ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The New Year stock sell-off

புத்தாண்டு பங்குகள் விற்பனை

Barry Grey
5 January 2016

2016 இன் முதல் வர்த்தக நாள் விரைவிலேயே ஓர் உலகளாவிய நிதியியல் வீழ்ச்சியாக மாறியது. சீன அரசாங்கம் முழு அளவிலான பொறிவைத் தடுக்க அதன் பிரதான பங்குச்சந்தை செயல்பாடுகளை நிறுத்திய பின்னர், உலகெங்கிலுமான பங்குச் சந்தைகள் சரிந்தன.

புத்தாண்டில் உலக முதலாளித்துவத்திற்கான சாத்தியப்பாடுகள் குறித்து முதலாளித்துவ விமர்சகர்கள் ஆண்டு முடிவில் அளித்த முன்னெச்சரிக்கை கருத்துக்களை, அந்த விற்றுத்தள்ளல் உறுதிப்படுத்தியது. திங்கட்கிழமை சந்தை வீழ்ச்சியானது, நிச்சயமற்ற நிதியியல் குமிழிகளது வெடிப்பின் தொடக்கமா அல்லது ஒரு முன்கூட்டிய முக்கிய நிதியியல் தாக்கமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருந்தாலும் ஒரு விடயம் நிச்சயமானது. அது ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக முந்தைய வோல் ஸ்ட்ரீட் பொறிவிற்குப் பின்னர், தீவிரப்பட்டு மட்டுமே உள்ள ஆழமான மற்றும் தீர்க்கவியலா முரண்பாடுகளின் ஓர் அடையாளமாகும்.

ஷாங்காய் காம்ப்போசிட் குறியீட்டு சந்தை 6.9 சதவீத இழப்புடன் நிறுத்தப்பட்ட நிலையில், சீனச் சந்தைகளின் பொறிவு புதிய புள்ளிவிபரங்களால் தூண்டிவிடப்பட்டிருந்தது. ஏற்கனவே முந்தைய மாதத்தில் தளர்ந்த மட்டங்களில் இருந்த சீன உற்பத்தி செயல்பாடு, டிசம்பரில் வீழ்ச்சி அடைந்ததை அப்புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டி இருந்தன. டிசம்பர் வீழ்ச்சி தொடர்ச்சியான பத்தாவது மாதாந்திர சுருக்கத்தைக் குறித்தது.

ஒரு கால் நூற்றாண்டில் அதன் மிகக் குறைந்த வளர்ச்சிவிகிதத்தை எட்டிய சீன வளர்ச்சிக்குறைவு, 2016 இல் இன்னும் மோசமடையக்கூடும் என்பதை அந்த அறிக்கை உறுதிப்படுத்தியது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக, எண்ணெய் மற்றும் ஏனைய தொழில்துறை பண்டங்கள், அத்துடன் உற்பத்தி செய்யப்பட்ட தயாரிப்புகள் உட்பட இறக்குமதிக்கான ஒரு காந்தமாக மத்திய உற்பத்தி மையமாக, அது பிரமாண்டமான பாத்திரம் வகிப்பதால், அங்கே தேக்கநிலையின் அறிகுறியானது மேற்கொண்டு பண்டங்களின் விலை வீழ்ச்சி மீதும், பிரேசில் மற்றும் ரஷ்யாவில் தொடங்கி ஆஸ்திரேலியா மற்றும் கனடா வரையில் பண்ட-ஏற்றுமதி நாடுகளில் ஆழமடையக்கூடிய நெருக்கடி குறித்தும் அச்சங்களை பரப்பியது.

ஜப்பானின் நிக்கி 225 குறியீடு 3 சதவீத்ததிற்கு கூடுதலாக வீழ்ச்சி அடைந்தது. சீனாவிற்கான ஒரு பிரதான ஏற்றுமதியாளரான ஜேர்மனியில் அதன் டக்ஸ் பங்குச்சந்தை குறியீடு 4.6 சதவீத வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டது. ஏனைய பிரதான ஐரோப்பிய குறியீடுகள் 2 சதவீதத்திற்கு அதிகமாக வீழ்ந்தன, EURO STOXX 50 குறியீடு 3.14 சதவீதம் வீழ்ந்தது.

