சோசலிச
சமத்துவக் கட்சியின் தீர்மானங்கள் (அமெரிக்கா)

2வது தேசிய காங்கிரஸ்

WSWS : Tamil : நூலகம்

சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகள்

 
2012 தேர்தல் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் குறித்து

தொழிலாள வர்க்கத்தின் ஒழுங்கமைப்பும் சோசலிசத்துக்கான போராட்டமும்

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பைக் கட்டியெழுப்புவோம்

 

 

 
The New Course 1923
 

Resolutions of the SEP (US) National Congress

Perspectives of the Socialist Equality Party

சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசிய காங்கிரஸ் தீர்மானங்கள்

சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகள்

30 August 2012

Use this version to print | Send feedback

ஜூலை 8-12, 2012 தேதிகளில் நடந்த சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) இரண்டாவது தேசிய காங்கிரஸில் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட முதலாவது தீர்மானம் கீழே பிரசுரிக்கப்படுகிறது.

1. 2008 செப்டம்பரில் லெஹ்மென் பிரதர்ஸ் பொறிவினால் தூண்டப்பட்ட பொருளாதார நெருக்கடி நீண்ட நெடிய சமூக, அரசியல் மற்றும் வரலாற்று தாக்கங்களைக் கொண்டதாகும். “சரிவு”, “மந்தநிலை” மற்றும் இன்னும் “பெருமந்த நிலை” ஆகிய வார்த்தைகளும் கூட சூழ்நிலையின் பரிமாணத்தை முழுமையாக வெளிப்படுத்தப் போதுமானதாக இல்லை. எதிர்வரவிருக்கும் “மீட்சி” குறித்து தொழில்முறை பொருளாதார நிபுணர்களும் ஊடக வருணனையாளர்களும் முன்வைக்கும்  நம்பிக்கைதரக்கூடிய குறிப்புகளைக் காண்பது நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது. அப்பட்டமான பழமைவாத செய்தியிதழான தி எகானாமிஸ்ட் சமீபத்தில், “உலகப் பொருளாதாரத்தில் ஏதோ மிகத் தவறாய் இருக்கிறது” என்று ஒப்புக் கொண்டது. அதன் பின் அது அப்பட்டமாய் தெரிவித்தது: “அந்த ஏதோ என்பது தடுமாறும் வளர்ச்சி மற்றும் நிதிப் பேரழிவின் அபாய அதிகரிப்பு ஆகியவற்றின் ஒரு சேர்க்கையே.” [1]

2. 20 வருடங்களுக்கும் சற்று அதிகமான காலத்திற்கு முன்பு, 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை முதலாளித்துவ சித்தாந்தவாதிகள் எல்லோரும் சோசலிசத்தின் தோல்விக்கும் வரலாற்றுரீதியாக வெற்றிபெற்ற முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்றுக்கான சாத்தியமின்மைக்கும் மறுக்கவியலாத ஆதாரம் என்று பிரகடனம் செய்தனர். முதலாளித்துவத்திற்கு எதிராக நூறு மில்லியன்கணக்கிலான மக்கள் பங்குபெற்ற உலகளாவிய போராட்டங்களைக் கண்டிருந்த இருபதாம் நூற்றாண்டின் ஒட்டுமொத்த புரட்சிகர அனுபவமும் பயனற்றதாக, இன்னும் சொன்னால், பகுத்தறிவற்றதாகவும், எட்டமுடியாத கற்பனாவுலகத்திற்கான தேடல் என்றும் கூட அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புகளுக்கு சோவியத் ஒன்றியத்தை சோசலிசத்துடன் வஞ்சகமான முறையில் எளிமைப்படுத்தி அடையாளம் காண்பது, அத்துடன் 1917 அக்டோபர் புரட்சிக்கு உத்வேகம் அளித்திருந்த கோட்பாடுகளின் மீதான ஸ்ராலினிசக் காட்டிக் கொடுப்பிற்கு எதிராக லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையில் மார்க்சிச ரீதியிலான எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்தை மறுப்பது ஆகிய இரண்டுமே அவசியமானதாக இருந்தது

3. ஆயினும் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு முன்நிகழ்ந்த பொருளாதார நெருக்கடி சோசலிசத்தின் தோல்வியை எடுத்துக் காட்டியதாக வாதிட்ட ஆளும் வர்க்கத்திற்கு வக்காலத்து வாங்கியவர்கள்  தற்போதைய உலகளாவிய பொருளாதார நெருக்கடி முதலாளித்துவத்தின் தோல்விக்கு முக்கியமானதாக இருக்கிறது என்ற அடிப்படையில் எத்தகைய முடிவுகளுக்கும் வருவதில்லை! எப்படியிருப்பினும், 2008 இல் வெடித்த நெருக்கடி என்பது உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் சமநிலையில் ஒரு முறிவினைக் குறித்தது. இம்முறிவு அதன் வரலாற்று முக்கியத்துவத்தில் 1914 ஆம் ஆண்டு வெடித்த முதலாம் உலகப் போருடனும், 1929 ஆம் ஆண்டின் வோல் ஸ்ட்ரீட் பொறிவுடனும், அத்துடன் 1939 இன் இரண்டாம் உலகப் போருடனும் ஒப்பிடத்தக்கதாகும். இந்த நெருக்கடி முதலாளித்துவ அமைப்புமுறையின் ஒரு பிரம்மாண்டமான வரலாற்றுத் தோல்வியைக் குறிக்கிறது, அதனாலேயே இது, மனிதகுலத்தின் முன்னால் முதலாளித்துவத்திற்கான சோசலிச மாற்றீட்டினை கட்டுவதற்கும் மற்றும் அதற்காகப் போராடுவதற்குமான அவசியத்தினை முன்வைக்கின்றது.

4. பொருளாதார வீழ்ச்சி என்பது நாட்டிற்கு நாடு, கண்டத்திற்கு கண்டம் பரவிக் கொண்டிருக்கிறது. உலகளாவியளவில் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிச் சந்தைகளையும் உற்பத்தியையும் கொண்ட ஒரு சகாப்தத்தில், எந்த ஒரு நாடும் எந்த முக்கியமான புவியியல்ரீதியான பிரிவினுள்ளும் ஒரு பொருளாதார நெருக்கடியின் விளைவுகளில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள இயலாது. அமெரிக்காவில் 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வீட்டு அடைமானக்கடன் பொறிவு ஐரோப்பாவின் ஸ்திரத்தைக் குலைத்தது. முக்கியமான முதலாளித்துவ மையங்களிலான தமது ஏற்றுமதிச் சந்தைகளையே கூடுதலாகச் சார்ந்திருந்த சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில், தாக்கம் சற்று தாமதமாகத் தெரிந்தாலும், நெருக்கடி நாளுக்கு நாள் வெளிப்படையாகி வருகிறது

5. ஒற்றை நாணயத்துடனான ஒரு “ஐக்கிய” ஐரோப்பாவுக்கான திட்டமென்பது வரலாற்றின் மாபெரும் பொருளாதார ஏமாற்று மோசடிகளில் ஒன்றாக அம்பலப்படுவதற்கு வெறும் இரண்டு தசாப்த காலங்களே பிடித்திருக்கிறது. 1992 ஆம் ஆண்டின் மாஸ்ட்ரிச்ட் ஒப்பந்தத்திலிருந்து உருவாகியது வங்கியாளர்களுக்கான ஒரு ஐரோப்பாவே. ”சமூக சந்தைப் பொருளாதாரம்” - இது அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்படும் “சுதந்திர நிறுவன” நடைமுறைக்கு மனிதாபிமானத்துடனான ஐரோப்பிய மாற்றாக வெகுகாலம் போற்றப்பட்டது - தோமஸ் மால்துஸ் இருந்திருந்தால் உற்சாகத்துடன் வரவேற்றிருக்கக் கூடிய முதலாளித்துவத்தின் ஒரு வடிவத்திற்கு வழிவிட்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும் “சிக்கன நடவடிக்கை” என்பது தான் ஆதார வார்த்தையாக ஆகியிருக்கிறது. கிரீஸில் தொழிலாள வர்க்க மக்கள் அநாதரவான நிலைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் 16 இல் இருந்து 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் பாதிப்பேர் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர். போர்த்துக்கல், பிரிட்டன், அயர்லாந்து மற்றும் இத்தாலியிலுள்ள தொழிலாளர்களும் பெருகிய நிராதரவான நிலைமைகளுக்குக்கு முகம் கொடுக்கின்றனர். பிரான்சில் சோசலிஸ்ட் கட்சியின் புதிய அரசாங்கம் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களைக் கீழிறக்கும் நோக்கத்துடனான நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் இறங்குவதற்கு அதிக நேரம் தாழ்த்தப் போவதில்லை. ஆனால் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல் தீவிரமுற்ற நிலையிலும், ஐரோப்பிய முதலாளித்துவம் நெருக்கடிக்கு, பயனுள்ள பதிலிறுப்பை விடுங்கள், ஒரு ஒன்றுபட்ட பதிலிறுப்பை வடிவமைப்பதற்கும் கூட இயலாதிருக்கிறது. முதலாளித்துவ தேசிய-அரசு வடிவமைப்பில் வரலாற்றுரீதியாக வேரூன்றியிருக்கும் பொருளாதாரக் கொள்கைகளிலான பேதங்களை ஒற்றை ஐரோப்பிய நாணய மதிப்பின் இருப்பு வெல்வதற்குத் தோற்றிருக்கிறது. ஐரோப்பாவை முதலாளித்துவ ஆட்சி மற்றும் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அடிப்படையில் ஒன்றுபடுத்துவதற்கான முயற்சியென்பது இராணுவ-போலிஸ் வன்முறையின் மூலமும், அரசியல் சர்வாதிகாரத்தின் மூலமும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை பேரளவில் சரிப்பதின் மூலமும் மட்டுமே நிறைவேற்றத்தக்க ஒரு பிற்போக்குத்தனமான திட்டமாகும். ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் இருக்கும் ஆளும் வர்க்கமும் தனது சொந்த தேசிய நலன்களுக்கு இணக்கமானதொரு தீர்வை விரும்புகிறது. ஐரோப்பிய அரசுகளுக்கு இடையிலான மோதலைத் தவிர்க்க 1945க்குப் பின்னர் உருவாக்கப்பட்ட பொருளாதாரக் கட்டமைப்புகளும் அரசியல் ஸ்தாபனங்களும் இருக்கின்றன என்ற போதிலும், முதலாளித்துவ ஐரோப்பா இன்று அது இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இருந்த அளவுக்கு பிளவுபட்டு நிற்கிறது.

