World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

ஆசிரியர்கள்-அதிபர்கள் சுகயீன விடுமுறைப் பிரச்சாரம்: ஆசிரியர்களின் எதிர்ப்பை கரைத்துவிடும் ஒரு தொழிற்சங்கப் பொறி

சோசலிச சமத்துவக் கட்சியின் ஆசிரியர் குழு
30 நவம்பர் 2012

Back to screen version

டிசம்பர் 4 அன்று, சம்பள உயர்வு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களது சங்கங்கள் சேர்ந்து அழைப்பு விடுத்துள்ள சுகயீன விடுமுறைப் பிரச்சாரம் என்பதானது, தமது வாழ்க்கைத் தரங்களை சீரழிப்பதற்கும் கல்வி வெட்டுக்களுக்கும் எதிராக ஆசிரியர்கள் மத்தியில் வளர்ச்சியடையும் எதிர்ப்பையும் போராளிக் குணத்தையும் கரைத்துவிட்டு, இராஜபக்ஷ அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக உண்மையான அரசியல் போராட்டம் அபிவிருத்தி அடைவதை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பொறியாகும்.

ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை அமுல்படுத்துவது, பதவி உயர்வை உடனடியாக நடைமுறைப்படுத்துவது, கல்விக்கு செய்யும் ஒதுக்கீட்டை அதிகரிப்பது மற்றும் கல்வியை அரசியல்மயப்படுத்துவதை தடுப்பது போன்றவையும் இந்த சங்கங்களின் ஏனைய கோரிக்கைகளில் அடங்கும். ஏனைய தொழிலாளர்களைப் போலவே ஆசிரியர்களது கோரிக்கைகளும் அரசாங்கத்தால் மீண்டும் மீண்டும் அலட்சியம் செய்யப்பட்டு வந்துள்ள நிலைமைகளின் கீழ், இலங்கை ஆசிரியர் சங்கம், எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த தேசிய கல்விச் சேவைச் சங்கம் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியைச் (ஜே.வி.பீ.) சார்ந்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உட்பட மேலும் 15 ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் சேர்ந்து விடுத்துள்ள இந்த அழைப்பின் உண்மையான நோக்கம் என்ன என்பது, அது அழைப்புவிடுக்கப்பட்டுள்ள திகதி, அதை ஏற்பாடு செய்வதற்காக எடுத்துக்கொண்ட முயற்சியின் அளவு மற்றும் பிரேரிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையின் பண்பின் மூலம் தெளிவாகின்றது.

எதிர்ப்பின் வீச்சைப் பற்றி நன்கு அறிந்துள்ள சங்கத் தலைமைத்துவம், இந்தப் போராட்டம் நீண்டு இழுபட்டுச் செல்வதை தடுத்து கரைத்து விடுவதற்கே, பாடசாலை விடுமுறை தொடங்குவதற்கு சற்றே மூன்று நாட்கள் முன்னதாக இந்த பிரச்சாரத்தை முன்னெடுக்கத் தீர்மாணித்துள்ளது. இரண்டாவதாக, இந்த நடவடிக்கைக்கு ஆசிரியர்களை பங்குபற்ற வைப்பதற்காக சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ஜீவனற்ற பிரச்சாரம், பிரமாண்டமானளவு தொழிலாளர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு சங்கத் தலைமைத்துவம் காட்டும் மரண பீதியையும் எதிர்ப்பையும் வெளிக்காட்டியுள்ளது. அத்தகைய ஒன்று, ஆழமாகச் செல்லும் அரசியல் பிரச்சினைகைள எழுப்பும் என்பது தலைமைத்துவத்துக்கு நன்கு தெரியும். மூன்றாவதாக, டிசம்பர் 4ம் திகதி சுகயீன விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டினுள் அடங்கிக் கிடக்குமாறே ஆசிரியர்களுக்குத் தலைமைத்துவம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் தமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் கலந்துரையாடல், கூட்டம், ஊர்வலம் மற்றும் மறியல் போராட்டம் உட்பட எந்தவொரு கூட்டு நடவடிக்கையையும் எடுக்காமல் ஆசிரியர்களை தடுத்து அவர்களை தனிமைப்படுத்தி வைப்பதே இதன் நோக்கமாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் அதே வேளை, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்று தொழிற்சங்கங்களால் பரப்பப்படும் கருத்தை முற்றிலும் யதார்த்தமற்றது என நிராகரிக்கின்றது. இந்த வங்குரோத்து வேலைத் திட்டத்தின் மூலம் ஆசிரியர்களை அரசியல் ரீதியில் நிராயுபாணிகளாக்கி அரசாங்கத்தின் தாக்குதல்களுக்காக அவகாசத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் அதே வேளை, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கு அர்ப்பணித்துக்கொண்டுள்ள வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.) மற்றும் சிங்களப் பேரினவாத ஜே.வி.பீ. போன்ற கட்சிகளுக்கு, அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை சுரண்டிக்கொள்வதற்கும் களம் அமைத்துக் கொடுக்கப்படுகிறது.

