ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Berlin state election 2016
Vote against war! Vote PSG!
Election manifesto of the Socialist Equality Party

பேர்லின் மாநில சட்டமன்ற தேர்தல் 2016

போருக்கு எதிராய் வாக்களிப்போம்! PSG க்கு வாக்களிப்போம்!

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கை

1 August 2016

செப்டம்பர் 18 அன்று நடைபெறவிருக்கும் பேர்லின் செனட் (மாநில சட்டமன்றம்) தேர்தலில் மாநில பட்டியலிலும் மற்றும் Wedding, Tempelhof-Schöneberg மற்றும் Friedrichshain ஆகிய தொகுதிகளில் தனது நேரடி வேட்பாளர்களையும் சோசலிச சமத்துவக் கட்சி (PSG, Socialist Equality Party) நிறுத்தியுள்ளது.

ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வரவு, வறுமையின் அதிகரிப்பு மற்றும் அதிவலதுகளின் எழுச்சி ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளத் தயாராய் இல்லாத அனைவரையும் இலக்காகக் கொண்டு எங்கள் பிரச்சாரம் அமையும். போருக்கு எதிரான போராட்டத்தை, சமூக சமத்துவமின்மை, மீள்ஆயுதபாணியாகல் மற்றும் வெளிநாட்டவர் அச்சம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்துடன் நாங்கள் இணைக்கிறோம், முதலாளித்துவத்திற்கான ஒரு சோசலிச மாற்றீட்டை முன்வைக்கிறோம்.

தேசியவாதத்தின் வளர்ச்சி மற்றும் அதி-வலது ஜேர்மனிக்கான மாற்றீடு (Alternative for Germany - AfD) இயக்கத்தின் எழுச்சி ஆகியவற்றுக்கு எதிராய், தொழிலாள வர்க்கத்தின் நலன்களிலான சர்வதேசியவாதத்தை நாம் முன்வைக்கிறோம். இனம், தேசம், நிறம் அல்லது மதம் கடந்து அத்தனை தொழிலாளர்களது உலகளாவிய ஐக்கியத்திற்காக நாம் போராடுகிறோம். ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் நாங்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவாக உலகெங்கும் இருக்கின்ற எமது சகோதரக் கட்சிகளுடன் நெருக்கமாக செயல்ப்படுகின்றோம்.

ஒரு அசாதாரணமான நெருக்கடி நிலைமையின் சூழலில் பேர்லின் தேர்தல் நடைபெறுகிறது. அடுத்தடுத்தான ஒரு நிதி நெருக்கடியை முகம்கொடுத்த உலகம் ஒரு வெடிக்கிடங்கை ஒத்த நிலையில் இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் சிதறிக் கொண்டிருக்கிறது. பிரான்ஸ் மற்றும் துருக்கியில் அவசரகாலநிலை நிலவுகின்ற நிலையில், ஜனநாயகத்தின் முகப்பு அலங்காரம் நொருங்கிக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவத்தின் நெருக்கடி வலதுசாரி மற்றும் பாசிச முகங்களை முன்னால் வீசிக் கொண்டிருக்கிறது - அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப், பிரான்ஸில் மரின் லு பென், ஆஸ்திரியாவில் நோர்பர்ட் ஹோஃபர் மற்றும் ஜேர்மனியில் AfD ஆகியோர் - அனைவருமே தேசியவாதம் மற்றும் வெளிநாட்டவர் அச்சத்தின் நஞ்சை கக்கிக் கொண்டிருக்கின்றனர்.

