ஏகாதிபத்தியமும் யூதப் படுகொலையின் அரசியல் பொருளாதாரமும்

Imperialism and the political economy of the Holocaust

WSWS : Tamil : நூலகம்

ஏகாதிபத்தியமும் யூதப் படுகொலையின் அரசியல் பொருளாதாரமும்

மார்க்சிசமும்,
யூத இனவொழிப்பும்

Marxism and the Holocaust

மார்க்சிசமும், யூத இனவொழிப்பும்

By Nick Beams
15 May 2010

Use this version to print | Send feedback
 

இது சான் டிகோ மாகாண பல்கலைக்கழகத்தில் "ஏகாதிபத்தியமும், யூத இன ஒழிப்பின் அரசியல் பொருளாதாரமும்" என்ற தலைப்பில் ஏப்ரல் 29இல் நிக் பீம்ஸால் வழங்கப்பட்ட உரையின் பின்னிணைப்பாகும்.

அந்த உரை இங்கே கீழே தரப்படுகிறது.

1990களின் தொடக்கத்தில் கிழக்கு ஐரோப்பிய ஸ்ராலினிச ஆட்சிகளின் பொறிவும், சோவியத் ஒன்றியத்தின் சிதைவும் முதலாளித்துவ அரசியல் மற்றும் கல்வியியல் வட்டாரங்களில் ஒரு வெற்றிகரமான எழுச்சியலையைக் கண்டது. சோசலிசம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும், மார்க்சிசம் மரணித்துவிட்டது என்றும், வரலாறே கூட முடிவுக்கு வந்துவிட்டது என்றும் இது பார்க்கப்பட்டது. இந்த ஆட்சிகள் சோசலிச ஆட்சிகளே அல்ல. சோவியத் ஒன்றியத்திலிருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவம் அதன் அதிகாரபலத்தைக் கொண்டு பெருந்திரளான மார்க்சிச புத்திஜீவிகளையும், மார்க்சிஸ்டுகளையும் கொன்று குவித்தது. அளவிட்டு பார்த்தால், இந்த படுகொலைகள் ஹிட்லர் நடத்தியதை விட அதிகமாக இருந்த்து. எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தால் தூக்கியெறியப்பட்டால் ஒழிய, ஸ்ராலினிசவாதிகள் முதலாளித்துவத்தை ரஷ்யாவில் மறுபுனருத்தானம் செய்வார்கள் என்பதை 1930களிலேயே கணித்த மார்க்சிஸ்டுகளினதும் முக்கியமாக லியோன் ட்ரொட்ஸ்கியின் கணிப்பு, சிறிதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்த அறியாமை கொண்டாட்ட அலை "இடது" கல்வியியல் மற்றும் மார்க்சிச வட்டாரங்களில், குறிப்பாக யூத இன ஒழிப்பை (Holocaust) ஆராய்ந்தவர்கள் மத்தியில், அதன் பிரதிபலிப்பைக் கண்டது. இந்த பேரழிவிற்கு மார்க்சிசத்தால் எந்த விளக்கத்தையும் அளிக்க முடியாது; உள்ளதை உள்ளபடியே வைத்து, மனிதயின முன்னேற்றத்தின் ஓர் அறிவொளிசார் கண்ணோட்டத்தில், பெருந்திரளான ஐரோப்பிய யூதர்களின் திட்டமிட்ட படுகொலைக்கு மார்க்சிசம் எந்த காரணத்தையும் எடுத்துக்காட்ட முடியாது; இந்த வரலாற்றுரீதியான பேரழிவுக்கு ஒரு சடவாத பகுப்பாய்வை எவ்வாறு வளங்க இயலும்? "இறுதி பகுப்பாய்விலும் கூட"அடிப்படையாக இருந்த பொருளாதார உந்துதல் என்ன? ஒரு வர்க்க பகுப்பாய்வின் அடிப்படையில் யூத இன ஒழிப்பிற்கு விளக்கம் அளிக்க முடியாது. மிக அடிப்படையான ஏதோவொன்று''மனிதயின நிலைமையையும், கொடூரத்தின் திறனையும் பற்றிய ஓர் ஆய்வு'' தேவைப்பட்டது; மார்க்சிசத்தால் அதை வளங்க முடியவில்லை என்று அவர்கள் முறையிட்டார்கள்.

யூத இன ஒழிப்பைப் புரிந்து கொள்வதில், இந்த நிலைப்பாடுகள் மார்க்சிசத்தின் தகுதியின்மையை பிரதிபலிக்கவில்லை. மாறாக பல்வேறு இயந்திரத்தனமான வருணணை செய்தவிதத்தில் எதிர்ப்பு தெரிவித்தவகையில், மார்க்சிசத்தைப் புரிந்துகொள்வதற்கான அந்த எழுத்தாளர்களின் திறமையின்மையையும், ஒருசமயம் முதலாளித்துவ அரசியலை நோக்கி வைக்கப்பட்டிருந்த சோசலிச குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவர்கள் விலகி இருந்தார்கள் என்பதையும் பிரதிபலித்தது. சூழ்நிலையில் உண்டான ஒரு திடீர் திருப்பம் பல புத்திஜீவிகளை பின்னடைய செய்தது. இது முதல்முறையாக நடப்பதல்ல, சந்தேகத்திற்கு இடமின்றி இது இறுதியானதும் அல்ல. மார்க்சிசம் யூத இன ஒழிப்பிற்கான விளக்கமளிப்பதிலிருந்து மட்டும் தவறவில்லை, அத்துடன் வரலாற்றுரீதியான மற்றும் பொருளாதாரரீதியான அடிப்படை நிகழ்ச்சிப்போக்கிலிருந்து சோசலிசம் தோன்றுகிறது என்ற மார்க்சிசத்தின் கருத்தையே கேள்விக்கு உள்ளாக்கிய முக்கிய சம்பவமாக இருக்கிறது என்பதை அவர்கள் வலியுறுத்தி கொண்டிருந்தார்கள். நவீன சமுதாயத்தின் வளர்ச்சி சோசலிசத்தை நோக்கி செல்லாது காட்டுமிராண்டித்தனத்திலும் சென்று முடியலாம் என்பதை யூதர்கள் மீதான ஒழுங்குமயப்படுத்தப்பட்ட இனப்படுகொலை எடுத்துக்காட்டியதாகவும் அவர்கள் கூறினர்.

இந்த பள்ளியைச் சேர்ந்த இரண்டு பிரதிநிதிகளான என்ஜோ டிராவெர்சோ மற்றும் நோர்மன் ஜிராஸ் ஆகியோரின் ஓர் ஆய்வு, இந்த உரையில் இருக்கும் சில அடிப்படை பிரச்சினைகளைத் தெளிவுபடுத்த உதவும். 2001இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில், பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர்கள் கட்சியின் முன்னணி தத்துவவியலாளரான அலெக்ஸ் கலினிகோஸ், "கடந்த சில ஆண்டுகளில் யூத இன ஒழிப்பிற்கு தெளிவாக ஒரு மார்க்சிச பிரதிபலிப்பை அபிவிருத்தி செய்வதில் இந்த இரண்டு எழுத்தாளர்களும் ஒரு முக்கிய பங்களிப்பை அளித்திருப்பதாக" அவர்களை மேற்கோள் காட்டினார்.[1] உண்மையில், விஷயம் இதற்கு எதிரிடையாக இருக்கிறது: மார்க்சிசத்தை அபிவிருத்தி செய்வதற்கு மாறாக, அதை குழிதோண்டி புதைக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்.

1957இல் இத்தாலியில் பிறந்த என்ஜோ டிராவெர்சோ அவருடைய இளம் வயதில், ஒரு "தீவிர இடது" அரசியல் அமைப்பு என்றழைக்கப்பட்டதன் உறுப்பினராக சேர்ந்தார். 1985யில் பிரான்சிற்கு இடம்பெயர்ந்த பின்னர், அவர் புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகத்தின் (Ligue Communiste Revolutionaire) ஓர் உறுப்பினரானார். 1950களின் தொடக்கத்தில் ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து பிரிந்து சென்ற சர்வதேச பப்லோவாத போக்கில் ஒருகாலத்திய தத்துவார்த்த தலைவராக இருந்த காலஞ்சென்ற ஏர்னெஸ்ட் மண்டலின் நன்கறியப்பட்ட சீடராக அவர் இருந்தார். நாஜிகளின் இனப்படுகொலையை புரிந்துகொள்ளல்: மார்க்சிசம் (Understanding the Nazi Genocide: Marxism) என்ற புத்தகத்தில் எழுதிய அவுஸ்விட்சிற்குப் பின்னர், வரலாற்று பகுப்பாய்வு முறையிலும், ஓர் அரசியல் முன்னோக்கின் அடித்தளத்திலும் டிராவெர்சோ மார்க்சிசத்தின் மீதான அவரின் ஆழமான எதிர்ப்புணர்வை தெளிவுபடுத்துகிறார்.

முன்னுரையில் அவர் எழுதுவதாவது: "அடிமை ஒழிப்புக்கும் இனப்படுகொலைக்கும் இடையில், அதன் காயங்களைக் கொண்ட பெரும் உருமாற்றங்களுடன், ஐரோப்பிய யூதர்களின் வரலாற்றை நவீனத்துவத்தின் வெவ்வேறு முகங்களை, ஒருபுறம் அதன் நம்பிக்கைகள் மற்றும் தாராளவாத விருப்பங்கள், மற்றொருபுறம் அதன் அழிக்கும் சக்திகள் ஆகியவற்றை ஆய்வுசெய்வதற்கான ஓர் அருமையான ஆய்வகமாக காணலாம். இந்த வரலாறு மார்க்சிசம் உட்பட, அறிவொளியின் தெளிவின்மை மற்றும் அதன் மரபுரிமைகள் ஆகிய இரண்டையும் எடுத்துக்காட்டுவதுடன், நவீன நாகரீகம் கையிலெடுக்கக்கூடிய காட்டுமிராண்டித்தனத்தின் உச்சபட்ச வடிவங்களையும் எடுத்துக்காட்டுகிறது."[2]

