ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lanka: Plantation unions suppress struggle for wage rise

இலங்கை: பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் சம்பள உயர்வுக்கான போராட்டத்தை ஒடுக்குகின்றன

By M. Thevarajah and W. A. Sunil 
6 February 2016

இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள், பிரதான பெருந்தோட்டக் கம்பனிகள் எந்தவொரு சம்பள அதிகரிப்பும் சாத்தியம் இல்லை என்று வலியுறுத்துகின்ற நிலையிலும், நியாயமான சம்பள உயர்வுக்கான தொழிலாளர்களின் எந்தவொரு போராட்டத்தையும் தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றன.

கம்பனிகளுடனான ஒரு புதிய கூட்டு ஒப்பந்தத்தின் பாகமாக 2,500 ரூபா (17 அமெரிக்க டொலர்) அதிகரிப்புக்கு உத்தரவிட அரசாங்கம் தலையீடு செய்யும் என்ற மாயையை தொழிற்சங்கங்கள் பரப்புகின்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), தொழிலாளர் தேசிய சங்கம் (தொ.தே.ச.), ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா.), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) ஆகியவை இந்த தொழிற்சங்கங்களில் அடங்குகின்றன.

இந்த தொகை கொடுக்கப்பட்டாலும் கூட, மாதம் 25 நாட்கள் வேலை செய்யும் ஒரு தோட்டத் தொழிலாளிக்கு ஒரு நாள் வேதனம் 100 ரூபாவால் மட்டுமே அதிகரிக்கும். இதன் மூலம் அதிகபட்ச அன்றாட ஊதியம் 620 ரூபாயில் இருந்து 720 ரூபா வரை அதிகருக்கும் -இது தொழிற்சங்கங்கள் கோரிய 1000 ரூபாவை விட மிகக் குறைவாகும்.

2,500 ரூபா மாதாந்த சம்பள அதிகரிப்பானது அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகளை அப்பட்டமாக மீறுவதாகும். 2015 ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் பொருட்டு, மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போது எதிர்க் கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியும் (யூ.என்.பி.), பொது மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அனைவருக்கும் 10,000 ரூபா சம்பள உயர்வு வழங்குவதாக வாக்குறுதியளித்தனர்.

ஒரு நீண்ட தாமதத்தின் பின்னர், வேலை நிறுத்தங்கள் வெடிப்பதற்கான அச்சுறுத்தலை எதிர்கொண்ட நிலையில், இறுதியாக அரசாங்கம் அரசாங்க ஊழியர்களுக்கான ஊதியம் 10,000 ரூபாவால் அதிகரிக்கும், அதுவும் மூன்று தவணைகளிலேயே என்று அறிவித்தது. தனியார் துறைக்கு, 2,500 ரூபா அதிகரிப்புக்கு ஒரு வர்த்தமானி அறிவித்தலை விடுவதாக அது வாக்குறுதியளித்த போதிலும், இன்னும் அது நடக்கவில்லை. ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டாலும் கூட, பெருந்தோட்ட அல்லது ஏனைய தனியார் துறை நிறுவனங்கள் ஊதிய உயர்வை அமுல்படுத்தும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது.

எந்தவொரு நியாயமான சம்பள போராட்டத்தையும் கவிழ்ப்பதன் பேரில், தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் வெற்று வாய்சவடால்கள் மற்றும் அப்பட்டமான பொய்களை பயன்படுத்துகின்றன. ஜனவரி 15, அரசாங்க அமைச்சரும் ஜ.தொ.கா. தலைவருமான மனோ கணேசன், திறைசேரி தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கு பணம் செலுத்தும் என்று கூறினார். உண்மையில், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த செலவுகளை கடுமையாகக் குறைக்க அவநம்பிக்கையுடன் முயற்சிக்கின்றது.

கடந்த மாதம், பெருந்தோட்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, கம்பனிகள் ஊதிய உயர்வு கொடுக்கத் தவறினால் தோட்டங்களை அரசு எடுத்துக் கொள்ளும் என்று அறிவித்தார். யாரும் இந்த யு.என்.பி. அரசியல்வாதியை தீவிரமானவராக நம்பிவிடக் கூடாது. யு.என்.பி. ஒரு வலதுசாரி வணிகச்-சார்பு கட்சியாகும். இந்தக் கட்சயே 1992ல் பெருந்தோட்டங்களைத் தனியார்மயமாக்கியது.

அச்சுறுத்தலுக்கு விடையிறுத்த பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரொஷான் இராஜதுரை, நாளொன்றுக்கு 100 ரூபாய் ஊதிய உயர்வுக்கு கம்பனிகள் ஆண்டுக்கு 6 பில்லியன் ரூபாய்களை கூடுதலாக செலுத்த வேண்டும் என்பதாகும், இது சாத்தியமற்றது, என்று அறிவித்தார்.

பெருந்தோட்டத் துறை "மிக இருண்ட காலத்தை" எதிர்கொண்டுள்ளது என்று அறிவித்த இராஜதுரை வலியுறுத்தியதாவது: "அத்தகைய சூழ்நிலையில், நிறைவேற்ற முடியாத சாத்தியமற்ற கோரிக்கைகளுடன் தொடர்ந்து பிடிவாதமாக ஒட்டிக்கொண்டிருப்பது, 'முட்டை இடும் வாத்தை கொல்வதற்கு' சம்மான குறுகிய நோக்குடைய கொள்கையாகும்." சம்பளம் அதிகரிக்கப்பட்டால் தொழிற்துறை "சரிந்து போகும்."

