ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

After the Democratic and Republican conventions
For a socialist alternative to the parties of austerity and war!

ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி மாநாடுகளுக்குப் பின்னர்

சிக்கனத் திட்டம் மற்றும் போருக்கு ஆதரவான கட்சிகளுக்கு எதிரான ஒரு சோசலிச மாற்றீடுக்காக!

Socialist Equality Party
30 July 2016

இவ்வாரம் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு நிறைவடைந்ததுடன், அமெரிக்காவின் இரண்டு பிரதான முதலாளித்துவ கட்சிகளும் அவற்றின் ஜனாதிபதி வேட்பாளர்களை உத்தியோகபூர்வமாக தேர்ந்தெடுத்துள்ளன. ஓர் ஆழ்ந்த பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியை முகங்கொடுத்துள்ள நிலையில், ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டன் இடமோ அல்லது குடியரசு கட்சியின் டோனால்ட் ட்ரம்ப் இடமோ, சிக்கன நடவடிக்கை, போர் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களைத் தவிர வழங்குவதற்கு வேறெதுவும் இல்லை.

முடிவடைந்த இவ்விரு மாநாடுகளும், சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) மற்றும் அதன் வேட்பாளர்களான ஜனாதிபதியாக ஜெர்ரி வையிட் மற்றும் துணை ஜனாதிபதியாக நைல்ஸ் நிமுத் இன் பிரச்சாரத்தின் இன்றியமையாத முக்கியத்துவத்தை இன்னும் அதிகமாக தெளிவுபடுத்துகின்றன. இத்தேர்தல்களில் யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவற்றிற்குப் பின்னர் வரவிருக்கின்ற தவிர்க்க முடியாத சமூக எழுச்சிகள் மற்றும் போராட்டங்களுக்கு தயாரிப்பு செய்யும் பொருட்டு தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச தலைமையைக் கட்டியெழுப்ப சோசலிச சமத்துவக் கட்சி போராடி வருகிறது.

இம்மாத தொடக்கத்தில் நடந்த குடியரசு கட்சி மாநாட்டில் தேசிய பேரினவாதம் மற்றும் "சட்டம் ஒழுங்கு" மீது தனது பிரச்சாரத்தை அமைத்துள்ள ஒரு அரை-பாசிசவாத கோடீஸ்வர் தேர்ந்தெடுக்கப்பட்டமை, அமெரிக்க அரசியலின் சீரழிவில் ஒரு திருப்புமுனையைக் குறித்தது.

ஜனநாயகக் கட்சியினரும் பேர்ணி சாண்டர்ஸ் உட்பட அவர்களின் அரசியல் ஆதரவாளர்களும், ட்ரம்ப் ஆல் முன்னிறுத்தப்படும் அபாயத்தை நிறுத்துவதற்கான ஒரே வழி கிளிண்டனை ஆதரிப்பது மட்டுமேயாகும் என்று வலியுறுத்துகின்றனர். எவ்வாறிருப்பினும் முடிவில்லா போர், பெருநிறுவன மற்றும் அரசியல் குற்றகரத்தன்மை மற்றும் 1920 களுக்குப் பின்னர் மிகப்பெரியளவில் சமூக சமத்துவமின்மை மட்டங்களைக் கொண்டு வந்துள்ள அதே சீரழிந்த அரசியல் அமைப்பு முறையில், கிளிண்டனை போலவே, ட்ரம்ப் உம் ஒரு விளைபொருளாவார் என்ற உண்மையை, அனைத்தினும் "குறைந்த தீமை" என்று கூறும் வாதங்கள் நிராகரிக்கின்றன.

வீழ்ச்சி அடைந்துவரும் சம்பளங்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களின் வருமானங்கள், நீடித்த வேலைவாய்ப்பின்மை, குழந்தைகளது வறுமை மற்றும் ஆயுள்காலம் குறைவது என சமூக பாதிப்புகளைக் குறித்த ஒவ்வொரு குறியீடும் மோசமடைந்த அதேவேளையில், ஒபாமா நிர்வாகத்தினது அண்மித்த எட்டு வருடங்களில் பெரும் பணக்காரர்கள் செல்வசெழிப்பில் புதிய உயரங்களை எட்டி இருக்கிறார்கள் என்பதால் மட்டுந்தான், ட்ரம்ப் ஆல் நடைமுறையில் இருக்கும நிலைக்கு தன்னை ஒரு எதிர்ப்பாளராக காட்டிக் கொள்ள முடிகிறது.

