ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Philippine President Duterte continues US military basing deal, hails Trump election

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டுரேற்ற அமெரிக்கா உடனான இராணுவத்தள ஒப்பந்தங்களை தொடருவதுடன் ட்ரம்ப் இன் தேர்தல் வெற்றியையும் புகழ்கின்றார்

By Joseph Santolan 
11 November 2016

நவம்பர் 7 அன்று, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுரேற்ற இன் நிர்வாகம், வாஷிங்டன் உடன் ஏற்படுத்தப்பட்டு இருந்த இராணுவத் தள ஒப்பந்தமான விரிவாக்கப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தையும் (EDCA), மேலும் பெரும்பாலான கூட்டு இராணுவ பயிற்சிகளையும் மணிலா தொடரும் என்றும், ஆனால் கடற்படை, மற்றும் தரையிலும் கடலிலும் தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சிகளில் இருந்து விலகிக்கொள்ளும் எனவும் அறிவித்தது. அமெரிக்காவிலிருந்து "விலகிக்கொள்வது" எனும் டுரேற்ற இன் கொள்கையின் ஒரு அங்கமாக இராணுவத் தள ஒப்பந்தத்தினை முடிவுக்கு கொண்டு வரவிருப்பதாக அவர் பிரகடனப்படுத்தி இருந்த முந்தைய அறிக்கைகளுக்கு முற்றிலும் மாறானதாக இந்த நடவடிக்கை இருக்கின்றது.

கடந்த அமெரிக்க தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டதை உற்சாகமாக வரவேற்ற டுரேற்ற, அதனைத் தொடர்ந்து புதன்கிழமையன்று இந்த அறிக்கையினை வெளியிட்டார். மேலும் டுரேற்ற அமைச்சரவையின் முன்னணி உறுப்பினர்கள், ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவில் முன்னிலை" கொள்கையில் இருந்து ஒரு தீவிர விலகலை ட்ரம்ப் குறிப்பிடுகின்றதால், டுரேற்ற அரசாங்கத்தின் இந்த முதல் நான்கு மாத கால சிக்கலான நிலையை தொடர்ந்து வாஷிங்டன் உடனான அவர்களது உறவுகளுக்கு இடையில் ஒரு மறுசீரமைப்புக்கும், வலுப்படுத்துதலுக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று முன்கணிப்பு செய்வதாக அறிவித்து உள்ளனர்.

கடந்த ஜுன் மாத இறுதியில் ஜனாதிபதி பொறுப்பேற்ற டுரேற்ற, பசிபிக்கில் சீனாவை இராணுவரீதியாக சுற்றிவளைக்கவும், மேலும் அதனை தனிமைப்படுத்தவும் திட்டமிட்டு ஒபாமா நிர்வாகம் பெய்ஜிங் மீதான ஒரு போர் உந்துதலால், பெய்ஜிங் உடனான தமது வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டுக்கள் மீதான அச்சுறுத்தல்களால் எச்சரிக்கையடைந்த பிலிப்பைன்ஸின் முதலாளித்துவ வர்க்க பிரிவினரின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுகின்றார். அமெரிக்காவின் முன்னணி பினாமியாகப் பணியாற்றிய பிலிப்பைன்ஸின் முந்தைய ஜனாதிபதி பெனிக்னோ அக்கினோவின் நிர்வாகத்துடன் வைத்திருந்த கூட்டணியை பயன்படுத்தி வாஷிங்டன், தென் சீனக் கடல் பகுதியில் தனது ஒவ்வொரு புதிய ஆத்திரமூட்டல் நடவடிக்கையையும் அரங்கேற்றியது. இதனால், சீனாவின் முதலீடு குறைந்து காணப்பட்டதுடன், சீன சந்தைக்கான பிலிப்பைன்ஸின் அணுகுதலும் குறைக்கப்பட்டது.

வாஷிங்டனின் பீதி ஊட்டும் நடவடிக்கைகளால், தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் பிராந்திய உரிமை கோரல்கள் மீதான ஹேக் (Hague) நீதிமன்றத்தின் எதிர்ப்பு, மற்றும் பிலிப்பைன்ஸ் உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி பிரகடனப்படுத்தப்பட்ட EDCA ஒப்பந்த அரசியலமைப்பு இரண்டுமே ஜுலையில் டுரேற்ற இன் பதவி ஏற்புக்கு பின்னர் வழிவழியாக தொடரப்பட்டது. இந்த முடிவுகளில் ஏதேனும் ஒன்றை உடனடியாக மூர்க்கமான முறையில் செயல்படுத்தும் வகையில் அக்கினோ நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கருதப்படுகிறது.

