ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Washington denounces Russia, backs escalation of Syria war

வாஷிங்டன் ரஷ்யாவை குற்றஞ்சாட்டி, சிரிய போரின் தீவிரப்படுத்தலை ஆதரிக்கிறது

By Alex Lantier
15 February 2016

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரியும் மற்றும் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவும் வெள்ளியன்று சிரியாவில் "விரோத நிலைப்பாட்டை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதற்கான" ஒரு தெளிவற்ற திட்டத்தை வெளியிட்ட வெறும் ஒரு சில மணி நேரத்திற்குப் பின்னர், பல பிரதான அரசு தலைவர்கள் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் (MSC) ஒன்று கூடிய போது, அமெரிக்க கூட்டாளிகள் பெரியளவில் போரைப் தீவிரப்படுத்த அழுத்தமளித்தனர்.

சனிக்கிழமையன்று துருக்கி மற்றும் சவூதி அதிகாரிகள் சிரியா மீது குண்டுவீச்சையும் மற்றும் ஒரு தரை படையெடுப்பையும் தொடங்குவதற்கான அவர்களின் திட்டத்தை உறுதிப்படுத்தினர். “துருக்கி மற்றும் சவூதி அரேபியா தரைப்படை நடவடிக்கையைத் தொடங்கக்கூடும்,” என்று துருக்கிய வெளியுறவுத்துறை மந்திரி மெவ்லுத் கவ்சோக்லு (Mevlut Cavusoglu) Yeni Safak க்குத் தெரிவித்தார், சவுதி அரேபியா துருக்கியின் Incirlik விமானப் படைத்தளத்திற்குப் "போர்விமானங்கள் மற்றும் துருப்புக்கள் இரண்டையும் அனுப்ப தயாராக" உள்ளது என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

ஒட்டுமொத்த மத்தியகிழக்கையும் சுற்றி வளைத்து, உலக போராக தீவிரமடையக்கூடிய ஒரு போராக அது கட்டவிழ அச்சுறுத்துகின்ற போதினும், வாஷிங்டன் இந்த நடவடிக்கைகளுக்கு அதன் நல்லாசியை வழங்கியுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் அஷ்டன் கார்ட்டர் வெள்ளியன்று கூறுகையில், சிரியா மீது படையெடுக்க அவர் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரசு எமிரேட்ஸிடம் இருந்து அதிரடிப் படைகளை எதிர்பார்ப்பதாக வெள்ளியன்று தெரிவித்தார். அவர்கள் ISIS ஐ (ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசு) தாக்குவார்கள் என்று கார்ட்டர் வாதிட்டார்; ஆனால் துருக்கி மற்றும் சவுதி அரேபியாவும், ISIS போன்ற சிரியாவில் உள்ள சுன்னி இஸ்லாமிய சக்திகளை ஆதரிக்கின்றன மற்றும் சிரியா ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சியை அழிப்பதே அவற்றின் நோக்கமாக இருக்கும்.

வெள்ளியன்று இரவு ஜேர்மனியின் Süeddeutsche Zeitung பத்திரிகை உடன் பேசுகையில், சவூதி வெளியுறவுத்துறை மந்திரி அடெல் அல் ஜூபெர் தனிப்பட்டரீதியில் சிரிய ஜனாதிபதியை அச்சுறுத்தினார்: “அங்கே எதிர்காலத்தில் பஷர் அல்-அசாத் இருக்கமாட்டார்.” என்றார்.

நேட்டோ-ஆதரவிலான சுன்னி இஸ்லாமிய குழுக்களுக்கு எதிராக ரஷ்ய மற்றும் சிரியா அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் ஈரானிய இராணுவ படைப்பிரிவுகள், ஞாயிறன்று எச்சரிக்கையில், துருக்கி மற்றும் சவுதி அரேபியாவின் அவ்விதமான இராணுவ தீவிரப்பாட்டிற்கு அவர்கள் பதிலடி கொடுக்க வேண்டியிருக்குமென எச்சரித்தனர். “ஏதேனும் தான்தோன்றித்தனமான அரசுகள் அவற்றின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில், சிரியாவில் நிலைமையின் கட்டுப்பாட்டை இழக்க நாங்கள் விடமாட்டோம். அவசியமானால், நாங்கள் ஏதேனும் சில உரிய முடிவுகளை எடுப்போம்,” என்று துணை இராணுவ தலைமை தளபதி பிரிகேடியர் ஜெனரல் மசூத் ஜஜாயெர் தெரிவித்தார்.

