங்கள் அரசாங்கம் மற்றும் பணக்காரர்களின் ஊதுகுழலாக செயல்படுகின்றன, இவை பொது வெளியை மாசுபடுத்தி பொய்களைப் பரப்புகின்றன. இத்தகையதொரு கூலிப்படை அணுகுமுறை மற்றும் கலாச்சாரமற்ற அணுகுமுறையால் சமூகத்தின் புத்திஜீவித மற்றும் தார்மீக அறநெறி இழைக்கு விளையும் சேதாரம் அளவிட சாத்தியமில்லாதது.

84. அனைத்து உழைக்கும் மக்களுக்கும் கலை மற்றும் கலாச்சாரத்திற்கான முழுமையான அணுகல் கிடைக்க பாரிய பொது நிதியும், அத்துடன் இசை, ஆட்டம், நாடகம் மற்றும் கலைக்கான ஒரு மலிவான கட்டணத்துடனோ அல்லது இலவசமாகவோ பயிற்றுவிக்கும் புதிய பள்ளிகள் மற்றும் மையங்கள் உருவாக்கப்படுவதும் அவசியம். கலைகளுக்கான மானியங்கள் மற்றும் உதவிகள் மீதான முடிவுகள் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரத்துவவாதிகளின் கரங்களில் இருந்து மீட்கப்பட்டு ஓவியர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் பிற கலாச்சார தொழிலாளர்களின் குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட வேண்டும்.

பெருநிறுவன சக்தி மற்றும் முதலாளித்துவ அரசுக்கு எதிரான தொழிலாளர்களின் சமூக உரிமைகள்

85. மேலே பட்டியலிடப்பட்ட சமூக உரிமைகள் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படையான அவசியங்களைக் குறிக்கின்றன. ஆனால், அமெரிக்காவிற்குள்ளாக பொருளாதார திறனின் அடிப்படை மறுஒழுங்கமைப்பும் செல்வத்தின் மறுவிநியோகமும் இல்லாமல் அவையெல்லாம் சாதிக்கப்பட முடியும் என்று நம்புவது கற்பனாவாதமாகவே அமையும். இந்த உரிமைகளை அடைவதற்கு பெருநிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்களின் இதுவரை சவால்விடப்படாத சிறப்புரிமைகள் மீது ஒரு முகத்திற்கு நேரான தாக்குதல் அவசியமாய் இருக்கிறது என்பதை சோசலிச சமத்துவக் கட்சி வெளிப்படையாய் தெரிவிக்கிறது.  பல தலைமுறை தொழிலாளர்களின் உழைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பரந்த செல்வமானது சிறப்புரிமை பெற்ற சிலரது கைகளில் இருந்து பறிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாய் மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தின் மீது அத்தகையதொரு நேரடித் தாக்குதலை தவிர்க்க தலைப்பட்டால் தொழிலாளர்கள் எதையும் சாதிக்க முடியாது. அதன்படி, உழைக்கும் மக்களின் சமூக உரிமைகளுக்கான போராட்டத்தில் இருந்து தர்க்கரீதியாய் எழும் கூடுதல் கோரிக்கைகளின் ஒரு வரிசையை சோசலிச சமத்துவக் கட்சி எழுப்புகிறது.

வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களை கையகப்படுத்த வேண்டும்

86. அரசியல் மற்றும் பொருளாதார வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து அடிப்படை தேவைகளும் பிரம்மாண்டமான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் சர்வாதிகாரத்துடன் உடனடியான மற்றும் நேரடியான மோதலுக்கு வருகிறது. பொருளாதாரத்தின் தலைமை உயரங்களாய் அமர்ந்திருக்கும் இந்த பெருநிறுவனங்கள், உலகெங்கிலுமான பில்லியன்கணக்கான மக்களின் கூட்டான உழைப்பின் விளைபொருளான பரந்த சமூக ஆதாரவளங்களைக் கட்டுப்படுத்துகின்றன. இந்த செறிந்த தொகைகள் சமூகத்தின் நலனுக்கு பயன்பட உபயோகிக்கப்படுவதில்லை, மாறாக ஒரு சிறு அடுக்கின் செல்வத்தை பெருக்கவும், அரசாங்கங்களை விலைக்கு வாங்கவும் கொள்கைகளைக் கட்டளையிடவும் பயன்படுத்தப்படுகின்றன.

87. கடந்த 40 வருட காலங்களில், அமெரிக்காவில் வங்கிகளின் சக்தி பிரம்மாண்டமாய் வளர்ந்திருக்கிறது. இந்த காலகட்டத்திலான நிதியால்-உந்தப்பட்ட பெருநிறுவன கெட்டிப்படல் அலை ஒன்று ஊதியங்களை வெட்டுவதற்கும், நிறுவன ஆட்குறைப்பிற்கும் மற்றும் ஓய்வூதியம் மற்றும் ஆரோக்கியப் பராமரிப்பு நிதியங்களை சூறையாடுவதற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 1990களின் பங்குச் சந்தை எழுச்சியுடன், வோல் ஸ்ட்ரீட்டுக்கான முதலீட்டின் மீதான உடனடி வருவாய் மீது முன்னை விட அதிக விடாப்பிடியான கவனக் குவிப்பும் உடன்வந்திருந்தது.   இது பலசமயங்களில், உண்மையான உற்பத்தி சக்திகளின் அழிப்பு, தொழிற்சாலைகள் மூடல் மற்றும் வேலைகள் அழிப்பு ஆகியவற்றுக்கு பக்கவாட்டில் நிகழ்ந்தது, உண்மையில் பார்க்கப் போனால் இவற்றைச் சார்ந்து நிகழ்ந்தது.

88. நிதி தனவான்களின் - இவர்களது செல்வம் உண்மை மதிப்பை உற்பத்தி செய்வதில் இருந்து பெருகிய முறையில் விலகி அமைவதாகி வருகிறது - இந்த ஒட்டுண்ணித்தனம் 2008 நிதி உருக்குலைவுக்கு பின்னமைந்த ஒரு பிரதான காரணி ஆகும். சில சந்தர்ப்பங்களில் -வீட்டுக்கடன் சந்தையின் நிலைக்குலைவு மீது கோல்ட்மேன் சாக்ஸ் பந்தயம் கட்டியது போன்றவை- செல்வத்தை வோல் ஸ்ட்ரீட் ஊக வணிகர்களின் கைகளில் மாற்றும் பொருட்டு நெருக்கடி திட்டமிட்டு தூண்டப்பட்டது. சுதந்திரமான சந்தை குறித்த நற்செய்திகள் எல்லாம் வங்கிகளையோ அல்லது அவற்றின் அரசியல் பிரதிநிதிகளையோ நிதித்துறை கனவான்களின் வாராக் கடன்களுக்கு உறுதியளிக்க பொதுக் கருவூலத்தை கொள்ளையடிப்பதில் இருந்து தடுக்கவில்லை. அரசாங்க வரவு செலவுக் கணக்குகளுக்கு மாறி விட்ட இந்த கடன்கள் இப்போது முக்கியமான சமூகத் திட்டங்களிலான வெட்டுகள் மூலம் செலுத்தப்படவிருக்கின்றன.

89. நெருக்கடிக்கு பதிலிறுப்பாக நிதிய உயர்தட்டினராலும் அதன் அரசியல் பிரதிநிதிகளாலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வங்கிகளின் அதிகாரத்தை பரந்த அளவில் விரிவுபடுத்தியுள்ளன. பல வங்கிகள் தொடர்ச்சியாய் பொறிந்து போனதன் காரணமாக அமெரிக்காவின் நான்கு தலைமை வர்த்தக வங்கிகளான சிட்டிகுரூப், ஜேபிமோர்கன் சேஸ், பேங்க் ஆஃப் அமெரிக்கா மற்றும் வெல்ஸ் பார்கோ(Citigroup, JPMorgan Chase, Bank of America, Wells Fargo) நாட்டின் வங்கி சொத்துகளில் சுமார் 70 சதவீதத்தைக் கட்டுப்படுத்துகின்றன, 2000 ஆம் ஆண்டின் இறுதியில் இது 50 சதவீதத்திற்கும் கீழான அளவில் இருந்தது.

90. இந்த நிறுவனங்கள் எல்லாம் தனியார் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை சமூகத் தேவையில் ஒன்று கூட பூர்த்தி செய்யப்பட முடியாது. சிறு வைப்புதாரர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளித்து, வங்கிகளும் மற்ற பெரும் நிதி நிறுவனங்களும் கையகப்படுத்தப்பட வேண்டும், பொது உடைமையின் கீழ் வைக்கப்பட்டு தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் இயங்க வேண்டும். இது அமெரிக்காவிலும் சர்வதேசரீதியாகவும் வறுமையை ஒழிப்பதற்கும் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் ஒரு பொதுப் பணித் திட்டத்திற்கு பிரம்மாண்ட ஆதாரவளங்களை கிடைக்கச் செய்யும்.

