ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Russian helicopter shot down in Syria as battle rages over Aleppo

அலெப்போவில் ஆக்ரோஷமாக போர் நடந்து கொண்டிருக்கையில் சிரியாவில் ரஷ்ய ஹெலிகாப்டர் சுட்டுவீழ்த்தப்பட்டது

By Alex Lantier
2 August 2016

அமெரிக்க ஆதரவிலான இஸ்லாமிய எதிர்ப்பு போராளிகள் வடமேற்கு சிரியாவின் இட்லிப் (Idlib) மாகாணத்தில் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதில் ஐந்து ரஷ்ய படையினர் திங்களன்று கொல்லப்பட்டனர். அமெரிக்க ஆதரவிலான எதிர்ப்பு போராளிகளுக்கும், ரஷ்யா மற்றும் சிரியாவின் அரசு படைகளுக்கும் இடையே அலெப்போவில் ஆக்ரோஷமாக சண்டை நடந்து வரும் நிலையில் இந்த ஹெலிகாப்டர் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது.

சிரியாவில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பல ரஷ்ய போர்விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதும், அலெப்போ மற்றும் கெமிமிம் க்கு (Khmeimim) இடையே பாதி வழியில் அமைக்கப்பட்டுள்ளதுமான Saraqeb விமானப்படைத் தளம் அருகேதான் அந்த ஹெலிகாப்டர் சுட்டுவீழ்த்தப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் சிரிய ஆட்சிக்கு ஆதரவாக மாஸ்கோ ஓர் இராணுவ தலையீட்டை தொடங்கியதற்கு பின்னர் இது சிரியாவில் ஒரே தடவையில் ஏற்பட்ட மிகப்பெரிய ரஷ்ய உயிரிழப்பாகும்.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக அதிகாரி சேர்ஜே ருட்ஸ்கோய்  கூறுகையில், “அலெப்போ வாழ்மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்கும் ஒரு மனிதாபிமான நடவடிக்கையை முடித்து, விமானப் படைத்தளத்திற்கு திரும்பி கொண்டிருந்த ஒரு ரஷ்ய இராணுவ போக்குவரத்து ஹெலிகாப்டர் Mi-8, இன்று ஒரு பயங்கரவாத தாக்குதல் காரணமாக இழக்க நேரிட்டுள்ளது. சிரியாவில் சண்டையிட்டு வரும் குழுக்களது நல்லிணக்கத்திற்கான ரஷ்ய மையத்தைச் சேர்ந்த மூன்று சிப்பாய்களும் இரண்டு அதிகாரிகளும் அதில் இருந்தனர். அந்த ஹெலிகாப்டர், அல்-நுஸ்ரா முன்னணி பயங்கரவாத குழு மற்றும் 'மிதவாத எதிர்ப்பு' என்று அழைக்கப்படும் சம்பந்தப்பட்ட குழுக்களின் கட்டுப்பாட்டு பிரதேசத்தின் மீது பறந்த போது சுட்டுவீழ்த்தப்பட்டது,” என்றார்.

“சிதறிய பொருட்களின் அடையாள எண் உண்மையில் ஆயுதமேந்திய ஆனால் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ மீட்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஒரு ஹெலிகாப்டரினுடையதே என்பதைக் காட்டுகின்றன" என்று பிரெஞ்சு தினசரி Le Monde உறுதிப்படுத்தியது. சுன்னி இஸ்லாமிய எதிர்ப்பு படைகள் சூழ்ந்த அலெப்போவிற்கு அருகில் ஷியா கிராமங்களுக்கு அந்த ஹெலிகாப்டர் மனிதாபிமான உதவிகள் வழங்கி இருந்ததாக எதிர்ப்பாளர்கள்-ஆதரவு மனித உரிமைகளுக்கான சிரிய ஆய்வு மையம் குறிப்பிட்டது.

