ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

After Trump’s election, EU calls for more independent foreign policy

ட்ரம்ப்பின் வெற்றிக்குப் பின்னர், கூடுதல் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுக்கிறது

By Johannes Stern and Alex Lantier
15 November 2016

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர், புதிய ஜனாதிபதியின் வெளியுறவுக் கொள்கை எவ்வாறு இருக்கப் போகிறது என்பது குறித்து பரந்த அளவில் நிச்சயமற்ற நிலை நிலவுவதன் மத்தியில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் ஞாயிறன்று இரவும் திங்கள்கிழமையும் முதன்முதலாய் புருசெல்ஸில் கூடி விவாதித்தனர். ட்ரம்ப் தனது பிரச்சாரத்தின் சமயத்தில் நேட்டோ கூட்டணியை தேவைப்படாததாக கண்டனம் செய்ததோடு நேட்டோ பாதுகாப்பிற்கு ஐரோப்பா கூடுதலாய் நிதியளிக்கவும் கோரினார் என்பதால் ஐரோப்பிய ஆளும் வட்டாரங்களில் ஒரு ஆழமான கவலை நிலவுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைக்கும் ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் சமயத்தில் சர்வதேச பிரச்சினைகளில் கூறிய கருத்துக்களுக்கும் இடையிலான முக்கியமான மோதல்களையும், அத்துடன் அமெரிக்காவில் இருந்து சுயாதீனப்பட்ட ஒரு மூர்க்கமான வெளியுறவுக் கொள்கைக்கு அழைப்புகள் பெருகி வருவதையும் —இதில் பேர்லினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர்— புருசெல்ஸ் கூட்டம் வெளிச்சமிட்டுக் காட்டியது.

திங்களன்று ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு “வல்லரசு” என்று வருணித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவரான ஃபெடரிகா மொகெரினி, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு உலகளாவிய வெளியுறவு மற்றும் இராணுவக் கொள்கைக்கான “பாதுகாப்பு மற்றும் தற்காப்பு விடயத்திலான செயல்பாட்டு திட்டம்” ஒன்றிற்கு அது ஏற்கனவே உடன்பட்டிருந்ததாகக் கூறினார். பாரிஸில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்ததன் பின்னர் ஐரோப்பிய ஒற்றுமைக்கு பிரான்ஸ் அழைப்புவிடுத்ததன் ஒரு வருடத்திற்குப் பின்னும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உலகளாவிய மூலோபாயம் என்று அழைக்கப்படுவதான ஒன்று —ஐரோப்பிய ஒன்றியமானது நேட்டோ மற்றும் அமெரிக்காவில் இருந்து சுயாதீனமாக இராணுவத் தலையீடுகள் செய்வதற்கும் போர் நடத்துவதற்கும் திறன்பெற்ற ஒரு மூர்க்கமான உலக சக்தியாக ஆக வேண்டும் என்று வாதிடுகின்ற ஒரு ஆய்வறிக்கை— தொடங்கப்பட்டு நான்கு மாதங்களுக்கும் குறைவான காலத்திற்குப் பின்னரும் இந்த “செயல்பாட்டுத் திட்டம்” வருவதாக அவர் தெரிவித்தார்.

"ஐரோப்பிய பாதுகாப்பு குறித்த தத்துவார்த்த அல்லது மேலோட்டமான விவாதங்கள் நடத்துவதற்கான நேரமல்ல இது. [இத்திட்டம்] நாளை ஒன்றுகூடி ஸ்தூலமான விடயங்களைச் செய்வது குறித்ததாகும்” என்று மொகெரினி வலியுறுத்தினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய “செயல்பாட்டுத் திட்டம்” ஒரு கட்டளை தலைமையையும் பெரிய அளவிலான யுத்தங்களை நடத்தும் திறன் படைத்த வான், நிலம் மற்றும் கடல் படைகளையும் கட்டியெழுப்ப அழைப்பு விடுக்கிறது. ஐரோப்பிய பொது பாதுகாப்பு மற்றும் தற்காப்புக் கொள்கையானது (Common European Security and Defence Policy - CSDP) "துரிதமான மற்றும் தீர்மானகரமான நடவடிக்கை எடுக்கக்கூடியதாய் இருக்க வேண்டும்” என்பதோடு “நம்பகமான, நிலைநிறுத்தத்தக்க, இடைசெயல்பாடு கொண்ட, தாக்குப்பிடிக்கக் கூடிய மற்றும் பல செயல்பாடுகள் கொண்ட குடிமை மற்றும் இராணுவத் திறன்கள்” அதற்கு அவசியம் என்றும் அது தெரிவிக்கிறது. இத்திட்டம் டிசம்பரில் நடைபெறவிருக்கும் அடுத்த ஐரோப்பிய கவுன்சிலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசுத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்திடம் வழங்கப்பட இருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள், ட்ரம்ப்பினால் கூறப்பட்டு வந்த நிலைப்பாடுகளுடன் நேரடியாக மோதுகின்ற குறிப்பான தீர்மானங்களையும் ஏற்றுக் கொண்டனர்.

