ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Turkey, Russia, Iran sign deal on Syria after shooting of Russian ambassador

ரஷ்ய தூதரக அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் துருக்கி, ரஷ்யா, ஈரான் சிரியா மீதாக ஒப்பந்தம் கையெழுத்து

By HalilCelik and Alex Lantier
21 December 2016

நேற்று ரஷ்ய துருக்கி மற்றும் ஈரானிய உயர் அதிகாரிகள் மாஸ்கோவில் கூடி சிரியாவில்  அமெரிக்காவால் தூண்டப்படும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் பிரகடனத்தில் கையெழுத்திட்டனர். அமெரிக்கா ஆதரிக்கும் இஸ்லாமிய போராளிகளிடமிருந்து முக்கிய நகரமான அலெப்போ நகரை ரஷ்ய ஆதரவு சிரிய படையினர் கைப்பற்றிய பின்னர் வெளிவந்த, இந்த உடன்பாடானது துருக்கிக்கான ரஷ்ய தூதர் அன்டிரே கார்லோவ் திங்கள் அன்று படுகொலை செய்யப்பட்டிருப்பினும் மூன்று நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் முன்னேறுவதற்கான நகர்வு என்பதை காட்டுகிறது.

“இன்று, சிரிய நெருக்கடியை தீர்ப்பதை நோக்கிய உடனடி நடவடிக்கைகள் மீதான மாஸ்கோ பிரகடனத்தின் உள்ளடக்கம் தொடர்பாக வல்லுநர்கள் வேலை செய்கின்றனர். அது ஒரு முற்றிலும் மிக அவசியமான ஆவணம்” என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு தனக்கு நிகரான பொறுப்பிலுள்ள ஈரானிய அதிகாரி கொஸெயின் டெக்கான் உடனான ஒரு சந்திப்பின்போது குறிப்பிட்டார்.

ஷோய்கு சிரியாவில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய முன்முயற்சிகளை நிராகரித்து, “அமெரிக்காவாலோ அல்லது அவர்களின் பங்காளர்களாலோ எடுக்கப்படும் கூட்டு முயற்சிகள் மீது உடன்படுவதற்கான முயற்சிகள் ஒழிந்துபோயின. …. அவற்றுள் ஒன்று கூட களத்திலுள்ள நிலைமைகளின் மீது செல்வாக்கு செலுத்த முடியவில்லை” என்று அறிவித்தார்.

யுத்தத்தின் ஆரம்ப வருடங்களில் அமெரிக்க ஆதரவு குழுப் படைகளுக்காக துருக்கி அளித்த ஆதரவிலிருந்து ஒரு முற்றுமுழுதான திருப்பமெடுத்து, இம் முன்முயற்சியானது துருக்கியிலிருந்து வந்த அதிகாரிகளால் புகழப்பட்டன. “இப்பொழுது நாம் போராளிகளிடமிருந்து கிழக்கு அலெப்போவை விடுவிப்பதற்கு, அலெப்போவிலிருந்து எதிர்த்தரப்பு குடும்பங்களை வெளியேற்றுதற்கு ஒரு மிகப் பெரிய வெற்றிகரமான நடவடிக்கையை அவதானித்துக் கொண்டிருக்கிறோம்,” என்று துருக்கி தேசிய பாதுகாப்பு அமைச்சர் விக்ரி இஸிக் கூறினார்.

ரஷ்ய மற்றும் ஈரானிய சமநிலை அந்தஸ்திலுள்ள அதிகாரிகளான சேர்ஜி லாவ்ரோவ், ஜாவித் ஷாரிவ் உடனான சந்திப்பில் துருக்கிய வெளியுறவு அமைச்சர் மெவ்லூட் காவுசோக்லு, ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் ஆகியவற்றிகிடையிலான உறவு அலெப்போவில் “உறுதியான வெற்றியைக் கொண்டு வந்திருந்தது” எனக் கூறினார். “அது சிரியாவின் ஏனைய பகுதிகளுக்கும் பரவும்” என தான் நம்புவதாகக் குறிப்பிட்டார்.

அலெப்போவிலிருந்து இஸ்லாமிய எதிர்ப்பாளர்களை வெளியேற்றல் மற்றும் மாஸ்கோ, அங்காரா மற்றும் தெஹ்ரானுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முன்னேற்றமானது, வாஷிங்டனுக்கும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளுக்கும் ஏற்பட்ட ஒரு பெரிய பின்னடைவினைக் குறிக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளாக அமெரிக்க ஏகாதிபத்தியம் சிரிய ஜனாதிபதி பஷார்-அல்-அசாத்தை கவிழ்ப்பதற்கு முயற்சித்தது, இம் மூலோபாயம் பின்னர் சிரியாவில் குர்திஸ் தேசியவாத படைகள் உள்பட்டதற்கு ஆதரவுதர நீட்டிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களில் ஒரு புரட்சியாக விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில், அது பொறிந்து போனது, ஏனெனில் அமெரிக்க ஆதரவு படைகளுக்கு எவ்வித உண்மையான மக்கள் ஆதரவும் இல்லை.