அந்த ஹெலிகாப்டர் எவ்வாறு சுட்டுவீழ்த்தப்பட்டது என்பது தெளிவின்றி இருந்தாலும், ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே ஓர் முழுமையான இராஜாங்க மோதலை அல்லது இராணுவ மோதலையே கூட தீவிரப்படுத்தும் மிக நிஜமான ஆபத்தை இச்சம்பவம் கொண்டுள்ளது. அப்பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டு வரும் அல் கொய்தா உடன் தொடர்புபட்ட இஸ்லாமிய சக்திகள், அமெரிக்க அரசாங்கம் வழங்கியிருந்த ஓர் ஏவுகணையைக் கொண்டு ரஷ்ய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தி இருக்கலாமென பல்வேறு செய்திகள் குறிப்பிடுகின்றன.

“அந்த ஹெலிகாப்டரை சுட்டுவீழ்த்த MANPAD களைப் (தோளில் சுமந்தவாறு தரையிலிருந்து விண்ணில் தாக்கும் ஏவுகணையை) பயன்படுத்தி இருக்கலாம் என்ற உள்ளடக்கத்தில் சில உள்ளூர்வாசிகள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன்,” என்று சுயாதீன இதழாளர் அலா இப்ராஹீம் ரஷ்ய அரசுக்கு சொந்தமான Russia Today க்குத் தெரிவித்தார்.

“அமெரிக்கா வினியோகித்த ஆயுதத்தைக் கொண்டு அந்த ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டிருக்கும் சாத்தியக்கூறு (இது பெரியளவில் இராஜாங்க பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும்)" உள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் எழுதியது. அது தொடர்ந்து குறிப்பிடுகையில், “அமெரிக்கா சில கிளர்ச்சி குழுக்களை TOW டாங்கி எதிர்ப்பு குண்டுவீசிகளைக் கொடுத்து ஆயுதபாணி ஆக்கியுள்ளது, இவற்றை கூட ஹெலிகாப்டர்களுக்கு எதிராக பயன்படுத்த முடியும்,” என்று குறிப்பிட்டது.

ரஷ்யா மற்றும் சிரிய அரசாங்க படைகளுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு அதுபோன்ற ஆயுதங்களை வாஷிங்டன் இஸ்லாமிய எதிர்ப்பு குழுக்களுக்கு வழங்கி இருக்க சாத்தியக்கூறு உள்ளது தான். சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் க்கு எதிரான ஆட்சி மாற்றத்திற்காக ஓர் இரத்தந்தோய்ந்த போரில் ஐந்தாண்டுகளாக அது ஆதரித்து வந்துள்ள அதன் இஸ்லாமிய பினாமிகள் முகங்கொடுக்கும் நிலைமை நாளுக்கு நாள் மங்கி வருவதால் அமெரிக்கா அதிகரித்தளவில் மூர்க்கமாகி வருகிறது.

இராணுவ சூழ்நிலை, இஸ்லாமிய எதிர்ப்பு போராளிகள் குழுக்களுக்கு எதிராக தீர்க்கமாக திரும்பி வருவதாக தெரிகிறது. சிரிய ஆட்சி படைகள் அலெப்போவிலிருந்து துருக்கிக்குச் செல்லும் காஸ்டெல்லோ (Castello) சாலையை ஜூலை 7 இல் துண்டித்ததற்கு பின்னர், கிழக்கு அலெப்போவைச் சுற்றிய சுருக்குக் கயிறு முன்பினும் அதிகமாக இறுகி வருகிறது.

ரஷ்ய விமானப்படையால் சிதைக்கப்பட்டுள்ளதுடன் சேர்ந்து, இம்மாத தொடக்கத்தில் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் சிரிய ஆட்சியுடன் சுமூகமான உறவுகளைக் கோர இருப்பதாக அறிவித்த அறிவிப்பால் அசாத்-விரோத படைகள் அதிர்ந்து போயின. துருக்கி நிரந்தரமாக அவர்களின் வினியோக பாதைகளை வெட்டி விடுமோ என்று அவை இப்போது அஞ்சுகின்றன.

சிரியாவின் ஒட்டுமொத்த வடக்கு பகுதி எங்கிலும் நசுக்கப்படுவதை முகங்கொடுத்துள்ள எதிர்ப்பு படை, அலெப்போவில் அதன் படைகள் சுற்றி வளைக்கப்படுவதை முறியடிக்கும் முயற்சியில் இறுதிகட்ட தாக்குதலை பெரும் பிரயத்தனத்துடன் நடத்தி வருகின்றன.