தோட்டக் கம்பனிகள் தொழிலாளர்கள் உலக தேயிலை சந்தையில் அதிகரித்து வரும் நெருக்கடியின் தாக்கத்தை தாங்கிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றன. இலங்கையானது ஏற்றுமதி வீழ்ச்சியையும் கென்யா, இந்தியா மற்றும் சீனா போன்ற ஏனைய தேயிலை மற்றும் ரப்பர் உற்பத்தி நாடுகளிடம் இருந்து வளர்ந்து வரும் போட்டியையும் எதிர்கொள்கின்றது. கம்பனிகள் 2014-2015 காலப்பகுதியில் 4,000 மில்லியன் ரூபா பெறுமதியான ஏற்றுமதி வருமானத்தை இழந்துள்ளதாக இராஜதுரை கூறினார்.

பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம், வருமானப் பங்குத் திட்டம் ஒன்றை பிரேரித்துள்ளது. இது, நாள் சம்பள முறைமையை அகற்றி, தொழிலாளர்களை கம்பனிகளுக்காக அர்ப்பணித்துக்கொண்டுள்ள வறிய குத்தகை விவசாயிகளாக மாற்றுவதாகும். இந்த திட்டத்தின் படி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் பராமரிப்பதற்கும் அறுவடை செய்வதற்கும் 1,000 தேயிலைச் செடிகள் ஒதுக்கப்படும். கம்பனி தனது செலவுகளை கழித்துக்கொண்ட பின்னர், ஒரு அற்ப தொகையை பங்காக கம்பனி தொழிலாளிக்கு கொடுக்கும்.

இராஜதுரையின் அறிக்கையில், சங்கமானது தோட்டங்கள் தனியார்மயமாக்கப்பட்டதில் இருந்து 13 மடங்கு சம்பளத்தை அதிகரித்து "பல வசதிகளையும்" அளித்துள்ளது என்று கூறினார். எனினும், ஊதியங்கள் வேகமான வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு போதுமானதாக இல்லாததோடு வறிய மட்டத்திலேயே உள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் ஆவர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது, 620 ரூபாய் மொத்த தினசரி ஊதியம் வழங்கப்படுகிறது. அதுவும் அவர்கள் வேலை நாட்களில் 75 சதவீதம் உழைத்தால் மட்டுமே. இல்லையெனில், அவர்களுக்கு 450 ரூபாய் மட்டுமே கிடைக்கும். கழிக்கப்படவேண்டியவை போக, அவர்களின் மாதாந்த வருமானம் 10,000 ரூபாவையும் விட குறைவாகும். அவர்களுக்கு ஏப்ரலில் புத்தாண்டு, மே தினம் மற்றும் தேசிய சுதந்திர தின விடுமுறை தவிர்ந்த வேறு மருத்துவ விடுமுறைகளோ, ஆண்டு விடுமுறை அல்லது ஊதியம் விடுமுறையோ கிடையாது.

பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு செயலாளர் வி. சிவஞானசோதியின் ஒரு சமீபத்திய அறிக்கை, தோட்டத் தொழிலாளர்கள் "மிகவும் குறைவான வருவாய், இறுக்கமான மற்றும் நவீனப்படுத்தப்படாத வீடு, வறிய சுகாதார, கல்வி மற்றும் நலன்புரி சேவைகளுடனேயே" வாழ்கின்றனர் என தெரிவிக்கின்றது.

அறிக்கை மேலும் கூறியது: "வறுமை எண்ணிக்கை விகிதம் தோட்டத் துறையில் அபாயகரமானவு உயர்வாக காணப்படுகின்றது அது, 6.7 என்ற தேசிய சராசரி சதவீதத்துடன் ஒப்பிடும் போது 10.9 சதவீதமாக உள்ளது. ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளில் 30 வீதமானவர்கள் எடை குறைவானவர்கள். அதே வேளை சிசு மரண வீதம் அதிகரித்துக் காணப்படுகிறது. 1000 பிறப்புக்கு 29 மரணங்கள் நிகழ்கின்றன. மக்கள் தொகையில் 52 சதவிகிதமானவர்களுக்கு மட்டுமே பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதோடு பாதுகாப்பான சுகாதார வசதி 73 சதவீதமானவர்களுக்உக மட்டுமே உள்ளது."

ஏற்றுமதி வருமானத்தின் சமீபத்திய வீழ்ச்சி வரை, தேயிலை நிறுவனங்கள் அதிக இலாபம் பெற்றுள்ளதோடு இப்போதும் கூட கணிசமான வருமானத்தை பெறுகின்றன. உதாரணமாக 2014-2015 நிதி ஆண்டில் வட்டவளை, எல்பிட்டிய மற்றும் ஹேலீஸ் பெருந்தோட்டங்கள், முறையே 888 மில்லியன் ரூபா, 811 மில்லியன் ரூபா, 219 மில்லியன் ரூபா லாபமாகப் பெற்றுள்ளன.

ஊதியங்களில் எந்த அதிகரிப்பும் செய்ய தோட்ட நிறுவனங்கள் மறுக்கின்றமை, இலாப முறைமையைப் பேணுவதானது தொழிலாள வர்க்கத்தின் மிக அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பொருத்தமற்றது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நியாயமான சம்பளம் மற்றும் வேலை நிலைமைகளுக்காகப் போராட, தோட்டத் தொழிலாளர்கள், கம்பனிகளுக்கு எதிராக மட்டுமன்றி, அவற்றின் சேவையாளர்களாக இப்போதும் எப்போதும் செயலாற்றும் அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும், ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் போராட வேண்டும்.