துருக்கி அமெரிக்காவின் நேட்டோ கூட்டாளியாக இருந்தாலும், அங்காரா அலெப்போவில் சிரிய ஆட்சி, ரஷ்யா மற்றும் ஈரானுக்கு கிடைத்த வெற்றிக்கு பதில் கொடுத்தது மற்றும் ரஷ்யாவுடன் என்றுமில்லா வகையில் நெருங்கிய உறவுகளை அபிவிருத்தி செய்தது. கார்லோவ் படுகொலை பற்றிய துருக்கிய-ரஷ்ய கூட்டுப் புலன்விசாரணையை தொடக்கிவைத்தபோது, துருக்கிய ஜனாதிபதி ரேஷிப் தயீப் எர்டோகான் “துருக்கி-ரஷ்ய உறவுகளுக்கு எவரும் தீங்கு விளைவிக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.

பெயர்குறிப்பிட விரும்பா துருக்கிய அதிகாரி ஊடகத்திடம், அமெரிக்காவை அடித்தளமாக கொண்ட புலம்பெயர்ந்து வாழும் மதகுரு பெத்துல்லா கூலன் இயக்கமே கார்லோவ் படுகொலைக்குப் பின்னால் உள்ளதாக மாஸ்கோவும் அங்காராவும் “அறியும்” என்றார்.

இது அமெரிக்க அரசு செயலர் ஜோன் கெர்ரியிடமிருந்து ஒரு எதிர்ப்பைக் கொண்டுவந்தது, அவர் நேற்று நடந்த இந்த சொல்லொணாப் படுகொலைக்கு குறிப்பால் உணர்த்தியோ அல்லது வேறு வகையிலோ அமெரிக்க தொடர்புள்ளதாக அல்லது ஆதரவு தருவதாக துருக்கியின் வாய்வீச்சு வருவது, திரு கூலன் அமெரிக்காவில் இங்கு இருப்பதனால் ஆகும்” என்று விமர்சித்தார்.

சிரியாவில் நேட்டோ படைகள் பின்னடைவைச் சந்தித்த பின்னர், அமெரிக்க நலன்களுக்கு நேட்டோ கூட்டு சேவை செய்கிறதா என வெளிப்படையாய் கேள்வி எழுப்பிய டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட பின்னர், இந்நிகழ்வுகள் உலக அரசியலில் ஆழமான ஸ்திரமின்மையை மற்றும் உலகப் போர் தோன்றும் ஆபத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. ஆறு பத்தாண்டுகளாக துருக்கியானது அமெரிக்காவின் நேட்டோ கூட்டாளியாக, கூட்டில் இரண்டாவது பெரிய இராணுவத்தைக் கொண்டதாக இருந்து வந்திருக்கின்றது. இருப்பினும், சிரியாவில் ஐந்தாண்டுகள் யுத்தத்தின் பொழுது நேட்டோ சக்திகள் ரஷ்யாவிற்கெதிராக போர்வெறிப் பிரச்சாரத்தைத் தொடங்கியதற்கு பின்னர், துருக்கி ஆட்சியானது ரஷ்யாவுடன் என்றுமிரா வகையில் நெருங்கிச் சென்றுகொண்டுள்ளது.

துருக்கிய அரசாங்கம் பயங்கரவாத இயக்கங்கள் என்று கண்டனம் செய்யும் குர்து தேசியவாதிகளுக்கு அமெரிக்கா அளித்த ஆதரவு தொடர்பாக, வாஷிங்டனுக்கும் அங்காராவிற்கும் இடையில் மோதல் எழுகையில், 2012 முதற்கொண்டு, அங்காராவின் நேட்டோ பங்காளிகள், துருக்கி அதன் மேற்கத்திய கூட்டாளிகளிடமிருந்து சாத்தியமான வகையில் பிளவுபடப்போவது பற்றி திரும்பத் திரும்ப கவலைகளை வெளிப்படுத்தி இருக்கின்றன.

