ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Syria and the pro-imperialist pseudo-left

சிரியாவும், ஏகாதிபத்திய-சார்பு போலி-இடதும்

Alex Lantier
27 September 2016

பெண்டகன் உயரதிகாரிகளிடையே, சிரியாவில் அமெரிக்க-ரஷ்ய போர்நிறுத்தம் மீதான விமர்சனம் அதிகரித்திருந்த நிலையில், இவ்வாரம் ஒரு பிரபல வெளியுறவு கொள்கை பகுப்பாய்வாளர் அந்த தற்காலிக போர்நிறுத்தத்தைக் கண்டித்து ஓர் அறிக்கை வெளியிட்டார். ஜனாதிபதி பஷர் அல்-அசாத் ஐ பதவியிலிருந்து நீக்குவதற்கான அமெரிக்காவின் அழைப்புகளை மீளவலியுறுத்திய அவர், போர்விமான ஏவுகணை தடுப்பு தளவாடங்கள் மற்றும் ஏனைய ஆயுதங்களுடன் இஸ்லாமிய எதிர்ப்பு குழுக்களை ஆயுதமேந்த செய்து, சிரியாவில் அமெரிக்க-நேட்டோ தலையீட்டை இன்னும் அதிகமாக தீவிரப்படுத்த வேண்டுமென ஆலோசனை வழங்கினார்.

“சிரியாவின் புதிய போர்நிறுத்த உடன்படிக்கை முறியும் நிலைக்கு பிரயோஜனமின்றி ஆகிவிட்டதை போலவே, வேறெந்த அதேபோன்ற உடன்படிக்கையும் கூட நெருக்கடியின் முக்கிய அரசியல் பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதை ஏறத்தாழ எல்லோராலும் இப்போது கூற முடியும்,” என்று எழுதிய அந்த விமர்சகர், “(மனிதாபிமான நிவாரணங்களைப் பொறுத்த வரையில் இதுவரையில் அந்த தற்காலிக போர்நிறுத்தம் மிகவும் ஏமாற்றகரமாக இருந்துள்ளது என்றாலும்) ஒரு இடைக்கால போர்நிறுத்தம் முற்றிலுமாக இல்லாமல் இருப்பதை விட, நீடித்திருக்காத ஒன்று இருப்பது நிச்சயமாக எவ்வளவோ சிறந்ததுதான். ஆனால் பஷர் அல்-அசாத் ஐ பதவியிலிருந்து இறக்குவதற்கும் மற்றும் ஒரு பன்முக அரசாங்கத்தை நோக்கிய மாற்றத்தை அனுமதிப்பதற்குமான ஒரு பரந்த உடன்படிக்கையை உள்ளடக்கிய திட்டநிரல் எதுவும் இல்லாது, போர் பாதித்த அந்நாட்டில் எந்த போர்நிறுத்தமும் நிலைக்க முடியாது,” என்றார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “அசாத் ஆட்சி மற்றும் அதன் ஈரானிய ஆதரவாளர்களை நிஜமான சமரசம் கோர நிர்பந்திக்கும் விதத்தில், சிரிய மண்ணில் ஒரு சமநிலையான இராணுவ படைகள் இல்லாமல் அங்கே ஓர் உண்மையான அரசியல் தீர்வு சாத்தியமில்லை. … இதுபோன்ற சமநிலையான படைகளை உருவாக்குவதில் உள்ள பிரச்சினை தான், 2012 இல் இருந்து ஒபாமா நிர்வாகத்திற்குள் சிரியா மீதான சச்சரவின் பிரதான முதுகெலும்பாக இருந்து வந்துள்ளது,” என்றார்.

இந்த கட்டுரை ஒரு சிஐஏ நடவடிக்கையாளராலோ, அல்லது, அனேகமாக, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அல்லது நியூ யோர்க் டைம்ஸ் இன் ஒரு கட்டுரையாளராலோ எழுதப்பட்டிருக்கலாம் என்று ஒருவர் அனுமானிக்கக்கூடும். உண்மையில் இதன் ஆசிரியர், பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு-கட்சியினது (NPA) பிரதான கூட்டாளி ஜில்பேர் அஷ்கார் (Gilbert Achcar) ஆவார். இலண்டனின் ஆபிரிக்க மற்றும் கிழக்கத்திய ஆய்வுகளுக்கான பயிலகத்தில் தொழில்ரீதியில் செயல்படுவதற்காக அந்த இயக்கத்திலிருந்து வெளியேறிய அஷ்கார், NPA உடன் தொடர்புபட்ட பிரிட்டனின் சோசலிச எதிர்ப்பு குழுவில் (Socialist Resistance group) இணைந்தார். அவரது சமீபத்திய கட்டுரை, நேஷன் இதழுக்காக எழுதப்பட்டு, NPA உடன் இணைப்பு கொண்ட பப்லோவாத International Viewpoint வலைத் தளத்தில் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