உலகளாவிய பங்குச்சந்தை விற்றுத்தள்ளல் அமெரிக்காவிலிருந்து வந்த எதிர்மறை பொருளாதார புள்ளிவிபரங்களால் சூழப்பட்டிருந்தது. வினியோக மேலாண்மை பயிலகம் (Institute for Supply Management), தொழிற்சாலை நடவடிக்கைக்கான அதன் குறியீடு நவம்பரில் 48.6 இல் இருந்து டிசம்பரில் 48.2 க்கு சரிந்திருப்பதாக அறிவித்தது. 50 க்கு கீழே வரும் எந்த புள்ளியும் சுருக்கத்தைக் குறிக்கும். டிசம்பர் புள்ளிவிபரங்கள் ஜூன் 2009 க்குப் பிந்தையதில் மிக மோசமானதாகும் மற்றும் இது அமெரிக்க உற்பத்தித்துறை இரண்டு அடுத்தடுத்த மாதாந்திர சுருக்கங்களால் பாதிக்கப்பட்ட 2008 பொறிவுக்குப் பின்னர் முதல்முறையாக வந்திருக்கிறது.

அதேநேரத்தில் அமெரிக்க கட்டுமான செலவினங்கள் நவம்பரில் 0.4 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததாக வர்த்தகத் துறை குறிப்பிட்டது. அந்த படுமோசமான புள்ளிவிபரங்கள், பொருளாதார வல்லுனர்களது அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கான 2015 நான்காம் காலாண்டு முன்உத்தேச மதிப்பீட்டை, 1.1 சதவீத ஆண்டு விகிதமாக, மிகக் குறைந்தளவிற்குக் குறைக்க இட்டுச் சென்றன. தேக்கநிலை மற்றும் மந்தநிலையின் மேலாதிக்கத்தில் இருந்த உலக பொருளாதாரத்தில், முன்னர் "பிரகாச புள்ளியாக" மேற்கோளிடப்பட்ட அமெரிக்காவே ஒரு தொழிற்துறை பின்னடைவில் உள்ளது என்பதை இப்புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்தின.

அமெரிக்க குறியீடுகள் கூர்மையாக வீழ்ச்சி அடைந்தன, அந்நாளின் முடிவில் டோவ் குறியீடு அண்மித்து 1.6 சதவீதம் வீழ்ந்தது, எஸ்&பி குறியீடு 1.53 சதவீதம் சரிந்தது, நாஸ்டாக் 2 சதவீதம் குறைந்தது.

உற்பத்தியில் ஆழமடைந்துவரும் நெருக்கடியின் அறிகுறிகள் நிதியியல் சந்தைகளினூடாக அதிர்ச்சி அலைகளை அனுப்பியது, ஏனென்றால் அவை 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் கட்டமைந்த ஒரு பரந்த ஊகவணிக சீட்டுக்கட்டு மாளிகையின் அதிகரித்த பொறிவுக்கு முன்னறிகுறிகளாக உள்ளன, இது பெரும் மந்தநிலைமையில் இருந்து ஒருபோதும் மீண்டிராத ஒரு நிஜமான பொருளாதாரத்தின் உச்சியில் அமர்ந்துள்ளது. “மீட்சி" என்றழைக்கப்பட்டதன் அருவருப்பான இரகசியம் என்னவென்றால் அது நிதியியல் நெருக்கடி மற்றும் கீழிறக்கத்தை (depression) முன் கொண்டு வந்த ஒட்டுண்ணித்தன வகைகளின் மற்றும் திரைமறை-குற்றகர நடவடிக்கைகளின் விரிவாக்கத்தால் மேலாதிக்கம் பெற்றிருந்தது.