6. 1930களின் பிற்பகுதியில், பெருமந்தநிலையால் உருவாக்கப்பட்ட அரசியல் நோக்குநிலை பிறழ்வினை விவரித்த ட்ரொட்ஸ்கி, “மூலதனத்தின் பாரம்பரியமான கட்சிகள் அனைத்தும் சிந்தனை முடக்கமடைந்த ஒரு இரண்டும்கெட்டான் நிலையின் எல்லையில் இருக்கின்றன” என்றார். [2] ஐரோப்பாவில் நிலவுகின்ற சூழ்நிலைக்கு இந்த வார்த்தைகள் அசாதாரணமான துல்லியத்துடன் பொருந்துகின்றன. மிகவும் சிந்திக்கக் கூடிய முதலாளித்துவ வருணனையாளர்களும் கூட இந்த நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்கான வழியைக் காணவில்லை. “பீதி என்பது மிகவும் பகுத்தறிவானதாய் ஆகியிருக்கிறது” (“Panic Has Become All Too Rational,”) என்ற தலைப்பிட்ட ஒரு பத்தியில் ஃபைனான்சியல் டைம்ஸின் மார்ட்டின் வொல்ஃப் எழுதினார்:

அழுத்தத்தின் கீழுள்ள நாடுகள் எவ்வளவு வலி தாங்க முடியும்? ஒருவருக்கும் தெரியாது. ஒரு நாடு யூரோ மண்டலத்தை விட்டு வெளியேறினால் என்னவாகும்? ஒருவருக்கும் தெரியாது. இந்த நெருக்கடியில் இருந்து வெளியேறுவதற்கான தொலை-நோக்கு மூலோபாயம் என்ன? ஒருவருக்கும் தெரியாது. இத்தகைய நிச்சயமற்ற தன்மை நிலவுகின்றதைக் கொண்டு பார்த்தால், பீதி என்பது, அந்தோ, பகுத்தறிவானது தான். இதற்கு முன் 1930கள் எப்படி நடந்திருக்கும் என்று எனக்குப் புரியாமலிருந்தது. இப்போது புரிகிறது. அதற்குத் தேவையெல்லாம் எளிதில் நொருங்கத்தக்க பொருளாதாரங்கள், இறுக்கமானதொரு பண ஆட்சி, என்ன செய்யப்பட வேண்டுமென்பது குறித்து தீவிரமாய் விவாதம் நடந்து கொண்டே இருப்பது, துன்பப்படுவது நல்லது என்ற பரவலான நம்பிக்கை, குறுகிய பார்வை கொண்ட அரசியல்வாதிகள், ஒத்துழைக்கும் திறனில்லாமை அத்துடன் நிகழ்வுகளை தாண்டிச்செல்லத் தவறுவது ஆகியவை தான். [ஜூன் 5, 2012]

7. உலக நெருக்கடி, வோல் ஸ்ட்ரீட்டின் ஒரு பொறிவினால் தூண்டப்பட்டது என்பது அதிகம் தற்செயலானதல்ல. இலாப விகிதத்தின் நீண்டகால வீழ்ச்சியால் செலுத்தப்பட்டு, உற்பத்தித் துறைகளிலான முதலீட்டில் இருந்து விலகிச் சென்ற இயக்கத்தின் விளைபொருளாக “நிதிமயமாக்கம்” என்ற நிகழ்வுடன் தொடர்புபட்ட பொருளாதார ஒட்டுண்ணித்தனம் உருவாகியிருந்தது. “நிதிமயமாக்கம்” அமெரிக்காவில் மிகத் துரிதமாய் முன்னேறியது என்கிற உண்மையானது உலகின் மேலாதிக்கமிக்க தொழிற்துறை சக்தியாக இருந்ததில் இருந்து அந்நாட்டின் நிலை சிதைந்ததுடன் பிரிக்கவியலாமல் தொடர்புபட்டதாகும். ஒட்டுண்ணித்தனத்தின் வளர்ச்சி அமெரிக்க முதலாளித்துவத்தின் சிதைவுக்குச் சாட்சியம் கூறுகின்ற ஒரு நிகழ்வாக உள்ளது. கூட்டு பங்கு பத்திரங்கள் மற்றும் வீட்டு அடமானக் கடன் தொடர்பான பிற மோசடியான நிதிக் கருவிகளின் உருவாக்கம் என்பது பெருநிறுவன மற்றும் தனிநபர் சொத்துத் திரட்சி நிகழ்முறையை உற்பத்தி நிகழ்முறையில் இருந்து பிரித்ததில் இருந்து நேரடியாக வருவதாகும். 1980களின் ஆரம்பந்தொட்டு, ஒரு தலைமுறைக்குள்ளாக, நிதித் தொழிற்துறை என்பது மொத்த பெருநிறுவன இலாபங்களிலான தனது பங்கினை 6 சதவீதத்தில் இருந்து சுமார் 50 சதவீதமாக அதிகரித்துக் கொண்டு விட்டிருக்கிறது. நிதி நிறுவனங்களின் இந்த அபார வளர்ச்சி மலைக்க வைக்கும் செல்வத்தை இந்த வோல் ஸ்ட்ரீட் உயரடுக்கிற்குள்ளாக குவிப்பதற்கு உதவியிருக்கிறது, இந்த உயரடுக்கோ தனது வரம்பற்ற ஆதாரவளங்களை முதலாளித்துவ அரசு தனது நலன்களுக்கு முழுமையாய் கீழ்ப்படிவதை உறுதி செய்வதற்கென பணியமர்த்தியிருக்கிறது. அதே நேரத்தில் நிதி உயரடுக்கு பொதுக் கல்வி மற்றும் பொது சுகாதாரம் போன்ற பொதுச் சொத்துக்களையும் சேவைகளையும் கொள்ளையடிப்பதற்கும் அவற்றை முன்னெப்போதையும் விட நேரடியாக தனியார் இலாபத் திரட்சிக்கு கீழ்ப்படியச் செய்வதற்கும் முனைந்து வந்திருக்கிறது.

8. அமெரிக்காவில் யதார்த்தத்திலிருந்து விலகிய ஒரு சூழல் 2012 ஜனாதிபதித் தேர்தலுக்கு மேலே தொங்குகிறது. ஜனாதிபதி ஒபாமாவும் குடியரசுக் கட்சி போட்டி வேட்பாளர் மிட் ரோம்னியும் அமெரிக்க முதலாளித்துவத்தின் அருமை பெருமைகள் குறித்தும் அதன் தளர்ச்சியடையாத தொழில்முனைவியத்தைக் குறித்தும் ஒரே மாதிரியான கதைகளையும் தேய்வழக்குகளையும் கூறி வருகின்றனர். “எல்லையற்ற வாய்ப்பு”களின் பூமியாக அமெரிக்காவின் “மகத்தான தன்மை”யைப் பாதுகாக்க இருவருமே வாக்குறுதி தருகின்றனர். ஆனால் ஜூன் 2012 இல் வெளியான மத்திய வங்கிக் கூட்டமைப்பின சுற்றிதழ் யதார்த்தத்தில் இருந்து நழுவும் இந்த வேட்பாளர்களுக்கு உண்மைகளின் அடிப்படையில் உடைத்தெறியும் ஒரு மறுப்பை வழங்குகிறது. அந்த சுற்றிதழ் தெரிவித்தது:

2007-10 வரையான காலத்தில், அமெரிக்கப் பொருளாதாரம் பெருமந்தநிலைக்குப் பிந்தைய அதன் மிகக் கணிசமான வீழ்ச்சியை சந்தித்தது. 2007 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கும் 2009 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கும் இடையில், அதாவது தேசியப் பொருளாதார ஆராய்ச்சிக் கழகத்தினால் (National Bureau of Economic Research) உத்தியோகபூர்வமான மந்தநிலைக் காலமென தீர்மானிக்கப்பட்டிருந்த காலத்தில், உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) சுமார் 5.1 சதவீதம் வீழ்ச்சி கண்டிருக்கிறது. இதே காலத்தில், வேலைவாய்ப்பின்மை அளவு 5.0 சதவீதத்தில் இருந்து 9.5 சதவீதமாக உயர்ந்திருக்கிறது, இது 1983க்குப் பிந்தைய மிக உயர்ந்த அளவாகும். மாபெரும் மந்தநிலை என்று சொல்லப்படுவதில் இருந்தான மீட்சியும் குறிப்பாக மிக மந்தமாய் இருக்கிறது; உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2011 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு வரையில் மந்தநிலைக்கு முந்தைய மட்டத்திற்குத் திரும்பவில்லை. வேலைவாய்ப்பின்மை விகிதம் 2009 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு முழுவதிலும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமிருந்தது, 2010 காலத்தில் தொடர்ந்து 9.4 சதவீதத்திற்கு மேலேயே இருந்தது. [3]

9. இந்நெருக்கடி பெரும்பான்மை அமெரிக்கர்களின் நிகர செல்வத்தின் மீது ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு குறித்த மிக முக்கியமான தரவு:

