ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Trump scandal and the US gutter election

ட்ரம்ப் தொடர்பான முறைகேடுகளும் அமெரிக்க சாக்கடை தேர்தலும்

Patrick Martin
10 October 2016

பொதுவாகவே தரம்தாழ்ந்த அமெரிக்க அரசியலானது இந்த வார முடிவில் ஒரு புதிய கீழ்மட்டத்திற்குள் நுழைந்தது. குடியரசுக்கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் 2005ல் தன் செல்வந்த அந்தஸ்தையும் புகழையும் பயன்படுத்தி பெண்களை பாலியல்ரீதியாக தாக்கும் தமது திறன் பற்றிப் பீற்றிக்கொள்ளும் ஒரு காணொலி வெளியானதை அடுத்து வெடித்த முறைகேடுகளை பற்றி விபரிப்பதில் முழு ஊடகத்துறையும் மற்றும் அரசியல் அமைப்பும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டன.

பரந்த அளவில் வாக்குச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டு மற்றும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமை அல்லது அஞ்சல் வாக்கு பதிவு ஆகியவற்றினால் நடைமுறையில் சாத்தியமில்லாத மோதும் டசின் கணக்கான குடியரசுக் கட்சி பொறுப்புக்களில் உள்ளவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தாங்கள் ட்ரம்பிற்கு வாக்களிக்கமாட்டோம் எனவும் அவருக்குப் பதிலாக வேறொருவரை கட்சியின் வேட்பாளராக்க கோருவோம் எனவும் தெரிவித்தனர். ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்ப்பை கண்டனம் செய்யும் வாய்ப்பில் குதித்தனர். அமெரிக்க இராணுவத்தால் தொடங்கப்படும் ஒவ்வொரு யுத்தத்திற்கும் உற்சாகப்படுத்த தவறாத ஊடக வண்ணனையாளர்கள், ட்ரம்ப், பெண்கள் தொடர்பாக கூறிய விதம் பற்றிய தங்களின் அதிர்ச்சியூட்டும் சினத்தை வெளிக்காட்டினர்.

ட்ரம்பின் கருத்துக்களை பொறுத்தவரை, குடியரசுக் கட்சியின் அரசியல் கலாச்சாரம் மற்றும் ஒட்டுமொத்த இருகட்சி முதலாளித்துவ ஆட்சிமுறையின் திகைப்பூட்டும் சீரழிந்த நிலையை அக்கறையுடன் அவதானிக்கும் எவரும் வியப்படையவோ அல்லது அதிர்ச்சியுறவோ மாட்டார்கள். ட்ரம்ப் அவரது உருவடிவில் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பிற்போக்குத்தனத்தின் நியூ யோர்க் மாநகர நில-கட்டிட விற்பனைச் சந்தை, அட்லாண்டிக் சிட்டி கசினோக்கள், லாஸ் வெகாஸ் மற்றும் பொழுதுபோக்கு தொழிற்துறை ஆகியவற்றின் அருவருப்பான விளைபொருளையே தன்னகத்தே கொண்டுள்ளார்.

முன்வைக்கப்பட்ட கருத்துக்களை விடவும் மிக முக்கியத்துவம் உடையது என்னவெனில் அவை எங்கு பன்படுத்தப்படுகின்றது என்பதுதான். ஆளும் வர்க்கத்தின் குறிப்பிடத்தக்க பகுதி ட்ரம்பின் ஜனாதிபதியாகும் தன்மை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதென முடிவு செய்தது. எந்தவிதமான விவாதத்தையும் மறைக்கும் அதேவேளை இந்த முறைகேடானது வேறுபாடுகளை தீர்க்கப் போராடும் இயங்குமுறையாக இருப்பது கிளிண்டன் பிரச்சாரத்தின் அதி பிற்போக்குத் தன்மை ஆகும். ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பை ஆபாச அரசியலின் மிக தரம்தாழ்ந்த மட்டத்தில் வைத்து போராட விரும்புகின்றனர்.

பாலியல் முறைகேடுகள் என்பது, மக்கட்தொகையினரில் பெரும்பகுதியினரை உண்மையான பிரச்சினை என்ன என்பது குறித்து எச்சரிக்கையடையாமல், ஆளும் வர்க்கத்தால் தமது மோதல்களை ஒழுங்குபடுத்துவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு வழமையான இயங்குமுறையாக ஆகியுள்ளன. அத்தகைய வழிமுறைகள் அமெரிக்க அரசியலின் ஒரு சிறப்பியல்பாக இருந்துவருகிறது. FBI இயக்குநர் ஜே. எட்கார் ஹூவர் (1895–1972) அத்தகைய தனிநபர் முறைகேடுகள் நிரம்பிய பதிவேடுகளை, காங்கிரஸ் உறுப்பினர்களை, நிர்வாக அலுவலர்களை, ஜனாதிபதிகளை நிர்பந்தப்படுத்துவதற்கு பயன்படுத்துவதற்காக, இழிபேர் பெற்ற வகையில் அவரது மேசையில் பராமரித்து வைத்திருந்தார்.

