ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French right-wing candidate Alain Juppé warns of rising anti-Muslim hysteria

பிரெஞ்சு வலதுசாரி வேட்பாளர் அலன் யூப்பே முஸ்லிம் எதிர்ப்பு வெறுப்புணர்வு அதிகரிப்பது குறித்து எச்சரிக்கிறார்

By Kumaran Ira
26 September 2016

வெள்ளி அன்று, 2017 க்கான ஜனாதிபதி தேர்தலில் வலதுசாரி குடியரசுக் கட்சியின் (Les Républicains - LR) வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படக்கூடிய முன்னாள் பிரதமர் அலென் யூப்பே, தேர்தல் பிரச்சாரத்தில் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு மற்றும் முஸ்லிம் எதிர்ப்பு வெறுப்புணர்வு மேலாதிக்கம் செய்வது தொடர்பான அவரது கவலைகளை லு மொண்ட்  பத்திரிகைக்கு தெரிவித்தார். பிரான்ஸ் உள்நாட்டுப் போருக்குள் வழுக்கிச்செல்லும் ஆபத்துக் கொண்ட, அந்த அளவு இனவெறுப்பை பிரதான வேட்பாளர்கள் தூண்டுவதாக யூப்பே கூறினார்.

யூப்பே லு மொண்ட் இடம் பின்வருமாறு குறிப்பிட்டார்: “இன்று பிரான்சில் நிலவும் சூழலை நாம் முற்றுமுழுதாக அமைதிப்படுத்த வேண்டும் என்றார். வெறுமனே ‘முஸ்லிம்’ என்ற வார்த்தையைக் கூறுவது வெறுப்புணர்ச்சிக்கு இட்டுச்செல்லுவது என்பது முற்றிலும் பொருத்தமில்லாதது.” அவர் மேலும் குறிப்பட்டார், “நாம் கட்டாயம் சூழ்நிலைமையை அமைதிப்படுத்த வேண்டும். ”இப்பொழுது நாம் போய்க் கொண்டிருக்கும் அதே வழியைத் தொடர்வோமானால், உள்நாட்டு யுத்தத்திற்கு இட்டுச்செல்வோம். ஆனால் நான் உள்நாட்டில் அமைதியைத்தான் விரும்புகிறேன்.”

சிரியாவில் நேட்டோவின் மறைமுக யுத்தத்திற்காக போராடும் இஸ்லாமிய வலைப்பின்னல்களால் பிரான்சிலும் பெல்ஜியத்திலும் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர், கடந்த இரண்டாண்டுகளில் பிரான்சில் முஸ்லிம்கள் மீதான கடும் தாக்குதல்களுக்கு பின்னர் இந்த அசாதாரணமான குறிப்பு வருகிறது. அவசரகால நிலைமைகளின் கீழ் ஆயிரக்கணக்கான முஸ்லிம் வீடுகள் திடீர்ச்சோதனைக்கு உள்ளாயிற்று. அவசரகாலநிலையைத் திணித்த சோசலிஸ்ட் கட்சியின் (PS) ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்ட், நவ பாசிச தேசிய முன்னணி (FN) தலைவர் மரின் லூபென்னை எலிசே ஜனாதிபதி மாளிகைக்கு திரும்பத்திரும்ப வரவேற்றார். மே இல் ஜனாதிபதி பதவிக்கான போட்டிக்கு FN எளிதாக தகுதிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 2015 சார்லி ஹெப்டோ தாக்குதலுக்குப் பின்னர், யூப்பேயின் சொந்த LR கட்சி உள்பட, முஸ்லிம்களைக் கண்டிக்கும் தொடர்ச்சியான  பிராச்சாரத்துக்கு பிரெஞ்சு மக்கள் உள்ளானார்கள். இவ்வாறு, சார்லி ஹெப்டோ தாக்குதல்களுக்கு பின்னர் ஒரு பத்தியில், Nouvel Obs கருத்துரைப்பாளர் ஜோன் டானியல், “ஆம் நாம் யுத்தத்தில் இருக்கின்றோம், அதிகமாய் என்னவெனில் அது மதங்களுக்கான யுத்தம் ஆகும்” என்றார்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், பிரான்சின் முந்தைய பிரதமர் அவசரகாலநிலை பிரகடனம் வெறுப்புணர்ச்சி சூழ்நிலைமையை வளர்த்தெடுத்தது என்பதை ஒப்புக்கொண்டார், அது இனக்குழு மற்றும் மதப்பதட்டங்களை உச்சத்திற்கு கொண்டு வந்தது.