2007 முதல் 2010 வரையான காலத்தில், பணவீக்கத் திருத்தத்துடனான நிகர செல்வத்தின் அளவு - குடும்பங்களின் மொத்த சொத்துகளுக்கும் அவர்களின் கடன்களுக்கும் இடையிலான வித்தியாசம் – சராசரியிலும்  மிகக்குறைந்தளவிலும் பெருமளவில் வீழ்ச்சி கண்டிருந்தது. சராசரி  அளவு 38.8 சதவீதம் சரிந்திருந்தது, மிகக்குறைந்தளவு 14.7 சதவீதம் சரிந்திருந்தது. நிகர செல்வத்தின் மிகக்குறைந்தளவு 2001 ஆம் ஆண்டின் மட்டத்திற்குச் சரிந்திருந்தது, நிகர செல்வத்தின் சராசரி அளவு 1992 கணக்கெடுப்பிற்குப் பின் கண்டிராத மட்டங்களுக்கு நெருக்கமாய் சரிந்திருந்தது. [4]

10. சுமார் நான்கு தசாப்தங்களாக, பணவீக்கத் திருத்தம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் வருவாய் தேங்கியிருந்திருக்கிறது. ஊதிய மட்டங்களிலான தேய்வினால் ஏற்பட்ட தாக்கம் 1990களிலும் புதிய நூற்றாண்டின் முதலாம் தசாப்தத்திலும் வீட்டு விலைகளில் ஏற்பட்ட துரிதமான அதிகரிப்பின் மூலமாக பகுதியாக சரிக்கட்டப்பட்டது. ஆயினும் வீட்டுக் கடன் குமிழியின் 2008 ஆம் ஆண்டு பொறிவு அமெரிக்க முதலாளித்துவம் நெடுங்காலமாய் சரிவு கண்டு வந்திருந்ததின் சமூகப் பாதிப்புகளை காட்சிக்குக் கொண்டு வந்தது. சராசரியின் நிகர செல்வத்திலான வீழ்ச்சியின் அளவு - சுமார் 40 சதவீதம் - அமெரிக்காவின் உலகப் பொருளாதார நிலையில் ஏற்பட்ட சிதைவினால் கட்டளையிடப்பட்ட தொழிலாளர்’ வாழ்க்கைத் தரங்களிலான மிருகத்தனமான கீழ்நோக்கிய திருத்தலைக் குறிக்கிறது

11. அமெரிக்கர்களில் மிகப் பெரும்பான்மையினரின் - தொழிலாள வர்க்கத்தினரும் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் கணிசமான பிரிவுகளும் - நிகர செல்வத்திலான வீழ்ச்சி சமூக அசமத்துவத்தின் அதீத அளவுகளின் அபிவிருத்தியுடன் கைகோர்த்து நிகழ்ந்திருக்கிறது. கடந்த மூன்று தசாப்தங்களில் தொழிலாள வர்க்கத்திடம் இருந்ததான வருவாய் பரந்த அளவில் நிதி உயரடுக்குகளுக்கு மாற்றப்படுவது நடந்தேறியுள்ளது. வருவாய் மற்றும் நிகர செல்வ வளர்ச்சியின் மிகப்பெரும் பங்கு மக்களில் 10 சதவீதமான பணக்காரர்களின் குவிந்திருக்கிறது. சலுகை படைத்த அந்த சமூகக் குழுவிற்குள்ளாக, தனிநபர் செல்வ அதிகரிப்பிலான ஆகப் பெரும் பங்கு மக்களில் 1 சதவீதமான  பணக்காரர்களினால் பெறப்பட்டிருக்கிறது.  

12. ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட இரண்டு காரணிகள் தான் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மூலோபாயத்திற்கான அடிப்படையை உருவாக்குகின்றன: முதலாவது காரணி, அமெரிக்காவின் உலகளாவிய பொருளாதார நிலை சீரழிந்தமை; இரண்டாவதாக, சற்று முந்தைய காலம் வரைக்கும், ஒரு அதிக அபிவிருத்தி கண்ட முதலாளித்துவ ஜனநாயக அரசினால் கற்பனை செய்து பார்க்க முடியாததாகக் கருதப்பட்டு வந்திருக்கக் கூடிய ஒரு மட்டத்திற்கு, செல்வம் ஓரிடத்தில் குவிந்தமை. முதல் காரணிக்கான தனது பதிலிறுப்பாக அமெரிக்க ஆளும் உயரடுக்கு உலகமெங்கும் ஒரு சவாலுக்கப்பாற்பட்ட பூகோள-அரசியல் மேலாதிக்கத்தை - நிகரவிளைவாய் ஒரு வல்லாதிக்க நிலையை - மறுஸ்தாபகம் செய்வதற்கு தனது மிதமிஞ்சிய இராணுவ சக்தியை களத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வழியில் அமெரிக்கப் பொருளாதாரச் சிதைவின் நீண்டகாலப் பின்விளைவுகளைத் திருப்புவதற்கான தீர்மானத்துடன் அமெரிக்கா இருக்கிறது. இரண்டாவது காரணிக்கான பதிலிறுப்பாக, ஆளும் வர்க்கம் அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகளின் மீதான தனது தாக்குதலை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது. இராணுவவாதம் மற்றும் ஒடுக்குமுறை ஆகிய அதன் மூலோபாயத்தின் இரண்டு அடிப்படையான அம்சங்களும் “பயங்கரவாதத்தின் மீதான போர்” சட்டகத்திற்குள்ளாக அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

13. 1928 இல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எழுச்சியில் வெகு ஆரம்ப கட்டம் ஒன்றிலேயே, லியோன் ட்ரொட்ஸ்கி எச்சரித்தார்: “பொருளாதார எழுச்சிக் காலகட்டத்தைக் காட்டிலும் நெருக்கடியின் காலகட்டத்தில், அமெரிக்க மேலாதிக்கம் மிக முழுமையாகவும், மிக வெளிப்படையாகவும், அத்துடன் மிகவும் இரக்கமற்றும் செயல்படும்.” [5]  இந்த வார்த்தைகள் தீர்க்கதரிசனமானவை. 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை உலகம் முழுமையின் மீதும் இராணுவ வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே அமெரிக்கா அர்த்தப்படுத்திக்கொண்டிருந்தது என்பது இப்போது வெளிப்படையாக உள்ளது. பனிப் போரின் காலத்தில் அமெரிக்கா மீது நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த ஒரு கட்டுப்பாடு (இந்த கட்டுப்பாடு மிக மிகக் குறுகியதாக இருந்தபோதிலும் கூட) அதன்பின் அவசியமாக இருக்கவில்லை. கடந்த 20 ஆண்டு காலத்தில் அமெரிக்கா எடுத்திருக்கும் நடவடிக்கைகளைக் கொண்டு பார்த்தால், ஒருவேளை 1917 இன் அக்டோபர் புரட்சி நடந்திராதிருந்தால் உலகம் இப்போது எங்ஙனம் இருந்திருக்கும் என்பதை சிந்தனை செய்து பார்க்க முடியும். இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஆசியாவின் பெரும்பகுதியிலும், மத்திய கிழக்கிலும், மற்றும் ஆபிரிக்காவிலும் நேரடியான காலனித்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த தேசிய சுய-நிர்ணயத்திற்கான பரந்த மக்களின் இயக்கங்கள் எல்லாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழுச் சக்தியையும் எதிர்கொள்ள நேர்ந்திருக்கும். ஹிரோசிமா மற்றும் நாகாசாகி ஆகிய பாதுகாப்பற்ற நகரங்களின் மீது இரண்டு அணுகுண்டுகளைப் போட்டு தனது மிருகத்தனமான இரக்கமின்மையை ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்த அமெரிக்கா எந்த சந்தர்ப்பத்தையும் வீணடித்திருக்காது, அத்துடன் பழைய ஐரோப்பிய காலனித்துவ சக்திகளின் இடத்தைப் பிடிப்பதற்கான அதன் பாய்ச்சலை எதுவும் தடுத்திருக்க முடியாது.

14. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமையானது அமெரிக்காவிற்கு ஒரு இடைவிடாத போருக்கான வேலைத்திட்டத்திற்கு மேடையமைத்து கொடுத்தது. 1991 முதலாக, அதன் இராணுவப் படைகள் ஏறக்குறைய உலகின் ஒவ்வொரு பகுதியிலுமே நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றன. செவ்வியல் மார்க்சிசத்தின் மொழியைப் பயன்படுத்திக் கூறினால், அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதி செய்கின்ற அம்சங்களின் பேரில் “உலகைப் புதிய வகையில் பங்கிடுவதற்கு” அது முனைகிறது. அமெரிக்கா அதன் மூலோபாய நலன்களின் ஒரு பாகமாகக் காணாத பிராந்தியமென்று உலகின் ஒரு பகுதியும் கூட கிடையாது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு என்ன தான் வேண்டும்? எல்லாமே! ஒவ்வொரு நாட்டின் மீதும், கண்டத்தின் மீதும், கடல்-வெளி மீதும், கடல்கள் மீதும் மற்றும் அயல்கிரக வெளி மீதும் தனது மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதற்கு அது தீர்மானத்துடன் இருக்கிறது. இந்தப் பூகோள அரசியல் மேலாதிக்க வெறி அமைதியான நடவடிக்கைகளின் மூலமாக அடையப்பட முடியாது. ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான், ஏமன் மற்றும் லிபியா என ஒரு நாட்டிற்கு அடுத்து இன்னொரு நாடாக ஊடுருவல் அல்லது குண்டுவீச்சுகளுக்கு இலக்காக்கப்பட்டிருக்கின்றன. சிரியாவில் ஒரு உள்நாட்டுப் போருக்குத் தூண்டுதலளித்து வரும் அமெரிக்கா ஈரானையும் அச்சுறுத்தி வருகிறது. அதே சமயத்தில் ஒபாமா நிர்வாகம் சீனாவைத் தனிமைப்படுத்துவதன் மீதும் அதனைச் சுற்றி வளைப்பதன் மீதும் பெருங் கவனத்தைக் குவித்து வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பு பிரிக்கவியலாமல், அனைத்து பெரும் சக்திகளும் பங்குபெறுகின்ற ஒரு உலகளாவிய மோதலுக்கான திசையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது, இது அணு அழிவு அபாயத்தை எழுப்பும்.

