ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Obama visits Berlin after Trump’s victory

ட்ரம்ப் வெற்றிக்குப் பின்னர் ஒபாமாவின் பேர்லின் விஜயம்

By Ulrich Rippert
17 November 2016

வெளியேறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று மாலை ஜேர்மன் தலைநகரம் பேர்லினை வந்தடைந்து, சான்சிலர் அங்கேலா மேர்க்கெலைச் சந்தித்தார். இன்றும் வெள்ளியன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சந்திப்புகளில், இருவரும் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் மற்றும் ஏனைய ஐரோப்பிய தலைவர்களை சந்திப்பார்கள்.

அவர் பதவியேற்பதற்கு முந்தைய 2008 கோடையில் வெற்றித்தூணின் (Siegessäule) முன்னர் நிகழ்த்திய உரையை உள்ளடக்கினால், இது ஜேர்மனிக்கான ஒபாமாவின் எட்டாவது விஜயமாகும். அச்சந்தர்ப்பத்தில் ஒபாமா பல ஆண்டுகால ஜேர்மன்-அமெரிக்க நட்புறவைக் குறித்தும், கம்யூனிசத்தின் மீதான அவர்களது கூட்டு வெற்றியைக் குறித்தும் ஒரு வாய்சவாடல் உரையை வழங்கி இருந்தார். அவர் உரையைக் கொண்டாடிய ஊடகங்கள், மீண்டும் மீண்டும் "ஒபாமாமானியா" (ஒபாமா பித்து) குறித்து எழுதின.

இன்றோ நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளதுடன், அட்லாண்டிக் இடையிலான நாடுகளது உறவு மிகவும் உறைநிலையை எட்டியுள்ளது. ட்ரம்ப் தேர்தல் வெற்றி மீதான ஆரம்ப அதிர்ச்சிக்குப் பின்னர், அங்கே ஜேர்மன் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களிடையே ஒரு புதிய தொனி உள்ளது: அது என்னவென்றால், ஜனாதிபதி ட்ரம்ப் இன் கீழ், அமெரிக்காவை இனியும் மேற்கின் தலைவராக ஏற்க முடியாது. அமெரிக்க சகாப்தம் முடிந்துவிட்டது. ஜேர்மனி தலையாய பொறுப்பை ஏற்க வேண்டும் மற்றும் இனியும் அது தன்னைத்தானே அமெரிக்க கொள்கைக்கு அடிபணியச் செய்து கொள்ளக்கூடாது என்பதாகும்.

ஒபாமா வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் ஐ வரவேற்றதுடன், பதவியிலிருக்கும் அவரது மீத நாட்களை சுமூகமான அரசு மாற்றத்தை உறுதிப்படுத்துவதில் செலவிட இருப்பதாக அறிவித்தார் என்ற உண்மை, பேர்லின் சான்சிலர் அலுவலகத்தில் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. ஒபாமா ட்ரம்பிற்கு வழிகாட்டுபவராக பார்க்கப்படுவதுடன், அவரது சமீபத்திய பேர்லின் விஜயம் இவ்விதத்தில்தான் மதிப்பிடப்படுகிறது.

“திடீரென பராக் ஒபாமா டொனால்ட் ட்ரம்ப் சார்பாக பேசி வருகிறார். இதெல்லாம் எதை அர்த்தப்படுத்துகிறது?” என்று புதனன்று Süddeutsche Zeitung அதன் "இந்நாளின் பிரச்சினை" எனும் கட்டுரையில் வினவியது. அப்பத்திரிகை ஒபாமாவை "டொனால்ட் ட்ரம்ப் இன் பத்திரிகை செய்தி தொடர்பாளர்" என்றும், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதியைக் குறித்த ஜேர்மன் கவலைகளைத் தணிக்கவே அவர் பேர்லினுக்கு வந்துள்ளார் என்றும் எழுதியது. ஒபாமா கூறியதாக அக்கட்டுரை மேற்கோளிட்டு குறிப்பிடுகையில், “வரவிருக்கும் ஜனாதிபதி உடனான எனது விவாதங்களில், அவர் நமது மிக முக்கிய மூலோபாய பங்காண்மைகளைப் பேணுவதில் பெரும் ஆர்வம் காட்டினார். ஆகவே அவர் நேட்டோவிற்கும் மற்றும் அட்லாண்டிக்கு இடையிலான நாடுகளது கூட்டணிக்கும் கடமைப்பட்டிருப்பதை உணர்கிறார் என்ற சேதியை என்னால் கூற முடியும்,” என்று குறிப்பிட்டது.

