ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

இலங்கை தோட்டத் தொழிற்சங்கங்கள் உற்பத்தி திறனுடன் பிணைக்கப்பட்ட சம்பள உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன

By Panini Wijesiriwardena
22 October 2016

தொழிலாளர்களின் பிரமாண்டமான எதிர்ப்பின் மத்தியில், கடந்த செவ்வாய் கிழமை உற்பத்த திறனுடன் பிணைக்கப்பட்ட புதிய கூட்டு ஒப்பந்தத்தில் இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் கைச்சாத்திட்டன. முந்தைய கூட்டு ஒப்பந்தம் காலவதியாகி 18 மாத கால தாமதத்தின் பின்னரே கைச்சாத்திடப்பட்ட இந்த புதிய ஒப்பந்தமானது கம்பனிக்காரர்கள், சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவமும் சேர்ந்து, தொழிலாளர்களுக்கு எதிராகச் செய்த சதியின் விளைவாகும்.

ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் புதிய ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மறுநாளே போராட்டத்தில் குத்தித்தனர். பொகவந்தலாவையில் கொட்டியாகலை, மஸ்கெலியாவில் சாமிமலைக்கு அருகில் ஸ்டொக்ஹொம், ஸ்றெத்ஸ்பி மற்றும் லட்புரோக், பண்டாரவளை டயரபா மற்றும் பலாங்கொடையில் ரத்வத்தை போன்ற தோட்டங்கள் உட்பட பல தோட்டங்களில் தொழிலாளர்கள் முற்பகல் வேலையை நிறுத்திவிட்டு, ஒப்பந்தத்தை கிழித்தெறியுமாறும் ஆயிரம் ரூபா நாள் சம்பளம் வழங்குமாறும் கோரி எதிர்ப்பில் ஈடுபட்டனர். தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் துரோக செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சங்கங்கள் சந்தாப் பணம் அறவிடுவதை நிறுத்துமாறும் அவர்கள் கோஷமிட்டனர். நேற்றும் தோட்டப் பகுதியில் இந்த எதிர்ப்பு பரவலாக நிலவியது.

இதற்கும் மேலாக, தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் ஆசிரியர்களாக பயிற்சி பெறும் கொட்டகலை ஸ்ரீபாத கல்விக் கலாசாலையில் மாணவர்களும் தமது பெற்றோர்களின் கோரிக்கையான ஆயிரம் ரூபா நாள் சம்பளத்தை வழங்குமாறு கோரி, கடந்த திங்களன்று ஹட்டன்-நுவரெலியா வீதியில் கலாசாலை சந்தியில் போராட்டம் நடத்தினர்.

இந்த எதிர்ப்புகளை ஒடுக்குவதற்காக கம்பனிகளும், அசாங்கமும் தொழிற்சங்கங்களும் பல்வேறு நடவடிக்கைகள் பின்பற்றி வருகின்றன. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட அன்றே நுவரெலியா லபுக்கலை தோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 தொழிலாளர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டனர். அந்த நீதிமன்றத்தின் நீதிபதியின் உத்தியோகபூர்வ பயணத்திற்கு தடை ஏற்படுத்தி வீதியை அடைத்துக்கொண்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மறுநாள் மஸ்கெலியா சாமிமலைக்குச் செல்லும் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருதந்த ஸ்றெத்ஸ்பி தோட்டத் தொழிலாளர்களை பொலிசார் அச்சுறுத்தி விரட்டியடித்துள்ளனர். ‘இப்போது ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு முடிந்துவிட்டது. அதனால் வேலைக்கு போங்கடா’ எனக் கூறி பொலிசார் தம்மை அச்சுறுத்தியதாக தொழிலாளர்கள் கூறினர்.

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரான பி. திகாம்பரம் தலைமையிலான தேசிய தொழிலாளர் சங்கத்தின் (NUW) பிரதேச தலைவரான பி. நகுலேஸ்வரன், மூன்று வாரங்களுக்கு முன்னர் மஸ்கெலியா நகரில் நடந்த தொழிலாளர் போராட்டத்தை அடக்குவதற்காக நீதிமன்றத்தின் ஊடாக பொலிசை நகர்த்தினார். பின்னர் ஒரு நாள் டீசைட் தோட்டத் தொழிலாளர்கள் அது பற்றி அவரிடம் வினவிய போது, தான் அப்படி செய்ததாக நகுலேஸ்வரன் உத்வேகத்துடன் கூறியமை, தொழிலாளர்களை அடக்கிக்கொடுக்கும் தொழிற்துறை பொலிஸ்கார வேலையை பகிரங்கமாக செய்வதற்கான தயார் நிலையை வெளிப்படுத்தியது.

எவ்வாறெனினும், ஆயிரம் ரூபா நாள் சம்பளம் கோரி செப்டெம்பர் 26 முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு, புதிய ஒப்பந்தத்தில் உள்ளடங்கியுள்ள பிரிவுகள் என்ன என்பதை தொழிற்சங்க அதிகாரத்துவம் இதுவரையும் வெளிப்படுத்தவில்லை.