யூத மக்களுக்கு எதிரான குற்றங்களுக்கு (யூத மக்களின் மீது நடத்தப்பட்ட மனிதயினத்திற்கு எதிரான குற்றங்களை ஒருவர் குறிப்பிடலாம்) இந்த அணுகுமுறையில் "நவீனத்துவம்" பொறுப்பாக்கப்பட்டிருப்பது ஒரு மிக முக்கிய அரசியல் பாத்திரத்தை வகிக்கிறது. இது அரசியல் சக்திகளையும், யாருடைய நலன்களுக்காக அவர்கள் செயல்பட்டார்களோ உண்மையில் இதற்கு பொறுப்பான அந்த சமூக வர்க்கங்களையும் மறைத்து வைக்கிறது. நவீனத்துவம் ஒரு வெற்று அருவமாக இருக்கிறது. அது வர்க்க பிளவினாலும், வர்க்க முரண்பாடுகளாலும் உடைக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் யூதர்களின் அடிமை ஒழிப்பைப் பொறுத்தவரையில், பிரெஞ்சு புரட்சியின் காலக்கட்டத்திலிருந்தே, பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் மூன்று கால்பகுதிகளில், மேற்கு ஐரோப்பாவின் யூதர்கள் பல்வேறு திருப்பங்களோடும், மாற்றங்களோடும் அவர்களின் ஜனநாயக மற்றும் குடியுரிமைகளில் சிறிது முன்னேற்றத்தை அனுபவித்ததை ஐரோப்பாவின் வரலாறு காட்டுகின்றது. ஆனால் நூற்றாண்டின் இறுதி காலாண்டில் இருந்து, 1873இல் தொடங்கிய பாரிய பொருளாதார மந்தநிலையின் அதிகரிப்புடனும், ஏகாதிபத்தியம் மற்றும் இராணுவவாதத்தின் எழுச்சியுடனும் இணைந்து, நம்மால் இதில் ஒரு தெளிவான மாற்றத்தைக் காணமுடியும். அதாவது மத கோட்பாடுகளின் மீதல்லாமல் இன மற்றும் தேசியவாதத்தின் அடிப்படையில், ஒரு புதிய மற்றும் "நவீன" யூத எதிர்ப்பின் (anti-Semitism) எழுச்சியைக் காணலாம். அடிமை ஒழிப்பின் ஆரம்ப காலகட்டம், பண்டைய ஆட்சியின் பழைய கட்டுப்பாடுகளை துடைத்தெறிந்த தாராளவாத முதலாளித்துவத்தின் வளர்ந்து கொண்டிருந்த அதிகாரத்துடன் இணைந்திருந்தது. புதிய யூதஎதிர்ப்பானது முதலாளித்துவம் எதிர்கொண்டு வந்த சூழ்நிலையில் இருந்த மாற்றங்களோடு இணைந்திருந்தது. அதாவது மேலெழுந்து வந்த தொழிலாளர்களின் போராட்டம் மற்றும் மார்க்சிச இயக்கத்தின் வளர்ச்சியில் அதற்கிருந்த ஆழமான பயத்தின் மற்றும் விரோதத்தின் ஒரு பிரதிபலிப்பாக இருந்தது. யூதர்களின் உரிமையை பாதுகாப்பது அதிகரித்தவகையில் சோசலிச, தொழிலாளர் இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டது.

யூத இன ஒழிப்பிற்கு "நவீனத்துவத்தை" (modernity) குற்றம்சாட்டுவது தான் டிராவெர்சோ பகுப்பாய்வின் முக்கிய கொள்கையாக இருக்கிறது. 60ஆம் ஆண்டு சுதந்திரதினத்தன்று, பெப்ரவரி 15, 2005இல், Le Monde Diplomatique இல் வெளியான அவுஸ்விட்ஸ்-பீர்கெனோ முகாம்கள் விடுதலை செய்யப்பட்ட ஒரு கட்டுரையில், அவர் நாஜிகளின் எரிச்சலூட்டும் தேசியவாதத்தையும், உயிரியியல்ரீதியான இனவாதத்தையும் குறிப்பிட்டுக் காட்டுகிறார். முன்னோர்கள் "ஏகாதிபத்திய கலாச்சாரத்திலும், பழக்கத்திலும் தோன்றி இருந்தார்கள். உண்மையில் ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் ஏனைய பிற பெரிய சக்திகள் கொண்டிருந்த காலனித்துவ ஆதிக்கம் போன்றே பழைய உலகிற்குச் செல்வதை நடைமுறைப்படுத்துவதாகவே அந்த உயிர்வாழ்க்கைக்கான இடம் (Lebensraum- நாஜிகளின் கீழ் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் கிழக்கு நோக்கிய ஆக்கிரமிப்பு கொள்கையை குறிப்பிடும் பதம்) இருந்தது. மேலும் 'சோவியத் ஒன்றியத்தின் அழிவும், யூதர்களின் இன அழிப்பு முகாம்களும் இந்த ஒரே யுத்தத்தின் ஒன்றுகலக்கப்பட்ட துணைத்திட்டங்களாகவே இருந்தன" என்று குறிப்பிடுகிறார்.

ஆனால் சுமார் 1,700 வார்த்தைகளைக் கொண்ட ஒரு கட்டுரையில், 'முதலாளித்துவம்' என்ற வார்த்தை ஒருமுறை கூட காணப்படவில்லை. நவீன உலகின் வரலாறிலும், கலாச்சாரத்திலும், தொழில்நுட்பத்திலும் மற்றும் அமைப்பு, உற்பத்தி, அதிகாரம் ஆகிய நவீன வடிவங்களிலும் நாஜிசம் மிக ஆழமாக வேரூன்றி இருந்தது" என்று அவர் எழுதுகிறார் .

டிராவெர்சோவைப் பொறுத்தவரையில், எவ்விதமான வர்க்க பகுப்பாய்வும் ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட்டுவிட வேண்டும்: "இன வெறுப்பை மட்டுமே மறைந்திருக்கும் ஒரே நோக்கமாக கொண்டு, பொருளாதாரம், அரசியல் அல்லது இராணுவ கருத்துக்களை கணக்கில் எடுக்காமல் நடத்தப்பட்டிருக்கும் ஒரு படுகொலையை அவுஸ்விட்சில் நம்மால் பார்க்க முடிகிறது." [3]

தம்முடைய ஆரம்பகால எழுத்துக்களில் அதே புள்ளியை மிகவும் விரிவார்ந்த வடிவத்தில் குறிப்பிட்டு, டிராவெர்சோ எழுதியதாவது: "அறுபதுகளில் இருந்தே சில மார்க்சிச வரலாற்றாளர்கள், தேசிய சோசலிச அமைப்புமுறையின் அடித்தளத்தில் தங்கியிருந்த ஓர் உள்ளார்ந்த பொருளாதார பகுத்தறிவார்ந்த கருத்தை விமர்சித்துக் கொண்டிருந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும். ரிம் மேஷனைப் பொறுத்தவரையில், 'அரசியலின் தலைமைச்சிறப்பு' என்ற வார்த்தைகளில் மட்டுமே நாஜி அமைப்புமுறையின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும், அடிப்படை நடவடிக்கைகளையும் விளக்க முடியும். எவ்வாறிருப்பினும், பொதுவாக ஆற்றல்மிக்க தேசிய சோசலிசத்தின் இந்த அர்த்தப்படுத்தல், ஏதோவொரு வகையில் பிரச்சினைக்குரியதாக தோன்றினால், யூத இனவொழிப்பின் வேர்களை எட்டுவதற்குரிய வளிவகைகளாக, 'சடவாத' விளக்கங்களைக் காட்டிலும் மிக பயனுள்ளதாக அது அமைகிறது. வங்கியாளராகவும், கடன்அளிப்பவராகவும், மற்றும் மக்களை உறிஞ்சுபவராகவும் கூறப்பட்ட கட்டு்க்கதைகளில் அடித்தளமாக கொண்ட (இது கடந்தகாலங்களில் பல அரசாங்கங்களால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை யூத எதிர்ப்பு) மரபுரீதியான பொருளாதார யூத எதிர்ப்பானது, ஜாரிச (Czarist) சாம்ராஜ்ஜியத்தின் யூத படுகொலைக்கு இட்டுச் செல்லக்கூடும். ஆனால் ஓர் அரசால் ஒழுங்கமைக்கப்பட்ட  இயந்திரரீதியான படுகொலையாக அது மாற்றப்படாது. யூத இனப்படுகொலையை ஆராயும் வரலாற்றாளர்களை நிலைகுலைய வைக்கும் ஓர் ஆக்கக்கூறாக இருப்பது, முக்கியமாக, அதன் பொருளாதார எதிர்ப்பு தன்மைதான். யுத்தகால நிலைமைகளில், ஒரு நிர்வாக அமைப்புமுறையை, போக்குவரத்து வலையமைப்பை, இனவழிப்பு முகாம்களை, தொழில்துறையில் இன்னும் சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டிய மனித மற்றும் சடவாத ஆதாரங்களைப் பயன்படுத்தி, ஆறு மில்லியன் ஆண்களையும், பெண்களையும், வயதானவர்களையும், சிறுவர்களையும் கொல்லவும், யுத்தக் களங்களில் தொடர்ந்து வெறுமையாக்கவும் ஓர் ஆட்சிக்கான பொருளாதார பகுத்தறிவு எங்கிருந்து வந்தது? [4]   

இதுபோன்ற அறிக்கைகளை மிகவும் குறுகிய கண்ணோட்டத்தில் பார்த்தால் உண்மை போல தெரியும். ஆனால் அதன் கட்டமைப்பைப் பரந்துபட்ட வகையில் பார்க்க வேண்டும். யூதர்களின் இனப்படுகொலையும், அவுஸ்விட்ஜின் உருவாக்கமும், ஐரோப்பாவில் ஒரு ஜேர்மனிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க, நாஜி ஆட்சியின் உந்துதலால் வெளிப்பட்டது. யூதர்கள் சிறப்பு பெற்றிருந்ததாலும், அவர்களின் நீண்டகாலம் அங்கே இருப்பு கொண்டிருந்ததாலும், அவர்கள் எதிர்தரப்பின் ஒரு முக்கிய ஆதாரமாக இருந்ததாலும், ஜேர்மன் ஆக்கிரமிப்பில் இருந்த பகுதிகளில் இருந்து யூதர்களை வெளியேற்ற வேண்டும் என்பதே இந்த முன்னோக்கின் முக்கிய உட்கூறாக இருந்தது. உயிர்வாழ்க்கைக்கான இடத்தை (Lebensraum) ஏற்படுத்துவதற்கான உந்துசக்தியின் ஒரு விளைபொருளாக அவுஸ்விட்ஸ் இருந்தது.

உலக சந்தையின் பொறிவையும், அமெரிக்க பொருளாதார ஆதிக்கத்தின் எழுச்சியையும் ஜேர்மன் முதலாளித்துவம் தாண்டி வர வேண்டி இருந்ததால், அது எதிர்கொண்டிருந்த நெருக்கடியில் வேரூன்றி இருந்த மிக திட்டமிட்ட பொருளாதார நோக்கங்களை உயிர்வாழ்க்கைக்கான இடம் கொண்டிருந்தது.