முக்கிய பெருநிறுவனங்களை அரசுடைமையாக்க வேண்டும்

91. வங்கிகளுக்கு அடுத்ததாய் வருவது பிரம்மாண்டமான பெருநிறுவனங்கள். அமெரிக்காவில் ஏகபோகத்தின் விஸ்தீரணம் வரலாற்றில் வேறு எந்த காலத்தை விடவும் பெரியதாய் உள்ளது. பல தசாப்த கால கட்டுப்பாடு-அகற்றங்கள் மற்றும் பெருநிறுவன உறுதிப்படுத்துதல் ஆகியவை ஒரு சில பாரிய அளவிலான வணிகங்கள் - எரிசக்தித் துறையில் எக்சான் மொபில் மற்றும் செவ்ரான் டெக்சகோ (ExxonMobil, ChevronTexaco)  ஆகிய நிறுவனங்கள், விவசாய வணிகத்தில் ஆர்சர் டேனியல்ஸ் மிட்லாண்ட் மற்றும் மோன்சாண்டோ (Archer Daniels, Midland, Monsanto) ஆகிய நிறுவனங்கள், மருந்து தயாரிப்பில் ஜோன்சன் & ஜோன்சன் மற்றும் பிஃபைசர் (Johnson & Johnson, Pfizer) ஆகிய நிறுவனங்கள், மற்றும் கணினித் தொழில்நுட்பத்தில் மைக்ரோசாப்ட், ஆப்பிள், கூகுள் மற்றும் இன்டெல்(Microsoft, Apple, Google,Intel) ஆகிய நிறுவனங்கள் - சந்தைகளில் ஆதிக்கம் செலுத்துவதற்கும், அரசாங்க கொள்கைகளை உத்தரவிடுவதற்கும் மற்றும் உலகெங்கிலும் நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களை சுரண்டுவதற்குமான சூழ்நிலைகளை உருவாக்கியிருக்கின்றன.

92. இந்த பாரிய பெருநிறுவனங்கள் தனியார் கட்டுப்பாட்டின் கீழ் மட்டுமே மிகுந்த செயல்திறனுடன் செயல்படுவதாகக் கூறுவது ஒரு மோசடி ஆகும். எரிசக்தித் துறையில் மாற்று ஆதாரங்களை அபிவிருத்தி செய்வது மற்றும் பொதுப் போக்குவரத்து ஆகியவற்றை தடுப்பது துவங்கி கணினி இயங்குமுறையின்  மென்பொருட்களில் ஏகபோகங்களைப் பராமரிப்பது வரை, இந்த பெருநிறுவனங்கள் ஒட்டுமொத்தமாய் சமூகத்தை பணயமாய் வைத்து தங்களது குறுகிய நலன்களைப் பாதுகாப்பதற்கு தளர்ச்சியின்றி பாடுபடுகின்றன.

93. 10 பில்லியன் டாலர் அல்லது அதற்கு அதிகமாய் மதிப்பிடப்படும் அனைத்து தனியார் தொழிற்துறை, உற்பத்தித் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பெருநிறுவனங்களும் பொது உடைமை நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும் - சிறு பங்குதாரர்களுக்கு முழுமையான இழப்பீட்டுத் தொகையும், அனைத்து ஓய்வூதிய மற்றும் ஆரோக்கியப் பராமரிப்பு நிதிய முதலீடுகளுக்கான உத்தரவாதங்களும் வழங்கப்பட வேண்டும்.  தொலைதொடர்பு, விவசாயம், கல்வி, ஆரோக்கியப் பராமரிப்பு மற்றும் போக்குவரத்து உட்பட சமூகத்தின் அடிப்படை செயல்பாட்டுக்கு மிக முக்கியமானதாக அமையும் துறைகளும் பொது உரிமைத்துவத்துக்கும் ஜனநாயகக் கட்டுப்பாட்டிற்கும் ஆட்படுத்தப்பட வேண்டும்.

94. எல்லாவற்றையுமே அரசுடைமையாக்க வேண்டும் என்பது இதன் அர்த்தமல்ல. மில்லியன்கணக்கான தொழிலாளர்களை பணியமர்த்தி இருக்கும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களே கடனுக்கான நம்பகமான ஆதாரவளங்களையும் பெரிய பெருநிறுவனங்களின் நியாயமற்ற ஏகபோக நடைமுறைகளில் இருந்து நிவாரணத்தையும் வேண்டி திசையறியாமல் நிற்கின்றன.

தொழிலாளர்கள் கட்டுப்பாட்டில் வர வேண்டும்

95. வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை கையகப்படுத்துவது உற்பத்தி மீது உண்மையான ஜனநாயகக் கட்டுப்பாட்டினை ஸ்தாபிப்பதுடன் கைகோர்த்து வருவதாய் இருக்க வேண்டும். இது தான், முதலாளித்துவ சந்தையின் காட்டாட்சியை இடம்பெயர்ப்பதற்கு உலகளாவிய உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான ஒரு பகுத்தறிவுபட்ட திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கும் அனைத்து முடிவுகளும் சமூக தேவையை அடிப்படையாகக் கொண்டு அமைவதை உறுதி செய்வதற்குமான அவசியமான அடிப்படை ஆகும்.

96. முதலாளித்துவ நிதிமுதலாளிகளை பொறுப்பேற்க அவசியம் கருதாத அதிகாரத்துவவாதிகளைக் கொண்டு இடம்பெயர்ப்பதல்ல சோசலிசக் கொள்கையின் நோக்கம். தொழிற்துறை ஜனநாயகம் என்பது உழைக்கும் மக்கள் தங்களது உழைப்பு வாழ்க்கைகளின் மீது உண்மையான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாகும். அநேக மக்கள் தங்களது வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவிடும் இடமான வேலையிடம் ஒரு சர்வாதிகார பாணியில் இயங்குகின்ற ஒரு அமைப்புமுறையில் ஜனநாயகம் என்பது எங்கே இருக்கிறது? வேலை, பாதுகாப்பு, ஊதியங்கள், பணியமர்த்தம் மற்றும் வேலைநேரங்கள் ஆகிய சூழ்நிலைகளைப் பாதிக்கிற முடிவுகள் தொழிலாளர்களின் ஜனநாயகக் குரலுக்கு ஆட்பட்டதாக இருக்க வேண்டும். அனைத்து பெருநிறுவனங்களின் கணக்குவழக்கு புத்தகங்களையும் தொழிலாளர்கள் மற்றும் பரந்த மக்களின் பார்வைக்கு திறந்து வைத்திருப்பதையும், பெருநிறுவனத் தலைமையை அனைத்து ஊழியர்களின் ஒரு ஜனநாயக வாக்கெடுப்பு மூலம் உறுதி செய்வதையும் இது முன்னனுமானிக்கிறது.

சமூக சமத்துவம் வேண்டும்

97. ஒரு சமூகம் முன்னோக்கி செல்கிறதா அல்லது பின்னோக்கி செல்கிறதா என்பதைக் காண்பதற்கான அடிப்படை சோதனைகளில் ஒன்று அது சமனுறுவது அதிகப்பட்டுக் கொண்டிருக்கிறதா அல்லது குறைந்து கொண்டு இருக்கிறதா என்பது தான். அமெரிக்காவில் நிலவுகிற ஏற்றத்தாழ்வின் மட்டங்கள் வரலாற்றில் ஏறக்குறைய முன்னுதாரணங்கள் அற்றவை ஆகும். கடந்த நான்கு தசாப்தங்கள் ஏற்றத்தாழ்வில் ஒரு அதிர்ச்சிகரமான வளர்ச்சியைக் கண்டிருக்கின்றன. 1970களில் மக்களில் மேலமைந்த 1 சதவீதத்தினர் வருடாந்திர வருவாயில் சுமார் 8 முதல் 9 சதவீதம் வரை எடுத்துக் கொண்டனர். 2007க்குள்ளாக இது 23.5 சதவீதமாய் ஏறி விட்டிருந்தது, 1920களில் பெருமந்த நிலை காலத்திற்குப் பின்னர் இப்படியொரு அளவு காணப்படாதது. இதே காலகட்டத்தில், மொத்த வருவாய் வளர்ச்சியில் 58 சதவீதம் மக்களில் மேலிருக்கும் ஒரு சதவீதத்தினருக்கு சென்றிருக்கிறது, அதில் 35 சதவீதம் ஒரு சதவீதத்தின் மேலிருக்கும் பத்தில் ஒரு பங்கு மனிதர்களிடம் சென்றிருக்கிறது. கீழிருக்கும் 60 சதவீத மக்களின் வருவாயோ சுமார் 5 சதவீத அளவுக்கு சரிவு கண்டுள்ளது.

98. உலக அளவில், இப்போது ஓராயிரத்திற்கும் அதிகமான பில்லியனர்கள் இருக்கிறார்கள், இதில் அமெரிக்காவில் 400க்கும் அதிகமானோர் இருக்கின்றனர். மொத்தமாய் சேர்ந்து இந்த பெரும் செல்வந்தர்களின் தட்டு, 2009ம் ஆண்டில் தங்களது செல்வம் 50 சதவீதம் வரை வளர்ச்சியுற்று 3.6 டிரில்லியன் டாலராகக் கண்டது. பல தலைமுறைகள் கண்டிராத மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்கு இடையில் இந்த தட்டின் செல்வம் வளர்ந்ததென்றால் அதன் காரணம் உலகெங்கிலுமான அரசாங்கங்களின், எல்லாவற்றிற்கும் மேலாய் ஒபாமா நிர்வாகத்தின், கொள்கைகளே. நிதி அமைப்பை பல-டிரில்லியன்-டாலர் செலவிட்டு மீட்டதோடன்றி பெருநிறுவன நிர்வாகிகள் மற்றும் தனியார் முதலீட்டு நிதிநிறுவன (ஹெட்ஜ் ஃபண்ட்) நிர்வாகிகளுக்கான ஊதியத்தைக் குறைக்கும் எந்த நடவடிக்கைகளும் நிராகரிப்பட்டன. 

