ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

இலங்கை: பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் இன்ஜஸ்றீ நிர்வாகத்தின் நிபந்தனைகளை தொழிலாளர்கள் மீது சுமத்துகின்றன

By M. Devarajah
10 February 2016

இலங்கையின் மத்திய தேயிலைத் தோட்டத்தில், இன்ஜஸ்றீ தோட்டத் தொழிலாளர்கள் மீது தோட்ட நிர்வாகத்தின் நிபந்தனைகளை சுமத்துவதற்கு, தோட்டத் தொழிற்சங்கங்கள் நேரடியாக ஆதரவளித்துள்ளமை, தொழிற்சங்கங்களின் பிற்போக்கு வேலைத் திட்டத்தின் பாரிய ஆபத்தினைப் புலப்படுத்துகின்றது.

களனிவெலி பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தினால் நிர்வகிக்கப்படும் ஹட்டன், டிக்கோயா பிரதேசத்தில் உள்ள இன்ஜஸ்றீ தோட்டத்தில், வேலைத் தடைவிதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துவதன் பேரில், பெருந்தோட்ட நிர்வாகத்தினதும் பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தினதும் நிபந்தனைகளை திணிக்க தோட்டத் தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) தலைவர்கள் நேரடியாக தலையீடு செய்துள்ளனர்,

கணேசன் சிவகுமாரன், கணேசன் புஸ்பகுமாரன், கோவிந்தன் லெட்சுமணன், இ.தொ.கா. பிரதேசத் தலைவர் பெருமாள் முருகன், சங்கிலிமுத்து சங்கரன், மாரிமுத்து யோகேந்திரன், இன்ஜஸ்றீ தோட்ட இ.தொ.கா. தலைவர் சிவசாமி மகேந்திரன் போன்ற 7 தொழிலாளர்கள் வேலை இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்பளக் கோரிக்கை மீது கடந்த வருடம் ஜூலை 6 அன்று ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தினைத் தகர்த்துவிட தோட்ட நிர்வாகமும் அரசாங்கமும் எடுத்த அடக்குமுறை நவடிக்கையின் போதே, அவர்கள் மீது வேலைத் தடை விதிக்கப்பட்டது. அடக்கு முறைக்கு மத்தியில் ஜூலை 18 வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது. இந்த ஏழு தொழிலாளர்களும் போராட்டத்தின் போது முன்னணியில் நின்ற போராளிகளாவர்.

பெப்பிரவரி முதலாம் திகதி இவர்கள் வேலைக்கு அழைக்கப்பட்டார்கள். ஆயினும் தண்டனையாக சிவகுமாரனும் புஸ்பநாதனும் கம்பனிக்கு சொந்தமான புலியாவத்தை தோட்டத்தின் கீழ்ப் பிரிவுக்கும், சங்கரன் மற்றும் யோகேந்திரனும் மேற்பிரிவுக்கும் இடமாற்றப்பட்டதுடன், லெட்சுமணனும் முருகனும் இன்ஜஸ்றீ தோட்ட பீட்ரூட் பிரிவுக்கும், மகேந்திரன் அதன் பாத்போர்ட் பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வேலைத் தடை விதிக்கப்பட்ட ஏழு மாதத்துக்கான சம்பளத்தினையும் வழங்குவதற்கு நிர்வாகம் மறுத்துவிட்டது.

அத்துடன் இன்ஜஸ்றீ தோட்ட முகாமையாளரது பங்களா மற்றும் தோட்டத்துக்கு சேதம் விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கும் நீடிக்கப்பட்டுள்ளதுடன், மார்ச் 28 அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படடவுள்ளது. தமக்கு எதிராக நிர்வாகத்தினாலும் பொலிசாரினாலும் சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானது என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துவது சம்பந்தமாக, தோட்ட நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையில் ஜனவரி 13 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, களனிவெலி தோட்ட கூட்டுத்தாபன நிர்வாகியும் தோட்ட உரிமையாளர் சங்க தலைவருமான ரொஷான் ராஜதுரையும் தனிப்பட்ட ரீதியில் பங்குபற்றினார்கள். வேட்டைக்கு இலக்கான தொழிலாளர்களும் பேச்சுவார்தையில் பங்குபற்றியதுடன், “உற்பத்தி வளத்தை உயர்த்துவதற்கு நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும்” என ராஜதுரை அவ்விடத்தில் சுட்டிக் காட்டியதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வேட்டையாடப்பட்ட தொழிலாளர்களுக்கு விதிக்கபட்ட தண்டனை அசாதாரணமானது என விவாதித்த யோகேந்திரன் மீது கோபமடைந்த ராஜதுரை, “நீ வழக்கறிஞர் போல் பேசுகிறாய், நீதிமன்றத்துக்கு போய் மீண்டும் வேலையை பெற்றுக்கொள்,” என்று மிரட்டியதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ராஜதுரையின் மிரட்டலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யோகேந்திரன் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறிய போதிலும், நிர்வாகத்தின் வேட்டைக்கு எதிராக தொழிலாளர்களின் எதிர்ப்பு வளர்ச்சியடையலாம் என்று அச்சமைடைந்த தோட்டத் தொழிற்சங்கத் தலமைகள், அவரைச் சமாதானப்படுத்தி மீண்டும் பேச்சுவார்த்தைக்குள் கூட்டிவந்தனர். இந்த தொழிலாளர்கள் பெப்ரவரி 1 மீண்டும் வேலைக்கு அமரத்தப்பட்டாலும், யோகேந்திரனை வேலைக்கு அமர்த்துவதை நிர்வாகம் இரண்டுவார காலம் தாமதப்படுத்த தீர்மானித்துள்ளது. இது தொழிலாளர்களது ஜனநாயக உரிமைகள் பற்றி அவர் பேசியதற்கான தண்டனேயே ஆகும்.

பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய இ.தொ.கா. டிக்கோயா பிரதிநிதியோ அல்லது இன்ஜஸ்றீ தோட்ட இ.தொ.கா. தொழிற்சங்க தலைவர்களோ, தொழிலாளர்கள் மீது விதிக்கப்பட்ட தண்டைனை குறித்தோ அல்லது ராஜதுரை விடுத்த மிரட்டல் பற்றியோ எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்காது வாய் பொத்தி அமர்ந்து இருந்ததாக கூறப்படுகின்றது.

மீண்டும் வேலைக்கு அமர்த்துவதற்கான கடிதத்தில் வேலைத் தடை விதிக்கப்பட்டதற்கான போலிக் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் மற்றும் முத்து சிவலிங்கத்தின் கோரிக்கையின் பேரில் மீண்டும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதங்கள் யாவும் இ.தொ.கா. தலைவர்களால் சேகரிக்கப்பட்டுள்ளன. இது அவர்களின் துரோக காட்டிக் கொடுப்பு அம்பலப்படுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.

இன்ஜஸ்றீ தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தினைத் தகர்ப்பதற்காக, மெதுவாக வேலை செய்த தினங்களில் தொழிலாளர்கள் பறித்த கொழுந்தை ஏற்க நிர்வாகம் மறுத்துவிட்டதுடன், வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு எதிராக பொலிசாரைத் தூண்டிவிடும் பிற்போக்கு நிலமைகளை வேண்டுமென்றே உருவாக்கி விட்டது. பறித்த கொழுந்தை ஏற்க மறுத்ததால் கோபமுற்ற தொழிலாளர்கள், அவற்றினைத் தோட்ட முகாமையாளர் வீட்டின் தோட்டத்தில் குவித்தனர். தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டையை ஆரம்பிக்க, இந்த சந்தர்ப்பத்தினை தோட்ட நிர்வாகம் விரைவாகப் பற்றிக் கொண்டது.

தொழிலாளர்களது நாள் சம்பளம் 620 ரூபாவில் இருந்து 1000 ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கையை நிராகரித்த தோட்டக் கம்பனிகள், மாறாக வேலைச் சுமையை திணிக்க முயற்சிப்பதற்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பரந்த எதிர்ப்பு வளர்ச்சி கண்ட நிலைமையிலேயே, மட்டுப்படுத்தப்பட்ட மெதுவாக வேலை செய்யும் பிரச்சாரத்தை இ.தொ.கா. தலைவர்கள் இன்ஜஸ்றீ தோட்டத்தில் ஆரம்பித்தனர். இ.தொ.கா. ஆகஸ்ட் பொதுத் தேர்தலைக் காரணம் காட்டி இந்த எதிர்ப்பு இயக்கத்தினை ஜூலை 18 அன்று நிறுத்திக்கொண்டது.

வேலை நிறுத்தப் போராட்டத்தினை நிறுத்தியவுடன் தொழிலாளர்கள் மீதான வேட்டையாடல் கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஜூலை 20 மேற்குறித்த 7 தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தின் முறைப்பாட்டின் பேரில் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டையில் இருந்து அவர்களைப் பாதுகாக்க எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்காத இ.தொ.கா. தலமைகள், தோட்ட நிர்வாகத்தின் கேடுகெட்ட நிபந்தனைகளுக்கு தொழிலாளர்களை அடிபணியச் செய்யும் பொருட்டு, தோட்ட முகாமையாளருடன் மிகுந்த ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றனர் என்பது தெட்டத் தெளிவாகியுள்ளது.

தோட்ட நிர்வாகமும், பெருந்தோட்ட உரிமையாளர் சங்கமும் சம்பளக் கோரிக்கையை தொடர்ந்தும் நிராகரித்து வருகின்றன. 2013 சம்பள உடன்படிக்கை காலாவதியாகி ஓராண்டு கழிந்துள்ளது. அதனை ஓராண்டு மேலும் நீடிக்க வேண்டும் என்ற நிர்வாகத்தின் கோரிக்கையை தொழிலாளர்களின் சம்மதமின்றி தொழிற்சங்கங்கள் மௌனமாக ஏற்றுக் கொண்டுள்ளன. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினால் தொழிலாளர்களது சம்பளம் வெட்டப்பட்டுள்ள அதே வேளை, தொழிலாளர்களின் அமைதியின்மையை தணிப்பதற்காக, அரசாங்கத்தின் தலையீட்டுடன் 2500 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என தொழிற்சங்கங்கள் பிரச்சாரம் செய்கின்றன.