அஷ்கார், அவர் கட்டுரையை எழுதிய அதேவேளையில், அமெரிக்காவில் சர்வதேச சோசலிச அமைப்பின் (ISO) அஸ்லி ஸ்மித் Socialist Worker வலைத் தளத்தில் அதேபோன்ற போர்நாடும் முறையீடு ஒன்றை செய்திருந்தார். ஸ்மித் ஐ பொறுத்த வரையில், அல் கொய்தா இணைப்பு கொண்ட அல்-நுஸ்ரா முன்னணியின் பக்கவாட்டில் சண்டையிட்டு வரும் அமெரிக்க ஆதரவிலான "புரட்சிகர" போராளிகள் குழுக்களை ஆயுதமேந்த செய்ய அந்த தற்காலிக போர்நிறுத்தம் பயன்படுத்தப்பட வேண்டுமாம். அந்த தற்காலிக போர்நிறுத்தம் "அந்த ஆட்சிக்கு எதிரான ஓர் எதிர்கால எழுச்சிக்கு மீள்குழுவாக்கம் பெற புரட்சியாளர்களுக்கு சிறந்த வகையில் மூச்சுவிடுவதற்கான அவகாசம் வழங்கும்,” என்றவர் எழுதினார்.

ரஷ்யாவுடனான ஒரு மிகப்பெரிய மோதலில் நாட்டம் இல்லாமல் இருப்பதற்காக ஸ்மித் ஒபாமாவைத் தாக்கினார். அசாத்தை பதவியிலிருந்து நீக்கவும் மற்றும் எதிர்ப்பை அதிகாரத்திற்குக் கொண்டு வரவும், 2013 இன் இட்டுக்கட்டப்பட்ட "நச்சுவாயு" விடயத்தை இராணுவரீதியில் கைப்பற்ற தவறியதற்காக ஸ்மித் ஒபாமாவை விமர்சிக்கிறார்.

இது ஏனென்றால் "மத்திய கிழக்கில் மற்றொரு தரைப்படை போருக்குள் இழுக்கப்படும் அச்சத்தால்" ஒபாமா "இக்கொள்கைக்கு அழுத்தமளிக்க தயங்கியதாக,” ஸ்மித் எழுதினார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “இவ்விதத்தில், அசாத் ஆட்சி, இரசாயன ஆயுதங்களை தொடர்ந்து பயன்படுத்துவதைப் போலவே, அது 'சிவப்பு கோடு' எனப்படுவதை தாண்டிய போதெல்லாம், அமெரிக்கா, அசாத்தைப் பதவியிலிருந்து கவிழ்ப்பதற்கு மட்டுமின்றி ஒரு பரந்த எழுச்சிக்கும் அச்சுறுத்தும் விதத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு மாறாக, ரஷ்யா உடனான உடன்படிக்கைகளை வெட்டுவதற்கு முற்பட்டது. அந்த ஆட்சியின் வான்வழித் தாக்குதல்களுக்கு எதிராக தன்னைத்தானே பாதுகாக்க மன்றாடி கொண்டிருந்த FSA [சுதந்திர சிரிய இராணுவ போராளிகளுக்கு] ஆயுதங்கள் வழங்கவும் மறுத்துவிட்டது,” என்றார்.

அசாத் ஆட்சியின் "படைத்துறைசாரா இலக்குகள் மீதான பொறுப்பற்ற குண்டுவீச்சு" பற்றிய ஸ்மித் இன் கண்டனங்கள் முற்றிலும் பாசாங்குத்தனமானது என்பதுடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குறிப்பிட்ட தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டதாகும். அவரது பாரபட்சமான இந்த சீற்றம், அமெரிக்க ஆதரவிலான சவூதி குண்டுவீச்சு மற்றும் யேமன் முற்றுகையை கண்டும் காணாமல் கைவிடுகிறது, அதில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் நூறாயிரக்கணக்கான குழந்தைகள் பட்டினியால் அச்சுறுத்தப்பட்டுள்ளன. யேமன் குறித்து ஸ்மித் ஒன்றுமே எழுதவில்லை, அது Socialist Worker வலைத் தளத்திலும் மற்றும் ஒட்டுமொத்த போலி-இடது பத்திரிகைகளாலும் கைவிடப்படுகின்றன.

