ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Police murder of two Jaffna University students expose Sri Lankan Tamil nationalists

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் போலிஸ் கொலை தமிழ் தேசியவாதிகளை அம்பலப்படுத்துகிறது

By K. Nesan,
24 October 2016

சென்ற வியாழக்கிழமையன்று, யாழ்ப்பாணத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பவுன்ராஜ் சுலக்‌ஷண் மற்றும் நடராசா கஜன் ஆகிய யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இரண்டு கலைப் பிரிவு மாணவர்களை இலங்கை போலிஸ் கொலை செய்தது. ஒட்டுமொத்த தீவிலும் வர்க்கக் குரோதங்கள் துரிதமாக தீவிரமடைந்து செல்வதன் மத்தியில் போலிஸின் இந்தக் கொலை நடைபெற்றுள்ளது. அமெரிக்கா ஒரு ஆட்சிமாற்ற நடவடிக்கைக்கு பொறியமைவு செய்த கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், அதன்மூலம் அமர்த்தப்பட்ட “நல்லாட்சி” அரசாங்கமானது மேலும் மேலும் அதிகமாய் மக்கள்வெறுப்பதாய் ஆகிக் கொண்டிருக்கிறது, அத்துடன் தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் மத்தியில் அதற்கான எதிர்ப்பும் அதிகரித்துச் சென்று கொண்டிருக்கிறது.

திகிலூட்டும்விதமாக, பாதுகாப்புச் செயலரான கருணாசேன ஹெட்டியாராச்சி இந்தக் கொலைகளை வழக்கமான நடைமுறை என்றார். “வடக்கில் மட்டுமல்ல, இதேபோன்ற சம்பவங்கள் தெற்கிலும் கூட நடந்திருக்கின்றன. இதனை யாரும் பிரத்தியேகமானதாக” தீவின் வடபகுதியின் தமிழ் சிறுபான்மையினர் மீதானதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றார். தொடர்ந்து கூறுகையில், “அவசியப்பட்டால்” சட்டம் ஒழுங்கை உறுதிசெய்வதற்கு “இராணுவம் போலிசுக்கு உதவத் தயாராய்” இருப்பதாக அவர் அச்சுறுத்தினார்.

போலிஸ், ஊடகங்கள் மற்றும் தமிழ் தேசியவாதக் கட்சிகள் இந்தக் கொலையை ஆரம்பத்தில் ஒரு விபத்தாக சித்தரிக்க முயற்சி செய்தன. தமிழ் தேசியவாத வலைத் தளங்கள் அமெரிக்க ஆதரவு இலங்கை ஆட்சியை பாதுகாக்கும் விதமாய், இந்தப் போலிஸ் கொலையை ஒரு “துயரமான சம்பவம்” எனக் கூறின.

பிரேதப் பரிசோதனையின் போது, இறந்தவர்களில் ஒருவரின் மார்பிலும் தலையிலும் துப்பாக்கி ரவை இருந்ததையும், இரண்டாமவர் கடுமையான உட்புறக் காயங்களுக்குப் பலியாகியிருந்ததையும் நீதித்துறையின் மருத்துவ அதிகாரிகள் கண்டனர். மோட்டார் சைக்கிளை ஓட்டியவரை போலிஸ் தலைமீது குறிவைத்ததால், அவர் வண்டியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் பக்கவாட்டில் இருந்த ஒரு சுவரில் மோதியிருப்பதாய் தென்படுகிறது.

குற்றச் சம்பவம் நடந்த இடத்தின் அருகில் வாழும் மக்கள் அவர்கள் முதலில் துப்பாக்கிச் சத்தத்தை கேட்டதை உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர்களிடம் உறுதிபடத் தெரிவித்தனர். அவர்கள் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, காயமடைந்த மாணவர்களைக் கொண்டுசெல்வதற்கு போலிஸ் தயாரிப்பு செய்து கொண்டிருந்ததை கண்டனர்.        

சம்பவத்திற்கு எதிராக மருத்துவமனையின் முன் கூடிய நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகத்தின் மாணவர்களும் பொதுமக்களும் விபத்து என்று விடப்பட்ட கதையை  நிராகரித்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா மத்தியஸ்தம் செய்வதற்காக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டிருந்தார். விபத்து என்னும் கதையை விற்க முயன்ற சேனாதிராஜாவுக்கு எதிராக மாணவர்கள் கோபத்துடன், “இது ஒரு விபத்து அல்ல, இது கொலை” குரலெழுப்பினர். “பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று கூறி விட்டு சேனாதிராஜா சம்பவ இடத்தில் இருந்து பின் வாங்கினர்.