அலெப்போவின் கிழக்கில் சிரியாவின் அரசு படைகளால் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதை காணும் எதிர்ப்பு படைகளை மீட்கும் முயற்சியில், அமெரிக்க ஆதரவிலான படைகள் அந்நகரின் தென்மேற்கிலிருந்து அலெப்போவைத் தாக்கி வருகின்றன. இஸ்லாமிய போராளிகளது சண்டையால் மற்றும் கொள்ளையடிப்பால் நான்காண்டுகளாக நாசமாக்கப்பட்ட அந்நகரம், சில விதத்தில் அது கண்டிராத மிகவும் வன்முறையான சண்டையில் இப்போது மூழ்கி உள்ளது.

சிரியாவின் அல் கொய்தாவுடன் கடந்த வாரம் வரையில் இணைப்பில் இருந்ததும், தனது பெயரை ஜபாத் பதாஹ் அல்-ஷாம் (சிரியாவின் வெற்றிக்கான முன்னணி) என்று மாற்றிக் கொண்டதுமான அல்-நுஸ்ரா முன்னணி மற்றும் அஹ்ரர் அல்-ஷாம் ஆகிய இரண்டு போராளிகள் குழுக்களால் இஸ்லாமியவாதிகளின் எதிர்தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்க ஆதரவிலான படைகள் வசமிருக்கும் அலெப்போ பகுதிகள் நீண்டகாலமாகவே இஸ்லாமிய எதிர்ப்புக்கு முக்கியமானதாக இருந்துள்ளது. நேட்டோ அதிகாரங்கள் அதை துருக்கியின் முக்கிய வினியோக மையங்களில் இருந்து ஆதரித்திருந்த நிலையில், அம்மையங்களுக்கு அருகில் ஒருசமயம் சிரியாவின் பொருளாதார தலைநகராக விளங்கிய அந்நகர் இஸ்லாமிய எதிர்ப்பு படை காலூன்றுவதற்கு விடப்பட்டது.

எதிர்ப்பு போராளிகள், சிரிய அரசாங்க படைகள் வசமிருக்கும் அலெப்போ பகுதிகளில் குண்டுவீசியதில் படைத்துறைசாரா 42 மக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 98 பேர் காயமடைந்திருப்பதாகவும் ரஷ்ய ஆதாரங்கள் குறிப்பிட்டன.

வெடிபொருட்கள் ஏந்திய கனரகவாகனங்களில் அல்-நுஸ்ரா போராளிகள் நான்கு தற்கொலைப்படை தாக்குதல்களுடன் அவர்களது தாக்குதலைத் நடத்தியதும், எதிர்ப்பு படைகள் ஒரு பிரதான தோல்வியைக் கண்டுள்ளதாக அவர்கள் வாதிட்டனர். திட்டமிட்டு தாக்கும் ரஷ்ய போர்விமானங்களின் வான்வழி ஆதரவுடன் சிரியாவின் அரசு படைகள் எதிர்தாக்குதல் நடத்தின. “அந்த சண்டையில் 800 போராளிகளுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டார்கள்; 14 டாங்கிகள், 10 தரைப்படை போர் வாகனங்கள், துப்பாக்கி ஏந்திய 60 க்கும் அதிகமான வாகனங்கள் அழிக்கப்பட்டதாக,” ருட்ஸ்கோய் தெரிவித்தார்.  