அமெரிக்காவும் மற்றும் உலக மத்திய வங்கிகளும் மற்றும் பிரதான அரசாங்கங்கள் அனைத்தும் 2008 இல் முதலாளித்துவ உடைவிற்கு விடையிறுப்பாக பொதுச்சொத்துக்களில் இருந்து ட்ரில்லியன் கணக்கான டாலர்களை எந்தவித வெட்டுக்களும் இல்லாமல் வங்கியாளர்கள் மற்றும் தனியார் நிதி முதலீட்டு நிறுவன பில்லியனர்களுக்கு கைமாற்றின. அவர்கள் அந்த இரத்தந்தோய்ந்த பணத்தை அவர்களுக்கு தோன்றிய விதத்தில் சுதந்திரமாக செலவிட்டனர். பிணையெடுக்கப்பட்ட பெருநிறுவனங்களில் தலைமை செயலதிகாரி சம்பளத்தை இழுத்துப்பிடிப்பதற்கான அற்ப அடையாள பரிந்துரைகள் கூட நிதியியல் அதிபர்களால் மற்றும் அவர்களிடம் கையூட்டு பெற்ற அரசியல்வாதிகளால் தடுக்கப்பட்டன.

கணிப்பிடமுடியாத ட்ரில்லியன்கள், பணக்காரர்கள் மற்றும் மிகப்பெரும் செல்வந்தர்கள் ஆதாயமடையும் வகையில் பங்கு விலைகளின் ஒரு சாதனையளவிலான உயர்வை உருவாக்குவதற்கு நிதியியல் சந்தைகளுக்குள் பாய்ச்சப்பட்டன, அவர்களது சொத்துக்கள் 2008 பொறிவுக்குப் பின்னர் இரட்டிப்பானது.

அதேநேரத்தில் அரசு திவால்நிலைக்கு தொழிலாள வர்க்கத்தை பணம் கொடுக்க செய்ய அதன் மீது அரசாங்கங்கள் கண்மூடித்தனமான தாக்குதல்களைத் தொடங்கின. சிக்கனத் திட்டங்கள், கூலி வெட்டுக்கள், பாரிய வேலைவாய்ப்பின்மை என இத்தகைய தாக்குதல்கள் பெருநிறுவனங்களின் இலாபகர வரம்புகளை உயர்த்தியதோடு, மேலே உள்ள 10 சதவீதத்தினரை, முக்கியமாக மேலே உள்ள 1 சதவீதம் மற்றும் மேலே உள்ள 0.1 சதவீதத்தினரை கூடுதலாக செழிப்பாக்கியது.

பெருநிறுவனங்களோ அவர்களது பாரிய பணக்குவியலை உற்பத்தியை விரிவாக்குவதற்கோ அல்லது கண்ணியமான சம்பள வேலைகளை உருவாக்குவதற்கோ பயன்படுத்தவில்லை, மாறாக ஊக வணிகத்திற்கான புதிய வழிவகைகளைக் காண, எழுச்சியடைந்துவரும் சந்தை பொருளாதாரங்களுக்குள், ஊதிபெருத்துவந்த எரிசக்தித்துறை மற்றும் உயர்-ஆதாய உயர்-அபாய பெறுமதியற்ற பத்திரச் சந்தைகளுக்குள் பணத்தை விதைக்க பிரயோகித்தன. 2015 ஆம் ஆண்டு மக்களுக்கு வறுமை மற்றும் விரக்திக்கான ஆண்டாக இருந்த அதேவேளையில் வேலை-அழிப்புகள், ஒருங்கிணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்கள், பங்கு வாங்கிவிற்றல்கள் மற்றும் ஆதாயப்பங்கு உயர்வுகள் போன்ற சமூகரீதியில் அழிவுகரமான நடவடிக்கைகளுக்கான ஒரு சாதனை ஆண்டாகவும் இருந்தது.