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்திருக்கும் நேரத்தில், ஐரோப்பிய வெளியுறவு அமைச்சர்கள் அந்த ஒப்பந்தத்திற்கு தங்கள் “தீர்மானமானகரமான உறுதிப்பாட்டை” அறிவித்தனர். ஈரானுடன் போரைத் தவிர்ப்பது ரீதியான அதன் முக்கியத்துவத்தை கடந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைச்சர்களது கோரிக்கைகள் ஈரானிய சந்தைகளுக்கான அணுகல் தொடர்பாக அமெரிக்காவுடனான மோதல்களை சுட்டிக்காட்டின. முன்னதாக அமெரிக்காவினால் திணிக்கப்பட்டிருந்த “அணுசக்தி தொடர்பான பொருளாதார மற்றும் நிதித் தடைகளை அகற்றுவதற்கு” அழைப்புவிடுத்த அவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு முக்கிய ஏற்றுமதிச் சந்தையான ஈரானுக்குச் செல்லக் கூடிய பொருட்களுக்கான ”ஏற்றுமதி உரிமங்கள் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டுக்கான அமெரிக்க அலுவலகத்தால் தொடர்ந்தும் விநியோகிக்கப்பட வேண்டும்” என்றும் அழைப்பு விடுத்தனர்.

“சித்திரவதைப் பொருட்கள்” மீதான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்குவதான ஒரு தீர்மானத்தையும் ஐரோப்பிய வெளியுறவு அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டனர், அவர்கள் அறிவித்தனர், “ஐரோப்பிய ஒன்றிய ஏற்றுமதிகள் மூன்றாவது நாடுகளில் மனித உரிமை மீறல்களுக்கு  பங்களிப்பு செய்வதைத் தவிர்ப்பதே இதன் நோக்கமாகும்.”

அமெரிக்காவில் மரணதண்டனை பெற்றவர்களுக்குக் கொடுக்கப்படும் நஞ்சில் பயன்படுத்தப்படுகின்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் இரசாயன ஏற்றுமதிகளைத் தடை செய்வதும் இத்தகைய கட்டுப்பாடுகளது ஒரு பிரதான விளைவாக இருக்கிறது. இது தொடர்ச்சியாக, நிரூபணமில்லாத இரசாயன கலவைகளை பயன்படுத்த அமெரிக்க அதிகாரிகளை இட்டுச் சென்று, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் அடிப்படை ஜனநாயக உரிமைகளின் மீறலாக பரவலாக பார்க்கப்படுகின்ற வகையான காட்டுமிராண்டித்தனமான, கொடூரமான தண்டனை நிறைவேற்றங்களில் விளைந்திருக்கிறது.

1991 சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்பு மற்றும் பனிப் போரின் முடிவுக்குப் பின்னர், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவங்களுக்கு இடையிலான உறவுகளில் நிலவி வந்திருக்கக் கூடிய புவிமூலோபாய, பொருளாதார, மற்றும் அரசியல் முரண்பாடுகள் பிரம்மாண்டமான சக்தியுடன் மீண்டும் தங்களை திட்டவட்டமாய் முன்நிறுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த முரண்பாடுகள் ஏற்கனவே மிகக் கூர்மையான மோதல்களுக்கு இட்டுச் சென்று விட்டிருக்கின்றன. 1990களிலும் 2000களின் ஆரம்பங்களிலும் ஒரு “பலதுருவ உலக”த்திற்கும் (“multipolar world”) ஈரான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க நலன்களை விலைகொடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் வணிகரீதியான ஊடுருவலை அதிகரிப்பதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த கோரிக்கைகளைப் பின்தொடர்ந்து விரைவிலேயே 2003 இல் ஈராக் மீதான அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான மற்றும் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு நடந்தது. ஜேர்மனி மற்றும் பிரான்சின் எதிர்ப்புக்கு முகம்கொடுத்த அமெரிக்கா ஐரோப்பாவை பிளவுபடுத்த முயற்சி செய்தது, ஜேர்மனி மற்றும் பிரான்சை “பழைய ஐரோப்பா” என்று நிராகரித்த அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலரான டொனால்ட் ட்ரம்ஸ்பீல்ட் ஈராக்-போருக்கு ஆதரவான ஒரு “புதிய ஐரோப்பா”வும், கிழக்கு ஐரோப்பிய அரசுகளும் முன்னிலைக்கு வரவும் அழைத்தார்.