அலெப்போவில் ஒரு மனிதாபிமான பேரழிவு கட்டவிழ்ந்து வருகிறது. எதிர்ப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள அந்நகர பகுதிகளில் 200,000 இல் இருந்து 300,000 பேர் வசிப்பதாக மதிப்பிடப்படுகிறது. உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை குறித்து நிறைய செய்திகள் வருகின்றன. ரஷ்ய அதிகாரிகள் 14 டன் மனிதாபிமான பொருட்களை திரட்டியிருப்பதாகவும், அதில் 2.5 டன் ஹெலிகாப்டர் மூலமாக வழங்கப்பட்டு உள்ளதாகவும், அங்கே வசிப்பவர்கள் அந்நகரைச் சுற்றி ஏற்படுத்தப்பட்டுள்ள "மனிதாபிமான பாதைகள்" வழியாக வெளியேற அவர்களைக் கேட்டு கொண்டிருப்பதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

எவ்வாறிருப்பினும் நடைமுறையளவில் ஒட்டுமொத்த மக்களும் கொடுமையான நிலைமைகளில் சிக்கி உள்ளனர். இந்த வாரயிறுதியில் வெறும் 169 பேர் மட்டுமே அந்த "மனிதாபிமான பாதைகள்" வழியாக வெளியேற முடிந்திருந்ததாக ரஷ்ய இராணுவ ஆதார நபர்களே தெரிவிக்கிறார்கள். அந்த பாதைகள் வழியாக தப்பிக்க முயன்ற நான்கு பேரை எதிர்ப்பு போராளிகள் பிடித்து படுகொலை செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதார நபர்கள், அலெப்போவில் போர் குற்றங்கள் நடத்துவதாக ரஷ்ய மற்றும் சிரியாவின் அரசு படைகளைக் குற்றஞ்சாட்டி வருகின்றன. நான்கு மருத்துவமனைகளும் ஒரு இரத்த வங்கியும் விமானத் தாக்குதல்களில் தாக்கப்பட்டுள்ளதாக யுனெசெப் (UNICEF) தெரிவித்தது, ரஷ்ய "மனிதாபிமான பாதை" செயல்திட்டம் ஒரு "தந்திரமாக" இருக்கலாமென அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி தாக்கினார். 

எவ்வாறிருப்பினும் மனிதாபிமானிகளாக காட்டிக் கொள்ளவதற்கான வாஷிங்டன் மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளின் முயற்சிகள், மாஸ்கோ மற்றும் டமாஸ்கஸ் தலைமையிலான படைகளின் வன்முறையால் அதிர்ந்து போய், சாக்குபோக்குகளைக் கூறி வருகின்றன. 400,000 பேரின் வாழ்க்கை விலையாக கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று இப்போது மதிப்பிடப்படும் பினாமி போரை அவர்கள் தான் தொடங்கினார்கள். வடக்கு சிரியாவில் அமெரிக்க போர் விமானங்களின் வான்வழி தாக்குதல்களில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 200 க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதல்களை நடத்திய அல் கொய்தா உடன் தொடர்புபட்ட அல் நுஸ்ரா போன்ற "கிளர்ச்சி" படைகளுடன் வாஷிங்டனும் மற்றும் அதன் கூட்டாளிகளும் நெருக்கமாகவும் பகிரங்கமாகவும் இணைந்து வேலை செய்துள்ளனர். அவர்கள் அசாத்தைக் கவிழ்க்கும் பாகமாக மற்றும் ஒரு முக்கிய கூட்டாளியை ரஷ்யா இழக்குமாறு செய்வதற்கான அவர்கள் முனைவின் பாகமாக அவர்களை அவர்கள் தொடர்ந்து பாதுகாக்கிறார்கள்.

அல் கொய்தா உடனான அல்-நுஸ்ராவின் உறவுகள் வாஷிங்டனுக்கு என்னதான் சங்கடங்களை ஏற்படுத்தினாலும், அமெரிக்க ஆளும் உயரடுக்கின் சக்தி வாய்ந்த பிரிவுகள் அந்த எதிர்ப்பு படைகளை தொடர்ந்து ஆதரிப்பார்கள் என்பதை சமிக்ஞை செய்துள்ளார்கள். இந்த இஸ்லாமிய பினாமிகள் தோற்பதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க, அமெரிக்க அரசாங்கம் சிரியாவிலும் மற்றும் மத்திய கிழக்கிலும் ஒரு பரந்த தலையீட்டை தொடங்கும் மரணகதியிலான அபாயம் உள்ளது, அத்தகைய ஒரு நடவடிக்கை ரஷ்யாவுடன் ஒரு முழுமையான இராணுவ மோதலைத் தூண்டக்கூடும்.