சவுதி தரைப்படை நடவடிக்கைகள் ஒரு "புதிய உலக போரை" தூண்டிவிடும் என ரஷ்ய பிரதம மந்திரி டிமிட்ரி மெட்வடேவ் ஏற்கனவே எச்சரித்திருந்தார். அவர் Handelsblatt பத்திரிகைக்கு தெரிவிக்கையில், “ஒரு தரைப்படை நடவடிக்கையானது அதில் பங்கெடுக்கும் ஒவ்வொருவரையும் ஒரு போருக்குள் இழுத்து வரும் … அமெரிக்கர்களும் மற்றும் நமது அரபு கூட்டாளிகளும் ஒரு நிரந்தர போரை அவர்கள் விரும்புகிறார்களா என்பதை பரிசீலிக்க வேண்டும்,” என்றார்.

ரஷ்ய குண்டுவீச்சுக்களும் மற்றும் சிரியாவினது தாக்குதல்களும் அலெப்போ நகரை எதிர்தரப்புகளிடமிருந்து திரும்ப கைப்பற்றிவிட அச்சுறுத்துகிற நிலையில், நேட்டோ மற்றும் அதன் கூட்டாளிகள் அசாத் மற்றும் மாஸ்கோவின் தோல்வியை உறுதிப்படுத்துவதற்குப் பெரியளவில் இடைவிடாமல் மோதல்களை தொடங்க விரும்புவதைச் சமிக்ஞை செய்துள்ளன. கெர்ரி மற்றும் பிரெஞ்சு பிரதம மந்திரி மானுவெல் வால்ஸ் ரஷ்யாவைத் தாக்கியதும் சனியன்று பிரதான மூனிச் பாதுகாப்பு குழுவிற்குள் சிரியா மீதான வாக்குவாதங்கள் வெடித்தன. அதன் இஸ்லாமிய பினாமிகள் தோற்கடிக்கப்படுவதை நேட்டோ அனுமதிக்காது என்று அது எச்சரித்தது.

சிரியாவில் "தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு" குறித்து கெர்ரி மாஸ்கோவைக் குற்றஞ்சாட்டினார். “என்னைப் பொறுத்த வரையில், இன்று வரையில், ரஷ்ய தாக்குதல்களில் அதிக பெரும்பான்மை, சட்டபூர்வ எதிர்ப்பு குழுக்களுக்கு எதிராகவே இருந்துள்ளன,” என்றவர் அறிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவித்தார்: “அசாத் மற்றும் அவரது கூட்டாளிகள், ரஷ்யா உள்ளடங்கலாக, இவர்கள் சர்வதேச சமூகத்தின் விருப்பத்தை நிராகரித்து, போரில் ஜெயித்து விடலாம் என்று நம்பக்கூடும். ரஷ்யாவும் அசாத்தும் அப்படி தான் நினைக்கிறார்கள் என்றால், பின் அவர்கள் கடந்த ஐந்தாண்டுகளின் படிப்பினைகளைத் தவறவிட்டிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்,” என்றார். அமெரிக்க ஆதரவிலான எதிர்ப்பு சக்திகள் "இங்கோ அங்கோ பின்வாங்கலாம் ஆனால் அவர்கள் சரணடையப் போவதில்லை,” என்று கெர்ரி தெரிவித்தார்.

பிரெஞ்சு பிரதம மந்திரியும் கெர்ரியின் கடுமையான பாதையை எதிரொலித்தார். “சமாதானத்திற்கான பாதையை மீண்டும் காண வேண்டுமானால், அப்பாவி பொது மக்கள் மீதான ரஷ்ய குண்டுவீச்சுக்களை நிறுத்த வேண்டுமென நாங்கள் நினைக்கிறோம்,” இது வால்ஸ் தெரிவித்தது.

சிரியாவில் கிரெம்ளின் தன்னலநிதிய அடுக்கின் விமானத் தாக்குதல்களால் விளைந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை என்னவாக இருந்தாலும் சரி, கெர்ரி மற்றும் வால்ஸின் விமர்சனங்கள் பாசாங்குத்தனமானவை மற்றும் அதன் உள்ளடக்கத்திலேயே பொய்யானது. அசாத்தைப் பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்ற நேட்டோ மற்றும் அதன் மத்திய கிழக்கு கூட்டாளிகளின் உந்துதலே, 300,000 உயிர்களைப் பறித்துள்ள மற்றும் 11 மில்லியன் சிரியர்களை அவர்களது வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்தித்த போருக்கான மத்திய காரணமாகும். “மிதவாத எதிர்ப்பு" சக்திகளாக அவர்கள் ஆதரிக்கும் அஹ்ரர் அல்-ஷம் அல்லது பரூக் படைப்பிரிவுகள் போன்ற சுன்னி இஸ்லாமிய போராளிகள் குழுக்கள், உண்மையில், சுன்னி மதவாத ஆட்சிகளை உருவாக்கவும் மற்றும் ஷியா முஸ்லீம்களுக்கு எதிரான பிரிவினைவாத வன்முறையையும் வலியுறுத்துகிறார்கள்.