15. 9/11 நிகழ்வுகள் ஒரு சாக்குப்போக்கான "பயங்கரவாதத்தின் மீதான போர்” தொடங்கப்பட்டமையானது அரச கொள்கையின் ஒரு தொடர்ச்சியான சாதனமாக இராணுவ வன்முறை ஸ்தாபனமயமாக்கப்படுவதை குறித்தது. போரையும் கொலைகளையும் உத்தியோகபூர்வமாய் போற்றுவதென்பது ஒரு அவலட்சணமான தன்மையைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதியின் ஆளுமை என்பது முடியாட்சி சீசர் மற்றும் மாபியா தலைவனின் ஒரு விநோதக் கலவையாக மறுஅவதாரமளிக்கப்படுகிறது. ஒபாமா, ஆளில்லா ஏவுகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகப் போகின்ற தனிநபர்களைத் தெரிவு செய்ய தானே தனது நேரத்தில் கணிசமான பகுதியை அர்ப்பணித்தார், அத்துடன் இந்தக் கொலைகளின் போது எந்தவித இராணுவ அல்லது பயங்கரவாத நடவடிக்கைக்கும் கொஞ்சமும் தொடர்பில்லாத அப்பாவி மக்களும் உடன் பாதிக்கப்படுபவர்களில் இருப்பார்கள் என்பதை நன்கு அறிந்த பிறகே அவர் ஒப்புதல் அளித்தார் என்கிற உண்மையை விளம்பரப்படுத்துகிறார். கொல்லப்பட்டவர்களில் அமெரிக்கக் குடிமக்களும் கூட இருக்கின்றனர், அவர்களது தலைவிதி சட்டப்பூர்வமான உரிய நடைமுறை இல்லாமல் அத்துடன் அமெரிக்க அரசியல் சட்டத்தை அப்பட்டமாய் மீறிய வகையில் தீர்மானிக்கப்படுவதில் முடிந்திருக்கிறது. விடயத்தை வெளிப்படையாகவே கூறவேண்டுமாயின், அமெரிக்க ஜனாதிபதி கொலைக்கான குற்றவாளியாவார். நாஜி மூன்றாம் குடியரசின் முன்னணி “சட்ட” தத்துவாசிரியராக இருந்த கார்ல் ஸ்கிமிட்டால் உருவாக்கப்பட்ட “விதிவிலக்கு அரசு” ("State of Exception") கருத்தையே தமது நடவடிக்கைகளுக்கான அடிப்படையாக புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றன.    

16. அடிப்படையான ஜனநாயக உரிமைகளை நடைமுறையில் கைகழுவுவதற்கான சாக்காக “பயங்கரவாதத்தின் மீதான போர்” சேவை செய்திருக்கிறது. ஆட் கொணர்வுக்கும், சட்டபூர்வமான நடைமுறைக்கும் மற்றும் முகாந்திரமற்ற தேடல்கள் மற்றும் பறிமுதல்களுக்கு எதிரான பாதுகாப்புக்குமான உரிமை உட்பட உரிமைகள் மசோதாவில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அத்தனை ஜனநாயகப் பாதுகாப்புகளுமே மிகப் பெரும் தாக்குதல்களுக்கு இலக்காக்கப்பட்டிருக்கின்றன.

17. அடிப்படையான அரசியல்சட்டக் கோட்பாடுகளில் மற்றும் நடைமுறைகளிலான முறிவு ஜனாதிபதியின் தனிநபர் குணாதிசயங்களில் (அவை எவ்வளவு தான் கவர்ச்சியற்றவையாக இருக்கின்றபோதினும் கவனம் குவிப்பதன் மூலமாக விளக்கப்பட முடியாது. இந்த மாற்றத்திற்கான மூலம் ஏகாதிபத்தியத்தின் பொருளாதார நிர்ப்பந்தங்களிலும் அமெரிக்க சமூகத்தின் வர்க்க அமைப்பிலும் (அதன் முன்கண்டிராத சமூகத் துருவமயமாக்கல் மட்டங்களுடன்) தங்கியிருக்கிறது. மக்களின் விஞ்சிய பெரும்பான்மையினருக்கு வாழ்க்கை நிலைமைகள் மோசமடைவது சமூக அமைதியின்மைக்கு இட்டுச் சென்றாக வேண்டும் என்பதை ஆளும் வர்க்கம் மிகத் தெளிவாகவே அறிந்து வைத்திருக்கிறது. அதன் கோணத்தில் இருந்து, அரசியல்சட்ட உத்தரவாதங்களைக் கீழறுப்பதே, தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் சகிக்க முடியாத சமூக நிலைமைகளுக்கும், அசமத்துவத்திற்கும் மற்றும் இராணுவவாதத்திற்கும் எதிராகத் துவக்குகின்ற தாக்குதல்களை ஒடுக்குவதற்கான தயாரிப்பாகும்.

பகுதி ll

18. உலகப் பொருளாதார நெருக்கடி தீவிரமடைவதென்பது பிரிக்கவியலாமல் அமெரிக்காவிற்குள்ளும் மற்றும் உலகமெங்கிலும் வர்க்கப் போராட்டத்தின் மறுஎழுச்சிக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. துனிசியாவிலும் எகிப்திலும் 2011 ஆம் ஆண்டில் வெடித்த பரந்த மக்களின் போராட்டங்கள் புரட்சிகர எழுச்சி அபிவிருத்தி கண்டு வருவதற்குக் கட்டியம் கூறின. மேலும், 2011 ஆம் ஆண்டின் போராட்டங்கள் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் நனவின் மீது ஒரு ஆழமான தாக்கத்தையும் கொண்டிருந்தன. முபாரக்கின் சர்வாதிகாரத்தை கீழிறக்கிய பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் கெய்ரோவில் வெடித்த சில வாரங்களுக்குள்ளாகவே, தஹ்ரீர் சதுக்கத்தின் உதாரணம் விஸ்கான்சினில் ஆளுநரான வாக்கரின் பிற்போக்குத்தனமான கொள்கைகளை எதிர்த்துப் போராடிய அமெரிக்கத் தொழிலாளர்களால் கையிலெடுக்கப்பட்டது.

19. புரட்சிகரப் போராட்டங்களின் தவிர்க்கவியலாத் தன்மையை முன்கணிப்பதும் பின் அவை விரிவடையக் காத்திருப்பதும் மட்டும் போதுமானதல்ல. அவ்வாறான அமைதிவாதப்போக்கிற்கும், தத்துவார்த்த ரீதியாக வழிகாட்டப்படுகின்ற பிரக்ஞை மற்றும் புரட்சிகர நடைமுறை இவை இரண்டின் ஐக்கியத்தின் மீது வலியுறுத்துகின்ற மார்க்சிசத்திற்கும் இடையே எந்தவொரு சம்பந்தமும் கிடையாது. மேலும், முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பிந்தைய காலத்தின் நிகழ்வுகள் மிகத் தெளிவாய் எடுத்துக் காட்டுவதைப் போல, சோசலிசப் புரட்சியின் வெற்றிக்கு ஒரு புரட்சிகரக் கட்சி இருப்பது அவசியமாக இருக்கிறது. பரந்து விரிந்த போராட்டங்கள் வெடிப்பதற்கு முன்னதாக, தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக, எல்லாவற்றிற்கும் முதலாய் அதன் மிக முன்னேறிய கூறுகளிடையே, ஒரு கணிசமான அரசியல் பிரசன்னத்தை அபிவிருத்தி செய்வதற்கு சோசலிச சமத்துவக் கட்சி அதனால் இயன்ற அனைத்தையும் செய்தாக வேண்டும். புரட்சிகர முன்னோக்கின் மையமான பிரச்சினைகளை ஆராய்ந்த ஒரு இயக்கமாக அது இருக்க வேண்டும். முதலாளித்துவ நெருக்கடியானது தொழிலாள வர்க்கத்தை தீவிரமயப்படுத்தி சோசலிசப் புரட்சிக்கான புற நிலைமைகளை வழங்குகிறது. அதிகாரத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை வழிநடத்திச் செல்லக் கூடிய மூலோபாயத்தையும் தந்திரோபாயத்தையும் உருவாக்கியளிப்பது சோசலிச சமத்துவக் கட்சியின் பொறுப்பாகும்.

20.  அமெரிக்க ஏகாதிபத்தியம் என்பது வலிமைவாய்ந்த ஒரு சக்தியாகும். ஆனாலும் அமெரிக்க ஆளும் வர்க்கம் வெல்ல முடியாததல்ல. அதன் ஆட்சியின் பொருளாதார, அரசியல், சமூக மற்றும் கலாச்சார அடித்தளங்கள் அனைத்தும் வேர் வரை இற்றுப் போயிருக்கின்றன. சோசலிச இயக்கம் முகம் கொடுக்கும் சவால் என்னவென்றால் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே அதன் படைகளை உருவாக்குவதும், அத்துடன் எழுந்து வருகின்ற பரந்த இயக்கத்திற்கு உலக முதலாளித்துவ அமைப்புமுறை நெருக்கடியின் அரசியல் தாக்கங்கள் பற்றிய புரிதலைப் புகட்டுவதுமே ஆகும். புரட்சிகரப் போராட்டத்தின் ஒரு ஆரம்ப கட்டத்தில் ட்ரொட்ஸ்கி விளக்கியவாறு: “முழுமையாக கடைசி வரை சிந்தித்து முதலாளித்துவம் முன்வைக்கின்ற எதிர்ப்புரட்சிகர மூலோபாயத்திற்கு எதிராய் அதேவகையில் இறுதி வரை சிந்தித்து உருவாக்கப்பட்ட தனது சொந்த புரட்சிகர மூலோபாயத்தை முன்வைப்பது தான் ஐரோப்பாவிலும் சரி உலகமெங்கும் சரி தொழிலாள வர்க்கத்தின் கடமையாக இருக்கிறது.” [6]

