ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Growing concerns in Europe over Trump agenda

ட்ரம்ப்பின் திட்டநிரல் குறித்து ஐரோப்பாவில் கவலைகள் பெருகுகின்றன

Nick Beams
26 November 2016

ஜனாதிபதியாக தேர்வாகியிருக்கும் டொனால்ட் ட்ரம்ப்பின் “முதலில் அமெரிக்கா” பொருளாதார திட்டநிரல் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை மீது அது ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகள் இவற்றால் உருவாகக் கூடிய வர்த்தக மோதல்கள் மற்றும் நிதிக் கொந்தளிப்பு ஆகியவற்றின் சாத்தியங்களைக் குறித்து ஐரோப்பிய ஆளும் வட்டாரங்களில் கவலைகள் எழுந்திருக்கின்றன. ஐரோப்பிய மத்திய வங்கியின் ஆளும் குழுக் கூட்டம் டிசம்பர் 8 அன்று நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கு முந்தியதாக இந்த வாரத்தின் ஆரம்பத்தில் வங்கியால் வெளியிடப்பட்டிருக்கும் நிதி ஸ்திரத்தன்மை திறனாய்வு அறிக்கையில் இந்த அச்சங்கள் பிரதிபலிக்கின்றன.

வட்டி விகிதங்களை வரலாற்றுஅளவில் குறைவான விகிதங்களில் பராமரித்து நிதி ஸ்திரத்தன்மையை காப்பாற்றும் ஒரு முயற்சியில் ஒவ்வொரு மாதமும் 80 பில்லியன் யூரோ அளவுக்கான பத்திரங்களை கொள்முதல் செய்து வருகின்ற ஐரோப்பிய மத்திய வங்கியின் எளிதாக பணத்தை புழக்கத்தில் விடும் வேலைத்திட்டம் இக்கூட்டத்தில் மீளாய்வு செய்யப்பட இருக்கிறது. இந்த வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக அடுத்த மார்ச் மாதத்தில் முடிகின்ற நிலையில், ஐரோப்பிய மத்திய வங்கி அதிமலிவான பணப் பாய்வை பராமரிக்கும் விதமாக இதனை நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

ஆனால் அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியாக தேர்வாகியுள்ளதை அடுத்து பத்திர வருவாய்களில் ஏற்பட்டுள்ள உயர்வை அடுத்து இதன் திட்டம் இக்கட்டில் நிற்கிறது. பொருளாதார தேசியவாதம் மற்றும் மிகப்பெரும் வரி விலக்குகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தனியார்மய உள்கட்டமைப்புத்துறை திட்டப்பணிகள் மூலமாகவும் பெருநிறுவன வரி விகிதங்களிலான நேரடியான குறைப்புக்கள் மூலமாகவும், ட்ரம்ப்பின் வேலைத்திட்டமானது இலாபங்களில் மிகப்பெரும் ஊக்கத்தைக் கொண்டு வரும் என்பதான எதிர்பார்ப்பில் பில்லியன்கணக்கான டாலர்கள் அரசாங்கக் கடன்களில் இருந்து வெளியேறி பங்குச் சந்தைகளுக்குள் சென்றிருக்கின்றன.

ஐரோப்பிய மத்திய வங்கியானது யூரோ பிராந்தியத்தில் வட்டி விகிதங்களைக் கீழிறக்கி வைத்திருப்பதற்கான தனது முயற்சிகள் அமெரிக்காவில் அதற்கு நேரெதிர் திசையில் செல்லும் ஒரு நகர்வுடன் மோதச் செல்லும் நிலைக்கு இப்போது முகம்கொடுக்கிறது.

ஆயினும், பணச் சந்தைகளிலான உடனடி நகர்வுகளைக் காட்டிலும் கூடுதலான கவலைகள் இதில் உள்வருகின்றன. ECB, ட்ரம்ப்பின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்ற போதும், அவரது தேர்தல் வெற்றியின் பாதிப்புகளையும், பரந்த அளவில் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் திரும்புதிசை குறித்து அது சமிக்கையளிப்பது என்ன என்பது குறித்துமான ஐரோப்பிய நிதி உயரடுக்குகளின் அச்சங்கள் அதன் அறிக்கை முழுவதிலும் பிரதிபலிக்கின்றன.

