ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

On eve of first presidential contest: US two-party system in crisis

ஜனாதிபதி பதவிக்கான முதல் போட்டிக்கு முன்னதாக: அமெரிக்க இருகட்சி ஆட்சிமுறை நெருக்கடியில்

Patrick Martin
1 February 2016

இன்றிரவு ஐயோவா மாநிலத்தில் நடந்த ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவுத்தேர்தல்கள் (caucuses), சிறிய அமெரிக்க இராஜ்ஜியங்களில் ஒன்றினது மக்கள்தொகையில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே உள்ளடக்கி இருக்கும் என்றாலும், 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் முதல் உண்மையான போட்டியைக் குறிக்கிறது. அமெரிக்க தேர்தல் முறை, மிகக்குறைந்த ஜனநாயகத்துடன், ஒரு ஜனநாயகம் என்று கூறிக்கொள்ளும் எந்தவொரு பிரதான முதலாளித்துவ நாட்டையும் விட அதிகளவில் மோசடிக்கு உள்ளாகக்கூடியதாகும். வெறும் இரண்டு கட்சிகளும், வலதுசாரியானவையாகவும் மற்றும் பெருநிறுவன நலன்களால் கட்டுப்படுத்தப்படுவதுமான அவை இரண்டுமே, நடைமுறையில் ஏகபோகத்தை கொண்டுள்ளன.

330 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாடான அமெரிக்காவில், பன்முகப்பட்ட பரந்த மக்களுக்கும் மற்றும் ஒரு சதவீதத்தின் பத்தில் ஒரு சதவீதமான உயர்மட்டத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஓர் அரசியல் கட்டமைப்பிற்கும் இடையே ஒரு கூர்மையான மற்றும் தீவிரமான முரண்பாடு நிலவுகிறது.

இந்த உயரடுக்கின் கட்டுப்பாட்டில் உள்ள இருகட்சி ஆட்சிமுறை முன்னொருபோதும் இல்லாதளவில் அரசியல் சட்டபூர்வத்தன்மையின் நெருக்கடியை முகங்கொடுத்துள்ளன. 160 ஆண்டுகளுக்கும் பழமையான அரசியலமைப்புகளான இந்த ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டுமே, அரசியல் ஸ்தாபகத்திலிருந்து ஆழமாகவும் அளவிட முடியாதளவிலும் அன்னியப்பட்டுள்ள மக்கள் மீதான கட்டுப்பாட்டை இழந்து வருகின்றன.

முன்னொருபோதும் பார்த்திராதளவில் திடீர் வளர்ச்சி மற்றும் பிரபலத்தன்மையுடன் அவ்விரு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுமான குடியரசு கட்சி தரப்பில் டோனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியில் செனட்டர் பேர்னி சாண்டர்ஸ் வெளிப்பட்டிருப்பது ஊடகங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

பிரச்சாரம் தொடங்கியபோது, அந்த அயோக்கிய ரியல்-எஸ்டேட் சீமானும் ரியாலிட்டி-தொலைக்காட்சி பிரபலமுமான ட்ரம்ப் இன் வேட்பாளர் நியமனம், ஒரு வேடிக்கையான காட்சிப்பொருளாகவும், பார்வையாளர் முன்னிலையில் அவர் சீக்கிரமே காணாமல் போவார் என்றும் பார்க்கப்பட்டது. சாண்டர்ஸைப் பொறுத்த வரையில், தன்னைத்தானே ஒரு ஜனநாயக சோசலிசவாதி என்று கூறிக்கொண்ட ஒரு தள்ளாடும் வயதான முதியவரின் பிரச்சாரம் என்று கருதி, ஊடகங்கள் பெரிதும் அவரது வேட்பாளர் நியமனத்தின் அறிவிப்பையே புறக்கணித்திருந்தன.