யூப்பேயின் குறிப்புக்களின் உடனடி இலக்கு, LR தேர்விற்காக நிற்கும் அவரது பிரதான போட்டியாளரான முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஆத்திரமூட்டும் கருத்துரைப்பாகும். அவர் நவ பாசிச உணர்விற்கும் மற்றும் பிரெஞ்சு இன அடையாளத்தை போற்றும் அழைப்புகளை சுற்றி தனது பிரச்சாரத்தை கட்டி எழுப்பிக்கொண்டிருக்கிறார்.

கடந்த திங்கள் அன்று சார்க்கோசி கூறினார், “ஒருவர் பிரெஞ்சு பிரஜையாக விரும்பினால், பிரெஞ்சுக்காரராக வாழவேண்டும். நாம் இயங்கமுடியாத ஒருங்கிணைத்தலை (integration) இனியும் சகிக்கமாட்டோம், நாம் உள்இழுத்தலை (assimilation) கோருவோம்.” புராதன கோல் (Gaul) பிராந்தியத்தை பற்றி பிற்போக்குத்தனமான மற்றும் மிக விநோதமாக குறிப்பிட்டு, தற்போதைய பிரான்சின் பெரும்பகுதியை உள்ளடக்கிய ஐரோப்பிய பிராந்தியத்தில் முதலில் செல்ட்டிக் மக்களே வாழ்ந்து வந்தனர். ஒருமுறை நீங்கள் பிரெஞ்சு ஆகிவிட்டால், உங்கள் மூதாதையர்கள் கோல்” என்றார் சார்க்கோசி.

இக்கூற்றானது, பிரெஞ்சுக் குடியுரிமை என்பது ஒரு சட்டரீதியானது, இனக்குழு அல்லது இரத்த உறவு சம்பந்தப்பட்டதல்ல என்ற அடிப்படை நீதித்துறைக் கோட்பாடுகளை அத்துமீறுகிறது. அத்துடன் பிரான்சின் பெரிய அரபு இனக்குழு, ஆபிரிக்க, இத்தாலிய மற்றும் போர்த்துக்கேய பெரும் மக்கட்தொகையினருக்கு முற்றிலும் எதிரானதாக உள்ளது. பிரெஞ்சு அடையாளம் என்பது இரத்த உறவு என்ற சார்க்கோசி முன்னிலைப்படுத்தும் கருத்துக்கள், இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்னரான யூத எதிர்ப்பு Action Française இயக்கத்தின் சார்ல்ஸ் முராஸ் (Charles Maurras) கருத்துருக்களை எதிரொலிக்கின்றது. அவர்கள் அவரது உயர் ஆலோசகர், அதிவலது Minute இதழின் முன்னாள் ஆசிரியரும் முராஸ் இன் பக்தனாக நன்கு அறியப்பட்டவருமான பாட்ரிக் ஃபுய்ஸோன் (Patrick Buisson) உடன் ஒத்துநிற்கின்றனர்.

யூப்பேயின் குறிப்புக்கள், 1930களுக்கு பின்னரான மிகவும் ஆழமான உலக முதலாளித்துவ மற்றும் ஐரோப்பிய நெருக்கடிக்கு மத்தியில், அவர்களது நீண்டகால முஸ்லிம் விரோத மற்றும் சட்டம் ஒழுங்கு தப்பபிப்பிராயங்கள் முற்றிலும் புதிய பரிமாணங்களை எடுக்கின்றன என்ற ஆளும் செல்வந்த தட்டின் பகுதிகளில் வளர்ந்து வரும் கவலைகளை பிரதிபலிக்கின்றன.

2003 இலிருந்து, அனைத்து வகையான பிரெஞ்சு முதலாளித்துவ அரசியல்வாதிகளும் பொது பள்ளிக்கூடங்களில் முகத்திரை அல்லது புர்கா மீதான தடையை ஆதரித்தனர். அத்தகைய முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரங்கள் வலதுசாரி சக்திகளால் மட்டுமல்ல, சோசலிஸ்ட் கட்சி மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA), லுத் ஊவ்றியேர் (தொழிலாளர் போராட்டம், LO), மற்றும் ஜோன் லூக் மெலன்சோனின் இடது முன்னணி போன்ற அதன் போலி இடது கூட்டாளிகளாலும் முன்னிலைப்படுத்தப்பட்டது.

அண்ணளவாக இன்று, ஒரு தசாப்தகால தீவிர பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், பாரிஸ் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் மற்றும் நெருக்கடி நிலைமையின் கீழ் முஸ்லிம் விரோத உணர்வு கூடி வருகின்றது, பதட்டங்களின் மட்டம் அதி உயரத்தில் உள்ளது. புர்க்கினியை தடைசெய்வதறாகான அழைப்பு அல்லது கலேயில் (Calais)  உள்ள அகதிகள் முகாமைக் கலைக்க அழைப்புவிடுப்பது பிரெஞ்சு முதலாளித்துவ அரசியலில் அரசியல்மயப்படுத்தப்பட்ட முஸ்லிம் விரோத தேசியவாதத்தின் அதிகரித்துவரும் வெளிப்பாட்டை பிரதிபலிக்கின்றது.