ஊடகங்களில் கசியும் தகவல்களின் படி, புதிய ஒப்பந்தத்தில் தொழிலாளர்களின் நாள் சம்பளம் வெறும் 110 ரூபாயால் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே புதிய ஊதியம் 730 ரூபாவாகும். இதில் அடிப்படை சம்பளம் 450 ரூபாவில் இருந்து 500 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. விலைக்கான கொடுப்பனவு 30 ரூபாயாகவே இருக்கும் அதே வேளை, வருகைக்கான கொடுப்பனவு 140 ரூபாவில் இருந்து 60 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வருகைக்கான கொடுப்பனவை பெற்றுக்கொள்ள தொழிலாளி மாதம் வேலை நாட்களில் 75 வீதம் வேலைக்கு சமூகமளிக்க வேண்டும்.

அதே சமயம், உற்பத்தியை அதிகரிப்பதற்கான கொடுப்பனவாக 140 ரூபா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு தோட்டத்தில் பறிக்க வேண்டிய கொழுந்தின் இலக்கை அடைந்தால் மட்டுமே இதைப் பெற முடியும். இந்த கொழுந்து பறிக்கும் இலக்கு தோட்டத்துக்கு தோட்டம் மாறுபட்டாலும், குறிப்பிட்ட தோட்டத்தின் தொழிற்சங்கத் தலைவரின் உடன்பாட்டின் அடிப்படையில் இலக்கை உயர்த்திக்கொள்ள முடியும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் (இ.தொ.கா.) தலைவரான முத்து சிவலிங்கம் உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்தார்.

இந்த நிபந்தனையின் மூர்க்கத்தனத்தை உடனடியாக வெளிப்படுத்தி அக்கரபத்தனை ஹென்போல்ட் தோட்டத்தின் ஹென்போட்ல் பிரிவில் கொழுந்து பறிக்கும் இலக்கு 16 கிலோவில் இருந்து 18 கிலோ வரையும், ஆக்ரா பிரிவில் 16 கிலோவில் இருந்து 22 வரையும் நேற்றில் இருந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக ஏனைய தோட்டங்களில் தொழிற்சங்கத் தலைவர்கள் நிர்வாக்துடன் சேர்ந்து இந்த இலக்கை இடுப்பை உடைக்கும் அளவுக்கு உயர்த்துவர்.

சோசலிச சமத்துவக் கட்சி, உலக சோசலிச வலைத் தளத்தின் ஊடாக சுட்டிக்காட்டியவாறு, இந்த உற்பத்தித் திறன் சூத்திரம் அடங்கிய ஒப்பந்தம் சம்பள அதிகரிப்பு ஒப்பந்தம் அல்ல, அது ஊதியத்தை வெட்டும் ஒப்பந்தமாகும் என்பது ஒரே நாளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தில் அடங்கியுள்ள விடயங்கள் அம்பலத்துக்கு வந்து அதன் மூர்க்கமான நிபந்தனைகள் நடைமுறைக்கு வரும் வேளை, தொழிற்சங்க அதிகாரத்துவம் சம்பந்தமாக தொழிலாளர்களின் சீற்றம் பல்வேறு விதத்தில் வெளிபட்டுக்கொண்டிருக்கின்றது.

நேற்று சக்தி டீ.வி. இரவு நேர செய்தியில், ஒப்பந்தத்துக்கு எதிராக நோர்வுட்டில் எல்போட பெருந்தோட்டத்தில் நடந்த எதிர்ப்பின் காட்சிகளும் பல தொழிலாளர்களது கருத்துக்களும் ஒளிபரப்பாகியது. தொழிலாளர்களால் இ.தொ.கா. தொழிற்சங்க அலுவலகத்தின் விளம்பர பலகை கறுப்பு கொடியால் மூடப்பட்டும், அப்பிரதேசத்தைச் சுற்றி கருப்பு கொடியும் கட்டப்பட்டிருந்தன.

தொழிற்சங்கங்களுக்கு தங்களிடம் இருந்து சந்தாப் பணம் அறவிடுவதை நிறுத்துமாறு கோரி தோட்ட நிர்வாகத்துக்கு கடிதம் கொடுத்த பின்னரே ஆர்ப்பாட்டத்துக்கு வந்ததாக தொழிலாளர்கள் ஆத்திரத்துடன் தெரிவித்தனர்.

அந்த தோட்டத்தின் ஒரு பெண் தொழிலாளி பின்வருமாறு கூறினார்: “தீபாவளிக்கு முந்திய தடவையை விட இம்முறை அதிகமான முற்பணம் கொடுத்து எமது போராட்டத்தை தகர்க்க நிர்வாகமும் தொழிற்சங்கங்களும் வேலை செய்கின்றன. தீபாவளி வருடத்திற்கு ஒருமுறைதான் வரும். 1,000 ரூபா எங்களுக்கு அன்றாடம் தேவைப்படும் தொகை. அவர்களின் முற்பணத்திற்காக நாங்கள் எங்கள் போராட்டத்தை காட்டிக்கொடுக்க மாட்டோம்”.

