புரட்சியின் படிப்பினைகள்

                                                                                                                                           Lessons of the Revolution

WSWS : Tamil : நூலகம்
 
புரட்சியின் படிப்பினைகள்
பாரிஸ் கம்யூனின் படிப்பினைகள்

கம்யூனிஸ்ட் கழகத்தின் மத்திய குழுவிற்கான உரை

Lessons of the Revolution

புரட்சியின் படிப்பினைகள்

லெனின்

Use this version to print | Send feedback

இந்தக் கட்டுரை 1917 ஜூலை இறுதியில் எழுதப்பட்டது, பின்னுரை செப்டம்பர் 6 (19) எழுதப்பட்டது. 1917ம் ஆண்டில் செப்டம்பர் 12 மற்றும் 13 (ஆகஸ்டு 30 மற்றும் 31) அன்று ரபோச்சி செய்தித்தாள் எண். 8 மற்றும் 9ல் வெளியானது. பின்னுரை பிரிபோய் வெளியீட்டாளர்களின் புரட்சியின் படிப்பினைகள்என்.லெனின் என்கின்ற துண்டுப் பிரசுரத்தில் வெளியானது.

ஆதாரம்: லெனின் படைப்புத் தொகுதி, முன்னேற்றப் பதிப்பகம், 1977, மாஸ்கோ, தொகுதி 25, பக்கங்கள் 227-243.

ஒவ்வொரு புரட்சியும் ஒரு பரந்துபட்ட எண்ணிக்கையிலான மக்களின் வாழ்க்கையில் ஒரு கூர்மையான திருப்பத்தைக் குறித்து நிற்கிறது. அத்தகையதொரு திருப்பத்திற்கான காலம் கனிந்திருக்காவிட்டால், எந்த உண்மையான புரட்சியும் நடந்தேற முடியாது. எப்படி ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையிலும் எந்தத் திருப்பமும் அவனுக்கு ஏராளமாய் கற்றுக் கொடுப்பதோடு செழுமையான அனுபவத்தையும் பெரும் உணர்ச்சிவசப்பட்ட அழுத்தத்தையும் கொண்டு வருகிறதோ அதைப் போலவே ஒரு புரட்சியும் ஒரு ஒட்டுமொத்த மக்களுக்கு மிகக் குறுகிய காலத்தில் மிகச் செழுமையான மற்றும் பெறுமதியான  படிப்பினைகளை கற்றுக் கொடுக்கிறது.  

மில்லியன்கணக்கான, பத்து மில்லியன்கணக்கான மக்கள் சாதாரண தூக்கமயக்கமுடைய வாழ்க்கையில் ஒரு வருடத்தில் கற்றுக் கொள்வதை விடவும் அதிகமாய் ஒரு புரட்சியின் போது ஒரு வாரத்தில் கற்றுக் கொள்கின்றனர். ஏனென்றால் ஒரு ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கையிலான ஒரு கூர்மையான திருப்பத்தின் காலத்தில், மக்களின் பல்வேறு வர்க்கங்கள் என்ன நோக்கங்களின் பின்னால் சென்று கொண்டிருக்கின்றன, அவை கொண்டுள்ள வலிமை என்ன, மற்றும் அவை பயன்படுத்தும் வழிமுறைகள் என்ன ஆகியவை குறிப்பாகத் தெளிவாகி விடுகின்றன.

ஒவ்வொரு வர்க்க நனவான தொழிலாளியும் சிப்பாயும் மற்றும் விவசாயியும் ரஷ்யப் புரட்சியின் படிப்பினைகளை முழுமையாகச் சிந்திக்க வேண்டும், குறிப்பாக இப்போது, ஜூலை இறுதியில், நமது புரட்சியின் முதல் கட்டம் தோல்வியுற்றிருப்பது தெளிவாகி இருக்கும் சமயத்தில்.

உண்மையில் தொழிலாளிகளும் விவசாயிகளும் அவர்கள் புரட்சியைச் செய்தபோது எதற்காக முயன்றுகொண்டிருந்தார்கள் என்பதைப் பார்ப்போம். புரட்சியில் இருந்து அவர்கள் என்ன எதிர்பார்த்தார்கள்? அவர்கள் எதிர்பார்த்தது சுதந்திரம், அமைதி, ரொட்டி மற்றும் நிலம் தான் என்பதை நாம் அறிவோம்.

ஆனால் இப்போது நாம் காண்பது என்ன?

சுதந்திரத்திற்கு பதிலாக பழைய கொடுங்கோன்மை தான் திரும்பவும் வருகிறது. போர்முனையில் நிற்கும் படைவீரர்களுக்கு மரண தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.[2] பெரும் நிலப் பண்ணைகளை கேள்வியின்றி பறிமுதல் செய்ததற்காக விவசாயிகள் குற்றவாளிகளாக்கப்படுகின்றனர். தொழிலாளிகளது செய்தித்தாள்களின் அச்சகங்கள் சிதைக்கப்படுகின்றன. தொழிலாளிகளின் செய்தித்தாள்கள் விசாரணையின்றி மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. போல்ஷிவிக்குகள் கைது செய்யப்படுகின்றனர், பெரும்பாலும் எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் அல்லது அப்பட்டமாய் இட்டுக் கட்டப்பட்டதான குற்றச்சாட்டுகளில்.

சில தனிநபர்கள் சில குறிப்பான குற்றச்சாட்டுகளுக்காகத் தான் விசாரிக்கப்படுகின்றனர் என்பதால் போல்ஷிவிக்குகளை துன்புறுத்துவது  சுதந்திரத்தை மீறுல் ஆகாது என்று வாதிடப்படலாம். ஆயினும் இத்தகையதொரு வாதம் ஒரு திட்டமிட்ட வெளிப்படையான பொய் ஆகும், ஏனென்றால் தனிநபர்களின் குற்றங்களுக்காக, அந்தக் குற்றச்சாட்டுகள் நீதிமன்றச் சட்டத்தால் நிரூபணம் செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டதாகவே இருந்தாலும், அச்சகங்களை ஒருவர் எப்படி உடைக்க முடியும், செய்தித்தாள்களை எப்படி மூட முடியும்? போல்ஷிவிக்குகளின் ஒட்டுமொத்தக் கட்சியும்,அவர்களது பாதையும் பார்வைகளும் குற்றவியல்தன்மை படைத்ததாக அரசாங்கம் சட்டப்பூர்வமாய் அறிவித்திருந்தது என்றால் அப்போது இந்த விடயமே வேறு. ஆனால் அந்த மாதிரி எதனையும் சுதந்திர ரஷ்யாவின் அரசாங்கத்தால் செய்ய முடியவில்லை, செய்யவில்லை என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். 

போல்ஷிவிக்குகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் அவதூறான தன்மையை பிரதானமாய் அம்பலப்படுத்துவது எதுவென்றால், போருக்கு எதிராகவும் நிலக்கிழார்கள் மற்றும் முதலாளிகளுக்கு எதிராகவுமான போல்ஷிவிக்குகளின் போராட்டத்திற்காக நிலவுடைமையாளர்கள் மற்றும் முதலாளிகளின் பத்திரிகைகள் அவர்கள் மீது கடுமையாக சேற்றை வாரி இறைத்திருக்கின்றன,அத்துடன் ஒரு போல்ஷிவிக்குக்கு எதிரான ஒற்றைக் குற்றச்சாட்டும் கூட கண்டுபிடிக்கப்பட்டிராத நிலையிலும் போல்ஷிவிக்குகளைக் கைது செய்யவும் வழக்குத் தொடரவும் பகிரங்கமாய் கோருகின்றன.  

மக்களுக்கு அமைதி தேவையாகவுள்ளது. ஆனால் சுதந்திர ரஷ்யாவின் புரட்சிகர அரசாங்கமோ, ரஷ்ய முதலாளிகள் மற்ற நாடுகளைச் சுரண்டும் வகையில் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு முதலாளிகளுடன் முன்னாள் சார் இரண்டாம் நிகோலஸ் செய்து கொண்ட இரகசிய ஒப்பந்தங்களின் அதே அடிப்படையில் ஆக்கிரமிப்புப் போரை தொடர்ந்திருக்கிறது. அந்த இரகசிய ஒப்பந்தங்கள் இன்னும் வெளியிடப்படாமலேயே தொடர்கின்றன. சுதந்திர ரஷ்யாவின் அரசாங்கம் தந்திரோபாயங்களில் இறங்கியது, இந்த நாள் வரை அனைத்து தேசங்களுக்கும் ஒரு நியாயமான அமைதிக்கு முன்மொழிந்திருக்கவில்லை.

ரொட்டி இல்லை. பஞ்சம் மீண்டும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. முதலாளிகளும் செல்வந்தர்களும் மனச்சாட்சியின்றி போர் விநியோகங்களில் கருவூலத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் (இப்போது போர் அன்றாடம் ஐம்பது மில்லியன் ரூபிள்களை நாட்டிற்குச் செலவு வைக்கிறது), இவர்கள் அதிக விலைகளின் மூலமாக பெரும் இலாபத்தை அறுவடை செய்து கொண்டிருக்கிற அதே சமயத்தில் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தொழிலாளிகள் மூலமான திறம்பட்ட கட்டுப்பாட்டை நிறுவுவதற்கு எந்த ஒன்றும் செய்யப்பட்டிருக்கவில்லை என்பதையும் ஒவ்வொருவரும் காண்கிறார்கள். முதலாளிகள் நாளுக்கு நாள் கல்மனம் படைத்தவர்களாய் ஆகிக் கொண்டிருக்கின்றனர்; மக்கள் எல்லாம் பற்றாக்குறையால் துன்புற்றுக் கொண்டிருக்கும் ஒரு சமயத்தில் தொழிலாளிகளை அவர்கள் வீதியில் வீசி எறிகின்றனர் . 