அவருடைய சில கட்டுரைகள் மார்க்சிச மரபின் மீது 'மிகவும் கடுமையான' விமர்சனங்களைக் கொண்டிருந்தன என்று நாஜி இனப்படுகொலையினை விளங்கிக்கொள்ளல் (Understanding the Nazi Genocide) என்ற அவருடைய புத்தகத்தை அறிமுகப்படுத்தி பேசுகையில் டிராவெர்சோ குறிப்பிட்டார்: 'தத்துவியலாளர்களின் நிலைநோக்கு என்னவாக இருந்தாலும், மார்க்சின் சிந்தனையோடு தங்களை அடையாளம் காணும் அவர்களுக்கு அவுஸ்விட்ஸ் ஒரு 'கடுஞ்சோதனையாக' முன்னால் வந்து நிற்கின்றது. முதலாவதாக பார்த்தால், நவீனகாலத்தின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் விடுதலை சிந்தனையின் விறுவிறுப்பான கருத்துக்களாக இருக்கும் மார்க்சிசத்தின் தகுதியின்மை, பின்னர் யூத படுகொலையைப் புரிந்து கொள்ள, இருபதாம் நூற்றாண்டு சவால்களுக்கு அது அளிக்கும் பொருத்தமான பதில்கள் பெரும் சந்தேகத்தை எழுப்புகின்றன."என அவர் குறிப்பிடுகின்றார் [5]

முதலாவதாக, இதுவொரு முற்றிலுமான திரிபுபடுத்தல்வாதம். முதன்முதலில் இடது எதிர்ப்பு என்ற வடிவத்திலும், பின்னர் நான்காம் அகிலம் என்ற வடிவத்திலும் லியோன் ட்ரொட்ஸ்கியால் முன்னெடுக்கப்பட்ட மார்க்சிச இயக்கம், நாஜி வெற்றியின் விளைவுகளைக் குறித்து எச்சரித்ததுடன், அதைத் தடுக்கவும் போராடியது. பேரழிவுமிக்க ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் (KPD) கொள்கைகள் மற்றும் ஸ்ராலினிச தலைமையிலான சர்வதேச அகிலத்தை தூக்கி எறிய போராடியும் வந்தது. நாஜி அரசாங்கத்தின் யூதஎதிர்ப்பு ஆழமடைந்த போதும், முக்கிய முதலாளித்துவ நாடுகள் யூத அகதிகளுக்கு அவர்களின் கதவுகளை மூடிய போதும், ஐரோப்பிய யூதர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் அபாயங்கள் குறித்து ட்ரொட்ஸ்கி எச்சரித்தார்.

டிசம்பர் 1938இல் அமெரிக்க யூதர்களுக்கான அறைகூவல் என்பதில் அவர் எழுதியதாவது: "எதிர்காலத்தில் உலக யுத்தம் வெடிக்கும் போது யூதர்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பதை எவ்வித சிரமமும் இல்லாமல் எளிதாக ஊகிக்கலாம். ஆனால் யுத்தமே இல்லாமலும் கூட, அடுத்தக்கட்ட நிகழ்வின் உலக பிரதிபலிப்பு, யூதர்களின் உடலியல்ரீதியான இனஅழிப்பின் நிச்சயத்தன்மையைக் குறிப்பிட்டுக்க்காட்டுகிறது ." 

மே 1940இல் பிரசுரிக்கப்பட்ட அவரின் முக்கிய இறுதி எழுத்துக்களில் ஒன்றான நான்காம் அகிலமும் ஏகாதிபத்தியமும், யுத்தமும் என்ற அறிக்கையில், ட்ரொட்ஸ்கி யூதர்கள் எதிர்கொண்டிருக்கும் சூழ்நிலைக்கு மீண்டும் திரும்பி இருந்தார்: "அதன் எழுச்சி சகாப்தத்தில், முதலாளித்துவம் யூத மக்களை குடியிருப்புகளில் (ghetto) இருந்து வெளியே எடுத்து, அதன் வர்த்தக விரிவாக்கத்தில் அவர்களைப் பயன்படுத்தியது. இன்று வீழ்ச்சியடைந்து வரும் முதலாளித்துவம் அதன் அனைத்து துளைகளில் இருந்தும் யூத மக்களை நசுக்க போராடி வருகிறது. உலகில் வாழும் இரண்டு பில்லியன் மக்களில் பதினேழு மில்லியன் மக்கள், அதாவது, ஒரு சதவீதத்திற்கு குறைவானவர்களுக்கு இந்த பூமியில் வாழ இடமே இல்லை! மனிதனின் வானத்தையும் அத்துடன் பூமியையும் வெற்றி கொண்டிருக்கும் அற்புதமான தொழில்நுட்பங்களும், நிலங்களும் பரந்த விரிந்திருந்தாலும் கூட, முதலாளித்துவம் நம்முடைய இந்த பூமியை ஓர் மோசமான சிறைகூடமாக மாற்றி நிர்வகித்து வருகிறது. ..."[6]

டிராவெர்சோவின் கண்ணோட்டம் கடந்த நான்கு தசாப்தங்களின் நிகழ்வுப்போக்குகளோடு இணைந்து இருக்கிறது. 1960கள் மற்றும் 1970களின் பிற்பகுதியில் தீவிரமயப்பட்டு, பிந்தைய காலக்கட்டத்தில் அவநம்பிக்கையடைந்து, பின்னர் தம்முடைய பிரச்சினைகள் மார்க்சிசத்தின் "தோல்விகளில்" தங்கியிருக்கிறது என்பதைக் கண்டறிய முயன்ற  புத்திஜீவிகளில் டிராவெர்சோ தனியாக இல்லை.

டிராவெர்சோ அவருடைய பரிணாமத்தை விளக்கி எழுதுகையில்: "வியட்நாம் அல்லது இலத்தீன் அமெரிக்காவில் இருந்ததைப் போல ஐரோப்பாவிலும் புரட்சிக்கான சாத்தியக்கூறுகள் சூழ்ந்த காலகட்டத்தில் நான் வாழ்ந்து கொண்டிருப்பதாக உணர்ந்த காலகட்டமான 1970களின் தொடக்கத்தில் நான் இத்தாலியில் அரசியலிலும், புத்திஜீவித உலகிலும் என்னுடைய முதலடியை எடுத்து வைத்தேன். இருபதாம் நூற்றாண்டில் காட்டுமிராண்டித்தனம் தான் செல்வாக்கு பெற்றிருக்கிறது என்பதை மிக சமீபத்தில் தான் நான் புரிந்து கொண்டேன். இது என்னுடைய நம்பிக்கைகளையோ அல்லது என்னுடைய பொறுப்புகளையோ கைவிட என்னை இட்டுச் செல்லவில்லை. மாறாக அவற்றின் எல்லைகளை திருத்தியமைத்துக்கொள்ளவே என்னை அழைத்துச் செல்கின்றன. காட்டுமிராண்டித்தனமிக்க காலகட்டத்தில் வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வு உலகை மேலும் மேலும் ஆக்கபூர்வமாக மாற்றுவதற்கான பணியைச் செய்கிறது என்றால், இந்த மாற்றம் வரலாற்றோடு 'ஒத்து போகாது' என்பதையே அது எடுத்துக்காட்டுகிறது. மாறாக அது தற்போதைய போக்கிற்கு எதிராகத்தான் போகும். இந்த அணுகுமுறை கடந்தகாலத்தைப் பற்றிய என்னுடைய படிப்பினையை மாற்றியது."[7]

இங்குதான் அவநம்பிக்கைகொண்ட ஒரு தீவிரவாதியின்  கண்ணோட்டம் இருக்கிறது: நான் புரட்சியை எதிர்பார்த்தேன், ஆனால் அது வரவில்லை. ஆனால் அது ஏன் நிகழவில்லை என்று ஆராய்வதற்கு மாறாக, (அதற்கு அவர் சார்ந்திருந்த ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையிலான பப்லோவாத போக்கு உட்பட தொழிலாள வர்க்கத்தின் பல்வேறு தலைமைகளின் பாத்திரத்தை ஆராய வேண்டிய தேவை இருக்கிறது) இப்போதைய சகாப்தம் காட்டுமிராண்டிதனத்தால் நிரம்பி இருக்கிறது, இதை உணரமுடியாமல் மார்க்சிசம் தவறாக இருக்கிறது என்று டிராவெர்ஸோ தீர்மானிக்கிறார். சோசலிசத்திற்கான அவரின் பொறுப்புக்களை அவர் ஒத்துகொள்கிறார்; ஆனால் உலகின் மாற்றம் "தற்போதிருப்பதற்கு எதிராக" மட்டும் தான் நிகழும் என்கிறார். இது எதைக் காட்டுகிறது என்றால், சோசலிச மாற்றம் உண்மையில் ஒரு கற்பனாவாத முன்னோக்கிற்கான போராட்டம் என்பதுடன், முதலாளித்துவ வரலாற்றுரீதியான அபிவிருத்திக்குள் அதற்கான புறநிலை அடித்தளம் காணப்படமுடியாது என அர்த்தப்படுத்துகின்றது

டிராவெர்சோவைப் பொறுத்த வரையில் இனஅழிப்பு முகாம்கள் முற்றிலுமாக 'பகுத்தறிவுக்குரியவை', "விஞ்ஞானபூர்வமானவை", "நவீன காலத்திற்கேற்றவையாக" இருக்கின்றன. தலைசிறந்த பகுத்தறிவான முறைக்கும் (முகாம் அமைப்புமுறை), அதன் முடிவின் முற்றான பகுத்தறிவின்மைக்கும் இடையில் இருபதாம் நூற்றாண்டினை குணாதிசயப்படுத்திய திருமணத்தை அவுஸ்விட்ஸ் இல் நடத்தி வைத்தார்." அதாவது அவுஸ்விட்ஸ் "நவீன சமுதாயத்திற்குள் மறைக்கப்பட்ட சாத்தியக்கூறுகளை" வெளிப்படுத்திக் காட்டுகிறார்.

ஆனால் "நவீன சமுதாயம்" ஒரு சமூக கட்டமைப்பை, அதாவது அதுவொரு வர்க்க சமூகத்தைக் கொண்டிருக்கிறது. உற்பத்தியாளர்கள் தாங்கள் உயிர்வாழ்வதற்கு தங்களின் உழைப்பு சக்தியை உற்பத்தி சாதனங்களாக உரிமையாளர்களுக்கு விற்கும் முதலாளித்துவ சமூக உறவுகளின்கீழ் உழைப்பு நிகழ்போக்கினூடாக உபரிமதிப்பின் திரட்சிக்காக மனித உயிர்கள் தீர்த்துக்கட்டுவதற்கான கருவிகளாக கையாளப்படுகிறார்கள். முதலாளித்துவம் மனித வாழ்க்கை மற்றும் நாகரீகத்தைக் பேணுவதற்கு அவசியமான உற்பத்தியை அடிப்படையாக கொண்ட சமூக உறவுகளின் ஓர் அமைப்புமுறையில் தங்கியுள்ளது. இதில் மனிதர்களின் தேவைக்காக உற்பத்தி செய்யப்படுவதில்லை, மாறாக மூலதனத்தின் தர்க்கத்திற்கேற்ப செய்யப்படுகிறது. உற்பத்தி சாதனங்களில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கும் மனித உயிர்களின்மீது மூலதனம் ஆதிக்கம் செலுத்துகிறது. மூலதனத்தின் தர்க்கம் அவர்களின் வாழ்க்கையிலிருந்து அதைக் கோருகிறது. பகுத்தறிவின்மை என்பது இலாப அமைப்புமுறையின் அடிப்படை கட்டமைப்பிற்குள்ளேயே அமைந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, இந்த அமைப்புமுறையில், அனைத்து மனித முன்னேற்றத்தின் அடிப்படையாக இருக்கும் உழைப்பின் உற்பத்தி அதிகமானால் அது இலாப விகிதத்தில் வீழ்ச்சியைக் கொண்டு வரும். இது பொருளாதார வீழ்ச்சிக்கு இட்டுச்செல்லும் பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை மற்றும் இறுதியாக யுத்தத்தை விளைவாக கொண்டு வருகிறது.