பொருளாதார நெருக்கடி, பாரிய வறுமை, சர்வாதிகாரம் மற்றும் போர்த் தயாரிப்புகள் என கடந்த காலத்தின் அத்தனை பேயுருக்களுமே திரும்பிக் கொண்டிருக்கின்றன. அத்தனை நாடுகளிலும், ஜேர்மனி மீண்டுமொரு முறை தனது இராணுவ சக்தியைக் கொண்டு பெருமை பீற்றும் என்பதும் ஐரோப்பாவின் மேலாதிக்க சக்தியாக இருப்பதற்கும் ஒரு உலக சக்தியாக இருப்பதற்கும் அது உரிமை கோரும் என்பதும் நீண்டகாலமாக சிந்தித்துப்பார்ப்பதற்கு அப்பாற்பட்டதாக கருதப்பட்டு வந்திருந்தது. ஐரோப்பாவையும் உலகையும் இரண்டு முறை அதலபாதாளத்திற்குள் தள்ளியிருந்த பழைய சர்வவல்லமை பொருந்தியதான ஜேர்மனியின் நினைப்பு இப்போது மீண்டும் திரும்பியிருக்கிறது.

இராணுவச் செலவினம் அதிகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. வெளிநாடுகளுக்கான ஜேர்மனியின் இராணுவ நடவடிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது. புதிய “பாதுகாப்புக் கொள்கை மீதான வெள்ளை அறிக்கை” அறிவிப்பதை போல, உலகெங்கிலும் “நிலம், காற்று மற்றும் கடல் ஆகியவை பயன்படுத்துவதற்கு தடையற்று இருப்பதை” உத்திரவாதப்படுத்துவதற்காக முப்படைகளும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இது எங்கே கொண்டு சென்றுகொண்டிருக்கிறது என்பது ஜேர்மனியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும்: போர்க் குற்றங்களுக்கும் பாரிய படுகொலைகளுக்குமே. ஜேர்மனியின் கடந்தகால “உலக அதிகாரத்திற்கான பிடி”யின் (முதலாம் உலகப் போரில் கைய்சரிடம் இருந்து இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருக்கு ஜேர்மன் இராணுவக் கொள்கை எவ்வாறு தொடர்ச்சி கண்டது என்பதை அம்பலப்படுத்திய வரலாற்றாசிரியரான ஃபிரிட்ஸ் பிஷ்சரின் விவரிப்பு வார்த்தைகளில்) பயங்கரமான பின்விளைவுகள் நினைவுக்குவராமல் பேர்லினில் ஒரு அடியை கூட முன்னால் எடுத்து வைப்பது சாத்தியமற்றது. தலைநகரின் கட்டிடங்கள் பலவற்றின் சுவர்களில் இன்னும் கூட துப்பாக்கித் தோட்டாக்கள் மற்றும் உலோகத்துண்டுகளின் துளைகள் விரவியிருக்கின்றன. ஆயிரக்கணக்கிலான நினைவுக் கற்கள், இரண்டாம் உலகப் போரின்போது பேர்லினின் யூதர்கள் பாரிய அளவில் திருப்பியனுப்பப்பட்டதை நினைவுகூர்கின்றன.

இவை அனைத்தும் இருந்தபோதிலும், பேர்லினை மீண்டும் இராணுவவாதத்தின் தலைநகராக்குவதற்கு ஜேர்மனியின் உயரடுக்கு தீர்மானத்துடன் இருக்கிறது. ஒரு நிதர்சனமான போர் சதி சான்சலர் அலுவலகத்தில், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களில், அரசியல் கட்சிகளில், சிந்தனை முகாம்களில், அறக்கட்டளைகளில் மற்றும் ஊடகங்களில் கட்டவிழ்ந்து கொண்டிருக்கிறது. பேர்லினின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில், முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் ஜேர்மன் ஏகாதிபத்தியம் இழைத்த குற்றங்களைக் குறைத்துக் காட்டும் வேலையில் பேராசிரியர்கள் மும்முரமாக இருக்கிறார்கள்.

ஸ்தாபகக் கட்சிகள் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன. இவை அனைத்துமே பில்லியனர்களின் நலன்களையே பாதுகாக்கின்றன, இவற்றின் வேலைத்திட்டங்கள் அவர்களுக்கிடையே மாற்றிக்கொள்ளக்கூடியதாகவே இருக்கின்றன. இந்தக் கட்சிகளில் எதுவும் மற்றொன்றுடன் ஒரு கூட்டணியை உருவாக்கிக் கொள்ளலாம்.