ஆயினும், ஏறக்குறைய ஒரு தசாப்த கால தீவிரமான உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் ஈரான், ரஷ்யா, அல்லது சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான போர் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றுக்குப் பின்னர், எண்ணெய், சந்தைகள், மற்றும் மூலோபாய அனுகூலம் ஆகியவற்றுக்கான அணுகல் விடயத்தில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஏகாதிபத்திய உட்-பகைமைகள் முன்னினும் ஆழமானதாய் இன்று இருக்கின்றன. பதிலிறுப்பாக ஒரு பெரும் ஐரோப்பிய இராணுவத் தீவிரப்படலுக்கு ஐரோப்பிய நிர்வாகிகள் ஏறக்குறைய ஒருமனதாக அழைப்பு விடுத்து வருகின்றனர்.

நிச்சயமாக அவர்கள், ட்ரம்ப் திடீரென்று ஒட்டுமொத்த அமெரிக்கப் படைகளையும் திரும்பப் பெற்றுவிட்டால் ரஷ்ய படைகளின் எண்ணிக்கை வலு பெரியதாகி விடும் என்ற அச்சத்தில், ஐரோப்பாவில் அமெரிக்காவின் இராணுவப் பிரசன்னம் தொடர வேண்டும் என்று தான் பெரும்பாலும் அழைப்பு விடுக்கிறார்கள். நேட்டோவின் பொதுச் செயலரான ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க் இந்தப் புள்ளியை வலியுறுத்தி “அமெரிக்கா நேட்டோவைக் கைவிடுவதற்கோ அல்லது அதன் ஐரோப்பிய கூட்டாளிகள் தனியாக இயங்குவதற்கோ இது சரியான நேரமல்ல” என்று தி கார்டியன் பத்திரிகையில் ஒரு பத்தி எழுதியுள்ளார்.

ஆயினும் கூட, சுயாதீனமான ஐரோப்பிய இராணுவக் கொள்கைகளுக்கான அழைப்புகளின் சந்தேகத்திற்கப்பாற்பட்ட விளைவு என்னவாக இருக்குமென்றால், ஐரோப்பிய இராணுவங்கள் இறுதியில் அமெரிக்காவினால் எதிர்க்கப்படுகின்ற போர்களை நடத்துமிடத்திலோ, அல்லது ஒரேயடியாய் அமெரிக்காவுடனேயே போரிடும் இடத்திலோ தங்களைக் காணக் கூடும்.

“நாம் ஒரு நிச்சயமற்ற உலகில் இருக்கிறோம், அது திரு.ட்ரம்ப்பின் தேர்வில் இருந்து தொடங்கியதல்ல” என்று பிரெஞ்சு வெளியுறவு அமைச்சரான ஜோன்-மார்க் ஏய்ரோ அறிவித்தார். “ஆனால் ஐரோப்பா மற்றவர்களின் முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கக் கூடாது, அது தனது சொந்த நலன்களை - அதாவது ஐரோப்பியர்களின் நலன்களை - பாதுகாத்தாக வேண்டும், அதேசமயத்தில் உலக அளவில் தனது மூலோபாய பாத்திரத்தையும் மறுஉறுதிப்பாடு செய்ய வேண்டும்.”

பெல்ஜிய வெளியுறவு அமைச்சரான டிடியர் ரேய்ண்டர் கூறுகையில், ட்ரம்ப்பின் தேர்வு “ஐரோப்பிய ஒன்றியம் மேலும் முன்னேறுவதற்கு ஒரு சாத்தியமாக இருக்ககிறது. நாம் பாதுகாப்பில் நமது திறனை மேம்படுத்துவது அவசியம். அரசியல் தீர்வுகளுக்கான தேடலில் தனது குரல் செவிமடுக்கப்படுவதைக் காண ஐரோப்பிய ஒன்றியம் ஒரு வழி கண்டாக வேண்டியிருக்கிறது...அதன்மூலம் அது வெறுமனே அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஒரு உரையாடலாக இல்லாமல், ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே மேசையில் அமர்ந்திருக்கும்படி நாம் செய்ய வேண்டும்” என்றார்.