மெக்கின்சி குளோபல் பயிலகம் கடந்த ஆண்டு பிரசுரித்த அறிக்கையில், நிதியியல் ஊக வணிகம் மற்றும் மோசடித்தனம் அதிகரித்திருப்பதற்கான ஒரு அளவீடாக, உலக பொருளாதாரத்தின் பிரமாண்ட கடன் வளர்ச்சி குறித்து சில கருத்துக்களை வழங்குகிறது. உலக கடன் 2007 க்குப் பின்னர் 57 ட்ரில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது, இது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் கடனுக்குமான விகிதத்தை 17 சதவீத புள்ளிகள் அளவிற்கு உயர்த்தி உள்ளது. சீனாவின் மொத்த கடன் நான்கு மடங்கு அதிகரித்து, 7 ட்ரில்லியன் டாலர்களில் இருந்து 2014 மத்தியில் 28 ட்ரில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.

ஜனவரி 1 இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிடுகையில், 2015 இல் "அமெரிக்க பெருநிறுவன வட்டாரம் செயலூக்கமான முதலீட்டாளர்கள், விற்றுவாங்கல்கள், செலாவணிகள் மற்றும் உடன்படிக்கைகளால்" —வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஊகவணிகத்தால்— "மேலாதிக்கம் பெற்றிருந்ததாக" குறிப்பிட்டது. இதற்கிடையே நிஜமான பொருளாதாரம் ஆக்கபூர்வமான முதலீட்டிற்காக பட்டினியில் இருந்து வருகிறது. எஸ்&பி 500 குறியீட்டில் பதிவு செய்துள்ள நிறுவனங்களது மூலதன செலவுகள், 2014 உடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டில் வீழ்ச்சி அடைந்தது, 2010 க்குப் பின்னர் முதல்முறையாக அங்கே இரண்டு அடுத்தடுத்த காலாண்டு வீழ்ச்சிகள் இருந்தன.

எண்ணெய் மற்றும் பண்டங்களது விலை வீழ்ச்சி, பூகோளமயப்பட்ட வர்த்தகத்தில் வீழ்ச்சி மற்றும் ஒன்றுமில்லா அல்லது எதிர்மறை வளர்ச்சி விகிதங்களால் அடையாளம்காணப்பட்ட நிஜமான பொருளாதாரத்தின் அடியில் நிலவும் தேக்கநிலை மற்றும் மந்தநிலை ஆகியவை —ஊகவணிக கடன் குவியலை இல்லாமல் செய்ய தொடங்கி இருந்ததற்கு 2015 இன் இறுதி வாரங்களில் அதிகரித்த அறிகுறிகள் தெரிந்தன. எரிசக்தி-சார்ந்த பெறுமதியற்ற பத்திரங்களின் விலைகள் கூர்மையாக வீழ்ச்சியடைய தொடங்கின, மற்றும் அவற்றின் ஊக வணிகத்தில் ஈடுபட்ட பரஸ்பர நிதிகள் முண்டியடித்துவந்த திரும்ப பெறும் கேட்பாணைகளால் பாதிக்கப்பட்டன, இத்தகைய இரண்டு நிதி அமைப்புகள் முதலீட்டாளர்களிடமிருந்து திரும்பப்பெறும் முறையீடுகளை மதிக்க மறுத்ததை எடுத்துக்காட்டியது.

நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தின் கூடுதல் வெடிப்பின் சமூக மற்றும் வர்க்க முக்கியத்துவமானது, தொழிலாள வர்க்கத்திடமிருந்து பாரியளவிலான செல்வவளம் முதலாளித்துவ வர்க்கத்திற்கு மறுபகிர்வு செய்யப்பட்டிருப்பதை ஆவணப்படுத்திய புள்ளிவிபரங்களால் சுட்டிக்காட்டப்படுகின்றன.

