ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The United States of Inequality

அமெரிக்காவின் சமத்துவமின்மை

Andre Damon
20 December 2016

உலகளாவிய சமத்துவமின்மை குறித்து ஆராயும் முன்னணி வல்லுனர்களான பொருளாதார நிபுணர்கள் தோமஸ் பிக்கெட்டி, இமானுவெல் சயாஜ் மற்றும் கப்ரியல் ஜூக்மன் ஆகியோர் 1946 மற்றும் 2016 க்கு இடையே அமெரிக்காவின் வருவாய் சமத்துவமின்மை வளர்ச்சி குறித்து இம்மாத தொடக்கத்தில் ஓர் அதிர்ச்சியூட்டும் ஆய்வை வெளியிட்டனர்.

உலகிலேயே மிகவும் சமநிலையற்ற ஒரு அபிவிருத்தியடைந்த நாடான அமெரிக்காவின் சமத்துவமின்மையை ஆவணப்படுத்துவதில், இந்த பொருளாதார நிபுணர்களது முந்தைய ஆய்வுகள் கணிசமானளவிற்கு அபிவிருத்தி அடைந்தவை தான் என்றாலும், மருத்துவக் கவனிப்பு (Medicare) மற்றும் மருத்துவ சிகிச்சை உதவி (Medicaid) போன்ற சமூக திட்டங்கள், வரிவிதிப்பு ஆகியவற்றின் தாக்கம் மற்றும் மூலதன இலாபங்களில் இருந்து கிடைக்கும் வருவாய் உள்ளடங்கலாக “முழு தேசிய வருமானத்தையும் உள்ளடக்கியதாக" கூறும் முதல் ஆய்வு இதுவேயாகும்.

இதன் முடிவு, வேறெந்த முந்தைய முயற்சிகளைக் காட்டிலும் அமெரிக்காவில் சமூக சமத்துவமின்மையை முழுமையாக எடுத்துக்காட்டுகின்றது. இறுதி தீர்மானங்கள் மலைப்பூட்டுகின்றன, நவீன வரலாற்றில் கடந்த நான்கு தசாப்தங்களின் போக்கில் அங்கே மிக வேகமான மேல்நோக்கிய வருவாய் மறுபகிர்வுகளில் ஒன்று ஏற்பட்டுள்ளதை அது அம்பலப்படுத்துகிறது.  

 

அமெரிக்க மக்கள்தொகையில் அடியிலுள்ள பாதி மக்களுக்கு தேசிய வருவாயில் வரிக்கு முன்னர் கிடைத்த பங்கு, 1980 க்குப் பின்னர் 20 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அண்மித்து அரைவாசியாக குறைந்துள்ளது, அதேவேளையில் இந்த வருவாய் பங்கு உயர்மட்ட ஒரு சதவீதத்தினருக்கு 12 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அண்மித்து இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்பதை அப்பொருளாதார நிபுணர்கள் கண்டனர். “அடிமட்ட 50 சதவீதத்தினரிடம் இருந்து உயர்மட்ட 1 சதவீதத்தினருக்கு தேசிய வருவாயில் 8 புள்ளிகள் மாற்றப்பட்டதுடன், அடிப்படையில் இவ்விரு குழுக்களுக்கான வருவாய் பங்குகளும் மாற்றப்பட்டுள்ளதாக,” அந்த ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

அந்த ஆய்வு, 1946-1980 க்கும் மற்றும் 1980 இல் இருந்து இதுவரைக்கும் இடையிலான ஒரு கூர்மையான மாற்றத்தை ஆவணப்படுத்துகிறது. முதல் காலக்கட்டத்தில், சம்பாதிப்பவர்களில் கீழ்மட்ட 50 சதவீதத்தினரின் வரிக்கு முந்தைய வருவாய்கள் 102 சதவீதம் அதிகரித்து இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்தது, அதேவேளையில் உயர்மட்ட 1 சதவீதத்தினரின் வருவாய் 47 சதவீதமும், உயர்மட்ட 0.001 சதவீதத்தினரின் வருவாய் 57 சதவீதமும் மட்டுமே அதிகரித்தது.

ஆனால் 1980 க்குப் பின்னர், சம்பாதிப்பவர்களில் கீழ்மட்ட 50 சதவீதத்தினரின் வருவாய் (நடப்பு டாலர் மதிப்பில்) ஆண்டுக்கு சுமார் 16,000 டாலராக தேக்கமடைந்துள்ளது, அதேவேளையில் உயர்மட்ட 1 சதவீதத்தினரின் வருவாய் 205 சதவீத அளவிற்கும், உயர்மட்ட 0.001 சதவீதத்தினரின் வருவாய் 636 சதவீத அளவிற்கும் அதிகரித்துள்ளது.