இந்த அரசியல் கூட்டினை PSG எதிர்க்கிறது. கூட்டணி அரசாங்கத்தில் ஒரு இடத்தைப் பெறுவதற்காக நாங்கள் முனையவில்லை. ஆளும் வர்க்கத்தின் “பகுத்தறிவு”க்கும் “அமைதிக்கான விருப்பத்திற்கும்” நாங்கள் விண்ணப்பம் செய்வதில்லை, மாறாக உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களது போராடத் தயாராய் இருக்கும் நிலைக்கே நாங்கள் விண்ணப்பம் செய்கிறோம். எங்களுடைய இலட்சியம் முதலாளித்துவத்தை சீர்திருத்துவதல்ல, மாறாக அதனை ஒழிப்பதாகும்.

முதலாளித்துவத்தின் நெருக்கடியானது பெரும் வர்க்கப் போராட்டங்களை கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறது. தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஒரு சர்வதேசிய சோசலிச வேலைத்திட்டத்திற்காக வென்றெடுப்பதையும் அவர்களை புரட்சிக்கு தயார் செய்வதையுமே எங்களது தேர்தல் பிரச்சாரம் இலக்காகக் கொண்டிருக்கிறது. மில்லியன் கணக்கான மக்கள் அரசியல் நிகழ்வுகளில் தலையீடு செய்வதன் மூலம் மட்டுமே சமூக வெட்டுகள் மற்றும் இராணுவ மறுஆயுதபாணியாகல் ஆகிய பொறுப்பற்ற கொள்கைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட முடியும்.

கடந்த காலத்தில், பேர்லின் இராணுவவாதத்திற்கும் நாஜி பயங்கரத்திற்குமான தலைநகரமாக மட்டும் இருக்கவில்லை. சோசலிச இயக்கம் மற்றும் புரட்சிகரப் போராட்டத்தின் மையமாகவும் கூட அது இருந்தது. இங்கே தான், 100 ஆண்டுகளுக்கு முன்பாக, சோசலிசத் தலைவரான கார்ல் லீப்னெக்ட், முதலாம் உலகப் போரில் நடைபெற்ற பாரியப் படுகொலைகளுக்கு எதிரான போராட்டத்தை கையிலெடுக்க தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பாரிய வறுமையும், இராணுவவாதமும் மற்றும் போரும் திரும்புவதைக் கணக்கில் கொண்டு, தொழிலாள வர்க்கம் தனது சோசலிசப் பாரம்பரியங்களில் இருந்து உந்துசக்தியை பெற்றாக வேண்டும். இந்த சூழ்நிலையில், PSG ஐ கட்டியெழுப்புவது மிகவும் அவசியமான ஒரு விடயமாகும். சமூக நெருக்கடி குறித்தும், அரசியல்ரீதியாக அதற்கு காரணமானவர்கள் குறித்தும், கோபம் கொள்வது மட்டும் போதுமானதல்ல. சோசலிசத்தை அடிப்படையாக கொண்டு ஒரு எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு இதுவே உகந்த நேரமாகும்.

எமது தேர்தல் பிரச்சாரம் மூன்று கோரிக்கைகளின் மீது மையம் கொள்கிறது:

போர் சதியை நிறுத்தச் செய்வோம்!

“முதலாளித்துவம் நீடிக்கின்ற வரையில், போர்கள் தவிர்க்கமுடியாதவையாக இருக்கும்”. கார்ல் லீப்னெக்ட் இந்த வார்த்தைகள் இன்றும் கூட சரியென நிரூபணமாகி வருவன ஆகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் உலகம் ஒருபோதும் இவ்வகையில் அணுஆயுத பெருந்தீக்கு மிக நெருக்கமாய் சென்றிருந்ததில்லை.