99. ஏற்றத்தாழ்வுக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் சம்பந்தமில்லை என்பதாய் முதலாளித்துவத்தின் வக்காலத்துவாதிகள் கூறுகின்றனர், ஏதோ டிரில்லியன்கணக்கான டாலர்களை உற்பத்திக்காக பயன்படவிருப்பதில் இருந்து திரும்பப் பெறுவது எந்த பொருளாதார பாதிப்பும் கொண்டிருக்காது என்பது போல. இன்னும் இன்னும் என்று நிதி தனவான்களின் தொடர்ச்சியான தணிக்க முடியாத பண வேட்கையானது நாட்டை திவாலாக்கியிருப்பதோடு ஒன்றுக்கடுத்து ஒன்றாய் ஊக தள்ளாட்டங்களுக்கும் எண்ணெய் வார்த்திருக்கிறது. கண்ணியமான ஊதியங்கள் கொடுக்க தங்களிடம் பணம் இல்லை என்று கூறுகிற பாரிய வேலை வெட்டுகளை அமல்படுத்துகிற அதே பெருநிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகள் தான் தங்களுக்கும் தங்களுக்கு மேலிருக்கும் அதிகாரிகளுக்கும் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன்கணக்கிலான அல்லது சொல்லப் போனால் பலபத்து மில்லியன்கணக்கிலான டாலர்களை எப்படியோ சமாளித்து பெற்றுக் கொள்கின்றனர்.

100. சமூக சமத்துவத்தையும் சொத்துகள் தீவிரமாக மறுவிநியோகம் செய்யப்படுவதையும் ஊக்குவிக்க உடனடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், செல்வந்தர்கள் மீது வரிச்சுமையை வைத்து விட்டு பரந்த மக்களுக்கு வரிகளைக் குறைப்பதாக அமைகிற ஒரு முற்போக்கான வருமான வரி அமைப்பும் இதில் அடங்கும். அனைத்து முக்கிய பெருநிறுவனங்களின் இலாபங்கள் மீதான வரிகளும் கூர்மையாய் அதிகரிக்கப்பட வேண்டும்.

101. செல்வந்தர்களிடம் இருந்து கைப்பற்றுவது என்பது பொருளாதாரரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் மட்டுமன்றி, தார்மீகரீதியாகவும் சட்டரீதியாகவும் கூட நியாயமானதே. ஒவ்வொரு பெரும் செல்வத்திற்குப் பின்னும் ஒரு பெரும் குற்றம் மறைந்திருக்கிறது என்கிற பால்சாக்கின் முதுமொழி இன்றைய நிதிய பிரபுத்துவத்திடம் நிச்சயமாக உண்மையாகும். என்ரோன் (Enron) தொடங்கி வீட்டு அடமானக் கடன் மோசடிகள் வரை, இந்த செல்வத்தின் பெருமளவு முழுக்கவும் சீரழிவான முற்றுமுதலாய் குற்றவியல்பட்ட வழிமுறைகளின் மூலம் ஈட்டப்பட்டதாகும். ஆயினும் இந்த பெருநிறுவன குற்றவாளிகளில் ஒரு வெகு சொற்பமான எண்ணிக்கையிலானோர் மட்டும் தான் பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கின்றனர், மிகவும் அப்பட்டமாக பொறுப்பாக்கத்தக்கவர்கள் எல்லாம் எந்த சேதாரமும் இன்றி தப்பித்து விடுகின்றனர்.  சமூக மற்றும் பெருநிறுவன ஆதாரவளங்களில் ஊக நடவடிக்கைகளிலும் மற்றும் குற்றவியல்தன்மையுற்ற வகையில் தவறாகப் பெற்றவற்றிலும் சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரணை செய்வதற்கும் கூண்டில் நிறுத்துவதற்கும் சோசலிச சமத்துவக்கட்சி ஆலோசனை அளிக்கிறது.

102. சோசலிச சமத்துவத்திற்கான போராட்டம் என்பது நிறம், பால், இனம், மதம், தேசிய மூலம் மற்றும் பாலியல் நோக்குநிலை இவற்றின் அடிப்படையிலான பேதத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்ப்பதை அடக்கியிருக்கிறது. ஆயினும் உண்மையான சமத்துவம் என்பது இனம் மற்றும் பிற வகைப்பாடுகளின் அடிப்படையில் வரம்புபட்ட கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை ஒதுக்கீடு செய்து அளிப்பது என்று அர்த்தமல்ல. இத்தகைய ஒருபக்கமான செயல்பாட்டு கொள்கைகள் எல்லாம் சிறப்புரிமை பெற்ற சிலருக்கு மட்டுமே ஆதாயமளிப்பதோடு, அதே சமயத்தில் வெள்ளை மற்றும் சிறுபான்மை தொழிலாளர்களையும் மாணவர்களையும் வேலைகளுக்கும் கல்லூரி இடங்களுக்குமான போட்டியில் ஒருவருக்கொருவர் எதிராய் போராட்டத்தில் களம் இறக்கி விடுகிறது. பல்கலைக்கழகங்களில் இலவசமாய் வெளிப்படையான அனுமதி கிடைப்பது உட்பட அனைத்து சமூக தேவைகளுக்கும் உத்திரவாதமளிக்கிற பாரிய சமூக முதலீட்டின் ஒரு கட்டமைப்பிற்குள் முழு சமத்துவத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். உழைக்கும் மக்களின் அனைத்து பிரிவுகளும் ஒன்றுபட்டுப் போராடுவதை அடிப்படையாகக் கொண்ட இத்தகையதொரு கொள்கை மட்டுமே அனைத்து மக்களும் பொருளாதார பாதுகாப்பை அனுபவிக்கத்தக்க அவர்கள் தங்களது முழுமையான திறனை அறிந்து கொள்ளத்தக்க ஒரு சமுதாயத்திற்கான நிலைமைகளை உருவாக்க முடியும்.

அரசியல் மற்றும் ஜனநாயகக் கோரிக்கைகள்

103. கடைசியாக, தொழிலாள வர்க்கத்தின் வருங்காலத்திற்கு மிக முக்கியமானவையான ஜனநாயக மற்றும் அரசியல் கோரிக்கைகளின் ஒரு வரிசை உள்ளது. அதன் போராட்டம், பொருளாதார தன்மையுடைய கோரிக்கைகளுக்கு மட்டுமென, அவை தன்னளவில் எவ்வளவு முக்கியத்துவம் கொண்டிருந்தாலும், சுருக்கப்பட்டு விட முடியாது. உழைக்கும் வர்க்கம் தங்களது ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போராட்டம் கட்டவிழ்கிற அகன்ற அரசியல் மற்றும் சர்வதேசப் பொருள் குறித்து தொடர்ந்து கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். முக்கியமான அரசியல் பிரச்சினைகளை உள்ளடக்கியுள்ள கோரிக்கைகளை சோ.ச.க. தனது வேலைத்திட்டத்தில் கொண்டிருக்கிறது:

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது

104. சமூக ஏற்றத்தாழ்வின் வளர்ச்சி ஜனநாயகத்துடன் இணக்கமற்றதாய் உள்ளது. புதிய ஒருசிலவர் ஆட்சித்தனம் தன்னுடன் அரசாங்கத்திற்கான ஒருசிலவர் ஆட்சி கொள்கையையும் உடன் அழைத்து வருகிறது, இதில் அரசு முன்னை விட வெளிப்படையாக வர்க்க ஆட்சியின் சாதனமாகச் செயல்படுகிறது. பழங்காலத்து ரோம் தொடங்கி புரட்சிக்கு முந்தைய பிரான்ஸ் மற்றும் ரஷ்யா மற்றும் இன்று வரை, பெரும் செல்வத்தை சேர்த்தவர்கள் அதனைக் காப்பாற்ற எந்த வழியையும் பயன்படுத்துவார்கள். அமெரிக்க புரட்சியாலும் உள்நாட்டு யுத்தத்தாலும் ஸ்தாபிக்கப்பட்ட அடிப்படை ஜனநாயக உரிமைகளும் - பேச்சு சுதந்திரம் மற்றும் அரசியல் தொடர்பு உரிமை, வாக்களிக்கும் உரிமை, குற்றவியல் நடவடிக்கைகளில் தனிநபர் பாதுகாப்பு உரிமை, மற்றும் சட்டவிரோதமான சோதனைகள் மற்றும் பறிமுதல்களுக்கு எதிரான பாதுகாப்புகள் ஆகியன உட்பட்டவை - கூட இன்று தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன.

105. செப்டம்பர் 11 தாக்குதல்கள் உள்நாட்டில் ஒற்றுவேலையை பாரிய அளவில் விரிவுபடுத்துவதற்கும், பேச்சு மற்றும் தொடர்பு சுதந்திரத்தை வரம்புபடுத்துவதற்கும், மற்றும் நிர்வாகக் கிளையின் அதிகாரங்களை அதிகரிப்பதற்குமான ஒரு சாக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தாயக பாதுகாப்பு துறை (Department of Homeland Security) மற்றும் அதற்கு உதவியாக நூற்றுக்கணக்கான தனித்தனி அரசாங்க முகமைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உட்பட ஒரு பரந்த தேசிய பாதுகாப்பு அரசினை அமெரிக்க ஆளும் வர்க்கம் நிறுவியுள்ளது. மக்களை ஒற்று பார்ப்பதற்கான FBI மற்றும் தேசிய பாதுகாப்பு முகமையின் அதிகாரங்கள் தேசப்பற்று சட்டம் ( Patriot Act) மற்றும் நிர்வாக உத்தரவுகள் மூலமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க குடிமக்கள் உட்பட எவரொருவரையும் குற்றச்சாட்டின்றி வரம்பற்ற காலத்திற்கு கைதுசெய்து வைத்திருப்பதற்கான அதிகாரத்தை அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.

106. ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் அமெரிக்க சமுதாயத்தின் கட்டமைப்பில் ஆழமாய் வேரூன்றியுள்ளது, குறிப்பாக அதன் உயர்ந்த அளவான சமூக சமத்துவமின்மையில். அத்துடன் இது ஒரு நிர்வாகத்தினால் விளைந்ததும் அல்ல. புஷ்ஷின் ஜனநாயக-விரோதக் கொள்கைகளை ஆழப்படுத்தியிருக்கும் ஒபாமா வெள்ளை மாளிகையின் நடவடிக்கைகளின் மூலம் இது நிரூபணம் பெறுகிறது. அரசியல்சட்ட மீறல்களுக்காக புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகள் மீதான விசாரணையை இது எதிர்த்திருக்கிறது, தேசப்பற்று சட்டம் மற்றும் பிற ஜனநாயக-விரோத சட்டங்களை தொடர்ந்து ஆதரிக்கிறது, சித்திரவதை காட்சிகளைக் காட்டும் புகைப்படங்கள் மற்றும் மற்றும் பிற குற்றவியல் செயல்பாடுகளுக்கான ஆதாரங்களை வெளியிட விடாமல் அடக்குமுறையைக் கையாளுகிறது, அத்துடன் சித்திரவதையில் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் வழக்குகள் தொடுக்கப்படுவதைத் தடை செய்ய அரசாங்க இரகசிய சிறப்புரிமையை அவிழ்த்து விட்டுள்ளது. அரசாங்கத்திற்கான எச்சரிக்கை ஆலோசகர்கள் மீதான பழிவாங்கல்களை ஒபாமா கூர்மையாக விரிவுபடுத்தியிருப்பதோடு அமெரிக்க இராணுவ செயல்பாடுகளின் குற்றத் தன்மையை வெளிப்படுத்துகிற ஆவணங்களை வெளியிட்டதற்காக விக்கிலீக்ஸ்க்கு (WikiLeaks) எதிரான ஒரு பரப்புரைக்கும் தலைமையெடுத்து வருகிறார்.

107. அமெரிக்க சமுதாயத்தை சூழ்ந்திருக்கும் நெருக்கடிக்கு எந்த தீர்வும் கொண்டிராத நிலையில் அமெரிக்க ஆளும் தட்டும் அதன் அரசாங்கமும் பூமியில் வேறு எந்த நாட்டையும் விட அதிகமாய் மக்களின் பெரும்பகுதியை சிறைக்குள் தள்ளிப் பூட்ட முயல்கின்றன. சுதந்திர உலகத்தின் தலைமையாக சுய பிரகடனம் செய்து கொண்ட நாடு தீவிர சித்திரவதை நிலைமைகளின் கீழ் 2.3 மில்லியன் மக்களை சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் வைத்திருக்கிறது, 5 மில்லியனுக்கும் அதிகமானோர் கண்காணிப்பு பிணையிலோ அல்லது நன்னடத்தை விடுதலையிலோ இருக்கின்றனர். மரண தண்டனையை இன்னும் பயன்படுத்தும் முன்னேறிய நாடுகள் சிலவற்றில் அமெரிக்காவும் ஒன்று. 1977ல் உச்சநீதி மன்றம் நீதித்துறை கொலைகளைத் தொடர்வதை அனுமதித்த பிறகு 1216 தனிநபர்கள் மரண தண்டனை பெற்றுள்ளனர்.

108. ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, தேசிய பாதுகாப்பு அரசு எந்திரம் மற்றும் அதன் பல்வேறு முகமைகளான தாயக பாதுகாப்பு துறை, சிஐஏ, FBI, NSA  ஆகியவற்றை மூடுவது, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்கிற பெயரில் திணிக்கப்பட்ட தேசப்பற்று சட்டம் மற்றும் பிற போலிஸ்-அரசு நடவடிக்கைகளை திரும்பப் பெறுவது ஆகியவை அவசியமாகிறது. ஆளும் தட்டு அடிப்படை உரிமைகள் மீதான தனது தாக்குதலுக்கு ஆதரவாக பிற்போக்குவாத சமூக மற்றும் அரசியல் சக்திகளை தூண்டிவிட எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் பதில் தாக்குதலை தொடங்கியாக வேண்டும். அது கடந்த காலங்களில் வெல்லப்பட்ட ஜனநாயக மற்றும் சமூக நன்மைகளைப் பாதுகாக்க பாடுபடுவது மட்டுமன்றி, அமெரிக்க சமூகத்தை ஜனநாயகமயமாக்கவும் பாடுபட வேண்டும். மரண தண்டனையைத் திரும்பப் பெறுவது மற்றும் உள்நாட்டு போலிஸ் மற்றும் சிறை வளாகத்தை பிரிப்பது ஆகியவை இதில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

இராணுவவாதம் மற்றும் போரை எதிர்ப்பது

109. இராணுவவாதத்தின் வளர்ச்சி ஜனநாயக உரிமைகளுக்கு படுமோசமான அச்சுறுத்தலை முன்நிறுத்துகிறது. அரை நூற்றாண்டுக்கு முன்பாக, ஜனாதிபதியும் முன்னாளில் இரண்டாம் உலகப் போரில் தளபதியாக இருந்தவருமான டிவைட் டி.எசனோவர் இடமாற்றி அமைந்த அதிகாரத்தின் பேரழிவூட்டும் எழுச்சிக்கான சாத்தியக்கூறுடன் ஒரு இராணுவ தொழில்துறை வளாகம் எழுவதற்கு எதிராக எச்சரித்தார். அமெரிக்க மக்கள் எதையும் அலட்சியமாக எடுத்துக் கொண்டு விடக் கூடாது என்று அவர் எச்சரித்தார். இடைவந்த தசாப்தங்களில் இராணுவத்தின் அதிகாரம் தடையின்றி வளர்ந்திருக்கிறது, அதே சமயத்தில் அனைவரும் தன்னார்வலர்களால் ஆன படையாக அதன் உருமாற்றமானது மக்களின் ஜனநாயக உணர்வுகளில் இருந்து அதனை பெருகிய முறையில் பிரித்துள்ளது.

110. தொழிலாளர் வர்க்க இளைஞர்களிடம் இருந்து பெருமளவில் எடுக்கப்படும் இன்றைய படையினர் தொடர்ந்த நிலைநிறுத்தங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். பலபத்து ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவின் நவகாலனித்துவ போர்களில் படுகாயத்திற்குப் பிந்தைய உளைச்சல், படு பயங்கர காயங்கள் அல்லது மரணத்திற்கு ஆளாகின்றனர். ஒரு தனியான இராணுவ சாதி என்று கருதத்தக்க ஒன்றை உருவாக்கும் முயற்சியில் அவர்கள் தீரர்களாக கற்பிக்கப்படுகின்றனர். படை அதிகாரிகளின் பட்டாளம் பெருகிய முறையில் அரசியல்மயப்பட்டதாகவும் வலதுசாரியானதாகவும் ஆகி வருகிறது, அதன் மூத்த அங்கத்தினர் மக்கள் அரசாங்கத்தை கொள்கை விவகாரங்களில் பகிரங்கமாக சவால் செய்கின்றனர். அதன் சமூக அந்தஸ்து மற்றும் தத்துவத்தைப் பொருத்தவரை அமெரிக்க இராணுவமானது, இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளை நடத்தி குருதிதோய்ந்த சர்வாதிகாரங்களை திணித்திருக்கும் உலகெங்கிலுமான தனது சகாக்களைப் போலவே மேலும் மேலும் உருவெடுத்து வருகிறது.

111. அமெரிக்க அரசியல் வாழ்வில் இராணுவம் முன்னெப்போதையும் விட நேரடியானதொரு பாத்திரத்தை ஆற்றிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவிற்குள் இராணுவத்தைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் போசி கோமிடேடஸ் சட்டம் (The Posse Comitatus Act) உள்நாட்டு சூழல்களில் இராணுவத்தைப் பகிரங்கமாகப் பயன்படுத்துவதன் மூலம் கீழறுக்கப்பட்டிருக்கிறது. வடக்கு கட்டளையகத்தின் (Northern Command) உருவாக்கமானது முதன்முறையாக அமெரிக்காவைக் கண்காணிக்கும் ஒரு இராணுவ கட்டளையகத்தை ஸ்தாபித்திருக்கிறது. இவை அனைத்தும் அமெரிக்காவில் இராணுவ-போலிஸ் ஆட்சிக்கு கருவில் அத்திவாரமிடும் நடவடிக்கைகள்.

112. முன்பு ஒருபோதும் இருந்திராத வகையில் உலகப் பொருளாதாரம் உற்பத்தியின் ஒரு ஒற்றை அமைப்புமுறைக்குள்ளாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது, ஆயினும் இது தேசிய அரசுகளுக்கு இடையிலான மோதல்களை அதிகரிக்கவும் போர் அபாயத்தை அதிகரிக்கவும் மட்டுமே செய்திருக்கின்றன. புஷ்ஷின் இருபத்தியோராம் நூற்றாண்டுப் போர்கள் 2001 அக்டோபரில் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்புடன் தொடங்கின, இன்று இது நாட்டின் வரலாற்றில் மிக நெடிய இராணுவ நிலைநிறுத்தமாக பெயர்பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து 2003 மார்ச் மாதத்தில் ஈராக் ஆக்கிரமிப்பு நடந்தது. இந்த இரண்டு போர்களுடன் தொடர்ச்சியான சிறிய இராணுவ மோதல்களும் மற்றும் பெரும் சக்திகளுக்கு இடையே ஒரு பரந்த மோதலுக்கான பெருகும் அச்சுறுத்தலும் உடன் வந்தன.