ஆனால் இது குறித்து கணிசமானளவிற்கு ஐயப்பாடு உள்ளது. “உண்மையில் வெளியுறவு கொள்கை குறித்து ட்ரம்ப் என்ன திட்டமிட்டு வருகிறார் என்பது இன்னும் தெளிவாக இல்லை,” என்று எழுதிய Süddeutsche Zeitung, அவரால் தேர்ந்தெடுக்கப்படும் எதிர்கால பதவிகள் பற்றிய முடிவுகள் நன்மையானதாக இருப்பதாக தெரியவில்லை என்று குறிப்பிட்டது.

ட்ரம்ப் குறித்து ஐரோப்பாவின் அச்சங்களை ஒபாமா சமாதானப்படுத்த விரும்புகிறார் என்று Handelsblatt உம் எழுதியது, “ஆனால் ஒபாமாவின் நம்பகத்தன்மை குலைந்துள்ளது,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது. பிரிட்டிஷ் மக்கள் பிரிட்டன் வெளியேறுவதற்கான பாதையை ஏற்பதிலிருந்து அவர்களை அவர் கடந்த கோடையில் தடுக்க முனைந்ததுடன், “ட்ரம்ப் ஜனாதிபதி ஆக மாட்டார் என்றும் மறுஉத்தரவாதம் அளித்தார். ஆனால் இரண்டு விடயத்திலுமே முடிவு என்ன வென்பது நன்றாக தெரிந்தது."

செவ்வாயன்று ஏதென்ஸ் க்கான அவரது விஜயத்தின் போது ஒபாமா குறிப்பிடுகையில், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான கூட்டணி "நமது பொதுவான பாதுகாப்பு மற்றும் நல்லுறவின் ஆதாரக்கல்லாக" உள்ளது என்றார். “ஆனால் ஐரோப்பியர்கள் இப்போது ஏன் அவரை நம்ப வேண்டும்?” என்று வினவிய Handelsblatt, முன்னதாக ஒபாமாவை "வருந்தத்தக்க தோல்வியாளர்" என்று குறிப்பிட்டது.

ஐரோப்பா ஏற்கனவே படுமோசமான சூழலின் காரணமாக மீள்ஆயுதமேந்தி வருகிறது மற்றும் அதன் பாதுகாப்பு தகைமைகளை பலப்படுத்தவிருக்கிறது. ஏனென்றால் பிரான்ஸ் ஒரு தலைமைக்கான நெருக்கடியை முகங்கொடுக்கிறது என்று குறிப்பிட்ட அந்த ஆவணம், “ஐரோப்பாவை ஒருங்கிணைத்து வைத்திருக்கும் பிரதான பொறுப்பு மேர்க்கெல் மீது விழுகிறது,” என்று தொடர்ந்து குறிப்பிட்டது. Foreign Policy இதழ்" ஜேர்மனிய சமாதானம்" (Pax Germanica) என்று எழுதியதோடு சேர்ந்து, அங்கே அமெரிக்காவில் ஏற்கனவே "அமெரிக்க சமாதானம்" முடிந்துவிட்டதாகவும் பேசப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலும் சமூக பேரழிவை உருவாக்கி உள்ளதும் மற்றும் அக்கண்டத்தில் எதிர்ப்பை அதிகரித்துள்ளதுமான மேர்க்கெல் மற்றும் ஜேர்மன் அரசாங்கமே, வேறெந்த அரசாங்கத்தை விடவும், இப்போது "மேற்கின் தாராளவாத மதிப்புகளைக்" காக்கும் காவலனாக சித்தரிக்கப்பட்டு வருகிறது.