அமெரிக்காவும் அதன் ஐரோப்பியக் கூட்டாளிகளும் மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்காவின் பெரும்பகுதியை சிதிலமடையச் செய்திருப்பதோடு மில்லியன் கணக்கானோரை நாட்டை விட்டோடவும் தள்ளியிருக்கின்றன. கிழக்கு ஐரோப்பாவில், ஒரு அணு ஆயுத சக்தியான ரஷ்யாவுக்கு எதிராக ஒரு பாரிய இராணுவ நிலைநிறுத்தத்தை நேட்டோ ஒழுங்கமைத்துக் கொண்டிருக்கிறது. ஆபிரிக்காவில், ஆதாரவளங்களுக்கும் செல்வாக்கு மண்டலங்களுக்குமான ஒரு புதிய சண்டை ஏகாதிபத்தியங்களுக்கு இடையே நடந்தேறிக் கொண்டிருக்கிறது. “ஆசியாவை நோக்கிய முன்னிலை” என்ற பேரில் ஆசியாவில் சீனாவுக்கு எதிரன போருக்கு அமெரிக்கா தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது.

உலகை மறுபங்கீடு செய்வதற்கும் கச்சாப் பொருட்கள் மற்றும் சந்தைகளுக்கான வேட்டைக்குமான சண்டையில், தாங்கள் வெறுங்கையோடு விடப்பட்டு விடக் கூடாது என ஜேர்மனியின் ஆளும் உயரடுக்கினர் கருதுகின்றனர். 2014 ஆரம்பத்தில், “இராணுவரீதியான ஒதுங்கியிருப்பு முடிவுக்கு வந்துவிட்டது” என ஜேர்மன் அரசாங்கம் அறிவித்தது. அதற்குப் பின்னர், அதன் இராணுவத் தலையீடுகள் இன்னும் மிகத் துரித வேகத்தில் முன்னேறியிருக்கின்றன. ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் இராணுவப்படை நிறுத்தத்திலும் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலான போர்களிலும் ஜேர்மன் இராணுவம் இப்போது முன்னால் நிற்கிறது.

ஊதியங்களும் சமூகச் செலவினங்களும் வீழ்ச்சி காண்கின்ற அதேவேளையில், இராணுவச் செலவினம் அதிகரித்துச் சென்று கொண்டிருக்கிறது. இராணுவ நிதிநிலை ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இப்போதிருக்கிற 1.2 சதவீதத்தில் இருந்து 2 சதவீதத்திற்கு அதாவது ஏறக்குறைய இரட்டிப்பாக்கப்பட இருக்கிறது. வருங்காலத்தில், ஆயுதங்களுக்கும், 13,500 படைவீரர்களைக் கொண்ட ஒரு நவீன “இணையத்தள படை” (cyber army) க்காகவும் கூடுதலாய் 130 பில்லியன் யூரோக்கள் செலவழிக்கப்பட இருக்கிறது.

இந்த நோக்கங்களுக்கு கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்தவ சமூக ஒன்றியம் (CDU/CSU), சமூக ஜனநாயகக் கட்சி (SPD), பசுமைக் கட்சி மற்றும் இடது கட்சி என அத்தனை நாடாளுமன்றக் கட்சிகளது ஆதரவும் இருக்கிறது. 1998 இல் கூட்டரசாங்கத்தில் நுழைவதற்காக தங்களது அமைதிவாத வேலைத்திட்டத்தை கைவிட்ட பசுமைக் கட்சியினர் அதன்பின் போரின் முன்னிலை அரசியல் ஆலோசகர்களாகவே ஆகி விட்டிருக்கின்றனர். இடது கட்சியும் அதே பாதையை பின்பற்றுவதற்கே இப்போது தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது. இது விடயத்தில், Thuringia இல் அதன் மாநிலத் தலைவராய் இருக்கும் போடோ ராமலோவ், வார இதழான Der Spiegel இடம் பேசுகையில் “நாங்கள் அமைதிவாதிகள் அல்ல” என்பதை அழுத்தமாய் தெரிவித்தார். அத்துடன் இந்த கோடையில் இடது கட்சியின் நாடாளுமன்றத் தலைவரான ஷாரா வாகென்கினெக்ட், ZDF ஒளிபரப்புக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் அரசாங்கத்தில் சேர்ந்தவுடன் ஜேர்மனி நேட்டோவில் இருந்து விலகி விடாது என்பதே உண்மை” என்று உறுதியளித்தார்.

வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கும் முடிவு கட்டுவோம்!

வங்கிகளைக் காப்பாற்றுவதற்காகவும் போர் மற்றும் இராணுவவாதத்திற்கு நிதியாதாரம் அளிப்பதற்காகவும் சிக்கன நடவடிக்கைகள் அமுலாக்கப்படுவதை நாங்கள் நிராகரிக்கிறோம். சமூக நலன்புரி அரசை திவாலாக்கி விட்டு நிதிப் பிரபுத்துவத்தை வளப்படுத்துவதற்கே அவை சேவை செய்கின்றன.

சமூக சமத்துவமின்மை பல தசாப்தங்களாய் பெருகி வந்திருக்கிறது. உலகின் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றான ஜேர்மனியில், 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். குறிப்பாக குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். SPD-பசுமை கட்சி அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட 2010 திட்டநிரல் நல உதவி மற்றும் தொழிலாளர் “சீர்திருத்தங்களின்” விளைவாக 8 மில்லியன் பேர் இப்போது மோசமான வேலைநிலமைகளின் கீழ் பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர். 2030 வாக்கில், இரண்டு புதிய ஓய்வூதியதாரர்களில் ஒருவர் ஆயுள்முழுக்க வேலைசெய்திருந்தாலும் கூட வெறும் சிறுதொகையையே பெறுவார். ஓய்வூதிய வயதை 73 ஆக உயர்த்த வேண்டும் என ஏற்கனவே முதலாளிகளின் கூட்டமைப்புகள் அழைப்பு விடுத்து வருகின்றன.

இதற்கு நேரெதிர் விதத்தில், சிறிய எண்ணிக்கையிலான ஒரு தட்டு ஆடம்பரத்தின் மடியில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. கணக்கற்ற வகையில் பெரும்பான்மையினரின் நலன்கள் பலியிடப்பட்டுத்தான் இந்த ஒட்டுண்ணிகள் செழிப்படையச் செய்யப்பட்டுள்ளனர். பெருநிறுவனங்களுக்கு சொந்தமான செல்வங்களில் இருந்தான வருவாய் கடந்த 15 ஆண்டுகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமாய் அதிகரித்திருக்கிறது. இதனிடையே, தனியாரிடம் இருக்கும் மொத்த சொத்துகளில் மூன்றில் ஒரு பகுதி மக்களில் வெறும் 1 சதவீதத்தினரின் உடைமையாக இருக்கிறது. இதற்கு நேரெதிராய், வறுமையில் உழலும் கீழிருக்கும் 30 சதவீதம் பேரிடம் சொத்தென்று எதுவும் இல்லை, அல்லது அவர்கள் கடனாளிகளாய் இருக்கின்றனர்.

குறிப்பாக நிலைமை பேர்லினில் மிக மோசமானதாய் இருக்கிறது. ஜேர்மனியின் “வறுமையின் தலைநகரம்” (Tagesspiegel இன்படி) குழந்தை ஏழ்மையில் முதலிடத்தில் இருக்கிறது; பொதுச் சேவைத் தொழிலாளர்களின் வருவாய் தேசிய சராசரியைக் காட்டிலும் 10 சதவீதம் குறைவானதாய் இருக்கிறது; சமீப ஆண்டுகளில் பொதுத் துறைகளில் மூன்றில் ஒரு பங்கு வேலைகள் அழிக்கப்பட்டு விட்டிருக்கின்றன; தற்காலிகப் பணியாளர்களின் எண்ணிக்கை சுமார் 120 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருக்கிறது.