சகல எதிர்பார்ப்புகளுக்கும் முரணாக, ட்ரம்ப் மற்றும் சாண்டர்ஸ் இருவருமே பாரிய ஆதரவைப் பெற்று முதன்மை நடைமுறைகளில் முக்கிய பிரபலங்களாக எழுந்துள்ளனர். ட்ரம்ப் இன் பிரச்சாரம் மரணகரமான தீவிர பிரச்சாரம் என்றும், ட்ரம்ப் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக வரக்கூடுமென்றும் என்ற உணர்வு அரசியல் ஸ்தாபகத்திற்குள் அதிகரித்து வருகிறது. ஜனநாயகக் கட்சியைக் கட்டுப்படுத்தும் பெருநிறுவன-நிதியியல் நலன் தட்டுக்கள், மோசமாக-தாக்கப்படும் கிளிண்டன் வேட்பாளராக ஜெயிக்க வேண்டுமென எதிர்பார்க்கின்ற அதேவேளையில் சாண்டர்ஸ் வேட்பாளராக நியமனமாவது தொடர்ச்சியாக மற்றும் கட்டுப்படுத்தவியலாத இடதுசாரி அரசியல் இயக்கத்திற்கு வழிவகுக்கும் என்று பார்க்கப்படுகிறது.

இந்த கட்டவிழ்ந்துவரும் இருகட்சி ஆட்சிமுறையின் நெருக்கடி எதை காட்டுகிறது? சகல முக்கிய அரசியல் அபிவிருத்திகளைப் போலவே, அதுவும் ஆழ்ந்த அரசியல் மற்றும் சமூக வேர்களைக் கொண்டுள்ளது. அமெரிக்க முதலாளித்துவத்தின் நீடித்த வீழ்ச்சியில் இருந்து எழுந்துவரும் இந்த இருகட்சி ஆட்சிமுறையை இப்போது நொருக்கிக் கொண்டிருக்கும் முரண்பாடுகள், பல தசாப்தங்களாக ஒன்றுதிரண்டு வந்துள்ளன. ஆனால் பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சற்று முன்னதாக ஏற்பட்ட 2008 இன் பாரிய பொருளாதார பொறிவு, அமெரிக்க சமூகத்தின் நெருக்கடியில் ஒரு பண்புரீதியிலான திருப்பத்தைக் குறித்தது.

பத்து மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையில் அந்த பொருளாதார நெருக்கடி ஏற்படுத்திய நாசகரமான தாக்கம், 2008 பொறிவை முதலில் உருவாக்கி விட்டு பின்னர் அதிலிருந்து இலாபமடைந்த உயரடுக்குகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பார்க்கப்படும் ஓர் அரசியல் அமைப்புமுறை அதிகளவில் நிராகரிக்கப்படுவதில் பிரதிபலிக்கிறது.

தீவிர வலதின் தரப்பில் கூறுவதானால், அவரது குடியரசு கட்சி எதிர்ப்பாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு எதிராக ட்ரம்ப் இன் சரமாரியான அவதூறுகள், காட்டிக்கொடுக்கப்பட்டதாகவும் மற்றும் ஏமாற்றப்பட்டதாகவும் உணரும் வாக்காளர்களின் ஒரு பிரிவை எதிரொலிக்கின்றது. அனைத்திற்கும் மேலாக, ட்ரம்ப் திறமையாக சுரண்டிவரும் ஒருவகையான பிற்போக்குத்தனமான பின்தங்கியநிலையை சளைக்காது ஊக்குவிக்கும் மற்றும் நியாயப்படுத்தும் ஒரு மதிப்பிழந்த அரசியல் சூழலின் இறுதி-விளைபொருளே அவரது வேட்பாளர் நியமனம்.

அரசியல் அரங்கின் மறுபுறம், வாகனத்துறை தொழிலாளர்கள், எஃகுத்துறை தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களது வேலைநிறுத்தங்களும் மற்றும் ஒப்பந்த நிராகரிப்புகளும், அத்துடன் பொலிஸ் படுகொலைக்கு எழுந்த எதிர்ப்பு மற்றும் மிச்சிகன் ஃபிளிண்ட் இல் ஈயம் கலந்த விஷத்தண்ணீர் குறித்து எழுந்த சீற்றம் என இவற்றில் வெளிப்பட்ட தொழிலாள வர்க்க போர்குணத்தின் மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்புணர்வின் அதிகரிப்பு, பெருநிறுவன அமெரிக்காவிற்கு எதிரான ஒரு பகிரங்க போராட்டத்தை நோக்கி தொழிலாள வர்க்கம் இடதிற்கு நகர்ந்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.