ஏனையவர்களைப் போலவே, யூத இன அழிப்பின் பிரத்யேக தன்மையை டிராவொர்சோவும் வலியுறுத்துகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, அது அதன் இயல்பான சூழ்நிலைகளில் இருந்து உருவாகிறது; அவ்வாறான இயல்பில் அதற்கு முன்னால் ஒருபோதும் உருவானதில்லை மற்றும் துல்லியமான அதே வடிவத்தில் மீண்டும் உருவாகப் போவதும் இல்லை, ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுகளும் தனித்தனியானவை என்கிறார். இந்த மட்டத்தில் எடுத்துக்கொள்வோமேயானால், அந்த குற்றச்சாட்டு முற்றிலுமாக முக்கியத்துவம் இழந்துவிடுகிறது. ஆனால் இந்த கண்ணோட்டத்தின் ஆதாரவாளர்கள் மேலும் கூற விரும்புகிறார்கள். ஒரு மிக கொடூர சம்பவமான யூத இனவொழிப்பு, மார்க்சிசம் உட்பட வரலாற்றுரீதியான பகுப்பாய்வு முறைகளுக்கும் அப்பாற்பட்டது என்று வலியுறுத்துவதே அவர்களின் நோக்கம்.

யூத இனவொழிப்பின் ஊகிக்க முடியாத வன்முறை, ஜேர்மன் மற்றும் உலக முதலாளித்துவத்தின் வரலாற்றுரீதியான நெருக்கடியில் வேரூன்றி இருந்த பின்வரும் இரண்டு நிகழ்முறைகளின் ஒருங்கிணைப்பிலிருந்து எழுந்தது என்று நாம் இந்த  உரையின் எல்லைக்குள் எடுத்துக்காட்டியிருந்தோம். ஒன்று அதுவரையில் ஆபிரிக்காவிலும், ஆசியாவிலும் பயன்படுத்தப்பட்டு வந்த முறைகள் ஐரோப்பா கண்டத்திற்கும் மாற்றப்பட்ட சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான காலனித்துவ யுத்தம், மற்றொன்று 1917 அக்டோபர் புரட்சியால் உருவாக்கப்பட்ட சொத்துடமை உறவுகளை மாற்றும் நோக்கத்தைகொண்ட சமூக எதிர்-புரட்சி.

டிராவொர்சோவைப் பொறுத்தவரையில்: "எவ்வாறிருப்பினும், யூத படுகொலையின் வரலாற்றுரீதியான தனித்துவம் இனவொழிப்பு முகாம் அமைப்புமுறையில் தங்கியில்லை. மாறாக இனத்துடைப்பில் இருந்தது. நவீன தொழில்நுட்பத்துடன் இன உயிரியியல் ஒருங்கிணைப்பின் விளைவாக அவுஸ்விட்ஸ் இல் இருந்தது. இது ஒரு உண்மையான நாகரீகத்தின் உடைவாக இருந்தது. இதுவரையில் இந்த பூமியில் மனிதயினத்தின் இருப்பு அடித்தளமாககொண்ட அடிப்படை மனித ஐக்கியத்தை கிழத்தெறிந்தது. [8]

யூத இனவொழிப்பை வரலாற்றுரீதியான நிகழ்ச்சிப்போக்கில் இருந்து விலக்கி வைக்க டிராவொர்சோ விரும்புகிறார். பெருந்திரளான மக்களைப் படுகொலை செய்ய இட்டுச் சென்ற, நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய இன உயிரியியல் ஒருங்கிணைப்பானது, ஹிட்லர் மற்றும் நாஜிகளுடன் தொடங்கவில்லை. காலனித்துவத்தை எதிர்த்த ஆயிரக்கணக்கான மக்களை அழித்துவிடச் செய்ய மக்சிம் துப்பாக்கியை (Maxim gun) பயன்படுத்திய போது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிந்தைய ஆண்டுகளில் அதன் ஆரம்பம் அரும்பி இருக்கிறது. 1898ம் ஆண்டு செப்டம்பர் 2, காலை 11.30க்கு சூடானில் கார்டௌம்மிற்கு அருகில், ஓம்துர்மேன் யுத்தகளத்தில் பிரிட்டிஷ் துருப்புகளின் மேஜர்-ஜெனரல் (பின்னர் லார்ட் பதவியில் இருத்தப்பட்டார்) கிட்ச்னர் தலைமையில், பிரிட்டிஷ் துருப்புகளை எதிர்த்த சுமார் 11,000 மாஹ்தியவாதிகள் கொல்லப்பட்ட போதும், 16,000 பேர் காயமடைந்த போது "நல்ல துடைத்துக்கட்டல்" எதிரிகளுக்கு வளங்கப்பட்டிருந்தது என்று குறிப்பிட்டபோது இந்த "அடிப்படை மனிதயின ஐக்கியத்தின் பிணைப்பு" எங்கே இருந்தது என்று ஒருவர் கேட்கலாம்.

அந்த படுகொலையில் ஒரு படையாளனாகவும், பத்திரிகையாளராகவும் பங்கெடுத்த வின்ஸ்டன் சேர்ச்சில் பின்னர் எழுதுகையில், "இதுதான் காட்டுமிராண்டிகள் மீது விஞ்ஞான ஆயுதங்கள் மிகமுக்கியமான வெற்றி கொண்ட அடையாளச்செய்தி". "ஐந்து மணிநேரத்திற்குள்ளாகவே ஒரு நவீன ஐரோப்பிய சக்திக்கு எதிராக இதுவரை தோன்றியிராத வலிமை வாய்ந்த மற்றும் சிறந்த ஆயுதமேந்திய கடுமையான இராணுவம் எவ்வித சிரமும் இல்லாமல், ஒப்பீட்டளவில் குறைந்த அபாயங்களுடன், வெற்றியாளர்களுக்கு மிக குறைந்த இழப்புடன் அழிக்கப்பட்டு, கலைக்கப்பட்டது." [9]

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் தென்மேற்கு ஆபிரிக்காவின் ஹிரேரோ மக்களுக்கு எதிராக ஜேர்மன் ஏகாதிபத்தியத்தால் நடத்தப்பட்ட கொடூரமான சம்பவத்தில் "அடிப்படை மனிதயின ஐக்கியத்தின் பிணைப்பு" எங்கே இருக்கிறது?. 1904 அக்டோபர் 2ல், வாட்டர்பேர்க் யுத்தத்திற்குப் பின்னர், ஹெரேரோகள் தப்பியோட முயற்சித்த போது, ஜேர்மன் துருப்புகளின் தலைவர் ஜெனரல் லோதர் வோன் திரோதா ஓர் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்: "ஹெரேரோ மக்கள்.... இந்த நிலத்தை விட்டு வெளியேற வேண்டும். அந்த மக்கள் அவ்வாறு செய்யவில்லை என்றால், குரூட் ரோஹ்ரைக் (பீரங்கி) கொண்டு நான் அவர்களைக் கட்டாயமாக வெளியேற்ற வேண்டியிருக்கும். ஜேர்மன் எல்லைகளுக்குள் இருக்கும் ஒவ்வொரு ஹெரேரோவும், துப்பாக்கி வைத்திருந்தாலும், வைத்திருக்காவிட்டாலும், மாட்டுப் பண்ணையை வைத்திருந்தாலும், வைத்திருக்காவிட்டாலும் கூட சுட்டு கொல்லப்படுவார். பெண்களையும், குழந்தைகளையும் என்னால் ஏற்று கொள்ள முடியாது. அவர்களை அவர்கள் மக்களிருக்கும் இடத்திற்கு விரட்டுவேன் அல்லது அவர்களையும் சுட்டு கொல்லுவேன்."

"சுட்டுக் கொல்லப்படாதவர்கள் பாலைவனத்திற்கு விரட்டப்பட்டு, அங்கு ஆயிரக்கணக்கானவர்கள் தாகத்தால் இறந்துபோனார்கள். உத்தியோகபூர்வ அறிக்கையின்படி: "அரைகுறை உயிருடன் விடப்பட்ட வேட்டையாடப்பட்ட ஒரு காட்டுமிருகத்தைப் போல எதிரி ஒரு நீர்நிலையில் இருந்து மற்ற நீர்நிலைக்கு விரட்டப்பட்டு, இறுதியில் அவன் அவனுடைய சொந்த மண்ணில் இயற்கைக்குப் பலியாகிப்போகச் செய்யப்படுவான். இப்படிதான் ஜேர்மன் ஆயுதங்கள் தொடங்கி வைத்ததை தண்ணீரில்லாத ஓமாஹெகி* ஹெரேரோ மக்களின் அழிவை முடித்துவைத்தது." [10] * ஹெரேரோ மக்களின் பூர்வீக நிலம்

இனரீதியான கருத்தியலும், அதிகாரத்துவமும் ஒன்றாக இணைக்கப்பட்டது ஹிட்லரில் இருந்து தொடங்கியதல்ல. ஹன்னா ஆரென்ட் குறிப்பிட்டது போல: "ஏகாதிபத்தியத்தின் முதல் தசாப்தங்களில் அரசியல் அமைப்புகளுக்கும், வெளிநாட்டுமக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் இரண்டு புதிய சாதனங்கள் கண்டறியப்பட்டன. ஒன்று உடல்சார் அரசியல் கோட்பாடாக இனம்; மற்றொன்று வெளிநாட்டு ஆக்கிரமிப்பு கோட்பாடாக அதிகாரத்துவம். [11] ஹிட்லரின் ஆட்சியில் பேர்லினில் இருந்த கிழக்குக்கான அமைச்சகம், பிரிட்டிஷ் இந்திய அலுவலகத்தை மாதிரியாக கொண்டிருந்ததாக கூறப்பட்டது.

யூத இன அழிப்பானது, டிராவொர்சோவிற்கு மார்க்சிச முன்னோக்குகளின் அடிப்படையாக இருக்கும் முதலாளித்துவ சமூக உறவுகளைத் தூக்கி எறிவதன் வரலாற்று தேவையை அடிக்கோடிடாமல், மாறாக மார்க்சிசத்தின் இயலுமை மீதே கேள்வி எழுப்ப தூண்டுகிறது.