பத்தாயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட, கல்வி உட்பட சமூக செலவுகளை அதிகரிப்பதற்காக பயன்படுத்தக் கூடிய பில்லியன் கணக்கான நிதியை நாசமாக்கிய இனவாத யுத்தம் யூ.என்.பீ. ஆட்சிக் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டதோடு, யுத்தத்துக்காக தொழிலாளர்கள் தமது உரிமைகளை அர்ப்பணிக்க வேண்டும் என கூறிக்கொண்டு, தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்துக்கும் எதிராகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆளும் வர்க்கக் கொள்கைக்கு ஜே.வி.பீ. முழு ஒத்துழைப்பையும் வழங்கியது. கல்வியின் அழிவுக்கு இந்த இரு கட்சிகளும் பிரதான பொறுப்பாளிகளாகும்.

ஆசிரியர்கள் உட்பட தொழிலாள வர்க்கத்தின் கோரிக்கைகளை அலட்சியம் செய்துள்ள இராஜபக்ஷ அரசாங்கம், உலகம் பூராவும் உள்ள ஏனைய அரசாங்கங்களைப் போலவே, சர்வதேச நிதி மூலதனத்தின் தேவைக்கு ஏற்ப கல்வி உட்பட நலன்புரி சேவைகளுக்கான செலவுகளை குறைப்பதை துரிதப்படுத்தி, பாவனைப் பொருட்கள் மீது அதிக வரிகைளச் சுமத்தி மற்றும் தனியார்மயமாக்கத்தை துரிதப்படுத்தி பூகோள ரீதியில் அபிவிருத்தியடையும் பொருளாதார பின்னடைவின் சுமைகளை மக்கள் மீது சுமத்திவருகின்றது.

தனது தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தினுள் வளர்ச்சியடைந்து வரும் எதிர்ப்புகளை இலக்காகக் கொண்டு, மேலும் மேலும் பொலிஸ்-இராணுவ சர்வாதிகாரத்தின் பக்கம் நகர்ந்து வரும் இராஜபக்ஷ அரசாங்கம், இம்முறை பாதுகாப்புச் செலவை 290 பில்லியன் ரூபா வரை, நூற்றுக்கு 29 வீதம் வரை அதிகரித்துள்ளது. செய்துள்ள அழிவைச் சமாளிக்க கொஞ்சமும் போதாத அற்பத் தொகையையே அது கல்விக்காக ஒதுக்கியுள்ளது. இலங்கையை ஆசியாவின் "அறிவு மையமாக" ஆக்கும் திட்டம் என்ற பெயரில், கல்வியை முதலீட்டாளர்களின் இலாபம் குவிக்கும் தொழிற்துறையாக ஆக்கும் தனியார்மயமாக்கல் வேலைத் திட்டத்தையே அது நடைமுறைப்படுத்துகிறது.

2006ல் இருந்தே அதிபர்கள் உட்பட ஒட்டுமொத்த அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டிராத நிலையிலேயே, அரச ஊழியர்களுக்கு அடுத்த ஜனவரி மாதத்தில் இருந்து 750 ரூபா கொடுப்பனவை வழங்குவதாக வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டதோடு, அது தொழிலாளர்களின் அன்றாட தேனீர் கோப்பைக்கான செலவுக்கு சமமான தொகையாகும். 2008 இடைக்கால சம்பளப் பிரேரணையை அமுல்படுத்த வேண்டும் என்ற ஆசிரியர்-அதிபர்கள் சங்கங்களின் பிரதான கோரிக்கையின் மூலம் வானளாவ உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவின் எதிரில் ஆசிரியர்களுக்கு சலுகை கிடைக்கப் போவதில்லை. அந்தக் கோரிக்கையின் மூலம் கடைசி மட்டத் தராதரத்தில் உள்ள ஆசிரியர்களின் சம்பளம் மூன்றாயிரத்துக்கும் குறைவான தொகையிலேயே அதிகரிக்கும்.

இந்த ஆண்டு கல்வித் துறையில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் சம்பளக் கோரிக்கைக்காகவும் கல்வி வெட்டுக்களுக்கு எதிராகவும் போராட்டத்துக்கு வந்தனர். ஆயினும், அந்த எல்லா போராட்டத்திலும், போராட்டத்தை தனிமைப்படுத்தி மட்டுப்படுத்தப்பட்ட வேலை நிறுத்தங்கள் அல்லது எதிர்ப்புகள் சிலவற்றின் பின்னர், எந்தவொரு கோரிக்கையும் வெல்லாமல், அரசாங்கத்தின் போலி வாக்குறுதிகளின் அடிப்படையில் வேலை நிறுத்தத்தை காட்டிக்கொடுத்து, தொழிலாளர்கள் சுயாதீன அரசியல் வேலைத் திட்டத்தின் அடிப்படையில் அணிதிரள்வதை குழப்புவதற்கே தொழிற்சங்கங்கள் செயற்பட்டுள்ளன. பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேலை நிறுத்தம், இதற்கான பலம்வாய்ந்த மற்றும் அண்மைய உதாரணமாகும்.

