ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

A cabinet of generals: Trump appoints John Kelly to lead Department of Homeland Security

 ஜெனரல்களின் ஒரு அமைச்சரவை: உள்நாட்டு பாதுகாப்புத் துறைக்கு தலைமை கொடுக்க ஜோன் கெல்லியை ட்ரம்ப் நியமனம் செய்கிறார்

By Eric London 
8 December 2016

உள்நாட்டு பாதுகாப்புத் துறை (DHS) தலைவராக ஓய்வுபெற்ற மரைன் ஜெனரல் ஜோன் கெல்லியை பரிந்துரைக்க இருப்பதாக ஜனாதிபதியாக தேர்வாகியிருக்கும் டொனால்ட் ட்ரம்ப்பின் இடைமருவல் அணி நேற்று அறிவித்தது. கெல்லி அமைச்சரவையின் உயர் பதவிக்கு நியமிக்கப்படவிருக்கும் மூன்றாவது முன்னாள் ஜெனரல் ஆவார். முன்னதாக பாதுகாப்புத் துறைச் செயலர் பதவிக்கு ஜேம்ஸ் மாட்டிஸும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு மைக்கல் ஃபிளின்னும் பரிந்துரைக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து இப்பரிந்துரை வந்துள்ளது.

உள்வரும் அமைச்சரவையில் முன்கண்டிராத அளவுக்கு இராணுவத்தின் முக்கியத்துவம் இருக்கப் போவதென்பது அமெரிக்க ஆளும் வர்க்கம் வெளிநாடுகளில் போருக்கும் சொந்தநாட்டில் ஒடுக்குமுறைக்கும் தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது என்பதன் அறிகுறியாகும்.

மரைன் மேஜர் ஜெனரல் ஜோன் கெல்லி ஈராக்கில் ஆக்கிரமிப்புப் படை தளபதியாக, 2008. [Photo by Cpl. Lindsay Sayres, Joint Combat Camera Center Iraq]

கெல்லி மரைன் கார்ப்ஸ் (Marine Corps) படையில் 40 வருட அனுபவம் பெற்றவர்; இவரது தொழில்வாழ்க்கையும் ஆளுமையும் ஒரு நிரந்தரப் போரின் காலகட்டத்தில் மிருகத்தனமான மற்றும் மிக பிற்போக்குத்தனமான அமெரிக்க அரசியல் கலாச்சாரத்தின் உருவடிவமாய் இருக்கின்றன. நடந்து கொண்டிருக்கும் போர்கள் குறித்து 2014 இல் இவர் வழங்கிய ஒரு உரையில் பின்வருமாறு கூறியிருந்தார்: “தன்னைத் தானே நியமனம் செய்து கொண்டு கருத்துகூறும் சிலரும் மற்றும் வாயலம்பும் வகுப்பினரும்  ’போர் களைப்பு’ மிக்கவர்களாக ஆகிவருகிறார்கள் என்பதாலோ, அவர்கள் ஈராக் அல்லது ஆப்கானிஸ்தானில் இருந்து நாம் வெளியேற விரும்புகிறார்கள் என்பதாலோ, நமது வாழ்க்கைமுறைக்கு எதிரான இந்தப் போர் முடிந்து விட்டது என்று நீங்கள் கருதுவீர்களானால், நீங்கள் நினைப்பது தவறு. இந்த எதிரி நம்மை அழிப்பதற்கு அர்ப்பணிப்பு கொண்டவன். அவன் பல தலைமுறைகளுக்கு நமக்கு எதிராகப் போரிடுவான், அத்துடன் 9/11 முதல் கண்டிருப்பது போல இந்த மோதல் பல்வேறு கட்டங்களுக்கு நகர்ந்து செல்லும்.”

