ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Race, class and the election of Trump

இனம், வர்க்கம் மற்றும் ட்ரம்ப் இன் தேர்வு

Barry Grey
10 November 2016

ஊடக பண்டிதர்களும் ஜனநாயகக் கட்சி காரியாளர்களும் டொனால்ட் ட்ரம்ப் க்கு ஜனாதிபதி பதவியை வழங்கிய தேர்தல் தோல்வியை, "வெள்ளையின தொழிலாள வர்க்கத்தில்" படர்ந்து பரவிய இனவாதம் மற்றும் பாலியல்வாதத்தின் ஒரு வெளிப்பாடாக சித்தரித்து வருகின்றனர்.

CNN கருத்துரையாளரும் ஒபாமாவின் முன்னாள் உதவியாளருமான வான் ஜோன்ஸ் இன் கருத்துக்கள், இனத்தை மத்திய பிரச்சினையாக காட்டுவதற்கான தேர்தலுக்குப் பிந்தைய குறிப்பிடத்தக்க முயற்சிகளாக உள்ளன. ட்ரம்ப் வெற்றி குறித்து அவர் கூறுகையில், “இது ஒரு கறுப்பின ஜனாதிபதிக்கு எதிரானதும் அத்தோடு மாற்றமடைந்து வரும் ஒரு நாட்டுக்கு எதிரான வெள்ளையின மக்களின் தாக்குதல்," என்றார்.

நியூ யோர்க் டைம்ஸ் இன் Eduardo Porter புதன்கிழமை பதிப்பில் எழுதுகையில், கிளிண்டன் மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் தோல்வி, "அமெரிக்க சமூகத்தின் குழம்பிய சித்திரத்தை வரைந்தளித்துள்ளது,” என்றார். இதில் "இன விரோதம் மேலோங்கி உள்ளது, இது வேறெதையும் பரிசீலிப்பதற்கும் அப்பாற்பட்டு நிற்கிறது…" என்றவர் அறிவித்தார்.

2016 தேர்தலுக்கு இனம் சார்ந்த மற்றும் குறைந்த அளவிலாவது பாலினம் சார்ந்த முப்பட்டகத்தினூடாக பொருள் விளக்கமளிப்பது, வெளிப்படையாகவே உண்மைக்கு புறம்பாக உள்ளன. பராக் ஒபாமாவை இரண்டு முறை வெள்ளை மாளிகையில் அமர்த்த வாக்களித்த அதே வாக்காளர்கள் தான், நடப்பிலுள்ள அரசியலுக்கு ஆளுருவாக நின்ற கோடீஸ்வரர் கிளிண்டனைத் தோற்கடித்திருக்கிறார்கள்.

கல்லூரி படிப்பு பெற்றிராத, 45-64 வயதிற்குட்பட்ட வெள்ளையினத்தவர்கள், குறிப்பாக ஆண்களின் வாக்குகள் அதிகரிப்பால், ட்ரம்ப் பெரிதும் அவரது வெற்றியை அடைந்தார். மக்கள்தொகையில் இந்த பிரிவினர் அந்த குடியரசுக் கட்சி பில்லியனருக்கு அதிகளவில் வாக்களித்தனர்.

1952 மற்றும் 1971 க்கு இடையே பிறந்த இவர்கள், 1970 மற்றும் 1989 க்கு இடையே தொழிலாளர்களாக வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். அவ்விதத்தில் அவர்கள் அவர்களது வேலை காலம் முழுவதிலும் பாரிய வேலைநீக்கங்கள், சம்பள வீழ்ச்சிகள் மற்றும் மோசமடைந்து வந்த வேலையிட நிலைமைகளை அனுபவித்தார்கள்.