சிரியாவில் அமெரிக்க ஆதரவிலான இஸ்லாமிய எதிர்ப்பு நடத்திய பிரிவினைவாத படுகொலைகள் குறித்தோ அல்லது கிரெம்ளினின் சிரிய தலையீட்டை விட ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியாவில் பல மடங்கு அதிகமான எண்ணிக்கையில் உயிர்களைப் பறித்துள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரத்தம் தோய்ந்த முன்வரலாறைக் குறித்தோ ஸ்மித் கவலைப்படவில்லை.

அஷ்கார் மற்றும் ஸ்மித் இன் எழுத்துக்கள், முன்னணி போலி-இடது அரசியல் போக்குகளின் நிலைப்பாடுகளுக்கும், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஈவிரக்கமற்ற பிரதிநிதிகளுக்கும் இடையிலான எல்லா முக்கிய வேறுபாட்டையும் துடைத்தழிக்கின்றன. உண்மையில், ஒரு அசாதாரண பத்தியில், சிந்தனைக் குழாமான மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் (CSIS) தலைவர் அந்தோனி கோர்டெஸ்மன் இன் நேசமான மேற்கோளுடன் அஷ்கார் அவர் கட்டுரையை முடிக்கிறார்.

“முந்தைய போர்களில் வாஷிங்டன் கையிலெடுத்திருந்த ஜனநாயக மற்றும் மனிதாபிமான சாக்குபோக்குகள் குறித்து அப்பிராந்தியத்தில் யாருக்கேனும் ஏதாவது பிரமை இருந்திருந்தால், இப்போது அவற்றை அவர்கள் முழுமையாக துறந்திருப்பார்கள்,” என்றவர் எழுதுகிறார். “மத்திய கிழக்கு இராணுவ-அரசியல் நிலைமையை மிகவும் உன்னிப்பாக கவனிப்பவர்களில் ஒருவரான அந்தோனி கோர்டெஸ்மன், சமீபத்தில் கண்டு கொண்டதைப் போல அமெரிக்க ஜனாதிபதி இப்போது முற்றிலுமாக 'வெளியேறும் செயல்திட்டத்தில்' —அதாவது சிரிய நெருக்கடியிலிருந்து வெளியேறுவதில் இல்லை, மாறாக, அவரது சொந்த பதவியிலிருந்து வெளியேறுவதில் ஒருமுனைப்பட்டுள்ளார்,” என்று குறிப்பிடுகிறார்.

அஷ்காரின் "உன்னிப்பான கவனிப்பாளர்" உண்மையில் அமெரிக்க இராணுவவாதத்தின் மிக முக்கிய மூலோபாயவாதிகளில் ஒருவராவார். அவர் அமெரிக்காவின் மத்திய கிழக்கு போர்களின் தீவிரப்பாட்டிற்கும், சீனா மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான ஆக்ரோஷத்தன்மைக்கும் அழைப்பு விடுத்த எண்ணிறைந்த அறிக்கைகளை எழுதியவராவார். இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அழிவு, அதாவது மில்லியன் கணக்கான மக்களின் கொல்லப்படுவது, பொருளாதாரரீதியில் முக்கியத்துவமற்றது என்றரீதியில் அதை உதறித் தள்ளிய, அணுஆயுத போர் குறித்த ஒரு CSIS அறிக்கையின் ஆசிரியரும் இவர் தான். “இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இழப்பு, பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கான ஏற்றுமதியாளர்களுக்கு குறுகிய காலத்திற்கு பொருளாதார பிரச்சினைகளை உருவாக்கும் என்றாலும், இறுதியில் மாற்றீடுகள் அல்லது விலைகளில் எந்த பிரச்சினைகளும் இன்றி, ஏனைய வினியோகஸ்தர்களுக்கு ஆதாயங்களை மாற்றிவிடும்,” என்றவர் எழுதினார்.

எவ்வாறிருப்பினும் அஷ்காரின் நிலைப்பாட்டின்படி கோர்டெஸ்மன் ஒரு சக கூட்டாளியாகிறார், அவருடன் அவரால் நட்பான முறையில் வேலை செய்ய முடியும். அவர்கள் ஒரே நோக்கங்களையும், ஒரே எதிரிகளையும் —அதாவது, அவர்களது போர் கொள்கைகளை எதிர்க்கும் எவரொருவரையும் அவர்களது எதிரிகளாக— பகிர்ந்து கொள்கிறார்கள்.