இந்த ஏற்ற இறக்கத்தில், சில சமயங்களில் உறுதிப்பாடற்ற வகையில், டுரேற்ற வாஷிங்டன் மீதான தனது எதிர்ப்பை பகிரங்கமாக அறிவிப்பு செய்வதன் மூலம், பெய்ஜிங் உடனான மணிலாவின் உறவுகளை மீண்டும் கட்டியெழுப்ப முற்படுகின்றார். அக்டோபர் இறுதியில், பிலிப்பைன்ஸ் "அமெரிக்காவிலிருந்து விலகி" விட்டது எனவும், அமெரிக்கா உடனான கூட்டு இராணுவ பயிற்சிகள் மற்றும் பிலிப்பைன்ஸில் அமெரிக்க படைகள் தளம் அமைப்பதற்கான EDCA ஒப்பந்தம் இரண்டையும் அவர் முடிவுக்கு கொண்டு வருவதாகவும் அறிவித்தார். டுரேற்ற தனது பெய்ஜிங் பயணத்தின்போது, பிராந்திய சர்ச்சைக்கு தீர்வு காணப்படாமலும், சர்ச்சை பற்றி எதுவும் குறிப்பிடப்படாமலும் பிரச்சனைக்கு உட்பட்ட ஸ்கார்பாரோ கடல்படுகைக்கு ஃபிலிப்பினோ மீனவர்கள் திரும்ப கடலோர பாதுகாப்புப் படை அனுமதி அளிக்கும் வகையில் பெய்ஜிங் உடன் ஹேக் ஒப்பந்தம் ஒரு உடன்படிக்கையை அடைந்தது.

டுரேற்ற இன் வார்த்தை ஜாலத்தின் பெரும்பகுதியை வாஷிங்டன் பொறுத்துக் கொள்ள தயாராகிவிட்டது. அமெரிக்காவின் பூகோள மூலோபாய நலன்களை நிலைகுலைய செய்துவிடாத வகையில், "ஒரு வேசிமகன்" என அமெரிக்க ஜனாதிபதியை அவர் அழைக்கலாம், ஆனால் அமெரிக்க ஆளும் உயரடுக்கு இந்த EDCA ஒப்பந்தத்தினை மதிக்காதுவிடுவதை ஒரு அபாய அறிகுறியாகவே கருதிவருகிறது. பிலிப்பைன்ஸில் அமெரிக்க இராணுவ நிலைப்பாட்டை டுரேற்ற முடிவுக்கு கொண்டு வருவதாக தனது உரையாற்றல்களின் போது தற்செயலான கருத்துக்களாக அறிவிக்கின்றாரே தவிர, எந்த நிலையிலும் அந்த அறிக்கைகள் மீது எவ்வித அதிகாரபூர்வமான நடவடிக்கைகளும் அவரால் மேற்கொள்ளப்படவில்லை.

நவம்பர் 7ல், டுரேற்ற தனது அமைச்சரவையை கூட்டினார். இந்த அமைச்சரவை கூட்டத்தில், பாதுகாப்பு செயலாளர் டெல்பின் லோரென்ஷானா தலைமையிலான அவரது உயர்மட்ட இராணுவ ஆலோசகர்கள், அமெரிக்க-பிலிப்பைன்ஸ் இராணுவ உறவுகளை தக்கவைத்துக் கொள்வதற்கான அவர்களது பரிந்துரைப்புகளை முன்வைத்தனர். ஏனெனில், பிலிப்பைன்ஸின் உயர்மட்ட இராணுவ தலைவர்கள் வாஷிங்டனில்தான் அவர்களது விரிவான பயிற்சிகளை பெற்றிருக்கிறார்கள், மேலும் அவர்களது முக்கிய அரசியல் விசுவாசம் பென்டகன் இடத்தில் உள்ளது. பிலிப்பைன்ஸ் நாடு முழுவதிலுமான அமெரிக்க படைகளின் வரம்பற்ற இராணுவத் தள அமைவுகள் மற்றும் வருடாந்திர Balikatan இராணுவ பயிற்சிகளுக்கும், இரு நாடுகளுக்கு இடையிலான மிகப்பெரிய கூட்டு இராணுவ பயிற்சிகளுக்கும் அனுமதி அளித்த EDCA ஒப்பந்தத்தினை மேலும் தொடர்வதற்கு லோரென்ஷானாவால் அழைப்பு விடுக்கப்பட்டது.

