ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Europe at the breaking point

ஐரோப்பா உடையும் நிலையில்

Alex Lantier
17 February 2016

ஐரோப்பிய மற்றும் சர்வதேச அதிகாரிகள் ஒன்றுகூடிய இவ்வாரயிறுதி மூனிச் பாதுகாப்பு மாநாடு, ஆழமாக மற்றும் கசப்பான பிரிவுகளாக ஐரோப்பிய முதலாளித்துவம் நொருங்கி வருவதை எடுத்துக்காட்டியது. பிரெஞ்சு பிரதம மந்திரி மானுவெல் வால்ஸ் ஐரோப்பிய அகதிகள் நெருக்கடியில் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் கொள்கையைப் பகிரங்கமாக தாக்கியமை அங்கே வெடித்த மொத்த முரண்பாடுகளிலேயே மிகவும் கூர்மையானதாக இருந்தது, அதில் வால்ஸ் அகதிகள் மீது இன்னும் அதிக மூர்க்கமான தாக்குதல்களைக் கோரினார்.

அந்த மாநாட்டுக்கு ஒரு நாள் முன்னதாக, மேர்க்கெலின் கொள்கையை "நீண்டகாலத்திற்கு சாத்தியமற்றது" என உதறித் தள்ளிய வால்ஸ், அகதிகள் ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையில் சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானின் ஏகாதிபத்திய போர்களிலிருந்து தப்பி வரும் நூறாயிரக் கணக்கான அகதிகளை ஐரோப்பா எங்கிலும் பகிர்ந்து கொள்வதற்கான அவரது முன்மொழிவை பாரிஸ் "ஆதரிக்கவில்லை" என்று தெரிவித்தார். “அதாவது 'இப்போதைக்கு, எங்களால் இன்னும் கூடுதலாக அகதிகளை ஏற்க முடியாது என்ற ஒரு மிகவும் தெளிவான சேதி நமக்கு அவசியப்படுகிறது” என்றவர் அறிவித்தார்.

அகதிகள் தப்பியோடி ஐரோப்பாவிற்கு வந்து கொண்டே இருந்தால், ஐரோப்பிய ஒன்றியம் அரசியல்ரீதியிலும் மற்றும் பொருளாதாரரீதியிலும் உடைந்து போகுமென வால்ஸ் அப்பட்டமாக அனுமானித்தார். அவர்களைத் தடுக்க ஐரோப்பாவில் தொடர்ந்து எல்லைகள் அதிகரிக்கும் என்று தெரிவித்த அவர், ஐரோப்பாவிற்குள் சர்வதேச வர்த்தகம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான சுதந்திர நகர்வைக் குறிக்கும் சென்கென் ஒப்பந்தம் பொறிந்து விடும், “அதன் பொருளாதார விளைவுகளை நம்மால் கற்பனை மட்டுமே செய்ய முடியும்,” என்றார்.

மேர்க்கெலுக்கு அவரது எதிர்ப்பை அறிவித்ததோடு திருப்தி அடையாமல், வால்ஸ், அப்பெண்மணியின் கொள்கையை எதிர்க்க வலதுசாரி தேசியவாத ஐரோப்பிய அரசியல்வாதிகளிடையே ஆதரவும் கோரினார். அவர் முதலில் பவேரியாவின் முதலமைச்சரான ஹோர்ஸ்ட் சீகோவரை சந்தித்தார், இவரது கிறிஸ்துவ சமூக கட்சி (CSU) மேர்க்கெலின் அகதிகள் கொள்கையை வெளிப்படையாக விமர்சிக்கிறது. வால்ஸ் பின்னர் சனிக்கிழமையன்று ரஷ்ய பிரதம மந்திரி டிமிட்ரி மெட்வடெவ் உடன் மதிய உணவு விருந்தில் கலந்து கொண்டார், அதற்கு முந்தைய நாள் தான் பேர்லினின் அகதிகள் கொள்கையை "முட்டாள்தனமானது" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்த கூட்டம் முடிந்த பின்னர், பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூன், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தொடர்ந்து இருப்பதற்கான நிபந்தனைகள் குறித்து ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் உடன் விவாதிக்க பாரிஸ் பயணித்திருந்த போது, வால்ஸ், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டிஷ் வெளியேற்றம் என்பது ஐரோப்பாவிற்குள் "திரும்ப முடியாத இடம்பெயர்வாக" இருக்கும் என்று எச்சரித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை ஸ்தாபித்து மாஸ்ட்ரிச் உடன்படிக்கையை நிறைவேற்றியதுடன் 1992 இல் அறிவிக்கப்பட்ட ஒட்டுமொத்த ஐரோப்பிய திட்டமும், 25 ஆண்டுகளுக்கு குறைவான காலத்தில், உருக்குலைய தொடங்கியுள்ளது. அதேநேரத்தில், கிழக்கு ஐரோப்பா எங்கிலும் முதலாளித்துவ மீட்சியின் பாகமாக ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்ததும் விரைவிலேயே, முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்கியவர்கள், கம்யூனிச அபாயம் முடிவுற்றிருப்பது ஐரோப்பாவில் ஐக்கியத்தை உருவாக்கும் என்று வாதிட்டனர்.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியமோ, சமாதானம், செழிப்பு மற்றும் ஐக்கியத்திற்கான தளமாக இல்லாமல், தேசிய பேரினவாதம், சிக்கனத்திட்டம் மற்றும் போரின் ஒரு புதிய வெடிப்புக்கு வழிவகுப்பதை நிரூபிக்கிறது.