நிலப்பண்ணை உடைமை என்பது அநீதியும் கொள்ளையும் ஆகும் என்பதை விவசாயிகளின் பெரும் பகுதியினர் ஒவ்வொரு காங்கிரசிலும் தெளிவாகவும் உரக்கவும் அறிவித்து வந்துள்ளனர். இதனிடையே தன்னை புரட்சிகரமானது ஜனநாயகமயமானது என்று அழைத்துக் கொள்ளும் ஒரு அரசாங்கம் விவசாயிகளின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போய் பல மாதங்கள் அலைக்கழித்து அவர்களை வாக்குறுதிகளாலும் தாமதங்களாலும் ஏமாற்றியிருக்கிறது. நிலத்தை வாங்குவதையும் விற்பதையும் தடைசெய்கின்ற ஒரு சட்டத்தை விநியோகிக்க அமைச்சர் செர்னோவை பல மாதங்களாய் முதலாளிகள் அனுமதிக்கவில்லை. கடைசியாய் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, செர்னோவுக்கு எதிராக இந்த முதலாளிகள் எல்லாம் ஒரு இழிவான அவதூறுப் பிரச்சாரத்தைத் தொடக்கினர். அவை இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. நிலத்தை முறையற்றுபறிமுதல் செய்ததற்காக விவசாயிகளை விசாரணைக் கூண்டிற்கு கொண்டுவரத் தொடங்கும் அளவுக்கு அரசாங்கம் நிலவுடமையாளர்களை பாதுகாப்பதில் வெட்கமற்றுச் செயல்படுவதாய் ஆகியுள்ளது.

விவசாயிகளை மூக்கைப்பிடித்து அழைத்துச் சென்று கொண்டிருக்கும் அவர்கள் நாடாளுமன்ற அவைக் கூட்டத்திற்காகக் காத்திருக்க அவர்களிடம் கூறுகிறார்கள். ஆயினும் அவை கூடுவதென்பது முதலாளிகளால் தொடர்ந்து தள்ளிப் போடச் செய்யப்பட்டு வருகிறது. இப்போது போல்ஷிவிக்குகளின் நெருக்குதலின் காரணத்தால் அத்தேதி செப்டம்பர் 30 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதுசாத்தியமில்லாத குறைந்த கால அவகாசத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூச்சலிட்டு நாடாளுமன்ற அவைக் கூட்டத்தை தள்ளிவைப்பதற்கு கோருகின்றனர். முதலாளிகள் மற்றும் நிலவுடமையாளர்களின் கட்சியான ''கடேட்'' (Cadet) கட்சியின் அல்லது மக்கள் சுதந்திரக் கட்சியின் மிகவும் செல்வாக்கான பனினா போன்ற  உறுப்பினர்கள் எல்லாம் போர் முடியும் காலம் வரை நாடாளுமன்ற அவைக் கூட்டத்தைத் தள்ளி வைக்க பகிரங்கமாக வலியுறுத்தி வருகின்றனர்.

நிலம் கிடைக்க, பிரதிநிதிகள் அவை கூடும் வரை காத்திருங்கள். பிரதிநிதிகள் அவை கூடுவதற்கு போர் முடியும் வரை காத்திருங்கள். போர் முடிய, முழுமையான வெற்றி கிட்டும் வரை காத்திருங்கள். இப்படித் தான் இது செல்கிறது. அரசாங்கத்தில் பெரும்பான்மை பெற்றிருக்கின்ற முதலாளிகளும் நிலவுடைமையாளர்களும் விவசாயிகளை வெளிப்படையாய் கேலி செய்து கொண்டிருக்கின்றனர்.

II

ஆனால், சாரிச ஆட்சி தூக்கியெறியப்பட்டதற்கு பிந்தைய ஒரு சுதந்திர நாட்டில் இது எவ்வாறு நடக்க முடியும்?

ஒரு சுதந்திரமற்ற நாட்டில், மக்கள் ஒரு சார் மன்ன்ன் மற்றும் யாரொருவராலும் தேர்ந்தெடுக்கப்படாத கையளவு எண்ணிக்கையிலான நிலவுடைமையாளர்கள், முதலாளிகள் மற்றும் அதிகாரிகளால் ஆளப்படுகின்றனர்.

ஒரு சுதந்திர நாட்டில், மக்கள் அவர்களாலேயே அந்த நோக்கத்திற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக் கூடியவர்களாலேயே தான் ஆளப்படுகின்றனர். தேர்தல்களில் மக்கள் தங்களை கட்சிகளுக்குள் பிளவுபடுத்திக் கொள்கின்றனர்; ஒரு விதியாகவே மக்களின் ஒவ்வொரு வர்க்கமும் தனது சொந்தக் கட்சியை உருவாக்குகிறது; உதாரணமாக, நிலவுடைமையாளர்கள், முதலாளிகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் தனித்தனியான கட்சியை உருவாக்குகின்றனர். எனவே சுதந்திர நாடுகளில் மக்கள் கட்சிகளுக்கு இடையிலான ஒரு வெளிப்படையான போராட்டத்தின் மூலமாகவும் இந்தக் கட்சிகளுக்கு இடையிலான சுதந்திரமான உடன்பாட்டின் மூலமும் ஆளப்படுகின்றனர். 

1917 பிப்ரவரி 27 அன்று சாரிச ஆட்சி தூக்கியெறியப்பட்டதற்குப் பின்  சுமார் நான்கு மாத காலமாக ரஷ்யா ஒரு சுதந்திர நாடாகத் தான் ஆளப்பட்டது, அதாவது சுதந்திரமாக உருவான கட்சிகளுக்கு இடையிலான ஒரு வெளிப்படையான போராட்டத்தின் மூலமாகவும் இவற்றுக்கு இடையிலான சுதந்திரமான உடன்பாட்டின் மூலமாகவும். எனவே ரஷ்யப் புரட்சியின் அபிவிருத்தியை புரிந்து கொள்வதற்கு  தலைமையான கட்சிகள், அவை பாதுகாத்த வர்க்க நலன்கள், மற்றும் அவை அனைத்துக்கும் இடையிலான உறவுகள் ஆகியவற்றை ஆராய்வது அனைத்திற்கும் மேலாய் அவசியமாகும்.

III

சாரிச ஆட்சி தூக்கியெறியப்பட்டதற்குப் பின்னர் அரசு அதிகாரம் முதலாவது இடைக்கால அரசாங்கத்தின் கரங்களுக்குச் சென்றது. இது முதலாளித்துவ வர்க்கத்தின், அதாவது முதலாளிகளின் (இவர்கள் நிலச்சுவாந்தர்களுடன் கைகோர்த்துக் கொண்டிருந்தனர்) பிரதிநிதிகளைக் கொண்டிருந்தது. தலைமை முதலாளித்துவக் கட்சியான ''கடேட்'' கட்சி முதலாளித்துவத்தின் ஆளுகின்ற அரசாங்கக் கட்சியாக மூலஸ்தானத்தை பிடித்துக் கொண்டது.

சாரிச துருப்புகளுடன் சண்டையிட்டதும் சுதந்திரத்திற்காகத் தங்களது இரத்தத்தைச் சிந்தியதும் தொழிலாளிகளும் விவசாயிகளும், சிப்பாய்களும் மாலுமிகளும் தானே தவிர முதலாளிகள் அல்ல என்ற நிலையிலும் இந்தக் கட்சி அதிகாரத்தைப் பிடித்ததென்றால் அது வெறுமனே தற்செயலல்ல. முதலாளித்துவக் கட்சி அதிகாரத்தைப் பிடித்தது என்றால் முதலாளித்துவ வர்க்கத்திடம் செல்வமும்,ஒழுங்கமைப்பும் மற்றும் அறிவும் இருந்தது தான் அதன் காரணம். 1905 முதலாக, அதிலும் குறிப்பாக போரின் போது, முதலாளிகளின் வர்க்கம், நிலவுடைமையாளர்களையும் தங்களுக்கு உறுதுணையாய் கொண்டு, ரஷ்யாவில் ஒழுங்கமைப்பில் ஒரு மிகப்பெரும் முன்னேற்றத்தை செய்திருந்தது.

கடேட் கட்சி 1905ல் மற்றும் 1905 முதல் 1917 வரையான காலத்தில் இரு சமயத்திலுமே முடியாட்சிக்கு ஆதரவானதாய்த் தான் எப்போதும் இருந்து வந்திருக்கிறது.  சாரிச கொடுங்கோன்மையை எதிர்த்து மக்கள் வெற்றி பெற்ற பின்னர் இக்கட்சி தன்னை ஒரு குடியரசு ஆதரவுக் கட்சியாக பிரகடனப்படுத்திக் கொண்டது. எப்போதெல்லாம் மக்கள் ஒரு முடியாட்சியை வெற்றி கொண்டார்களோ, அப்போதெல்லாம் முதலாளித்துவக் கட்சிகள் முதலாளிகளின் சிறப்புரிமைகளையும் மக்கள் மீதான அவர்களது வரம்பற்ற அதிகாரத்தையும் உறுதி செய்ய முடியும் காலத்திற்கு, குடியரசு ஆதரவானதாய் ஆவதற்கு விருப்பம் கொண்டிருந்தன என்பதை வரலாற்றின் அனுபவம் காட்டுகிறது. 

மக்கள் சுதந்திரத்திற்கு கடேட் கட்சி உதட்டளவிலான சேவை செய்கிறது. ஆனால் உண்மையில் அது முதலாளிகளுக்கு ஆதரவாய் நிற்கிறது, அத்துடன் அனைத்து நிலவுடைமையாளர்களும்,முடியாட்சியினரும் மற்றும் கறுப்பு நூற்றவர்களின் (Black Hundreds) கட்சியினரது ஆதரவும் அதற்கு உடனடியாய் கிட்டியது. ஊடகங்களும் தேர்தலும் இதற்கான சாட்சியங்களாய் உள்ளன. புரட்சிக்குப் பின்னர், அனைத்து முதலாளித்துவ செய்தித்தாள்களும் மற்றும் ஒட்டுமொத்த கறுப்பு நூற்றவர்களின் ஊடகங்களும் கடேட் கட்சியுடன் ஒன்றணைந்து பாடத் தொடங்கின. பகிரங்கமாக கூறத் துணிச்சலின்றி, உதாரணமாக பெட்ரோகிரேடில் போல அனைத்து முடியாட்சிக் கட்சிகளும் தேர்தலில் கடேட் கட்சியை ஆதரித்தன.