பண்டாரவளை டயரபா தோட்டத்தின் பெண் தொழிலாளர்கள், தங்களது வாக்குகளில் அமைச்சராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆகிய தொழிற்சங்கத் தலைவர்கள், மீண்டும் வாக்கு கேட்டு வந்தால் செருப்பால் அடிப்போம், என ஆத்திரத்துடன் கூறினர்.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் மஸ்கெலியா பிரதேசத்தின் பல தோட்டங்களில் தொழிலாளர்களை சந்தித்து ஒப்பந்தம் பற்றி அவர்களது கருத்துக்களை கேட்டனர்.

டீசைட் தோட்டத்தின் தொழிலாளி கூறியதாவது: “நான் இ.தொ.கா. உறுப்பினர். இ.தொ.கா. உட்பட எல்லா தொழிற்சங்கங்களும் எங்களை காட்டிக்கொடுத்து விட்டன. இந்த தொழிற்சங்கங்களில் இருப்பதில் அர்த்தம் இல்லை. இன்று காலை நான் தோட்ட அலுவலகத்திற்கு சென்று, இனிமேல் எனது சம்பளத்தில் தொழிற்சங்கத்திற்கு சந்தாப் பணம் அறவிட வேண்டாம் என கடிதம் கொடுத்துவிட்டேன். ஏனையவர்களும் என்னைப் போல் கடிதம் கொடுப்பதாக கூறினர்.”

தொழிற்சங்கம் பற்றிய அவரது அனுபவம் துன்பகரமானது என்றும், தொழிலாளர்கள் போராட்டத்துக்கு வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தொழிலாளர்களை ஸ்தம்பிக்கச் செய்வதற்காக அவர்கள் செயற்பட்டதாகவும் அவர் கூறினார். “நாங்கள் போராட்டத்திற்கு சென்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் எங்களை சமாதானப் படுத்துவதையே தொழிற்சங்கங்கள் செய்தன. இப்போது அந்த நிலைமை மாறிவிட்டது. இப்போது அவர்கள் எங்களுக்கு எதிராக கம்பனிக்காரர்களுக்காக வெளிப்படையாகவே வேலை செய்கின்றனர்.”

தமது சம்பளப் போராட்டத்தை முன்கொண்டு செல்ல வேண்டும் எனவும், தொழிற்சங்கங்ளோடு அதை எந்த வகையிலும் செய்ய முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். “சோசலிச சமத்துவக் கட்சி கூறுவது போல் புதிய அமைப்பு ஒன்று தேவை என்பதை நான் எற்றுக்கொள்கிறேன். சோ.ச.க. முன்மொழியும் தொழிலாளர் நடவடிக்கை குழு பற்றி எனக்கு இன்னும் கலந்துரையாட வேண்டும்.”

கிளனியூஜி தோட்டத்தின் ஒரு பெண் தொழிலாளி கூறியாதாவது: “730 ரூபாவுக்கு கைச்சாத்திடுமாறு தொழிற்சங்கங்களுக்கு யார் சொன்னது. நாங்கள் சொல்லவில்லை. எங்களிடம் கேட்கவும் இல்லை. இது புதுமையான வேலை. எங்களது ஊதியத்தை தீர்மானிப்பது கம்பனியும், அரசாங்கமும் தொழிற்சங்கங்களும்! எந்த சம்பளத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எங்களது சம்பளத்தை நாங்களே தீர்மானிக்கும் ஒரு அமைப்பு எமக்கு வேண்டும்.”

தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தால் சிறந்த வாழ்க்கையை வாழலாம் எனக் கூறி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணி தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட கும்பல், தங்களது வாக்குகளை பொய் சொல்லி கறந்துகொண்டதாகவும், தோட்டத் தொழிலாளர்களை பள்ளத்தில் தள்ளி, அவர்களது உதவியில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்ட இந்த கூட்டம், சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும் அந்தப் பெண் கூறினார்.

இந்த தோட்டத்தில் இன்னொரு பெண் தொழிலாளி பேசும்போது, தீபாவளி பண்டிகைக்காக முன்னர் வழங்கிய முற்பணம் கூட, இம்முறை வட்டியுடன் கூடிய கடனாகவே கம்பனியிடம் இருந்து பெற்றுக்கொடுக்கப்படுகிறது என்றார். “கம்பனிகள் இப்போது வங்கிகளைப் போல் வேலை செய்கின்றன. கடன் வாங்கும் ஒப்பந்தத்துக்கு தோட்டத்திலேயே சாட்சிக்காரர்களை கேட்கின்றனர். இவைதான் இந்த அரசாங்கத்தில் எங்களுக்கு கிடைத்துள்ள சலுகை,” என அவர் தெரிவித்தார்.