அவர் எழுதுகிறார், "இந்த பேரழிவிற்குப் பின்னர், அவுஸ்விட்ஸ் இன் நிழலில் நின்று, மார்க்சின் எழுத்துக்களை மீண்டும் படிப்பது ஒரு பிரயோசனமற்ற விஷயமாக இருக்கிறது. ஏனென்றால் விசவாயுக்கூடங்கள் அவர் நிறுவனராக இருந்த புத்திஜீவித பாரம்பரியத்தை பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன. அவுஸ்விட்ஸ் சோசலிச சிந்தனையின் சில குறிப்பிட்ட தரமுறைகளைக் கேள்விக்குட்படுத்துகின்றது. அவற்றில் சில மார்க்சின் சொந்த எழுத்துக்களிலும் உள்ளடங்கியுள்ளன. சில அவரின் பணிகளில் இருந்த இடைவெளிகளில் தொடங்கி கட்டமைக்கப்பட்ட மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்ட சிலவும் அதில் உள்ளன'. என அவர் எழுதுகின்றார். [12]

மனிதயினம் எதிர்காலத்தில் முகங்கொடுப்பது, ஒன்று சோசலிசமாக இருக்கும் அல்லது காட்டுமிராண்டித்தனமாக இருக்கும் என்று முதலாம் உலக யுத்தத்தின் தொடக்கத்தில் ரோசா லுக்சம்பேர்க் எச்சரித்ததை ஏற்றுகொள்ளும் நிலைக்கு டிராவெர்சோ தள்ளப்படுகிறார். ஆனால் எவ்வாறிருப்பினும், அவுஸ்விட்ஸ் காட்டுமிராண்டித்தனமானது என்பதை ஏற்றுக்கொள்ளாமல், உடனடியாக அந்த மேற்கோளை ஒரு "வெற்று, நிலைநோக்கற்ற மற்றும் மூடிமறைக்கப்பட்ட ஒன்றாக" நிராகரிக்கிறார். ஏனென்றால் "அது பண்பாட்டு வீழ்ச்சியின் கொடூரத்தை தொகுத்தளித்திருந்தது. சில விதிவிலக்குகளுடன் அனைவருக்கும் மேலாக வால்டர் பென்ஜமின் மற்றும் மார்க்சிஸ்டுகள் மனிதயினத்தின் வீழ்ச்சியை நவீனகாலத்திற்கு முந்தைய நிலைக்கு, ஆரம்பகால சமூக வடிவங்களுக்கும் கூட திரும்பியிருந்த பின்நோக்கிய போக்காக உணர்ந்திருந்தார்கள். இது அவர்களை நிராயுதபாணியாக ஆக்கி, நிலைநோக்கில்லாமல் நிறுத்தியது. மேலும் சிலநேரங்களில் ஒரு புதிய, நவீன 'காட்டுமிராண்டித்தனத்தின்' முன்னால் அவர்களைக் குருட்டுத்தனமாக நிற்கச் செய்தது. இது வரலாற்று அபிவிருத்தியின் அடிப்படை போக்குகளை மாற்றுவதற்கு பதிலாக அல்லது திருப்புவதற்கு பதிலாக அவற்றுடன் பொருந்தி நின்றது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு தொழில்நுட்பரீதியான, தொழில்துறைரீதியான காட்டுமிராண்டித்தனம் அதன் சொந்த கருவிசார் பகுத்தறிவால் திட்டமிடப்பட்டு திருப்பிவிடப்பட்டது" என்று எழுதினார். [13]

வெறுமனே இந்தவாதம் நிலைக்காது. ரோசா லுக்சம்பேர்க்கின் எச்சரிக்கைகள், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் எழுந்திருந்த ஏகாதிபத்தியத்திற்கு உள்ளேயே இருந்த போக்குகளைப் பற்றிய ஒரு பகுப்பாய்வின் அடிப்படையில் இருந்தன. அதற்கும் மேலாக, இரண்டு தசாப்தங்களுக்கு முன்னதாக பிரெடரிக் ஏங்கெல்ஸ் குறிப்பிடுகையில், எதிர்காலத்தில் ஐரோப்பாவில் ஏற்படும் எந்த யுத்தமும் கற்பனைசெய்து பார்த்திராத கொடூரங்களைக் கொண்டு வரும் என்பதையே நவீன தொழில்நுட்பம் குறிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். மனிதகுலத்தை அபிவிருத்தியின் பழைய நிலைக்கு கொண்டுசெல்வது மார்க்சிசத்தின் திட்டமல்ல, மாறாக தொழில்நுட்பத்தின் அளவிலாசக்தி முதலாளித்துவ வர்க்கத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்படாவிட்டால், மனிதயினத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்தப்படாவிட்டாலும், அது பேரழிவுமிக்க விளைவுகளை தரக்கூடும் என்று மார்க்சிசம் எச்சரித்தது.

இவையெல்லாம் அவருடைய வாதத்திற்கு, அதாவது அவுஸ்விட்ஸ் இன் காட்டுமிராண்டித்தனமும், ஏனைய அனைத்து காட்டுமிராண்டித்தனமும் இறுதியாக அதனதன் காரணங்களுக்குரிய நிகழ்ச்சிப்போக்கில் தங்கியிருக்கின்றன, குறைந்தபட்சம் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பில் அவை வெளிப்படுகின்றன என்ற வாதத்திற்குப் பொருந்தாது என்பதால் டிராவெர்சோ வெறுமனே இதையெல்லாம் விட்டுவிட்டு செல்கிறார். மார்க்ஸ் விளக்கியதைப் போல, ஒருசமயம் உற்பத்தி சக்திகளின் அபிவிருத்திக்கு இட்டுச் சென்ற, ஆனால் தற்போது அவற்றையும், அத்துடன் மனிதகுலத்தையும் அழிக்க அச்சுறுத்தல் விடுத்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவ சமூக உறவுகள் பிரச்சினைகள் இல்லை; மனிதனே பிரச்சினையாக இருக்கிறான் என்ற முடிவிற்கு வருகின்றார்.

டிராவெர்சோ வலியுறுத்துவதாவது: "முன்னேற்றத்திற்கான சிந்தனையுடன், சோசலிசம் இயற்கையாகவும், தானாகவும் மற்றும் தவிர்க்கமுடியாத வரலாற்று விளைவாக இருக்கும் என்ற அனைத்து கருத்துகளையும் அவுஸ்ச்விட்ச் ஒரேதரத்தில் முடிவிற்கு கொண்டுவந்தது''. [14]

மார்க்சிசம் ஒருபோதும் இதுபோன்ற ஒரு முன்னோக்கைக் கொண்டிருக்கவில்லை. மார்க்ஸே கூட குறிப்பிடுகையில், "முதலாளித்துவம் ஒவ்வொரு பொருளாதார முன்னேற்றத்தையும் ஒரு சமூக அழிவை நோக்கி திருப்புகிறது" என்று குறிப்பிட்டார். ''இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியின் எதிர்கால விளைவுகள்'' (The Future Results of the British Rule in India) என்ற அவருடைய பிரபல கட்டுரையில், ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றியதானது அதன் மிக அப்பட்டமான வடிவத்தை, அதாவது "முதலாளித்துவ நாகரீகத்தின் ஆழமான அடக்குமுறையையும், உள்ளார்ந்த காட்டுமிராண்டித்தனத்தையும் எடுத்துக்காட்டுகிறது." முதலாளித்துவ சகாப்தத்தின் விளைவுகள் பொதுவான கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டாவிட்டால்,  மனித இன முன்னேற்றமானது அமிர்தத்தை அருந்த விருப்பமற்று கொல்லப்பட்டவனின் மண்டையிலிருந்து அருந்தவிருப்பமான அருவருப்பான காட்டுவாசியின் அடையாளம் போன்றதாகிவிடும்.

இடைமருவு வேலைத்திட்டத்தில், ட்ரொட்ஸ்கி எழுதியதாவது: "ஒரு சோசலிச புரட்சி இல்லாமல், அடுத்த வரலாற்று சகாப்தத்தில், ஒரு பேரழிவு ஒட்டுமொத்த மனிதயின கலாச்சாரத்தையும் அச்சுறுத்துகிறது." தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியை தீர்ப்பதே இந்த சூழ்நிலையின் திறவுகோலாக இருக்கிறது என்று அவர் வலியுறுத்தினார். டிராவெர்சோவும், அவருடைய கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொள்பவர்களும் இந்த பிரச்சினையை ஒருபோதும் ஆராய்வதில்லைஆனால் பிரச்சினை மார்க்சிசத்திலேயே தங்கி இருக்கிறது என்பார்கள். "'வரலாற்று இயக்கத்தின் நனவுபூர்வமான வெளிப்பாடு எனக்கூறப்பட்ட சிந்தனை முறையின் வெற்று நம்பிக்கையை தூக்கியெறிவதையும், மற்றும் ஒரு இயக்கம் 'அக்காலகட்டத்தின் போக்குகளோடு ஒத்துப்போவதை' நம்புவதையுமே அவுஸ்விட்ச் எடுத்துக்காட்டுகின்றது. இது சோசலிசத்தின் கற்பனைவாத பரிமாணத்தை மீண்டும் நிறுவுவதையும் குறிக்கிறது." என டிராவெர்சோ குறிப்பிடுகின்றார்[15]

தொழிலாள வர்க்கத்தினதும், மார்க்சிசத்தினதும் தோல்விகள் எனக்கூறப்படுபவற்றை பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கும் குட்டி-முதலாளித்துவ புத்திஜீவி பிரிவுகளின் அவநம்பிக்கையையும், அவர்களில் சிலரை முற்றிலுமாக வலதுசாரி திசைக்கு இட்டு செல்வதையும் வெளிப்படுத்திக்காட்டுவதில், மார்க்சிசம் ஒரு நனவுபூர்வமற்ற வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் நனவுபூர்வமான வெளிப்பாடு என்ற கருத்தை டிராவெர்சோ நிராகரிக்கிறார். கம்யூனிஸ்ட்டுக்களின் தத்துவார்த்த முடிவுகள் "எவ்வகையிலும் இந்த அல்லது அந்த உலக சீர்திருத்தவாதியால் கண்டுபிடிக்கப்பட்ட, அல்லது உருவாக்கப்பட்ட சிந்தனைகளின் அல்லது கோட்பாடுகளின் அடிப்படையைக் கொண்டிருப்பதில்லை. மாறாக பொதுவான வார்த்தைகளில் குறிப்பிடுவதானால், "எமது கண்களின் முன் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வரலாற்றுரீதியான இயக்கத்திலிருந்து கிளர்ந்தெழும் உண்மையான உறவுகளை" அடித்தளமாக கொண்டுள்ளன என்று மார்க்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையில் விவரித்தார்.

வரலாறு வெறுமனே "நம்முடைய பக்கம் இருக்கிறது" என்று சொல்லவோ அல்லது தவிர்க்க முடியாமல் வரலாற்று சக்திகள் இயல்பாகவே, தாமாகவே முதலாளித்துவத்தின் வீழ்ச்சியைக் கொண்டு வரும் என்று சொல்லவோ முடியாது. மாறாக இதற்கு எதிர்மாறானதாகும்.

ரோசா லுக்சம்பேர்க் இதை மிக அழகாக குறிப்பிடுவது போல, வரலாறு என்பது தொழிலாள வர்க்கத்திற்கு கடுமையான பாதையாக (Via Dolorosa -துன்பப்படும் வழியாக] இருக்கிறது. தொழிலாள வர்க்கம் வரலாற்றில் இருந்து எந்தளவிற்குப் அதன் வெற்றிகளை பற்றிய பாடங்களையும், அனைத்திற்கும் மேலாக அதன் கசப்பான தோல்விகளைப் பற்றிய படிப்பினையையும் பெறுகிறதோ அந்தளவிற்கே அது வரலாற்று நிகழ்வுப்போக்கில் தலையீடு செய்து, வரலாற்றின் போக்கை மாற்றி அமைத்து முதலாளித்துவத்தை தூக்கி எறிய முடியும்.