Handelsblatt உம் இவ்வாறு குறிப்பிடுமளவிற்குச் சென்றது, “உள்நாட்டு அரசியல் மோதலுக்கு இடையே வரவிருக்கும் மாதங்களில் சான்சிலர் நீடித்திருப்பாரானால் ஜேர்மனி இந்த பாத்திரம் வகிக்க தயாராக இருக்கிறதா என்பது தான் கேள்வி. ட்ரம்ப் இன் தேர்தல் வெற்றி என்பது AfD க்கான ஒரு வெற்றியாகும்.”

ட்ரம்ப் இன் தேர்தல் வெற்றியை ஒரு சகாப்தத்தின் முடிவு என்று குறிப்பிட்ட Der Spiegel, “நாம் அறிந்த உலகின் முடிவு" என்று கட்டுரைக்குத் தலைப்பிட்டது. ட்ரம்ப் ஒரு "அபத்தமான ஜனாதிபதி." அவர் ஜனவரி 20 அன்று "ஜனநாயகரீதியில் சட்டபூர்வமான 45 வது அமெரிக்க ஜனாதிபதியாக ஆகலாம்", ஆனால் அவர் "ஓர் அபாயகரமான மனிதராக" இருப்பார். அவர் அபாயகரமானரீதியில் "கவனக்குறைவான, சமநிலையற்ற, அனுபவமற்ற மற்றும் அபாயகரமான இனவாதி" ஆவார். ட்ரம்ப் வெள்ளையின மேலாதிக்கத்தில் நம்பிக்கை கொண்டவர், அவரது வக்கிரமான அதிதீவிர அறிவிப்புகளை அவர் நடைமுறைப்படுத்தினாலும், அவ்வாறு செய்யும் முதல் தேந்தெடுக்கப்பட்ட அரசு தலைவராக அவர் இருக்க மாட்டார். “[…] இப்போது லத்தீனோக்களை துரத்தியடியுங்கள் என்று ட்ரம்ப் கூறியுள்ளார், அவ்விதத்தில் கைவிடப்பட்டவர்களின் மேலாதிக்கத்தை மறைமுகமாக குறிப்பிடுகிறார். 80 ஆண்டுகளுக்கு முன்னர் ஜேர்மனியில் அப்பட்டமாக நடந்ததைப் போலவே.”

அவரது பேர்லின் விஜயத்தின் போது ட்ரம்ப் முன்னிறுத்தும் அபாயங்களைக் குறைத்து காட்டுவதற்கான ஒபாமாவின் முயற்சியும் மற்றும் பெரிதாக ஒன்றும் மாறாது என்று அவர் கூறுவதும், ஐரோப்பாவின் அச்சம் மற்றும் கவலைகளைத் தணித்துவிடவில்லை, மாறாக அவற்றை அதிகரித்துள்ளது. 1930 களில் நாஜிக்களின் வடிவில் நிழலுலகம் அதிகாரத்தைக் கைப்பற்றிய போது ஏற்பட்ட ஜேர்மன் பேரழிவின் நினைவு இன்னும் அங்கே இருக்கிறது. அது எங்கே இட்டுச் சென்றது என்பதை ஒவ்வொருவரும் அறிவர்.

ஆனால் ஜேர்மனியின் ஆளும் உயரடுக்கிடம் ட்ரம்ப் க்கு விடையிறுக்க எந்தவித முற்போக்கான விடையிறுப்பும் இல்லை. அதற்கு மாறாக, அது அதே பிற்போக்குத்தனமான சக்திகளைப் பலப்படுத்தவும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட அரசு எந்திர பலப்படுத்தலோடு ஆற்றலுடன் முன்னேறுவதற்கு அழுத்தமளிக்கவும் இதை சந்தர்ப்பமாக பயன்படுத்துகிறது.

தேர்தல் முடிவு வருவதற்கு முன்னரே கூட, வெளியுறவு விவகாரங்களுக்கான ஜேர்மன் பயிலகம் (SWP) எனும் அரசுடன் அணிசேர்ந்த சிந்தனைக் குழாம் "ட்ரம்ப் இல்லாவிட்டாலும், நிறைய மாற்றம் இருக்கும்" என்று தலைப்பிட்ட ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதை எழுதியவர்கள் "தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும்", வாஷிங்டனிடம் இருந்து இன்னும் சுதந்திரமானரீதியில் மற்றும் அவசியமானால் அதற்கு எதிராகவும் அதன் சொந்த புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை நடைமுறைப்படுத்த தகைமை கொண்ட, இன்னும் ஆக்ரோஷமான ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய வெளியுறவு கொள்கைக்கு அழைப்புவிடுத்தனர்.

