ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump threatens to overturn One China policy

ட்ரம்ப் ஒரே சீனா கொள்கையைக் கைவிட அச்சுறுத்துகிறார்

By Peter Symonds
12 December 2016

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் சீனாவுடனான அவரது போர் வசனங்களை இன்னும் உரத்த குரலில் வெளிப்படுத்தினார். 40 ஆண்டுகளுக்கும் அதிக காலமாக அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான இராஜாங்க உறவுகளுக்கு அடித்தளமாக இருந்துள்ள “ஒரே சீனா" கொள்கைக்கு அவர் கட்டுப்பட்டிருப்பதாக உணரவில்லையென அறிவித்தார். அவர் கருத்துக்கள், 1979 க்குப் பின்னர் அமெரிக்க மற்றும் தாய்வானிய தலைவர்களுக்கு இடையிலான முதல் நேரடி தொடர்பாக, டிசம்பர் 2 அன்று தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் உடனான தொலைபேசி கலந்துரையாடலைத் தொடர்ந்து வந்துள்ளது.

சீன அரசாங்கம் ஏனைய பிரச்சினைகளில் விட்டுக்கொடுத்தால் மட்டுமே, சீனா முழுமைக்கும் ஒரே சட்டபூர்வ அரசாங்கமாக பெய்ஜிங்கை மட்டுமே அங்கீகரிக்கும் ஒரே சீனா கொள்கையை அவர் அனுசரிக்க முடியும் என்பதை Fox News இல் பேசுகையில் ட்ரம்ப் தெளிவுபடுத்தினார். “வர்த்தகம் உட்பட ஏனைய விடயங்களில் செய்ய வேண்டியதைக் குறித்து சீனாவுடன் நாம் ஒரு உடன்பாட்டிற்கு வந்தால் ஒழிய,” “நாம் ஏன் ஒரே சீனா கொள்கையைக் கொண்டிருக்க வேண்டுமென்பது எனக்கு தெரியவில்லை,” என்றவர் அறிவித்தார்.

சீனா மீதான உறுதியான கோரிக்கைகளில் என்ன இருக்கின்றன என்பதை அவர் வலியுறுத்தினார். “பாருங்கள், நான் கூறுவது என்னவென்றால்” “நாணய மதிப்பிறக்கத்தால்; நாம் அவர்கள் மீது வரி விதிக்காத போதும் எல்லைகளில் நம் மீதான அதிக வரிவிதிப்பால்; தென்சீனக் கடலின் நடுவில் ஒரு பாரிய படையரணைக் கட்டமைத்து வருவதால், இதை அவர்கள் செய்திருக்கக் கூடாது; வெளிப்படையாக கூறுவதானால், வட கொரியா விவகாரத்தில் நமக்கு உதவாமல் இருப்பதற்காக என சீனாவால் நாம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்,” என்றவர் தெரிவித்தார்.

பெய்ஜிங் பிரதான பொருளாதார மற்றும் வணிக விட்டுக்கொடுப்புகளை வழங்காவிடில் மற்றும் தென் சீனக் கடலில் அதன் நில மீழ்உரிமை கோரலை முடிவுக்கு கொண்டு வராவிடில் மற்றும் அதன் கூட்டாளி வட கொரியா மீது அதை முடக்கும் விதத்தில் பொருளாதார தடைகளைத் திணிக்காவிடில், அமெரிக்க-சீன இராஜாங்க ஊறவுகளின் அடித்தளத்தை கிழித்தெறிவதென்ற ட்ரம்பின் கொந்தளிப்பு ஒரு மூர்க்கமான அச்சுறுத்தலாகும். சீனாவை ஒரு செலாவணி மோசடியாளராக முத்திரை குத்தியது மற்றும் சீன பண்டங்கள் மீது 45 சதவீத வரிவிதிப்பது உட்பட தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் ஏற்கனவே வர்த்தக போர் நடவடிக்கைகளை அச்சுறுத்தி உள்ளார்.