விச்சி நாஜி ஒத்துழைப்புவாத ஆட்சிக்கு அடிப்படையை அமைத்த Action Française அமைப்பின் ஆதரவாளர்கள், சோசலிஸ்ட் கட்சி மற்றும் போலி-இடதுகளின் மத்தியில் வெளிப்படையாக ஆலோசகர்கள் மற்றும் தொடர்பாளர்களாக அதிகரித்த அளவில் பங்கினை ஆற்றுகின்றனர். குறிப்பாக மெலென்சோன், Buisson உடனும் அதிவலது பத்திரிகையாளரான Eric Zemmour உடனும் நெருக்கமான உறவுகளை வளர்த்துள்ளார், Eric Zemmour ஐ, NPA தொடர்புள்ள செய்தித்தளமான Médiapart ம் முன்னிலைப்படுத்துகிறது.

பிரான்சிலும் ஐரோப்பா எங்கிலும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்த அப்பட்டமான ஊழல்மிக்க மற்றும் பிற்போக்கு அரசியல் நிறுவனத்தின் எந்தக் பிரிவுகளிடமும் விட்டுவிட முடியாது. ஒரு சோசலிச வேலைத்திட்டத்தில் அணிதிரட்டப்படும் தொழிலாள வர்க்கத்தின் கைகளில்தான் இந்தப்பணி விழுகின்றது.

முஸ்லிம் விரோத வெறுப்புணர்ச்சி பற்றிய அவரது மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்கள் முஸ்லிம்களை மற்றும் மக்கட்தொகையினரில் பெரும் பகுதியினரை நசுக்கமாட்டேன் என்று உறுதியாக அர்த்தப்படுத்தவில்லை என்று லு மொண்டிடம் மறு உறுதிப்படுத்தல் செய்வதற்கு யூப்பே மிக சிரமப்பட்டார். “பிரெஞ்சு முஸ்லிம்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேலானவர்கள் குடியரசின் சட்டங்களை ஏற்றுக்கொள்கிறார்கள்,…. ஆனால் அவர்களுள் மூன்றில் ஒரு பங்கினர் ஏற்கவில்லை” என்பதைக் காட்டும் நோக்கத்துடனேயே, Montaigne Institute கருத்துக்கணிப்பை மேற்கோள்காட்டி, யூப்பே “சூழ்நிலை எவ்வளவு மோசமானதாக உள்ளது என்பது பற்றி நான் விழிப்புடன்தான் இருக்கிறேன்” என்றார்.

ஒரு மில்லியனுக்கும் மேலாக இருக்கக்கூடிய பிரெஞ்சு முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பங்கினர் பிரான்சின் சட்ட அமைப்பு முறைக்கு எதிர்ப்பை காட்டுகின்றனர் என்ற யூப்பேயின் கூற்று நகைப்புக்கிடமானது. அதனை செய்ததன் மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக சட்டம் ஒழுங்கு வெறுப்புணர்வை  தூண்டிவிடுவதற்கு யூப்பே தானே உதவுவதாகக் காட்டிக்கொண்டார். ”முஸ்லிம் சமுதாய தலைவர்களுடன் சேர்ந்து, தீவிரமயப்படலை நீர்த்துப்போகச்செய்யும் ஒரு பெரிய பிரச்சாரத்தைப் பொறுப்பெடுக்கச்செய்ய” அழைப்பு விடுத்தார்.

மேலும், முஸ்லிம் விரோத உணர்வு மீதான அவரது அதிருப்திகளை வெளிப்படுத்தும் அதேவேளை, யூப்பேயிடம் முன்வைப்பதற்கு சரியான மாற்று எதுவும் இல்லை, மற்றும் முஸ்லிம்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரை குறிவைக்கும் நடவடிக்கைகளை அவரே அங்கீகரிக்கிறார். நீண்ட அங்கியை அணிந்திருப்பதனாலேயே ஒரு முஸ்லிம் மாணவர் பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேற்றப்படுவது அல்லது புர்க்கினி நீச்சல் உடையை கடற்கரையில் அணியத்தடை போன்ற மிக மோசமான முஸ்லிம் விரோத நடவடிக்கைகளிலிருந்து தன்னைத் தள்ளிவைத்துக் கொண்டாலும், யூப்பே குறிப்பிட்டவகை முஸ்லிம் உடுப்புக்கள் தடைசெய்யப்படுவதை ஆதரித்தார்.