ஆயினும், முன்னினும் ஒருங்கிணைந்த ஐரோப்பிய இராணுவ ஐக்கியத்திற்கான உந்துதல், எல்லாவற்றுக்கும் மேல் ஜேர்மனியால் முன்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. சென்ற வாரத்தில் ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சரான ஊர்சுலா வொன் டெர் லையன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கான பிரிட்டிஷ் வாக்களிப்பு மற்றும் ட்ரம்ப்பின் வெற்றி இரண்டையும் “ஐரோப்பாவுக்கான ஒரு வாய்ப்பு” என்று விவரித்தார்.

தாராளவாத ஜேர்மன் தினசரியான Der Tagesspiegel இல் எழுதுகையில் அவர் கூறினார்: “நேட்டோ நமது பாதுகாப்பின் அத்தனை அம்சங்களையும் கையாண்டு விட முடியாது என்பது ஐரோப்பியர்களாகிய நமக்குத் தெரியும். நமது உடனடிச் சூழலிலான பிரச்சினைகளுக்கு நாம் கூடுதலான பொறுப்பை கையிலெடுத்தாக வேண்டும்.... ஐரோப்பியர்களாகிய நாம் பாதையமைக்க வேண்டும்: நமது சாதனங்களை ஒருங்கிணைக்க வேண்டும், நமது ஆதாரவளங்களைக் கொண்டு நாம் கூடுதல் திறம்பட்டதாக ஆவதோடு விரைவான முடிவுகளை எடுக்க வேண்டும். புதிய திறன்கள் நமக்குத் தேவை - எல்லாவற்றுக்கும் மேல் நமது பாதுகாப்பு மற்றும் தற்காப்பு கொள்கைக்காக.”

ஜேர்மன் ஆளும் வர்க்கமானது ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வரவை ஊக்குவிப்பதற்கும் ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் தனது புவிமூலோபாய மற்றும் பொருளாதார நலன்களை மறு-உறுதிப்பாடு செய்வதற்காகவும் ட்ரம்ப்பின் தேர்வை ஒரு சாக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்க தேர்தல் முடிந்த உடனேயே, ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம், அதன் அட்லாண்டிக் கடந்த ஒத்துழைப்பு அமைப்புக்கான ஒருங்கிணைப்பாளர் திரு. Jürgen Hardt மூலமாக தேர்தல் முடிவு தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அந்த அறிக்கை தெரிவித்தது: “இன்னும் பெரிய பொறுப்புகளை ஏற்பதற்கும் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையின் அத்தனை சாதனங்கள் தொடர்பாகவும் இன்னும் கூடுதலாய் பங்களிப்பு செய்வதற்குமான அவசியம் ஐரோப்பியர்களாகிய நமக்கு, குறிப்பாக ஜேர்மனிக்கு, ட்ரம்ப்பின் ஜனாதிபதி பதவிக் காலத்தில் மேலும் அதிகரிக்கும். உலக அபிவிருத்திகள், வரவிருக்கும் மாதங்களில் நமது ஒத்துழைப்புக்கு வடிவம் கொடுக்கவிருக்கும் பிரச்சினைகளை தொடர்ந்து வழங்கவிருக்கின்றன. சிரியாவிலும் ஈராக்கிலும் நிலைமையை ஸ்திரப்படுத்துவது, உக்ரேனில் மின்ஸ்க் உடன்படிக்கையை அமல்படுத்துவது, மற்றும் ரஷ்யாவுடன் உறவுகளை வழிநடத்துவது ஆகியவையும் இதில் அடங்கும்.”

ஜேர்மன் ஏகாதிபத்தியமானது உலக சக்தியாக தன்னை முன்நிறுத்த முயற்சி செய்து வருகின்ற அதேநேரத்தில், இந்த கோடையில் பிரிட்டன் வெளியேறியதில் வெளிச்சமிடப்பட்டதைப் போன்று, ஐரோப்பாவிற்குள்ளேயும் ஆழமான பிளவுகளுக்கு அது முகம்கொடுக்கிறது.

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான உட்பதட்டங்கள் மீண்டும் புருசெல்ஸில் காணக்கிடைத்தன, பேர்லின் அழைப்பு விடுத்த ஞாயிறு இரவு கூட்டத்தை, பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர்கள் புறக்கணித்தனர். பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சரான போரிஸ் ஜோன்சன் இந்தக் கூட்டத்தை “whinge-o-rama,” என்று கிண்டல் செய்தார், Whitehall ஆதாரங்கள் இதனை, ட்ரம்பின் எதிரிகளாகக் காட்டிக் கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளை அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட “அரட்டல் உருட்டல்கள்” என்று நிராகரித்தன.