விரிவான-போதைப் பொருள் எதிர்ப்பு பயிற்சியினை உள்ளடக்கிய Balikatan பயிற்சி விரிவாக்கத்தை லோரென்ஷானா முன்மொழிந்தார். இதனால் டுரேற்ற இன், கொலைகார போதைப்பொருள் எதிர்ப்பு போராட்டத்தில் அமெரிக்க படைகளின் நேரடியான உள்ளிணைப்புக்கு வழிசெய்யப்பட்டது. அதே நேரத்தில் லோரென்ஷானா, தென் சீன கடல் பகுதிகளில் நடைமுறையில் இருக்கும் கூட்டு கடற்படைப் பயிற்சிகள் (CARAT) மற்றும் தரையிலும் கடலிலும் நடத்தப்படும் தாக்குதல் பயிற்சிகள் (Phiblex) போன்ற இவற்றை முடிவுக்கு கொண்டுவர முனைந்தார். ஏனெனில், இரத்து செய்யப்பட்ட இந்தப் பயிற்சிகள், பகிரங்கமாக சீனாவின் மீது இலக்கு வைத்து நடத்தப்பட்டவையாகும்.

லோரென்ஷானாவின் அனைத்து முன்மொழிவுகளையும் டுரேற்ற ஏற்றுக்கொண்டார். இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள பரஸ்பர பாதுகாப்பு வாரிய-பாதுகாப்பு ஈடுபாட்டு வாரியத்தின் அமெரிக்க குழு கூட்டத்தின்போது, லோரென்ஷானா இந்த முடிவுகளை தனது சக அதிகாரியான அமெரிக்க பாதுகாப்பு செயலர் அஸ்டன் கார்ட்டர் இடம் அதிகாரபூர்வமாக முன்வைக்க உள்ளார்.

வாஷிங்டன் உடனான இராணுவ தள அமைவுகள் மற்றும் கூட்டு பயிற்சிகள் மீது டுரேற்ற அரசாங்கத்தினால் அடையப்பட்டுள்ள முடிவுகள், வாஷிங்டனுக்கு எதிரான டுரேற்ற இன் எதிர்நிலைப்பாட்டின் நிலைமையின் தன்மை குறித்த உலக சோசலிச வலைத் தளத்தின் பகுப்பாய்வை தெளிவாக உறுதிப்படுத்தியது. அமெரிக்கா உடனான இராணுவ உறவுகளின் மிக முக்கியமான கூறுகளை பிலிப்பைன்ஸ் தொடருகின்ற மற்றும் மேம்படுத்துகின்ற நிலையில், சீனாவுடனான பதட்டங்களுக்கு பெரும்பாலும் எரியூட்டும் தன்மை கொண்ட தனது அரசின் நடவடிக்கைகளை குறைக்கவும் அவர் திட்டமிட்டு உள்ளார். ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலான, கிட்டத்தட்ட வாராந்திர அடிப்படையில் கொள்கை மாற்றங்களை உருவாக்கும் வாஷிங்டன் உடனான கூட்டுக்களையும் மற்றும் பெய்ஜிங் உடனான பொருளாதார உறவுகளையும் சமநிலைப்படுத்தும் நடவடிக்கைகளில் டுரேற்ற ஈடுபட்டு உள்ளார்.

டுரேற்ற உடனான உறவுகளை மேம்படுத்துவதற்கு ஏற்ற அடுத்த நகர்வாக வாஷிங்டன், டுரேற்ற ஆல் அசட்டை செய்யப்பட்ட மற்றும் பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாகவே முரண்பட்ட அதன் மணிலா தூதர் ஃபிலிப் கோல்ட்பேர்க்கின் இடத்திற்கு, சங் கிம்-ஐ அதன் புதிய தூதராக நியமித்தது. இவர் பிறப்பால் கொரியாவை சேர்ந்த ஒரு அமெரிக்க இராஜதந்திரி ஆவார், மற்றும் வடக்கு கொரிய கொள்கைக்காக அமெரிக்க சிறப்பு பிரதிநிதியாக முன்பு பணியாற்றியும் உள்ளார்.