மாணவர் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவரான சம்பந்தன் கிழக்கு மாகாணத்தில் தேசிய சுற்றுச்சூழல் மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவுடன் ஒரே மேடையையில் இருந்தார். போலிஸ் மிருகத்தனம் குறித்து ஒரு வார்த்தையும் கூட சம்பந்தன் உச்சரிக்கவில்லை. அதற்கு மாறாய், அவர் சிறிசேனாவைப் புகழ்ந்து, அமெரிக்க ஆதரவு ஆட்சியின் பின்னால் மீண்டும் தன்னை நிறுத்திக் கொண்டிருந்தார்.

அவர் பேசினார்: “நாட்டின் மக்களிடையே ஒற்றுமையையும் புரிதலையும் உருவாக்குவதற்கு இந்த அரசாங்கம் தீவிரமாய் முயற்சி செய்கிறது என்பதான ஒரு எண்ணம் சர்வதேச சமுதாயத்தின் மத்தியில் உருவாகியுள்ளது. ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் தங்களது முயற்சிகளில் வெற்றிபெறுவதற்கு நாம் அனைவரும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.”

போலிஸ் கொலைகளைக் கண்டனம் செய்ய சம்பந்தன் மறுத்ததென்பது ஒரு தனிமைப்பட்ட நிகழ்வு அல்ல. தமிழ் தேசியவாதிகள் போலிஸ் மிருகத்தனத்தை ஆதரிக்கிறார்கள். 2015 மே மாதத்தில், உயர்நிலைப்பள்ளி மாணவியான வித்யா சிவலோகநாதன் கொடூரமான விதத்தில் படுகொலை செய்யப்பட்டிருந்ததன் பின்னர், வட மாகாணம் முழுமையாக பாரிய ஆர்ப்பாட்டங்கள் எழுந்தன. யாழ்ப்பாண நீதிமன்றங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்கள் போலிசுடன் மோதினர், சுமார் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் போலிசுடன் இணைந்து செயல்பட்டனர், அரசின் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதாக அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கண்டனம் செய்தனர். வடக்கு மாகாண முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்: “நாம் போலிசுடன் ஒத்துழைக்க வேண்டும், அவர்களை எதிரியாகப் பார்க்கக் கூடாது. சில துஷ்டநோக்கம் கொண்ட மனிதர்கள் நமக்கும் போலிசுக்கும் இடையில் பேதங்களை உருவாக்கி ஒரு சண்டையை எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பதும், நிலைமையைச் சீர்குலைக்க முயற்சி செய்கிறார்கள் என்பதும் மிகத் தெளிவாய் தெரிகிறது.”

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கை அரசியலுக்கு பெருகிச் செல்கின்ற எதிர்ப்பை ஒடுக்குவதற்கு, பாதுகாப்புப் படைகளையே தமிழ் தேசிய கூட்டமைப்பும் மற்ற தமிழ் தேசியவாதக் குழுக்களும் பெருமளவில் சார்ந்திருக்கின்றன. இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், சலுகைகொண்ட ஒரு சிறு அடுக்கு தவிர்த்து மற்ற அத்தனை பேருமே போரினால் விளைந்த பெருநாசத்தின் நிழலில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுவதற்கு அரசாங்கமும் வட மாகாணசபையும் எதுவும் செய்யவில்லை.

போதைப்பொருள் கடத்தல், வழிப்பறி, கொள்ளைகள் மற்றும் குழு மோதல் நடவடிக்கைகளை காரணமாகக் கூறி போலிஸ் படைப்பலம் பாரிய அளவில் வலுவாக்க பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகஸ்டில், தமிழ் பேசும் போலிஸ் கூடுதலாய் 400 பேர் அமர்த்தப்பட்டனர். ”பயங்கரவாத எதிர்ப்பு”க்குப் பெயர்பெற்ற இராணுவ பாணியிலான போலிஸ் அலகான, சிறப்பு அதிரடிப் படை (STF) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகிலும் யாழ்ப்பாண தீபகற்பத்தைச் சுற்றிய முக்கிய பகுதிகளிலும் நிறுத்தப்படுவதை விக்னேஸ்வரன் ஏற்றுக் கொண்டுள்ளார். தமிழ் பேசும் மோட்டார் சைக்கிள் போலிஸ் அலகு ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டிருந்ததைக் காட்டும் காணொளியை புதன்கிழமையன்று தமிழ் தேசியவாத வலைத் தளமான தமிழ் வின் பெருமைபொங்கக் காட்டியது. அடுத்த நாள் இந்த இரண்டு மாணவர்களையும் போலிஸ் கொலை செய்தது.