1972 இல் ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன் மற்றும் மாவோ சே துங் ஆல் முத்திரையிடப்பட்ட சீனவுடனான அமெரிக்க நல்லிணக்கம், ஷாங்காய் மாநாட்டில் ஒரே சீனா கோட்பாட்டை உள்ளடக்கி இருந்தது. 1979 இல், இரண்டாம் மாநாடு இராஜாங்க உறவுகளை ஸ்தாபிப்பதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தியது. அமெரிக்கா தாய்வான் உடனான அதன் இராஜாங்க அங்கீகரிப்பை நிறுத்தி கொண்டு, அத்தீவிலிருந்து துருப்புகளைத் திரும்ப பெற்ற அதேவேளையில், தாய்வானுடனான உறவுகள் சட்டம் என்பதன் கீழ் சீனாவுடன் அதன் எந்தவிதமான பலவந்தமான மறுஐக்கியத்தையும் எதிர்த்ததுடன், தாய்வானுக்கு தொடர்ந்து ஆயுதங்களையும் விற்பனை செய்து வந்தது.

அமெரிக்க-சீன உறவுகள் மீது ஒரு கேள்விக்குறி இட்டுள்ளதன் மூலம், ட்ரம்ப் ஆசியாவிலும் மற்றும் உலகெங்கிலும் அதிகரித்துவரும் ஸ்திரமற்றத்தன்மையை பொறுப்பற்ற விதத்தில் இன்னும் அதிகரிக்கிறார். பல நாடுகளின் சீனாவுடனான இராஜாங்க உறவுகளுக்கு இந்த ஒரே சீனா கொள்கையே அடித்தளமாகும். தாய்வான் ஜனாதிபதி உடனான ட்ரம்பின் தொலைபேசி உரையாடலால் எடுத்துக்காட்டப்பட்டதைப் போல, தாய்வான் உடனான அமெரிக்க உறவுகளை எந்தவிதத்திலும் அதிகரிப்பதானது, சீனாவுடன் துரிதமாக ஒரு மோதலுக்கு இட்டுச் செல்லும். உத்தியோகபூர்வ சுதந்திரம் பிரகடனம் செய்வதற்காக ஒரு பிரிந்து செல்ல விரும்பும் பிரதேசமாக தாய்வானை சீனா கருதுகின்ற நிலையில், தாய்வானின் எந்தவொரு முயற்சிக்கும் அது இராணுவரீதியில் விடையிறுக்கும் என்பதை பெய்ஜிங் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி சாய் உடனான அவரது தொலைபேசி உரையாடல் பல வாரங்களுக்கு முன்னரே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது என்பதை Fox News இல் கூறிய அவரது கருத்துக்களில் மறுத்துரைத்த ட்ரம்ப், அது அவரது தேர்தல் வெற்றி குறித்து அவரை வாழ்த்துவதற்கான "ஒரு மிகச் சிறிய உரையாடல்" என்று தெரிவித்தார். “வேறொரு நாடு நான் பேசக் கூடாதென ஏன் கூறுகிறது?” என்றவர் கூறினார். “நேர்மையாக கூறுவதானால், அதை ஏற்காமல் இருந்திருந்தால் உண்மையில் அது மிகவும் அவமதிப்பதாக இருந்திருக்கும்,” என்றார்.