“உலகளாவிய சொத்துமதிப்பு திருத்த சாத்தியங்களுடனான [அரசாங்கக் கடன் சந்தையில் இருந்து வெளியில் சென்ற பணம் கொடுத்த பத்திர ஈவுகளிலான உயர்வு மற்றும் பத்திர விலைகளிலான வீழ்ச்சி ஆகியவை குறித்த குறிப்பு] தொடர்பில் ஐரோப்பிய பிராந்திய நிதி ஸ்திரத்தன்மைக்கான ஆபத்துகள் தீவிரப்பட்டுள்ளன” என்று ECB இன் செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

அந்த அறிக்கை தொடர்ந்து கூறியது: “அமெரிக்க பொருளாதாரக் கொள்கைகளிலான மாற்றங்களினால் ஐரோப்பியப் பிராந்தியத்திற்கான நிதி ஸ்திரத்தன்மைக்கான பாதிப்புகள் இந்த சமயத்தில் மிகவும் நிச்சயமற்ற நிலையில் உள்ளன. ஐரோப்பிய பகுதி வர்த்தக வழிகள் மூலமாய் நேரடியாகப் பாதிக்கப்படலாம் அத்துடன் அமெரிக்காவில் இருந்து அதிகமான வட்டி விகிதம் மற்றும் பணவீக்க விகித எதிர்பார்ப்புகளின் காரணத்தினாலான சிந்திய சிதறிய விளைவுகளின் சாத்தியத்தாலும் நிகழலாம்.”

”மந்தமான பொருளாதார வளர்ச்சி சூழலின்” காரணத்தால் பிராந்தியமெங்கும் இலாப சாத்தியங்கள் தொடர்ந்து குறைவாக இருக்கும் நிலையில் ஐரோப்பிய பகுதி வங்கிகளுக்கு “பலவீனமான அம்சங்கள்” முக்கியமானவையாக இருந்தன என்று அது மேலும் தெரிவித்தது.

“சமீப ஆண்டுகளில் துரிதமாக வளர்ச்சி கண்டிருந்த” —பெரும்பாலும் ECB ஆல் பின்பற்றப்பட்ட அதிமலிவு பணக் கொள்கைகளின் ஆதரவினால்— பல முதலீட்டு நிதிகள் இப்போது “பணப்புழக்க பொருத்தமின்மைகளின் முன்னால்” மாட்டிக் கொண்டு நின்று கொண்டிருக்கும் நிலையில், வங்கி-சாரா நிதித் துறையும் எதிர்மறைப் பாதிப்பை சந்திக்கலாம். வேறு வார்த்தைகளில் சொன்னால், குறைவான வட்டி விகித ஆட்சிப் பராமரிப்பைக் கொண்டு சூதாடி வந்திருந்த நிதிகள், அமெரிக்க வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் நிலையில் பணத்திற்கு திண்டாடும் நிலையில் தங்களை காணக்கூடும்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிந்தைய வாரத்தில் 1 டிரில்லியன் யூரோ அளவுக்கு உலகளாவிய பத்திர மதிப்புகள் வீழ்ச்சி கண்டிருந்ததாக ECBயின் அறிக்கை குறிப்பிட்டுக் காட்டியது. உடனடியான வெளித்தோற்றம் நிச்சயமற்றதாக இருக்கிறது என்றபோதும், ”உலகெங்கிலும் அரசியல் நிச்சயமின்மை அதிகரித்த நிலை மற்றும் வளரும் சந்தைகளது பலவீனத்தன்மை கீழமைந்த நிலை ஆகியவற்றின் மத்தியில் கூடுதல் நிச்சயமற்ற தன்மையே அநேகமாக நிகழக் கூடும் அத்துடன் திடீர் தலைகீழ் மாற்றத்திற்கான சாத்தியமும் முக்கியமானதாய் தொடர்கிறது.”

வளரும் சந்தைகளும் பாதிப்புக்கு முகம்கொடுத்திருக்கின்றன, ஏனென்றால் அமெரிக்க வட்டி விகிதங்களிலும் டாலரிலும் ஏற்பட்டுள்ள அதிகரிப்புகள் —13 ஆண்டுகளிலான அதிகப்பட்ச மதிப்பில் இருக்கிறது— டாலரில் அவை பெற்றுள்ள கடன்களின் மதிப்பை அதிகரித்து அவை திணிக்கக் கூடிய கடன்சுமையை அதிகரிக்கிறது.

பொருளாதார தேசியவாதத்தை முன்னெடுக்கும் ட்ரம்ப்பின் திட்டநிரலில் விளங்கப்பெறுவதைப் போல, அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கையிலான மாற்றம், இத்தாலிய வங்கி அமைப்புமுறையின் பெருகும் நெருக்கடியை மட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் ECB முகம்கொடுத்து வருகின்ற பிரச்சினைகளையும் மேலும் சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறது. இத்தாலிய வங்கிகள் தங்கள் கணக்கில் 360 பில்லியன் யூரோக்களை வாராக் கடன்களாய்க் கொண்டுள்ளன, இதில் 200 பில்லியன் யூரோ செயல்படாக் கடன்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.