யூப்பே அத்தகைய தடைகளை இனவாதத்திற்கு விடுக்கும் வேண்டுதல்களாக அல்லாமால் ஒரு சாதாரண பொலீஸ் நடவடிக்கையாக தவறாக முன்வைக்கிறார். அவர் லு மொண்டிடம் குறிப்பிட்டதாவது, “கண்கள் தவிர்ந்த முகத்திரை (niqab) மீது அரசு அவை ஒரு நிலைப்பாட்டை எடுத்தது; அது கட்டாயம் தடைசெய்யப்பட வேண்டும் மத காரணங்களுக்காக அல்ல, மாறாக பொது இடங்களில் எங்கும் எல்லா முகங்களையும் அடையாளம் காணும் தேவைக்கு அது முரணாக இருக்கிறது என்பதால். (ஆனால் ஒருவர் மத தடைகளை ஏற்றுக் கொண்டால்,) அடுத்து முன் வைக்கப்படும் கேள்வி பல்கலைக்கழகங்களில் முகத்திரை அணிய தடை மீது, “புர்க்கினிகள்” மீது,  அல்லது ஒருநாள் நீண்ட அங்கிகள் மீது என இருக்கும்…..”

யூப்பேயின் போலீஸ் அரசு மற்றும் சிக்கன பொருளாதார கொள்கைகளின் அடிப்படை விஷயங்கள் உண்மையில் ஹோலண்ட் மற்றும் சோசலிச கட்சியிலிருந்து வேறுபட்டதல்ல. மேலும் அவர் ஒருவேளை தேர்ந்தெடுக்கப்பட்டால் ஹோலண்ட் செய்ததுபோல் பரந்தமக்களின் எதிர்ப்பை திசைதிருப்புதற்கு அவரும் கூட முஸ்லிம் விரோத கூச்சல்களில் தங்கி இருப்பார்.

யூப்பே சட்டம் – ஒழுங்கு நடவடிக்கைகளின் ஒரு தீவிரப்படுத்தலை மற்றும் ஒரு சிறைச்சாலையை கட்டுதலை திட்டமிடுகிறார். அவர் லு மொண்டிடம் கூறியவாறு, “10,000 புதிய ஆட்களுக்கான சிறைக்கூடங்களை உருவாக்கவும் சிறைச்சாலைகளுக்குள் உளவு வேலைகளை மேற்கொள்ளவும் சிறைக்காவலர்களுக்கு ஆதரவாகவும் நீதி அமைச்சக பொறுப்பின் கீழ் சீர்த்திருத்த பொலீஸை உருவாக்கவும் நான் முன்மொழிகிறேன். இறுதியில், தீவிரமயப்படுத்தலுக்கு எதிராகப் போராட நமக்கு சிறை வசதிகள் தேவை.” என்றார்.

பிரான்சின் பொருளாதாரம் தேக்கம் கண்டுள்ள நிலையில், அதன் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையானது உயர இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தால் வகுக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி வரையறையின் 3 சதவீதத்திற்கும் குறைவாக வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை இருக்குமாறு வைத்திருக்க மேலும் வெட்டுக்களை அமுல்படுத்த வேண்டி வரும். ஆகையால் யூப்பே ஆட்சிக்கு வந்தால், சமூக செலவினங்களில் ஆழ்ந்த வெட்டுக்களை மேற்கொள்ள உறுதி பூண்டிருக்கிறார்.

“(தற்போதைய PS) அரசாங்க வாக்குறுதிகள் அனைத்தையும் நீங்கள் பார்ப்பீர்களேயானால் தேர்தலுக்கு பின்னர் இப்பற்றாக்குறை 2.7 சதவீதத்தில் இருக்காது, மாறாக 3.5 சதவீதம் இருக்கும்” என்றார் அவர். “எனது பதவிக்காலம் ஆரம்பித்த உடனிருந்து, ஓய்வூதிய வயதை 65 ஆக நிர்ணயித்தல் அல்லது உழைப்புச் சந்தையை மறுஒழுங்கமைப்பது போன்ற, நீண்டகாலமாக தாமதிக்கப்பட்டுவரும் பிரதான கட்டமைப்பு சீர்திருத்தங்களை தொடங்குவேன். ஒட்டுமொத்தத்தில், பொதுசேவைகளுக்கான செலவினங்களை வெட்டலில் 80 பில்லியன் யூரோக்களை திரட்டுவேன், எனவே வரிவெட்டலுக்கு 30 பில்லியன் யூரோக்களையும் மற்றும் பற்றாக்குறையின் கட்டமைப்புக் குறைத்தலுக்கு 50 பில்லியன் யூரோக்களையும் நிதியளிக்க முடியும்” என்றார் அவர்.