ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Prime Minister Valls pledges permanent state of emergency in France

பிரதம மந்திரி வால்ஸ் பிரான்சில் நிரந்தர அவசரகால நிலைக்குச் சூளுரைக்கிறார்

By Stéphane Hugues and Alex Lantier
26 January 2016

வெள்ளியன்று பிரெஞ்சு பிரதம மந்திரி மானுவல் வால்ஸ், இஸ்லாமிய அரசால் (IS அல்லது டயஷ்) நடத்தப்பட்ட நவம்பர் 13 பாரிஸ் தாக்குதல்களுக்குப் பின்னரான சோசலிஸ்ட் கட்சியின் ஆரம்ப அறிக்கைகளை, அதாவது பிரான்சின் நடப்பு அவசரகால நிலையை நிரந்தரமாக்குவதை மீளஉறுதிப்படுத்தினார்.

சுவிட்சர்லாந்து டாவோஸில் பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்ட போது பிபிசி உடனான ஒரு நேர்காணலில் வால்ஸ், பிரான்ஸ் இஸ்லாமிய அரசுடன் முழுமையான போரில் ஈடுபட்டிருப்பதாக அறிவித்தார். “அங்கே அச்சுறுத்தல் இருக்கும் வரையில், நாம் கைவசமிருக்கும் சகல வழிவகைகளையும் பிரயோகித்தாக வேண்டும்,” என்று கூறிய அவர், “டயஷ் ஐ நாம் ஒழித்துக்கட்டும் வரையில்" அவசரகால நெருக்கடிநிலையை வைத்திருக்க வேண்டும் என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “ஆபிரிக்காவில், மத்திய கிழக்கில், ஆசியாவில் நாம் டயஷ் ஐ வேரூடன் களைய வேண்டும், இது நாம் முகங்கொடுத்துள்ள பயங்கரவாதத்துடனான ஒரு முழுமையான உலகளாவிய போராகும். … நாம் இந்த அச்சுறுத்தலுடன் அல்லது இந்த அபாயத்துடன் தசாப்தங்களுக்கு அல்லது பல ஆண்டுகளுக்கு வாழ வேண்டியுள்ளதால் தான், இதுவொரு ஒரு போராக மாறியுள்ளது. பல தலைமுறைகள் இதனுடன் வாழ வேண்டியுள்ளன, வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் நெருக்கடியை கையாள வேண்டியுள்ளது,” என்றார்.

வால்ஸ் அறிக்கைகளின் தாக்கங்கள் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளன. ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் இன் தனிப்பட்ட நண்பரான எகிப்து தளபதி அப்தெல் பதாஹ் அல்-சிசி இன் ஓர் இராணுவ சர்வாதிகாரத்தால் இப்போது ஆட்சி செலுத்தப்பட்டு வரும் எகிப்தைப் போலவே, பிரான்சும் பல தலைமுறைகளுக்கு, ஒருவேளை நிரந்தரமாகவே ஒரு அவசரகால நிலையின் கீழ் இருக்க வேண்டும் போலும். வால்ஸ் அறிக்கையின்படி, பிரெஞ்சு அரசியலமைப்பால் பிரெஞ்சு மக்களுக்கு உத்தரவாதம் வழங்கப்பட்ட அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை அவர்கள் நடைமுறையளவில் இழந்துள்ளனர்.

மெதுமெதுவாக ஓர் ஆட்சிமாற்ற சதியைப் போல, ஆளும் உயரடுக்கு ஒரு ஏதேச்சதிகார ஆட்சியை உருவாக்கி பிரான்சின் அரசியல் வாழ்வை மாற்ற நகர்ந்து வருகிறது. அவசரகால நெருக்கடிநிலையின் கீழ், பொது போராட்டங்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது, அங்கே பத்திரிகை சுதந்திரம் அல்லது ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை, மற்றும் பொலிஸ் நடத்தும் ஏதேச்சதிகார தேடல்கள் மற்றும் கைப்பற்றுதல்கள் மீது எந்த நீதித்துறை கட்டுப்பாடும் கிடையாது. ஏற்கனவே நவம்பர் 13 தாக்குதல்களுக்கு பின்னர் பாரிஸ் COP21 சுற்றுச்சூழல் மாநாட்டிற்கு எதிரான போராட்டங்களுக்கு அரசாங்கம் தடைவிதித்ததுடன், அதை ஒழுங்கமைத்தவர்களை வீட்டுக் காவலின் கீழ் கொண்டு வந்தது.