அரசு அதிகாரத்தை பிடித்து விட்ட நிலையில், கடேட்டுகளின் கட்சி இரண்டாம் சார் நிகோலாஸால் தொடங்கப்பட்ட வேட்டையாடும் ஆக்கிரமிப்புப் போரை தொடர்வதற்கான ஒவ்வொரு முயற்சியையும் செய்தது. பிரிட்டிஷ் மற்றும் பிரான்சின் முதலாளிகளுடன் இரகசியமான கொள்ளை உடன்படிக்கைகளையும் இரண்டாம் சார் செய்திருந்தார். இந்த உடன்படிக்கைகளின் படி, வெற்றியின் போது கான்ஸ்டாண்டிநோபிள், கலிசியா, ஆர்மீனியா போன்றவற்றை கைப்பற்றிக் கொள்வதற்கு ரஷ்ய முதலாளிகள் வாக்குறுதி பெற்றனர். மக்களைப் பொறுத்தவரை, கடேட்டுகளின் அரசாங்கம் வெற்று உபாயங்களையும் வாக்குறுதிகளையும் கூறி அவர்களைத் தணித்தது. நாடாளுமன்ற அவை கூடுவதற்கான தேதி நிர்ணயம் செய்யப்படாமல், அது கூடும் வரையான காலத்திற்கு தொழிலாளிகள் மற்றும் விவசாயிகளுக்கு முக்கியமான மற்றும் அத்தியாவசியமான அத்தனை விடயங்கள் மீதான முடிவுகளும் தள்ளி வைக்கப்பட்டன.

சுதந்திரத்தை பயன்படுத்தி, மக்கள் சுயாதீனமாக ஒழுங்கமைத்துக் கொள்ள ஆரம்பித்தனர். ரஷ்ய மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையாய் இருந்த தொழிலாளிகள் மற்றும் விவசாயிகளின் தலைமை அமைப்பாக இருந்தது தொழிலாளிகள்’, சிப்பாய்கள் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகளின் சோவியத்துகள். இந்த சோவியத்துகள் ஏற்கனவே பிப்ரவரிப் புரட்சியின் போதே உருவாகத் தொடங்கி விட்டன. ஒரு சில வாரங்களுக்குள்ளாக ரஷ்யாவின் அநேகப் பெருநகரங்களிலும் மற்றும் பல கிராமப்புற மாவட்டங்களிலும் வர்க்க நனவுடனான முன்னேறிய தொழிலாளிகளும் விவசாயிகளும் சோவியத்துகளில் ஒன்றுபட்டிருந்தனர்.

சோவியத்துகள் முழுக்க சுதந்திரமான வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டன. மக்களின், தொழிலாளிகளின் மற்றும் விவசாயிகளின் உண்மையான அமைப்புகளாக அவை இருந்தன. பரந்த மக்களில் பெரும்பான்மையினரது உண்மையான அமைப்புகளாய் அவை இருந்தன. சிப்பாய் உடைகளில் தொழிலாளிகளும் விவசாயிகளும் ஆயுதபாணியாக்கப்பட்டிருந்தனர்.

நாடாளுமன்ற அவை கூடுவது தள்ளிச் சென்ற நிலையில் சோவியத்துக்களை கடந்து அரசில் வேறு எந்த அதிகாரமும் இருந்திருக்க முடியாது. சோவியத்துக்கள் அரசு அதிகாரத்தை முழுமையாக எடுத்துக் கொண்டிருக்க முடியும், எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதை சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடியும். அப்போது தான் நமது புரட்சி, உண்மையான மக்கள் புரட்சியாக உண்மையான ஜனநாயகப் புரட்சியாக ஆகியிருக்கும். அப்போது தான் அமைதிக்காக உண்மையிலேயே பாடுபடுகின்ற, அத்துடன் ஆக்கிரமிப்பு போரில் உண்மையிலேயே எந்த ஆர்வமும் கொண்டிராத உழைக்கும் மக்கள் உறுதிபடவும் தீர்மானத்துடனும் ஆக்கிரமிப்புப் போரை முடிவுக்கு கொண்டுவந்து அமைதிக்கு இட்டுச் செல்கின்ற ஒரு கொள்கையை முன்னெடுக்கத் தொடங்கியிருக்க முடியும். அப்போது தான் போரில் இருந்து அருமையான இலாபத்தை ஈட்டுகின்ற மற்றும் நாட்டை சிதைவு மற்றும் பட்டினியின் நிலைக்கு கீழிறக்கியிருக்கின்ற முதலாளிகளை தொழிலாளிகளும் விவசாயிகளும் அடக்கியிருக்க முடியும். ஆனால் சோவியத்துகளில் ஒரு சிறுபான்மை எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் மட்டுமே, அரசு அதிகாரம் அனைத்தும் சோவியத்துகளுக்கு மாற்றப்பட வேண்டும் என்று கோரிய போல்ஷிவிக் சமூக ஜனநாயகவாதிகளின் புரட்சிகர தொழிலாளர் கட்சியின் பக்கம் இருந்தனர். சோவியத்துகளின் பிரதிநிதிகளில் பெரும்பான்மையினர் மென்ஷிவிக் சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் சோவியத்துகளுக்கு அதிகாரத்தை மாற்றுவதை எதிர்த்த சோசலிச-புரட்சிவாதிகளின் (Socialist-Revolutionary) கட்சிகளின் பக்கத்தில் நின்றனர். முதலாளித்துவ அரசை அகற்றி அதனை சோவியத்துகளின் ஒரு அரசாங்கத்தால் இடம்பெயர்ப்பதற்குப் பதிலாக, இந்தக் கட்சிகள் முதலாளித்துவ அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு, அதனுடன் சமரசம் செய்து கொள்வதற்கு மற்றும் அதனுடன் ஒரு கூட்டணி அரசை உருவாக்குவதற்கு வலியுறுத்தின. மக்களில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையை அனுபவித்த சோசலிச புரட்சிக் கட்சிகள் மற்றும் மென்ஷிவிக் கட்சிகள் பின்பற்றிய முதலாளித்துவத்துடன் சமரசம் செய்து கொள்வதான இந்தக் கொள்கை தான் புரட்சி தொடங்கியது முதலான ஐந்து மாத காலத்தில் அது அபிவிருத்தியுற்ற ஒட்டுமொத்தப் பாதையின் பிரதான சாராம்சமாய் இருந்தது.

IV

முதலாளித்துவ வர்க்கத்துடன் சோசலிசப் புரட்சியாளர்கள் மற்றும் மென்ஷிவிக்குகளின் இந்த சமரசம் எவ்வாறு முன்சென்றது என்பதை முதலில் பார்ப்போம், பின் மக்களில் பெரும்பான்மையோர் ஏன் அவர்களை நம்பினார்கள் என்பதை விளக்க முயலுவோம்.

V

ரஷ்யப் புரட்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு வகையில் அல்லது வேறொரு வகையில் மென்ஷிவிக்குகளும் சோசலிசப் புரட்சியாளர்களும் முதலாளிகளுடன் சமரசப்பட்டு வந்துள்ளனர்.

1917 பிப்ரவரி முடிந்தவுடனேயே, மக்கள் வெற்றி பெற்று சாரிச ஆட்சி தூக்கியெறியப்பட்ட அடுத்த கணமே, முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம் கெரென்ஸ்கியை ஒரு சோசலிஸ்ட் என ஒப்புக் கொண்டது. உண்மையில், கெரென்ஸ்கி ஒருபோதும் சோசலிஸ்டாக இருந்தவரில்லை; அவர் ஒரு ட்ருடோவிக்காகத் தான்[3]  இருந்தார், 1917 மார்ச்சில் தான் அவர் சோசலிசப் புரட்சியாளர்களின்பட்டியலுடன் தன்னையும் சேர்த்துக் கொண்டார், அதுவும் அவ்வாறு செய்வது பாதுகாப்பானதாகவும் இலாபகரமானதாகவும் ஏற்கனவே ஆகியிருந்த நிலையில் தான். பெட்ரோகிராட் சோவியத்தின் துணைத் தலைவராக இருந்த கெரென்ஸ்கி மூலமாக, முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம் உடனடியாக சோவியத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கும் அதனை முனைமழுங்கச் செய்வதற்கும் முனைந்தது. சோவியத்தும்  - அதாவது அதில் ஆதிக்கம் செலுத்திய சோசலிசப் புரட்சியாளர்களும் மற்றும் மென்ஷிவிக்குகள் - தான் முனைமழுங்கச் செய்யப்படுவதை அனுமதித்தது;முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட்ட உடனேயே அது தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற மட்டத்திற்கு” “அதற்கு ஆதரவளிக்கவும் உடன்பட்டது.

இடைக்கால அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சரிபார்க்கின்ற அவற்றின் மீது கட்டுப்பாட்டை செலுத்துகின்ற ஒரு அமைப்பாக சோவியத் தன்னை கருதிக் கொண்டது. அரசாங்கத்துடன் தொடர்பை பராமரிப்பதற்கு சோவியத்தின் தலைவர்கள் தொடர்பு ஆணையம்[4] என்று கூறப்பட்ட ஒன்றை நிறுவினர். அந்த தொடர்பு ஆணையத்திற்குள்ளாக, சோவியத்தின் சோசலிசப் புரட்சியாளர் மற்றும் மென்ஷிவிக் தலைவர்கள் முதலாளித்துவ அரசாங்கத்துடன் தொடர்ந்த பேச்சுவார்த்தைகளை நடத்தினர், முறையாக சொல்வதானால், துறை கொண்டிராத அமைச்சர்களின் அந்தஸ்தை அல்லது உத்தியோகபூர்வ அமைச்சர்களுக்கான அந்தஸ்தைக் கொண்டிருந்தனர்.

