ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The assault on encryption and the drive to expand police state spying

குறியீட்டு முறை மீதான தாக்குதலும், பொலிஸ் அரசு உளவுவேலை விரிவாக்கத்திற்கான உந்துதலும்

Joseph Kishore
24 February 2016

குறியீட்டு முறை கொண்ட கைத்தொலைபேசிகளுள் உள்நுழைவதன் மீது ஆப்பிள் நிறுவனத்துடனான பெரிதும் அதன் பகிரங்கமான நீதிமன்ற மோதலுடன், ஒபாமா நிர்வாகம் அமெரிக்காவில் பொலிஸ் அரசு உளவுவேலை அதிகாரங்களை பாரியளவில் விரிவாக்கும் கட்டமைப்பை உருவாக்க மிகவும் திட்டமிட்டு முயற்சித்து வருகிறது.

கடந்த ஆண்டின் சான் பெர்னார்டினோ தாக்குதலின் துப்பாக்கிதாரிகளில் ஒருவரால் பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் சம்பந்தப்பட்ட, அதாவது ஒரேயொரு கைத்தொலைபேசி சம்பந்தப்பட்ட ஒரு தனிப்பட்ட வழக்கு என்ற வெள்ளை மாளிகை அதிகாரிகளின் கூற்று, மைக்ரோசாப்ட் நிறுவுனர் பில் கேட்ஸால் செவ்வாயன்று ஆதரிக்கப்பட்ட இது, அரசாங்கத்தின் நோக்கங்களை மூடிமறைக்க நோக்கம் கொண்ட ஒரு பொய்யாகும்.

ஒபாமா நிர்வாகத்திற்கு ஆதரவாக பைனான்சியல் டைம்ஸ் நேர்காணல் ஒன்றில் கேட்ஸ் கூறுகையில், சையத் ரிஷ்வான் பரூக் பயன்படுத்திய ஒரு கைத்தொலைபேசியில் உள்நுழைவதில் ஆப்பிள் நிறுவனம் உதவ அவசியமான பெப்ரவரி 16 நீதிமன்ற உத்தரவாணை, “ஒரு குறிப்பிட்ட வழக்கு சம்பந்தப்பட்டது, அரசாங்கம் அதிலிருந்து தகவல்களைப் பெறுவதற்காக கோரி வருகிறது" என்றார். “அவர்கள் ஏதோ பொதுவான விடயத்தைக் கோரவில்லை, அவர்கள் ஒரு குறிப்பிட்ட வழக்கிற்காக அதை விசாரிக்கிறார்கள்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

வெள்ளை மாளிகையுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள கேட்ஸின் கருத்துக்கள், FBI இயக்குனர் ஜேம்ஸ் கோமெயின் கருத்துக்களை எதிரொலித்தது. இவர், “சான் பெர்னார்டினோ வழக்கு, ஒரு முன்னுதாரணத்தை அமைக்கவோ அல்லது ஏதேனும் சேதியை வெளிப்படுத்துவதற்கோ கிடையாது,” என்று வாரயிறுதியில் எழுதியிருந்தார்.

உண்மையில், துல்லியமாக இது தான் நிர்வாகத்தின் நோக்கம்.

2013 கோடைகாலத்தில் தொடங்கி எட்வார்ட் ஸ்னோவ்டெனால் வெளியிடப்பட்ட, தேசிய பாதுகாப்பு அமைப்பு (NSA) மற்றும் மத்திய புலனாய்வுத்துறையின் (FBI) சட்டவிரோதமான மற்றும் அரசியலமைப்பிற்கு புறம்பான உளவுவேலைகளைக் குறித்த அம்பலப்படுத்தல்களை தொடர்ந்து, மேலெழுந்த மக்களின் கோப அலையை எதிர்கொள்வதற்காக அரசியல் ஸ்தாபகம் மற்றும் ஊடகங்களின் ஒரு இரகசிய முயற்சி தான் இந்த விடயத்தின் பின்னணியில் இருப்பது. தொலைபேசி அழைப்பு விபரங்கள், மின்னஞ்சல்கள், இணைய பரிவர்த்தனை உட்பட, அரசியல் நடவடிக்கை மற்றும் உலகின் எந்தவொரு இடத்திலும் எவருடனான தொடர்புகளையும் அம்பலப்படுத்தக்கூடிய ஏனைய விபரங்கள் உள்ளடங்கலாக, பரந்தளவிலான தகவல்களை தொகுப்பாக திரட்டும் திட்டங்களை ஸ்னோவ்டன் அம்பலப்படுத்தினார். இந்த அம்பலப்படுத்தல்களுக்கு விடையிறுப்பதன் பாகமாக, விபரங்களைச் சேகரிக்கும் அரசின் நடவடிக்கைகளைத் தடுக்கும் பாதுகாப்பு முறைமைகள், மிகவும் பரந்தளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு மிகவும் பிரபலமாக மாறியுள்ளன.