அமெரிக்க நடுத்தர குடும்ப வருமானம்

இந்த தொழிலாளர்கள்தான் 1970 களின் இறுதியிலும் மற்றும் 1980 களிலும் தொழிற்சங்க-உடைப்பு மற்றும் கூலி-வெட்டுக்களுக்கு எதிரான கடுமையான போராட்டங்களில் பெருமளவில் ஈடுபட்டிருந்தனர். Hormel, Phelps Dodge, Greyhound, PATCO, AT Massey, Pittston மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த மத்தியமேற்கு எங்கிலுமான வாகனத்துறை மற்றும் எஃகுத்துறை ஆலைகளின் ஆர்ப்பாட்ட அணிவரிசையில் இந்த இளம் போர்குணமிக்க தொழிலாளர்கள் தான் நிறைந்திருந்தார்கள். இவர்களது போராட்டங்கள் திட்டமிட்டு தனிமைப்படுத்தப்பட்டு, தொழிற்சங்கங்களால் காட்டிக்கொடுக்கப்பட்டன.

கிளிண்டனுக்கான பங்கில் இந்த வாக்களார்களது வாக்குகள், 2012 இல் ஒபாமாவுக்குக் கிடைத்த சதவீதத்துடன் ஒப்பிடுகையில் கூர்மையாக வீழ்ச்சி அடைந்திருந்தன. மிச்சிகன், விஸ்கான்சின் மற்றும் பென்சில்வேனியா போன்ற முக்கிய தொழில்துறை "போர்க்களங்களில்", அப்பெண்மணிக்கான வாக்குகள் முறையே 13 புள்ளிகள், 10 புள்ளிகள் மற்றும் 9 புள்ளிகள் சரிந்தன.

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் எடுத்துக் காட்டப்பட்டவாறு, பெருமந்தநிலை முடிந்துவிட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு எட்டாண்டுகளுக்கு பின்னரும் வாக்காளர்களில் 62 சதவீதத்தினர் பொருளாதார நிலைமையை சாதகமற்றதாக இருப்பதாக மதிப்பிட்டிருந்தனர் என்ற உண்மையானது, பொருளாதாரப் பிரச்சினைகளே தொழிலாள வர்க்க வாக்காளர்களின் மத்திய பிரச்சினை என்பதை எடுத்துக்காட்டுகின்றது, இது ட்ரம்ப் வாக்காளர்களில் 85 சதவீதத்தை அதிகரித்தது.

பொருளாதாரம் "நல்ல நிலையில் இல்லை" அல்லது "மோசமாக இருப்பதாக" கல்லூரி படிப்பற்ற வெள்ளையின வாக்காளர்களில் முக்கால்வாசி பேர் கூறினர், மேலும் 10 இல் 8 பேர் அவர்களது தனிப்பட்ட நிதி நிலைமை நான்காண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட மோசமாகவோ அல்லது அதே போலவோ இருப்பதாக தெரிவித்தனர்.

உழைக்கும் மக்களின் இந்த பரந்த பிரிவுகளை பொறுத்த வரையில், கடந்த நான்கு தசாப்தங்கள் தொடர்ச்சியாக இவர்களது வாழ்க்கை நிலைமைகளை அரித்துள்ளது. வரவு-செலவு திட்டக்கணக்கு மற்றும் கொள்கை முன்னுரிமைகளுக்கான மையத்தால் பகுத்தாராயப்பட்ட மக்கள்தொகை புள்ளிவிபரங்களின்படி, கல்லூரி பட்டப் படிப்பற்ற வெள்ளையின ஆண் தொழிலாளர்களது குடும்ப வருமானம், 1975 மற்றும் 2014 க்கு இடையே, பணவீக்கத்திற்கு ஏற்ப சரி செய்யப்பட்டு பார்த்தால், 20 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி அடைந்திருப்பதை கண்டார்கள்.

2003 இல் இருந்து 2013 வரையிலான நிஜமான சம்பளங்கள் மீதான ஒப்பீடு

2007 மற்றும் 2014 க்கு இடையே, ஒபாமாவின் கீழ், இவர்களது வருமானங்கள் 14 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.