அமரிக்காவில் ட்ரம்ப் இன் தேர்வுக்கு பின்னர், வாஷிங்டன் உடனான உறவுகளை மறுசீரமைக்கவும் மற்றும் வலுப்படுத்தவதற்குமான ஒரு சந்தர்ப்பத்தினை டுரேற்ற எதிர்நோக்குகிறார். மேலும், இந்த தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் தேசிய பொருளாதார நடவடிக்கைகள் ட்ரம்ப் வெளிப்படையாக எதிர்க்கின்ற மற்றும் "உயிரற்றது" என அறிவிக்கப்பட்ட பசிபிற்கு இடையிலான கூட்டு போன்ற பிலிப்பைன்ஸின் பொருளாதாரம் தொடர்பான முன்னெடுப்புக்களை குறைக்கும் என மணிலாவில் விளக்கப்படுத்தப்பட்டு வருகின்றன.

கோலாலம்பூரில் மலேசிய பிரதம மந்திரி நஜிப் ரசாக் உடன் பங்கேற்ற கூட்டத்தில் பேசியபோது, டுரேற்ற ட்ரம்ப்பை வாழ்த்தினார். மேலும், "நான் நீண்ட காலத்திற்கு (அமெரிக்கவுடன்) போராட விரும்பவில்லை, ஏனெனில் ட்ரம்ப் ஏற்கனவே இங்கு இருக்கிறார். நான் அதிகாரத்திற்கு வந்து வெறும் நான்கு மாதங்களே ஆகும் நிலையில், அமெரிக்கா உடனான எனது சச்சரவுகள் உட்பட, பல விவகாரங்களில் என்னை சுற்றி நிறையவே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. நான் எதிரிகளை விரும்பவில்லை. ட்ரம்ப் ஏற்கனவே வெற்றியடைந்து விட்டார். இப்போது நாம் ஏன் வாயை மூடிக்கொண்டு இருக்கக் கூடாது?" என்று தெரிவித்தார்.

ட்ரம்ப் இன் தேர்வு, மணிலா மற்றும் பெய்ஜிங் இடையில் குறைந்த இராணுவ ரீதியிலான அழுத்தங்களையே கொண்டிருக்கும் என கருதுவதாக டுரேற்ற இன் செய்தித் தொடர்பாளர் மார்ட்டின் ஆன்டனார் நேரடியாக தெரிவித்தார். மேலும் அவர்; "இந்த உலகத்தினால் ஒரு மூன்றாம் உலகப் போரினை சகித்துக்கொள்ள முடியாது, ஏனெனில் நாம் அனைவரும் அழிந்து விடுவோம்." எனவும் தெரிவித்தார். வெளியுறவு செயலாளர், பெர்ஃபெக்டோ யாஸே, "ஒரு வலுவான பிலிப்பைன்ஸ்-அமெரிக்க உறவினை ஏற்படுத்தக்கூடிய மாற்றத்திற்கான ஒரு வாய்ப்பினை ட்ரம்ப் இன் தேர்வு அடையாளப்படுத்துகிறது" என தெரிவித்தார்.

இதைவிட நுட்பமாக இருக்கமுடியாதவகையில், டுரேற்ற உடனடியாக வாஷிங்டனில் தனது சிறப்புத் தூதராக பணியாற்ற ஜோஸ் E.B. ஆன்ட்டோனியோ என்பவரை நியமித்தார். பிலிப்பைன்ஸில் ட்ரம்ப் இன் முக்கிய வணிக பங்குதாரராக ஆன்ட்டோனியோ இருக்கிறார். Century Properties குழுமத்தின் தலைவரான இவரே தொழில் மாகாணமான மகாத்தியில் ட்ரம்ப் டவரை கட்டியெழுப்பும் பொறுப்பில் இருந்தார்.

அதிகளவில் கவலைகள் இருப்பினும், பிலிப்பைன்ஸின் சந்தைக்குள் ட்ரம்பின் பொருளாதார தேசியவாதம், பிலிப்பைன்ஸ் நாட்டின் அழைப்பு மையங்களின் (call centers) ஒரு பாரிய வலைப்பின்னல் உள்ளடக்கிய முக்கிய பணிகளை வெளியேற்றும் வணிக நடைமுறை (BPO) துறையின் ஒரு நெருக்கடிக்கு வழிவகுக்கும். பணிகளை வெளியேற்றும் வணிக நடைமுறை துறையின் (BPO) மீதான எழுபது சதவிகித வருமானம் பிலிப்பைன்ஸுக்கு அமெரிக்காவிலிருந்து தான் வருகிறது. மேலும் இந்த BPO துறை 2015ல் பிலிப்பைன்ஸுக்கு 22 பில்லியன் டாலர் மதிப்பிலான வருமானத்தையும், மற்றும் 1.2 மில்லியன் வேலைவாய்ப்புக்களையும் உருவாக்கித் தந்தது.