பாரிய பெருந்திரளான அமெரிக்க உழைக்கும் மக்கள் எதிர்கொண்டிருக்கும் சமூக யதார்த்தத்திலிருந்து அவர்கள் முற்றிலுமாக தூரவிலகி இருக்கிறார்கள் என்பதை ஜனநாயகக் கட்சியினர் அவர்களது மாநாட்டில் எடுத்துக்காட்டியுள்ளனர். “அருமையாக அலங்கரிக்கப்பட்ட தலையாய அமெரிக்கா" என்ற ஒபாமாவின் கோரலுடன் உடன்பாடு கொண்டுள்ள மிகவும் வசதியான மற்றும் சுயதிருப்தி கொண்ட நடுத்தர வர்க்க பிரிவுகளுடன் தங்களைத்தாங்களே நிலைநிறுத்தி கொண்டுள்ளனர்.     

ஹிலாரி கிளிண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக இருப்பார் என்பதால் அவர் தேர்ந்தெடுக்கப்படுவதை "வரலாற்று நிகழ்வாக" சித்தரிப்பதற்கு, எட்டாண்டுகளுக்கு முன்னர் ஒபாமாவைச் சந்தைப்படுத்த பயன்படுத்தப்பட்ட அதே வனப்புரைகளை மறுசுழற்சி செய்து, அம்மாநாடு மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டு இருந்தது.

ஜனநாயகக் கட்சியினர் அடையாள அரசியலின் ஒவ்வொரு வடிவத்தையும் இராணுவவாதம் மற்றும் போரை உணர்ச்சிபூர்வமாக ஊக்குவிப்பதுடன் இணைத்திருந்தனர். திரையில் இருந்த தேசியவாத பகட்டாராவாரம் வியாழன்று இரவு முன்னாள் கடற்படை தளபதி ஜோன் அலென் ஐ இரத்தம்-கொதிக்க செய்யும் விதத்தில் உரையாற்ற செய்தது, அப்போது பேர்ணி சாண்டர்ஸ் இன் சில பிரதிநிதிகளின் "மேலும் போர் வேண்டாம்" என்ற அழைப்புகள், “அமெரிக்கா, அமெரிக்கா, அமெரிக்கா!” என்ற வெறிபிடித்த கோஷங்களுக்குள் கரைந்து போனது, இதே கோஷங்கள் தான் கடந்த வாரம் குடியரசு கட்சி மாநாட்டிலும் ஒலித்தன.

வரையப்பட்டு வருகின்ற போர் திட்டங்களைக் குறித்து அம்மாநாடு எந்தவித தீவிர விவாதங்களையும் கைதுறந்திருந்த நிலையில், கிளிண்டன் நிர்வாகத்தின் குணாம்சத்தைக் கணக்கிடவியலாத விளைவுகளுடன் ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு மக்களைத் தயார் செய்ய முடுக்கி விடப்பட்டு வருகின்ற பிரச்சாரத்திலேயே காணமுடிகிறது. ட்ரம்ப் ஐ புட்டினின் கையாளாக குற்றஞ்சாட்டி, ஊடகங்களிலும் அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளும் உள்ள கிளிண்டனின் ஆதரவாளர்கள் அவரது பிரச்சாரத்தை வலதிலிருந்து குடியரசு கட்சியினர் மீதான ஒரு விமர்சனமாக கட்டமைக்க முயற்சித்து வருகிறார்கள். 

குற்றகரமான ஈராக் படையெடுப்பை முன்னெடுத்த குடியரசுக் கட்சியின் நவ-பழமைவாதிகள் இப்போது கிளிண்டன் பிரச்சாரத்திற்கு பின்னால் திரண்டிருக்கும் நிலையில், ஜனநாயகக் கட்சியினர் ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் தலைமை கட்சியாக அவர்களது வரலாற்று நிலைப்பாட்டிற்குத் திரும்பி வருகிறார்கள். ட்ரம்ப் ஐ விட கிளிண்டனே மிகவும் நம்பகமான மற்றும் போர் வெறி கொண்ட முப்படைகளது தலைமைத் தளபதியாக இருப்பாரென இராணுவ உயரதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு கொள்கை வட்டாரங்களுக்குள் கருதப்படுகிறார்.