113. அமெரிக்கத் தாக்குதலில் நூறாயிரக்கணக்கான ஈராக்கியர்களும் ஆப்கானியர்களும் கொல்லப்பட்டுள்ளனர், இன்னும் மில்லியன்கணக்கான மக்கள் அகதிகளாகினர். சுமார் 7000 அமெரிக்க மற்றும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு துருப்புகள் தங்களது உயிரை இழந்துள்ளனர். உலகெங்கிலும் அப்பாவி மக்களுக்கு எதிராக அமெரிக்க இராணுவத்தால் நடத்தப்படும் அடக்குமுறைகள் வழக்கமாகி விட்டன, அதே சமயத்தில் அமெரிக்கா தான் எதிரியாக உணரும் எவரையும் -அமெரிக்க குடிமகன்கள் உட்பட- படுகொலை செய்வதற்கான உரிமையை பகிரங்கமாக உறுதி செய்கிறது.

114. ஒபாமா நிர்வாகம் இந்த போர்களை விரிவுபடுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினர்களின் எண்ணிக்கையிலான ஒரு பாரிய அதிகரிப்பும் இதில் அடங்கும். பாகிஸ்தானில் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன, ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்களையும் பொருளாதாரத் தடைகளையும் நிர்வாகம் விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. 

115. சேதாரம் விளைவிப்பதில் கற்பனை செய்யத்தக்க மிக முன்னேறிய சாதனங்களை உற்பத்தி செய்வதற்கு அமெரிக்க அரசு வானளாவிய ஆதாரவளங்களை செலவிடுகிறது. இராணுவ வரவுசெலவு மற்றும் வெளிநாட்டிலான அமெரிக்க போருக்கு ஆகும் நேரடி செலவினம் (மொத்தமாய் 700 பில்லியன் டாலருக்கும் அதிகம்) மற்றும் பாதுகாப்புத் துறைக்கு வெளியில் இராணுவம் தொடர்பான செலவினங்கள் இவை அனைத்தையும் கூட்டினால் மொத்த வருடாந்திர இராணுவ செலவினமானது 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாகிறது.

116. குடியரசுக் கட்சி நிர்வாகமாய் இருந்தாலும் ஜனநாயகக் கட்சி நிர்வாகமாய் இருந்தாலும் இரண்டுமே செப்டம்பர் 11,. 2001 தினத்தின் விநோதமான விளக்கமில்லாத நிகழ்வுகளையே முடிவில்லாத உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கான நியாயமாய் எடுத்துக் கூறுகின்றன. உண்மையில், வெகுமுக்கிய புவி-மூலோபாய முக்கியத்துவத்தையும் மற்றும் உலகின் எண்ணெய், எரிவாயு மற்றும் பிற இயற்கை ஆதாரவளங்களில் பெரும்பகுதியையும் கொண்டிருக்கிற பிராந்தியங்களின் மீது அமெரிக்க மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்காக நிகழ்த்தப்படும் தாக்குதல் போர்களுக்கான ஒரு சாக்கு மட்டுமே இது. 

117. பொருளாதார நெருக்கடியானது உலகளாவிய பதட்டங்களை கூர்மையாக அதிகரித்துள்ளது, எந்த புள்ளியிலும் போர் வெடிப்பதற்கான அச்சுறுத்தலை அது கொண்டுள்ளது. சீனாவுடன் ஒரு இராணுவ மோதலுக்கு அமெரிக்கா செயலூக்கத்துடன் தயாரிப்பு செய்து வரும் வேளையில் ஐரோப்பாவில் இரண்டு உலகப் போர்களுக்கு இட்டுச் சென்ற பழைய பிளவுகள் மீண்டும் எழுந்து வருகின்றன. சோவியத் ஒன்றியத்தின் உருக்குலைவை கிழக்கு ஐரோப்பா மற்றும் முன்னாள் சோவியத் குடியரசுகளில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்காக சுரண்டுவதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொள்ளும் முயற்சிகள் ரஷ்யாவுடன் பெருகிய முறையில் பதட்டங்களுக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது, 2008 ஆகஸ்டில் தெற்கு ஒசடியா மீது அமெரிக்க ஆதரவுடன் ஜோர்ஜியா நடத்திய தாக்குதல் விடயத்தில் கண்டதைப் போல இது நேரடியான இராணுவ மோதலுக்கான அச்சுறுத்தலை முன்நிறுத்துகிறது. அத்துடன், 1930களில் போல, உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியால் மோசமடைந்திருக்கும் பொருளாதார மற்றும் வர்த்தக மோதல்கள் தவிர்க்கவியலாமல் அமெரிக்காவுக்கும் மற்றும் அதன் ஐரோப்பாவிலுள்ள பிற முதலாளித்துவ கூட்டாளிகள் மற்றும் ஜப்பானுக்கும் இடையே இராணுவ பதட்டங்களுக்கு இட்டுச் செல்லும். பெரிய சக்திகள் எல்லாம் இப்போது அணு ஆயுதங்கள் கொண்டிருக்கும் நிலையில், ஒரு புதிய உலகப் போரானாது மனித நாகரிகத்தின் வருங்காலத்தையே அச்சுறுத்துவதாக அமையும்.

118. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் பிற அந்நியத் துருப்புகளை நிபந்தனையின்றி உடனடியாகத் திரும்பப் பெற சோ.ச.க. கோருகிறது. தாக்குதல் போரை திட்டமிட்டதற்கும் நடத்தியதற்கும் பொறுப்பானவர்கள் பதிவு செய்யப்பட வேண்டும். பரந்த அமெரிக்க இராணுவமும் உளவு எந்திரமும் பிரிக்கப்பட வேண்டும், நூற்றுக்கணக்கான அமெரிக்க வெளிநாட்டு இராணுவ தளங்கள் மூடப்பட வேண்டும் மற்றும் நிலையான இராணுவம் கலைக்கப்பட வேண்டும். இது, அமெரிக்க இராணுவவாதத்தால் சிதைக்கப்பட்ட நாடுகளுக்கு சீர்செய்வதற்கான தொகை செலுத்தங்களுக்கும், அத்துடன் தாயகத்தில் அதிமுக்கிய சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் செறிந்த ஆதாரவளங்களை விடுவிக்கும்.

119. இராணுவவாதத்திற்கான ஒரே முற்போக்கான மாற்று சோசலிச சர்வதேசவாதம், அதாவது வறுமை, பிணி மற்றும் அறியாமை ஆகிய துயரங்களை நீக்கவும் ஒட்டுமொத்த மனித குலத்தின் வாழ்க்கைத் தரங்களையும் கலாச்சார மட்டத்தையும் உயர்த்தவும் உலகின் ஆதாரவளங்கள் ஒத்துழைப்புடன் பயன்படுத்தப்படுகிற மற்றும் அபிவிருத்தி செய்யப்படுகிற வகையிலான ஒரு சோசலிச எதிர்காலத்திற்கான போராட்டத்தில் சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கத்தை ஒன்றுபடுத்துவதற்கான போராட்டம்.

குடியேற்றத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது

120. பணியமர்த்தும் முதலாளிகளின் படுபயங்கர சுரண்டலுக்கும் மற்றும் போலிஸ் மற்றும் குடியேற்ற அதிகாரிகளின் அடக்குமுறைக்கும் எதிராக குடியேற்றத் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதை ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கம் கையிலெடுத்துக் கொள்ள வேண்டும்.

121. பெருநிறுவனக் கட்டுப்பாட்டிலான அரசியல்வாதிகளும் ஊடகங்களும் குடியேற்ற தொழிலாளர்களை பலிகடாவாக்கி நிறவெறி மற்றும் ஆதிக்கவாத உணர்வுகளைத் தூண்டி விடுகின்றனர். அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை, வீழ்ச்சியடையும் ஊதியங்கள் மற்றும் சமூக நிலைமைகள் மீதான தாக்குதல்கள் -இது ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் மீதும் பெருநிறுவனங்களால்- செலுத்தப்படும் தாக்குதலின் விளைபொருள் ஆகியவற்றுக்கு தொழிலாள வர்க்கத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவே காரணமாகும் என்கிற பொய் அவதூறை அவர்கள் பரப்புகின்றனர். அதிகமாகும் மக்களின் கோபம் மற்றும் வெறுப்பினை முதலாளித்துவ அமைப்பில் இருந்து திசைதிருப்புவதும் ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி பலவீனப்படுத்துவதுமே அவர்களது நோக்கம் ஆகும். 

122. குடியேற்ற தொழிலாளர்களை மொத்தமாய் சூழ்ந்து கொள்ள வகை செய்கிற அப்பட்டமான இனவாத மற்றும் ஜனநாயக-விரோத நடவடிக்கைகளுக்கு அரசியல் ஸ்தாபகத்தின் சில பிரிவுகள் முன்மொழிகின்றன. அமெரிக்காவில் பிறந்த அனைவருக்கும் குடியுரிமையளிப்பதற்கான உத்தரவாதத்தை நீக்குவதற்கு அரசியல்சட்டத்தின் 14வது திருத்தத்தை திருத்துவதற்கும் அழைப்புகள் பெருகி வருகின்றன. உள்நாட்டு யுத்தத்திற்குப் பின், விடுதலை பெற்ற அடிமைகளுக்கு குடியுரிமையை உத்தரவாதம் அளிப்பதற்கு மட்டுமன்றி, சட்டத்திற்கு முன் சமமான பாதுகாப்பு மற்றும் அனைத்து குடிமகன்களுக்கும் தனிநபர் பாதுகாப்பினை உத்தரவாதம் அளிப்பதற்குமாய் ஸ்தாபிக்கப்பட்ட இந்த அடிப்படை ஜனநாயக உரிமை மீதான தாக்குதல் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்குமான ஒரு அச்சுறுத்தல் ஆகும்.