பல்வேறு வரி வருவாய்கள் மற்றும் சமூக திட்டங்களது தாக்கத்தைக் கணக்கிட்ட பின்னர், சம்பாதிப்பவர்களில் அடிமட்ட அரைவாசி பேரின் வருவாய்கள் 1980 களுக்குப் பின்னர் 21 சதவீத அளவிற்கே அதிகரித்திருப்பதை இந்த பொருளாதார நிபுணர்கள் கண்டனர். ஆனால் இந்த அதிகரிப்பில் எதுவுமே செலவு செய்வதற்கான வருவாய்க்குள் செல்லவில்லை என்பதையும் கண்டனர். அதற்கு மாறாக ஏறத்தாழ முழுமையாக Medicare இற்கான அதிகரித்த மருத்துவக் காப்பீட்டு செலவுகளின் விளைவுகளால் இவ்வாறு ஏற்பட்டிருந்தது. இந்த மருத்துவக் கவனிப்புகளானது, அத்தியாவசிய மருத்துவ கவனிப்பு சேவைகளின் விலையை உயர்த்துவதில் மட்டுமே ஈடுபட்ட மருந்து நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தன.

குறிப்பாக 2000இல் இருந்து வருவாய் சமத்துவமின்மையின் அதிகரிப்பில் இருந்த பிரதான காரணி, “மூலதன வருவாய்" அதிகரிப்பு, அதாவது பங்குச்சந்தை அதிகரிப்பாக இருந்துள்ளது. பங்குச்சந்தை குமிழிகள் ஊதிப்பெரிதானதே பிரதான வடிவமாக இருந்துள்ளது, இதன் மூலமாகவே ஆளும் வர்க்கமும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் ஒரு பாரிய செல்வவள பரிமாற்றத்தைச் செய்துள்ளனர்.

பிக்கெட்டி, சயாஜ் மற்றும் ஜூக்மன் அறிக்கையில் உள்ள புள்ளிவிபரங்கள், அமெரிக்க முதலாளித்துவத்தின் கட்டமைப்பிலும் அமெரிக்காவில் வர்க்க உறவுகளிலும் ஏற்பட்டுள்ள வரலாற்று மாற்றங்களை பிரதிபலிக்கிறது. சமூக சமத்துவமின்மையின் பிரமாண்ட அதிகரிப்பானது அமெரிக்க முதலாளித்துவத்தின் சீரழிவுடனும், அதன் உலக பொருளாதார நிலையின் வீழ்ச்சியுடனும் பிணைந்துள்ளது.

அமெரிக்கா அதன் ஆரம்ப நாட்களில் மேற்கத்திய உலகிலேயே சமூகரீதியில் மிகவும் சமத்துவமான பிராந்தியமாக இருந்ததை வரலாற்றாளர்கள் அடிக்கடி குறிப்பிட்டுள்ளனர். 19 ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில் ஏகபோகமயமாக்கல் மற்றும் நிதியியல் மூலதனத்தின் வளர்ச்சியானது, அமெரிக்காவை ஒரு துருவத்தில் "கொள்ளைக்கூட்ட சீமான்களின்" பெருநிலமாகவும் மற்றும் மறுபுறம் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரது வாழ்க்கை நிலைமைகளை 1890 இல் பிரசுரிக்கப்பட்ட Jacob Rii இன் How the Other Half Lives மற்றும் Upton Sinclair இன் The Jungle of 1906 போன்ற படைப்புகளில் வெளிப்படுத்திக்காட்டப்பட்ட நிலைமைகளுக்கு மாற்றியது.

ஆனால் இத்தகைய நிகழ்ச்சிப்போக்குகளோடு தொழிலாளர் இயக்க வளர்ச்சியும் வந்தது. இது பெரிதும் சோசலிஸ்டுகளின் முயற்சி மூலமாக, அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் எண்ணற்ற இன, மத மற்றும் பிராந்திய பிளவுகளைக் கடந்து அவர்களை ஒழுங்கமைப்பதற்காக போராடியது. 1917 ரஷ்ய புரட்சி இத்தகைய போராட்டங்களுக்கு புதிய தூண்டுதலை வழங்கியது, தொழிற்சங்கங்களை உருவாக்குவதற்கு இட்டுச் சென்ற 1930 களின் போர்குணம் மிக்க தொழிலாளர் நடவடிக்கைகளும் அதில் உள்ளடங்கும்.