150,000க்கும் அதிகமான படையினர்களைக் கொண்ட இராணுவ ஆக்கிரமிப்புப் படையும் போலிசும்தான் குற்றவியல் நடவடிக்கைகளது அதிகரிப்புக்கு காரணமாய் இருப்பதாக மக்கள் சந்தேகிக்கின்றனர், ஏனெனில் இலங்கையின் கடற்படை ரோந்துப் படகுகளின் கவனத்திற்குத் தப்பி, பாக்கு தொடுவாயினை கடந்து இந்தியாவில் இருந்து போதைப்பொருள் கடத்தல் நடைபெற முடியாது. இராணுவ உளவுப்பிரிவு பல சந்தர்ப்பங்களில் குழு நடவடிக்கைகள், கொள்ளைகளை ஒழுங்குபடுத்துவதாக சந்தேகிக்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கமும் வடமாகாண சபையும் போலிஸ் அரசு ஆட்சி வடிவங்களை உருவாக்க முனைந்து கொண்டிருக்கின்றன. இந்த உண்மையை, யாழ்ப்பாண உயர்நீதிமன்ற நீதிபதியான மாணிக்கவாசகர் இளஞ்செழியன் பகிரங்கமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். கிழக்கு மாகாணத்தில் சேவையில் இருக்கையில், தான் பயன்படுத்திய வழிமுறைகள் குறித்து நினைவுகூர்கையில் அவர் கூறினார்: “சிறப்பு அதிரடிப் படை மாலை நேரங்களில் வீதிகளில் மும்முரமாக ரோந்து சுற்றுவதற்கு எனது நீதித்துறை அதிகாரங்களைப் பயன்படுத்தி நான் உத்தரவிட்டேன். ஐந்து பேருக்கும் அதிகமாய் கூடிநிற்பதே சட்டவிரோதம் என்று அறிவித்து அதை மீறுபவர்களைக் கைது செய்வதற்கும் உத்தரவிட்டேன்.”

மரணதண்டனையின் தீவிர ஆதரவாளரான இளஞ்செழியன் ஏராளமான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறார். பலசமயங்களில் அவர், சந்தேகிக்கப்படுபவர்களுக்கு பிணை வழங்கப்படுகின்ற சட்ட உரிமையை மறுத்திருப்பதோடு வழக்கறிஞர்கள் வழக்குகளை பின்போடுவதனையும் மறுத்திருக்கிறார். உள்நாட்டுப் போரின்போது அரசாங்கத்தின் போர்க் குற்றங்களை விசாரிக்க, சர்வதேச விசாரணையினையும் அல்லது வெளிநாட்டு நீதிபதிகளினையும் அவர் எதிர்த்தார். “நீதித்துறை சுதந்திரத்திற்கு அவரளித்த பங்களிப்பை” அங்கீகரிக்கும் விதமாக 2001 இல் அமெரிக்கா அவருக்கு கௌரவ அமெரிக்கக் குடிமகன் அந்தஸ்தை வழங்கியது. உண்மையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அவரது சேவைகளின் காரணமாகவே அவர் “கௌரவிக்க பட்டிருந்தார்”.

தமிழ் தேசியவாதக் கட்சிகள், இளஞ்செழியனின் தன்னிச்சையான வழிமுறைகளை எதிர்த்ததுமில்லை அல்லது மக்களுக்கு எதிரான போலிசின் வன்முறையைக் கண்டித்ததுமில்லை. இந்த இரண்டு மாணவர்களின் கொலையில் அரசாங்கத்தின் பொறுப்பைக் கண்டனம் செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியவை வெளிப்படையாவே மறுத்து விட்டன.

அரசாங்கத்திற்கும் அமெரிக்காவில் இருக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் பகிரங்கமான ஆதரவை வெளிப்படுத்தும் விதத்தில், பாரபட்சமற்ற விசாரணைக்கு சிறிசேன வாக்குறுதியளித்துள்ளதையும், குற்றமிழைத்த ஐந்து போலிஸ்காரர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதையும், குற்றத்தை விசாரிக்க புதிய போலிஸ் படைகளும் உளவுப் படையும் அனுப்பப்பட்டுள்ளதையும் அவர்கள் தூக்கிப் பிடிக்கின்றனர். மாணவர்களின் நியாயமான கோபத்தை திசைதிருப்புவதற்கும் கொலைகளுக்கான அரசியல் பொறுப்பை மூடிமறைப்பதற்குமே அவை முனைந்து கொண்டிருக்கின்றன.