ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Russia warns US strikes against Syria may lead to war

சிரியாவுக்கு எதிரான அமெரிக்கத் தாக்குதல்கள் போருக்கு இட்டுச் செல்லலாம் என ரஷ்யா எச்சரிக்கிறது

By Alex Lantier
10 October 2016

சிரிய மோதல் உலகின் மிகப்பெரும் அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான போராக தீவிரப்பட்டுச் செல்வதன் ஒரு அறிகுறியாக, நேற்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சரான சேர்ஜி லாவ்ரோவ், சிரியாவில் ரஷ்யா மற்றும் அதன் கூட்டாளிகள் மீதான நேட்டோவின் வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ரஷ்யா இராணுவரீதியாக பதிலிறுக்கும் என்று கூறி எச்சரித்தார்.

சிரியாவிற்குள்ளாக சிரிய அல்லது ரஷ்யப் படைகள் மீது குண்டுவீசுவதற்கு அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளைக் குறிப்பிட்டு லாவ்ரோவ் பேசினார். “இது மிக ஆபத்தான விளையாட்டு” என்றார் அவர். “சிரியாவில், அந்த நாட்டின் உத்தியோகபூர்வமான அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ரஷ்யா அங்கே இருக்கிறது. இரண்டு தளங்கள் அதற்கு அங்கே இருக்கிறது, அத்துடன் தனது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வான் பாதுகாப்பு அமைப்புகளும் அதனிடம் உள்ளன.”

அணுசக்தி திறம் கொண்ட இஸ்க்லாண்டர்-எம் ஏவுகணைகளை ரஷ்ய பால்டிக் நகரமான கலினின்கிராட்டுக்கு சென்ற வெள்ளிக்கிழமை மாஸ்கோ அனுப்பியது. கலினின்கிரேடில் இருந்து இந்த ஏவுகணைகள் போலந்து மற்றும் பால்டிக் குடியரசுகள் எங்கிலும் நேட்டோ தளங்கள் உள்ளிட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்த முடியும். அமெரிக்க இராணுவம் தனது பதிலிறுப்பைத் தெரிந்து கொள்கின்ற வகையிலும் இந்த ஏவுகணைகள் கலினின்கிராட்டுக்கு செல்லவிருந்தன என்பதை அதற்கு தெளிவாக்குகின்ற வகையிலும் “அமெரிக்க வேவு செயற்கைக்கோளின் கண்பார்வையின் கீழே” இந்த ஏவுகணைகள் பால்டிக் கடலில் ஒரு தளவாடக் கப்பலில் ஏற்றப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்ற வாரத்தில் வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட அமெரிக்க செய்தித்தாள்களுக்கு கசிந்திருந்த செய்திகள், அமெரிக்க மக்களின் முதுகிற்குப் பின்னால் சிரிய அரசாங்கப் படைகளின் மீது ஒரு தாக்குதல் தொடுப்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் விவாதித்துக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தின. இந்த செய்திக்கசிவுகள் குறித்து ஒரு சில ஊடகங்களிலேயே செய்திகள் வெளியாகியிருக்கிற அதேநேரத்தில், இத்தகைய ஒரு இராணுவத் தீவிரமாக்கலின் அபாயம் மற்றும் பின்விளைவுகள் குறித்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களில் ஒரு காதைச் செவிடாக்கும் அமைதி நிலவுகிறது.

புதன்கிழமையன்று, போஸ்டின் ஜோஸ் ரோஜின் எழுதினார்: “வெளியுறவுத் துறை அதிகாரிகள், சிஐஏ மற்றும் முப்படைத் தலைவர்கள் சிரிய ஆட்சிக்கு எதிரான வரம்புபட்ட இராணுவத் தாக்குதல்களை நடத்துவது குறித்து விவாதித்தனர்... இரகசியமானதாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த பரிசீலிப்பில், கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளைக் கொண்டும் கூட்டணி விமானங்கள் மற்றும் கப்பல்களில் இருந்து ஏவப்படுகின்ற மற்ற தொலை-தூரத் தாக்குதல் ஏவுகணைகளை கொண்டும் சிரிய விமானப்படை ஓடுதளங்களின் மீது குண்டுவீசுவது உள்ளிட்ட தெரிவுகள் இருந்ததாக விவாதத்தில் பங்குபெற்ற ஒரு நிர்வாக அதிகாரி என்னிடம் தெரிவித்தார். ஐ-நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் இல்லாமல் அசாத்தின் ஆட்சி மீது தாக்குவதற்கு வெள்ளை மாளிகை நீண்ட காலமாய் கொண்டிருக்கக் கூடிய ஆட்சேபத்தை கடந்து செல்வதற்கான ஒரு வழியாக இரகசியமாக பொது ஒப்புதலில்லாமல் தாக்குதல்கள் நடத்துவதற்கான ஒரு ஆலோசனையை ஒருவர் வைத்தார் என்று அந்த அதிகாரி கூறினார்.”