123. ஒபாமா நிர்வாகமானது, தனது தாராளவாத மற்றும் இடது ஆதரவாளர்கள் என்பவர்களின் உதவியுடன், இந்த கொள்கைகள் மீதான மக்களிடையிலான கோபத்தை சுரண்டி திறம்பட்ட குடியேற்ற சீர்திருத்தம் என்கிற பதாகையின் கீழ் தனது பிற்போக்குவாத நடவடிக்கைகளை முன்தள்ளுகிறது. எல்லையில் இராணுவமயமாக்கத்தை அதிகரிப்பது (ஆளில்லா பிரீடேட்டர் டிரோன்களை பயன்படுத்துவது உட்பட), தொழிலக சோதனைகளை விரிவுபடுத்துவது, குடியேற்ற தொழிலாளர்களை திருப்பி அனுப்புவது ஆகிய நடவடிக்கைகளில் ஒபாமா தான் இப்போது முன்னிலையில் இருக்கிறார். எல்லையில் காவல்கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்ட பின் வேலை தேடி எப்படியாவது அமெரிக்காவிற்குள் நுழைந்து விட வேண்டும் என்று முயன்று உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை கூர்மையாய் அதிகரித்துள்ளது. நிர்வாகத்தால் முன்னெடுக்கப்படும் முன்மொழிவுகளில் ஒன்றாய் இருப்பது பயோமெட்ரிக் அடையாள அட்டை. இது ஒட்டுமொத்த மக்கள்தொகையையும் அரசாங்கம் கண்காணிப்பதற்கு வசதி செய்யக் கூடிய ஒரு தேசிய அடையாள அட்டையை நோக்கிய முதல் அடி.

124. அனைத்து குடியேற்ற-விரோத சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதற்கும், குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கம் (ICE) மற்றும் அமெரிக்க எல்லை ரோந்து ஆகியவை கலைக்கப்படுவதற்கும் சோ.ச.க. போராடுகிறது. அனைத்து ஆவணப்படுத்தப்படாத தொழிலாளர்களுக்கும், வேலை செய்வதற்கான உரிமை மற்றும் மீண்டும் திரும்புவதில் இருந்து தடை செய்யப்பட்டு அவர்களது குடும்பங்களில் இருந்து பிரிக்கப்படுகின்ற அச்சுறுத்தல் இன்றி தங்களது தாய்நாடுகளுக்கு பயணம் செய்யும் உரிமை ஆகியவை உள்ளிட்ட, முழுமையான சட்டபூர்வ உரிமைகளும் உத்தரவாதமளிக்கப்படுவதற்கு சோ.ச.க. கோருகிறது. அமெரிக்காவில் மட்டுமன்றி உலகெங்கிலும், எல்லைகளை இராணுவமயமாக்கி குடியேற வரும் மக்களை சித்திரவதை செய்யும் முயற்சிக்கு எதிராக, தொழிலாள வர்க்கம் திறந்த எல்லைகள் கோட்பாட்டை, அதாவது தொழிலாளர்கள் தாங்கள் விரும்பும் எந்த நாட்டிலும் முழுமையான குடியுரிமைகளுடன் வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்ய வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் விடுதலை

125. தொழிலாள வர்க்கத்தின் சமூகத் தேவைகளுக்கான, ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பிற்கான, போருக்கு ஒரு முடிவு கட்டுவதற்கான இந்த வேலைத்திட்டத்திற்கான போராட்டமானது ஒவ்வொரு புள்ளியிலும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் அமைப்புக்கான அவசியத்தை எழுப்புகிறது. அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி மற்றும் முதலாளித்துவ இரு-கட்சி அமைப்பின் கட்டமைப்புக்குள்ளாக தொழிலாள வர்க்கம் தனது நலன்களை முன்னெடுப்பது சாத்தியமில்லாதது.

126. ஒபாமா நிர்வாகத்தின் அனுபவமானது மீண்டுமொரு முறை ஜனநாயகக் கட்சியின் வலது-சாரி, பெருநிறுவன ஆதரவு குணத்தை விளங்கப்படுத்தியிருக்கிறது. போர் விரிவாக்கம், வங்கிகள் பிணையெடுப்பு, தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒட்டுமொத்தமான தாக்குதல் மற்றும் சமூக திட்டங்களை வெட்டுவதற்கான விடாப்பிடியான அழைப்புகள் என நிர்வாகத்தின் கொள்கையின் ஒவ்வொரு அம்சமும் அமெரிக்காவில் அரசியல் அமைப்பை கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் பெருநிறுவன மற்றும் நிதியியல் மேல்தட்டினரால் உத்தரவிடப்பட்டவையாக இருந்திருக்கின்றன. இருகட்சிகளுக்கு இடையில் இருக்கும் வித்தியாசங்களைப் பொருத்தவரை அவை, இலாபங்களை பாதுகாப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு சுயாதீனமான எதிர்ப்பு அபிவிருத்தியுறுவதை தடுப்பதற்கும் எது சிறந்த வழி என்பதிலான வித்தியாசங்களாக தந்திரோபாய குணத்தையே கொண்டுள்ளன.

127. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டம் என்றால், ஜனநாயகக் கட்சியை வெகுஜன நெருக்குதலின் மூலமாக இடது நோக்கி நகர்த்த முடியும் என்று கூறுகிற ஓரளவு சோசலிச குணம்படைத்த குழுக்கள் உட்பட்ட அனைத்து நடுத்தர வர்க்க அமைப்புகளுக்கும் எதிரான ஒரு போராட்டம் ஆகும். தொழிலாள வர்க்கம் தனது சொந்த சுயாதீனமான அரசியல் கட்சியை ஸ்தாபிப்பதை தடுக்கும் நோக்கத்தையே இவர்களது இந்த நிலைப்பாடு கொண்டுள்ளது.

128. உண்மையில், சமூக சீர்திருத்தத்திற்கான ஓரளவுக்கான உறுதிப்பாட்டைக் கூட ஜனநாயகக் கட்சி வெகு காலத்திற்கு முன்பே கைவிட்டு விட்டது. ஜனநாயகக் கட்சியின் வலது நோக்கிய பெயர்ச்சியுடன் சேர்ந்து, அதன் நடுத்தர வர்க்க ஆதரவாளர்கள் வர்க்கம் மற்றும் சமூக சமத்துவம் பற்றிய பிரச்சினையை மங்கச் செய்யும் சாதனமாக வாழ்க்கைமுறை பிரச்சினைகளின் அனைத்து வகைகளையும் மற்றும் அடையாள அரசியலையும் ஊக்குவிக்கிற முயற்சிகளும் உடன் வந்திருக்கின்றன.

தொழிலாள வர்க்க போராட்டத்தின் புதிய அமைப்புகளுக்கு

129. தொழிலாள வர்க்கத்தின் நலன்கள் வெகுஜனப் போராட்டம் ஒன்றின் மூலமாக மட்டுமே பாதுகாக்கப்பட முடியும். எதுவுமே மேலிருந்து கையளிக்கப்படுவதில்லை என்பதை வரலாறு அனைத்தும் விளங்கப்படுத்துகிறது. ஜனநாயக உரிமைகள், சமூக சீர்திருத்தங்கள், எட்டு-மணி நேர வேலை, குழந்தைத் தொழிலாளருக்கு எதிரான தடை ஆகிய முதலாளித்துவத்தின் கீழ் வென்றெடுக்கப்பட்ட இந்த நன்மைகள் கூட புரட்சிகர எழுச்சிகளின் விளைபொருளே.

130. தற்போதுள்ள தொழிற்சங்கங்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் புதிய மக்கள் அமைப்புகள் கட்டப்பட வேண்டும். AFL-CIO மற்றும் வெற்றிக்கான மாற்றக் கூட்டணி (Change to Win Coalition) ஆகியவை தொழிலாள வர்க்க அமைப்புகளாக இல்லை, மாறாக பெருநிறுவன மேலாண்மையின் துணையுறுப்புகளாகத் தான் இருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலை அதிகப்படுத்துவதற்கும் தொழிலாளர்களுக்குள்ளேயே இருந்து வரும் எந்த எதிர்ப்பையும் தனிமைப்படுத்தி விரக்தியுறச் செய்வதற்கும் அவை செயலூக்கத்துடன் செயல்படுகின்றன. தொழிலாளர்களின் வெவ்வேறு பிரிவுகளை பிளவு செய்து ஒன்றிற்கு எதிராய் இன்னொன்றை நிறுத்தும் தேசியவாத அறிக்கைகளுக்கு அவை ஊக்கமளிக்கின்றன. அரசியல்ரீதியாக, சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தை ஜனநாயகக் கட்சிக்கு பின்னால் பாதையமைக்க செய்வதற்கும், அதன் மூலம் அதனை முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியலுக்கு அடிபணியச் செய்வதற்கும் வேலை செய்கின்றன.