கடந்த ஆண்டு, காங்கிரஸ், தேவைப்படும் போது குறியீட்டு தரவுகளை அரசு அணுகுவதை அனுமதிக்கும் "அனுமதியற்ற உள்நுழைவு நிரல்களைத்" தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறுவுவதை அனுமதிக்கும் சட்டமசோதாவைத் தயாரிக்க தொடங்கி இருந்தது. வெள்ளை மாளிகை இலையுதிர் காலத்தில் அந்த மசோதாவை முன்னெடுக்க அழுத்தமளிப்பதில்லை என்று முடிவு செய்தது. அப்போது, மூத்த நிர்வாக அதிகாரிகளை மேற்கோளிட்டு வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிடுகையில், அந்த முடிவு பகுதியாக "அமெரிக்க அரசாங்கம் மற்றும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள், இவற்றின் மீதான மக்கள் கண்ணோட்டம்" ஸ்னோவ்டன் அம்பலப்படுத்தல்களை அடுத்து "ஒரு பாதிப்பை பெற்றிருந்ததால், அவற்றின் மீதான உலகளாவிய நம்பிக்கையைச் செப்பனிடுவதற்கான" ஒரு முயற்சியால் உந்தப்பட்டிருந்ததாக குறிப்பிட்டது.

வெள்ளை மாளிகை குறியீட்டு முறை குறித்து தொடர்ச்சியாக எச்சரித்து வந்த அதேவேளையில் (கோமெ அதை “இருண்ட காலத்திற்கு செல்லுதல்” என்று குறிப்பிட்டார்), அழுத்தம் அளிப்பதற்கான சரியான சூழ்நிலைக்காக வெள்ளை மாளிகை காத்திருந்தது. அதன் உளவுபார்ப்பு நிகழ்ச்சிநிரலுக்கு திரைக்குப் பின்னால் எப்படி அழுத்தமளிக்க விரும்புகிறது என்பதைக் குறித்து அது மிகவும் தெளிவாக இருந்தது. தேசிய உளவுத்துறை இயக்குனர் அலுவலகத்தின் உயர்மட்ட வழக்கறிஞர் ரோபர்ட் லிட் எழுதி, வாஷிங்டன் போஸ்டிற்குக் கிடைக்கப் பெற்ற, ஒரு மின்னஞ்சலில் அவர், “ஒரு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அல்லது குற்றகர சம்பவத்தின் போது... சட்டமன்ற சூழல் மாறக்கூடும்,” என்று குறிப்பிட்டிருந்தார். உளவுத்துறை அமைப்புகள் "அத்தகையவொரு சூழலுக்காக எங்களின் விருப்புரிமை கையில் வைத்துக்கொண்டு காத்திருக்கவேண்டும்” என்றார்.

பெயர் வெளியிட விரும்பாத ஒரு மூத்த நிர்வாக அதிகாரி போஸ்டிடம் குறைகூறுகையில், “குழந்தைகளின் இறப்போ அல்லது ஒரு பயங்கரவாத நடவடிக்கையையோ குறிப்பிட்டுக் கூற எங்களிடம் துல்லியமான உதாரணம் இல்லை. அதுதான் உங்களிடம் இருக்க வேண்டுமென மக்கள் கோருவதாக தெரிகிறது,” என்றார்.