அஷ்கார் மற்றும் ஸ்மித் இன் கட்டுரைகள் வெறுமனே இவ்விரண்டு தனிநபர்களின் நிலைப்பாடுகளை எடுத்துக்காட்டவில்லை, மாறாக சமூக சக்திகளின் பரிணாமத்தையும், அரசியல் போக்குகள் மீதான அவர்களது பிரதிபலிப்பையும் எடுத்துக்காட்டுகிறது.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த், 1999 இல் பின்வருமாறு எழுதினார்:

நீடித்த பங்குச்சந்தை உயர்வின் புறநிலை செயல்முறை மற்றும் சமூக தாக்கங்கள், உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளிடையே ஒரு புதிய மற்றும் அர்ப்பணிப்பு கொண்ட ஆதரவுத்தளத்தை உருவாக்க ஏகாதிபத்தியத்திற்கு உதவியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மேலோங்கியுள்ள பிற்போக்குத்தனமான, சம்பிரதாயமான மற்றும் எரிச்சலூட்டும் புத்திஜீவித சூழல், ஊடகங்களால் ஊக்குவிக்கப்பட்டு ஒரு மிகப்பெரிய அடிமைத்தனமான மற்றும் ஊழல்பீடித்த கல்வித்துறைசார் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்கள்தொகையில் மிக அதிக தனிச்சலுகை கொண்ட ஒரு அடுக்கின் சமூக கண்ணோட்டத்தை பிரதிபலிக்கிறது, இத்தகைய அடுக்கு புதிதாக பெற்ற அதன் செல்வவளத்தின் பொருளாதார மற்றும் அரசியல் அடித்தளங்களை விமர்சனபூர்வமாக ஆராய்வதை ஊக்குவிக்க குறைந்தபட்சம் கூட ஆர்வப்படவில்லை. [8-August/quat-a08.shtml"கால் நூற்றாண்டு போர்: உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் உந்துதல் 1990-2016]

தங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் இந்த சமூக அடுக்கு மற்றும் அரசியல் போக்குகள், கூர்மையாக வலதிற்கு நகர்ந்துள்ளன. தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் கோபம் மற்றும் போர் மீதான பாரிய எதிர்ப்புக்கு இடையே, போலி-இடது அமைப்புகள் ஏகாதிபத்திய அரசியலில் எவ்வாறு ஒருங்கிணைந்துள்ளன என்பதையும் மற்றும் எவ்வாறு பிரதான பாத்திரம் வகிக்க நியமிக்கப்பட்டுள்ளன என்பதையும் அஷ்கார் மற்றும் ஸ்மித் இன் எழுத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன. 1960 களின் இறுதியில் மற்றும் 1970 களில், போர்-எதிர்ப்பு போராட்டங்களுக்கு தலைமை வகித்த இந்த அமைப்புகள் மற்றும் போக்குகள் இப்போது வெட்கமின்றி போரை ஆதரிக்கின்றன. மனிதயினம் எதிர்கொண்டுள்ள ஆழ்ந்த அபாயங்களுக்கு எதிராக ஒரு புதிய இயக்கத்தைக் கட்டமைப்பதற்காக, தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த உண்மையையும் மற்றும் இதற்கு அடியிலுள்ள சமூக நிகழ்வுபோக்கையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்திற்கு, ஏகாதிபத்திய சார்பு போலி-இடதுகளை திட்டமிட்டு அரசியல்ரீதியில் அம்பலப்படுத்திக் காட்டுவது அவசியமாகும். ஆனால் இந்த தத்துவார்த்த-அரசியல் வேலையானது, தொழிலாள வர்க்கத்தையும் பரந்த பெருந்திரளான இளைஞர்களையும் கல்வியூட்டும் அரசியல் அமைப்புடன் பிரிக்கவியலாதவாறு பிணைந்துள்ளது. இந்த சக்தி வாய்ந்த சமூக சக்திக்குள் இருந்துதான் ஏகாதிபத்திய போருக்கு எதிரான புரட்சிகர எதிர்ப்புக்கான பாரிய ஆதரவு வட்டத்தைக் காண முடியும். சோசலிச சமத்துவ கட்சியும் மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் அழைப்புவிடுத்துள்ள 9-Sept/conf-s17.shtml"முதலாளித்துவம் மற்றும் போருக்கு எதிராக சோசலிசம் என்ற டெட்ராய்ட் மாநாடு போருக்கு எதிரான ஒரு புதிய இயக்கத்தைக் கட்டமைக்கும் போராட்டத்தில் ஒரு முக்கிய முன்னோக்கிய படியைக் குறிக்கும். இந்த அதிமுக்கிய மாநாட்டில் பங்கெடுக்க நவம்பர் 5 இல் டெட்ராய்டுக்கு வருமாறு நாம் உலக சோசலிச வலைத் தள ஆதரவாளர்கள் மற்றும் வாசர்களை அழைக்கிறோம்.