விக்கிலீக்ஸ் கசிவில் வெளியானவாறாக, ஹிலாரி கிளிண்டன் 2013 இல் வோல் ஸ்ட்ரீட் வங்கியாளர்களுக்கு வழங்கிய ஒரு உரையில் இத்தகையதொரு “பறக்க கூடாத வலய”த்தைத் திணிப்பது பாரிய அப்பாவி மக்கள் உயிரிழப்பதையும் கொண்டு வரும் என்று கூறியிருந்தார். “பறக்க கூடாத வலயத்தைக் கொண்டு வர வேண்டுமென்றால், அத்தனை வான் பாதுகாப்புகளையும் நீங்கள் அகற்றியாக வேண்டும். இவற்றில் பலவும் மக்கள்தொகை மிகுந்த பகுதிகளில் அமைந்துள்ளன. ஆகவே நமது ஏவுகணைகள், அவை தனித்தனி ஏவுகணைகள் என்பதால் நமது பைலட்டுகளுக்கு ஆபத்து விளைவிக்காது என்றாலும், ஏராளமான சிரியர்களை நீங்கள் கொல்வதாக இருக்கும்.”

சென்ற மாதத்தில் Deir ez-Zor இல் அமெரிக்காவின் குண்டுவீச்சில் குறைந்தபட்சம் 62 சிரிய படைவீரர்கள் கொல்லப்பட்டனர், 100 பேர் காயமடைந்தனர் என்ற நிலையில், அமெரிக்கத் தாக்குதல்கள் சிரிய இராணுவத்திற்கு பாரிய சேதம் விளைவிப்பதற்கும் நோக்கம் கொண்டிருக்கும் என்றே அனுமானிக்கப்பட வேண்டியிருக்கும்.

லாவ்ரோவ் கருத்து கூறுவதற்கு முன்பாகவே, போஸ்டில் வந்த செய்தி போன்ற கசிவுகளுக்கு ரஷ்யாவின் இராணுவ அதிகாரிகள் அளித்த பதிலிறுப்பில், அமெரிக்க அதிகாரிகள் ஒரு பெரிய போரைத் தூண்டிவிடுகின்ற அபாயத்தில் இறங்கியிருப்பதாக எச்சரித்தனார். ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளரான ஜெனரல் இகோர் கோனஷெங்கோவ் கூறுகையில், அமெரிக்காவின் தாக்குதல்களை குரோதமானதாக தனது படைகள் எடுத்துக் கொள்ளும், சிரியா மீதான இரகசிய விமானங்கள் உள்ளிட்ட அமெரிக்க விமானங்களைக் கண்டறிந்து அழிக்கும் என்று தெரிவித்தார்.

“சிரிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்தின் மீதான எந்த ஏவுகணை அல்லது வான் தாக்குதல்களும் ரஷ்ய படைவீரர்களுக்கு ஒரு தெளிவான அச்சுறுத்தலை உருவாக்கும்” என்று கோனஷெங்கோவ் கூறினார். “ஒரு ’நேர் கோட்டில்’ ஏவுகணைகளின் சரியான பறக்கும் பாதைகள் மற்றும் யார் இந்த தாக்குதலுக்குச் சொந்தக்காரர்கள் என்பதையெல்லாம் கண்டறிந்து கொண்டிருப்பதற்கெல்லாம் ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பின் ஊழியர்களுக்கு நேரமிருக்கப் போவதில்லை. அத்துடன் ‘கண்ணுக்குப் புலப்படா’ ஜெட் விமானங்கள் இருப்பது குறித்த நிபுணத்துவமற்றவர்களது அத்தனை பிரமைகளும் ஒரு ஏமாற்றமான நிதர்சனத்திற்கு முகம்கொடுக்கும்.”

