ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

After the election of Trump: The realignment of US politics

ட்ரம்ப் தேர்வாயிருப்பதன் பின்னர்: அமெரிக்க அரசியலின் மறுஒழுங்கமைப்பு

Patrick Martin
18 November 2016

2016 ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதன் பிந்தைய ஒன்றரை வார காலத்தில், ஜனநாயகக் கட்சியின் முன்னிலைப் பிரமுகர்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவரை ஏற்றுக் கொள்வதற்கு அசாதாரண வேகத்துடன் இயங்கினர். நவம்பர் 8 க்கு முன்பாக ட்ரம்ப்பை நாட்டினதும் உலகினதும் இருப்புக்கே அச்சுறுத்தலாக கூறி கண்டனம் செய்து கொண்டிருந்த அதே மனிதர்கள் இப்போது அவருடன் சேர்ந்து வேலை செய்வதற்கும் ஒத்துழைப்பதற்கும் உறுதியளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் முடிந்த பத்து நாட்களில் என்ன நடந்தது? முதலாவதாய் ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் இருந்தும் தேர்தலில் ட்ரம்ப்பின் போட்டியாளராக இருந்த ஹிலாரி கிளிண்டனிடம் இருந்தும் நல்லிணக்க அறிக்கைகள் வந்தன. ட்ரம்ப் ”வெற்றிகரமாக” இயங்குவதை உறுதி செய்வது தான் தனது “முதலிட முன்னுரிமை” என்று ஒபாமா வாக்களிப்பு முடிவு கிட்டிய அடுத்த நாளிலே அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் முன்னணி தேசிய பத்திரிகையும் கிளிண்டன் பிரச்சாரத்தில் ஆர்வமுடனான ஒரு ஊக்குவிப்பாளருமாக இருந்த நியூ யோர்க் டைம்ஸ், தேர்தல் செய்திகளை தான் கையாண்ட விதத்திற்காக மன்னிப்பு கோரியமை பின்னர் வந்தது.

செனட்டர்கள் பேர்னி சாண்டர்ஸ் மற்றும் எலிசபெத் வாரன் உட்பட பெயரளவுக்கு “இடது” ஜனநாயகக் கட்சியினர், ட்ரம்ப்பின் திட்டநிரலின் அடிப்படையான விடயங்களில் அவருடன் “இணைந்து செயல்பட” இருப்பதாகக் கூறுவதற்காக குதித்தோடி வந்தனர், AFL-CIO இன் தலைவரான ரிச்சார்ட் ட்ரம்கா மற்றும் UAW இன் தலைவரான டென்னிஸ் வில்லியம்ஸ் போன்ற தலைமையான தொழிற்சங்க நிர்வாகிகளும் அவ்வாறே செய்தனர். இந்த வாரத்தில் துணை ஜனாதிபதி ஜோசப் பைடன், துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மைக் பென்ஸ் உடனான ஒரு சந்திப்பிற்குப் பின்னர் அவரைப் பாராட்டினார், புதிய நிர்வாகத்தின் “முதல் நாளில்” இருந்தே பதவி “சரியான கரங்களில்” இருக்கும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிபோக்கு முழுவதிலுமே, வரவிருக்கும் நிர்வாகத்தின் அதி-வலது திட்டநிரல் - ஒரு இனவாதியும் பாசிஸ்டுமான ஸ்டீபன் பானனை தலைமை மூலோபாய ஆலோசகராய் ட்ரம்ப் தேர்வு செய்ததில் இது உச்சம்பெற்றது - உதாசீனப்படுத்தப்பட்டது, அல்லது தணித்துக் காட்டப்பட்டது. ட்ரம்ப் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் வாக்குகள் அளவுக்கு மக்கள் வாக்குகளில் தோற்றுப் போயிருந்தார் என்ற உண்மைக்கும் இதே கதியே நிகழ்ந்தது, புதிய அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வற்கான முயற்சிக்கு அசவுகரியமான ஒரு உண்மையாக ஜனநாயகக் கட்சியினராலும் ஊடகங்களாலும் அது கையாளப்பட்டது.