சான் பெர்னார்டினோ படுகொலைகள், இதில் 14 பேர் கொல்லப்பட்டனர், தேவைப்பட்ட "சரியான எடுத்துக்காட்டை" வழங்கியது. குறியீட்டு முறையில் அனுமதியின்றி உள்நுழையும் வசதியை வழங்க நிறுவனங்களை நிர்பந்திக்கும் சட்டமசோதாவிற்காக சிஐஏ இயக்குனர் ஜோன் பிரென்னன், கோமெ மற்றும் ஏனைய உளவுத்துறை அதிகாரிகளும் கோரிக்கையை உடனடியாக உயர்த்தினர். வெள்ளை மாளிகையின் ஆதரவுடன் FBI, இந்நோக்கத்திற்காக ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிரான இந்த வழக்கை ஒரு பகிரங்க சண்டையாக ஆக்க முடிவெடுத்தது. கடந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்ட அந்த சட்டமசோதா காங்கிரஸில் மீண்டும் புத்துயிரூட்டப்பட்டு வருகிறது.

நீதிமன்றத்தில் அரசு கோரிவரும் சிறப்பு அதிகாரங்கள், அவையே கூட பெரும் நீண்டகால தாக்கங்களை கொண்டவை ஆகும். மிக சமீபத்திய ஐபோன்களின் தகவல்கள், குறியீடு செய்யப்பட்டு, ஒரு கடவுச்சொல் அல்லது இரகசிய வார்த்தையைக் கொண்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. பலமுறை தவறான கடவுசொற்களை உள்ளிட்டால் எல்லா தகவல்களையும் அழித்துவிடும் ஒரு கூடுதல் பாதுகாப்பு வசதியும் இந்த கைத்தொலைபேசிகளில் உள்ளது. இது ஒவ்வொரு சாத்தியமான கடவுச்சொற்களை உள்நுழைக்கும் ஒரு "வன்முறையான முயற்சியை" அரசாங்கம் பிரயோகிப்பதிலிருந்து அதை தடுக்கிறது.

தொடர்புகள், மின்னஞ்சல்கள் மற்றும் செய்திகள், தொலைபேசி அழைப்பு விபரங்கள், எங்கெங்கு நகர்ந்தோம் என்பதைக் காட்டும் முன்நடவடிக்கைகள், குறியீடு செய்யப்பட்ட மின்னஞ்சல்கள், வங்கி கணக்கு தகவல்கள் மற்றும் இன்னும் ஏனையவற்றிற்கான தனிப்பட்ட PGP கடவுச்சொற்கள் உட்பட இந்த ஸ்மார்ட்போன்கள் பெரும் எண்ணிக்கையிலான தனிநபர் தகவல்களைக் கொண்டிருக்கின்றன.

கைத்தொலைபேசியின் பாதுகாப்பு அம்சங்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்க ஆப்பிள் நிறுவனம் ஒரு புதிய ரக இயங்குதளத்தை உருவாக்கி நிறுவ வேண்டியிருக்கும் விதத்தில் அரசாங்கம் கோரி வருகிறது. அரசாங்கம் வெற்றி பெற்றால், அது அணுக விரும்பும் எந்தவொரு கைத்தொலைபேசியும் அதே வழிமுறையில் அணுகுவதற்கு அது அதிகாரம் பெறும்.

அதனினும் மிக முக்கியமாக, அதேபோன்ற ஏதோவொன்றை செய்வதற்கு எந்தவொரு நிறுவனத்திற்கும் தேவைப்படும் ஒரு முன்னுதாரணத்தை அது வழங்கும்: அதாவது குறியீடு செய்யப்பட்ட தகவல்களை அரசாங்கம் அணுகுவதை அனுமதிக்க, அனுமதியற்ற உள்நுழைவு நிரல்கள் உருவாக்கப்பட்டு நிறுவப்படும். இது குறியீட்டு முறையின் அடிப்படை நோக்கத்தையே நீக்குகிறது, துல்லியமாக இதைத் தான் நிர்வாகம் செய்ய முயன்று வருகிறது.