இந்த ஆழ்ந்த மற்றும் வேகமாக-வளர்ந்துவரும் முரண்பாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை உடைத்துக் கொண்டிருக்கின்றன என்பது லியோன் ட்ரொட்ஸ்கி எழுதிய ஒரு முதலாளித்துவ அடித்தளத்தில் ஐரோப்பாவை ஒன்றுபடுத்துவதற்கான சாத்தியமே இல்லை என்ற எழுத்துக்களை நிரூபிக்கிறது. “உற்பத்தி சக்திகளை இனியும் தேசிய அரசின் கட்டமைப்புக்குள் இணக்கப்படுத்தி வைக்க முடியாது என்ற உண்மை, முதலாளித்துவ சமூகத்தின் நெருக்கடிகளுக்கான அடிப்படை காரணங்களில் ஒன்றாகும்,” நிரந்தர புரட்சி நூலில் ட்ரொட்ஸ்கி எழுதினார். “இதிலிருந்து, ஒருபுறம், ஏகாதிபத்திய போர்களும், மறுபுறம், ஒரு முதலாளித்துவ ஐரோப்பிய ஐக்கிய அரசுகளின் கற்பனாவாதமும் பின்தொடர்கிறது."

தசாப்தங்களாக ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியா ஏகாதிபத்திய போர்களால் நாசமாக்கப்பட்ட சமூகங்களிலிருந்து தப்பிவரும் நிராதரவான மில்லியன் கணக்கான அகதிகளின் கதி, ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே தீவிரமடைந்துவரும் புவிசார்-மூலோபாய மற்றும் பொருளாதார முரண்பாடுகளின் குவிமையமாக மாறியுள்ளது. இது எல்லைகள், பொருளாதார கொள்கை மற்றும் உலகின் பல்வேறு பாகங்கள் மீதான, குறிப்பாக கிழக்கு ஐரோப்பா மீதான, முரண்பாடான நலன்களில் மோதல்களைத் தூண்டி வருகிறது, இவை அரசியல்ரீதியிலும் மற்றும் வரலாற்றுரீதியிலும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் இரத்தந்தோய்ந்த முரண்பாடுகளில் ஆழமாக வேரூன்றியுள்ளன.

அநாமதேய ஜேர்மன் அதிகாரிகள், ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளை மீறும் பிரான்சின் வரவு-செலவு திட்டக்கணக்கு பற்றாக்குறையின் அளவை நிராகரிப்பதன் மூலம் ஜேர்மன் கொள்கை மீதான விமர்சனங்களுக்கு அவர்கள் பதிலடி கொடுக்க இருப்பதாக குறிப்பாக Le Monde பத்திரிகை நினைவூட்டியது. ஐரோப்பிய வங்கிகள் 1 ட்ரில்லியன் அறவிடமுடியாக் கடன்களை முகங்கொடுத்திருப்பதுடன் ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலும் வேலைநீக்கங்கள் பரவி வருகின்ற நிலையில், பேர்லின் கிரீஸில் இருந்து இத்தாலி வரை, பிரான்ஸ் வரையில் எலும்பை முறிக்கும் சிக்கனத் திட்டங்களுக்கு அழுத்தம் அளித்தால் நிதியியல் சந்தைகளின் விற்றுத்தள்ளல்கள் ஐரோப்பாவில் ஒரு பொருளாதார பொறிவைத் தூண்டிவிடும்.

அகதிகள் குறித்த வால்ஸின் கருத்துக்கள் "அனைத்திற்கும் மேலாக நட்புறவுடன் இல்லை" அவ்விதத்தில் அது திங்களன்று பிராக் (Prague) இல் கூடிய மசிடோனியா, பல்கேரியா மற்றும் வைஸ்கார்ட் குழுமம் (செக் குடியரசு, போலந்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாகியா) ஆகியவற்றிடமிருந்து பேர்லினுக்கு எதிர்ப்பு வருவதை ஊக்குவித்ததாக பெயர்வெளியிட விரும்பாத ஜேர்மன் அதிகாரிகள் கூடுதலாக தெரிவித்தனர். ஜேர்மனியுடன் பொருளாதாரரீதியில் நெருக்கமாக ஒருங்கிணைந்துள்ள பேர்லினின் பாரம்பரிய கூட்டாளிகளான அந்த ஆறு கிழக்கு ஐரோப்பிய நாடுகள், அகதிகள் குறித்த மேர்க்கெலின் ஒதுக்கீட்டு முன்மொழிவை எதிர்த்தன. அதுமட்டுமின்றி, அவை ஐரோப்பாவின் ஏனையப் பகுதிகளுக்குள் அகதிகள் நுழைவதைத் தடுக்க கிரீஸை ஒட்டியுள்ள மசிடோனியாவின் எல்லையை மூடுவதற்கு உதவவும் ஒப்புக் கொண்டன.

உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவுடனான ஒரு பொறுப்பற்ற மோதலுக்காக பெரும்பாலான கிழக்கு ஐரோப்பிய நாடுகளை நேட்டோ இராணுவமயப்படுத்துகின்ற போதினும் கூட, அகதிகள் கொள்கை மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் மேலாளுமை மீது பேர்லின் மற்றும் பாரிஸிற்கு இடையே நிலவும் அதிகார போராட்டம் ஓர் அரசியல் உடைவிற்கு மற்றொரு அச்சுறுத்தலான அறிகுறியாக உள்ளது. பேர்லின் 2014 இல் அதன் மீள்இராணுவமயப்படுத்திய வெளியுறவு கொள்கையைத் தொடங்கியதில் இருந்து, ஐரோப்பிய அரசுகள் அவற்றின் இராணுவ படைகளுக்கு நூற்றுக் கணக்கான பில்லியன்களை கூடுதலாக செலவிட திட்டங்களை அறிவித்துள்ளன.

முதலாம் உலக போருக்கு முன்னர், அப்போது பிரான்ஸ் ரஷ்யாவுடன் ஒரு ஜேர்மன்-விரோத கூட்டணியை ஏற்படுத்தி இருந்தது, மற்றும் இரண்டாம் உலக போருக்கு முன்னர், அப்போது ஜேர்மனிக்கு எதிராக அதன் கிழக்கு கூட்டாளியாக போலந்து இருந்தது, இப்போது அதைப்போலவே, பிரான்ஸ் பேர்லினை எதிர்க்க கிழக்கு நாடுகளுக்கு அரசியல் கோரிக்கைவிடுவதன் மூலமாக ஜேர்மனியின் அதிகரித்துவரும் பொருளதார மற்றும் இராணுவ பலத்தை எதிரீடு செய்ய முயற்சிக்கிறது.

சர்வதேச மோதலின் தீவிரப்பாடு, தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்த இராணுவவாதம் மற்றும் தேசிய பேரினவாதம் ஆகியவற்றைத் திட்டமிட்டு தூண்டிவிடுவதுடன் சேர்ந்துள்ளது, இது உழைக்கும் மக்கள் முகங்கொடுக்கும் மிகப்பெரிய அபாயங்களில் ஒன்றாகும், இதை புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்களில் கூர்மையாகக் காணமுடியும். பிரதான ஐரோப்பிய சக்திகளுக்கு இடையிலான மோதல்கள் ஐரோப்பாவைப் போர் மற்றும் உடைவின் பாதைக்குத் திரும்ப இழுத்து வருகின்ற நிலையில், ஐரோப்பிய ஐக்கியத்திற்கான பாதையானது முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்து ஐரோப்பாவின் சகல நாடுகளிலும் சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்காக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் போராட்டத்தினூடாக செல்கிறது.

இந்த பதட்டமான அரசியல் உள்ளடக்கத்தில், பிரான்சில், வால்ஸின் சோசலிஸ்ட் கட்சியில் இருந்து நவ-பாசிசவாத தேசிய முன்னணி (FN) வரையிலான கட்சிகளாலும் மற்றும் ஜேர்மனியில் CSU மற்றும் திலோ சராஜின் போன்ற அரசியல்வாதிகளால், கிழக்கு ஐரோப்பா எங்கிலும் தூண்டிவிடப்பட்ட புலம்பெயர்ந்தோர்-விரோத உணர்வு ஐரோப்பாவை பேரழிவுகரமான ஒரு போக்கில் நிறுத்தி வருகிறது.

தேசிய முன்னணி தலைவர் மரீன் லு பென் மற்றும் இடது முன்னணி தலைவர் ஜோன்-லுக் மெலென்சோன் போன்ற பிரான்சில் உள்ள ஜேர்மன்-விரோத சக்திகளின் தாக்கத்தின் கீழ், அல்லது ஒட்டுமொத்த ஜேர்மன் ஆளும் மேற்தட்டால் தூண்டிவிடப்பட்ட கிரேக்க-எதிர்ப்புணர்வின் தாக்கத்தின் கீழ், ஐரோப்பா எங்கிலும் ஊக்குவிக்கப்பட்டு வருகின்ற புலம்பெயர்ந்தோர்-விரோத விஷமப் பிரச்சாரம் மற்றும் இராணுவவாதம், கடந்த நூற்றாண்டில் திரும்ப திரும்ப போருக்குள் அக்கண்டத்தை மூழ்கடித்த ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான வெறுப்பாக மீண்டும் ஒருமுறை வெடிக்கக்கூடும்.