NBC இன் Access Hollywood நிகழ்ச்சி ஒளிப்பதிவிலிருந்து கண்டறியப்பட்டு, தேர்தலுக்கு 30 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், உச்சபட்ச பாதிப்பைச்செய்யும் கணத்தில் பயன்படுத்துவதற்காக ஒதுக்கிவைக்கப்பட்டதோ என்ற சிறு ஐயத்தை தோற்றுவித்திருக்கிறது. இந்த குறிப்பிட்ட தீர்வானது ட்ரம்ப் பிரச்சாரத்தை இறுதியில் மூழ்கடிக்கத் தவறினால், நிறைய நீர்மூழ்கி குண்டுகள் தயாராய் இருக்கின்றன என்ற சிறு ஐயமும் கூட இருக்கிறது.

ஞாயிற்றுக் கிழமை இரவு நகரசபை விவாதத்தில் குறிப்பிட்ட அளவுக்கு உண்மையான விடயங்கள் வெளிவந்தன. சேற்றைவாரி இறைத்தல் மற்றும் தூற்றுதல் இவற்றின் பின்னே, வெளிநாட்டுக் கொள்கை மீதாக மட்டுப்படுத்தப்பட்ட கலந்துரையாடலில் கிளிண்டனின் நிகழ்ச்சிநிரல் வெளிப்பட்ட பொழுது அவர் திரும்பத் திரும்ப “ரஷ்ய ஆக்கிரமிப்பை” கண்டனம் செய்தார் மற்றும் சிரியாவில் பெரும் இராணுவ மோதல் தீவிரமயப்படுத்தலிற்கு அழைப்புவிடுத்தார்.

வோல் ஸ்ட்ரீட் வங்கிகளுக்கான அவரது பேச்சுக்களில் இருந்து எடுக்கப்பட்ட அவரது குறிப்புக்கள் உள்பட மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பாக “பகிரங்க” மற்றும் “தனிப்பட்ட” நிலைப்பாட்டை கொண்டிருப்பது அவசியமானது என்று அவர் கூறியதொன்றும் விக்கி லீக்ஸிலிருந்து வெளியில் கசிந்தது பற்றிக் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், அது ட்ரம்பிற்கு சாதகமாக தேர்தலில் செல்வாக்கை செலுத்த விழைகிறது என்று குற்றம்சாட்டி, கிளிண்டன் உடனே ரஷ்யா மீதான தாக்குதலுக்கு மாறினார். “எமது உளவுத்துறை அமைப்பு கடந்த சில நாட்களில் கிரெம்ளின், அதாவது புட்டினும், ரஷ்ய அரசாங்கமும் தாக்குதல்களை நடத்துகின்றனர் (அதாவது DNC மின்னஞ்சல்களை வெளிப்படுத்துதல்), நமது தேர்தல்களில் செல்வாக்கு செலுத்த அமெரிக்க கணக்குகளை கணினியில் களவாடுகின்றனர் என்று கூறினர். விக்கிலீக்ஸ் அதில் ஒரு பகுதியாக இருக்கிறது” என்றார்.

கிளிண்டன் பின்னர் சேர்த்துக்கொண்டதாவது, ஒரு “அழுத்தத்தை” ஏற்படுத்தும் பொருட்டு, அவர் சிரியாவில் “பறக்ககூடாத மண்டலத்திற்கு” ஆதரவளித்தார். இது கடந்த மாதம் கூட்டுப் படைத்தலைமையின் தலைவர் ஜோசெப் டன்ஃபோர்ட் கூறிய, ரஷ்யாவுடனான ஒரு போரை அர்த்தப்படுத்தும். “ரஷ்யா சிரியாவில் எல்லா இடங்களிலும் தலையீடு செய்ய முடிவெடுத்துவிட்டது,” என கிளிண்டன் கூறினார். “மற்றும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக அவர்கள் காணவிரும்புபவரையும் கூட அவர்கள் தீர்மானித்து விட்டார்கள், அது நான் அல்ல. நான் ரஷ்யாவிற்கு எதிராக நிற்கிறேன். புட்டினையும் மற்றவர்களையும் நான் எதிர் கொண்டுள்ளேன், மற்றும் ஒரு ஜனாதிபதியாகவும் அதைச் செய்வேன்.”