இதுதான் இருகட்சி ஆட்சிமுறையின் நெருக்கடிக்குப் பின்னாலிருக்கும் பிரதான காரணி. மக்கள்தொகையில் பெருந்திரளானவர்களிடையே இடதை நோக்கிய நகர்வு பேர்னி சாண்டர்ஸ் இன் வளர்ச்சியில் வெளிப்பாட்டைக் காண்கிறது, அவர் தம்மைத்தாமே ஒரு "ஜனநாயக சோசலிசவாதி" என்று அழைத்துக் கொள்வதுடன் அவரது பிரச்சாரத்தின் மையத்தில் பொருளாதார சமத்துவமின்மை மற்றும் வோல் ஸ்ட்ரீட் குற்றகரத்தன்மையை கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். அயோவாவில் நடந்த முந்தைய உள்கட்சி வாக்கெடுப்புகளில் ஜனநாயக கட்சியில் முன்னணியில் இருந்த ஹிலாரி கிளிண்டனுக்கு நடைமுறையளவில் சமமாக நகர்ந்து வந்துள்ளார், அத்துடன் பெப்ரவரி 9 இல் அடுத்த பிரதான போட்டி நடக்கவுள்ள நியூ ஹாம்ப்ஷைர் இன் வாக்கெடுப்புகளில் ஆரம்பத்திலேயே கணிசமான அளவிற்கு முன்னணியில் உள்ளார்.

ஐயோவா உள்கட்சி தேர்தல்களுக்கு முன்னர் கடைசியாக சனியன்று வெளியான Des Moines Register கருத்துக்கணிப்பு, 35 வயதிற்குக் கீழ் இருக்கக்கூடிய வாக்காளர்களிடையே சாண்டர்ஸ் கிளிண்டனை விட 30 புள்ளிகள் அதிகமாக முன்னணியில் இருப்பதைக் கண்டறிந்தது. அனேகமாக ஜனநாயகக் கட்சி வாக்காளர்களில் 68 சதவீதத்தினர் ஒரு சோசலிச ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதே நல்ல யோசனை என்று கருதுவதாக அந்த கருத்துக்கணிப்பு கண்டது. சோசலிசம் என்பது ஊடகங்கள் மற்றும் அரசியல் உயரடுக்குகளால் முடிவில்லாமல் அவதூறு செய்யப்பட்டு வந்த ஒரு நாட்டில் இந்த புள்ளிவிபரம் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையாகும்.

சாண்டர்ஸ் ஒரு சோசலிசவாதி அல்ல, மாறாக ஒரு மித தாராளவாதி என்பதையும், அவரது கண்ணோட்டங்கள் 1960களின் போது ஜனநாயகக் கட்சியின் மைய பாதையாக இருந்திருந்ததையும் உலக சோசலிச வலைத் தளம் விவரித்துள்ளது. அமெரிக்க அரசியல் அமைப்புமுறையின் மீது பில்லியனர்களின் பலமான பிடியை சாண்டர்ஸ் விமர்சித்தாலும், அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளியுறவு கொள்கையான, அதாவது உலகெங்கிலும் உள்ள அதே பில்லியனர்களின் நலன்களைப் பாதுகாக்க இராணுவ படை பிரயோகம், படுகொலை, உளவுபார்ப்பு மற்றும் அரசியல் நாசவேலைகள் ஆகியவற்றை பாதுகாக்கிறார்.