ட்ரம்பின் வாதங்கள் முற்றிலும் அர்த்தமற்றவை. நியூ யோர்க் டைம்ஸ் செய்தியின்படி, தாய்வான் அரசாங்கத்திற்கான இடைத்தரகராக செயல்பட்டு வந்த குடியரசு கட்சியின் முன்னாள் செனட்டர் பாப் டோல், தாய்வானிய அதிகாரிகள் மற்றும் ட்ரம்ப் பணியாளர்களுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்த பல மாதங்களாக திரைக்குப் பின்னால் வேலை செய்திருந்தார். தாய்வானுக்கான அமெரிக்க பிரதிநிதிகள் குழு ஒன்றுக்கு ட்ரம்பின் பண உதவிகள் மற்றும் ஜூலையில் கிளீவ்லாந்தில் நடந்த குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டுக்கு ஒரு தாய்வானிய பிரதிநிதிகள் குழுவை ஏற்பாடு செய்தமை ஆகியவையும் இதில் உள்ளடங்கும்.

அனைத்திற்கும் மேலாக, அவரது தலைமை பணியாளர் ரியன்ஸ் பிரைபஸ் போன்ற தாய்வானுடன் தொடர்பு வைத்துள்ள பல பிரமுகர்கள் ட்ரம்பின் பதவி நியமன தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். பதவி நியமன தேர்வுக்குழுவின் ஓர் அங்கத்தவரான எட்வார்ட் பியூல்னர் அந்த தொலைபேசி உரையாடலை ஏற்படுத்தியதில் முக்கிய பாத்திரம் வகித்ததாக சாய் உடனான ட்ரம்பின் உரையாடலுக்குப் பின்னர் தாய்வானின் உத்தியோகபூர்வ மத்திய செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. துல்லியமாக அது எவ்விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் சரி, அந்த தொலைபேசி உரையாடல் முன்கூட்டியே, பல மாதங்கள் இல்லையென்றாலும், பல வாரங்களாக ஒழுங்கு செய்யப்பட்டு, வெறும் வாழ்த்துக்கள் என்பதற்கும் அதிகமான விடயங்கள் அதில் சம்பந்தப்பட்டிருந்தன.

மிக முக்கியமாக ட்ரம்பை வேட்பாளராக்கிய குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு, அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனால் தாய்வானுக்கு வழங்கப்பட்ட ஆறு உத்தரவாதங்கள் என்று அறியப்படுவதை உள்ளடக்கியதன் மூலம் அக்கட்சியின் உத்தியோகபூர்வ செயல்திட்டத்தையும் மாற்றி அமைத்திருந்தது. தாய்வானுக்கு அமெரிக்க ஆயுத தளவாடங்களை காலவரையறையற்று விற்கலாம் என்பதும் அதில் உள்ளடங்கும்.  

ட்ரம்பின் மற்றொரு வெளியுறவு கொள்கை ஆலோசகரும் பதவி நியமன தேர்வுக்குழுவில் ஒருவருமான பீட்டர் நவார்ரோ, ஜூலையில் National Interest இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் சீனா மற்றும் தாய்வானுடனான அமெரிக்க உறவுகளில் அடிப்படை மாற்றத்திற்கான கட்டமைப்பை அமைத்தார். “அமெரிக்கா தாய்வானை புறந்தள்ள முடியாது,” என்று தலைப்பிட்டு, நவார்ரோ எழுதுகையில், "ஒருபோதும் 'ஒரே சீனா, இரண்டு அமைப்புமுறை' கொள்கையை ஏற்க வேண்டாம்—'ஒரே சீனா' கொள்கையை மீண்டும் குறிப்பிடவே கூட வேண்டாம்,” என்றார். [அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது]

“தாய்வானை ஒரு சுதந்திரமான அமெரிக்க-சார்பு கூட்டாளியாக பேணுவது அதிகரித்தளவில் இராணுவவாத சீனாவின் வளர்ச்சிக்கு எதிராக மூலோபாயரீதியில் சமநிலை செய்வதற்கு முற்றிலும் அத்தியாவசியமாகும்,” என்று நவார்ரோ அறிவித்தார். யதார்த்தத்தில், அமெரிக்க மேலாதிக்கத்தை பேணுவதற்காக ஒபாமா நிர்வாகம் தான் அதன் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" பாகமாக, ஆசிய-பசிபிக்கில் பாரியளவில் இராணுவ கட்டமைப்பை செய்து, தென் சீனக் கடல் போன்ற வெடிப்புப்புள்ளிகளில் சீனாவுடன் பதட்டங்களைத் தூண்டியது.