புரிந்து கொள்ளவும், அதன்மூலம் வரலாற்றை உருவாக்கவும், இந்த போராட்டம் மார்க்சிச இயக்கத்தால் இட்டுச் செல்லப்படுகிறது. வரலாறுதான் அது எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆதாரமாக இருக்கிறது. அதேநேரத்தில், அவற்றின் தீர்வுகளுக்கும் வரலாறே ஆதாரமாக இருக்கிறது. சோசலிசத்திற்கான போராட்டம் கற்பனாவாத திட்டங்கள் மூலமாக தீர்க்கப்பட முடியாது. இது ஒடுக்கப்பட்டவர்களின் கற்பனைகளை எவ்வாறாயினும் அநேகமாக எரித்துவிடும். மாறாக, மார்க்சிச போராட்டம் வரலாற்று அனுபவங்களை, அது கடந்து வந்த வரலாற்று பாதைகளை ஆராயவும், எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்க தலைமையின் பிரச்சினைகளை வெளிப்படுத்திக்காட்ட அழைப்புவிடுக்கிறது. டிராவெர்சோ இதுபோன்றதொரு அணுகுமுறையை நிராகரிக்கிறார்.

அவர் எழுதுகிறார்: "மார்க்ஸ் முதலாளித்துவத்தின் அபிவிருத்தியை ஓர் இயங்கியல் நிகழ்போக்காக பார்க்கிறார். இதில் 'நாகரீகமயமாக்கல் திட்டம்' (உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி) மற்றும் 'சமூக பின்னடைவு' (வர்க்கம், தேசியம், இதர பிறவற்றின் ஒடுக்குமுறை) ஆகியவை கட்டுப்பாடின்றி பிணைந்திருந்தது. இந்த இருமை, ஒரு புரட்சிகர உடைவில் வலியுறுத்தப்படும் வரைக்கும் ஆழமாக அவர் கண்களில் மையப்படுத்தப்பட்டிருந்தது. முரண்பட்ட வகையில், இந்த இயங்கியலும் ஓர் எதிர்மறை பாத்திரத்தைக் கொண்டிருக்கிறது என்பதை இருபதாம் நூற்றாண்டு எடுத்துக்காட்டும்: அதாவது முதலாளித்துவ சமூக உறவுகளின் இரும்பு கூண்டை உடைப்பதற்கு மாறாக, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றமானது பாசிசம், தேசிய சோசலிசம் அல்லது, மற்றொரு வடிவத்தில், ஸ்ராலினிசம் போன்ற நவீன, ஒடுக்குமுறை அரக்கர்களின் அடித்தளமாக மாறக்கூடும்." [16]

ஏன் தொழிலாள வர்க்கத்தால் இதுவரையில் முதலாளித்துவத்திடமிருந்து அதிகாரத்தைப் பறிக்க முடியவில்லை என்ற எந்த பகுப்பாய்விலும் இந்த மதிப்பீடு முற்றிலுமாக தவறி இருக்கிறது. டிராவெர்சோ அளிக்கும் முற்றிலுமான ஒருதலைபட்சமான கருத்தாக்கத்திற்கு மாறாக, உண்மையில் இங்கே மார்க்ஸ் என்ன எழுதினார் என்பதை கவனிக்க வேண்டியதிருக்கிறது.

அரசியல் பொருளாதாரத்திற்கான விமர்சனம் (Critique of Political Economy) என்பதன் அவருடைய பிரபலமான முகவுரையில், ஆய்வின் வரலாற்றுரீதியான சடவாத முறையைக் கோடிட்டுக் காட்டினார்: "அபிவிருத்தியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் சடவாத உற்பத்திசக்திகள் அப்போதிருக்கும் உற்பத்தி உறவுகளுடன் அல்லது சட்டரீதியான வார்த்தைகளில் இதே விஷயத்தை கூற வேண்டுமானால், இதுவரைக்கும் அவை செயல்பட்டு வந்த கட்டமைப்பிற்குள் இருக்கும் சொத்துடைமை உறவுகளுடன் மோதலுக்கு வருகின்றன. உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தி வடிவங்களிலிருந்து இந்த உறவுகள் அவற்றின் தடைகளாக மாறுகின்றன. பின்னர் சமூகப் புரட்சியின் ஒரு சகாப்தம் தொடங்குகிறது."

சமூகப் புரட்சியின் புறநிலை அஸ்திவாரங்களை உருவாக்கிய பின்னர், மாற்றம் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்ற பாதைக்கு மார்க்ஸ் திரும்பினார். "உற்பத்தியின் பொருளாதார நிலைமைகளுக்கு இடையிலான சடவாத மாற்றங்களை வேறுபடுத்திப் பார்ப்பது எப்போதும் அவசியமாகும். இது இயற்கை விஞ்ஞானம், மற்றும் சட்டம், அரசியல், மதம், கலை அல்லது மெய்யியல் ஆகியவற்றின் மதிப்புகளால் தீர்மானிக்கப்படுகிறது. குறுகிய சித்தாந்த வடிவங்களில் இந்த முரண்பாட்டைப் பற்றிய நனவையும், அதற்கெதிராக போராடுவதையும் மனிதர்கள் கொண்டிருக்கிறார்கள்" என்று வலியுறுத்தினார். (அழுத்தம் சேர்க்கப்பட்டிருக்கிறது)

இங்கே, இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றைப் படிப்பதிலும், அரசியல் மோதல்களை எதிர்த்து போராட வேண்டிய வழிகள், தேவையான பாடங்களைப் பகுத்துப் பெற விரும்புவதிலும், அந்த கவனம் செலுத்தப்படவேண்டும். இருபதாம் நூற்றாண்டு ஒரு ஒரு பாரிய சோசலிச இயக்கத்தின் அபிவிருத்தி இல்லாமலும், முதலாளித்துவத்தை தூக்கி எறிய தொழிலாள வர்க்கத்திற்கு சாத்தியமான புரட்சிகர சூழ்நிலைகள் உருவாகாமல் கடந்து சென்றிருக்குமேயானால் ஒரேவேளை டிராவெர்சோவின் பகுப்பாய்வு ஏதோவொரு வகையில் மதிப்பை பெற்றிருக்கக்கூடும். வரலாறு அவ்வாறான சில நிலைமைகளை எடுத்துக்காட்டுகிறது. 1917ல் ரஷ்ய புரட்சிக்கு திறந்துவிட்ட காலம், 1923இல் "ஜேர்மன் அக்டோபர்" கருச்சிதைவு செய்யப்படும் வரை தொடர்ந்து 1936-39 ஸ்பானிஷ் புரட்சி உயர்ந்த புள்ளியை அடைந்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் எழுச்சி, பிரான்சில் மே-ஜூன் 1968 நிகழ்வுகளுடன் தொடர்ச்சியான முக்கிய புரட்சிகர போராட்டங்களின் தொடக்கம், இது 1975 வரை தொடர்ந்தது. தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான புறநிலைமைகள் நிச்சயமாக இருக்கின்றன என்பதையும், தேவையான புரட்சிகர தலைமை இல்லாமல் இருக்கிறது என்பதையுமே வரலாற்று ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.

"ஒடுக்குமுறை அரக்கர்களான" ஸ்ராலினிசம் மற்றும் நாசிசம் என்பது மார்க்சிசம் கணக்கில் எடுக்கத் தவறிய ஏதோவொரு "எதிர்மறை இயங்கியலின்" விளைவல்ல. மாறாக அவை தொழிலாள வர்க்கத்தால் அனுபவிக்கப்பட்ட தோல்விகளாகும். ரஷ்ய புரட்சியை அடுத்த உடனடிக்காலத்தில் சமூக ஜனநாயகவாதிகளால் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களின் காட்டிக்கொடுப்புகளே, முதல் தொழிலாளர் அரசை தனிமைப்படுத்தியது. அதன் சிதைவிற்கும் எழுச்சி அளித்தது; மார்க்சிசம் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியால் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச போக்குகளின் அரசியல் தோல்வியுடன், தவிர்க்க முடியாமல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தையும் அரசியல் அதிகாரத்திற்குள் உள்ளே நுழைத்தது. பின்னர் ஜேர்மன் கம்யூனிச கட்சியின் மீது பேரழிவுமிக்க "சமூக பாசிச" தத்துவத்தை திணித்ததில் கம்யூனிச அகிலத்தைத் தலைமை தாங்கிய ஸ்ராலினிச அமைப்புகள் முக்கிய பொறுப்பு கொண்டிருந்தன. இது ஹிட்லர் அதிகாரத்திற்கு வருவதற்கான பாதையைத் திறந்துவிடுவதில் முக்கிய பாத்திரம் வகித்தது. இதன் விளைவாக தொழிலாள வர்க்கத்திற்கு மிகப்பெரிய வரலாற்று தோல்வி ஏற்பட்டது. ஸ்ராலினிசமும் நாசிசமும், அதன் சொந்த வழிகளில், தொழில்நுட்ப சக்தியையோ மற்றும் உற்பத்தி சக்தியையோ அல்லாமல், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமையின் நெருக்கடியை வெளிப்படுத்துகின்றன.

"முதலாளித்துவ சமூகத்திலும், ஏகாதிபத்தியத்திலும் உள்ளார்ந்திருந்த வன்முறையை ஹிட்லரின் ஜேர்மனி உச்சக்கட்டத்திற்கு தள்ளியது" என்று கூறிய ஏர்னெஸ்ட் மண்டேலை, ஒருகாலத்தின் அவருடைய குருவாக இருந்திருந்தாலும் கூட டிராவெர்சோ விமர்சிக்கிறார். இந்த நோக்குமுறையில் உள்ள பிரச்சனை என்னவெனில், ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் சடவாத நலன்களால் அல்லாது (இராணுவ முன்னுரிமைகள்), இறுதிப் பகுப்பாய்வில், யூதர்களின் படுகொலை கருத்தியலால் தீர்மானிக்கப்பட்டது என மண்டேல் பிரச்சனையுடன் ஒத்துக்கொள்கின்றார்..[18]

"யூத படுகொலையை பெரிய ஜேர்மன் மூலதனங்களின் வர்க்க நலன்களின் ஒரு செயல்பாடாக புரிந்து கொள்ள முடியாது. உண்மையில், இது 'இறுதி பகுப்பாய்வில்'  பாசிசம் பற்றிய அனைத்து மார்க்சிச தத்துவங்களின் இவ்வாறான வரையறைப்படுத்தல் ஒரு தவறான அர்த்தப்படுத்தலாகவே இருக்கமுடியும்." என டிராவெர்சோ எழுதுகின்றார் [19]

ஆகவே இறுதியில், நாஜிக்களையும், அவர்களில் முக்கியமாக ஹிட்லரையும் தான் உண்மையில் குற்றஞ்சொல்ல வேண்டும் என்று முடிவெடுக்க நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். இங்கே "இறுதி பகுப்பாய்வில்" இந்த அனைத்து பின்-நவீனத்துவவாத, பின்-மார்க்சிசவாத முயற்சிகள் எங்கே கொண்டு செல்கிறது என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. யூதப் படுகொலைக்கு ஜேர்மன் ஏகாதிபத்தியம் பொறுப்பல்ல, அது அனைத்தும் நாஜிகள் மற்றும் ஹிட்லரின் பொறுப்பின் கீழ் வருகிறது. ஆனால் முடிவில், அந்த படுகொலை நவீன தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி சக்திகள் மற்றும் மனித காரணங்களின் பேரழிவுமிக்க பகுத்தறிவின்மையில் படுகொலை உள்ளார்ந்து இருந்தது என்பதால், அவர்களையும் நாம் உண்மையில் குற்றம் சொல்ல கூடாது.