உள்நாட்டு பாதுகாப்புத் துறை என்பது அரசு வன்முறை மற்றும் ஒடுக்குமுறைக்கான ஒரு பாரிய அதிகாரத்துவம் ஆகும். எல்லைக் காவலர்கள், போலிஸ், துப்பறியும் அதிகாரிகள், விசாரணை அதிகாரிகள், சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பும் நடைமுறையின் நிர்வாகிகள், விசாரணை வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் என ஒவ்வொரு ஆண்டும் நூறாயிரக்கணக்கில் ஆவணமில்லாத தொழிலாளர்களைப் பிடித்து, அவர்களது ஆவணநடைமுறைகளை முன்னெடுத்து சொந்தநாட்டிற்கு திருப்பியனுப்புவதில் ஈடுபடுகின்ற ஒரு படையைக் கொண்ட 240,000 ஊழியர்களை அதன் புதிய இயக்குநர் வழிநடத்தவிருக்கிறார்.

செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிந்தைய காலத்தில் உருவாக்கப்பட்டிருந்த உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ஒரு போலிஸ்- அரசுக்கான வளர்ப்பிடமாக சேவை செய்திருக்கிறது. வடக்கு கட்டளையகம் (NORTHCOM) ஸ்தாபிக்கப்படுவதற்கு ஒரு வருடம் முன்னதாக இது ஸ்தாபிக்கப்பட்டிருந்தது; இந்த இரண்டு இணை ஸ்தாபனங்களும் அமெரிக்காவிற்குள்ளாக இராணுவப் படைகளையும் போலிஸையும் இராணுவ நடவடிக்கைகளுக்காய் தயாரிப்பு செய்வதை நோக்கமாய் கொண்டிருக்கின்றன.

கெல்லி, உள்நாட்டு பாதுகாப்புத் துறை தலைமையில் அமரவிருக்கும் முதல் இராணுவ ஜெனரல் ஆக இருப்பார். தென் அமெரிக்காவில் அமெரிக்க இராணுவப் படைகளுக்குத் தலைமை கொடுத்த ஒரு நெடிய வரலாறைக் கொண்டு, அவர், “எல்லைப் பாதுகாப்பு” உடன் மேற்கு அரைக்கோளம் எங்கிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விரிந்த பங்கேற்பை இணைக்க இருக்கிறார்.

கெல்லியின் உரைகள், “வாயலம்பும் வகுப்புகள்” மற்றும் “அமெரிக்காவின் நோக்கங்கள் மீது சந்தேகம் கொள்ளும் அனைவரின்” மீதுமான தாக்குதல்களைக் கொண்டு நிரம்பியிருக்கின்றன. வாஷிங்டனின் “அதிகாரத்துவ”த்திற்கும் “அவர்களும் அவர்களது குடும்பங்களும் இரவில் நிம்மதியாகவும் பத்திரமாகவும் உறங்குவதற்கு என்ன விலை கொடுக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளாத” “நுகர்வுவாத” இளைஞர்களுக்கும் எதிராக அவர் ஆவேசம் கொள்கிறார்.

கெல்லி சித்திரவதையை பகிரங்கமாக பாதுகாத்துப் பேசுபவர் ஆவார், கியூபாவில் குவோண்டனாமோ விரிகுடா சிறையை மூடுவதற்கு விடுக்கப்பட்ட அழைப்புகளை ஆவேசமாக எதிர்த்தார். “குவாண்டானாமோவில் மனிதத்தன்மையுடன் நடத்தப்படாதவர்களும் அல்லது தங்களது மனித உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியாதவர்களும் என்றால் அங்கிருக்கும் காவலர்கள் தான்” என்றும் சிறைக்கைதிகளுக்கு “நம் நாட்டில் மூத்த வீரர்களுக்கு இருக்கக் கூடியதை விடவும் மேம்பட்ட ஆரோக்கியப் பராமரிப்பு இருக்கிறது” என்றும் 2015 இல் அமெரிக்க செனட்டில் அவர் தெரிவித்தார்.

ஈராக்கில் 1 மில்லியன் அப்பாவி மக்கள் வரை கொல்லப்பட்ட படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பின் சமயத்தில் கெல்லி அத்துருப்புகளுக்குத் தளபதியாக இருந்தார். புராதனப் பெருமைமிக்க பாக்தாத் நகரின் மீதான மிருகத்தனமான தாக்குதலுக்கு தலைமை கொடுப்பதில் உதவியிருந்த அவர், ஒரு செய்தியாளரிடம் கூறினார்: “பாக்தாத் ** ஆக இல்லை.”