உலக வங்கியின் மூத்த பொருளாதார வல்லுனர், உயர்-வருவாய் மற்றும் நடுத்தர-வருவாய் நாடுகளில் ஒரு "குறிப்பிடத்தக்க புள்ளிவிபர போக்கை" சுட்டிக்காட்டும் ஒரு கட்டுரையை ஜனவரி 1 இல் வெளியிட்டார். அக்கட்டுரை பின்வருமாறு குறிப்பிட்டது: “மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக மொத்த தொழிலாளர் வருவாய் உலகெங்கிலும் அரிதாகவே பார்க்கப்பட்ட விகிதங்களுக்கு வீழ்ச்சி அடைந்து வருகிறது. 1995 இல் இருந்து 2015 வரையில், அமெரிக்காவில் தொழிலாளர் வருவாய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 61 சதவீதத்திலிருந்து 57 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது; ஆஸ்திரேலியாவில் 66 சதவீதத்திலிருந்து 54 சதவீதமாகவும்; கனடாவில் 61 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாகவும்; ஜப்பானில் 77 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாகவும்; மற்றும் துருக்கியில் 43 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாகவும் வீழ்ச்சி அடைந்தன.”

மத்திய கிழக்கில் விரிவடைந்துவரும் போர்கள், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இராணுவ ஆயத்தப்படுத்தல்கள் என இந்நிலைமைகளின் கீழ், பயங்கரவாதத்திற்கு எதிராக சண்டை என்ற வேஷத்தில் ஒரு நாடு மாற்றி ஒரு நாடு உள்நாட்டளவில் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளை திணிப்பதுடன் சேர்ந்து, இந்த புதிய ஆண்டு தொடங்குகையில் பொருளாதாரத்தின் அடியிலுள்ள ஸ்திரமற்றத்தன்மை, வல்லரசுகளிடையே பதட்டங்களை தீவிரப்படுத்தி, ஆளும் உயரடுக்குகளை மேற்கொண்டும் போர் மற்றும் சர்வாதிகாரத்தின் பாதையில் உந்துகிறது.

அதேநேரத்தில், இந்த புதிய ஆண்டு தொடங்குகையில், நிதியியல் சந்தைகளின் கொந்தளிப்பில் பிரதிபலிக்கும், ஆளும் வர்க்க வட்டாரங்களில் மேலோங்கியுள்ள அதிர்ச்சி அலைகள் மற்றும் முன்னெச்சரிக்கை உணர்வுக்கு ஒரு பிரதான பங்களிப்பு செய்வது என்னவென்றால், வரவிருக்கும் ஆண்டு தொழிலாள வர்க்க எதிர்ப்பு மற்றும் போராட்டங்களின் அதிகரிப்பைக் காணும் என்ற உணர்வாகும். ஐரோப்பாவிலிருந்து சீனா வரையில் இலத்தீன் அமெரிக்காவிலிருந்து அமெரிக்கா வரையில் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் பெருகியதுடன் சேர்ந்து, வர்க்கப் போராட்டத்தின் ஒரு புதிய காலகட்டத்தின் ஆரம்ப அறிகுறிகளால் தற்போது நிறைவடைந்த இந்தாண்டு குறிக்கப்பட்டது.

அமெரிக்காவில் வாகனத்துறை எஜமானர்கள் மற்றும் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கத்தால் நிறுவனத்திற்கு சார்பான புதிய ஒப்பந்தங்கள் திணிக்கப்பட்டதை வாகனத்துறை தொழிலாளர்கள் எதிர்த்தமையும், மற்றும் ஆயிரக் கணக்கான வாகனத்துறை தொழிலாளர்கள் தகவல் மற்றும் அரசியல் தலைமைக்காக உலக சோசலிச வலைத் தளம் மற்றும் WSWS வாகனத்துறை செய்தியிதழை நோக்கி திரும்பியமையும், பரந்துபட்ட போராட்டத்திற்குள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மிகவும் பலம்வாய்ந்த பிரிவினர் இணைந்து கொள்வதின் மீள்எழுச்சியை முன்னறிவிக்கிறது.