“ஜனாதிபதியாக ட்ரம்ப் இருக்கும்பட்சத்தில் […] அங்கே அமெரிக்க வெளியுறவு கொள்கை அதிகளவில் நிச்சயமற்ற தன்மையைக் கொண்டிருக்கும்,” என்று அந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டது. ஜேர்மனி, "நிச்சயமாக ட்ரம்ப் இன் கணிக்கவியலாத நிலையைச் சார்திருக்காது என்பதோடு, ஆலோசகர்களின் ஒரு குழு, மந்திரிசபை, இராணுவம் அல்லது காங்கிரஸ் மூலமாக, உயர் இடங்களை 'கைப்பற்ற' முடியும்,” என்று அது குறிப்பிட்டது.

ஜேர்மனி அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் அதன் நிலையிலிருந்து முறித்துக் கொண்டு, “அட்லாண்டிக்கு இடையிலான நாடுகளது உறவு மற்றும் எதிர்கால உலக ஒழுங்கை எவ்வாறு கட்டமைப்பதென்று சிந்திக்க வேண்டும்" என்று குறிப்பிட்டது. அதன் சொந்த பாதுகாப்பிற்கும் மற்றும் அதன் சொந்த நலன்களைப் பாதுகாப்பதற்கும் இதற்காக கணிசமானளவிற்கு நிறைய ஆதாரவளங்கள் அதற்கு தேவைப்படுகிறது.

வெளியுறவுத்துறை மந்திரி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையரை ஆட்சியிலிருக்கும் கிறிஸ்துவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்துவ சமூக யூனியன் மற்றும் சமூக ஜனநாயக கட்சிகளின் ஜேர்மன் ஜனாதிபதி பதவிக்கான கூட்டு வேட்பாளராக பெயரிடுவதென்று, ட்ரம்ப் வெற்றிக்கு ஒருசில நாட்களுக்குப் பின்னர் வந்த இந்த முடிவு, ஜேர்மனியின் இப்புதிய பாத்திரத்துடன் நேரடியாக தொடர்புபட்டதாகும்.

ஸ்ரைன்மையர் ஒரு புதிய ஜேர்மன் ஏகாதிபத்திய கொள்கையின் பிரதான ஆலோசகர்களில் ஒருவராவார். ஜூன் மத்தியில், அவர், அமெரிக்காவின் முன்னணி வெளியுறவு கொள்கை இதழான Foreign Affairs இல் “ஜேர்மனியின் புதிய உலகளாவிய பாத்திரம்" என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை பிரசுரித்தார். அதில் அவர் ஜேர்மனியை ஒரு "முக்கிய ஐரோப்பிய சக்தியாக" வர்ணித்ததுடன், அது "அரை நூற்றாண்டாக அதன் வெளியுறவு கொள்கையை வழிநடத்திய அடிப்படை கொள்கைகளை புதிதாக வரையறுக்க" நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

குறிப்பாக மத்திய கிழக்கில் அமெரிக்க கொள்கையினது படுமோசமான விளைவுகளைக் மேற்கோளிட்டு, ஸ்ரைன்மையர் ஜேர்மனியின் வல்லரசு அபிலாஷைகளை நியாயப்படுத்துகிறார்.

அமெரிக்காவில் புதிய நிர்வாகத்தின் சர்வதேச விளைவுகளைக் குறைத்துக் காட்டுவதற்கான, விரைவிலேயே முன்னாள்-ஜனாதிபதி ஆகவுள்ள ஒபாமாவினது சகல முயற்சிகளும் என்னவாக இருந்தாலும், ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அட்லாண்டிக் இடையிலான உறவுகளில் ஒரு புதிய கட்டத்தைத் தொடங்கியுள்ளது, இது கூர்மையான பதட்டங்கள் மற்றும் அதிர்ச்சிகளால் குணாம்சப்பட்டிருக்கும்.