இந்த நிலைமை தான் மார்ச் முழுவதிலும் மற்றும் ஏறக்குறைய ஏப்ரல் முழுமைக்கும் கூட நீடித்தது. கால அவகாசத்தைப் பெறுவதற்காக முதலாளிகள் தாமதங்களிலும் தந்திரங்களிலும் இறங்கினர். இந்தக் காலத்தில் புரட்சியை முன்செலுத்துவதற்கு முக்கியத்துவமான எந்த ஒரு ஒற்றை நடவடிக்கையும் கூட முதலாளித்துவ அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை. நாடாளுமன்ற அவையைக் கூட்டுவது என்கிற அதன் நேரடியான மற்றும் உடனடியான கடமையை முன்செலுத்துவதற்குக் கூட அது முற்றிலும் ஒன்றும் செய்யவில்லை; இடங்கள் பற்றிய கேள்விக்கும் அல்லது தயாரிப்புகளைக் கையாளுவதற்கான ஒரு மத்திய ஆணையத்தை அமைப்பதற்கும் கூட அது இடம்கொடுக்கவில்லை. அரசாங்கத்திற்கு கவலை ஒன்றில் மட்டும் தான் இருந்தது, சார் பிரிட்டன் மற்றும் பிரான்சின் முதலாளிகளுடன் செய்து கொண்ட கொள்ளையடிக்கும் சர்வதேச உடன்படிக்கைகளை யாருமறியாவண்ணம் புதுப்பிப்பது, புரட்சியை சாத்தியமான அளவில் கவனமாகவும் ஓசையின்றியும் முறியடிப்பது, அத்துடன் தனது வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாமல் எல்லாவற்றையும் வாக்குறுதியளிப்பது. தொடர்பு ஆணையத்தில் இருந்த சோசலிசப் புரட்சியாளர்களும் மென்ஷிவிக்குகளும் மூடர்களைப் போல செயல்பட்டனர், இவர்களுக்கு மகிழ்வூட்டும் புனைவு வாக்கியங்களும், வாக்குறுதிகளும், மேலும் வாக்குறுதிகளும் ஊட்டப்பட்டன. முதலாளிகள் தாங்கள் சோவியத்துகளை மிகவும் உயர்வாகக் கருதுவதாகவும் அவை இன்றி ஒரு அடி கூட எடுத்து வைப்பதில்லை என்றும் அளித்த உறுதிகளை பஞ்சதந்திரக் கதையில் வரும் காகம் போல முகஸ்துதிக்கு மயங்கிய சோசலிசப் புரட்சியாளர்கள் மற்றும் மென்ஷிவிக்குகள் மகிழ்ச்சி ததும்பக் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் காலம் கடந்து போய்க் கொண்டே இருந்தது, முதலாளித்துவ அரசாங்கம் புரட்சிக்காக முற்றுமுதலாய் எதனையுமே செய்யவில்லை. நேரெதிரான வகையில், இந்தக் காலகட்டத்தில், அது புரட்சிக்கு தீங்கிழைக்கும் வகையில், இரகசியமான கொள்ளையிடும் உடன்படிக்கைகளை புதுப்பிக்கவும், அல்லது, அதற்குப் பதிலாய் அவற்றை மறு உறுதி செய்யவும் மற்றும் அவற்றிற்கு ஆங்கில-பிரெஞ்சு ஏகாதிபத்திய இராஜதந்திரிகளுடனான இரகசியத்தில் சளைக்காத துணைப் பேச்சுவார்த்தைகள் மூலம் வலிமையூட்டவுமே செய்தது. இந்தக் காலகட்டத்தில் அது, புரட்சிக்கு தீங்கிழைக்கும் வகையில், களத்தில் இருக்கும் இராணுவப் படையில் ஜெனரல்கள் மற்றும் அதிகாரிகளின் ஒரு எதிர்ப் புரட்சி அமைப்பிற்கு (அல்லது குறைந்தபட்சம் அவர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கேனும்) அத்திவாரங்களை இடுவதையே செய்தது. புரட்சிக்குத் தீங்கிழைக்கும் வகையில் அது, தொழிலதிபர்கள் மற்றும் ஆலை அதிபர்களின் அமைப்பைத் தொடங்கவும் செய்தது. இவர்கள் அப்போது தொழிலாளிகளின் தாக்குதலின் கீழ் சலுகைகள் மேல் சலுகையாய் வழங்கத் தள்ளப்பட்ட நிலையில் இருந்தனர், ஆனால் அதே சமயத்தில் சந்தர்ப்பம் கிடைக்கும் சமயத்தில் உற்பத்தியை இரகசியமாய் சிதைப்பதற்கும் (அழிக்கவும்) அத்துடன் அதனை ஒட்டுமொத்தமாய் ஸ்தம்பிக்கச் செய்வதற்கான தயாரிப்பு செய்வதற்கும் ஆரம்பித்தவர்களாய் இருந்தனர். 

ஆயினும் சோவியத்துகளில் இருந்த முன்னேறிய தொழிலாளிகள் மற்றும் விவசாயிகளின் ஒழுங்கமைப்பு திடமாய் முன்னேறியது. அரசாங்கத்திற்கும் பெட்ரோகிராட் சோவியத்திற்கும் இடையில் உடன்பாடு இருந்தபோதிலும், கெரென்ஸ்கியின் பகட்டான பேச்சு இருந்தபோதிலும், “தொடர்பு ஆணையம் இருந்த போதிலும், அரசாங்கம் மக்களின் எதிரியாக புரட்சியின் எதிரியாகத் தான் இருந்தது என்பதை ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னோடியான பிரதிநிதிகள் உணர்ந்தனர். முதலாளிகளின் எதிர்ப்பு உடைக்கப்படாத வரை, அமைதி, சுதந்திரம் மற்றும் புரட்சிக்கான காரணகாரணிகள் தவிர்க்கவியலாமல் தொலைந்து போகும் என்பதை மக்கள் உணர்ந்தனர். மக்களின் பொறுமையின்மையும் கசப்புணர்ச்சியும் பெருகிக் கொண்டே சென்றது.  

VI

அது ஏப்ரல் 20-21 அன்று வெடித்தது. இயக்கம் தன்னியல்பாய் பற்றிக் கொண்டது; அதற்கு யாரும் வழி ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. ஒரு படைப்பிரிவு மரின்ஸ்கை அரண்மனையில் அமைச்சர்களைக் கைது செய்வதற்கு முழுமையாய் ஆயுதபாணியாய் இருந்த்தாக தோன்றியபோதும் இந்த இயக்கம் அரசாங்கத்திற்கு எதிராக மிகத் தெளிவாய் செலுத்தப்பட்டதாய் இருந்தது. அரசாங்கம் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது என்பது ஏறக்குறைய எல்லோருக்குமே மிகத் தெளிவாய் அறியப்பட்ட ஒன்றானது. எந்தப் பகுதியில் இருந்துமான குறைந்துபட்ட எதிர்ப்பைக் கூட சந்திக்காமல் சோவியத்துகள் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்க முடியும் (கைப்பற்றியிருக்க வேண்டும்). பதிலாக,சோசலிசப் புரட்சியாளர்களும் மென்ஷிவிக்குகளும் உருக்குலைந்து கொண்டிருந்த முதலாளித்துவ அரசாங்கத்திற்கு ஆதரவளித்தனர், அதனுடனான சமரசங்களில் தங்களை இன்னும் கூடுதலாய் ஆட்படுத்திக் கொண்டனர், அத்துடன் புரட்சிக்கு இன்னும் கூடுதலாய் மரண அபாயத்தை விளைவிக்கின்ற அதன் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்கின்ற நடவடிக்கைகளை எடுத்தனர்.

புரட்சி அனைத்து வர்க்கங்களுக்கும் வழக்கமான, அமைதியான காலங்களில் அறிந்திராத ஒரு வேகத்துடனும் முழுமையுடனும் அறிவொளியூட்டுகிறது. மேம்பட்ட ஒழுங்கமைப்பு கொண்டவர்களும் வர்க்கப் போராட்டம் மற்றும் அரசியல் விடயங்களில் வேறெவரொருவரையும் விட கூடுதல் அனுபவம் கொண்டவர்களுமான முதலாளிகள் தங்களது படிப்பினையை மற்றவர்களைக் காட்டிலும் துரிதமாய் கற்றுக் கொண்டனர். அரசாங்கத்தின் நிலை நம்பிக்கையற்றதாய் இருந்ததை உணர்ந்த அவர்கள், தொழிலாளிகளை முட்டாளாக்குவதற்கும், பிளவுபடுத்துவதற்கும் மற்றும் பலவீனப்படுத்துவதற்கும் மற்ற நாடுகளில் உள்ள முதலாளிகள் பல தசாப்தங்களாக 1848 காலத்திலிருந்தே பயன்படுத்தி வந்திருக்கின்ற ஒரு வழிமுறையில் இறங்கினர். இந்த வழிமுறைக்குப் பெயர் தான் கூட்டணி அரசாங்கம், அதாவது முதலாளித்துவ வர்க்கத்தின் உறுப்பினர்களையும் சோசலிசத்தில் இருந்து கட்சிமாறியவர்களையும் கொண்டு உருவாக்கப்படும் ஒரு கூட்டு மந்திரிசபையாகும்.

சுதந்திரமும் ஜனநாயகமும் ஒரு புரட்சிகரத் தொழிலாளர் இயக்கத்துடன் இணையாக பக்கம் பக்கமாய் வெகுகாலமாய் இருந்து வந்திருக்கக் கூடிய நாடுகளில், பிரிட்டனில் பிரான்சில், முதலாளிகள் இந்த வழிமுறையை பலமுறையும் மிக வெற்றிகரமாக செய்து வந்திருக்கின்றனர். சோசலிஸ்ட்தலைவர்கள் ஒரு முதலாளித்துவ மந்திரிசபையில் நுழைந்தபோதெல்லாம், அவர்கள் முதலாளிகளுக்கான முகத்திரைகளாக, கைப்பாவைகளாக, மறைப்புகளாக, தொழிலாளர்களை ஏமாற்றுவதற்கான சாதனங்களாகவே எப்போதும் நிரூபணமாகி வந்துள்ளனர். ரஷ்யாவின் ஜனநாயக மற்றும் குடியரசுவாத முதலாளிகளும் இதே வழிமுறையில் தான் இறங்கினர். சோசலிசப் புரட்சியாளர்களும் மென்ஷிவிக்குகளும் உடனடியாக தங்களைத் தாங்கள் முட்டாளாக்கிக் கொள்ள அனுமதித்தனர், செர்னோவ், செரெடெலி மற்றும் குழுவினர் இணைந்த கூட்டணி மந்திரிசபை மே 6 அன்று நடைமுறை உண்மையானது.

சோசலிசப் புரட்சியாளர் மற்றும் மென்ஷிவிக் கட்சிகளின் மூடர்கள் உற்சாகத்தில் இருந்தனர்,முட்டாள்தனமாய் தங்களது தலைவர்களின் அமைச்சரவை பெருமையின் ஒளியில் குளித்துக் கொண்டிருந்தனர். முதலாளிகள் சோவியத்துகளின் தலைவர்கள் என்கிற ஆசாமிகளிடம் மக்களுக்கு எதிரான உதவியாளர்களை கண்டு விட்டதிலும், கொஞ்ச காலமாய் ஸ்தம்பித்து நின்று விட்டிருந்தபோர்முனையிலான தாக்குதல் நடவடிக்கைகளை அதாவது ஏகாதிபத்திய வேட்டைப் போரை தொடர்வதற்கு ஆதரவளிப்பதற்கு வாக்குறுதியும் பெற்றுக் கொண்டு விட்டதிலும் மகிழ்ச்சியுடன் இதம் கண்டிருந்தனர். இந்தத் தலைவர்களின் பெருத்த கையாலாகாத்தனத்தை முதலாளிகள் நன்கு அறிந்து வைத்திருந்தனர். உற்பத்தி மீதான கட்டுப்பாடு குறித்து, இன்னும் உற்பத்தியின் ஒழுங்கமைப்பு குறித்து,ஒரு அமைதிக் கொள்கை குறித்து, மற்றும் இது மாதிரியான இன்ன பிற விடயங்கள் குறித்து தாங்கள் அளித்த வாக்குறுதிகள் ஒருபோதும் நிறைவேற்றப்படப் போவதில்லை என்பதை முதலாளித்துவ வர்க்கத்தினர் அறிந்திருந்தனர்.