இந்த முயற்சிகள், “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" தொடங்கியதற்குப் பின்னர் அமெரிக்க ஆளும் வர்க்க கொள்கையின் ஒரு தொடர்ச்சியாக உள்ளது, இப்போது இது 15 வது ஆண்டில் உள்ளது. காரணமின்றி சோதனை நடத்துவது மற்றும் பறிமுதல் செய்வதற்கு எதிரான நான்காம் சட்டத்திருத்த பாதுகாப்புகள் உட்பட ஜனநாயக உரிமைகள், பயங்கரவதாத்திற்கு எதிராக என்ற ஒரு போலி சிலுவைப்போரின் மூடிமறைப்பின் கீழ், தயவுதாட்சண்யமின்றி தாக்குதலின் கீழ் நிறுத்தப்பட்டுள்ளன. முதலில் புஷ்ஷும் பின்னர் ஒபாமாவும் மக்கள் மீது உளவு பார்க்க அரசு அதிகாரங்களை அளப்பரிய அளவில் விரிவாக்குவதை மேற்பார்வை செய்துள்ளனர்.

இவ்வாறு செய்கையில், தொலைதொடர்பு வலையமைப்புகளைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள பிரமாண்ட நிறுவனங்களுடன் அரசாங்கம் நெருக்கமாக கூடி வேலை செய்கிறது, இந்த உண்மை அரசாங்கத்திற்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் இடையிலான பிரச்சினையில் கேட்ஸின் தலையீட்டால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் அதன் பங்கிற்கு, கொள்கை அடிப்படையிலான அக்கறைகளால் அல்ல, மாறாக வணிக நலன்களால் உந்தப்பட்டுள்ளது. உளவுத்துறை அமைப்புகளுடன் அதன் சொந்த தொடர்புகளை வைத்துள்ள அது, நிர்வாகம் அதன் கோரிக்கைகளைப் பகிரங்கப்படுத்த முடிவெடுக்கவில்லை என்றால் அது திரைக்குப் பின்னால் ஏதோ ஒருவித ஏற்பாட்டை செய்து கொள்ள விரும்புவதைத் தெளிவுபடுத்தி உள்ளது.

அரசியல் ஸ்தாபகத்திற்குள், ஜனநாயக உரிமைகளை அழிப்பதற்கு அங்கே ஒருமித்த ஆதரவுள்ளது. அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் போர் திட்டங்களோடு சேர்ந்து, உள்நாட்டு உளவுவேலையும் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படவில்லை.

அது முன்வரும் போது, பல வேட்பாளர்களும் உளவுத்துறை அமைப்புகளை ஆதரிக்கின்றனர். இம்மாத தொடக்கத்தில் ஒரு விவாதத்தில் ஆப்பிள் நிறுவன வழக்கு மீது அவரது நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்ட போது, பேர்னி சாண்டர்ஸ், அவர் இரண்டு தரப்பையும் ஆதரிப்பதாக தெரிவித்தார். “பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்" கட்டமைப்பை ஏற்றுக் கொண்டு, சாண்டர்ஸ் கூறுகையில், "நம் நாட்டிற்கு எதிராக மற்றொரு பயங்கரவாத தாக்குதலின் சாத்தியக்கூறு குறித்து கவலைக் கொண்டிருப்பதாக" தெரிவித்தார். ஆப்பிள் நிறுவனமும் அரசாங்கமும் ஒரு "நடுநிலையான இடத்தைக்" காணும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இது ஸ்னோவ்டன் மீது வழக்குத் தொடுப்பதற்கான சாண்டர்ஸின் அழைப்புடன் பொருந்துகிறது.

பயங்கரவாதம் என்பது ஒரு சாக்குபோக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடிப்படையில், அரசு அதிகாரங்களின் விரிவாக்கம் தொழிலாள வர்க்கத்தைக் குறி வைத்துள்ளது.

சமூக சமத்துவமின்மையின் அதீத மட்டங்களால் பிளவுபட்டு கிடக்கும் ஒரு சமூக அமைப்புமுறைக்கு தலைமை ஏற்று, அதன் போர் மற்றும் சமூக பிற்போக்குத்தன கொள்கைகள் மீது அதிகரித்துவரும் கோபத்தை முன்கணித்து, அதற்கேற்ப நிதியியல் பிரபுத்துவம் தயாரிப்பு செய்து வருகிறது. ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பானது, ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறையையும் எதிர்ப்பதில் ஒரு சுயாதீனமான சக்தியாக ஒழுங்கமைந்த, தொழிலாள வர்க்கத்தை அடித்தளத்தில் கொண்டிருக்க வேண்டும்.