பொலிஸ் யாருடைய வீட்டிலும் நுழைந்து, உத்தரவாணை இன்றி தேடல் நடவடிக்கையில் ஈடுபட முடியும், அவர்கள் பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக இருந்தார்கள் என்ற வெறும் சந்தேகத்தின் பேரில் கூட அவர்களைக் கைது செய்ய முடியும். குட்இயர் தொழிலாளர்கள் அவர்களது வேலைகளைப் பாதுகாக்க வேலைநிறுத்தம் செய்து போராடியதற்காக அரசு அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது, அதுவும் குட்இயர் நிறுவனம் அதுவே அவர்களுக்கு எதிரான சகல குற்றச்சாட்டுக்களையும் கைவிட்ட பின்னரே இது நடந்தது.

ஜனநாயக உரிமைகளைக் காலவரையின்றி நீக்குவதை நியாயப்படுத்துவதற்கு வால்ஸ் முன்வைத்த வாதங்கள், ஒரு பொய் மூட்டையாக இருக்கிறது. இஸ்லாமிய அரசு (டயஷ்) பிரெஞ்சு குடியரசிற்கும் மற்றும் பிரெஞ்சு மக்களுக்கும் ஒரு மரணகதியிலான அச்சுறுத்தலை முன்நிறுத்துகின்ற தடுக்க முடியாத ஓர் எதிரியல்ல, பிரெஞ்சு மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஜனநாயக உரிமைகளை நீக்குவதைத் தவிர பிரெஞ்சு அரசுக்கு வேறு வாய்ப்பே இல்லை என்பதும் கிடையாது.

உண்மையில் IS என்பது பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தினதும் சகல பிரதான நேட்டோ நாடுகளதும் ஓர் அரசியல் உடைமையாக உள்ளது. அது சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை கவிழ்க்க ஆட்சி மாற்ற நடவடிக்கையின் பாகமாக சவூதி அரேபியா மற்றும் துருக்கி போன்ற மத்திய கிழக்கில் உள்ள முக்கிய பிரெஞ்சு கூட்டாளிகளால் நிதியுதவி வழங்கப்பட்டு ஆதரிக்கப்பட்டு ஈராக் மற்றும் சிரியாவிற்குள் செயல்பட்டுவரும் ஒரு குடிப்படை போராளிகள் குழுவாகும்.

இந்த அமைப்பு, ஹோலாண்ட்க்கு முன்பிருந்த நிக்கோலா சார்க்கோசியின் கீழ் தொடங்கப்பட்ட போர்களிலிருந்து உருவானது, அவர் லிபியாவிற்கு எதிரான போருக்கு அழுத்தம் அளிப்பதில் ஒரு மத்திய பாத்திரம் வகித்தார், இறுதியில் அது சகல நேட்டோ சக்திகளாலும் முன்னெடுக்கப்பட்டது. அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தலைமையில் நேட்டோ சக்திகள், இஸ்லாமிய போராளிகள் லிபியாவிற்குள் வந்து பினாமி தரைப்படைகளாக செயல்பட ஊக்கப்படுத்தின, அதேவேளையில் அவை வான்வழி குண்டுவீச்சிலும் ஈடுபட்டிருந்தன. சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்காக, இத்தகைய இஸ்லாமிய படைகளில் பல நேட்டோ போரின் தாக்குமுகப்பாக அப்போது லிபியாவிலிருந்து சிரியாவுக்கு அனுப்பப்பட்டன.