செவ்வாய்கிழமை தேர்தலில் எது தீர்க்கமான காரணியாக இருந்தது? ஆலைமூடல்களால் பொருளாதார ரீதியில் சீரழிக்கப்பட்ட மற்றும் கண்ணியமான சம்பளம் வழங்கிய வேலைகளை அழித்த மிகப்பெரிய தொழில்துறை மாநிலங்கள், 2012 இல் ஒபாமாவிற்கு வாக்குகளை பெற்று தந்திருந்த இவை, குடியரசுக் கட்சி அணிக்குள் மாறி ட்ரம்ப் க்கு வெற்றியீட்டி கொடுத்தன. பெரிதும் உழைக்கும் மக்களின் வாக்குகளான இவை, இவர்களில் பெரும்பான்மையினர் வெள்ளையினத்தவர்களாக இருக்கக் கூடிய நிலையில், இது ஒபாமா தொடர்ந்து தீவிரப்படுத்தியிருந்த பெருநிறுவன-ஆதரவு மற்றும் தொழிலாள வர்க்க விரோத கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்பு வாக்குகளாகும்.

மிச்சிகன், பென்சில்வேனியா, விஸ்கான்சின், ஓகியோ மற்றும் அயோவா ஆகியவை இந்த மாநிலங்களில் உள்ளடங்கும். முன்னர் உறுதியாக ஜனநாயகக் கட்சி வசமிருந்த ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் குடியரசுக் கட்சி வசமான ஏனைய தொழில்துறை மாநிலங்கள், மேற்கு வெர்ஜீனியா மற்றும் கென்டக்கி போன்றவை, ட்ரம்ப் இன் வெற்றி இலக்கை அதிகரித்தன.

ட்ரம்ப் வசம் சரிந்த தொழில்துறை மாநிலங்களுக்கும் மற்றும் ஒபாமா நிர்வாகத்தினது 2009 ஜிஎம்-கிறைஸ்லர் பிணையெடுப்பின் கீழ் வாகன ஆலைகள் மூடப்பட்ட மாநிலங்களுக்கும் இடையே ஒரு இடைதொடர்பு உள்ளது. புதிய நியமன தொழிலாளர்கள் அனைவருக்கும் 50 சதவீத ஊதிய வெட்டு என்பதற்கு கூடுதலாக அந்த மறுசீரமைப்பு, 14 ஆலைமூடல்கள் மற்றும் 35,000 வேலைநீக்கங்களை உள்ளடக்கி இருந்தது. ஆலைமூடல் செய்யப்பட்டவைகளில் ஏழு மிச்சிகனில் இருந்தன மற்றும் ஓகியோவில் மூன்று இருந்தன. ஜனெஸ்வெல் ஜிஎம் ஆலை மூடலை விஸ்கான்சின் கண்டது.

மிச்சிகன், விஸ்கான்சின், மேற்கு வெர்ஜீனியா, இந்தியானா மற்றும் இடாகோ உள்ளடங்கலாக ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் வெர்மாண்ட் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் க்கு வாக்களித்திருத்த மாநிலங்கள் குடியரசுக் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்திருந்தமை, ட்ரம்ப் க்கான வாக்குகள் மூலமாக வெளிப்பட்ட ஆழ்ந்த கோபத்தின் மற்றொரு வெளிப்பாடாகும். ஜனநாயக கட்சியை அவர் ஊக்குவித்ததன் தவிர்க்கவியலாத விளைவாக, சாண்டர்ஸ் வெட்கமின்றி கிளிண்டனிடம் அடிபணிந்தமை ட்ரம்ப் வெற்றியில் ஒரு முக்கியம் பாத்திரம் வகித்தது.

மிச்சிகன், விஸ்கான்சின் மற்றும் ஓகியோ போன்ற மாநிலகங்களில் வாக்குகள் பிரிந்தமை என்ன எடுத்துக்காட்டுகிறது என்றால் 2012 இல் ஒபாமாவிற்கு வாக்களித்த சிறிய தொழில்துறை நகரங்கள் மற்றும் சிறுநகரங்கள் செவ்வாயன்று ட்ரம்ப் க்கு வாக்களித்தன, இது அம்மாநிலத்தையே குடியரசு கட்சி முகாமிற்குள் திருப்பியது.

2009 ஜிஎம் மறுசீரமைப்பின் போது மூடப்பட்ட வாகனத்துறை ஆலைகளைக் கொண்ட மாநிலங்கள்

இந்த விபர ஏட்டின் மறுபக்கம், கிளிண்டனின் தோல்வியை பதிவு செய்திருந்த டெட்ராய்ட், கிளைவ்லாந்து மற்றும் மில்வாக்கி போன்ற பெரிதும் ஆபிரிக்க-அமெரிக்க நகரங்களில் வாக்குப்பதிவு கூர்மையாக குறைந்திருந்தமை இனவாத பொருள்விளக்கம் அளிப்போரின் கூற்றுக்களைப் பொய்யாக்கி உள்ளன.