இதே வேளை தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் கம்பனிகள் வருமானப் பங்கீடு முறைமையை பெருந்தோட்டங்களில் அமுல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளன. இதன்படி ஒரு தொழிலாளிக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேயிலைச் செடிகள் ஒதுக்கப்பட்டு அவற்றை பராமரிக்கும் பொறுப்பு தொழிலாளியிடம் ஒப்படைக்கப்படும். உரம் மற்றும் மருந்து உட்பட பராமரிப்பு செலவுகளை கம்பனி கழித்துக்கொண்டு வருமானத்தில் ஒரு பங்கை தொழிலாளிக்கு கொடுக்கும்.

இதன் மூலம் கம்பனிகள் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் மருத்துவ வசதி போன்ற போராடிப் பெற்ற உரிமைகளை அபகரிப்பதற்கான எதிர்பார்ப்பும் உள்ளது. தொழிலாளர்களது பரந்த எதிர்ப்பினால், இன்னமும் இதனை அமுல்படுத்துவதில் நிர்வாகம் தோல்வி கண்டுள்ளதுடன், மதுரட்ட பெருந்தோட்டக் கூட்டுத் தாபனம் போன்ற சில தோட்டங்களில் தற்சமயம் இந்த திட்டம் பரீட்சிக்கப்பட்டு வருகின்றது.

தோட்ட உரிமையாளர்களது நிபந்தனைகளை தொழிலாளர்கள் மீது திணிப்பதற்கு பூரண ஆதரவளிப்பது என்பது, இ.தொ.கா. தலமைக்கு மட்டுமன்றி ஏனைய தொழிற்சங்க தலமைகளுக்கும் பொதுவான வேலைத் திட்டமாகும். தொழிற்சங்க அதிகாரத்துவம், “தொழிலாளர்களது தேவைக்காக அன்றி” கம்பனிகளது இலாப நோக்கங்களுக்காக தொழிலாளர் போராட்டங்களை அடிபணியச் செய்ய முதலாளித்துவ அரசாங்கங்களிடமிருந்து தமக்கு கிடைக்கும் சலுகைகளையிட்டு மட்டுமே அக்கறை காட்டுகின்றன. தே.தொ.ச. தலைவர் பீ. திகாம்பரம், ஜ.தொ.கா. தலைவர் மனோ கணேசன், ம.ம.மு. தலைவர் பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் அரசாங்க அமைச்சர்களாவார். இ.தொ.கா. தலைவர்கள் கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்ததுடன் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிக்காக ஏங்குகின்றனர்.

இன்ஜஸ்றீ தோட்ட தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டைக்கு ஆதரவளித்து நிர்வாகத்தின் நிபந்தனைகளை தொழிலாளர்கள் மீது சுமத்த தொழிற்சங்க அதிகாரத்துவம் செய்த துரோகத்தை தோட்டத் தொழிலாளர்களைப் போன்று முழுத் தொழிலாள வர்க்கமும் கண்டிக்க வேண்டும். அவர்கள் மீதான போலிக் குற்றச்சாட்டையும், அவர்களுக்கு எதிரான தண்டனைகளையும் இரத்துச் செய்யுமாறு நிர்ப்பந்தித்து, வேட்டையாடப்பட்ட தொழிலாளர்களது ஜனநாயக உரிமை மற்றும் தொழில் உரிமைகளைக் காக்க ஒட்டுமொத்த தொழிலாளர்களும் முன்வர வேண்டும்.

தோட்டக் கம்பனிகள், அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களும் ஓரணியில் நின்று, தொழிலாளர்கள் மீது உலகப் பொருளாதார நெருக்கடியின் சுமைகளைத் திணிக்கச் செயற்பட்டுவரும் நிலமைகளின் கீழ், அதற்கு எதிராகப் போராடி உரிமைகளைப் பேண வேண்டுமெனில், தொழிலாளர்கள் ஒரு சோசலிச வேலைத் திட்டத்துக்காகப் போராடுவதன் பேரில் தொழிற்சங்கங்களை விட்டு விலகி, நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும். இது முழுத் தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்டும் அரசியல் போராட்டம் ஒன்றாகும்.

இத்தகைய வேலைத் திட்டத்தைப் பற்றி கலந்துரையாடுவதற்காக சோசலிச சமத்துவக் கட்சி ஹட்டன் நகரசபை மண்டபத்தில் மார்ச் 13 அன்று பி.ப. 2 மணிக்கு பகிரங்க கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது. அக் கூட்டத்துக்கு சமூகமளிக்குமாறு நாம் சகல தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.