அப்படித் தான் நடந்தது. மே 6 முதல் ஜூன் 9 வரையான, அல்லது ஜூன் 18 வரையான, புரட்சியின் அபிவிருத்தியின் இரண்டாவது கட்டம்  சோசலிசப் புரட்சியாளர்களையும் மென்ஷிவிக்குகளையும் எவ்வளவு எளிதாய் ஏமாற்றலாம் என்பதில் முதலாளிகளின் எதிர்பார்ப்புகளை முழுமையாய் நிரூபணம் செய்வதாய் அமைந்திருந்தது.

முதலாளிகளின் இலாபத்தின் நூறு சதவீதமும் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு விடும் என்றும் அவர்களது எதிர்ப்பு நொருக்கப்பட்டு விட்டது என்றும் இன்னும் பலவாறாய் தோன்றும் வகையிலான அலங்காரமான பேச்சுகள் மூலமாக பெஷெகோனோவ் மற்றும் ஸ்கோபெலேவ் தங்களையும் மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருந்த அதே சமயத்தில், முதலாளிகள் தொடர்ந்து தங்களது நிலையை வலுப்படுத்திக் கொண்டிருந்தனர். முதலாளிகளை அடக்குவதற்கு இந்தக் காலகட்டத்தில் எந்த நடவடிக்கையும், முற்றிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சோசலிசத்தில் இருந்து கட்சிமாறி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்கள் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கான வெறும் பேச்சு எந்திரங்களாக நிரூபணமாகினர். அதேசமயத்தில் அரசு நிர்வாகத்தின் ஒட்டுமொத்த எந்திரமும் உண்மையில் அதிகாரத்துவத்தின் (உத்தியோகபூர்வம்) மற்றும் முதலாளித்துவத்தின் கரங்களிலேயே தொடர்ந்து இருந்தது. தொழிற்துறையின் துணை அமைச்சராய் இருந்த தீயபெயர்பெற்ற பால்சின்ஸ்கி அந்த எந்திரத்தின் எடுத்துக்காட்டான ஒரு பிரதிநிதியாக இருந்து, முதலாளிகளுக்கு எதிரான ஒவ்வொரு நடவடிக்கைக்கும் அவர் முட்டுக்கட்டையிட்டார். அமைச்சர்களோ அனைத்துமே பழையமாதிரி இருக்கும் என பசப்புவார்த்தைகள் பேசிக்கொண்டிருந்தனர்.   

முதலாளித்துவ வர்க்கம் புரட்சியுடன் போராட குறிப்பாக அமைச்சர் செரெடெலியைப் பயன்படுத்தியது. குரோன்ஸ்ரட்டில் நியமனம் செய்யப்பட்ட ஒரு ஆணையரை நீக்குமளவுக்கு உள்ளூர் புரட்சிகரவாதிகள் துணிந்து நின்றபோது அவர்களை சாந்தப்படுத்த இவர் அனுப்பப்பட்டார். [5]  முதலாளித்துவ வர்க்கம் குரோன்ஸ்ரட்டிற்கு எதிராக பொய், அவதூறு மற்றும் பழிச் சொல் பிரச்சாரத்தை  நம்பமுடியாத அளவுக்கு உரத்த, வன்முறையான மற்றும் நச்சுத்தனமான வகையில் தங்களது பத்திரிகைகளில் தொடக்கியது. ரஷ்யாவிடம் இருந்து பிரிந்து விட விருப்பம் கொண்டிருந்ததாக அதன் மீது குற்றம் சாட்டியதோடு குட்டி முதலாளித்துவ வர்க்கத்தையும் பிலிஸ்டைன்களையும் பயமுறுத்துவதற்கு இதனையும் இதனையொத்த அபத்தமான குற்றச்சாட்டுகளையும் திரும்பத் திரும்பக் கூறியது. ஒரு சராசரியான முட்டாள் பயந்தாங்கொள்ளி பிலிஸ்டைனாக இருந்த செரெடெலி முதலாளித்துவ அவதூறு என்னும் தூண்டில் முள்ளை விழுங்குவதில் எல்லோரிலும் மிகவும்மனச்சாட்சிக்குட்பட்டவராய் இருந்தார்; குரோன்ஸ்ரட்டை நொருக்குவதிலும் தணித்து விடுவதிலும்அவர் தான் மிகுந்த மும்முரம் காட்டுபவராய் இருந்தார், எதிர்ப் புரட்சிகர முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு எடுபிடியின் பாத்திரத்தைத் தான் அவர் ஆற்றிக் கொண்டிருந்தார் என்பதை அறியாமல்.குரோன்ஸ்ரட்டின் ஆணையர் வெறுமனே அரசாங்கத்தால் நியமனம் செய்யப்படுகிறவராய் இருக்க மாட்டார், மாறாக உள்ளூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசாங்கத்தால் உறுதிசெய்யப்படுபவராய்இருப்பார் என்று புரட்சிகர குரோன்ஸ்ரட்டுடன் எட்டப்பட்ட சமரசத்திற்கான கருவியாக அவர் ஆகியிருந்தார். முதலாளித்துவ வர்க்கத்திற்காக சோசலிசத்தை விட்டுச் சென்ற அமைச்சர்களுக்கு அவர்கள் நேரத்தை வீணடிக்கும் துயரமான சமரசங்களில் ஒன்று தான் இது. 

புரட்சிகரத் தொழிலாளர்கள் முன்பாக அல்லது சோவியத்துகளில் எங்கெல்லாம் ஒரு முதலாளித்துவ அமைச்சர் அரசாங்கத்தைப் பாதுகாத்துப் பேச, தோன்ற முடிவதில்லையோ அங்கெல்லாம் ஸ்கோபெலேவ், செரெடேலி, செர்னோவ் அல்லது வேறு ஏதேனும் சோசலிச அமைச்சர் தோன்றி (அல்லது இன்னும் துல்லியமாய்ச் சொல்வதானால் முதலாளித்துவ வர்க்கத்தால் அனுப்பப்பட்டு) தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையைச் செவ்வனே செய்து முடித்தனர்; மந்திரிசபையைப் பாதுகாத்துப் பேச, முதலாளிகளைப் பூசிமறைக்க, அத்துடன் வாக்குறுதிக்குப் பின் வாக்குறுதியாய் அளித்தும் காத்திருங்கள், காத்திருங்கள், மற்றும் காத்திருங்கள் என்று மக்களுக்கு ஆலோசனை கூறியும் மக்களை முட்டாளாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் அவர்கள் செய்வர்.

அமைச்சர் செர்னோவ் குறிப்பாக தனது முதலாளித்துவ சகாக்களுடன் பேரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார் ஜூலை விடயத்தில், ஜூலை 3-4 இயக்கத்திற்குப் பின் தொடங்கிய புதிய அதிகார நெருக்கடி குறித்தும், மந்திரிசபையில் இருந்து கடேட்களின் கட்சியினர் இராஜினாமா செய்தது குறித்தும் மக்களுக்கு ரொம்பவும் உபயோகமான பயனுள்ள சுவாரசியமான ஒரு வேலையில் அமைச்சர் செர்னோவ் தொடர்ந்து ஈடுபட்டிருந்தார். தனது முதலாளித்துவ சகாக்களைஊக்கப்படுத்துவது மற்றும் நிலங்களை வாங்குவதை மற்றும் விற்பதைத் தடைசெய்வதற்கேனும் உடன்படுவதற்கு அவர்களைப் பயமுறுத்துவது ஆகியவையே அந்த வேலை. இந்தத் தடையானது பெட்ரோகிராட்டில் நடந்த அனைத்து ரஷ்ய விவசாய  பிரதிநிதிகள் காங்கிரசில் விவசாயிகளுக்கு மிகுந்த பயபக்தியுடன் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது தான். ஆனால் அந்த வாக்குறுதி வெறும் வாக்குறுதியாக மட்டுமே இருந்து வந்திருந்தது. புரட்சிகர அலை தோன்றும் வரை, மே அல்லது ஜூனில் அதனை நிறைவேற்ற செர்னோவால் முடியவில்லை. ஜூலை 3-4ல் தன்னியல்பாய் எழுச்சி வெடித்து அதேசமயத்தில் மந்திரிசபையில் இருந்து கடேட்டுகள் இராஜினாமாவும் நடந்ததை அடுத்து இந்த நடவடிக்கை செயல்படுத்தப்படுவது சாத்தியமானது. அதன்பின்னும் கூட அது ஒரு தனிமைப்பட்ட நடவடிக்கையாகவே நிரூபணமானது. நிலவுடைமையாளர்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை புலப்படும் மட்டத்திற்கு ஊக்குவிக்கவும் அது திறனற்றிருந்தது.

இதனிடையே போர்முனையில், ஏகாதிபத்திய வேட்டைப் போரைத் தொடர்வது என்கின்ற எதிர்ப்புரட்சிகர ஏகாதிபத்தியப் பணி, மக்களிடம் வெறுப்பைச் சம்பாதித்திருந்த குச்கோவ் சாதிக்க முடியாதிருந்த ஒரு பணி, சோசலிச புரட்சிக் கட்சியின் புதிதாய் உருவாக்கப்பட்ட  உறுப்பினரானபுரட்சிகர ஜனநாயகவாதியான கெரென்ஸ்கி* மூலம் வெற்றிகரமாகவும் அற்புதமாகவும் சாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தனது சொந்த நாவன்மையில் சிறந்து விளங்கிய இவருக்கு ஏகாதிபத்தியவாதிகள் தூபம் போட்டனர். இவரைத் தங்களது பகடையாக அவர்கள் பயன்படுத்தினர். அவர் போற்றப்பட்டார் புகழப்பட்டார்- காரணம் சார் இரண்டாம் நிகோலஸ் பிரிட்டன் மற்றும் பிரான்சின் முதலாளிகளுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டுக் கொண்டிருந்த போரை, ரஷ்ய முதலாளிகள் கான்ஸ்டாண்டிநோபிள் மற்றும் லுவோவ், எர்சரம் மற்றும் டிரெபிசோண்டைக் கைப்பற்றுகிற வகையில் நடத்தப்பட்டு வந்த ஒரு போரை தொடர்ந்து நடத்துவதற்கு புரட்சிகரத் துருப்புகளை ஒப்புக் கொள்ளச் செய்வதற்கு பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்து முதலாளிகளுக்கு அவர் உண்மையாக சேவகம் செய்தார் என்பதால்.