21. அதீதமான சமூக அசமத்துவம் அமெரிக்காவிற்குள்ளும் மற்றும் உலகமெங்கிலும் வர்க்கப் பிரிவினைகளை மோசமாக்கியுள்ளது. முதலாளித்துவ விரோத மனோநிலை தொழிலாள  வர்க்கத்திற்குள்ளாகத் துரிதமாகப் பெருகுகிறது. மக்கள் அதிருப்தி பெருகுகின்ற காலங்களில்  எப்போதும் செய்வதைப் போல, ஆளும் வர்க்கமானது மக்கள் மீது தனது அரசியல் மற்றும் சித்தாந்த மேலாதிக்கத்தைப் பராமரிப்பதற்கு முனைகின்றது. இதை அது பொழுதுபோக்குத் துறையின்  மூலமாகவும், செய்தி ஊடகங்களின் மூலமாகவும், கல்வி ஸ்தாபனங்களின் மூலமாகவும், மற்றும்  ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய பிற்போக்குத்தனமான இரு-கட்சி ஆட்சிமுறையின்  அரசியல் எந்திரத்தின் மூலமாகவும் மட்டும் செய்யவில்லை. முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களையும்  செல்வாக்கையும் தொழிலாள வர்க்கத்தின் மீது செலுத்துவதற்கு பெருநிறுவன-நிதியியல்  உயரடுக்கிற்கு ஏராளமான “இடது” கட்சிகள், அமைப்புகள் மற்றும் போக்குகளின் அரசியல்  சேவைகளும் அவசியமாக இருக்கின்றன, இவற்றை அது நம்பியிருக்கிறது. வர்க்கப் போராட்டத்தை மட்டுப்படுத்துவதும் அதை முதலாளித்துவத்திற்கு அபாயம் விளைவிக்காத வழிகளில் செலுத்துவதும்  அவற்றின் பாத்திரம். பல தசாப்தங்களாய், தொழிலாள வர்க்கத்தின் நலன்களை அல்லாமல், மாறாக அதைக் காட்டிலும் நடுத்தர வர்க்கத்தின் ஒரு சலுகைபடைத்த அடுக்கின் நலன்களைப்  பிரதிநிதித்துவப்படுத்துபவை தான் “இடது” அரசியலுக்குத் தேர்ச்சியாகின்றன. இந்த வசதிபடைத்த கூட்டத்தின் அரசியல் நோக்குநிலையானது சமகால முதலாளித்துவ சமூகத்தின் செல்வ விநியோக விநோதங்களின் பொருளுக்குள்ளாக சிறந்த வகையில் புரிந்து கொள்ளப்படவும் விளக்கப்படவும் முடியும்.

22. ஒட்டுமொத்தமாய் பார்க்கும் போது, சமூகத்தில் செல்வச் செழிப்பில் மேலே இருக்கும் 10 சதவீதம் பேர் கீழ்மட்டத்தில் இருக்கும் 90 சதவீதம்  பேரைக் காட்டிலும் மிக அதிகப் பாதுகாப்பான மற்றும் வளமான  வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கின்றனர் என்பதை ஏராளமான ஆய்வுகள் எடுத்துக் காட்டியிருக்கின்றன. துல்லியமான சதவீதங்களும், “வெட்டுப்” புள்ளிகளும் நாட்டுக்கு நாடு வேறுபடும் என்பது உண்மையே. ஆனால், குறிப்பாக மிக முன்னேறிய நாடுகளில், மேல்மட்ட 10 சதவீதத்திற்குள்  கணிசமான உயர் நடுத்தர வர்க்கம் இருக்கின்றது. இருப்பினும், இந்த சலுகை படைத்த அடுக்குக்குள்ளேயும் செல்வப் பகிர்வில் கணிசமான பொருத்தமின்மை கிடக்கிறது. அதீத செல்வம் மேல்மட்டத்திலிருக்கும் 1 சதவீதம் பேரிடம் தான் குவிந்திருக்கிறது (அதிலும் குறிப்பாக இந்தக் குழுவின் மிகச் செல்வம் படைத்த தலைமைத் துண்டுகளுக்குள்).  மக்களில் செல்வத்தில் மேலிருக்கும் 10 சதவீதம் பேரின் மொத்த செல்வத்திற்கும் வருடாந்திர வருவாய்க்கும் இடையில் ஒரு வரைபடம் வரைந்தால், சமூக அடுக்கின் மேலிருந்து கீழ் நோக்கி பெரும் சாய்வுடன் அந்தக் கோடு சரிவதை அது காட்டும். பொருளாதார அறிஞர்களான அட்கின்சன், பிகெட்டி மற்றும் சயெஸ் ஆகியோர் தொகுத்தளித்திருக்கும்  தரவின் படி, வீட்டு வருவாயின் மேல்மட்ட 1 சதவீதத்திற்குள் இடம்பெற வேண்டுமாயின் குறைந்தபட்சம் $398,900 வருடாந்திர வருமானம் அவசியமாக இருக்கிறது. ஆனால் மேலேயமைந்த 10 சதவீதத்தில்  இடம்பெற வேண்டுமாயின் வருடாந்திர வருமானம் $109,600 “மட்டும்” போதும். மேல்மட்ட 5 சதவீதத்தில் இடம்பெற வேண்டுமாயின் குறைந்தபட்ச வருடாந்திர வருமானம் $155,000 அவசியம் அப்போதும் அது மேல்மட்ட 1 சதவீதத்தின் ஆகக் கீழமைந்த குறைந்தபட்ச மக்களின்  வருமானத்தில் சுமார் 40 சதவீதம் தான். மக்களில் செல்வம் குவிந்திருக்கும் மேல்மட்ட 0.1 மற்றும் 0.01 மனிதர்களுக்குள்ளாக செல்வமும் வருமானமும் எத்தகைய வெறுப்பூட்டும் அளவில் குவிந்திருக்கின்றன என்பதில் கவனம் செலுத்தினால், மேல்மட்ட 10 சதவீதக் குடும்பங்களின் வருமானங்களுக்குள்ளும் செல்வப் பகிர்வில் எத்தனை பெரிய வித்தியாசங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பது இன்னும் வெளிப்படையாகத் தெரிகிறது. [7]

23. இவ்வாறாக, மக்களில் ஓரளவுக்கு வசதியான பிரிவுகளுக்குள்ளேயே கூட அதிருப்தி நிலவுவதற்கான கணிசமானதொரு அடித்தளம் இருக்கிறது. பெரும் எண்ணிக்கையிலானோர், அதிலும் குறிப்பாக அவர்கள் மேல்மட்ட 5 சதவீதத்திற்குக் கீழே ஏதோவொரு இடத்திற்குத் தள்ளப்படுகின்ற  பட்சத்தில், அவர்கள் பொருளாதார ரீதியாக பலவீனமாய் உணர்கின்றனர். அவர்களது சமூக அந்தஸ்திற்குப் பொருத்தமான ஒரு வீட்டில் வசிப்பதற்கும், அவர்களது பிள்ளைகளின் கல்விக்கெனச் செலவிடுவதற்கும், உணவகங்களில் உணவருந்துவதற்கும், விடுமுறையைக் கழிப்பதற்கும், இன்ன பிறவற்றிற்கும் கணிசமான தொகைகளை அவர்கள் கடன்பெற வேண்டியதாகிறது. இந்த அடுக்கு தான் இவர்களில் தொழில்முறை நிபுணர்களும், ஓரளவுக்கு வெற்றிபெற்ற கல்வியாளர்களும் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகளில் பணியமர்த்தப் பெற்ற நிர்வாகிகளும், நலன்புரி அரசுப் பதவிகளில் இன்னும் எஞ்சியிருப்பவற்றில் நடு அடுக்கு மற்றும் உயரடுக்கில் உள்ளவர்களும் மற்றும் வசதியான மக்களில் மாணவர் இளைஞர்களும் பகுதி இடம் பெற்றுள்ளனர். இறுதி ஆய்வில்  மேல்மட்ட 10 சதவீதத்திற்குள் சமமாக செல்வப் பகிர்விற்கு மேல் தீவிரமான எதனையும் முனையாத சீர்திருத்தவாத “இடது” அல்லது, இன்னும் துல்லியமாய்ச் சொன்னால், “போலி-இடது”  அரசியலின் ஒரு வடிவத்திற்கு களத்தை வழங்குகின்றது.

24. இந்த அடுக்கின் “முதலாளித்துவ-எதிர்ப்பு” பணக்காரர்கள் மீதான பொறாமையால் தான் அதிகமாய் எரியூட்டப்பட்டிருக்கிறதே அன்றி தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்படுவதன் மூலமாக அல்ல தனியார் சொத்துகளை (உற்பத்தி சாதனங்களுக்கான உரிமையின் வடிவிலுள்ள) அழிப்பது அதன்  விருப்பமல்ல, மாறாக அதிலிருந்து பெறும் வருவாயில் அதிகமானதொரு பங்கு கோருவது தான். சோசலிசத்துக்கான தொழிலாள வர்க்கத்தின் பரந்துபட்ட போராட்டத்தின் மூலமாக சமத்துவத்திற்கான  கோரிக்கை எழுப்புவதை நிராகரித்து, நடுத்தர வர்க்க போலி-இடது ஆதிக்க நடவடிக்கையின் பல்வேறு  வடிவங்களை - அதாவது, நிறம், இனம் மற்றும் பாலினத்தின் அடிப்படையில் ஒதுக்கீடுகளைக்  கோருவதென்பது சலுகை படைத்த உயரடுக்கினருக்கு முதலாளித்துவக் கட்டமைப்பிற்குள்ளாகவே தொழில் வாய்ப்புகளுக்கும் பெரும் செல்வத்திற்கும் தனிநபர் அணுகலுக்கான விருப்பத்தையே  பிரதிபலிக்கிறது. தனிநபர் அடையாளம் - குறிப்பாக பாலின அடையாளம் - தொடர்பான  பிரச்சினைகளில் விடாப்பிடிக் கவனமென்பதே தனிநபர் நலன்களை வர்க்கப் பிரச்சினைகளுக்கு மேலாய் இருத்தி ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பை சோசலிசத்துக்கான போராட்டத்தில் இருந்து  பிரிப்பதற்கு தீர்மானத்துடன் இருக்கும் நடுத்தர வர்க்க அமைப்புகளின் குணமாக இருக்கிறது.