2012 இல் ஒபாமா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, கெல்லி அமெரிக்க தென்கட்டளையகத்திற்கு (SOUTHCOM – மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கரிபீயன் ஆகிய பிராந்தியங்களுக்குப் பொறுப்பான இராணுவ அமைப்பு) தளபதியாக தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்மெட்லி பட்லரின் வார்த்தைகளைக் கொண்டு சொல்வதென்றால், கெல்லி, “பெரு வணிகம், வோல் ஸ்டீரிட் மற்றும் வங்கிகளுக்கான ஒரு உயர் வகுப்பு மெய்க்காவலர்”. 2015 இல் செனட்டுக்கு அளித்த சாட்சியத்தில், இராணுவத்திற்கு நிதி ஒதுக்கீட்டைக் குறைத்ததற்காக ஒபாமா நிர்வாகத்தை அவர் விமர்சனம் செய்தார்; எல்லைப் பிராந்தியத்தில் “அமெரிக்க இராணுவ ஈடுபடுத்தத்தின் பைலட் வெளிச்சத்தை” SOUTHCOM ”மிகச் சிரமப்பட்டே” பராமரிக்க முடிந்ததாக செனட் சாட்சியத்தில் அவர் குறிப்பிட்டார்.

மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவில் ஆயுத விற்பனைகளுக்கு நியாய உழைப்பு மற்றும் மனித உரிமைகள் தகுதிநிர்ணயங்களை அமெரிக்கா விட்டுத்தள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்த அவர், “உள்நாட்டுப் பாதுகாப்பு என்பது நமது தென்மேற்கு எல்லையின் “ஓரங்குல கோட்டில்” இருந்து தொடங்குவதில்லை, மாறாக அச்சுறுத்தல்களை நமது கரைகளுக்கு அப்பால் தள்ளிப் பராமரிப்பதற்காய், அரைக்கோளம் முழுமையிலும் முன்நீண்டு செல்வதாகும்” என்று விளக்கினார்.

“தனியார் துறை பொருளாதார இயக்கவியல்” தான் “நமது தேசிய வலிமையின் மிகப்பெரும் அம்சம்” என்று புகழ்ந்த அவர், “ஒரு ஸ்திரமான, வளமான மற்றும் பாதுகாப்பான மத்திய அமெரிக்கா என்ற நமது ஜனாதிபதியின் இலட்சியத்தை முன்னெடுப்பதில் அமெரிக்க வணிகங்கள் உதவும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

”எல்லைப் பாதுகாப்பு விடயத்தில் போதுமான அளவுக்கு கடுமையில்லாதவராக சில பழமைவாதிகளால் பார்க்கப்பட்ட….” குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மைக்கல் மெக்காலை விட்டு விட்டு கெல்லி தேர்ந்தெடுக்கப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவிக்கிறது. ஃபாக்ஸ்நியூஸ்.காம் இல் சென்ற வாரத்தில் தலையங்கப் பக்கத்தில் வந்த ஒரு பத்தியில் மெக்கால் கூறினார்: “நாங்கள் [எல்லை] சுவர் எழுப்பவிருக்கிறோம். எடுக்கும் காலம்… நாங்கள் ஒரு வரலாற்று முக்கியத்துவமான, பல-அடுக்கு பாதுகாப்பு முறை குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம்.”

இதுதான் “எல்லைப் பாதுகாப்பு விடயத்தில் போதுமான கடுமை இல்லாத”தற்காக ஒதுக்கப்பட்டிருந்த தகுதிதாரரின் வேலைத்திட்டமாக இருந்தது என்பது வரவிருக்கும் நிர்வாகத்தினால் முன்வைக்கப்படும் உடனடி அபாயத்தை எடுத்துக்காட்டுகிறது.

