ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump’s election overshadows Asia-Pacific summit

ட்ரம்பின் வெற்றி ஆசிய-பசிபிக் மாநாட்டில் நிறைந்திருந்தது

By Mike Head
21 November 2016

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதால் உலகெங்கிலுமான அரசுகளில் உருவாகி உள்ள நிச்சயமற்றதன்மை, ஸ்திரமின்மை மற்றும் அரசியல் மறுதிருத்தங்கள், இவ்வாரயிறுதியில் பெருவின் லிமாவில் நடந்த ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டுறவு (APEC) மாநாட்டிலும் வெளிப்பட்டன.

அமெரிக்காவின் வெளியேறவிருக்கும் இடைக்கால ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் அமெரிக்கா உத்தியோகபூர்வமாக பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது என்றாலும், 21 அரசு தலைவர்களின் அந்த ஒன்றுகூடலின் மீது ட்ரம்ப் இன் தேர்ந்தெடுப்பு ஒரு நீள நிழலைப் போர்த்தியிருந்தது. வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகம் மிகவும் அப்பட்டமாக பாதுகாப்புவாத, தேசியவாத மற்றும் இராணுவ கொள்கையை ஏற்கின்ற நிலையில் அங்கே அவநம்பிக்கைவாதம் அதிகரித்து வந்ததன் ஒரு தெளிவான உணர்வு இருந்தது.

“அமெரிக்க வேலைகளை" பாதுகாப்பதற்காக என்று சீன மற்றும் ஏனைய இறக்குமதிகள் மீது 45 சதவீத வரி விதிக்கும் அவரது அச்சுறுத்தல்களுடன், ட்ரம்ப் "சுதந்திர வணிக" பாசாங்குத்தனங்களை ஓரங்கட்டியுள்ளார். இந்த "சுதந்திர வணிக" பாசாங்குத்தனங்களைக் கொண்டுதான் முந்தைய நிர்வாகங்கள் இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய அமெரிக்க பொருளாதார மேலாதிக்கத்தை அப்பிராந்தியத்தில் பேண முனைந்தன.

ட்ரம்ப்பின் வெற்றியை தொடர்ந்து, பசிபிக் இடையிலான நாடுகளது பங்காண்மையை (TPP) அமெரிக்க காங்கிரஸ் இல் நிறைவேற்றுவதற்கு அவரது இடைக்காலத்தை பயன்படுத்துவதென்ற முந்தைய பொறுப்புறுதியை ஒபாமா கிடப்பில் போட்டுவிட்டார். “சுதந்திர வணிகத்தை" பிரதிநிதித்துவம் செய்வதிலிருந்து விலகி இந்த உடன்படிக்கை, சீனா நீங்கலாக, அப்பிராந்தியம் எங்கிலும் கட்டுப்பாடில்லா அமெரிக்க பொருளாதார பலத்தை ஸ்தாபிக்கும் ஓர் அக்ரோஷமான அமெரிக்க-தலைமையிலான வணிக அணிதிரட்டலாக இருந்தது.

ஒபாமா மீண்டும் மீண்டும் குறிப்பிட்டிருந்ததைப் போல, TPP ஆனது பெய்ஜிங்கின் அதிகரித்து வரும் செல்வாக்கை எதிர்கொள்ள அவரது நிர்வாகத்தின் ஆசியாவை நோக்கிய "முன்னெடுப்பின்" பொருளாதார தளவாடமாக இருந்தது. TPP வழியாக, உலகளாவிய வணிக விதிகளை, சீனா அல்ல, அமெரிக்காவினால் எழுத முடியும் என்று அவர் அறிவித்தார். ஆனால் ட்ரம்ப் இன் "முதலிடத்தில் அமெரிக்கா" பாதுகாப்புவாதம், “சுதந்திர வணிகம்" மற்றும் "சுதந்திர சந்தைகளது" மறைப்புகளை அகற்றுவதுடன், அதன் அனைத்து போட்டியாளர்கள் மீதும், முக்கியமாக சீனா மீது, அமெரிக்க நலன்களை ஆக்ரோஷமாக வலியுறுத்துகிறது.