ஒருவர் இந்த பிரச்சினையை மிகவும் குறுகிய கண்ணோட்டத்தில் பார்ப்பாரேயானால், நாம் குறிப்பிட்டிருப்பதைப் போல, யூதர்களின் பெருந்திரளான படுகொலை ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் உடனடி பொருளாதார மற்றும் இராணுவ நலன்களை ஈடுசெய்யவே நடத்தப்பட்டது என்பதை எளிதாக எடுத்துக்காட்ட முடியும். ஆனால் இந்த பிரச்சினையை மிக குறுகிய கண்ணோட்டத்தில் பார்ப்பது தான் சிக்கலாக இருக்கிறது. இலக்கை நாம் பரவலாக்கி பார்த்தோமேயானால், பின்னர் அடிகோடிடும் நலன்கள் பார்வைக்கு வரும். சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான யுத்தத்திலிருந்தும், ஐரோப்பாவை ஆக்கிரமிக்க ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் திட்டங்களில் இருந்தும் தான் யூத இன ஒழிப்பு எழுகிறது. ஜேர்மன் முதலாளித்துவம் இந்த பணிகளைச் செய்வதற்கு அதிகாரத்தின் கட்டுப்பாட்டை நாஜிகளிடம் கொடுத்திருந்தார்கள். உறுதியாக, யுத்தத்திற்கு முன்னர் ஏற்பட்டது போல, அவர்களின் சில நடவடிக்கைகள் ஜேர்மன் முதலாளித்துவத்தின் உடனடி குறுகிய-கால நலன்களுடன் மோதியது. யூதர்களின் பெருந்திரளான படுகொலைக்கு ஜேர்மன் ஆளும் மேற்தட்டுக்களிடமிருந்து எவ்வித எதிர்ப்பும் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்கிற நிலையில், கிழக்கில் உயிர்வாழ்க்கைக்கான இடம் என்பதில் நாஜிகளின் தூண்டுதலுக்கும், ஜேர்மன் ஏகாதிபத்திய நலன்கள் மற்றும் தேவைகளுக்கும் இடையில் அங்கே ஒரு நேரடியான ஒற்றுமை இருந்தது.

ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தையும் மற்றும் சோசலிச இயக்கத்தையும் அழிப்பதன் மூலமாக இதை நடத்த அங்கே வேறெந்த கட்சிக்கும் தகுதியில்லை என்பதால், ஜேர்மன் ஆளும் மேற்தட்டுக்களால் நாஜி இயக்கத்திற்கு அதிகார கட்டுப்பாடு ஒப்படைக்கப்பட்டது. நாஜிகளில் ''வரம்புகடந்த தன்மையை'' அவர்களால் குறைக்க முடியும் என்று நிச்சயமாக அவர்கள் நம்பினார்கள். ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் அதிக விலை கொடுக்க வேண்டியதிருந்தது. நாஜிக்களுடனான எவ்வித முரண்பாடும் அடிமட்டத்திலிருந்து ஒரு போராட்டத்தை தூண்டிவிடும் என்ற அபாயம் எப்போதும் அங்கு இருந்தது. ஆகவே தான் இறுதியில் அந்த ''வரம்புகடந்த தன்மைக்கு'' பொருத்தமான விலையாக கொடுப்பது ஏற்புடையதாக இருந்தது.

நாஜி தலைமையின் சிந்தனைகளுக்குள், இனவாதம் மற்றும் யூதர்களை அழிப்பதற்கான உந்துதல் ஏனைய அனைத்து பிரச்சினைகளைவிடவும் முன்னுரிமையாக எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் அது பிரச்சினையை தீர்த்துவிடவில்லை. இறுதிப் பகுப்பாய்வில், பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை முதன்மையாக குறிப்பிடுவதால், ஒவ்வொரு அரசியல் தலைவரின் முடிவுகளுக்குப் பின்னாலும் மறைமுகமாக பயன்படுத்தப்படுகின்ற சித்தாந்தமாக ஒரு பொருளாதார நோக்கம் இருக்கிறது என்று மார்க்சிசம் கூறவில்லை. பொருளாதார நலன்கள் அதாவது ஆளும் வர்க்கங்களின் சடவாத நலன்கள் அரசியலின் பரந்த வீச்சை தீர்மானிக்கிறது என்று அது குறிப்பிடுகிறது. மேலும் சோசலிச மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் அழிவு, யூத இன ஒழிப்பிற்கு தேவையான முன்-நிபந்தனை ஆகியவை அங்கே ஒரு பிரச்சினையாகவே இல்லை. மேலும் அது எதிலிருந்து எழுச்சி பெற்றதோ, கைப்பற்றுவதை நோக்கமாக கொண்ட யுத்தமும் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் காலனியாக்கமும் ஆகிய இரண்டும் "பெரிய ஜேர்மன் முதலாளித்துவத்தின் வர்க்க நலன்களால்" தீர்மானிக்கப்பட்டது.

டிராவெர்சோவைப் போலவே, நோர்மன் ஜீராஸூம் ஜேர்மன் ஏகாதிபத்தியம் மற்றும்  முதலாளித்துவ அமைப்புமுறைக்குள்ளேயே அதன் மூலங்களைக் கொண்டிருக்கும் யூத இன ஒழிப்பை அதன் விளக்கங்களுடன் மிக பொதுவாக கையாள்கிறார். ஒரு விளக்கத்தை அளிக்க மிக அடிப்படையிலான ஏதோவொன்று தேவைப்படுகிறது. ஜீராஸ் அதை மனிதர்களுக்குள் இருக்கும் பேய்குணத்தன்மையில் கண்டறிகிறார்.

யூத இன ஒழிப்பின்மீது மார்க்சிச பகுப்பாய்விற்கு அவருடைய எதிர்ப்பில் அவர்காட்டும் வெளிப்பாடுகளில் காணப்படும் சமகாலத்திய அரசியல் அழுத்தங்களையே ஜீராஸின் பரிணாமம் குறிப்பிட்டுக் காட்டுகிறது. New Left Review இன் ஆசிரியர் குழுவில் ஒருகாலத்தில் உறுப்பினராக இருந்தவரும், ஒரு மார்க்சிச சுய-பாண்டித்தியம் பெற்றவராகவும், ரோசா லுக்சம்பேர்க்கின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவராகவும் இருந்த ஜீராஸ், ஒருகாலத்தில் இருந்த முன்னாள் தீவிரவாதிகள் பலரைப் போலவே, அமெரிக்க தலைமையிலான ஈராக் மற்றும் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" ஆகியவற்றிற்கும் பின்னால் ஊசலாடினார்.

யூத இன ஒழிப்பு மீதான ஜீராஸின் நிலைப்பாடுகள், New Left Review இதழின் 1997 ஜூலை-ஆகஸ்ட் பதிப்பில், "Marxists before the Holocaust'' என்ற தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் வெளிப்படுகிறது. இந்த கட்டுரை யூத இன ஒழிப்பு குறித்து ஏர்னெஸ்ட் மண்டேலின் பகுத்தாய்வை விமர்சித்து எழுதப்பட்டிருந்தது. ஜீராஸைப் பொறுத்த வரையில், "இந்த யூத இன ஒழிப்பானது முதலாளித்துவத்தின் விளைவால் ஏற்பட்டதாக தான் அவரால் (மண்டலினால்) இன்றும் எடுத்துக்காட்டப்படுகிறது; அதாவது முதலாளித்துவத்தின் உலகளாவிய பகுத்தறிவின்மையின் விளைவால், அதன் செயல்பாட்டு பகுத்தறிவின் ஒரு பகுதியாலும் மற்றும் அதன் ஏகாதிபத்திய வடிவங்களால் தோற்றுவிக்கப்பட்ட இனவாத சித்தாந்ததங்களாலும், ஏற்பட்டதாக காட்டப்படுகிறது." ஆனால் இந்த வரிகளில் இருந்து அபிவிருத்தி செய்யப்படும் எந்த விளக்கமும், இதற்கு பொருந்தாது என்று அவர் வலியுறுத்துகிறார்.

யூத இனவொழிப்பை அணுகும் போது, "இங்கிருக்கும் ஏதோவொன்று நவீனத்துவத்தோடு சம்பந்தப்பட்டதில்லை; அந்த ஏதோவொன்று முதலாளித்துவத்தோடும் கூட தொடர்புபட்டதில்லை. அது மனிதயினத்தோடு தொடர்புபட்டது." மேலும் மார்க்சிஸ்டுகள் இந்த "தீவிர கொடூரத்தின் அரக்கத்தன்மையை" முகங்கொடுக்க விரும்பவில்லை என்று அவர் குறிப்பிடுகிறார்.

இது முன்னைய வாதத்திற்குத் தான் நம்மை மீண்டும் கூட்டிச் செல்கிறது. அதாவது ஒருபோதும் கடந்து செல்ல முடியாத, ஓர் இராட்சஷத்தன்மை மனிதயினத்திற்குள்ளாகவே உள்ளார்ந்து இருந்து வருகிறது என்பதால், சோசலிசமும், நாகரீகத்தின் அபிவிருத்தியும், இறுதி வரையில், சாத்தியப்படாது. இந்த கட்டுரையின் முடிவுரையில் ஜீராஸ் எழுதுவதாவது: "யூதப் பிரச்சினை குறித்து எழுதுகையில், சோசலிசத்தை அடைவதை தவிர வேறு எவ்வித்திலும் அதற்கு ஒரு திருப்திகரமான முடிவை எட்ட முடியாது என்றே மண்டேலும், ட்ரொட்ஸ்கியும் வாதிடுகிறார்கள். நடந்து கொண்டிருப்பவை எல்லாம், அந்த சூத்திரத்தில் நான் பார்க்கும் குறைபாடுகளே என்று நான் நம்புகிறேன்."

New Left Review இதழில் அவருடைய கட்டுரையில், "ஆயிரக்கணக்கான மக்களின் அடிமைத்தனமான கூட்டுக்குற்றமும் மற்றும் விமர்சனரீதியான மதிப்பீடும் இல்லாததே அந்த யூத இன ஒழிப்பை (Holocaust) சாத்தியமாக்கியது" என்று குறிப்பிடுகிறார்.

அதற்கு அடுத்த ஆண்டில், 1998ல் அவர் பிரசுரித்த ஒரு புத்தகத்தில் இந்த பிரச்சினையை மேலும் விரிவாக விளக்குகிறார்: "இது இராட்சஷர்களும், கொடுமைக்காரர்களும் நிறைந்த உலகமில்லை. இராட்சஷர்களும், கொடுமைக்காரர்களும் மட்டுமே நிறைந்ததுமில்லை. தேவையானதும் மற்றும் இன்னும் பயன்படக்கூடிய அகநெறி அர்த்தத்திலும் இப்படியானோர் போதுமானளவு உள்ளனர். ஆனால் பிறப்பிலேயே சான்றோர்களாக வாழும் மனித உயிர்கள், அவற்றின் பண்புகளுக்காக மிகவும் மதிக்கப்படக் வேண்டியவர்கள். ஆனால் அவர்களுக்குள்ளும் இருக்கும் தீயொழுக்கங்களும், பலவீனங்களும் பொதுவாக ஒழுக்கமின்மைகளே ஆகும்."