கடந்த ஆண்டு, சிரியாவிலும் ஈராக்கிலும் உள்ள இஸ்லாமிய அரசின் (ISIS), பிராந்திய வெற்றிகளை அடுத்து, ஒபாமா நிர்வாகம், சிரிய ஜனநாயக சக்திகள் என்று அழைக்கப்படும் ஒன்றை நிறுவியது. அதில், குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியின் (PKK) சிரியக் கிளையான சிரிய குர்திஷ் ஜனநாயக ஐக்கிய கட்சி (PYD) மற்றும் அதன் படைப்பிரிவான மக்கள் பாதுகாப்புப் பிரிவுகள் (YPG) ஆகியனவற்றை சிரியாவில் அதன் பிரதான கையாட்களாக ஈடுபடுத்தியது. அங்காரா துருக்கியிலும் பக்கத்து சிரியாவிலுமுள்ள குர்திஷ் பிரிவினைவாதத்தை தனது இருப்பிற்கான அச்சுறுத்தலாக பயத்துடன் பார்த்தது.

துருக்கிய ஆட்சியின் வெளியுறவுக் கொள்கையின் ஆழமான நெருக்கடி, நவம்பர் 2015ல் சிரியாவில் ரஷ்ய ஜெட் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியபோது உக்கிரமடைந்தது. மாஸ்கோ அப்பிராந்தியத்தில் அதன் ஏவுகணைப் பிரிவுகளை, போர் விமானங்களை மற்றும் போர்க் கப்பல்களை அனுப்பிய போது —துருக்கியுடனான ஒரு யுத்தத்திற்கான அச்சுறுத்தலைக் கொண்டிருந்தது, அது நேட்டோ மற்றும் ரஷ்யாவிற்கிடையில் ஒரு உலகப் போரை வெடிக்க வைத்திருக்கக் கூடும்— அது இறுதியில் துருக்கி மீதான பொருளாதாரத் தடைகளை மட்டுமே விதித்தது.

துருக்கிய பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பெரும் பாதிப்பிற்கு மத்தியில் மற்றும் நேட்டோ கூட்டாளிகள் குறிப்பாக ஐரோப்பாவில் உள்ளவை, ரஷ்யாவுடனான போரில் துருக்கிக்கு உதவத் தலையிடா என்ற அச்சத்தாலும், துருக்கிய ஆட்சி அதன் வெளியுறவுக் கொள்கையை மாற்றியது. அது ரஷ்யாவுடனும் சிரியாவுடனுமான சாத்தியமான சீரமைத்தலை மேற்கொள்ளத் தொடங்கியது. மே 2016 இல் எர்டோகன், ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்த, தான் ஆணையிட்டதாக முன்னர் அறிவித்திருந்த பிரதமர் அஹ்மெட் டாவுதோலு இனை பதவியிலிருந்து அகற்றிவிட்டு ரஷ்யாவிடம் மன்னிப்புக் கேட்டார்.

இது வாஷிங்டனும் பேர்லினும் ஜூலை 15 அன்று எர்டோகனுக்கு எதிராக கிட்டத்தட்ட வெற்றிபெறும் தருவாயிலிருந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை மறைமுகமாக ஆதரிக்க மேடை அமைத்துக் கொடுத்தது, அதில் அங்காரா கூலனின் இயக்கத்தை குற்றம் சாட்டியது. அது சரியான நேரத்தில் எச்சரிக்கை கொடுத்த ரஷ்யாவுக்கு நன்றி கூறியதாக அறிவிக்கப்பட்டது. இது துருக்கிக்குள் மட்டுமல்லாமல், அனைத்திற்கும் மேலாக எர்டோகன் அரசாங்கத்திற்கும் பிரதான நேட்டோ சக்திகளுக்கும் இடையிலான ஏற்கனவே வெடிப்புற்ற பதட்டங்களை மேலும் தீப்பற்ற வைத்தது.

துருக்கி அரசாங்கம், நேட்டோவிலுள்ள அதன் போலிக்கவலை காட்டும் கூட்டாளிகளுக்கும் பிரதான யுரேஷிய சக்திகளான ரஷ்யா மற்றும் சீனாவிற்கும் இடையில் என்றுமிரா வகையில் அவநம்பிக்கையுடனான சூழ்ச்சிக் கையாளல்மூலம் தனது பிரதிபலிப்பை காட்டியது. சமீப மாதங்களில், சீனாவிற்கும் துருக்கிக்கும் இடையில் வளர்ந்து வரும் பொருளாதார உறவுகளுக்கு மத்தியில், எர்டோகன், துருக்கியானது சீனா தலைமையிலான ஷாங்காய் கூட்டுறவு கழகத்தில் சேரும் என்று திரும்பத்திரும்ப அறிவித்தார், இது அங்காராவை “மேலும் சுதந்திரமாக செயல்பட” அனுமதிக்கும் என்றும் கூறினார்.

