ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Far-right candidate defeated in Austrian presidential election

ஆஸ்திரிய ஜனாதிபதித் தேர்தலில் அதி-வலது வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டார்

By Markus Salzmann
5 December 2016

ஆஸ்திரிய ஜனாதிபதித் தேர்தலில் ஆஸ்திரிய பசுமைக் கட்சியின் முன்னாள் தலைவரான அலெக்ஸான்டர் ஃவொன் டெர் பெலென், அதி-வலது சுதந்திரக் கட்சியை (Freiheitliche Partei Österreichs - FPÖ) சேர்ந்த நோபேர்ட் ஹோஃபர் ஐ தோற்கடித்து நேற்று வெற்றி பெற்றார்.

72 வயதான இவர் 53.4 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கக் கூடும் என்றும், ஹோஃபர் 46.6 சதவீதம் பெற்றிருக்கக் கூடும் என்று மதிப்பிடப்படுகிறது. இந்த உத்தேச வாக்குசதவீதம் இன்று தான் எண்ணப்படவிருக்கும் 700,000 அஞ்சல் வாக்குகளையும் உள்ளடக்கியதாகும்.

நாட்டின் தலைவர் பதவிக்கு மே மாதத்தில் நடந்த வேட்பாளர் தேர்தலின் போது வெறும் 50.4 சதவீத வாக்குகளே பெற்றிருந்ததை ஒப்பிட்டால், ஃவொன் டெர் பெலென் இப்போது பெற்றிருக்கும் முன்னிலை மிகக் கூடுதலான ஒன்றாகும். அச்சமயத்தில் முறைகேடுகளின் காரணத்தால் தேர்தல் முடிவுகளை FPÖ வெற்றிகரமாக சவால் செய்தது. அக்டோபர் 2 அன்று நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த இரண்டாம் நிலை தேர்தல் அஞ்சல் வாக்குகளுக்கான உறைகள் சரியாக ஒட்டவில்லை என்ற புகாரின் பின்னர் தள்ளிவைக்கப்பட்டு, மேலதிக சட்ட சவாலின் அச்சங்களையும் எழுப்பியது.

இந்த முறை, தேர்தல் முடிந்தவுடன் அரை மணி நேரத்தில் தனது தோல்வியை ஹோஃபர் ஒப்புக்கொண்டு வெற்றி பெற்ற ஃவொன் டெர் பெலெனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

வாக்களிப்பு சதவீதம் 2 சதவீதம் அதிகரித்து 75 சதவீதமாக உயர்ந்தமை மற்றும் 1945க்குப் பின்னர் முதன்முதலில் ஐரோப்பாவில் ஒரு நாட்டின் தலைவராக அதி-வலது மனிதர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதை தடுத்து விட வேண்டும் என்பதில் வாக்காளர்கள் தீர்மானமாக இருந்தமை இரண்டும் ஃவொன் டெர் பெலெனுக்கு சாதகமாக அமைந்தன.

குறிப்பாக நகர்வாழ் இளைஞர்கள் ஃவொன் டெர் பெலெனுக்கு ஆதரவாய் வாக்களித்தனர். ஆஸ்திரிய மக்களில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கினர் வாழும் தலைநகர் வியன்னாவில், அவர் 65 சதவீத வாக்குகள் பெற்றிருந்தார், இது ஆரம்பத்து போட்டியில் கிட்டியதை விடவும் 1.6 சதவீதம் அதிகமாகும். வலது-சாரி தீவிரப்பட்ட வேட்பாளர் தேர்வாகி விடுவதைத் தடுக்கும் பொருட்டு சென்றமுறை வாக்களிக்க வராமல் இருந்தவர்களும் கூட இந்த முறை ஃவொன் டெர் பெலெனுக்கு ஆதரவாய் வாக்களித்தனர்.

அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்வானது ஐரோப்பாவில் அதி-வலதுகளை மேலும் வலுப்படுத்துவதாக அமையுமா என்பதற்கான ஒரு பரிசோதனையாக ஆஸ்திரிய தேர்தல் பார்க்கப்பட்டது. குறைந்தபட்சம் ஆஸ்திரியாவில், அதற்கு எதிரானதே நடந்திருப்பதாகத் தோன்றுகிறது, ஏனென்றால் ஃவொன் டெர் பெலெனுக்கு வாக்களித்தவர்களில் முழுமையாக 30 சதவீதம் பேர் வலது நோக்கிய ஒரு மாற்றத்தைத் தடுப்பதற்காகவே தாங்கள் அவருக்கு வாக்களித்ததாகக் கூறினர்.