மாநாட்டு அரங்கில் வால்ஸிற்கு அருகில் அமைந்திருந்த மெட்வடேவ், ரஷ்யாவிற்கு எதிராக அவரது குற்றச்சாட்டுக்களைக் கட்டமைப்பதற்காக அவரைக் குற்றஞ்சாட்டி பதிலளித்தார்: “நாங்கள் பொது மக்கள் மீது குண்டுவீசுகிறோம் என்பதற்கு அங்கே எந்த ஆதாரமும் இல்லை, இருந்தாலும் இதற்காக ஒவ்வொருவரும் எங்களைக் குற்றஞ்சாட்டுகிறீர்கள்,” என்றார்.

மெட்வடேவ் பின்னர், நிலைமையை 1962 கியூப ஏவுகணை நெருக்கடியுடன் ஒப்பிட்டு ரஷ்யாவை நோக்கிய நேட்டோவின் நிலைப்பாட்டு விரோதமானது என்று தாக்கினார். “நாம் ஒரு புதிய பனிப்போருக்குள் நுழைந்துள்ளோம்,” என்றார். “அண்மித்து நாளாந்த அடிப்படையில், நாங்கள் நேட்டோவிற்கு, ஒட்டுமொத்தமாக ஐரோப்பாவிற்கு, அமெரிக்காவிற்கு, ஏனைய நாடுகளுக்கும் மிகவும் பயங்கரமான அச்சுறுத்தலாக குற்றஞ்சாட்டப்படுகிறோம். ரஷ்யா ஓர் அணுஆயுத போரைத் தொடங்குவதாக அவர்கள் கொடூரமான காட்சிகளை உருவாக்குகிறார்கள். நாம் 2016 இல் இருக்கிறோமா அல்லது 1962 இல் இருக்கிறோமா? என்று நான் சிலவேளைகளில் ஆச்சரியப்படுவதுண்டு.”

அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே அணுஆயுத போருக்கு அண்மித்து இட்டுச் சென்ற கியூபா ஏவுகணை நெருக்கடியை மெட்வடேவ் குறிப்பிட்டுக் காட்டுவது, சாதாரண ஒன்றல்ல. கருங்கடலில் மற்றும் பால்டிக் குடியரசுகளில் விட்டுக்கொடுப்பற்ற கடற்படை நிலைநிறுத்தல் மற்றும் உக்ரேன் தொடங்கி சிரியா வரையில், ரஷ்யா மற்றும் நேட்டோவிற்கு இடையே தீவிரமடைந்துவரும் நெருக்கடிகளுக்கு இடையே, இராணுவ-இராஜாங்க அதிகாரிகளின் முன்பினும் அதிக பிரிவுகள் அணுஆயுத சக்திகளுக்கு இடையே முழுமையான போர் சாத்தியமே, அல்லது தவிர்க்க முடியாததும் கூட என்று முடிவுக்கு வருகின்றன.

உத்தியோகபூர்வ மாநாட்டு ஆவணமான மூனிச் பாதுகாப்பு அறிக்கை 2016, உலக போர் சாத்தியமானதே என்பதைத் தெளிவுபடுத்திவிட்டது. “பனிப்போர் முடிந்ததற்குப் பின்னர் முதல் முறையாக பிரதான சக்திகளுக்கு இடையிலான வன்முறையான தீவிரப்பாட்டை, ஒரு யதார்த்தமற்ற பேராபத்து என்று உதறிவிட முடியாது,” என்று அது அறிவித்தது.

உலக தலைவர்கள் மனிதயினத்தையே நிர்மூலமாக்கக்கூடிய போர்களின் விளிம்பில் உலகத்தை நிறுத்தி இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிற அதேவேளையில், அவர்கள் அவர்களுக்குள் கடுமையாக வாதிட்டு வருகிறார்கள் என்ற உண்மை முதலாளித்துவ சமூக அமைப்புமுறையின் திவால்நிலையை நிரூபிக்கிறது. சமூக சமத்துவமின்மை மற்றும் வர்க்க பதட்டங்களால் பழுத்துப் போய், பிரதான சக்திகளுக்கு இடையே இலாபம் மற்றும் மூலோபாய ஆதாயங்களுக்கான போட்டியால் கிழிந்து தொங்கும், உலகளாவிய முதலாளித்துவம் ஒரு முட்டுச் சந்தை எட்டியுள்ளது.

அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உட்பட பிரதான ஏகாதிபத்திய சக்திகளின் தலைவர்கள் போருக்கு வேறு மாற்றீட்டைக் காணவில்லை. இவ்விதத்தில் மூனிச் பாதுகாப்பு மாநாட்டு தலைவர் வொல்வ்காங் இஸ்ஸிங்கர் மாநாட்டில் நிறைவுரையை வழங்குகையில், “சமாதானத்தை உருவாக்க மற்றும் நிலைநாட்ட இராணுவ பலத்தைப் பிரயோகிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்டிருப்பது சோகமானது தான், ஆனால் அது தான் ஏற்பட்டுள்ளது,” என்றார்.

அந்த மாநாட்டு அறிக்கை முன்னிருக்கும் தீவிர அச்சுறுத்தல்களாக பல பிராந்திய பிரச்சினைகளைப் பட்டியலிடுகிறது. அது பிரேசில் மற்றும் துருக்கியின் நெருக்கடிகளை, ஐரோப்பிய ஒன்றிய கலைப்பை, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை, கிழக்கு ஐரோப்பாவில் “மிக பகிரங்கமான அணுஆயுத அச்சுறுத்தல்களை”, ஆபிரிக்காவின் அதிகரித்துவரும் மக்கள்தொகைக்கு நூறு மில்லியன் கணக்கான வேலைகளைக் காண வேண்டியதை மற்றும் சீனாவின் அதிகரித்துவரும் பொருளாதார மற்றும் புவிசார்-மூலோபாய பலத்தை மேற்கோளிட்டது. அங்கே கூடிய அதிகாரிகள், அடிமட்டத்திலிருந்து தொழிலாள வர்க்கத்தின் சமூக போராட்டம் வெடிக்கும் அபாயம் குறித்து அதிகரித்தளவில் நன்கறிந்துள்ளதுடன், அவற்றைக் குறித்து கவலைக் கொண்டுள்ளனர்.

மிக முக்கியமாக அந்த அறிக்கை "2016 க்கான உயர்மட்ட 10 அபாயங்களில்" ஒன்றாக பாரிய சமூக கோபத்தை அடையாளம் காண்கிறது. “உற்பத்திக் குறைவு மற்றும் வாழ்க்கை தரங்களில் தேக்கம் மக்களிடையே அதிருப்தியைத் தூண்டுவதால், கோபமான மக்கள் வீதிகளில் இறங்கி விடக்கூடும்,” என்று அது அலறுகிறது.

சிரியா, ஆப்கான் மற்றும் ஈராக் அகதிகள் ஐரோப்பாவிற்குள் தப்பி சென்றதால் உண்டான புலம்பெயர்ந்தோர் நெருக்கடியையும் அம்மாநாடு விவாதித்தது. அங்கே அவர்கள் பெரும்பாலும் ஜேர்மனிக்குள் சென்றிருந்தார்கள். ஜேர்மன் வெளியுறவுத்துறை மந்திரி பிரான்ங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் 2014 மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் (MSC) அறிவிக்கப்பட்ட ஒரு கொள்கையான ஜேர்மன் மீள்இராணுவமயமாதலை ஊக்குவிக்க அதைப் பயன்படுத்தினார்.

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உங்களில் பலர் இங்கே இருந்தீர்கள் என நினைக்கிறேன். அப்போது ஜேர்மனியின் பாத்திரம் மற்றும் அதன் கடமைப்பாடுகளை மாற்றுவதைக் குறித்து நாம் விவாதித்தோம்,” என்பதை அவர் நினைவுகூர்ந்தார். “இன்று நாம் முற்றிலும் வித்தியாசமான வழியில் நமது பொறுப்புறுதியைப் பரிசீலிக்கிறோம்: அதாவது, புலம்பெயர்வு நெருக்கடி ஆரம்பித்திருக்கின்ற வேளையில், இதற்கு வார்த்தையளவிலான கடமைகளை விட உறுதியான நடவடிக்கைகள் வேண்டுமென நாம் உணர்கிறோம்,” என்றார்.

இந்த பிரச்சினை பிரெஞ்சு பிரதம மந்திரியிடமிருந்து ஒரு பிற்போக்குத்தனமான எதிருரையைக் கொண்டு வந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சாத்தியமான ஒரு கலைப்பைக் குறித்து எச்சரித்து, வால்ஸ் அறிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலும் அகதிகளைப் பகிர்ந்து கொள்ளும் அகதிகளை ஒதுக்கீடு செய்வதற்கான பேர்லினின் அழைப்பைப் பாரிஸ் "ஆதரிக்காது", பிரான்ஸ் 30,000 அகதிகளை மட்டுமே உள்ளெடுத்துக் கொள்ள ஒப்புக் கொள்ளும் என்றார்.