இப்படித் தான் ரஷ்யப் புரட்சியின் இரண்டாம் கட்டம் மே 6 முதல் ஜுன் 9 வரையான கட்டம் கடந்தது.சோசலிச அமைச்சர்களால் கவசம் பெற்று பாதுகாக்கப்பட்டிருந்த எதிர்ப்புரட்சிகர முதலாளித்துவ வர்க்கம் வலிமையைப் பெருக்கியது, தங்களது நிலையை திண்மைப்படுத்திக் கொண்டது, அத்துடன் வெளியிலிருந்தான எதிரிக்கு எதிராகவும் உள்முகமான எதிரிக்கு, அதாவது புரட்சிகரத் தொழிலாளர்களுக்கு, எதிராகவும் ஒரு தாக்குதலுக்குத் தயாரிப்பு செய்தது.

VII

ஜூன் 9 அன்று, புரட்சிகரத் தொழிலாளர் கட்சியான போல்ஷ்விக் கட்சி, தடுக்கவியலாமல் பெருகியிருந்த மக்கள் அதிருப்திக்கும் மற்றும் அவர்கள் சந்தித்திருந்த அவமரியாதைக்கும் ஒரு ஒழுங்கமைந்த வெளிப்பாட்டைக் கொடுப்பதற்கு பெட்ரோகிரேடில் ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு தயாரிப்பு செய்து கொண்டிருந்தது. முதலாளித்துவ வர்க்கத்துடனான சமரசங்களில் சிக்கிக் கொண்டும் போர்முனைத் தாக்குதல் என்னும் ஏகாதிபத்தியக் கொள்கையில் பிணைக்கப்பட்டு இருந்த சோசலிசப் புரட்சியாளர்கள் மற்றும் மென்ஷிவிக் தலைவர்கள் மிரண்டனர். பரந்த மக்களிடையே தாங்கள் செல்வாக்கை இழந்து கொண்டிருப்பதை அவர்கள் உணர்ந்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக ஒரு பொதுவான ஓலம் கிளம்பியது மற்றும் இந்த முறை சோசலிசப் புரட்சியாளர்கள் மற்றும் மென்ஷிவிக்குகளுடன் சேர்ந்து கொண்டு எதிர்ப் புரட்சிகர கடேட்டுகள் இந்த கூச்சலில் இணைந்து கொண்டனர். அவர்களது வழிகாட்டலின் கீழ், அத்துடன் முதலாளிகளுடன் சமரசம் செய்து கொள்கின்ற அவர்களது கொள்கையின் ஒரு விளைவாய், குட்டி முதலாளித்துவ வெகுஜனங்கள் எதிர்ப்புரட்சிகர முதலாளித்துவ வர்க்கத்துடனான கூட்டணியை நோக்கி சாய்வதென்பது நன்கு தெளிவானதாயும் வெளிப்பட்டதாயும் ஆனது. இது தான் ஜூன் 9 நெருக்கடியின் வரலாற்று முக்கியத்துவமும் வர்க்க அர்த்தமும் ஆகும்.

ஐக்கியபட்ட கடேட்டுகள், சோசலிசப் புரட்சியாளர்கள் மற்றும் மென்ஷிவிக்குகள் ஆகியோருக்கு எதிராய் அந்தத் தருணத்தில் தொழிலாளர்களை ஒரு தோல்விப் போராட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்கு விருப்பமில்லாமல் போல்ஷிவிக்குகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். ஆயினும் பிந்தையவர்கள் குறைந்தபட்சம் மக்கள் நம்பிக்கையின் சுவடையேனும் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு ஜூன் 18 அன்று ஒரு பொது ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கத் தள்ளப்பட்டனர். இதில் பிந்தையவர்களுடன் முதலாளித்துவ வர்க்கமும் ஆவேசத்துடன் உடன்நின்றது. முதலாளித்துவம் ஆத்திரமுற்று, குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் பாட்டாளி வர்க்கத்தை நோக்கி ஊசலாடுவதைச் சரியாக அடையாளம் கண்டுகொண்ட முதலாளித்துவம்  போர்முனையிலான தாக்குதலை நடாத்துவதன் மூலம் ஜனநாயகவாதிகளின் நடவடிக்கையை முடக்குவதற்குத் தீர்மானித்தது.

உண்மையில் ஜூன் 18, பெட்ரோகிராட் மக்களிடையே புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் முழக்கங்களுக்கும் போல்ஷிவிசத்தின் முழக்கங்களுக்கும் கிட்டிய கண்கவர் வெற்றியால் குறிக்கப்பட்டது. ஜூன் 19 அன்று முதலாளித்துவ வர்க்கமும் போனபார்டிச கெரென்ஸ்கியும் போர்முனையிலான தாக்குதல் ஜூன் 18 அன்றே தொடங்கி விட்டிருந்ததாக முகச்சலனம் காட்டாமல் அறிவித்தனர்.

தாக்குதலின் அர்த்தம் முதலாளிகளின் நலன்களின் பேரில் அத்துடன் பரந்த உழைக்கும் மக்களின் பெரும்பான்மையினருக்கு எதிராக வேட்டைப் போர் தொடர்வது என்பதே ஆகும். அதனால் தான் தாக்குதலுக்கு ஒரு பக்கத்தில், மேலாதிக்கம் பிரம்மாண்டமாய் வளர்வது மற்றும் இராணுவ அதிகாரம் (இதனையடுத்து அரசு அதிகாரமும்) போனபார்ட்டிஸ்டுகளின் இராணுவக் கும்பலுக்கு மாற்றப்படுவது ஆகியவையும், இன்னொரு பக்கத்தில், பரந்த மக்களுக்கு எதிராக வன்முறை பயன்படுத்தப்படுவது,சர்வதேசியவாதிகள் துன்புறுத்தப்படுவது, கிளர்ச்சிக்கான சுதந்திரம் தடை செய்யப்படுவது, மற்றும் போருக்கு எதிரானவர்கள் கைது செய்யப்படுவது மற்றும் சுடப்படுவது ஆகியவையும் கைகோர்த்து வந்தன.

மே 6 சோசலிசப் புரட்சியாளர்களையும் மென்ஷிவிக்குகளையும் முதலாளித்துவத்தின் வெற்றிப் பவனி வாகனத்தில் ஒரு கயிறால் பிணைத்தது என்றால், ஜூன் 19 அவர்களை முதலாளிகளின் சேவகர்களாய் ஒரு சங்கிலியால் கட்டியிழுத்தது.

VIII

கொள்ளைப் போர் தொடர்ந்ததன் காரணத்தால் மக்களின் கசப்புணர்வு இயல்பாகவே இன்னும் துரிதமாயும் தீவிரமாயும் வளர்ந்தது. ஜூலை 3-4 தேதிகள் அவர்களது கோபம் வெடித்தெழக் கண்டன. இதனைக் கட்டுப்படுத்தி சாத்தியமான அளவுக்கு ஒழுங்கமைத்துக் கொணர போல்ஷிவிக்குகள் முயற்சி செய்தனர்.

முதலாளித்துவ வர்க்கத்தின் அடிமைகளாய் இருந்த சோசலிசப் புரட்சியாளர்களும் மென்ஷிவிக்குகளும் தங்களது எஜமானால் சங்கிலியிடப்பட்டு பெட்ரோகிராட்டுக்கு புரட்சிகரத் துருப்புகளை அனுப்ப, மீண்டும் மரண தண்டனையை கொண்டுவர, தொழிலாளர்கள் மற்றும் புரட்சிகரத் துருப்புகளை நிராயுதபாணியாக்க, கைது செய்ய மற்றும் வேட்டையாட, அத்துடன் செய்தித்தாள்களை விசாரணையின்றி மூட என்ற எல்லாவற்றையும் செய்வதற்கு உடன்பட்டனர். முதலாளித்துவ வர்க்கத்தினர் அரசாங்கத்தில் முழுமையாகக் கையிலெடுக்க முடியாமலும் அதே சமயத்தில் சோவியத்துகள் கையிலெடுக்க விரும்பாமலும் இருந்த அதிகாரமானது இராணுவக் கும்பலான போனபாட்ஸ்டுகளின் கரங்களில் விழுந்தது. இவர்கள் கடேட்டுகள் மற்றும் கறுப்பு நூற்றவர்கள், நிலவுடைமையாளர்கள் மற்றும் முதலாளிகளால் முழுமையாக ஆதரிக்கப்பட்டனர் என்பது அறிந்ததே.

ஏணியில் படிப்படியாய் கீழிறக்கம். முதலாளித்துவத்துடன் சமரச ஏணியில் கால் வைத்த பின்னர் சோசலிசப் புரட்சியாளர்களும் மென்ஷிவிக்குகளும் தடுப்பில்லாமல் சறுக்கி கீழே அடிமட்டத்திற்கு வந்து விட்டனர். பிப்ரவரி 28 அன்று, பெட்ரோகிராட் சோவியத்தில் அவர்கள் முதலாளித்துவ அரசாங்கத்திற்கு நிபந்தனையுடனான ஆதரவை வாக்குறுதியளித்தனர். மே 6 அன்று அது நிலைகுலைவதில் இருந்து காப்பாற்றிய அவர்கள், போர்முனைத் தாக்குதலுக்கு உடன்பட்டதன் மூலம் அதன் சேவகர்களாகவும் பாதுகாவலர்களாகவும் தங்களை ஆக்கிக் கொள்ள அனுமதித்தனர். ஜூன் 9 அன்று புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்திற்கு எதிரான ஆவேசமான கோபம், பொய் மற்றும் அவதூறுப் பிரச்சாரத்தில் எதிர்ப் புரட்சிகர முதலாளித்துவ வர்க்கத்தினருடன் அவர்கள் ஒன்றுபட்டு நின்றனர். ஜூன் 19 அன்று அவர்கள் வேட்டையாடும் போரைத் தொடர்வதற்கு ஒப்புதலளித்தனர். ஜூலை 3 அன்று புரட்சிகரத் துருப்புகளை விசாரிக்க அழைக்க அவர்கள் ஒப்புக் கொண்டனர். இதுதான் போனபாட்டிஸ்டுகளிடம் அவர்கள் தங்களது முழுமையான அதிகாரத்தை சரணடையச் செய்ததன் தொடக்கமாய் அமைந்தது. ஏணியில் படிப்படியாய்க் கீழிறங்கினர்.