தேர்தலின் முடிவுகளைக் குறித்து ஐரோப்பாவின் முன்னணி அரசியல்வாதிகள் தங்களது நிம்மதியை வெளிப்படுத்தினர். ஒரு சிறிய நாடாக இருந்தபோதிலும் கூட, ஆஸ்திரியாவில் காணப்படும் அரசியல் மனோநிலையானது பிரான்சில் மரின் லு பென்னின் தேசிய முன்னணி போன்ற கட்சிகளுக்கு (இவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரானவையாகவும், தேசியவாத பாதுகாப்புவாத மூலோபாயங்களை முன்னெடுப்பவையாகவும் இருக்கின்ற அதேநேரத்தில் எட்டு ஆண்டு கால பொருளாதார நெருக்கடி மற்றும் சிக்கன நடவடிக்கைகளால் உருவாக்கப்பட்ட சமூகத் துன்பங்களைக் காட்டி விண்ணப்பம் செய்வதற்கு தங்களது ஜனரஞ்சக வாய்வீச்சை பயன்படுத்துகின்றன) சாத்தியமாகக் கூடிய வாய்ப்புவளங்கள் குறித்த ஒரு சுட்டுக்குறியீடாக பார்க்கப்படுகிறது.

ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சி தலைவரான சிக்மர் கேப்ரியல் ட்விட்டரில் எழுதினார்: “பகுத்தறிவின் வெற்றி, என் மனதில் இருந்து ஒரு பாரம் நீங்கியிருக்கிறது.”

பிரெஞ்சு பிரதமரும் சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகும் சாத்தியம் கொண்டவருமான மானுவல் வால்ஸ் எழுதினார்: “ஜனரஞ்சகவாதம் என்பது ஐரோப்பாவுக்கு தவிர்க்கமுடியாத தலைவிதியாக இல்லை.”

ஆஸ்திரிய நாஜி இயக்கத்தில் மூலங்களைக் கொண்டதான ஒரு கட்சிக்குத் தலைமை கொடுக்கும் ஹோஃபர், தன்னை ஒரு மிதமான முதலாளித்துவ அரசியல்வாதியாகக் காட்டிக் கொள்வதற்கு முயற்சிகள் செய்தாலும் கூட, அதி-வலது மற்றும் அதி தேசியவாத நிலைப்பாடுகளையே முன்னெடுத்து வருபவராவார். போருக்குப் பிந்தைய ஆஸ்திரியாவை “வரலாறல்லாத கற்பனை”யாக விவரிக்கும் “Marko Germania” சிந்தனைக் குழுவின் ஒரு அங்கத்தவராவார். ஆஸ்திரியாவில் 1930களில் நாஜிகள் தடை செய்யப்பட்ட சமயத்தில் அவர்களின் அடையாளமாக இருந்து வந்திருந்த நீல சோளப்பூவை தனது ஆடையில் தொடர்ந்தும் அவர் அணிந்து வந்தார்.

ஆஸ்திரிய ஜனாதிபதி பிரதானமாக அடையாள அதிகாரங்களையே கொண்டிருப்பார் என்றாலும், அரசாங்கத்தைக் கலைப்பதற்கான அதிகாரத்தை அரசியல்சட்டம் அவருக்கு வழங்கியிருக்கிறது. தனக்கு முன்வந்தவர்களை போலல்லாமல், ஹோஃபர், தனது பிரச்சாரத்தின் சமயத்தில் சமூக ஜனநாயக் கட்சி (SPÖ) மற்றும் பழமைவாத மக்கள் கட்சியின் (ÖVP) இப்போதைய கூட்டணி அரசாங்கத்தை நீக்கி ஒரு பொதுத் தேர்தலைக் கொண்டுவருவதாக மிரட்டி வந்திருந்தார்.

ஹோஃபரும் FPÖ தலைவரான ஹைன்ஸ்-கிறிஸ்தியான் ஸ்றாக உம் தேர்தல் பிரச்சாரத்தில் அகதிகளுக்கு ஏதிராக கிளறி விட்டதோடு ஐரோப்பிய ஒன்றியத்தையும் தாக்கியிருந்தனர். ஹோஃபர், பால்கன்கள் மூலமான அகதிகள் பாதைகளை மூடியதற்காக பல்வேறு வலது-சாரி அரசாங்கங்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு, ஆஸ்திரியாவில் இருக்கும் அகதிகளைத் துரிதமாக சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கு அழைப்பு விடுத்ததுடன், வெளிநாட்டுத் தொழிலாளர்களை சமூக நலஉதவி அமைப்புமுறையில் இருந்து வெளித்தள்ளுவதற்கும் வலியுறுத்தினார்.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு மக்கள் காட்டிய குரோதத்தில் இருந்து ஃவொன் டெர் பெலென் ஆதாயமடைந்தார்; என்றாலும் அவர் அரசியல் ஆதரவையும் கொண்டிருக்கவில்லை. அவரின் தேர்தல் வெற்றியானது எந்த விதத்திலும் அகதிகள் அல்லது உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்களின் ஒரு முடிவைக் குறிக்கவில்லை. ஆஸ்திரியா எந்த பொருளாதாரரீதியான குடியேற்றவாசிகளையும் ஏற்க முடியாது என்று சில நாட்களுக்கு முன்பாகத் தான் அவரே அறிவித்தார்.