இதற்கிடையே வெர்மாண்ட் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் அவரின் "கோடீஸ்வர வர்க்கத்திற்கு" எதிரான அவரின் "அரசியல் புரட்சியைப்" பூரணமாக உதறித்தள்ளி, தானே கிளிண்டனுக்கு முன்னால் சரணாகதி ஆகியுள்ளார். சோசலிச சமத்துவக் கட்சி (SEP) எச்சரித்ததைப் போலவே, செனட்டராக இருந்தபோது ஈராக் போருக்கு ஒப்புதல் வழங்க வாக்களித்தவரும், வெளியுறவு செயலராக இருந்து லிபியா மற்றும் சிரியா போர்களுக்கு முன்னணியில் இருந்தவருமான "கோடீஸ்வர வர்க்கத்தின்" பிரதிநிதியினது [கிளிண்டனின்] பிடியில் அவரது ஆதரவாளர்களைச் சிக்க வைக்க சாண்டர்ஸ் அவரின் சக்திக்கு உட்பட்டு அனைத்தையும் செய்தார்.  

அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பு மேலாளுமை கொண்ட ஒரு தேர்தல் ஆண்டில், அமெரிக்க மக்களுக்கு முன்னால் கிளிண்டன் அல்லது ட்ரம்ப் க்கு இடையே யாரையேனும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் "வாய்ப்பு" முன்வைக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் அமைப்புமுறையின் மீதிருக்கும் குற்றப்பத்திரிகையாகின்றது!

அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் முதலாளித்துவ-எதிர்ப்புணர்வின் வளர்ச்சியை சாண்டர்ஸ் இன் சந்தர்ப்பவாத சூழ்ச்சிகளைக் கொண்டு நிறுத்திவிட முடியாது. சாண்டர்ஸை ஆதரித்த குழுக்களால் ஊக்குவிக்கப்பட்டு வருகின்ற பசுமைக் கட்சியைப் பொறுத்த வரையில், அது தொழிலாள வர்க்கம் மற்றும் சோசலிச போராட்டத்திற்கு எதிரான ஒரு முதலாளித்துவ கட்சியாகும். பசுமை கட்சியினர் அதிகாரத்திற்கு வந்தாலும் கூட, ஜேர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவைப் போலவே, அவர்கள் விரைவிலேயே அவர்களின் அமைதிவாதத்தைக் கைவிட்டு, இராணுவவாதம் மற்றும் சிக்கனத் திட்டங்களைத் தழுவுவார்கள். 

தொழிலாள வர்க்கம் அதன் நலன்களுக்காக போராட, சமத்துவமின்மை, போர் மற்றும் சர்வாதிகாரத்தை எதிர்க்க, அதற்கு அதன் சொந்த கட்சி அவசியம், அதுவே சோசலிச சமத்துவக் கட்சியாகும். சோசலிச சமத்துவக் கட்சி இத்தேர்தல்களில் ஒரு உண்மையான சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராட போட்டியிடுகின்றது. ஒரு சிறிய பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கின் நலன்களுக்கு ஒவ்வொன்றையும் அடிபணிய செய்கின்ற ஒரு பொருளாதார அமைப்புமுறையான முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில், அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு பாலினம், இனம், நிறம் மற்றும் தேசியம் என எல்லா தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டம் இல்லாமல், தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முடியாது.

இந்த போராட்டத்தில் எம்முடன் இணையுமாறு எங்களின் அனைத்து வாசகர்களையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். அபாயங்கள் ஆழமாக உள்ளன, அதேவேளையில் அதேயளவிற்கு புரட்சிகர போராட்டத்தில் ஐக்கியப்பட்ட தொழிலாள வர்க்கத்திற்கு பலமும் உள்ளது. இப்பணி அவசரமானதும், சிறிதும் காலம் தாழ்த்த முடியாதுமாகும். போர் மற்றும் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான போராட்டத்தில், சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில், சோசலிச சமத்துவக் கட்சியில் இணைய மற்றும் எங்களின் பிரச்சாரத்தை ஆதரிக்க முடிவெடுங்கள்