சாண்டர்ஸ் பிரச்சாரத்தின் பிரதான செயல்பாடு என்னவென்றால், இளைஞர்கள் மற்றும் உழைக்கும் மக்களை ஜனநாயக கட்சி அரசியல் கட்டுப்பாட்டினுள் திசைதிருப்புவதற்காக அவர்களிடையே நிலவும் அதிகரித்த தீவிர உணர்வுகளுக்கு கோரிக்கைவிடுவதாகும். எவ்வாறிருப்பினும், இந்த அரசியல் சேவைக்கு இடையிலும், வோல் ஸ்ட்ரீட் மீதான சாண்டர்ஸின் தாக்குதல்கள் அந்த வெர்மாண்ட் செனட்டரின் நோக்கங்களையும் கடந்து சென்று ஓர் இயக்கத்தை ஊக்கப்படுத்திவிடுமோ என்று ஜனநாயக கட்சி ஸ்தாபகத்திற்குள்ளும் மற்றும் ஆளும் வட்டாரங்களிலும் அதிக பரவலாக பதட்டங்களை அதிகரித்து வருகின்றன.

இது, ஜனநாயக கட்சியின் பிரதான கொள்கை பரப்பு சாதனமான New York Times இவ்வாரயிறுதியில் சாண்டர்ஸ் மீது நடத்திய அந்த ஒருமித்த தாக்குதலை விளங்கப்படுத்துகிறது. ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை அங்கீகரித்தும், சாண்டர்ஸை அவர் உபயோகமான யோசனைகளை எழுப்பினாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்ற, கைகழுவிவிட்டும் டைம்ஸ் ஞாயிறன்று ஒரு பிரதான தலையங்கம் வெளியிட்டது. அது கிளிண்டனின் பாத்திரத்தை—அவர் முதல் பெண் ஜனாதிபதியாக இருப்பார் என்றும், கறுப்பின பெண்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள், மற்றவர்களுக்கும் ஓர் ஆதரவாளராக இருப்பார் என்றும்—அடையாள அரசியலுக்கு ஒரு முன்மாதிரியாக தனித்துவப்படுத்திக் காட்டியது.

டைம்ஸ் கட்டுரையாளர் போல் க்ரூக்மன், "செல்வந்த குழுக்களும் தவறான அபிப்ராயங்களும்" என்று தலைப்பிட்ட ஒரு கருத்துரையில் முன்வைத்த வாதமே மிகவும் பரவலாக சர்ச்சைக்கு உள்ளாகிறது. சாண்டர்ஸூம் கிளிண்டனும் அமெரிக்காவிற்குள் என்ன தவறு நடக்கிறது என்பதை கண்டறிவதில் போட்டிப்போட்டு பிரதிநிதித்துவம் செய்கிறார்கள், சாண்டர்ஸ் பொருளாதார சமத்துவமின்மை மற்றும் "பெரும் பணத்தின் மோசடியான செல்வாக்கின்" மீது ஒருங்குவிந்துள்ளார், அதேவேளையில் கிளிண்டன் (மற்றும் க்ரூக்மனுமே கூட) “பணம் சில கேடுகளுக்கு, ஒருவேளை பல கேடுகளுக்கும் மூலக்காரணமாகிறது, ஆனால் அதுவே ஒட்டுமொத்த விடயமும் ஆகிவிடாது. மாறாக இனவாதம், பாலியல் மற்றும் தவறான முன்அபிப்ராயங்களின் பல்வேறு வடிவங்களும் அவற்றின் சொந்த உரிமைகளை பொறுத்தவரையில் மிகவும் பலமான சக்திகளாக உள்ளன,” என்பதைப் பேணுகிறார் என்று அவர் வாதிடுகிறார்.

அந்த தலையங்கத்தின் நிறைவுரை என்னவென்றால், வர்க்க பிரச்சினைகளை விட இனம் மற்றும் பாலினம் பிரச்சினைகள் முக்கியமானது, அல்லது அதிக முக்கியமானதும் கூட. க்ரூக்மன் வாதிடுகிறார், வெள்ளையின தொழிலாளர்களிடையே இனவாதம் மற்றும் பாலினவாதம் பரவியிருப்பதன் விளைவாக, “தீவிர மாற்றத்திற்கான கண்ணோட்டங்கள் முதிர்ச்சியின்றி உள்ளன" மற்றும் "இடதிலிருந்து அரசியல் புரட்சி என்பதே கவனத்திற்கு எடுக்கத்தேவையற்ற ஒன்றாக உள்ளது".