அமெரிக்க தொழிலாளர்கள் போல்ஷிவிக்குகள் அமைத்த முன்னுதாரணத்தை பின்தொடர்வதற்கான சாத்தியக்கூறால் எச்சரிக்கை அடைந்த அமெரிக்க ஆளும் வர்க்கம், உலகின் மிகப்பெரிய பொருளாதார பலம் மற்றும் அதிநவீன தொழில்துறை பொருளாதாரத்தை அதன் மேற்பார்வையில் கொண்டிருந்த நிலையில், ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் இன் புதிய உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த சமூக சீர்திருத்த வேலைத்திட்டம் ஒன்றை அமைத்தது. சமூக பாதுகாப்பை அறிமுகப்படுத்திய இது, வோல் ஸ்ட்ரீட் இன் படுமோசமான துஷ்பிரயோகங்களுக்குக் கடிவாளமிட்டது.

உலக பொருளாதார உற்பத்தியில் 50 சதவீதத்திற்கும் அதிகமானதைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்கா, இரண்டாம் உலக போரில் இருந்து உலகளாவிய மேலாதிக்க சக்தியாக எழுந்தது. ஆனால் 1960 களின் இறுதிவாக்கில், ஐரோப்பிய மற்றும் ஆசிய பொருளாதாரங்கள் மீள்கட்டமைப்பு ஆனதும், அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார மேலாதிக்கம் வீழ்ச்சி அடையத் தொடங்கியது. 1970 களின் பொருளாதார மந்தநிலையும் பணவீக்கமும் சேர்ந்து ஒரு தொடர்ச்சியான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் உச்சத்தை அடைந்தன.

அதற்கு அமெரிக்க ஆளும் வர்க்கமோ, வர்க்க போர், தொழில்துறைகளை அழித்தல் மற்றும் நிதிமயமாக்கல் கொள்கையில் பயணித்ததன் மூலமாக விடையிறுத்தது. 1979 இல் ஜனாதிபதி ஜிம்மி கார்டரால் பெடரல் ரிசர்வின் தலைவராக பௌல் வோல்கர் (Paul Volcker) நியமிக்கப்பட்டதுடன், அமெரிக்க மத்திய வங்கி ஒரு உற்பத்தி மந்தநிலைக்குள் தள்ளப்பட்டது. 1981 இல் ரொனால்டு ரீகன் பதவிக்கு வந்த பின்னர், அவர் ஒரு முழு அளவிலான சமூக எதிர்புரட்சியைத் தொடங்கினார், PATCO விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் வேலைநிறுத்தத்தை உடைத்ததன் மூலமாகவும் மற்றும் போராட்டக்காரர்களை வேலையிலிருந்து நீக்கியும் மற்றும் தொழிலில் ஈடுபடுவதை தடுப்பதன் மூலமாகவும் இதை ஆரம்பித்திருந்தார். இதேபோன்ற கொள்கைகள் உலகெங்கிலுமான ஆளும் வர்க்கங்களால் பின்தொடரப்பட்டன.

1980 கள் முழுவதிலும் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் ஒவ்வொரு முயற்சியையும் தனிமைப்படுத்தியும் மற்றும் காட்டிக்கொடுத்தும், பெருநிறுவன நிர்வாக மற்றும் அரசின் கட்டமைப்பிற்குள் தங்களைத்தாங்களே இணைத்துக் கொண்டும், இந்த தாக்குதல்களுக்கு ஒத்துழைப்பதில் தொழிற்சங்கங்கள் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன. அந்த தசாப்தத்தின் முடிவில், தொழிற்சங்கள் சகல நடைமுறை நோக்கங்களுக்காகவும், தங்களைத்தாங்களே நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களின் உறுப்புகளாக மாற்றிக் கொண்டன. அவற்றை மேலாளுமை செலுத்திய அதிகாரத்துவ உயரடுக்குகள் அவற்றின் எல்லா முயற்சிகளையும் தொழிலாள வர்க்க போராட்டத்தை நசுக்கவும் மற்றும் அடிபணிய செய்வதற்கும் அர்ப்பணித்தன.