கெல்லி, மாட்டிஸ், மற்றும் ஃபிளின் தவிர, வெளியுறவுச் செயலர் பதவிக்கும் ஓய்வுபெற்ற ஜெனரலான டேவிட் பெட்ரேயஸை ட்ரம்ப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. அரசாங்கத்தில் இத்தகைய மனிதர்கள் செல்வாக்கு பெறுவது என்பது அரசில் இராணுவ-உளவு எந்திரம் முன்னினும் அதிக செல்வாக்கான பாத்திரத்தை செலுத்தி வந்ததான ஒரு நீண்டகால நிகழ்முறையின் விளைபொருளாகும். ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டின் கீழுமான 25 ஆண்டுகால முடிவில்லா போரின் பின்னர், அமெரிக்கா சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்களில் ஒரு இராணுவ ஆதிக்கம் கொண்ட ஆட்சியின் இயல்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

ட்ரம்ப்பின் அமைச்சரவையின் முன்னாள் ஜெனரல்கள், ஒவ்வொரு அமைச்சர் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பெருநிறுவன நிர்வாகிகள் மற்றும் அதிவலது-சாரி மனிதர்களுடன் இணையவிருக்கின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமைக்கான தலைவராக ஒக்லஹாமா அட்டர்னி ஜெனரலான ஸ்கொட் ப்ரூட்டை ட்ரம்ப் தேர்வு செய்யவிருப்பதாக திங்களன்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எண்ணெய் துறை நிறுவனங்களின் ஒரு நெருங்கிய கூட்டாளியும் காலநிலை மாற்ற விஞ்ஞானத்தை மறுப்பவருமான ப்ரூட் கிட்டத்தட்ட அத்தனை சுற்றுசூழல் நெறிமுறைகளின் மீதும் போரை அறிவித்திருக்கிறார்.

வரவிருக்கும் நிர்வாகத்தின் அதிதீவிர தன்மையானது, அதனால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் அபாயங்களைக் குறைத்துக் காட்டுவதற்கும் மூடிமறைப்பதற்கும் ஜனநாயகக் கட்சியும் ஒபாமா நிர்வாகமும் மேற்கொள்ளும் முயற்சிகளை இன்னும் வெட்டவெளிச்சமாக காட்டியிருக்கிறது.

ட்ரம்ப்பின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை நியமனம் குறித்து, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தலைவரான நான்சி பெலோசி தெரிவித்தார்: “ஜெனரல் கெல்லி உண்மைகளுக்காகவும், குடும்பங்களுக்காகவும் மற்றும் அரசியல் சட்டத்திற்காகவும் நிற்க விருப்பத்துடன் இருப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்.”

2011 முதல் 2013 வரை ஒபாமாவின் பாதுகாப்புச் செயலராக இருந்த லியோன் பனெட்டா கூறுகையில், கெல்லி ஒரு “ஒப்புவமையற்ற தெரிவு” என்று கூறினார்; நியூ யோர்க் டைம்ஸ் அவரை “வெளிப்படையாகப் பேசக் கூடியவர் என்றும் இராணுவத்தினரிடம் பிரபலமானவர்” என்றும் அழைத்தது.

ஈராக் போரில் தனது சொந்த மகனையும் இழந்த கெல்லிக்கு அனுதாபத்தைக் கட்டமைக்க பெருநிறுவன ஊடகங்கள் முனைந்தன. கெல்லி “தனது சொந்த மகன் சண்டையில் கொல்லப்பட்டதற்குப் பின்னரும் கூட தொடர்ந்தும் தனது நாட்டுக்காக சேவை செய்த ஒரு சிந்தனைமிக்க மனிதராக பென்டகனுக்குள் அறியப்பட்டவர்” என்று வாஷிங்டன் போஸ்ட் எழுதியது. தன் தந்தை தொடக்க உதவிய ஒரு போரில் சண்டையிட்டுத் தான் அந்த இளைஞர் இறந்திருந்தார் என்ற உண்மை குறித்து போஸ்ட் எந்தக் கருத்தும் கூறவில்லை.