ோஸ்ட் செய்தி போன்ற “கசிவுகள்” குறித்து கூறிய அவர், இவ்வாறு சேர்த்துக் கொண்டார், “இன்று சிரியாவில் ’இயங்குவேக’ காட்சிகளுக்காக லாபி செய்து கொண்டிருக்கக் கூடிய.... சிஐஏ மற்றும் பென்டகனின் பிரதிநிதிகள் தான் இத்தகைய ஆத்திரமூட்டல்களுக்கு முன்முயற்சி எடுத்து வருபவர்கள் என்ற தகவல் தான் குறிப்பான கவலைக்குரியதாகும்.”

அமெரிக்கா “இத்தகைய திட்டங்களால் விளையக் கூடிய சாத்தியமான பின்விளைவுகள் குறித்த ஒரு முழுமையான கணக்கீட்டை” செய்து கொள்வது நல்லது என கோனஷெங்கோவ் எச்சரித்தார்.

இந்தக் கருத்து திகிலூட்டுவதாய் இருக்கிறது. கோனஷெங்கோவ் வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், மாஸ்கோவின் கருத்துகளின் முக்கியத்துவம் தெளிவாய்க் கூறுவது, அமெரிக்கத் திட்டங்களின் செயலாக்கம் ரஷ்யாவுடனான ஒரு இராணுவ மோதலைக் குறிக்கிறது என்பதும், அத்தகையதொரு மோதலின் சாத்தியமான பின்விளைவுகளில் பில்லியன் கணக்கான மக்களைக் கொல்லக் கூடிய ஒரு முழுவீச்சிலான அணுஆயுதப் போராக அது தீவிரப்படுகின்ற சாத்தியமும் உள்ளடங்கியுள்ளது என்பதும் ஆகும். 1991 இல் சோவியத் ஒன்றியத்தை ஸ்ராலினிச அதிகாரத்துவம் கலைத்து விட்டிருந்ததற்கு பிந்தைய காலகட்டத்தில் நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உறவுகளை ஸ்திரப்படுத்தியதாக இருந்த இராஜதந்திர ரீதியான ஏற்பாடுகள் பொறிந்து விட்டிருக்கின்றன.

அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் ஒரு போரைத் தொடங்குவதற்கு முடிவு செய்யுமாயின் அதற்குரிய தயாரிப்பு செய்வதைத் தவிர்த்த வேறெந்தவழியும் தன்னிடம் இல்லை என்று ரஷ்யா வெளிப்படையாக முடிவு கூறியிருக்கும் நிலையில், உலகெங்கிலுமான உழைக்கும் மக்களே ஒரு பேரழிவுகரமான போருக்கான எதிர்ப்பை அளிக்கக் கூடிய ஒரே சமூகத் திரட்சியாக எழுந்து கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்காவின் தலைமையில் நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் முன்னெடுக்கிற வலிந்து தாக்கும் கொள்கையே போர் நெருக்கடியின் உந்துசக்தியாக இருக்கிறது. 2013 இல் சிரியாவில் நேட்டோவின் ஒரு திட்டமிட்ட போரை எதிர்ப்பதன் மூலம் மத்திய கிழக்கில் வரைமுறையற்ற அமெரிக்க-நேட்டோ போர்களுக்கான ஒரு முட்டுக்கட்டையாக ரஷ்யா எழுந்திருப்பதானது அமெரிக்காவுக்கு முற்றிலும் ஏற்கமுடியாததாய் இருக்கிறது.