ட்ரம்ப் அவரது நீண்ட அமெரிக்க தேர்தல் பிரச்சாரம் நெடுகிலும், அமெரிக்க போட்டியாளர்களை, குறிப்பாக சீனா மற்றும் ஜப்பானை விலையாக கொடுத்து "அமெரிக்க வேலைகளை" பாதுகாப்பதற்காக அவர் "அமெரிக்காவை மீண்டும் தலையாயதாக" ஆக்குவதாக அறிவித்ததன் மூலமாக, அமெரிக்க பெருநிறுவன மற்றும் அரசியல் ஸ்தாபகத்திடமிருந்து அன்னியப்பட்டிருந்த உள்நாட்டு தொழிலாள வர்க்கத்தின் ஆழ்ந்த அதிருப்தியை திசைதிருப்ப முனைந்தார்.

அமெரிக்க நலன்களை ட்ரம்ப் பட்டவர்த்தனமாக வலியுறுத்துவது, ஏனைய ஒவ்வொரு அரசாங்கத்தையும் நேரடியான பொருளாதார மோதலுக்கு அதனதன் இடத்தை மீளமைத்துக் கொள்ள நிர்பந்தித்து வருகிறது.

அம்மாநாட்டின் ஓர் உரையில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சீன தலைமையிலான பரந்த பொருளாதார பங்காண்மையை (RCEP) பலமாக வலியுறுத்தினார், அது இந்தியாவை உள்ளடக்கி இருக்கும் ஆனால் அமெரிக்காவையும் APEC இல் உள்ள ஏனைய வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளையும் ஏற்றிருக்காது.

இராஜாங்க காரணங்களுக்காக, சகல 21 APEC அங்கத்துவ நாடுகளையும் உள்ளடக்கும் ஒரு பரந்த ஆசிய-பசிபிக் இடையிலான சுதந்திர வணிக பகுதியை (FTAAP) நோக்கிய ஒரு படியாக RCEP ஐ ஜி சித்தரித்தார். சீனாவின் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்குப் பிரதி உபகாரமாக, சீனாவின் சந்தைகளையும் மற்றும் அதன் மலிவு உழைப்பு சக்தியையும் பன்னாட்டு பெருநிறுவனங்கள் சுரண்டுவதற்கு இன்னும் கூடுதலாக திறந்துவிட ஜி உறுதியளித்தார்.

“நாங்கள் அன்னிய முதலீட்டிற்கு கூடுதல் அணுகுதலை வழங்குவோம் மற்றும் சீனாவில் உயர்-ரக முன்மாதிரி சுதந்திர வணிக மண்டலங்களை தொடர்ந்து அமைப்போம்,” என்று தெரிவித்த ஜி, “சீனாவின் முதலீட்டு சூழல் இன்னும் அதிகமாக, சௌகரியமாக மற்றும் வெளிப்படையாக திறந்துவிடப்படும், அவ்விதத்தில் சீனாவின் வளர்ச்சி வாய்ப்புகளை அன்னிய நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும்,” என்றார்.

முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகளுக்கு உறுதியளிப்பதன் மூலமாக, சீனாவிற்கு எதிராக அமெரிக்க "முன்னெடுப்பின்" பட்டியலில் இருந்து வெளியேறும் முன்னாள் அமெரிக்க கூட்டாளிகளை ஈர்க்கும் பெய்ஜிங்கின் முயற்சிகளை அவரது தொனி எடுத்துக்காட்டியது. சமீபத்திய வாரங்களில், இத்தகைய தயவுதாட்சண்யங்கள் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுரேற்ற மற்றும் மலேசிய பிரதம மந்திரி நஜீப் ரஜாப் மீது பொழியப்பட்டுள்ளன.

TPP மீட்டமைக்கப்படும் என்பதில் ஆஸ்திரேலியாவும் நியுசிலாந்தும் இன்னமும் பகிரங்கமாக நம்பிக்கை கொண்டிருந்தாலும், அவற்றின் நம்பிக்கை அழிக்கப்பட்டால் அவை சீனாவின் தலைமையை பின்தொடர நிர்பந்திக்கப்படும் என்பதை எச்சரித்தன. இரண்டு நாடுகளுமே ஒரு தீவிரமான குழப்பநிலையில் சிக்கியுள்ளன: அவை ஏற்றுமதிகளுக்காக பெரிதும் சீனாவைச் சார்ந்துள்ளன, ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இருந்து அவை அமெரிக்காவுடனான இராணுவ மற்றும் மூலோபாய கூட்டணியை பின்தொடர்கின்றன.