அதற்கடுத்து வந்த ஒவ்வொரு நிர்வாகமும், ஜனநாயக கட்சி ஆகட்டும் மற்றும் குடியரசு கட்சி ஆகட்டும் ஒன்றுபோல, சமூக சமத்துவமின்மையை ஊக்குவிக்கும் கொள்கைகளைப் பின்தொடர்ந்தன, அடுத்தடுத்து கொண்டு வரப்பட்ட நிதியியல் நெறிமுறை தளர்த்தல், பெருநிறுவனங்கள் மற்றும் அதிக வருவாய் ஈட்டுபவர்களுக்கு மீண்டும் மீண்டும் வரிவெட்டுக்கள், சமூக திட்டங்களை வெட்டுதல் மற்றும் வேலையிட பாதுகாப்புகளை நீக்குதல் ஆகியவை அதில் உள்ளடங்கும்.

2008 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர், ஒபாமா நிர்வாகம் இந்த நிகழ்முறைகளைத் தீவிரப்படுத்தியது. வெள்ளை மாளிகை புஷ் நிர்வாகத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கி பிணையேற்புகளைத் தொடர்ந்து விரிவாக்கியது. அது பெடரல் ரிசர்வின் "பணம் அச்சடித்து புழக்கத்தில் விடும்" கொள்கைகள் மூலமாக வோல் ஸ்ட்ரீட் க்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்ச உதவியது, அதேவேளையில் 2009 வாகனத்துறை மறுசீரமைப்பு போல கூலிகளைக் குறைக்க வேலை செய்தது.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்பின் வரவிருக்கும் நிர்வாகத்தின் கீழ், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான இத்தாக்குதல் கூர்மையாக தீவிரமடையும். ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டமை ஏதோ புதியவொன்றை பிரதிநிதித்துவம் செய்கிறது தான். பில்லியனர்கள், தீவிர வலது, வணிக சார்பு சித்தாந்திகள் மற்றும் தளபதிகளை கொண்டு அவர் அவரின் மந்திரிசபையை அமைத்துள்ளார்—இவர்கள் அனைவரும் தொழிலாள வர்க்கத்தை வறுமைப்படுத்த மற்றும் பரந்த மக்கள் எதிர்ப்பை முன்பினும் அதிக வன்முறையாக ஒடுக்குவதற்கு அர்ப்பணித்துள்ளவர்கள்.

ஆனால் ட்ரம்ப் ஏதோ வானத்திலிருந்து விழுந்தவரல்ல. அவர் ஏதோ ஒரு வகையில் பிறழ்ச்சியுமல்ல. மாறாக அவர், அமெரிக்க முதலாளித்துவத்தின் சீரழிவு, முன்னொருபோதும் இல்லாதளவிலான சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி மற்றும் அமெரிக்க ஜனநாயகத்தினது பொறிவின் இழிவார்ந்த விளைபொருள் ஆவார்.

இத்தகைய இதே நிகழ்ச்சிப்போக்குகள் சோசலிசப் புரட்சிக்கான புறநிலை அடித்தளங்களையும் உருவாக்கி உள்ளன. 1990 களின் மத்தியில், அமெரிக்க தொழிலாளர் கழகம் (Workers League) மற்றும் உலகின் ஏனைய இடங்களில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகள், சோசலிச சமத்துவக் கட்சி என்ற பெயரை ஏற்று, கழகங்களில் இருந்து கட்சிகளாக தங்களை மாற்ற தொடங்கிய போது, "முன்னொருபோதும் இல்லாதளவில் செல்வவளத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்களின் ஒரு சிறிய சதவீதத்தினருக்கும் மற்றும் பல்வேறு தரப்பட்ட பொருளாதார நிச்சயமின்மை மற்றும் துன்பத்தில் வாழ்கின்ற உழைக்கும் மக்களுக்கும் இடையே விரிவடைந்து வரும் இடைவெளியின்" ஆழ்ந்த புரட்சிகர முக்கியத்துவத்தை நாம் உணர்ந்திருந்தோம்.

கடந்த இரண்டு தசாப்தங்கள் இந்த ஆய்வு முடிவை உறுதிப்படுத்தி உள்ளன. ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஒழுங்கமைத்து ஐக்கியப்படுத்த, சோசலிச சமத்துவ கட்சியாக உருவெடுக்கும், ஒரு புதிய அரசியல் தலைமையைக் கட்டியெழுப்புவது சமூக சமத்துவமின்மைக்கான போராட்டத்திற்கு அவசியமாகும். முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையானது சமத்துவம், சர்வதேச திட்டமிடல் மற்றும் உற்பத்தி மீதான ஜனநாயக கட்டுப்பாடு—அதாவது சோசலிசத்தின் அடிப்படையிலான ஒரு சமூகத்தைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட வேண்டும்.