25. ”வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டம்” நிச்சயமாக தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளிடம் இருந்து அனுதாபத்தைப் பெற்றது, ஏனென்றால் அப்போராட்டங்களை நடப்பு பொருளாதார அமைவுமுறைக்கான குரோதத்தின் வெளிப்பாடாக தொழிலாள வர்க்கம்  பொருள்விளங்கிக் கொண்டது. ஆயினும், தொழிலாள வர்க்கத்திற்கு முன்நோக்கிய எந்த வழியையும் இந்த இயக்கம் வழங்கவில்லை. “ஆக்கிரமிப்பு” இயக்கம் நடுத்தர வர்க்கத்தின் ஓரளவு வசதியான  பிரிவுகளின் பிரதிநிதிகளால் அரசியல்ரீதியாக ஆதிக்கம் செலுத்தப்பட்டது, அவர்கள் தமது கவலைகளை இவற்றில் வெளிப்படுத்தினர். தனது போராட்டம் ஏதோ வகையில் ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகளில் செல்வாக்கு செலுத்தும் என்ற நம்பிக்கையுடன் இந்த இயக்கம் ஜனநாயகக் கட்சியின் சுற்றுப் பாதையிலேயே சுற்றிக் கொண்டிருந்தது. சோசலிசக் கோரிக்கைகளின் அடிப்படையிலான ஒரு சுயாதீனமான தொழிலாள வர்க்க இயக்கத்தை அது ஒருபோதும் தூண்டுவதற்கு முனையவில்லை. “நாங்கள் 99 சதவீதம் பேர் என்பதை அது சுலோகமாகத் தெரிவு செய்தது ஒரு தற்செயலல்ல. அதன் தலைவர்கள், அமெரிக்க சமூகத்திற்குள் எதிரெதிரான வர்க்கங்களின் அடிப்படையிலான சமூக-பொருளாதார போக்குகளை, குறிப்பாக, கீழிருக்கும் 90 சதவீத மக்கள் முகம் கொடுக்கும் வாழ்நிலைமைகளுடன் ஒப்பிட்டால் அவர்களது சொந்த சலுகைபடைத்த நிலையினை, இன்னும்  துல்லியமாய் வித்தியாசப்படுத்திக் காட்டுவதை ஊக்குவிப்பதற்கு விரும்பவில்லை. நகைமுரணாய், ஆர்ப்பாட்டத் தலைவர்கள் பிரகடனம் செய்த கட்டளையே அவர்களது சொந்த சமூக நோக்குநிலையினை வெளிச்சம் போடுவதாக அமைந்தது. நடுத்தர வர்க்கத்தின் வசதியான  பிரிவுகளுக்கு நிதியத் துறையின் செல்வத்தில் கூடுதலான அணுகல் தேவையாக இருக்கிறது. அதனால் தான் இந்த “வோல் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் என்னும் சுலோகம், வோல் ஸ்ட்ரீட்டின் சர்வாதிகாரத்தைத்  தூக்கியெறிந்து அதன் சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கு அறிவுரை அளிக்கும் ஒரு சோசலிச  வேலைத்திட்டத்தில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டு அமைந்ததாகும்.

26. "வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு” இயக்கமும், முந்தைய (சியாட்டில் மற்றும் பிற நகரங்களில் நடந்த) “உலகமயமாக்க எதிர்ப்பு” ஆர்ப்பாட்டங்களைப் போலவே, ஏராளமான அராஜகவாத-சீர்திருத்தவாதப் போக்குகளுக்குள்ளாக பிரபலமாயிருந்த அரசியல் மற்றும் தத்துவார்த்தக் கருத்தாக்கங்களால் வழிகாட்டப்பட்டன. தளையற்ற தனிநபர்வாதத்தைக் கொண்டாடுகின்ற அராஜகவாதம் நடுத்தர வர்க்கத்திற்குள்ளாக தனக்கு செவிமடுக்கும் நபர்களை எளிதாக அடையாளம் காண்கிறது. ஃபிராங்க்பேர்ட் பள்ளி, பின் நவீனத்துவம், கட்டமைப்பியம் மற்றும் பின் கட்டமைப்பியத்துடன் தொடர்புபட்ட பல்தரப்பட்ட அகநிலைக் கருத்துவாத மற்றும் பகுத்தறிவுக்கொவ்வாத சிந்தனையாளர்களிடம் இருந்து (ஹோர்கெய்மெர், அடோர்னோ, ஃபவுகால்ட், டெரிடா, லியோத்தார்ட், லகான் மற்றும் படியோ போன்றோர்) முன்னுதாரணம் பெறும் இந்தப் போக்குகள் மார்க்சிசத்தின் ஒவ்வொரு அடிப்படையான வேலைத்திட்ட கருத்தாக்கத்தையும், எல்லாவற்றிற்கும் மேல் தொழிலாள வர்க்கத்தின் மையமான புரட்சிகரப் பாத்திரத்தின் மீதான அதன் வலியுறுத்தலை, நிராகரிக்கின்றன. சமகால “பின் அராஜகவாத” பிரதிநிதி ஒருவர் சமீபத்தில் எழுதியதைப் போல,

இந்த அரசியல் வடிவம் மார்க்சிச தொழிலாள-வர்க்கப் போராட்டங்களில் இருந்து வேறுபடுவதாகும்: அது இனியும் பாட்டாளி வர்க்கத்தினை மத்திய அகநிலை அம்ச அடிப்படையாகக் கொண்டதில்லை, எனவே பாரம்பரியமான தொழிலாள வர்க்க அமைப்புகள் இந்தப் போராட்டங்களில் முக்கியமான வழிகளில் பங்குபற்றியிருந்தாலும் கூட, இந்த இயக்கம் இனியும் வர்க்கப் போராட்டம் என்கிற சிவப்பெழுத்தின் கீழ் புரிந்து கொள்ளத்தக்கது அல்ல. அது முதலாளித்துவ-எதிர்ப்பு போராட்டம் என்பதில் சந்தேகமில்லை, என்றாலும் ஒரு மார்க்சிச அர்த்தத்தில் அல்ல. பெரும்பாலும், உலக முதலாளித்துவம் வெறுமனே பொருளாதாரரீதியாக பொருள்விளக்கம் கொள்ளப்படுவதைக் காட்டிலும் அரசியல்ரீதியாக பொருள்விளக்கம் கொள்ளப்படுகின்ற ஒரு திறந்த தொடுஎல்லையாக செயல்படுகிறது, அத்துடன் இது பல்வேறு மனிதர்களால் பல்வேறு வகைகளில் புரிந்து கொள்ளப்படுகிறது. மேலும், அது இனியும் அரசியல் அணிதிரட்டலின், அதாவது மைய ஒழுங்கமைக்கப்பட்ட பரந்த கட்சியின், மார்க்சிச மாதிரியை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கவில்லை, மாறாக, நாம் ஏற்கனவே கண்டிருப்பதைப் போல, இது பாரம்பரிய வகை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நேரடி நடவடிக்கைக்கான இன்னும் புதுமையான வடிவங்கள் ஆகிய இரண்டிலுமே ஈடுபடுகின்ற தளர்வான இணைவுத்தன்மையுற்ற குழுக்கள் மற்றும் பல்தரப்பட்ட அமைப்புகளின் ஒரு “வலைப்பின்னல்” செயலூக்க நிலைக்கு வடிவமளிக்கிறது. [8]

இந்த பின்-அராஜகவாத வேலைத்திட்டத்திலான அவரது விளக்கத்தை சுருங்கக் கூறினால், இத்தத்துவாசிரியர் “இது இனியும் ஒரு ஒற்றை கதையாக்கத்தின், உதாரணமாக தொழிலாள வர்க்க விடுதலை என்பதுடன், பிணைந்துபட்ட ஒரு அரசியல் வடிவம் கிடையாது” என்று அழுத்தந்திருத்தமாய் வலியுறுத்துகிறார். [9]

27. பல்தரப்பட்ட போலி-இடது அமைப்புகளும் அவற்றின் வேலைத்திட்டத்தை நியாயப்படுத்துகின்ற தத்துவாசிரியர்களும் மார்க்சிசத்திற்கும் தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட சோசலிசப் புரட்சி முன்னோக்கிற்கும் ஒரு நச்சுத்தனமான குரோதத்தைக் கொண்டிருக்கின்றனர். ”பிரிவினைவாதம்”, “எதேச்சாதிகாரவாதம்”, ”உயரடுக்குவாதம்” மற்றும் இன்னும் “சர்வாதிபத்தியவாதம்” ஆகியவற்றைக் கண்டிப்பதில் இறங்கி, ஒரு புரட்சிகரக் கட்சியை அபிவிருத்தி செய்வதற்கான அத்தனை முயற்சிகளையும் அவர்கள் தொடர்ந்து கண்டனம் செய்வது, தொழிலாள வர்க்கம், அது தன் சோசலிச நனவை அபிவிருத்தி செய்கின்ற காரணத்தால், நடுத்தர வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கத்தில் இருந்து முறித்துக் கொண்டு சென்று விடுமோ என்ற அவர்களது அச்சத்தை வெளிப்படுத்துவதாய் அமைந்திருக்கிறது.