RCEP குறித்து ஆஸ்திரேலிய பிரதம மந்திரி மால்க்கம் ரேர்ன்புல் செய்தியாளர்களுக்கு கூறுகையில், “அது TPP அளவிற்கு நீண்ட தாக்கத்தைக் கொண்டிருக்காது என்றாலும் எங்களது ஏற்றுமதிகளுக்காக நிறைய சந்தைகளை எங்களால் அணுக கூடியதாக இருந்தால் நல்லது,” என்றார். APEC மாநாட்டிற்கு செல்லும் வழியில், ரேர்ன்புல் ட்ரம்ப் ஐ சந்திக்க முயன்றார், ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய ஜனாதிபதியின் விளைவுகள் குறித்து கான்பெர்ராவில் மனக்கவலைகளை இன்னும் அதிகரித்துள்ளது.

அதேபோல, நியூசிலாந்து பிரதம மந்திரி ஜோன் கே கூறுகையில், அமெரிக்கா இப்பிராந்தியத்தில் ஒரு முக்கிய பங்காளிதான் என்றாலும் ட்ரம்ப் நிர்வாகம் சுதந்திர வணிகம் எனக்கூறப்படுவதில் இருந்து பின்வாங்கினால், அந்த வெற்றிடத்தை சீனா நிரப்பக்கூடும் என்றார். ட்ரம்ப் இன் வணிக கண்ணோட்டங்களால் உண்டான "மிகப்பெரும் ஏமாற்றத்தைக்" குறித்து கே பேசினார்.

ஜப்பானின் ஆளும் உயரடுக்கு மிகக் கூர்மையான நெருக்கடியை முகங்கொடுக்கிறது. பெய்ஜிங் ஆட்சியினது மிக கடுமையான தேசியவாத செய்தி நிறுவனங்களில் ஒன்றான குளோபல் டைம்ஸ், ஜப்பான் மீதான ட்ரம்ப் கொள்கைகளின் தாக்கம் குறித்து குரூரமாக திருப்திப்பட்டு கொண்டது. அங்கே பிரதம மந்திரி ஷின்ஜோ அபே இன் அரசாங்கம் அந்நாட்டின் நீண்ட பொருளாதார மந்தநிலையை மாற்றுவதற்கான ஒரு வழிவகையாக TPP ஐ பலமாக கருதி இருந்தது.

“அவர் TPP ஐ கைவிட்டு, ஜப்பானில் அமெரிக்க இராணுவத்தை நிறுத்துவதற்கு ஜப்பானை பணம் செலுத்துமாறு அழுத்தமளிக்க இருப்பதாக ட்ரம்ப் கூறுவது, அபே ஐ பதட்டமாக்கி உள்ளது மற்றும் சீனாவைக் கட்டுப்படுத்த அமெரிக்காவை சார்ந்திருக்குமாறு ஜப்பானிய மூலோபாயத்தை திவால்நிலை அபாயத்துடன் நிலைநிறுத்துகிறது,” என்று குளோபல் டைம்ஸ் தலையங்கம் அறிவித்தது. “ஆசிய-பசிபிக் புவிசார் அரசியலை வடிவமைப்பதற்கு சீனா மிகவும் தகைமை கொண்டுள்ளது,” என்று அது வலியுறுத்தியது.

இப்போதும் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக விளங்கும் ஜப்பானிய அரசாங்கம், அதன் சொந்த ஏகாதிபத்திய நலன்களை வலியுறுத்துவதற்கு ஜப்பானிய தலைமையிலான அணியாக TPP க்கு மறுவடிவம் கொடுக்க முனையக்கூடும். ஜப்பான் டைம்ஸ் செய்தியின்படி, 12 TPP அரசுகளது தலைவர்கள் அவர்கள் அளவில் உடன்படிக்கையை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்வதற்கு சனியன்று உடன்பட்டனர். “நமது உள்நாட்டு நடைமுறைகளை நாம் நிறுத்தினால், TPP முற்றிலுமாக மடிந்துவிடும்,” என்று அபே கூறியதாக அப்பத்திரிகை குறிப்பிட்டது.