சோசலிச புரட்சியாளர்கள் மற்றும் மென்ஷிவிக் கட்சிகளின் இந்த அவமானகரமான இறுதிக் காட்சி சந்தர்ப்பவசமாய் அமைந்ததல்ல, மாறாக ஐரோப்பாவிலான அனுபவம் திரும்பத் திரும்பத் தாங்கி நிற்பதைப் போல, சிறு முதலாளிகள் மற்றும் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார அந்தஸ்தின் ஒரு பின்விளைவு தான் அது.  

IX

சிறு முதலாளி ஒரு உண்மையான எஜமானன் ஆவதற்கும், வேலை கொடுப்பதில் வலிமையானநிலைக்கு, ஒரு முதலாளியின் நிலைக்கு உயர்வதற்கும் செய்யும் பிரயத்தனங்களை ஒவ்வொருவரும் கண்டிருக்கின்றனர். முதலாளித்துவம் கோலோச்சுகிற காலம் வரைக்கும், சிறு முதலாளிக்கு ஒரு முதலாளி ஆவதைத் தவிர (இதற்கான சாத்தியக்கூறு நூறு சிறு முதலாளிகளில் ஒருவருக்குத் தான்),அல்லது ஒரு நொடித்துப் போன மனிதனாக, ஒரு பாதிப் பாட்டாளியாக, அத்துடன் இறுதியாக ஒரு பாட்டாளியாக ஆவதைத் தவிர வேறு எந்த மாற்றுவழியும் இல்லை. இதுவே அரசியலிலும் உண்மையாய் இருக்கிறது: குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகள், குறிப்பாக அவர்களது தலைவர்கள், முதலாளித்துவத்தின் அடியொற்றிப் பின்செல்ல முனைகின்றனர். பெரும் முதலாளிகளுடன் உடன்பாட்டை எட்டும் சாத்தியம் குறித்த வாக்குறுதிகள் மற்றும் உறுதிமொழிகளைக் கொண்டு குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளின் தலைவர்கள் தங்களது மக்களை தேற்றுகின்றனர்; அதிகப்பட்சமாய், ஒரு வெகு குறுகிய காலத்திற்கு, முதலாளிகளிடம் இருந்து உழைக்கும் மக்களில் ஒரு சிறிய மேல் பிரிவிற்கு அவர்கள் குறிப்பிட்ட சிறிய சலுகைகளையும் பெறுகின்றனர்; ஆனால் ஒவ்வொரு தீர்மானமான பிரச்சினையிலும், ஒவ்வொரு முக்கியமான விடயத்திலும், இந்தக் குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் எப்போதும் முதலாளித்துவத்தின் பின்னால் ஒட்டிக் கொண்டிருக்கும் வாலாகவும், நிதி முதலைகளின் கரங்களில் ஒரு விசுவாசமான கருவியாகவுமே இருந்திருக்கின்றனர். பிரிட்டன் மற்றும் பிரான்சிலான அனுபவம் இதனை மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது.

1917 பிப்ரவரி முதல் ஜூலை வரையான ரஷ்யப் புரட்சியின் அனுபவம், நிகழ்வுகள் அசாதாரணமான துரிதத்துடன் அபிவிருத்தியுற்றதொரு சமயத்தில், குறிப்பாக ஏகாதிபத்தியப் போரின் மற்றும் அது கொண்டுவந்த ஆழமான நெருக்கடியின் பாதிப்பின் கீழ், குட்டி முதலாளித்துவத்தின் நிலை ஸ்திரமற்றது என்கின்ற பழைய மார்க்சிச உண்மையை மிகத் திண்ணமாகவும் புலப்படக் கூடிய வகையிலும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

உழைக்கும் மக்கள் சோசலிசப் புரட்சியாளர்கள் மற்றும் மென்ஷிவிக் கட்சிகளின் துரோகப் பாத்திரத்தை தெளிவாய்ப் புரிந்து கொண்டு அவர்களுடன் முழுமையாய் முறித்துக் கொள்ளாத வரையிலும், முதலாளித்துவத்துடன் எல்லா சமரசங்களையும் கைதுறந்து விட்டு தீர்மானத்துடன் புரட்சிகரத் தொழிலாளர்களின் பக்கம் நிற்காத வரையிலும் அவர்கள் போர், பஞ்சம், மற்றும் நிலவுடைமையாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு அடிமையாய் இருப்பது ஆகியவற்றில் இருந்து தப்பிக்கவே முடியாது என்பதே ரஷ்யப் புரட்சியின் படிப்பினை ஆகும். ஏழை விவசாயிகளால் ஆதரளிக்கப்பட்டால் புரட்சிகரத் தொழிலாளர்கள் மட்டுமே முதலாளிகளின் எதிர்ப்பை நொருக்கவும் இழப்பீடற்ற நிலத்தை பெற்றுக்கொள்ளவும், முழுமையான சுதந்திரம், பஞ்சம் மற்றும் போர் மீதான வெற்றி மற்றும் நியாயமான நீடித்த அமைதி ஆகியவற்றைப் பெறுவதற்கு மக்களை அழைத்துச் செல்ல முடியும்.

பின்னுரை

இந்தக் கட்டுரை ஜூலை இறுதியில் எழுதப்பட்டது, அது உரையில் வெளிப்படையாய் நிற்கிறது.

ஆகஸ்ட் மாதத்தின் போதான புரட்சியின் வரலாறு இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பனவற்றை முழுமையாக உறுதிசெய்திருக்கிறது. அதன்பின், ஆகஸ்ட் இறுதியில், கோர்னிலோவ் கலகம் புரட்சியில் ஒரு புதிய திருப்பத்திற்குக் காரணமானது, கடேட்டுகள் எதிர்ப்புரட்சிகர ஜெனரல்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு சோவியத்துகளை தடுக்கவும் முடியாட்சியை மீட்சி செய்யவும் பாடுபட்டுக் கொண்டிருந்தனர் என்பதை ஒட்டுமொத்த மக்களுக்கும் அது தெளிவாய் விளங்கப்படுத்தியது. புரட்சியின் இந்தப் புதிய திருப்பம் எவ்வளவு வலிமையுடன் இருக்கிறது என்பதையும் முதலாளித்துவத்துடன் மரணகரமான சமரசக் கொள்கைக்கு முற்றுப் புள்ளி வைப்பதில் அது வெற்றி பெறுமா என்பதையும் கூடிய விரைவில் வருங்காலம் காட்டும்.

என்.லெனின்

செப்டம்பர் 6, 1917

குறிப்புகள்

[1] போனபார்டிசம் (போனபார்ட் என்கிற இரண்டு பிரெஞ்சு சக்கரவர்த்திகளின் பெயரில் இருந்து) என்கிற பெயர், முதலாளிகளின் கட்சிகளுக்கும் தொழிலாளர்களின் கட்சிகளுக்கும் இடையிலான மிகக் கூர்மையானதொரு போராட்டத்தை அனுகூலமாய் எடுத்துக் கொண்டு கட்சிச் சார்பற்றதாய் காட்டிக் கொள்ள முயற்சி செய்கிற ஒரு அரசாங்கத்திற்குப் பயன்படுத்தப்படுகின்ற பெயராகும். உண்மையில் முதலாளிகளுக்கு சேவை செய்கின்ற இத்தகையதொரு அரசாங்கம் தொழிலாளர்களை வாக்குறுதிகளாலும் சில்லரைச் சலுகைகளாலும் ஏமாற்றுகிறது. - லெனின்

[2] ஜூலை 12 (25) அன்று இடைக்கால அரசாங்கம் போர்முனையில் மரண தண்டனையை அறிமுகப்படுத்தியது. படையணிக்கான இராணுவப் புரட்சிகர தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டன. அவை அளித்த தண்டனைகள் உடனடியாக அமலுக்கு வந்ததோடு தாமதமின்றி நிறைவேற்றப்பட்டன.

[3] ட்ருடோவிக்குகள் (Trudovik) என்பவர்கள் குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளின் (நரோத்னிக் சார்பு கொண்ட விவசாயிகள் மற்றும் புத்திஜீவிகள்) ஒரு நாடாளுமன்றக் குழுவாய் இருந்தனர். 1906 ஏப்ரலில் முதல் நாடாளுமன்றத்தின் விவசாய டெபுடிஸ்களால் இந்தக் குழு உருவாக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் இக்குழு Cadetsகளுக்கும் புரட்சிகர சமூக ஜனநாயகவாதிகளுக்கும் இடையில் ஊசலாடியது. முதலாம் உலகப் போரின் போது ட்ருடோவிக்குகளில் அநேகமானோர் சமூக மேலாதிக்க நிலைப்பாட்டைப் பற்றியிருந்தனர். பிப்ரவரி புரட்சிக்குப் பின்னர் ட்ருடோவிக்குகள்,குலாக்குகளின் நலன்களை வெளிப்படுத்தும் முகமாக, இடைக்கால அரசாங்கத்தை செயலூக்கத்துடன் ஆதரித்தனர். அக்டோபர் புரட்சிக்கான அவர்களது எதிர்வினை குரோதப்பட்டதாய் இருந்தது, அவர்கள் முதலாளித்துவத்தின் எதிர்ப்புரட்சிகர நடவடிக்கைகளில் பங்கெடுத்துக் கொண்டனர்.