ஜூன் மாதம் முழுவதும் இழுபட்டுச் சென்ற பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளப் போராட்டத்தின் போது, தராதரவாத நிலைப்பாட்டை எடுத்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம், அந்த போராட்டத்துடன் ஐக்கியப்படாததோடு, 100 நாட்கள் தொடர்ந்த விரிவுரையாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக எந்தவொரு தொழிலாள வர்க்கத் தட்டினருக்கும் அழைப்பு விடுக்கவும் இல்லை. இறுதியில், அரசாங்கத்தின் போலி வாக்குறுதியின் அடிப்படையில், அரசாங்கத்தின் வேலைத் திட்டத்துடன் உடன்பட்டவாறே வேலை நிறுத்தத்தை காட்டிக்கொடுத்தது.

இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான பலம்வாய்ந்த அரசியல் தாக்குதலுக்காக, அரசாங்கத்தின் தாக்குதலை எதிர்கொள்ளும் ஏனைய தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்ட வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அந்தப் போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்தது. இதற்கு முற்றிலும் எதிராக இருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்க சம்மேளனம், தமது போராட்டம் எந்த வகையிலும் அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் போராட்டம் அல்ல என வெட்கமின்றி கூறிக்கொண்டது. எதிர்க் கட்சிகள் மற்றும் போலி இடது கட்சிகளுடன் சேர்ந்து விரிவுரையாளர்களின் வேலை நிறுத்தத்தை காட்டிக்கொடுக்க ஒன்று சேர்ந்த ஆசிரியர்கள் சங்கம், இப்போது ஆசிரியர்களையும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட போராட்டத்துக்குள் வரையறுத்து, அவர்களை வலுவிலக்கச் செய்து போராட்டத்தை காட்டிக்கொடுப்பதற்கே முயற்சிக்கின்றது.

போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து ஆசிரியர் சங்கத்தால் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம், கல்வி அமைச்சர் மற்றும் செயலாளர் உட்பட அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டதாகவும், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் தமது கோரிக்கைகளை தருவதற்காக எந்தவொரு ஒதுக்கீடும் செய்யப்படவுமில்லை எனவும் கூறுகிறது. அத்துடன், "இது வரை, ஆசிரியர்-அதிபர்களுக்கு எஞ்சியுள்ள ஒரே மாற்றீடு, போராட்ட நடவடிக்கையில் இறங்குவது" மட்டுமே என அது மேலும் கூறுகின்றது. சங்கங்களின் இந்த "போராட்ட நடவடிக்கைகள்" அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் அப்பால் செல்லப் போவதில்லை. அத்துடன் அது காட்டிக்கொடுப்புடன் முடிவுக்கு வருவது நிச்சயமாகும்.

ஒரு சில முதலாளிகளின் இலாபப் பொதியை பாதுகாக்க அர்ப்பணித்துக்கொண்டுள்ள இராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் ஒட்டு மொத்த முத்தலாளித்துவ முறைமைக்கும் எதிரான அரசியல் போராட்டத்தின் மூலம் மட்டுமே வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற சம்பளம் மற்றும் தரமான இலவசக் கல்வியையும் வெற்றிகொள்ள முடியும் என சோ.ச.க. மீண்டும் வலியுறுத்துகிறது. இலாபம் கறக்கும் முதலாளித்துவ பெரும் வர்த்தகம், வங்கி மற்றும் பெருந்தோட்டங்களையும் தொழிலாளர்களின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரும், மற்றும் அனைத்துலக சோசலிச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும், தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றை ஆட்சிக்குக் கொண்டுவருவதன் மூலம் மட்டுமே, தரத்தில் உயர்ந்த கல்வியை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான பில்லியன் கணக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும்.

ஆளும் வர்க்கத்தின் கருவியான தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடது கட்சிகளில் இருந்து பிரிந்து, தமது எரியும் பிரச்சினைகளுக்கான போராட்டத்தை தமது கையிலேயே எடுக்குமாறு நாம் ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். மேற்குறிப்பிட்ட அரசியல் போராட்டத்தை முன்னணிக்கு கொண்டு செல்ல வேண்டுமெனில், மாணவர்களதும் பெற்றோர்களதும் ஆதரவை அணிதிரட்டிக்கொண்ட சுயாதீன நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப வேண்டும்.

நாம், எமது வேலைத் திட்டத்தை கவனமாக வாசித்து, சோ.ச.க.யை கட்டியெழுப்ப இணையுமாறு, எதிர்வரும் போராட்டங்களில் பங்குபற்றுகின்ற மற்றும் தொழிற்சங்கங்கள் மீது நம்பிக்கை இழந்து அவற்றில் பங்குபற்றாமல் இருக்கின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் அழைப்பு விடுகின்றோம்.