IS உடன் முழுமையான உலகளாவிய போரில் பிரான்ஸூம் மற்றும் அதன் கூட்டாளிகளும் ஈடுபட்டிருப்பதாக வால்ஸ் கூறுவது அர்த்தமற்றது. மாறாக இஸ்லாமிய அரசும் மற்றும் பிரான்சில் அது நடத்திய பிற்போக்குத்தனமான தாக்குதல்களும் மக்கள் மீதான பரந்த தாக்குதல்களுக்கு அழுத்தமளிப்பதற்கான ஒரு சாக்குபோக்காக பற்றிக்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டின் இறுதி வாக்கில், ஹோலாண்ட் வலியுறுத்துகையில் பிரான்ஸ் ஈராக்கில் உள்ள IS ஐ மட்டுமே தாக்கும் என்று வலியுறுத்தினார் —பாக்தாத்தில் அமெரிக்காவின் கைப்பாவை ஆட்சியை இஸ்லாமிய அரசு கவிழ்த்துவிடாமல் அதை தடுப்பதற்காக 2013 இல் அதன் மீது குண்டுவீசி வந்த வாஷிங்டனுடன் பாரிஸ் இணைந்திருந்தது—அதேவிதத்தில் சிரியாவில் IS ஐ தாக்கினால் அசாத்திற்கான எதிர்ப்பு பலவீனப்படும் என்பதால் அதைத் தவிர்த்திருந்தார்.

சார்லி ஹெப்டோ தாக்குதல்களுக்கு பின்னர் பெப்ரவரி 5, 2015 பத்திரிகையாளர் கூட்டத்தில், ஹோலாண்ட், சிரியாவில் உள்ள IS படைகள் மீது பிரான்ஸ் குண்டுவீசாது, ஈராக் மீது மட்டுமே குண்டுவீசும் என்று விவரித்தார். “ஈராக் மீதுதான் நாங்கள் எமது நடவடிக்கைகளைத் திருப்பியுள்ளோம். ஏன்? ஏனென்றால் ஈராக்கில் அங்கே தான் ஓர் அரசு உள்ளது, இறையாண்மை மற்றும் இராணுவம் உள்ளது, அது இழந்த பிராந்தியங்களை மீண்டும் பெறுவதற்காக IS க்கு எதிராக போராடும்,” என்றார்.

அதாவது, ஹோலாண்ட் அசாத்திற்கு எதிரான பிரெஞ்சு மற்றும் நேட்டோ கொள்கையின் பல்வேறு வளைவு சுளிவுகளுக்கு ஒரு கருவியாக IS ஐ சார்ந்திருக்கவும், கவசமாக பிரயோகிக்கவும் விரும்புகிறார். எவ்வாறிருப்பினும், IS ஓர் உள்நாட்டு கொள்கை பிரச்சினையாக உருவெடுக்கையில், பிரான்ஸ், இஸ்லாமிய அரசு மீது முழுமையான போரில் ஈடுபட்டிருப்பதாகவும், அதில் அரசு அதிகாரத்தைப் பிரயோகிக்கும் வழியில் எந்த ஜனநாயக உரிமையும் தடையாக நிற்க அனுமதிக்க முடியாதென்றும் சோசலிஸ்ட் கட்சி திடீரென வலியுறுத்துகிறது.

ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல், பிரதானமாக IS பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஒரு விடையிறுப்பு என்ற வாதமே ஓர் அரசியல் மோசடியாகும். இத்தாக்குதல் சர்வதேச முதலாளித்துவத்தின் மோசமடைந்துவரும் வர்க்க மற்றும் புவிசார் மூலோபாய முரண்பாடுகளுக்கு பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பாகும், அனைத்திற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதலுக்கான தயாரிப்பாக உள்ளது.

ஹோலாண்ட் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த போது, "நிதியே" அவரது எதிரி என்றார், ஆனால் அதிகாரத்திற்கு வந்ததும், அவர் ஒவ்வொரு முனையிலும் சிக்கனத்திட்டம் மற்றும் போருக்கு அழுத்தமளிக்கிறார். கிரேக்க மக்கள் மீது ஆழ்ந்த சிக்கனத்திட்டத்தை திணிக்க ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் உடன் இணைந்து, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு எங்கிலும் போர்களை தொடங்கிய அவர் ரஷ்யாவை அச்சுறுத்த ஒபாமா நிர்வாகத்துடன் நெருக்கமாக வேலை செய்தார். சமூக சமத்துவமின்மை வெடிப்பார்ந்த மட்டங்களை எட்டி வருகிறது, பிரான்ஸ் இப்போது தன்னைத்தானே ரஷ்யா உடன் "முழுமையான போரின்" விளிம்பில் காண்கிறது என்பதை ஹோலாண்ட் கடந்த ஆண்டு ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.