ஜனநாயகக் கட்சியின் குணாம்சமாக நீண்டகாலமாக இருந்து வருகின்ற முதுகெலும்பற்ற தன்மையையும் தவிர, ஒரு குறிப்பிட்ட அரசியல் தர்க்கமும் கூட செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தேர்தல் பிரச்சாரமானது, ஆளும் வர்க்கத்திற்குள்ளான கடுமையான கன்னை மோதல்களுக்கு வெளிப்பாட்டை வழங்கிய அதேவேளையில், அதன் விளைவானது வர்க்கக் கொள்கை ஒரு ஆவேசமான தேசியவாத திசையில் மறுநோக்குநிலை காண்பதற்கு பாதையமைத்து கொடுத்திருக்கிறது.

ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற அங்கத்தவர்கள், வாஷிங்டனின் புதிய அதிகாரத்திற்கு அளித்திருக்கும் பதிலிறுப்பு மிகவும் வெளிப்பட்டு நிற்கிறது. இந்த மாற்றத்திற்கு செனட்டின் ஜனநாயகக் கட்சி அங்கத்தவர்கள் முன்னிலையில் நிற்கின்றனர், அவர்கள் புதனன்று, ஓய்வு பெறும் நெவெடா மாநிலத்தின் ஹாரி ரீட்டின் இடத்திற்கு சார்ல்ஸ் சூமர் என்ற ஒரு புதிய தலைவரை தேர்ந்தெடுத்தனர்.

நியூ யோர்க் மாநிலத்தின் செனட்டரான சூமர், வோல் ஸ்ட்ரீட்டின் நலன்களை ஆர்வத்துடன் பாதுகாப்பவராவார். அதேநேரத்தில் அவர் பொருளாதார மற்றும் வர்த்தகக் கொள்கையில் ஒரு கூடுதல் மூர்க்கமான சீன-எதிர்ப்புக் கொள்கையுடன் அடையாளப்படுத்தப்படுபவரும் ஆவார். சீன இறக்குமதிகள் மீது தண்ட வரிகளுக்கான அச்சுறுத்தலைக் கொண்டுவருவதற்காக அமெரிக்க அரசாங்கம் சீனாவை அதன் நாணயமதிப்பை மறுமதிப்பீடு செய்ய நிர்ப்பந்திக்க வேண்டும் என்று கோருகின்ற ஒரு தீர்மானத்தை குடியரசுக் கட்சியின் போர் வெறியரான தெற்கு கரோலினாவின் லிண்ட்சே கிரஹாம் உடன் சேர்ந்து வருடம் தவறாமல் இவர் கொண்டு வந்திருந்தார்.

அத்தகையதொரு கொள்கையின் மிக ஆவேசமாக வலியுறுத்துபவராக இருந்து வருபவர் ஜனாதிபதியாக தேர்வாகியிருக்கும் திரு.ட்ரம்ப் ஆவார், இவர் சீனாவை நாணய மதிப்பைக் கைப்புரட்டு செய்யும் நாடாக முத்திரை குத்தும் ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பிப்பேன் என்றும், பீஜிங்கை தனது நாணயமதிப்பை மறுமதிப்பீடு செய்ய நிர்ப்பந்திக்கும் பொருட்டு 45 சதவீதம் வரையான வரிகளை விதிப்பேன் என்றும் அறிவித்து வந்திருக்கிறார். ட்ரம்ப், சூமர் இருவருமே ஒருவரையொருவர் பல தசாப்தங்களாக அறிந்தவர்களாய் இருந்திருக்கின்றனர், சூமரின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் பிரச்சாரங்களுக்கு ட்ரம்ப் நிதிப்பங்களிப்பு செய்திருக்கிறார்.