28. போலி-இடது அமைப்புகள், அவற்றின் ஒட்டுமொத்தத்தில், முதலாளித்துவ அரசியலுக்கு உள்ளமைந்த ஒரு போக்கினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அமெரிக்காவிற்குள், ஜனநாயகக் கட்சி ஒரு “இடது” இருப்பை பராமரிக்க அவசியம் கொண்டிருப்பதான ஒரு நோக்குநிலையின் மூலம் வரையறை செய்யப்பட்டிருக்கும் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (International Socialist Organization) இந்தப் போக்கின் அச்சு அசல் பிரதியாகும். ஆயினும், போலி-இடது என்பது ஒரு சர்வதேச நிகழ்வாய் இருக்கிறது. அமெரிக்க எல்லைகளைக் கடந்து, வர்க்கப் போராட்டம் இன்னும் முன்னேறிய நிலையிலமைந்த இடங்களில், போலி-இடதின் பிற்போக்குத்தனமான பாத்திரமென்பது இன்னும் வெளிப்பட்டதாய் இருக்கிறது. எகிப்தில் ஹோஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பின்னர், புரட்சிகர சோசலிஸ்டுகள் (RS) (அரசியல்ரீதியாக ISO வுடன் இணைந்த அமைப்பு) என்று அழைக்கப்படுபவர்கள் இராணுவத்தின் மீதும் அரசியல் நம்பிக்கையை விரிவுபடுத்திய அதேநேரத்தில் முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்பிற்கும் அனுகூலம் காட்ட விழைந்தனர். “மார்க்ஸ் மற்றும் நபி”!யைக் கலக்கின்ற அடிப்படையில் ஒரு இடது வேலைத்திட்டம் உருவாக்கப்பட முடியும் என்று அவர்களது சக புரட்சிகர சோசலிஸ்டுகளாகிய பிரிட்டிஷ் சகாக்களால் அரங்கிற்குக் கொண்டுவரப்பட்ட ஒரு அபத்தமான கருத்தின் அடிப்படையில் உருவானது தான் இந்த பிற்போக்குத்தனமான நோக்குநிலை. எதிர்பார்க்கக் கூடிய வகையிலேயே, விளைவுகள் பெருந்துன்பகரமானவையாக இருந்திருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் சுயாதீன இயக்கத்தைக் கட்டுவதற்கான அத்தனை முயற்சிகளையும் எதிர்த்து வந்திருக்கின்ற இந்த போலி-இடது அமைப்பு ஜூன் 14, 2012 அன்று எகிப்து இராணுவத்தால் தொடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திற்கு எதிரான ஆட்சி சதி நடவடிக்கைக்கு கொஞ்சமும் தயாரித்திருக்கவில்லை. ஆட்சி சதிக்கு பதிலிறுப்பாய் புரட்சிகர சோசலிஸ்டுகள் விடுத்த ஒரு அறிக்கை சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பின் வலைத் தளத்தில் பதிவிடப்பட்டது. அரசியல் விரக்தியையும் திவால்நிலையையும் பரிதாபகரமான வகையில் ஒப்புக் கொள்வதற்கு நிகராய் அந்த அறிக்கை இருந்தது. முந்தைய மாதங்களில் தான் செய்த தனது சொந்த அரசியல் நடவடிக்கைக்கு எந்த விளக்கத்தையும் அளிக்காமல், புரட்சிகர சோசலிஸ்டுகள் கூறியது:

இன்றைய அபிவிருத்திகள், எதிர்ப்புரட்சிக்கான ஒரு அடியில் விழுத்தும்  வெற்றியாக தோற்றமளிக்கின்ற ஒரு சமயத்தில், புரட்சிகரவாதிகளிடமும், தோழர்களிடமும், சகாக்களிடமும் மற்றும் நண்பர்களிடமும் ஒரு ’இன்றைய நிலைமைகளில் நம்பமுடியா நிலை’ பரவியிருந்ததில் ஆச்சரியம் இருக்க முடியாது. [10]

29. அரசியல் கோழைத்தனத்தின் இத்தகைய வெளிப்பாடுகளை வாசிக்கும் ஒருவர் அதன் ஆசிரியர்களைப் பார்த்து கேட்க விரும்புவதெல்லாம், “கனவான்களே சீமாட்டிகளே, 2011 பிப்ரவரியில் முபாரக் வீழ்ச்சி கண்டதைத் தொடர்ந்து வந்த பல மாதங்களின் சமயத்தில் நீங்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இராணுவம் அதன் எதிர் சதியை நடத்துவதற்கு அனுமதித்த பொறுப்பில் எந்த அளவு பங்கு உங்களுக்கு உரியது என்பது தான் ஆனால் அந்த ஆசிரியர்கள் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லப் போவதில்லை. அவர்கள் எதற்கும் எந்தப் பொறுப்பும் ஏற்றுக் கொள்பவர்களில்லை.

30. கிரீஸில், முதலாளித்துவ அரசியலுக்குள்ளான ஒரு போக்காக போலி-இடதின் பாத்திரம் என்பது சிரிசா (SYRIZA) இன் பாத்திரத்தால் வெளிப்படுகிறது. முன்னாள் ஸ்ராலினிஸ்டுகள், பப்லோவாதிகள் (ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து நீண்ட காலத்திற்கு முன்னரே ஓடியவர்கள்), பல்வேறு “அரசு-முதலாளித்துவ” பிரிவுகள், மற்றும் சுற்றுச்சூழலியல்வாதிகள் ஆகியோர் உட்பட்ட போலி-இடது குழுவாக்கங்களின் ஒரு கூட்டணியான இந்த அமைப்பு, ஐரோப்பிய வங்கிகள் திணித்த சிக்கன நடவடிக்கைகளை அது கண்டித்ததின் அடிப்படையில் பெரும் மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கிறது. ஆனால் SYRIZA அதிகாரத்திற்கு வருகின்ற சாத்தியத்தை முகம் கொடுத்த உடனேயே, அதன் தலைவரான அலெக்சிஸ் சிப்ரஸ் ஜேர்மனிக்கு விரைந்து தனது கட்சிக்கு யூரோ மண்டலத்தில் இருந்து விலகிக் கொள்ளும் எந்த எண்ணமும் இல்லை என்ற உறுதியை வங்கிகளுக்கு அளித்தார். ஐரோப்பிய வங்கிகளின் சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டத்தை மறுபேச்சுவார்த்தை செய்வதற்கு அதிகமாய் எந்த தீவிரத்திற்கும் அது முனைந்திருக்கவில்லை.

31. போலி-இடது போக்குகளின் பிற்போக்குத்தனத் தன்மை குறித்த எந்த கேள்விக்கும், “மனித உரிமைகள்” என்ற மோசடியான பதாகையின் கீழ் ஏகாதிபத்திய நவ-காலனித்துவ நடவடிக்கைகளுக்கு அவை வழங்கியிருக்கக் கூடிய ஆதரவைக் கொண்டு இறுதியானதாக பதிலளிக்கப்படுகிறது. லிபியாவிலான இரத்தம் தோய்ந்த ஏகாதிபத்திய தலையீட்டை ஆதரிக்கின்ற அறிக்கைகள் சர்வதேச பப்லோவாத இயக்கத்தின் வலைத் தளமான International Viewpoint இல் தான் பிரதானமாக வெளியாயின. பல தசாப்தங்களாய் காலனித்துவ ஆட்சியில் சிக்கியிருந்து வந்திருக்கும் நாடுகளின் மீது  நடத்தப்படுகின்ற ஏகாதிபத்திய இராணுவத் தாக்குதல்களுக்கு போலி-இடதுகள் பிற்போக்குத்தனமாய் உற்சாகமூட்டுவதென்பது இப்போது சிரியாவிலும் நடைபெற்று வருகிறது.

32. கார்ல் மார்க்ஸ் சுமார் 160 வருடங்களுக்கு முன் வெளியான தனது மகத்தான ஆரம்பப் படைப்புகளில் ஒன்றில் எழுதினார்: “மனிதர்கள் தங்களது சொந்த வரலாற்றைப் படைக்கிறார்கள், ஆனால் அவர்கள் அதனைத் தம் விருப்பத்திற்கேற்ப செய்து விட முடிவதில்லை; அவர்களாய் தேர்ந்தெடுத்த நிலைமைகளின் கீழும் அதனை நிகழ்த்த முடிவதில்லை, மாறாக நேரடியாக எதிர்கொள்ளப்பட்ட, கொடுக்கப்பட்ட மற்றும் கடந்த காலத்தினால் ஒப்படைக்கப்பட்ட நிலைமைகளின் கீழ் தான் அவர்கள் செய்ய முடிகிறது.” [11] நடப்புக் காலகட்டத்தின் ”நேரடியாக எதிர்கொள்ளப்பட்ட, கொடுக்கப்பட்ட மற்றும் கடந்த காலத்தினால் ஒப்படைக்கப்பட்ட நிலைமைகள்” என்பவை கடந்த நூற்றாண்டின் புரட்சிகள், போர்கள் மற்றும் விஞ்ஞான-தொழில்நுட்ப மாற்றங்களால் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் பரந்த வர்க்கப் போராட்டங்களின் மூலோபாய அனுபவங்கள் கட்டாயம் படிக்கப்பட வேண்டியவை ஆகும். புரட்சிகர இயக்கங்களின் தோல்வியிலும் முதலாளித்துவம் தப்பிப் பிழைத்ததிலும் ஸ்ராலினிசமும், சமூக ஜனநாயகமும், தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் மற்றும் அரசியல் சந்தர்ப்பவாதத்தின் மற்ற வடிவங்களும் ஆற்றிய பாத்திரம் குறித்த ஒரு புரிதலை தொழிலாள வர்க்கத்தின் முன்னேறிய பிரிவுகளும் இளைஞர்களும் பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