"அந்த விஷயத்தில் பார்வையாளராக இருந்தவர்களை மிக எளிதாக கண்டு கொள்ளலாம்: பாரிய மக்கள் படுகொலை நிகழ்ச்சிப்போக்கில் நேரடியாக ஈடுபடாதவர்களால், அதைத் தடுப்பதற்கான முயற்சியும் கூட செய்யாது இருந்தனர். இவர்கள் இவர்களை அறியாமலேயே இதில் பங்கெடுக்கிறார்கள், அல்லது இதைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பாததால், அவர்களுக்கு தெரியாமலேயே இருப்பவர்கள் அல்லது தெரிந்தும் அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் வித்தியாசமாக இருப்பதற்காக இருப்பவர்கள் அல்லது தங்களவில் அல்லது மற்றவர்களால் பயந்து நிற்பவர்கள், அல்லது சக்தியற்று இருப்பவர்கள்; அல்லது வெறுமனே எண்ணிக்கைக்காக இருப்பவர்கள், குழம்பியவர்கள், அல்லது தங்களின் சொந்த வாழ்க்கைக்கு தேவையான இலட்சியங்களை பின்பற்றுவதில் மாட்டிக் கொண்டிருப்பவர்கள் ஆகியோரும் இதில் பங்கெடுக்கிறார்கள். இப்படிப்பட்ட மக்களும் ஐரோப்பிய யூதர்களின் பரிதாபகரமான நிகழ்விற்கு பின்புலத்தில் நிற்கிறார்கள். மேலும் இதேபோன்ற சிறிய-பெரிய ஏனைய துக்ககரமான நிலைமைகளுக்கும், பெரிய ஆனால் தவிர்க்கக்கூடிய துக்கங்களுக்கும் எல்லா இடத்திலிருந்தும் இவர்கள் தொடர்ந்து உதவிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லா சந்தர்ப்பங்களிலும் பார்வையாளராக இருந்தமை, ஏனையவர்களின் பெரும் துக்கங்களில் சௌகரியமாக வாழ, நம்முடைய இனத்தின் உறுப்பினர்கள் ஒரு குறிப்பிடத்தக்க திறமையைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உறுதியாக நிரூபிக்கின்றது." [20]

ஆகவே, இறுதியாக சொல்லப்படுவது, இதற்கு பொறுப்பானவர்கள் "இராட்சஷர்கள்" மட்டுமல்ல, மனிதகுலம் முழுமையையுமே குறைகூற வேண்டும் என்பது தான்.

இந்தப் பிரச்சினையை சற்று ஆழமாக பார்ப்போம். இதன் மூலம் எமது காலகட்டத்தில் நடந்திருக்கும் இந்த யூத இனப்படுகொலையின் மிக முக்கிய அரசியல் மற்றும் வரலாற்று ரீதியான பாடங்களில் சிலவற்றை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

அதன் மிக இயல்பில், மிக முக்கியமாக அதை தடுக்காத "பார்வையாளராக இருந்தவர்களின்" பிரதிபலிப்பால், என்ன நடந்ததோ அதனால் நாம் திகைப்படைந்திருக்கிறோம், அதிர்ச்சி அடைந்திருக்கிறோம். ஆனால் முக்கிய கேள்வி என்னவென்றால், அதிலிருந்து நாம் என்ன பாடங்களைப் பெற்றிருக்கிறோம்? ட்ரொட்ஸ்கியால் மீண்டும் மீண்டும் நினைவுகூரப்படும் ஸ்பினோசாவின் ஒரு வாக்கியத்தின்படி, இங்கே சிரிப்பதோ, அழுது புலம்புவதோ அல்ல நம்முடைய வேலை, மாறாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஜீராஸைப் பொறுத்தவரையில், இரக்கமற்ற அலட்சியம் மனிதகுல இயல்பிலேயே, தீவிர கொடூரத்தன்மையின் திறமையுடன் சேர்ந்து வேரூன்றி இருக்கிறது.

மார்க்சிச பகுப்பாய்வு மிக வித்தியாசமான முடிவிற்கு வருகின்றது. யூத இனவொழிப்பை சாத்தியமாக்க உதவிய அதிர்ச்சிகரமான அலட்சியமானது, ஹிட்லர் மற்றும் நாஜிகளை அதிகாரத்திற்கு வர பாதை அமைத்துக் கொடுத்த, ஜேர்மன் தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்று தோல்வியின் மிக துயரமான விளைவுகளில் ஒன்று தான்.

சமூகப் பிரச்சினைகள் அல்லது அந்த விஷயங்களுக்காக கலைகள், தனிநபர்களின் சொந்த கருத்துக்கள் மற்றும் முடிவுகளின் விளைவுகளால் ஏற்பட்டதில்லை என்பது அரசியல் வட்டாரத்தில் இருக்கும் ஒரு பொதுக்கருத்தாக இருக்கிறது. தனிநபர்களின் கண்ணோட்டத்திற்கு வடிவம் கொடுப்பதே ஒரு சமூக நிகழ்ச்சிப்போக்குத்தான். மேலும் சோசலிச தொழிலாளர் இயக்கம் நாஜிசத்தால் அழிக்கப்பட்டதும், இல்லாதொழிக்கப்பட்டதும் தான் இங்கிருக்கும் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. மனிதயினத்தின் சிந்தனை மற்றும் கலாச்சாரத்தை உயர்ந்தமட்டத்திற்கு கொண்டு செல்வதை இந்த இயக்கம் இலக்காக கொண்டிருந்தது. அதன் அழிவுடன், ஏனைய நிகழ்ச்சிப்போக்குகள் சமூகத்தை வடிவமைத்தன. இதை ட்ரொட்ஸ்கி குறிப்பிடுவது போல: "சமுதாயத்தில் நடக்கும் வழமையான அபிவிருத்தியின் ஊடாக, தேசிய அங்கங்களிலிருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டிய கலாச்சார கழிவுகள் ஒவ்வொன்றும் இப்போது தொண்டையிலிருந்து பொங்கி வருகிறது. செமித்துபோகாத காட்டுமிராண்டித்தனத்தை முதலாளித்துவ சமூகம் வெளியே துப்பி கொண்டிருக்கிறது. இதுதான் தேசிய சோசலிசத்தின் உளவியலாகும்." [21]

இன்றைய பாடங்களாக இருப்பவை எவை? யூத இனவொழிப்பிற்கு இட்டுச்சென்ற நிலைமைகள் இப்போது தெளிவாக, உண்மையாக நம்மால் தான் ஏற்பட்டன என்பதையும், இதுபோன்ற ஒரு பேரழிவு மீண்டும் ஒருமுறை ஒருபோதும் நடக்காது என்பதையும், என்ன பிரச்சினைகளை மனிதகுலம் எதிர்கொண்டாலும், அது ஏதோவொருவகையில் குழப்பத்தில் தான் புரண்டு கொண்டிருக்கும் என்பதையும் நம்மால் சிறிதாவது நம்ப முடிகிறதா? முடியாது.

இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் முப்பது ஆண்டுகள் யுத்தத்திற்கு இட்டு சென்ற ஏகாதிபத்திய உட்பூசல்களும், விரோதங்களும் மற்றும் அவற்றினால் தான் யூத இனவொழிப்பு ஏற்பட்டது என்பதும் முன்னில்லாத வகையில் வெளிப்படையாக இருக்கிறது. அதைப்போலவே, நீண்டகாலத்திற்கு முன்னரே தீர்க்கப்படாத  முதலாளித்துவ பொருளாதார முரண்பாடுகள், வெடித்திருக்கின்றன. சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மை வளர்ந்து வரும் நிலையில், உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்க்கை, பொளாதார நிச்சயமின்மையால் சூழப்பட்டுள்ளது.

இந்த முரண்பாடுகள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்துபட்ட எழுச்சியை உருவாக்கும். இதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தென்படுகின்றன. ஆனால் அவ்வாறான எழுச்சி மட்டுமே போதுமானதல்ல. அரசியல் நிலைமை ஒரு சுயாதீனமான பரந்துபட்ட சோசலிச போராட்டமின்மையால் குணாதிசயப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலைமை நீடிக்கும் வரை, முதலாளித்துவ அமைப்புமுறையின் அதிகளவிலான வரலாற்று நெருக்கடி, தொடர்ந்து கொடுமையான அரசியல் வடிவங்களை எடுக்கும்.

எமது முன்னோக்கு என்ன? சோசலிச புரட்சிக்கான உலகக் கட்சியை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை கட்டியெழுப்புவதன் மூலமாக தலைமைக்கான நெருக்கடியை தீர்ப்பதாகும். எமது இயக்கத்தின் ஸ்தாபக ஆவணத்தின் வார்த்தைகளான "மனிதகுலத்தின் வரலாற்றுரீதியான நெருக்கடி, புரட்சிகர தலைமைக்கான நெருக்கடியாகியுள்ளது." என்பது அவை எழுதப்பட்டபோது இருந்ததைவிட அதிக முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.

குறிப்புகள்:

1. Alex Callinicos, Plumbing the Depths: Marxism and the Holocaust in The Yale Journal of Criticism, Vol.14, No. 2 (2001).

2. Enzo Traverso, Understanding the Nazi Genocide: Marxism after Auschwitz (Pluto Press London 1999), pp.2-3.

3. Ibid., p. 3.

4. Enzo Traverso, The Jews and Germany (University of Nebraska Press Lincoln 1995), p. 127.

5. Traverso, Understanding the Nazi Genocide, p. 4.

6. Leon Trotsky, On the Jewish Question (Merit Pamphlet New York 1970), pp. 29-30.

7. Traverso, Understanding the Nazi Genocide, p. 5.

8. Ibid., p. 17.

9. Winston Churchill, The River War (Kessinger Publishing 2004), p. 161. These issues have lost none of their contemporary relevance. If you go to Amazon.com you will find a review of Churchills book by Newt Gingrich, written on July 22, 2002, that is, between the invasion of Afghanistan and the launching of the war against Iraq. Gingrich writes that it is a very useful book as we think about the complexities of the 21st century third world and its problems of poverty, violence, disorganization and ruthless petty tyrants.

10. Cited in Jürgen Zimmerer, The birth of the Ostland out of the spirit of colonialism: a postcolonial perspective on the Nazi policy of conquest and extermination in Patterns of Prejudice, Vol. 39, No. 2, 2005, pp. 209-210.

11. Hannah Arendt, The Origins of Totalitarianism (Harcourt Brace and Company 1979), p. 185.

12. Traverso, Understanding the Nazi Genocide, p. 19.

13. Ibid., p. 20.

14. Ibid., p. 22.

15. Ibid.

16. Ibid., p. 25

17. Ibid., p. 54.

18. Ibid., p. 59.

19. Ibid., p. 60.

20. Norman Geras, The Contract of Mutual Indifference: Political Philosophy After the Holocaust (Verso London 1998), p. 96.

21. Leon Trotsky, “What is National Socialism?” in The Struggle Against Fascism in Germany (Penguin Harmondsworth 1975), p. 413.