[4] பெட்ரோகிராட் சோவியத்தின் சமரச நோக்கத்துடனான நிர்வாகக் குழு மார்ச் 8 (21) அன்று இடைக்கால அரசாங்கத்தின் செயல்பாட்டில் தாக்கம் செலுத்தவும் கட்டுப்பாடு செலுத்தவும் எடுத்த முடிவின் படி தொடர்பு ஆணையம் (The Contact Commission) உருவாக்கப்பட்டது. எம்.ஐ.ஸ்கோபேலெவ்,ஒய்.எம்.ஸ்டெக்லோவ், என்.என்.சுகனோவ், வி.என்.பிலிப்போவ்ஸ்கி மற்றும் என்.எஸ்.செடிசி ஆகியோர் இதன் உறுப்பினர்களாய் இருந்தனர் (தொடர்ந்து வி.எம்.செர்னோவ் மற்றும் ஐ.ஜி.செரெடெலியும் சேர்க்கப்பட்டனர்). இடைக்கால அரசாங்கம் அதன் எதிர்ப்புரட்சிகர கொள்கைகளை மறைத்துக் கொள்ள பெட்ரோகிரேடு சோவியத்தின் பெருமையை அனுகூலமாகக் கொள்வதற்கு இந்த ஆணையம் உதவியது. மென்ஷிவிக்குகளும் சோசலிசப் புரட்சியாளர்களும் இதன் உதவியுடன் மக்களை,சோவியத்துகளுக்கு அதிகாரத்தை மாற்றச் செய்யும் நோக்கத்துடனான புரட்சிகர நடவடிக்கையில் இருந்து தள்ளி வைத்திருக்க நம்பிக்கை கொண்டிருந்தனர். இந்த ஆணையம் 1917 ஏப்ரல் மாத மத்தியில் கைவிடப்பட்டது, அதன் செயல்பாடுகள் நிர்வாகக் குழுவின் பீரோவிடம் ஒப்படைக்கப்பட்டன.

[5] மே 17 (30), 1917 அன்று, குரோன்ஸ்ரட் சோவியத்துக்கும் இடைக்கால அரசாங்கத்தின் ஆணையரான பெபெலேயேவுக்கும் இடையிலான மோதலை ஒட்டி, சோவியத்தின் கட்சியிணைப்பற்ற பிரிவு அரசாங்க ஆணையரின் அலுவலகத்தைத் தடை செய்தும் குரோன்ஸ்ரட் சோவியத்துக்கு முழு அதிகாரங்களை வழங்கியும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. குரோன்ஸ்ரட்டின் ஒரே அதிகாரமையம் தொழிலாளர் மற்றும் சிப்பாய்கள் பிரதிநிதிகளின் சோவியத் மட்டும் தான், அரசாட்சி தொடர்பான அத்தனை விடயங்களிலும் அது பெட்ரோகிராட் தொழிலாளர் மற்றும் சிப்பாய்கள் பிரதிநிதிகளின் சோவியத்துடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று இந்தத் தீர்மானம் கூறியது. போல்ஷ்விக்குகள் இத்தீர்மானத்திற்கு ஆதரவளித்தனர். முதலாளித்துவ வர்க்கத்தின்,சோசலிச புரட்சியாளர்களின் மற்றும் மென்ஷிவிக்குகளின் ஊடகங்கள் குரோன்ஸ்ரட் மக்களுக்கு எதிராகவும் போல்ஷிவிக்குகளுக்கு எதிராகவும் அவதூறுப் பிரச்சாரத்தைத் தொடக்கின. ரஷ்யா சிதறத் தொடங்கிவிட்டது என்றும், ஒரு அராஜகவாத ஆட்சி புகுந்து விட்டது என்றும், குரோன்ஸ்ரட் பிரிந்துபோய் விட்டது மற்றும் பிற பல வகையில் அவை குற்றம் சாட்டின.

குரோன்ஸ்ரட் நிகழ்வைக் கையாளுவதற்கு முதலில் பெட்ரோகிராட் சோவியத்தும் பின்னர் இடைக்கால அரசாங்கமும் பேச்சுவார்த்தைக் குழுவை அனுப்பின. முந்தைய குழுவில் செக்டிசி,கோட்ஸ் மற்றும் மற்றவர்கள் இருந்தனர், பிந்தைய குழுவில் அமைச்சர்கள் ஸ்கோபெலேவ் மற்றும் செரெடெலியும் இருந்தனர். ஆணையர் சோவியத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரது தேர்வு இடைக்கால அரசாங்கத்தால் உறுதி செய்யப்படும் என்பதான முன்மொழிவின் மூலம் குரோன்ஸ்டாட் சோவியத்தில் சமரசம் செய்வதில் இரண்டு அமைச்சர்களும் வெற்றி கண்டனர். இடைக்கால அரசாங்கத்தின் அதிகாரத்தை குரோன்ஸ்டாட் சோவியத் அங்கீகரிக்கிறது என்கிற ஒரு அரசியல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த அங்கீகாரம் நிச்சயமாக விமர்சனத்தையும் மற்றும் புரட்சிகர ஜனநாயகவாதிகள் ஒரு புதிய மத்திய அதிகாரத்தை உருவாக்க வேண்டும் அத்துடன்  அனைத்து அதிகாரங்களும் தொழிலாளர் மற்றும் சிப்பாய்களின் பிரதிநிதிகளின் சோவியத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்கிற விருப்பத்தையும் இல்லாது செய்து விடவில்லை என்று மேலும் கூறப்பட்டிருந்தது. போல்ஷிவிக்குகள் தத்துவார்த்த செல்வாக்கை செலுத்துவதன் மூலமாக இதனைச் சாதிப்பார்கள் என்கிற நம்பிக்கையை இந்தத் தீர்மானம் வெளிப்படுத்தியது. ரஷ்யாவின் எஞ்சிய பகுதிகளில் இருந்து குரோன்ஸ்ரட்டைத் துண்டாடும் நோக்கத்தை குரோன்ஸ்ரட் போல்ஷிவிக்குகளுக்குக் கற்பிக்கும் முயற்சிகளுக்கு எதிராக அழுத்தம்திருத்தமான எதிர்ப்புடன் இது நிறைவுற்றது.

[6] புரட்சிக்கு எதிரான கோர்னிலோவ் கலகம் முதலாளித்துவ வர்க்கத்தினராலும் மற்றும் நிலவுடைமையாளர்களாலும் 1917 ஆகஸ்டில் நடத்தப்பட்டது. அப்போது இராணுவத்தின் உச்ச தலைமைத் தளபதியாக இருந்த சாரிச ஜெனரலான கோர்னிலோவ் தலைமையில் இது நடந்தது. பெட்ரோகிரேடை கைப்பற்றுவது, போல்ஷ்விக் கட்சியை நொருக்குவது, சோவியத்துகளைப் பிரித்தகற்றுவது, ஒரு இராணுவ சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவது, அத்துடன் முடியாட்சியின் மீட்சிக்கான பாதையமைப்பது ஆகிய நோக்கங்களை சதிகாரர்கள் கொண்டிருந்தனர். இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான ஏ.எப்.கெரென்ஸ்கியும் இந்த சதியில் சேர்ந்து கொண்டார். ஆயினும்,அந்தக் கலகம் தொடங்கிய போது கோர்னிலோவிடம் இருந்து அவர் தன்னை விலக்கிக் கொண்டார். காரணம் கோர்னிலோவுடன் சேர்த்து தானும் தூக்கியெறியப்படுவோம் என்று அவர் அஞ்சினார். கோர்னிலோவை இடைக்கால அரசாங்கத்திற்கு எதிரான ஒரு கிளர்ச்சியாளர் எனவும் அவர் அறிவித்தார்.

இந்த கலகம் ஆகஸ்ட் 25 (செப்டம்பர் 7) அன்று தொடங்கியது. கோர்னிலோவ் மூன்றாவது குதிரைப் படையை பெட்ரோகிராட்டுக்கு எதிராகச் செலுத்தினார். பெட்ரோகிராட்டிலும், கோர்னிலோவ் ஆதரவாளர்களின் எதிர்ப் புரட்சிகர அமைப்புகள் நடவடிக்கைக்கு தயாராகிக் கொண்டிருந்தன.

கோர்னிலோவுக்கு எதிராக போல்ஷிவிக் கட்சி மக்களுக்குத் தலைமை தாங்கியது. லெனினின் பரிந்துரையின் படி அது தொடர்ந்து இடைக்கால அரசாங்கத்தையும் மற்றும் அதனைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்த சோசலிச புரட்சியாளர்கள் மற்றும் மென்ஷிவிக்குகளையும் அம்பலப்படுத்தியது. போல்ஷிவிக் கட்சியின் மத்திய குழுவின் அழைப்பிற்கு மறுமொழியாக,கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட பெட்ரோகிரேடின் தொழிலாளர்கள், புரட்சிகர சிப்பாய்கள் மற்றும் மாலுமிகள் எழுச்சி கண்டனர். பெட்ரோகிராட் தொழிலாளர்கள் உடனடியாக செங்காவல் பிரிவுகளை உருவாக்கினர். பல்வேறு இடங்களிலும் புரட்சிகரக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. கோர்னிலோவ் துருப்புகளின் முன்னேற்றம் தடுக்கப்பட்டது, அவர்களை நம்பிக்கையிழக்கச் செய்யும் போல்ஷிவிக் பிரச்சாரம் தொடங்கியது.

போல்ஷிவிக் கட்சியின் தலைமையின் கீழ் தொழிலாளர்களும் விவசாயிகளும் கோர்னிலோவ் கலகத்தை அணைத்தனர். மக்களின் நெருக்குதலின் கீழ் இடைக்கால அரசாங்கமானது கோர்னிலோவையும் அவருக்கு உடந்தையாய் இருந்தவர்களையும் கைது செய்து விசாரணை நடத்த உத்தரவிடத் தள்ளப்பட்டது.

*கெரனெஸ்கி- When the February Revolution broke out in spring of 1917, Kerensky was one of its most prominent leaders: he was member of the Provisional Committee of the State Duma and was elected vice-chairman of the Petrograd Soviet. He simultaneously became the first Minister of Justice in the newly formed Provisional Government. Kerensky served as the second Prime Minister of the Russian Provisional Government until Vladimir Lenin was elected by the All-Russian Congress of Soviets following the October Revolution.

*கோர்னிலோவ்- 1917, he became Supreme Commander-in-Chief of the Provisional Government's armed forces. After the alleged coup collapsed as his troops disintegrated, Kornilov and his fellow conspirators were placed under arrest in the Bikhov jail. On 19 November, a few weeks after the proclamation of soviet power in Petrograd, they escaped from their confinement (eased by the fact that the jail was guarded by Kornilov's supporters) and made their way to the Don region, which was controlled by the Don Cossacks. Here they linked up with General Mikhail Alekseev. Kornilov became the military commander of the anti-Bolshevik Volunteer Army with Alekseev as the political chief