இது நேட்டோவிடமிருந்து கடும் பதிலைக் கொண்டு வந்தது. நேட்டோ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அவைக்காக கடந்த மாதம் இஸ்தான்புல்லுக்கு வருகை தந்த, நேட்டோ பொதுச்செயலர் ஜென்ஸ் ஸ்ரொல்டன்பேர்க் எர்டோகனை சந்தித்தார், “கூட்டுப் பாதுகாப்பு மற்றும் நேட்டோ ஒற்றுமை பற்றிய கருத்துருவை வலிமை குன்றச்செய்யும் எதனையும் துருக்கி செய்யாது என நான் திடமாக நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டார்.

அனைத்திற்கும் மேலாக, எவ்வாறாயினும், அங்காரா ரஷ்யாவுடன் நெருங்கிய உறவை நாடியது. இந்த மாதத்தின் தொடக்கத்தில், ரஷ்ய, துருக்கிய பிரதமர்கள் டிமித்திரி மெட்வடேவ் மற்றும் பினாலி யில்டிரிம் மாஸ்கோவில் சந்தித்தனர். “சிரிய நிலைமைகளை இயல்புநிலைக்கு கொண்டுவரல் எமது நாடுகளுக்கான முதன்மையான பணியாகும். மற்றும் அது முழுப்பிராந்தியத்தின் நலன்களுக்கு நிச்சயமாக சேவை செய்வதுடன் மற்றும் தற்பொழுது மிகச்சிக்கலான நிலைமையில் உள்ள சிரியாவின் நலன்களுக்கும் முக்கியமானது” என்று அவர்கள் உடன்பட்டனர்.

டிசம்பர் 6 அன்று, யில்டிரிம் சிரியாவில் ‘தயக்கம் காட்டல்’ மற்றும் ‘கால்-பின்வாங்கல்’ ஆகியவற்றுக்காக நேட்டோவை விமர்சித்தார்: “பயங்கரவாதத்திற்கு எதிராக நாகரிகத்தை பாதுகாப்பது பற்றி நல்ல வார்த்தைகள் பரிமாறப்படுகின்றன. ஆனால் பெரிய பயங்கரவாத வலைப்பின்னல்கள் எல்லைகள் தாண்டி இன்று நம்மை சவால் செய்து கொண்டிருக்கின்றன.” துருக்கி-ரஷ்ய முன்முயற்சியானது “பயங்கரவாதத்தை அழிப்பதற்கான ஒரு வலிமை கொண்ட மற்றும் ஐக்கிய சர்வதேச அணி” கான ஒரு உந்தல் என்று விவரித்தார்.

எர்டோகன் அரசாங்கம் கூட, ட்ரம்ப் நிர்வாகமானது ரஷ்யா மீது “மென்மையான” நிலைப்பாட்டை எடுக்கும் மற்றும் துருக்கிக்கு மிக அரசியல் சுதந்திர செயற்பாட்டை வழங்கும் என நம்புவதாகத் தெரிகின்றது. டிசம்பர் 15 அன்று அரசாங்க சார்பு நாளிதழான Daily Sabah இடம் துருக்கி வெளியுறவு அமைச்சர் காவுசோகுலு, “ட்ரம்ப் அனுபவ அடிப்படையில் செயல்படும் ஒரு மனிதர். பெரும்பாலான எமது கருத்துக்கள் பகுதி அளவில் ஒத்திருக்கும்” என்று கூறிக்கொண்டு, “ட்ரம்ப் நிர்வாகத்துடன் நாம் ஒத்துழைக்க முடியும்” என்று கூறினார்.

ட்ரம்ப் தேர்வு நிலைமைகளை சீரடையச்செய்யும் மற்றும் துருக்கி மற்றும் மத்திய கிழக்குடனான அமெரிக்க உறவுகளில் உள்ள வெடிக்கும் பதட்டங்களை தணிக்கும் என்ற அத்தகைய நம்பிக்கைகள் உதிர்மண்ணால் கட்டப்படுகின்றன. ட்ரம்ப் “அமெரிக்கா முதலில்” என்ற தீவிரக் கொள்கையை அறிவித்துள்ளார் மற்றும் அது சீனாவிற்கு எதிரான தாக்குதலையும், அதேபோல ஈரானுடனான அணுவாயுத உடன்படிக்கை ரத்தையும் சமிக்கை காட்டுகிறது. எழுந்து வருவது அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கையின் ஒரு ஸ்திரமடைதல் அல்ல, மாறாக இன்னும் பெரிய வெடிப்புமிக்க நெருக்கடியின் வெளிப்பாடாகும்.