33. அதிமுக்கியமான வர்க்கப் போராட்டங்களில் சென்ற மகத்தான காலகட்டம் கடந்து பல தசாப்தங்கள் ஆகி விட்டன என்ற உண்மையானது இத்தகையதொரு கல்விக்கான அவசியத்தை மிக மிக அவசரமானதாகவும் ஆக்குகிறது. உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்கள் கடிவாளமற்ற வர்க்க சமரசத்தை நடைமுறைப்படுத்தி வந்திருப்பதோடு தங்களின் உறுப்பினர்களை பெருநிறுவனங்கள் சுரண்டுவதற்கு வசதி செய்து கொடுப்பதற்கு தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவையாகவும் இருந்து வந்திருக்கின்றதான நிலைமைகளின் கீழ், தொழிலாளர்களின் ஒரு ஒட்டுமொத்தத் தலைமுறைக்கும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் நேரடியாக ஈடுபடுவதற்கான எந்த சந்தர்ப்பமும் வழங்கப்படாமல் மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. வர்க்கப் போராட்டம் நீண்ட காலம் ஒடுக்கப்பட்டு வந்திருப்பதானது தொழிலாளர்களின் அரசியல் நனவு அபிவிருத்தியடைவதை பின்னிழுத்து வந்திருக்கிறது. ஆனால் சமூக மற்றும் அரசியல் தேக்கத்தின் தசாப்தங்களில் வர்க்க நனவில் ஏற்பட்ட வீழ்ச்சி திரும்பவியலாதது என்ற முடிவுக்கு வருவது தவறானதாகும். ஆளும் வர்க்கமானது, முதலாளித்துவ “அமெரிக்க வழி”யின் பிரபலத்தில் நம்பிக்கையுடன் இருந்திருந்தால், பரந்த மக்களின் நனவை நோக்குநிலைபிறழச் செய்வதற்கும் மலைக்கச் செய்வதற்கும் இத்தகைய பரந்து விரிந்த ஆதாரவளங்களை அர்ப்பணித்திருக்காது. “அமெரிக்கக் கனவு” என்பது நகர்ந்து “அமெரிக்க பயங்கரக்கனவு”க்கு வழிவிட்டிருக்கிறது என்ற சமூக யதார்த்தத்தை பிரச்சார எந்திரம் மறைத்து விட முடியாது என்பது அதற்கு முழுமையாக தெரியும்.

34. சமூக இருப்பு தான் சமூக நனவின் அபிவிருத்திக்கான அத்தியாவசிய அடிப்படையை உருவாக்குகிறது. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரம் என்பது, இறுதி ஆய்வில், முதலாளித்துவ உற்பத்தி முறையில் புறநிலையாய் அது அமையப் பெற்றுள்ள இடத்தின் மூலமாகவே தீர்மானிக்கப்படுவதாகும். முதலாளித்துவத்தின் தீவிரமடையும் நெருக்கடி தொழிலாளர்களின் நனவில் மறைந்துள்ள சமூகப் போக்குகளையெல்லாம் தவிர்க்கவியலாமல் மேற்பரப்புக்குக் கொண்டு வந்தாக வேண்டும். ட்ரொட்ஸ்கி விளக்கியதைப் போல, ”விஞ்ஞான சோசலிசம் என்பது, சமூகத்தை கம்யூனிசத் தொடக்கங்களின் மீது மறுகட்டுமானம் செய்வதற்கு பட்டாளி வர்க்கத்திற்கு உள்ளுணர்வுரீதியாகவும் அடிப்படையாகவும் அமைகின்ற உந்துதல்  என்கிற வகையில், அது நனவற்ற வரலாற்று நிகழ்முறையின் நனவான வெளிப்பாடாக இருக்கிறது. இன்று நெருக்கடிகள் மற்றும் போர்களின் சகாப்தத்தில் தொழிலாளர்களின் உளவியலில் அமைந்த இந்த உயிர்ப்பான போக்குகள் எல்லாம் மிகத் துரிதமாக உயிர் பெறுகின்றன.” [12]

35. இந்த “உயிர்ப்புள்ள போக்குகளின்” இருப்பு, சமூக எதிர்ப்பின் வெடிப்பிலும் மேலும் தொழிலாள வர்க்கம் சோசலிச சிந்தனைகளுக்கு செவிமடுப்பதாக இருப்பதிலும் வெளிப்பாடு காணும். ஆனால் இந்தப் போக்குகள் உண்மையான சோசலிச நனவிற்கு வளர்த்தெடுக்கப்படவும் அதிகரிக்கப்படவும் வேண்டும்.

36. தொழிலாள வர்க்கத்தினை நோக்கி உள்நோக்கி திரும்புவதே சோசலிச சமத்துவக் கட்சி முகம் கொடுக்கும் மையமான அரசியல் பணியாகும். நாம் அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு முன்கண்டிராத எழுச்சியை எதிர்பார்க்கிறோம். நமது நோக்குநிலை ஐயத்திற்கு இடமற்று தொழிலாள வர்க்கத்தை நோக்கியதாகும். அந்த மகத்தான சக்திக்குள்ளாகவே நாம் இக்கட்சியை கட்டவிருக்கிறோம். ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலமைந்த தொழிலாள வர்க்கத்தின் பரந்த இயக்கம் மட்டுமே அமெரிக்க ஆளும் வர்க்கத்துடன் கணக்குத் தீர்க்க முடியும். அரசியல் முன்னோக்கு இன்றி, வெற்றியை விடுங்கள், தீவிரமான மற்றும் நெடியதொரு போராட்டமும் கூட சாத்தியமில்லாதது. அந்த அரசியல் முன்னோக்கினை சோசலிச சமத்துவக் கட்சி வழங்க வேண்டும். தனது அணியில் மிகவும் தொலைநோக்குடன் சிந்திக்கத்தக்க மற்றும் சுய-தியாக உணர்வு படைத்த தொழிலாளர்களையும் இளைஞர்களையும் இணைத்துக்கொள்ள அது முனைய வேண்டும். முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பக்கத்திற்கு எந்தவிதத் தயக்கமும் இன்றி வந்திருக்கக் கூடிய நடுத்தரவர்க்க அங்கத்தவர்களை, ஒரு உண்மையான புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில், சோசலிச சமத்துவக் கட்சி வரவேற்கும். இத்தகைய சக்திகள் புரட்சிகர இயக்கத்தின் அபிவிருத்தியில் ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றவியலும், ஆற்றும், ஆனால் அவர்கள் குட்டி-முதலாளித்துவ சூழலில் இருந்து அரசியல்ரீதியாகவும் புத்திஜீவிதரீதியாகவும் முறித்துக் கொண்டிருக்கும் மட்டத்திற்கே அது நிகழும். சோசலிச சமத்துவக் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருக்கக் கூடிய அதன் சக சிந்தனையாளர்களுடன் நெருக்கமாய் அரசியல்ரீதியாய் இணைந்து உழைத்து, கட்சிக்கு வென்றெடுத்த அத்தனை சக்திகளுக்கும் மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாறு மற்றும் தத்துவார்த்த மரபின் அடிப்படையின் மீது கல்வியூட்டும். வர்க்கப் போராட்டம் மற்றும் சோசலிசப் புரட்சியின் சர்வதேசத் தன்மை குறித்த ஒரு ஆழமான புரிதலை அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் முன்னேறிய பிரிவுகளுக்குள்ளாக அது புகட்ட வேண்டும்.

37. ஒட்டுமொத்த மனிதகுலத்தின் எதிர்காலமும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு உண்மையான புரட்சிகர இயக்கம் அபிவிருத்தியுறுவதைச் சார்ந்திருக்கிறது. முதலாளித்துவ நெருக்கடியால் உருவாக்கப்பட்டிருக்கும் முட்டுக்கட்டையில் இருந்து வெளியேறுவதற்கு வேறு எந்த வழியும் கிடையாது. சோசலிச சமத்துவக் கட்சியின் கடமைகளையும் முன்னோக்கையும் சுருக்கமாகக் கூறுகின்ற இச்சமயத்தில், லியோன் ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டத்தில் எழுதியிருக்கும் வார்த்தைகள் அசாதாரணமான வகையில் பொருத்தத்துடன் திகழ்கின்றன:

சோசலிசத்துக்கான வரலாற்று நிலைமைகள் இன்னும் “முதிர்ச்சியடையவில்லை” என்கிற வகையான பேச்சுகள் எல்லாம் அறியாமை அல்லது திட்டமிட்ட ஏமாற்றுவேலையின் விளைபொருளேயாகும். பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான புறநிலையான முன்நிபந்தனைகள் “முதிர்ச்சியடைந்துவிட்டன” என்பது மட்டுமல்ல, கொஞ்சம் அழுகவும் கூடத் தொடங்கி விட்டன. ஒரு சோசலிசப் புரட்சி இல்லையென்றால், அடுத்த வரலாற்றுக் காலகட்டத்தில் மனிதகுலத்தின் ஒட்டுமொத்தக் கலாச்சாரத்தையும் ஒரு பேரழிவு அச்சுறுத்துகிறது. இது பாட்டாளி வர்க்கத்தின், அதாவது பிரதானமாக அதன் புரட்சிகர முன்னணிப் படையின் காலகட்டமாகும். மனிதகுலத்தின் வரலாற்று நெருக்கடி புரட்சிகரத் தலைமையின் நெருக்கடியாகியுள்ளது. [13]

Footnotes:

[1] The Economist, June 9-15, 2012 [back]

[2] The Transitional Program (New York, 1981), p. 1 [back]

[3] Federal Reserve Bulletin, June 2012, p. 4 [back]

[4] Ibid, pp. 17-18 [back]

[5] “The Draft Program of the Communist International,” in The Third International After Lenin (New York, 1996), p. 29 [back]

[6] “A School for Revolutionary Strategy,” in The First Five Years of the Communist International, Volume Two (London, 1974), p. 7 [back]

[7] “Top Incomes in the Long Run of History,” by Anthony B. Atkinson, Thomas Piketty, and Emmanuel Saez (Journal of Economic Literature, 2011, 49:1, pp. 6-7) [back]

[8] Unstable Universalities: Poststructuralism and Radical Politics, by Saul Newman (Manchester and New York, 2007), p. 176 [back]

[9] Ibid, p. 180 [back]

[10] “An Attack on the Revolution,” posted on socialistworker.org [back]

[11] “The 18th Brumaire of Louis Bonaparte,” in Collected Works of Karl Marx and Friedrich Engels, Volume 11 (New York, 1979), p. 103 [back]

[12] “From a Scratch to the Danger of Gangrene,” in In Defense of Marxism (London, 1972), p. 129 [back]

[13] The Transitional Program, op. cit., p. 2 [back]