ட்ரம்ப் கொள்கைகளது தாக்கங்கள் குறித்த டோக்கியோவின் கவலைகளைப் பிரதிபலிக்கும் விதத்தில், APEC மாநாட்டிற்கு செல்லும் வழியில், அபே ட்ரம்ப் ஐ சந்திக்க அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நியூ யோர்க் பயணம் மேற்கொண்டார். அச்சந்திப்பு அமெரிக்க-ஜப்பான் கூட்டுறவின் முக்கியத்துவம் மீது வெற்று அறிக்கைகளை வலியுறுத்திய போதினும், அபே அமெரிக்காவினது மாற்றத்தை ஈடுகட்டுவதற்கும் மற்றும் சீனாவை எதிர்கொள்வதற்குமான ஒரு வழிவகையாக ரஷ்யா, தென் கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளடங்கலாக ஏனைய அரசாங்கங்களுடனான டோக்கியோவின் உறவுகளைப் பலப்படுத்துவதற்கு முயற்சிக்க APEC கூட்டத்தை பயன்படுத்தினார்.

 “வணிகம் மீது அதிகரித்துவரும் ஐயுறவுவாதத்திற்கு" இடையே, அனைத்து 21 அங்கத்துவ நாடுகளும் "நமது சந்தைகளைத் திறந்து வைத்திருப்பதன்" மீதான கடமைப்பாடுகளை ஏற்கும் ஒரு அடையாள அறிவிப்புடன் APEC மாநாடு நிறைவுற்றது. ஆனால் பெருநிறுவன ஊடக பக்கங்களில், வேறுவிதமான தீர்மானங்கள் எழுதப்பட்டு வருகின்றன.

ஹென்றி எர்காஸ், ஆஸ்திரேலிய டுடே இல் எழுதுகையில், ட்ரம்ப் இன் பாதுகாப்புவாதம் "வணிகப் போர்களை" தூண்டும், அதற்காக ஆஸ்திரேலியாவும் மற்றும் உலகமே மிகப்பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்,” என்று அனுமானிக்கிறார். பதவிக்கு வந்ததும், ட்ரம்ப் அனேகமாக அவரது ஆக்ரோஷ கொள்கையை மிருதுவாக்கிக் கொள்வார் என்று சில அரசியல் மற்றும் ஊடக பண்டிதர்கள் பிரமைகளை விதைக்கின்ற நிலையில், அமெரிக்க "தொழில்துறை வீழ்ச்சியின்" (Rust Belt) கூடுதல் வேலை இழப்புகளின் "வலி", "அவரது பிரச்சாரத்தில் மேலோங்கி இருந்த வணிக-எதிர்ப்பு வாய்சவுடாலில் இருந்து பின்வாங்க முடியாமல் ட்ரம்ப் ஐ இன்னும் கடுமையாக்கும்,” என்று எர்காஸ் எச்சரிக்கிறார்.

1930 களைப் போலவே, வணிகப் போரானது தவிர்க்க முடியாமல் இராணுவ போருக்கு இட்டுச் செல்கிறது. ட்ரம்ப் அமெரிக்க இராணுவத்தை 550,000 ஆக மற்றும் கடற்படையை 350 கப்பல்களுடன் விரிவாக்க சூளுரைத்துள்ளார்—"பசிபிக்கில் சீனாவால் எங்களுக்கு ஈடுகொடுக்க முடியாது," என்று முன்னாள் நியூ யோர்க் மேயரும் அவரது ஆலோசகர்களில் ஒருவருமான ரூடி யூலியானி கடந்த வாரம் அறிவித்ததை இம்முடிவு உறுதிப்படுத்துகிறது.

ட்ரம்ப்பின் வெற்றியால் உருவான குழப்பம், ஆசிய-பசிபிக்கில் எந்த ஆளும் உயரடுக்கு மேலாதிக்கம் செலுத்தும் என்பதன் மீது வெடிப்பார்ந்த மற்றும் பேரழிவுகரமான பொருளாதார மற்றும் இராணுவ மோதல்களின் சாத்தியக்கூறுக்கு ஒரு முன்னறிவிப்பாக உள்ளது.