அமெரிக்க ஆளும் வர்க்கம் திட்டமிடுவது இதுதான்,  உண்மையில் ஏற்கெனவே அது நடைமுறைப்படுத்தப் படலாயிற்று. இந்தக் கொள்கையை பின்பற்றுவதில் தியாகம் செய்வதற்கு அவர் எத்தனை பேரை தயார்ப்படுத்தி வைத்திருக்கிறார் என்று, விவாதத்தில் இருந்த மிதவாதிகளான அன்டர்சன் கூப்பர் அல்லது மார்த்தா ரடாட்ஸ் ஆல் கிளிண்டன் கேள்வி கேட்கப்படவில்லை.

அமெரிக்க ஊடகம், ட்ரம்ப்பின் பாலியல் வேட்டைகள் மீதாக கவலையை வெளிப்படுத்துகிறது, ஆனால் மில்லியன் கணக்கானோர் இல்லையேனினும் ஆயிரக்ககணக்கானோரின் வாழ்வை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஏகாதிபத்திய சூறையாடிகளின் வேட்டைகள் தொடர்பாக வியப்பையோ மனத்தடுமாற்றத்தையோ அது காட்டவில்லை. “நாம் வந்தோம், நாம் பார்த்தோம், அவர் இறந்து கிடந்தார்.” என்று அறிவித்து, லிபிய அதிபர் முஅம்மர் கடாஃபியை படுகொலை செய்தது மீதாக சந்தோஷமாக முறுவல் செய்த கிளிண்டனின் தொலைக்காட்சி நேர்காணல் மீது இதுபோன்ற அக்கறை கொண்ட ஊடக ஆர்வமும் அங்கு இருக்கவில்லை.

விவாதத்திலிருந்து வெளிப்பட்டவற்றை பொறுத்தவரை, அது கிளிண்டனும் ஜனநாயகக் கட்சியினரும் விரும்பியவகையில் செல்லவில்லை என்பது தெளிவு. ட்ரம்பிற்கு எதிரான குரோதத்தை அவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள விழையும் அதேவேளை, ஜனநாயகக் கட்சிக்காரர்களும், மிகவும் இகழ்ச்சிக்குரிய, குற்றத்தன்மையிலும் முறைகேட்டிலும் நன்கு தோய்ந்த, தனிநபரை தங்களின் சொந்த வேட்பாளராக கொண்டிருக்கிறார்கள். ட்ரம்பின் வலதுசாரி வாயரற்றலுக்கு கிளிண்டனிடம் உண்மையான பதில் எதுவும் இல்லை. அவர், அவ்வம்மையாரை “பொய்யர்” என்று கண்டனம் செய்து, அவ்வம்மையாரின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

ட்ரம்ப்பின் பின்தங்கிய தன்மை காட்சி ஐயத்திற்கிடமின்றி அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறது, ஆனால் அது இரு கட்சி அமைப்பு முறை மற்றும் தேர்தல் முறை ஒட்டுமொத்தத்தினதும் முறையற்ற மற்றும் மோசடித்தனத்தை சுட்டிக்காட்டுகிறது. அதற்கு ஜனநாயகக் கட்சியினது அரசியல் களவு மற்றும் போர்வெறியரை முன்மொழிவது ஒரு மாற்றீடாகாது. நவீன அமெரிக்க வரலாற்றில் இரு வேட்பாளர்களும், 325 மில்லியன் மக்களால் மிகவும் வெறுக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர், அவ்வாறே அவர்கள் அதற்கு தகுதியானவர்களாகவும் இருக்கின்றனர்.

வெள்ளை மாளிகையில் ஹிலாரி கிளிண்டனை பதவியில் இருத்துவதானது, அமெரிக்க ஆளும் தட்டில் உள்ள ஒருமித்த கருத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கொள்கைகளை —மிக மூர்க்கமான ஆக்கிரமிப்பு வெளிவிவகாரக் கொள்கையை, அனைத்திற்கும் மேலாக சீனா, ரஷ்யாவிற்கு எதிராக இயக்கப்படும், மற்றும் உள்நாட்டில் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களையும் உரிமைகளையும் நசுக்குவதை உறுதிசெய்ய மட்டுமே செய்யும். அது அரசியல் அமைப்பு முறையை மேலும் வலதுக்கு தள்ளக்கூடிய மற்றும் அதிவலது பாசிச சக்திகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய நோக்கத்திற்கு தன்னை பயன்படுத்தும் ஒரு ஏறுமாறான பில்லியனரைவிடவும் பெரு முதலாளிகளின் அனுபவம் கொண்ட மற்றும் நம்பிக்கைக்குரிய பிரதிநிதியால் பின்பற்றப்படுவதைத்தான் அது உறுதிப்படுத்தும்.