ஜனநாயகக் கட்சியினரின் ட்ரம்ப்-ஆதரவு பிரச்சாரத்தை பெரும்பாலும் ஆதரித்து எழுதும் நியூ யோர்க் டைம்ஸ், தனது வியாழக்கிழமை முதன்மைச் செய்திக்கு “செனட் ஜனநாயகக் கட்சியினரின் ஆச்சரியமான மூலோபாயம்: ட்ரம்ப்பின் பின்னால் நிற்க முயற்சி செய்கின்றனர்” என்று தலைப்பிட்டிருந்தது. நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சியினர் “ஜனாதிபதியாக தேர்வாகியிருக்கும் டொனால்ட் ஜே. ட்ரம்ப்பை அவரது சொந்தக் கட்சிக்கு சிக்கலாக்கும் வண்ணம் அவரின் பல ஆலோசனைகளின் பின்னால் நிற்கும் ஒரு திட்டநிரலை கட்டமைத்துக் கொண்டிருக்கின்றனர்” என்று அந்தச் செய்திக் கட்டுரை தெரிவித்தது.

ஜனநாயகக் கட்சியினர், ட்ரம்புக்கு குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற தலைமையுடன் உறவுகள் இல்லாததை மனதில் கொண்டு, அவர்கள் பெருமளவில் உடன்படக் கூடிய அவரது வர்த்தகப் போர் வேலைத்திட்டத்தை ஏற்றுக் கொண்டால் சில குறிப்பிட்ட பிரச்சினைகளில் அவரை தங்களின் பக்கம் வென்றெடுத்து விடலாம் என்று நம்புகின்றனர். டைம்ஸ் செய்தி தொடர்ந்து எழுதுகிறது: “ஜனநாயகக் கட்சியின் புதிய சிறுபான்மைத் தலைவராக புதனன்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நியூ யோர்க்கின் செனட்டரான சக். சூமர் திரு.ட்ரம்ப் உடன் பல முறை பேசியிருக்கிறார், அத்துடன் வரவிருக்கும் வாரங்களில் திரு.ட்ரம்ப்புக்கு பிடித்தமான வகையான ஜனரஞ்சக பொருளாதார மற்றும் அறநெறி முன்முயற்சிகளை அறிவிப்பதற்கும் ஜனநாயகக் கட்சியினர் திட்டமிடுகின்றனர்.”

ட்ரம்ப்புடன் ஜனநாயகக் கட்சியினரின் கூட்டணியை, “வெள்ளை தொழிலாள வர்க்கத்தை” நோக்கிய ஒரு ஜனரஞ்சகமான திருப்பம் என்பதாக முன்வைப்பதற்கான முயற்சி ஒரு மோசடியாகும். தேசியவாத திட்டநிரலானது அமெரிக்கப் பெருநிறுவனங்கள் அவற்றின் போட்டியாளர்களுக்கு எதிராக தங்களது நலன்களை மூர்க்கமாக திட்டவட்டம் செய்வதையே நோக்கம் கொண்டதாகும். உலகெங்கிலும் இன்னும் கூடுதல் வன்முறையுடன் இராணுவத் தலையீடு செய்வது இந்தக் கொள்கையின் துணைக்கூறு ஆகும்.

ஜனநாயகக் கட்சியில் சாண்டர்ஸின் புதிய உயர்த்தப்பட்ட பாத்திரமானது (அவர் இந்த வாரத்தில் செனட்டின் தலைமைக்கு நியமனம் செய்யப்பட்டார்) குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியின்போது வர்த்தக உடன்படிக்கைகளுக்கான எதிர்ப்பின் மீதே தனது பிரச்சாரத்தின் பெரும்பகுதியை சாண்டர்ஸ் அமைத்துக் கொண்டிருந்தார். கடுமையான பாதுகாப்பு வாதம் பேசக் கூடியவரும், குடியரசுக் கட்சிக்கு தாவுவதைக் குறித்து விவாதித்து வந்திருந்தவருமான மேற்கு வெர்ஜினியாவின் செனட்டர் ஜோ மான்சின் செனட் தலைமைக்கு உயர்த்தப்பட்டுள்ள இன்னொருவர் ஆவார்.

ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்ப்புடன் குறிப்பிட்ட பிரச்சினைகளில் “சேர்ந்து வேலை செய்வார்கள்” என்றும் மற்றவற்றில் எதிர்ப்பார்கள் என்றும் கூறுவது ஒரு அரசியல் கற்பனைக்கதை ஆகும். ஒரு தேசியவாத பொருளாதாரக் கொள்கையுடன் வெளிநாடுகளில் இராணுவ வலிமையை மூர்க்கமாகப் பயன்படுத்துவதும் தவிர்க்கவியலாமல் உடன்வந்தே தீரும். ஒரு ஊரறிந்த போர்வெறியரான ஓய்வுபெற்ற தளபதி மைக்கேல் ஃபிளின்னை தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ட்ரம்ப் நியமிக்க இருக்கிறார் என்று வியாழனன்று இரவு வந்த அறிவிப்பில் இதன் சமிக்கை வெளிப்பட்டது.

மேலும், தேசியவாத நடவடிக்கைகளின் மூலமாக பொருளாதார வளர்ச்சியை தூண்டுவதற்கு ஆளும் வர்க்கம் முயற்சி செய்யக் கூடிய மட்டத்திற்கு, அது அமெரிக்காவிற்குள்ளாக தொழிலாள வர்க்கத்தின் சுரண்டலை தீவிரப்படுத்துவதையே அடிப்படையாகக் கொள்ள முடியும். ஆளும் வர்க்கம் ட்ரம்ப்பை நோக்கி திரும்புவதானது, சமூக எதிர்ப்பின் வளர்ச்சியைக் கையாளுவதற்கு கூடுதல் எதேச்சாதிகாரமான ஆட்சி வடிவங்களையும் போலிஸ்-அரசு வன்முறையையும் பயன்படுத்துவதற்கு அது தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது என்பதன் அறிகுறி ஆகும்.

ட்ரம்ப்பின் தேர்வு ஆளும் வர்க்கத்தின் அரசியல் வழிமுறைகளில் ஒரு முக்கியமான மாற்றத்தைக் குறித்து நிற்கிறது என்ற அதேநேரத்தில், அவருடைய கொள்கைகள் பல தசாப்தங்களாக இருந்து வருகின்ற ஒரு பொதுவான கோட்டின் பாதையிலேயே பயணிக்கின்றன.

வாஷிங்டனில் வடிவம் பெற்று வருகின்ற அதி-வலது, எதேச்சாதிகார, இராணுவவாத ஆட்சிக்கு எதிரான ஒரு உண்மையான போராட்டத்திற்கு என அமெரிக்க ஆளும் உயரடுக்கிடமோ அல்லது அதன் இரண்டு அரசியல் கட்சிகளிடமோ எந்த இடமும் இருக்கவில்லை. மக்கள் தொகையின் கால் பகுதிக்கும் குறைவான வாக்குகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, தான் கட்டவிழ்க்க இருக்கும் மூர்க்கமான பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு எந்த மக்கள் உத்தரவும் கொண்டிராத வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகமானது, பிரம்மாண்டமான நெருக்கடி கொண்டதாகும்.

ட்ரம்ப்புக்கு எதிரான போராட்டமானது, மதிப்பிழந்து போன ஜனநாயகக் கட்சியின் எந்தக் கன்னையின் மூலமாகவோ அல்லது முதலாளித்துவ அரசின் எந்த ஸ்தாபகங்களின் மூலமாகவோ நடத்தப்பட முடியாது. தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தனது சொந்தக் கட்சியைக் கட்டியெழுப்புவதன் ஊடாக சுயாதீனமான வகையில் அரசியல் அணிதிரட்டப்படுவது இதற்கு அவசியமாக இருக்கிறது.