அந்த "முன்னெடுப்பை" போதுமானளவிற்கு ஆக்ரோஷமாக பின்தொடரவில்லை என்பதற்காக பராக் ஒபாமாவை விமர்சிக்கும் நவார்ரோ, ஆசியாவில் அமெரிக்காவின் கடல்வழி மற்றும் வான்வழி பலத்தைக் குறைக்க சீனா இப்போது பயன்படுத்தி வரும் "அதே மாதிரியான 'பிராந்தியத்திற்கு உள்நுழைவதை அணுக முடியாது தடுக்கும்' தகைமைகள்" உட்பட அதன் பாதுகாப்பு தகைமைகளை அதிகரிப்பதற்காக தாய்வானுக்கு கூடுதலான இராணுவ உதவிகளுக்கு அழைப்புவிடுத்தார். சீன கடற்படை மற்றும் கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்துவதற்காக அதிநவீன டீசல் மின்சார நீர்மூழ்கிக்கப்பல் படையை அபிவிருத்தி செய்வதற்கும் தாய்வானுக்கு உதவுமாறு அவர் ஆலோசனை வழங்கினார்.

ட்ரம்பின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு சீன அரசாங்கத்தின் விடையிறுப்பு ஒப்பீட்டளவில் குறைந்த தொனியில் உள்ளது. ஆனாலும், கடந்த வாரம் China Daily இல் வெளியான ஒரு தலையங்கம் குழப்பத்திற்கிடமற்ற வார்த்தைகளில், ஒரே சீனா கொள்கை மீதோ அல்லது தாய்வான் குறித்தோ பெய்ஜிங் பேரம் செய்யாது என்று குறிப்பிட்டது.

“வர்த்தக உடன்பாட்டை எட்டுவதில் ட்ரம்ப் கைதேர்ந்த ஒரு சாமர்த்தியமான வியாபாரியாக இருக்கலாம். குறைவானதற்கு உடன்படுவதை விட ஒரு கடுமையான பகிரங்க பேரம்பேசலை செய்ய, அவர் அவரது வணிக கையேட்டில் இருந்து ஒரு பக்கத்தை எடுத்திருக்கலாம். ஆனால் சீனாவின் முக்கிய தேசிய நலன்கள் பட்டியலில் தாய்வான் முதலிடத்தில் இருக்கிறது, அதில் பேரம்பேச முடியாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,” என்றது குறிப்பிட்டது.

“பேரம்பேச முடியாததை பேரம் பேசுவதற்குரியதாக நம்ப செய்வதற்காக அவரின் ஆலோசகர்களால் என்ன காரணத்திற்காக அவர் தவறாக வழிநடத்தப்பட்டிருந்தாலும், தாய்வானைப் பொறுத்த வரையில் ஒரே சீனா கோட்பாடு விடயத்தில், விளைவுகள் கடுமையாக இருக்கும்,” என்றது குறிப்பிட்டது.

தசாப்தங்களாக இருந்து வரும் இராஜாங்க வழிவகைகளை கைவிடும் விதத்தில் மற்றும் அவ்விரு அணுஆயுத சக்திகளுக்கு இடையே போரை தூண்டக்கூடிய பெய்ஜிங் உடனான பொறுப்பற்ற ஒரு மோதல் அபாயத்தை எடுக்கும் வகையில், அவர் சீனாவை நோக்கி ஒரு ஆத்திரமூட்டும் நிலைப்பாட்டை ஏற்க விரும்புகிறார் என்பதையே, அவர் பதவி ஏற்பதற்கு முன்னரே ட்ரம்ப் எடுத்து காட்டிக் கொண்டிருக்கிறார்.