இப்போது, சிரியாவில் நேட்டோவின் அல்-கெய்தாவுடன் தொடர்புடைய இஸ்லாமிய பினாமிகள் அலெப்போவைச் சுற்றிலும் தோல்விக்கு முகம்கொடுத்து நிற்கின்ற நிலையில், அவர்களைக் காப்பாற்ற ஒரு போரைத் தொடுப்பதற்கு அமெரிக்க அரசின் கன்னைகள் பகிரங்கமாக அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றன. சென்ற மாதத்தில் அமெரிக்க தளபதியான ஜோசப் டன்போர்ட் சிரியா மீது ஒரு “பறக்க கூடாத வலய”த்தை திணிப்பதற்கு அமெரிக்க செனட்டிடம் தனது ஆதரவை வெளிப்படுத்தினார். “சிரியாவுடனும் ரஷ்யாவுடனும் போருக்குச் செல்வதை இது நமக்கு அவசியமாக்கலாம்” என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்.

சென்ற வாரத்தில், அமெரிக்க இராணுவத்தின் படைத்தலைவரான ஜெனரல் மார்க் மிலி ரஷ்யாவையும் சீனாவையும் எதிரிகளாய் குறிப்பிட்டார். அவற்றை நேரடியாகக் குறிப்பிட்டு அவர் அறிவித்தார்: “எங்களுக்குத் தீங்கிழைக்க விரும்புபவர்களுக்கு நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன்...அமெரிக்க இராணுவமாகிய நாங்கள் - எங்களது அத்தனை சவால்களும் இருப்பினும், எங்களது (நடவடிக்கை ரீதியான) செயல்வேகம் இருப்பினும், நாங்கள் செய்து கொண்டிருப்பவை அத்தனையும் இருப்பினும் - உங்களை தடுத்து நிறுத்துவோம், நீங்கள் முன்பு எப்போது தோற்றிருப்பதை விடவும் மிகவும் கடினமான வகையில் உங்களைத் தோற்கடிப்போம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.”

சிரியாவிலான நெருக்கடிக்கு நேட்டோ சக்திகள்தான் மையமான பொறுப்புக்குரியவை என்ற அதேநேரத்தில், ரஷ்யாவின் சோவியத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ சிலவரணியின் பதிலிறுப்பும் பொறுப்பற்றதாகவும் பிற்போக்குத்தனமானதாகவும் இருக்கிறது. சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தில் போருக்கு இருக்கக் கூடிய எதிர்ப்புக்கு விண்ணப்பிக்கிற திறனில்லாமலும் அதற்குக் குரோதமான வகையிலும், அது, சிரியாவில் அமெரிக்க-நேட்டோ இராணுவத் தீவிரமாக்கத்தை முறியடிப்பதற்கும் ஏகாதிபத்திய சக்திகளுடன் ஒரு உடன்பாட்டை பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் தனது இராணுவ வலிமையைப் பயன்படுத்துவதற்கு நோக்கம் கொண்டிருக்கிறது.

இந்தக் கொள்கை முற்றிலும் தோல்வியடைந்திருக்கிறது. மாறாக, ஒரு உடன்பாட்டிற்கு அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்கும் சிரியாவிற்குள்ளாக இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கும் இடையிலான ரஷ்யாவின் ஊசலாட்டங்கள் அதனை நேட்டோவுடனான ஒரு ஆழமான மோதலுக்குள் இழுத்துச் சென்றிருக்கிறது, ஒரு பெரும் இராணுவ மோதலைக் கட்டவிழ்த்து விட அது அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

போர் ஒரு மிக உண்மையான சாத்தியம் என்பதை ரஷ்யா நம்புவதுடன் மட்டுமல்லாமல் அத்தகையதொரு போர் துரிதமாக சிரியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு பரவும் என்பதையும் தான் எதிர்பார்த்திருப்பதை அமெரிக்காவுக்கும் அதன் ஐரோப்பியக் கூட்டாளிகளுக்கும் சமிக்கையளிப்பதாகவே கலினின்கிராட்டில் ரஷ்யாவின் ஏவுகணை நிறுத்தம் அமைந்திருக்கிறது. 2014 இல் உக்ரேனில் ஒரு ரஷ்ய-ஆதரவு ஆட்சியை கவிழ்த்த பாசிசத் தலைமையிலான ஒரு ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஆதரவளித்த நேட்டோ அப்போது முதலே கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவின் எல்லைகள் அருகே பத்தாயிரக்கணக்கிலான துருப்புகளை நிலைநிறுத்தியிருக்கிறது.