டெட்ராய்டை உள்ளடக்கிய மிச்சிகனின் வாய்ன் மாகாணத்தின் வாக்குப்பதிவு 2008 இல் இருந்து 78,000 ஆக வீழ்ச்சி அடைந்தது. டெட்ராய்டிலேயே கூட, 2012 இல் ஒபாமா பெற்ற வாக்குகளை விட 48,000 வாக்குகள் கிளிண்டன் குறைவாக பெற்றார். பிளிண்ட் ஐ உள்ளடக்கிய மிச்சிகனின் ஜெனிஸ்சி மாகாணத்தில் வாக்காளர் வாக்குப்பதிவு 27,000 அளவுக்கு குறைந்திருந்தது.

கிளீவ்லாந்தை உள்ளடக்கிய ஓகியோவின் குயாஹோகா மாகாணத்தில், கிளிண்டன் வாக்குகள் 50,000 ஐ விட அதிகமாக வீழ்ச்சி அடைந்திருந்தது, இது கிளீவ்லாந்திலேயே கூட கூர்மையாக சரிந்திருந்தது. மில்வாக்கியில் வாக்குப்பதிவு 58,000 அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருந்தது. பிலடெல்பியாவில், கிளிண்டனுக்கு ஒபாமாவை விட 18,000 வாக்குகள் குறைவாக பதிவாயின.

கிளிண்டனுக்கு இருந்த மிகப் பெரும் வரவேற்பின்மை, எந்தவொரு இனம் சார்ந்து மட்டுப்பட்டு இருக்கவில்லை. அது அடிப்படையில் இராணுவவாதம் மற்றும் ஊழலின் ஒரு முன்நடவடிக்கைகளுடன் வோல் ஸ்ட்ரீட் இன் நெருங்கிய நம்பிக்கைக்குரியவருக்கு வழங்கப்பட்ட ஒரு வர்க்க விடையிறுப்பாகும். 2012 இல் ஒபாமாவிற்கு கிடைத்த வாக்குகளை விட தேசியளவில் கிளிண்டனுக்கு 6 மில்லியன் வாக்குகள் குறைவாக பதிவாயின. மேலும் ஒபாமா நான்காண்டுகளுக்கு முன்னர் பொருளாதாரத்தை பொறிவுக்குக் கொண்டு வந்த வோல் ஸ்ட்ரீட் ஊகவணிகர்களின் ஆளுருவான ஒரு தனியார் முதலீட்டு நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி மிட் ரோம்னியை எதிர்த்த போதும், 2012 இல் அவரது மொத்த வாக்குகள் 2008 இல் அவருக்குக் கிடைத்த வாக்குகளை விட குறைவாகவே இருந்தன.

2016 தேர்தலைக் குறித்து வரவிருக்கின்ற பரிசோதனை அறிக்கைகள், கிளிண்டன் மின்னஞ்சல் முரண்பாடுகளுக்குள் FBI இன் தலையீடு ஏற்படுத்திய விளைவை விட 2017 இல் ஒபாமாகேர் மருத்துவக் காப்பீட்டு கட்டணங்கள் சராசரியாக 25 சதவீதம் உயர்த்தப்படும் என்று தேர்தல் நாளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டதே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்திருந்தது என்று முடிவு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. உழைக்கும் குடும்பங்களது வருமானம் மீதான இந்த புதிய மற்றும் கடுமையான சுமை, ஒபாமாவின் கையொப்பம் ஏந்திய அந்த உள்நாட்டு திட்டம் தொழிலாளர்களின் பையிலிருந்து செலவாகும் தொகையை பெரிதும் உயர்த்தும் அடிப்படையில் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் மற்றும் பெருநிறுவனங்களுக்கும் இலாபத்தை அள்ளித் தந்த ஒரு திட்டம் என்ற யதார்த்தத்தை எடுத்துக்காட்டியது.