அமெரிக்க சமூகத்தைக் குறித்த இந்த பகுப்பாய்வு தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஓர் அரசியல் அவதூறாகும். 2008 இல் ஓர் ஆபிரிக்க-அமெரிக்க ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்த ஒரு நாட்டில் இனவாதம் மேலாதிக்கம் இருப்பதாக கூறுவதற்கு எந்தவித ஆதாரத்தையும் க்ரூக்மன் மேற்கோளிடவில்லை. அதற்கு முரணாக, இனம் மற்றும் பாலினம் மீதான பிரச்சினைகள் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தவும் மற்றும் வர்க்க நனவின் வளர்ச்சியை நசுக்குவதற்காகவும் அரசியல் களத்திற்குள் திட்டமிட்டு செலுத்தப்பட்டு வருகிறது.

அயோவா உள்கட்சி தேர்தல் மற்றும் பரந்த தேர்தல் பிரச்சாரம் பற்றிய பெரும்பாலான பத்திரிகை செய்திகள், இப்போதைய அரசியல் அமைப்புமுறை மீதும் மற்றும் இருகட்சிகள் மீதும் மில்லியன் கணக்கான மக்களின் கோப உணர்வு அதிகரித்திருப்பதை ஒப்புக் கொள்கின்றன. ஆனால், ஊடகங்களின் செய்திப்படி அமெரிக்க பொருளாதாரம் மீட்சியின் ஆறாம் ஆண்டில் இருக்கின்ற போது, இந்தளவுக்கு அங்கே ஏன் கோபம் உள்ளது என்பதற்கு அங்கே எந்த விளக்கம் கிடையாது.

உத்தியோகபூர்வ ஊடகங்கள் ஒன்று சரிந்துவரும் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சீரழிந்துவரும் சமூக நிலைமைகள் மீதான யதார்த்தத்தைக் குறித்து கவலை கொண்டிருக்கின்றன அல்லது அவை திட்டமிட்டு அதை மூடிமறைக்கின்றன. அதிகரித்துவரும் பங்குச் சந்தை —குறைந்தபட்சம் ஜனவரி வரையில்— மற்றும் பெரும் பணக்காரர்கள் மற்றும் தனிச்சிறப்புரிமை கொண்ட உயர்மட்ட நடுத்தர வர்க்க அடுக்கிற்கு அதிகரித்த செல்வவளமை என இவை தான் அவர்களது அமெரிக்கா.

செல்வந்தர்களுக்கும் மற்றும் மக்கள்தொகையில் எஞ்சியிருப்பவர்களுக்கும் இடையே ஒரு பரந்த மற்றும் இணைக்க முடியாத இடைவெளியுடன், அமெரிக்கா ஓர் ஆழ்ந்த வர்க்க-துருவமுனைப்பட்ட சமூகமாக உள்ளது. இந்த சமூக யதார்த்தம் தான் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி இரண்டின் அதிகரித்த நெருக்கடியை எடுத்துக்காட்டுகின்றது. வர்க்க பிரச்சினைகள் முன்னணிக்கு வருகையில், அதை பிரதிநிதித்துவம் செய்யாத இந்த இறுகிப்போயுள்ள அரசியல் முறையை ஆட்டங்காணச்செய்கையில், அங்கே ஐயத்திற்கிடமின்றி 2016 இன் தேர்தல் பிரச்சாரத்தின் போக்கில் அதிக அரசியல் அதிர்ச்சிகளும் ஆச்சரியங்களும் இருக்கும்.

கட்டுரையாளரின் ஏனைய பரிந்துரை:

Sanders and socialism
[27 January 2016]