131. கடந்த நான்கு தசாப்த காலத்தில் வர்க்க போர்க்குணத்தின் அடிப்படை வடிவமான வேலைநிறுத்தங்களின் எண்ணிக்கையில் ஒரு பெரும் நிலைக்குலைவு வந்திருக்கிறது - 1968ல் வேலைநிறுத்தங்களில் செலவான மனித-நாட்களின் எண்ணிக்கை 35 மில்லியனாக இருந்ததில் இருந்து 1972ல் 16 மில்லியனுக்கும், இன்று இரண்டு மில்லியனுக்கும் கீழான எண்ணிக்கைக்கும் வந்திருக்கிறது. சமூகப் பதட்டங்களின் வீழ்ச்சியானால் அல்ல இது -இந்த காலத்தில் சமூக ஏற்றத்தாழ்வு பெருமளவு அதிகரித்திருந்தது- மாறாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் காட்டிக் கொடுப்புகளால். அதே சமயத்தில், சங்க அதிகாரத்துவத்தின் செல்வமோ அங்கத்துவத்தின் நிலைமைகளுடன், அல்லது சங்கவயப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கும் கூட பெருகிய முறையில் தொடர்பற்றதாக ஆகியிருக்கிறது. 2001 முதல் 2008 வரையான காலத்தில், ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் (UAW) அங்கத்துவம் 701,000ல் இருந்து 431,000க்கு வீழ்ந்திருந்தது - இது சுமார் 40 சதவீத வீழ்ச்சி - ஆனால் UAWவின் பில்லியன்-டாலர் சொத்துகளோ அதிகரித்திருந்தன. இந்த காலகட்டம் தான் தொடர்ந்த-சலுகை ஒப்பந்தங்கள் வாகனத் தொழிலாளர்கள் மீது திணிக்கப்படுவதையும், ஊதியங்கள் மற்றும் நலஉதவிகள் குறைவதையும், பன்னடுக்கு ஊதிய முறைகள் (multiple-tier wage systems) அறிமுகப்படுத்தப்படுவதையும் கண்டது.

132. தனது நலன்களை முன்னெடுக்க, தொழிலாள வர்க்கமானது உண்மையான வெகுஜன அமைப்புகளை - சாமானிய வேலையிட, ஆலை மற்றும் அண்டை அருகு ஜனநாயக நடவடிக்கை குழுக்கள் - கட்ட வேண்டும், இவை புரட்சிகரமான சமரசமின்மை மற்றும் பெருவணிகத்தின் இரண்டு கட்சிகளுக்குமான எதிர்ப்பு ஆகிய உணர்வுகளால் இயக்கமூட்டப்பட்டிருக்க வேண்டும். இந்த அமைப்புகள் தொழிலாள வர்க்கத்தின் தேவைகளில் இருந்து தொடங்குவதாய் இருக்க வேண்டும், அத்துடன் இவை தொழிலாள வர்க்கத்தால் ஜனநாயகரீதியாய் கட்டுப்படுத்தப்படுவதாய் இருக்க வேண்டும். பல்வேறு தொழிற்துறைகளில் மற்றும் வேலையிடங்களில் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் மற்றும் பெறாதவர்கள், மூளை உழைப்பு தொழிலாளர்கள் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள், இங்கு பிறந்தோர் மற்றும் குடியேற்ற தொழிலாளர்கள் என தொழிலாள வர்க்கத்தினர் அனைவரையும் ஒன்றுபடுத்துவதிலும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக அவர்களது பொதுவான போராட்டங்களை ஒழுங்கமைப்பதிலும் இந்த அமைப்புகள் மிகப் பெரும் பொறுப்பை ஏற்க வேண்டும்.

ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்கு

133. தொழிலாளர் அதிகாரத்தின் இந்த சுயாதீனமான அமைப்புகள், அரசியல், பொருளாதார, மற்றும் சமூக வாழ்க்கையின் மீது வோல் ஸ்ட்ரீட் மற்றும் பெருநிறுவன உயர்தட்டினர் கொண்டிருக்கும் சர்வாதிகாரத்தை உடைத்து அரசியல் அதிகாரத்தை தனது சொந்த கைகளில் எடுக்க தொழிலாள வர்க்கத்தை புரட்சிகர ரீதியில் அணிதிரட்டுவதற்கான சாதனங்களாக இருக்க வேண்டும். ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை, அதாவது உழைக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியப்படுகிற சோசலிசக் கொள்கைகளை அமல்படுத்தும் வகையில் தொழிலாள வர்க்கத்திற்காக, தொழிலாள வர்க்கத்தின் மூலம் உருவாக்கப்படும் தொழிலாள வர்க்கத்தினாலான அரசாங்கத்தை, ஸ்தாபிப்பதன் மூலமாக மட்டும் தான் இது நனவாக முடியும்.

134. வெறுமனே நடப்பு அரசு ஸ்தாபனங்களுக்கு சோசலிச வேட்பாளர்களை தேர்வு செய்வதன் மூலமாக மட்டும் சோசலிசம் சாதிக்கப்பட்டு விட முடியாது. மிகவும் சம்பிரதாயமான பொருளில் மட்டுமே அரசும் அதன் ஸ்தாபனங்களும் ஜனநாயகப்பட்டவையாக உள்ளன. உண்மையில், முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட பெருநிறுவன மேலாதிக்கத்தின் கருவிகளாகவே அவை உள்ளன. இதில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய ஆளும் வர்க்கத்தின் இரட்டைக் கட்சிகளும் ஏகபோகம் செலுத்துகின்றன.

135. நாடாளுமன்ற அவைகள், வெள்ளை மாளிகை, மற்றும் முக்கிய நீதிமன்றங்கள் அனைத்தையும் நிரப்பியிருப்பவர்கள் இந்த அல்லது அந்த பெருநிறுவன நலனின் பிரதிநிதிகளாக மற்றும் ஒட்டுமொத்தமாக நிதி தனவான்களின் பிரதிநிதிகளாக இருக்கின்றனர். தேர்தலில் போட்டியிடுவோருக்கு கேவலமான கட்டுப்பாடுகள், தேர்தலில் பணத்தின் மேலாதிக்க செல்வாக்கு, மற்றும் ஊடகங்கள் மீதான பெருநிறுவன கட்டுப்பாடு ஆகியவை உள்ளிட்ட பல்வேறு வழிவகைகளின் மூலம் தொழிலாளர் வர்க்க நலன்களின் எந்த உண்மையான வெளிப்பாட்டையும் அகற்றுவதற்கு ஆளும் வர்க்கம் தலைப்படுகிறது.

136. ஒரு தொழிலாளர் அரசானது, புரட்சிகர வெகுஜனப் போராட்டங்களின் பாதையில் எழுகின்ற அத்துடன் மக்களில் தொழிலாள வர்க்க பெரும்பான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைவரும்-பங்கேற்கும் ஜனநாயகத்தின் புதிய வடிவங்கள் மற்றும் கட்டமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும். ஆலைகள், அலுவலகங்கள் மற்றும் பிற வேலையிடங்கள் அத்துடன் தொழிலாள வர்க்க அண்டை அருகில் இருந்து நேரடியாகத் தேர்வு செய்யப்படும் அமைப்புகளின் அடிப்படையிலான உண்மையான வெகுஜன அரசாங்கம் மற்றும் ஜனநாயகப்பட்ட அரசாங்கமாக இத்தகையதொரு அரசாங்கம் திகழ்வதை இது உறுதி செய்யும்.

137. பொருளாதார வாழ்வின் சோசலிச உருமாற்றத்திற்கு அத்தியாவசியமான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகின்ற சமயத்தில், முடிவெடுக்கும் நிகழ்முறையில் தொழிலாள வர்க்கம் ஜனநாயகப்பட்ட வகையில் பங்கேற்பதையும் அதன் மீது கட்டுப்பாடு கொண்டிருப்பதையும் ஊக்குவிப்பதும் செயலூக்கத்துடன் பரப்புவதும் இத்தகையதொரு அரசாங்கத்தின் கொள்கையாக அமைந்திருக்கும்.

தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம்

138. சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் பொதுவான நலன்களை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டத்தை கொண்டிருக்கும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. ஒவ்வொரு நாட்டின் தொழிலாளர்களது ஐக்கியப்பட்ட ஒரு இயக்கத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

139. அமெரிக்காவில் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள், சாரத்தில், உலகின் மற்ற ஒவ்வொரு பகுதியிலும் தொழிலாளர்கள் முகம் கொடுக்கிற அதே பிரச்சினைகள் தான். போர், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், சுரண்டல், வேலைவாய்ப்பின்மை, வறுமை மற்றும் சுற்றுச்சூழல் அழிவு இவையெல்லாம் வெறும் அமெரிக்க பிரச்சினைகள் அல்ல. இவையெல்லாம் உலக பிரச்சினைகள், உலகளாவிய தீர்வுகள் அவசியப்படுபவை.

140. முதலாளித்துவம் ஒரு உலகளாவிய பொருளாதார அமைப்புமுறை. ஒரு உலக சந்தைக்கு உற்பத்தி செய்கிற பரந்த நாடுகடந்த நிறுவனங்கள் மிக மலிவான உழைப்புக்கும் கச்சாப் பொருட்களுக்குமாய் உலகை சலித்து எடுக்கின்றன. இதே வங்கிகளும் நிதிச் சந்தைகளும் தான் ஒவ்வொரு நாட்டிலும் கொள்கையை உத்தரவிடுகின்றன. உற்பத்தி பூகோளமயமானதாய் இருப்பதால், வெகுஜன சமூகத்தின் பிரச்சினைகள் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே தீர்க்கப்பட முடியும்.