அணு ஆயுதங்களுடன் நடத்தப்படும் ஒரு மிகப்பெரிய சர்வதேச போர் அபாயத்திற்குப் பின்புலத்தில், சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் அரசியல் மற்றும் தொழிற்சங்க துணை அமைப்புகள் முற்றிலுமாக மதிப்பிழந்து போயுள்ள நிலைமைகளின் கீழ் தொழிலாள வர்க்கத்தில் அபிவிருத்தி அடைந்துவரும் சமூக கோபம் குறித்து ஹோலாண்ட் அஞ்சுகிறார். ஹோலாண்டை ஒரு "போர் ஜனாதிபதியாக" காட்டுவதும் மற்றும் பிரான்சிற்குள் இராணுவம் மற்றும் ஏதேச்சதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி நனவுபூர்வமாக திரும்புவதுமே சோசலிஸ்ட் கட்சியின் விடையிறுப்பாகும்.

2013 இல் மாலி மீதான பிரெஞ்சு படையெடுப்பின் போது, எலிசே மாளிகையில் உள்ள பிரெஞ்சு ஜனாதிபதியின் ஆலோசகர்கள் Le Point க்குக் கூறுகையில், அவர்கள் "ஃபால்க்லாந்து விளைவை" (Falklands effect) எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர். இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தின் பாகமாக இந்த போர் பொதுமக்களுக்கு முன்வைக்கப்படுகின்ற அதேவேளையில், ஒரு கடுமையான சிக்கனத் திட்டத்தை திணிக்கும் வகையில் அதிகாரபூர்வ மக்கள் கருத்தை பெரிதும் வலதிற்கு நகர்த்துவதே சோசலிஸ்ட் கட்சியின் பிரதான அக்கறையாக உள்ளது.

ஃபால்க்லாந்து தீவு (மால்வினாஸ்) போர் மற்றும் இன்றைய பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் போர்களுக்கு இடையிலான ஒத்தத்தன்மைகளைச் சுட்டிக்காட்டி, Le Point இதழாளர் அன்னா கபானா பின்வருமாறு எழுதினார்: “1982 இல் ஃபால்க்லாந்தில் அர்ஜென்டைன் துருப்புகள் தரையிறங்கிய போது, மார்கரெட் தாட்சர் இராணுவரீதியில் பதிலடி கொடுக்க முடிவெடுத்தார். அவரது கடுமையான சுதந்திர-சந்தை சீர்திருத்த கொள்கைகளுக்காக அப்போது மக்களிடையே ஆழமாக செல்வாக்கிழந்திருந்த அந்த இரும்பு பெண்மணி [மார்கரெட் தாட்சர்], 1983 இல் மீண்டும் அவர் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ள பிரிட்டனை ஓர் இராணுவ சாகசத்தின் மீதேற்றினார்.”

எவ்வாறிருப்பினும் உள்நாட்டில் தொழிலாள வர்க்க விரோத கொள்கைகளை ஜனநாயக-விரோதமாக திணிக்கும் ஒரு முயற்சியில் ஆக்ரோஷமான போர்களைத் தொடங்கும் சோசலிஸ்ட் கட்சியின் கொடூரமான மற்றும் அரசியல்ரீதியில் குற்றகரமான கொள்கை தோல்வியடைந்துள்ளது. சோசலிஸ்ட் கட்சியின் சிக்கனக் கொள்கைக்காக ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் பெரிதும் கொள்ளையடிப்பதை எந்தவிதத்திலும் மக்கள் ஆதரிக்கவில்லை, மேலும் சமூக மற்றும் சர்வதேச பதட்டங்கள் 2013 க்குப் பின்னரில் இருந்து அதிகரித்து மட்டுமே வந்துள்ளன.

பெருந்திரளான உழைக்கும் மக்களை வென்றெடுக்க முடியாமல், பிரெஞ்சு ஆளும் வர்க்கம் அவர்களை ஒடுக்குவதற்கான ஓர் ஈவிரக்கமற்ற முயற்சியில் ஒவ்வொன்றையும் பணயம் வைக்கத் தயாரிப்பு செய்து வருகிறது.