இது ரஷ்யாவின் தேசியப் பாதுகாப்புக்கு ஒரு சகிக்கவியலாத அச்சுறுத்தலை முன்நிறுத்தியதாக லாவ்ரோவ் கூறினார். “ரஷ்யாவை நோக்கிய அமெரிக்க கொள்கையின் இருதயத்தானத்தில் இப்போது இருக்கக் கூடிய மூர்க்கத்தனமான ரஷ்ய-அச்சத்தில் (Russophobia) சூழ்நிலைகளில் ஒரு அடிப்படையான மாற்றத்தை நாங்கள் கண்ணுற்றிருக்கிறோம்” என்றார் அவர். “இது வாய்ச்சவடால் ரஷ்ய-அச்சம் அல்ல, மாறாக உண்மையாக எங்களது தேசிய நலன்களுக்கு கவலையளிக்கக் கூடிய மற்றும் எங்களது பாதுகாப்புக்கு அபாயமூட்டக் கூடிய மூர்க்கமான நடவடிக்கைகள். நேட்டோ விரிவாக்கப்படுதல், நேட்டோவின் இராணுவக் கட்டமைப்பை எங்களது எல்லைகளை ஒட்டி நிலைநிறுத்துதல்... அத்துடன் ஒரு ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பை நிலைநிறுத்துதல் - இவை அனைத்துமே நட்புபாராட்டாத, குரோதமான நடவடிக்கைகளின் ஒரு காட்சியாகும்.”

சிரியாவில் இருந்து பின்வாங்கக் கூறும் அமெரிக்க உத்தரவுகளுக்கு ரஷ்யா கீழ்ப்படியவில்லை என்றால், இஸ்லாமியக் குழுக்கள் “தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்தலாம், ரஷ்ய நலன்களுக்கு எதிரான, இன்னும் சொன்னால் ரஷ்ய நகரங்களுக்கு எதிரான தாக்குதல்களும் கூட அதில் இடம்பெறலாம். ரஷ்யா தொடர்ந்து துருப்புகளை உடலைக் கட்டும் பைகளில் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கும், அத்துடன் வளங்களை, இன்னும் விமானங்களையும் கூட, தொடர்ந்து இழந்து கொண்டிருக்கும்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளரான ஜோன் கிர்பி விடுத்த மிரட்டலில்தான் குறிப்பாக ரஷ்யா மிகவும் ஆவேசமடைந்திருந்தது. இந்த பொருளடக்கத்தில், சிரியாவில் “சில” எதிர்ப்புத் தீவிரவாதக் குழுக்கள் மீது அமெரிக்கா செல்வாக்கு செலுத்த முடியும் என்பதான கிர்பியின் அடுத்துவந்த அவதானிப்பு ஒரு மிரட்டலின் தன்மையைக் கொண்டிருந்தது.

சிஐஏவின் ஆயுதங்கள் அலெப்போவில் உள்ள அல்-கெய்தாவுடன் பிணைந்த அல்-நுஸ்ரா முன்னணியின் ஆயுதக்கிடங்குகளுக்கு சென்று சேர்கின்ற நிலையில், இஸ்லாமிய எதிர்ப்புக்குழுக்களிடம் சென்று சிரிய ஆட்சி விழுவதை ரஷ்யா வெறுமனே அனுமதிக்குமாயின், இப்போது சிரியாவில் நேட்டோ நோக்கம் கொண்டிருக்கின்ற அதே இஸ்லாமிய நடவடிக்கைகளின் வகைக்கு தானும் இலக்காவதை ரஷ்யா விரைவில் காணும் என்பது தெளிவாக இருக்கிறது. இதுதான், குறைந்தபட்சம் இப்போதைக்கேனும், சிரியா மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் இராணுவ நடவடிக்கையை தடுத்து நிறுத்துகின்ற ஒரு நிர்க்கதியான முயற்சியில் அமெரிக்காவுடன் ஒரு ஆபத்தான முழு-மூச்சிலான மோதலில் இறங்குவதற்கு ரஷ்யாவுக்கு ஊக்கமளித்திருக்கிறது என்பது வெளிப்படை.