ஐரோப்பாவின் ஆளும் உயரடுக்கினரைப் பொறுத்தவரையில் மிக முக்கியமாக, ஃவொன் டெர் பெலென் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை மும்முரமாக ஆதரிப்பவராவார். உண்மையில், ஆஸ்திரிய மற்றும் ஐரோப்பிய வணிக மற்றும் அரசியல் உயரடுக்கின் ஆதரவு அவருக்குக் கிடைக்கக் காரணமே, தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அவர்களது தாக்குதல் இவரின் கீழ் இன்னும் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட முடியும் என்று அவர்கள் கணக்கிட்டது தான்.

இந்தக் காரணத்தினால், FPÖ இன் வளர்ச்சிக்கு இட்டுச் சென்ற பிரச்சினைகளில் எதுவொன்றையும் ஃவொன் டெர் பெலெனை தேர்ந்தெடுத்திருப்பதானது தீர்க்கப் போவதில்லை. கடந்த 70 வருடங்களாக ஜனாதிபதி பதவியில் இருந்து வந்திருந்த சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் மக்கள் கட்சி (ÖVP) வேட்பாளர்கள் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டதன் காரணத்தால், “அரசியல் மையத்தின்” வேட்பாளராக கூறப்பட்டு இவர் மட்டுமே ஹோஃபருக்கு எதிராக போட்டியிட இயலும் நிலையில் விடப்பட்டிருந்தார்.

இரண்டு கட்சிகளுமே சமூகத் தாக்குதல்களைத் திணிப்பதில் அவர்களின் செயல்வரலாறின் காரணத்தால் வெறுக்கப்படுபவை ஆகும். இரண்டுமே ஆழமாய் பிளவுபட்டுள்ளன. ÖVPயின் பெரும்பகுதி ஹோஃபர் தேர்ந்தெடுக்கப்படுவதை ஆதரித்தது. இப்போதைய கூட்டணி அரசாங்கத்தைக் கலைத்து விட்டு புதிய தேர்தல்களை நடத்துவதற்கு ஆதரவாகவும் ÖVP இல் ஒரு வலிமையான கன்னை இருக்கிறது. தவிரவும், கட்சியின் தலைவரான ரைன்ஹோல்ட் மித்தெலெனர் -க்கு ஆதரவு வீழ்ச்சி கண்டு வருகிறது. கட்சியின் பெரும் புள்ளிகளில் பலரும் இழிபெயரெடுத்த வலது-சாரியான வெளியுறவு அமைச்சர் செபஸ்தியான் குர்ஸ் ஐ ஆதரித்துக் கொண்டிருக்கின்றனர்.

சான்சலர் கிறிஸ்தியான் கேர்ன் இன் கீழிருக்கும் SPÖவும் தன் பங்காய் முன்னெப்போதினும் துரிதமாக வலது நோக்கித் திரும்பியிருக்கிறது. FPÖவுடன் சேர்ந்து வேலைசெய்வதற்கும் அதனுடன் ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கும் கூட கட்சி தயாராய் இருப்பதாக ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாய், கட்சி தெளிவாக்கி விட்டிருந்தது. FPÖ இன் “கட்சித் தலைமையுடன் விவாதிப்பதற்கான” களம் இருப்பதை SPÖ காண்கிறது என்று அறிவித்த கேர்ன், “ஆஸ்திரியாவை ஊக்குவிக்க முனைவதற்காக” ஸ்றாகக்கான தனது பாராட்டுதலையும் வெளிப்படுத்தினார்.

FPÖ மற்றும் SPÖ இடையிலான ஒத்துழைப்பின் சாத்தியத்தை ஃவொன் டெர் பெலெனும் வரவேற்றார். மிக முக்கியமாய், அவரது ஜனாதிபதி பதவியின் கீழ் கூட்டணி அரசாங்கம் தொடர்ந்து சிக்கன நடவடிக்கையை தொடரவிருப்பதானது இறுதியில் அதிவலதுகளை வலுப்படுத்தவே சேவைசெய்யும். இயல்பான கணக்கின்படி 2018 அக்டோபரில் வரக் கூடிய புதிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அதற்கு முன்கூட்டியே நடத்தப்படுவதற்கான சாத்தியம் மிக அதிகமாய் இருக்கிறது. ”தேர்தலுக்குப் பிந்தைய நிலையானது தேர்தலுக்கு முந்தைய நிலை” என்ற ஒரு தலைப்பிலான ஒரு கட்டுரையில் வியன்னாவில் இருந்து வரும் ஸ்டாண்டர்ட் பத்திரிகை குறிப்பிட்டது: “கூட்டரசாங்கம் பிழைக்க முடியாது. கூட்டணி அங்கத்தவர்களான SPÖ மற்றும் ÖVP இரண்டு கட்சிகளுமே அத்தனை சாத்தியவிளைவுகளுக்கும் தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன.” 

FPÖ தான் இப்போதைக்கு, சுமார் 30 சதவீத வாக்குகளுடன், தேர்தலின் முன்னிலைக் கட்சியாக இருக்கிறது, இதுவே தேர்தல் ஒன்றின் பின்னர் சான்சலரை நியமனம் செய்யும் நிலைக்கு வரக் கூடும்.