ஜனநாயகக் கட்சியிடமிருந்து குடியரசுக் கட்சிக்கு கைமாறிய சகல மத்தியமேற்கு தொழில்துறை மாநிலங்களும், பென்சில்வேனியாவின் மூர்க்கமான 32.5 சதவீத உயர்வு உட்பட இரட்டை இலக்க கட்டண உயர்வுகளை இலக்கில் கொண்டிருந்தன.

இத்தகைய உண்மைகள் கிளிண்டன் மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் தோல்விக்கு அடியில் இருப்பது இனமோ அல்லது பாலினமோ கிடையாது, பொருளாதார மற்றும் வர்க்க பிரச்சினைகளாகும் என்பதை அப்பட்டமாக தெளிவுபடுத்துகின்றன.

ட்ரம்ப் இன் வெற்றி ஜனநாயகக் கட்சிக்கு மட்டும் ஒரு வரலாற்று தோல்வி இல்லை, மாறாக தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் ஆகும். குடியரசுக் கட்சியின் உயர்வுக்கு முக்கியமானதாக விளங்கிய தொழில்துறை மாநிலங்கள்தான், ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்களது தொழிற்சங்கம் (UAW), ஐக்கிய எஃகுத்துறை தொழிலாளர்களது தொழிற்சங்கம், ஐக்கிய சுரங்கத்துறை தொழிலாளர்களது தொழிற்சங்கம் மற்றும் AFL-CIO ஆகியவற்றால் நடத்தப்பட்ட காட்டிக்கொடுப்புகளால் மிகவும் பேரழிவுகரமாக ஆக்கப்பட்டவை. ஜனநாயகக் கட்சியுடனான அவற்றின் தசாப்த கால கூட்டணியும் மற்றும் வர்க்க போராட்டத்தை ஒடுக்கியமையும் இந்த முன்னாள் வாகனத்துறை, எஃகுத்துறை மற்றும் சுரங்கத்துறை மையங்களை பொருளாதார தரிசு நிலங்களாக மாற்றின.

இனவாத மற்றும் போலி-வெகுஜனவாத வாய்ஜம்பக்காரர் ஜோர்ஜ் வாலஸ் 1972 இல் மிச்சிகன் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அந்தஸ்தை வென்றபோது, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் முன்னோடி அமைப்பான வேர்க்கஸ் லீக்கும் மற்றும் அதன் பத்திரிகையுமான புல்லட்டினும், அதை விவரிக்கையில், இந்த அபாயகரமான அபிவிருத்தி ஜனநாயகக் கட்சியுடனான UAW இன் திவாலான அரசியல் கூட்டணியினது வெளிப்பாடாகும் என்று விவரித்தது. இந்த பெருவணிக கட்சி தொழிலாள வர்க்கம் மீது அதன் இறுக்கிப்பிடியை பேணுவதில் தொழிற்சங்கங்கள் வகித்துள்ள பாத்திரத்தால் ஏற்பட்டுள்ள நிலைமைகளில், தங்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களை முகங்கொடுக்கும் தொழிலாளர்கள், ஆளும் வர்க்கத்தின் மிகவும் பிற்போக்குத்தனமான பிரதிநிதிகளுக்குப் பின்னால் பொருளாதார தேசியவாதத்தின் அடிப்படையில் அணிதிரள்வார்கள் என்று நாம் வலியுறுத்தினோம்.

அண்மித்து 45 ஆண்டுகளுக்கு பின்னர், அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி மிகவும் முதிர்ந்து தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் பெரிதும் தீவிரமடைந்திருக்கும் நிலைமைகளின் கீழ், இந்த அபாயம் தீவிர வலதின் அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்திருப்பதில் கொடூரமான வெளிப்பாட்டைக் கண்டுள்ளது.

ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இரண்டு தரப்பினராலும் ஆதரிக்கப்படும் போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கான உந்துதலை தோற்கடிக்க கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். இனவாத மற்றும் அடையாள அரசியலின் சகல வடிவங்களையும் நிராகரிப்பதே முக்கிய பிரச்சினையாகும். முன்னுள்ள கடமை என்னவென்றால், முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் உருவாக்கப்பட வேண்டும்.