141. பூகோளமயமாக்கலே தான் பிரச்சினை, எனவே ஒரு தேசிய பொருளாதார கட்டமைப்பை மறுஸ்தாபகம் செய்து தேசிய-அரசு அமைப்புமுறையை வலுப்படுத்துவதே நமது கடமை என்பதான நிலைப்பாட்டை சோ.ச.க. நிராகரிக்கிறது. பூகோளமயமாக்கலுடன் தொடர்புபட்டு தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு தீவிரமாய் வளர்ச்சி கண்டுள்ளதானது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைத் தரத்தையும் பெருமளவில் மேம்படுத்துவதற்கான ஒரு அடிப்படையை வழங்குகிறது. பூகோளமயமாக்கலே உள்ளபடி ஒரு பிரச்சினை அல்ல, மாறாக உலக பொருளாதாரத்தை தனியார் இலாபத்திற்கும் செல்வந்தர்களின் நலன்களுக்கும் அடிபணியச் செய்வது தான் பிரச்சினை.

142. பெருவணிகமும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் அமெரிக்காவில் ஊதியங்கள் மற்றும் சமூகநல உதவிகள் மீதான தொடர்ந்த தாக்குதலை நியாயப்படுத்துவதற்கு அமெரிக்காவிற்கு வெளியில் நிலவும் குறைந்த ஊதியங்களைக் காட்டுகின்றனர். நாடுகடந்த நிறுவனங்களின் பொருளாதார கொடுங்கோன்மைக்கு எதிராக சோசலிசத்திற்கான ஒரு உலகளாவிய போராட்டத்தில் அமெரிக்க தொழிலாளர்கள் சர்வதேசரீதியாக தொழிலாளர்களுடன் அரசியல்ரீதியாக ஐக்கியப்படுவதற்கான அவசியத்தையே இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

143. தேசியவாதம், இன மற்றும் மத ஆதிக்கவாதம், மற்றும் நிறவெறி ஆகியவற்றின் அனைத்து வடிவங்களையும் சோ.ச.க. நிராகரிக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் குற்றவியல் தன்மையுடனான அமெரிக்கா-தலைமையிலான போர்களை நியாயப்படுத்த அரபு-விரோத மற்றும் இஸ்லாமிய-உணர்வுகளை திட்டமிட்டு ஊக்குவிப்பதையும் சோ.ச.க. நிராகரிக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவோம்! நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவோம்!

144. சோசலிச சமத்துவக் கட்சி தன்னை சர்வதேச சோசலிச இயக்கத்தின் மாபெரும் மரபுகளின் அடித்தளத்தின் மேல் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. சோசலிசம் என்பதன் பொருள் சமத்துவம், மானுட ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு, மற்றும் ஒடுக்குமுறை மற்றும் இல்லாமையில் இருந்து மனித குலத்தின் சட மற்றும் ஆன்ம விடுதலை ஆகியனவாகும். கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரடெரிக் ஏங்கெல்ஸின் தத்துவார்த்த உழைப்பு சோசலிசத்தின் வரலாற்று அவசியத்தை ஸ்தாபித்து, நவீன புரட்சிகர தொழிலாளர் இயக்கத்தின் உருவாக்கத்திற்கான அடித்தளங்களை இட்டது. 1917 அக்டோபர் புரட்சியின் மூலம் முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து முதலாவது தொழிலாளர் அரசை - சோவியத் ஒன்றியம் - ஸ்தாபித்த பாரிய வெகுஜன மக்கள் இயக்கம் ஒன்றின் வேலைத்திட்டமாக சோசலிசம் ஆனது. ரஷ்ய புரட்சி என்பது சமூக சமத்துவத்திற்காக தொழிலாள வர்க்கம் நடத்திய ஒரு பரந்த சர்வதேச போராட்டத்தின் பகுதி ஆகும். எட்டுமணி நேர வேலை தொடங்கி, எல்லா இடங்களிலும் பொதுக் கல்வி வரை, பாரிய தொழிற்துறை சங்கங்களின் உருவாக்கம் வரை, தெற்கில் ஜிம் குரோ இனப்பாகுபாட்டு முறையின் முடிவு வரை அமெரிக்க தொழிலாளர்களின் ஒவ்வொரு முக்கிய முன்னேற்றமும் சோசலிசத்துடன் தொடர்புபட்டதாய் இருந்தது, சோசலிச சிந்தனை கொண்ட போராளிகளால் தலைமை தாங்கப்பட்டது.

145. பல மாபெரும் இலட்சியங்களைப் போல, சோசலிசமும் தூற்றுதலுக்குள்ளாகி இருக்கிறது, காட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. சோவியத் ஒன்றியத்தில், ஜோசப் ஸ்ராலின் தலைமையிலான ஒரு எதிர்புரட்சி அதிகாரத்துவத்தால் அது காட்டிக் கொடுக்கப்பட்டது. ஸ்ராலினிசம் ரஷ்ய புரட்சியின் சமநோக்குடைய மற்றும் சர்வதேசப்பட்ட பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக இருக்கவில்லை. அது புரட்சிக்கு எதிரான பழமைவாத, அதிகாரத்துவ எதிர்வினை; தனியொரு நாட்டில் சோசலிசம் என்கிற தேசியவாத வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது. ஸ்ராலினிச அதிகாரத்துவம் தொழிலாளர் ஜனநாயகத்தை நசுக்கியது, சர்வாதிகார ஆட்சியைத் திணித்தது, உண்மையான மார்க்சிஸ்டுகளைக் கொன்றது, அத்துடன் உலகெங்கிலும் தொழிலாளர்களின் புரட்சிகரப் போராட்டங்களுக்குக் குழிபறித்தது. இவை எல்லாவற்றையும் சோசலிசம் என்கிற பெயரில் செய்தது. ரஷ்ய புரட்சி மற்றும் சோசலிசத்தின் மீதான இந்த காட்டிக் கொடுப்பு 1990களின் தொடக்கத்தில் சோவியத் ஒன்றியம் உடைந்து முதலாளித்துவம் மீட்சியுற்றதில் கிரெம்ளின் அதிகாரத்துவம் சர்வதேச ஏகாதிபத்தியத்துடன் நேரடியாகக் கூடி ஒத்துழைப்பதில் வந்து முடிந்தது.

146. அதிகாரத்துவத்திற்கு எதிராக சோசலிசத்திற்காகப் போராடிய தொழிலாள வர்க்கத்தின் மிகச் சிறந்த, மிகத் துணிந்த மற்றும் தொலைநோக்குடைய பிரதிநிதிகளின் பாரம்பரியத்தை சோ.ச.க. தனது அடித்தளமாகக் கொண்டிருக்கிறது. இந்த பாரம்பரியத்தின் மிக உயர்ந்த வடிவம் தான் ரஷ்ய புரட்சியில் லெனினுடன் சக-தலைவராய் இருந்த லியோன் ட்ரொட்ஸ்கி. ஸ்ராலினிச காட்டிக் கொடுப்புகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ட்ரொட்ஸ்கி தலைமை நடத்தினார். 1923ம் ஆண்டிலேயே இடது எதிர்ப்பாளர் அணியை நிறுவினார். 1938ல் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியான நான்காம் அகிலத்தை ஸ்தாபித்ததன் மூலம் சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் மறுபிறப்புக்கான அடிப்படையை அமைத்தார். அனைத்துலகக் குழுவால் தலைமை தாங்கப்படும் நான்காம் அகிலம் தான் இன்று இந்த பூமிப் பந்தில் தொழிலாள வர்க்கத்தின் ஒரே உண்மையான புரட்சிகரக் கட்சி ஆகும்.

147. சோசலிசத்திற்கான மாபெரும் போராளிகளையும் -தொழிலாளர் அதிகாரத்துவங்களை எதிர்த்துப் போராடி தங்களது வாழ்வை தொழிலாள வர்க்கத்தின் விடுதலைக்காக அர்ப்பணித்த ஆண்கள் மற்றும் பெண்கள்- அமெரிக்கா உருவாக்கியுள்ளது. பிக் பில் ஹேவுட், யூஜென் டெப்ஸ் மற்றும் ஜேம்ஸ் கனன் ஆகியோர் இத்தகையோரில் இடம்பெறும் மனிதர்களே. அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் மக்களின் நலன்களில் சமூகத்தை உருமாற்றுவதற்கும் வறுமை, சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைக்கு ஒரு முடிவு கட்டுவதற்குமான இன்றைய போராட்டத்தை ஒழுங்கமைக்க அமெரிக்க தொழிலாளர்கள் இந்த செறிந்த சோசலிச மரபியத்தை மீண்டும் கையிலெடுக்க வேண்டும். 

148. இந்த வேலைத்திட்டத்தில் உடன்படுகிற, சமூக சமத்துவத்திற்கான போராட்டத்தை ஆதரிக்கின்ற, மற்றும் போரையும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலையும் எதிர்க்கின்ற அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைவதற்கும் சோசலிசத்திற்கான போராட்டத்தைக் கையிலெடுப்பதற்கும் நாங்கள் அழைக்கிறோம்.

[1] தி நேஷன், ஜூலை 15, 1931, பக். 61.

[2] மார்க்ஸ்-ஏங்கல்ஸ் தொகுக்கப்பட்ட படைப்புகள். தொகுதி. 29 (நியூயார்க்: இன்டர்நேஷனல் பப்ளிஷர்ஸ், 1987), ப. 263.