சமூக சமத்துவமின்மையின் அவலட்சணமான வளர்ச்சி முதலாளித்துவ அமைப்புமுறையின் திவால்நிலைக்கான ஒரு சான்றாக உள்ளது. சமூக நீதியையும் அனைவருக்குமான வளத்தையும் உருவாக்குவதாகச் சொல்லப்பட்ட ”சமூக சந்தைப் பொருளாதாரம்” என்ற கனவுலக கதை நீண்டகாலத்திற்கு முன்பே அகன்றுவிட்டிருக்கிறது. பில்லியனர்களின் மிகப் பிரம்மாண்டமான செல்வங்கள் வளமையின் பெருக்கத்தில் இருந்து விளைந்ததல்ல, மாறாக சமூக மறுபங்கீட்டில் இருந்தும் ஊகத்தில் இருந்துமே விளைந்ததாகும்.

2008 இல், இத்தகைய குற்றவியல்தனமான ஊக நடைமுறைதான் உலகப் பொருளாதாரத்தை அழிவின் விளிம்புக்கு தள்ளியது. அதன்பின், எதுவும் தீர்வுகாணப்பட்டிருக்கவில்லை. அடுத்த குமிழியின் வெடிப்பு தவிர்க்கவியலாதது. மரண தறுவாயில் இருக்கின்ற ஒரு புற்றுநோயாளியைப் போல, சிகிச்சை மூலம் குணமடையக் கூடிய நிலை நீண்ட காலத்திற்கு முன்பே கடந்து விட்டது. முதலாளிகளுக்கு தங்களது பில்லியன் கணக்கான பணத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரே வழியாக இருப்பது என்னவெனில், சுரண்டலை அதிகப்படுத்துவது, சமூக செலவினங்களிலான வெட்டுகள், அரசின் சொத்துகளை விற்பது மற்றும் போர் ஆகியவையாகும்.

முதலாளித்துவம் இனி சீர்திருத்தப்பட முடியாது. அது ஒழிக்கப்பட்டு அதனிடத்தில் ஒரு சோசலிச சமூகம் அமர்த்தப்பட்டாக வேண்டும். பொருளாதாரத்தின் மீதான கட்டுப்பாட்டை நிதிப் பிரபுத்துவத்தின் கைகளில் இருந்து பறிக்காமல், ஒற்றை சமூகப் பிரச்சினையும் கூட தீர்க்கப்பட முடியாது.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்போம்!

இராணுவவாதமும் சமூக சமத்துவமின்மையும் ஜனநாயகத்துடன் இணக்கம் காணமுடியாதவை. 1930களில் ஜேர்மனியின் உயரடுக்குகள் ஹிட்லரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதன் மூலமாக உலகப் பொருளாதார நெருக்கடிக்கு பதிலிறுத்தனர். இப்போது, அவர்கள் மீண்டும் அவசரகால நடவடிக்கைகளுக்காகவும் சர்வாதிகாரத்திற்காகவும் தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றனர்.

“பயங்கரவாதத்திற்கு” எதிரான போர் என்பது அவர்களின் போலிச்சாக்கு. ஆனால் பயங்கரவாத தாக்குதல்களே கூட போர்க் கொள்கையின் ஒரு பதில்விளைவாகவே உள்ளன. மக்கள்வெறுப்பைச் சம்பாதித்திருந்த ஆட்சிகளுக்கு எதிராய் அல் கொய்தா மற்றும் இஸ்லாமியவாத அரசு போன்ற அமைப்புகள் மேற்கத்திய உளவு முகமைகளால் கட்டியெழுப்பப்பட்டன, ஈராக் மற்றும் சிரியாவிலான போர்களின் விளைவாகவே அவை பரவ முடிந்தது.

அதிகரிக்கப்படும் அரச அதிகாரங்களின் உண்மையான இலக்கு தொழிலாள வர்க்கமே ஆகும். எதிர்ப்பை அச்சுறுத்துவதற்கும் ஒடுக்குவதற்கும் இந்த அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தொழிலாள வர்க்கப் பிரச்சினைகள் உலகளாவிய வகையில் அதிகரித்திருப்பது கண்டு ஆளும் வர்க்கம் உஷாராகி இருக்கிறது, தனது இராணுவவாதம் மற்றும் போர்க் கொள்கைகளுக்கு கடுமையான எதிர்ப்பு தோன்றுமென்பதை அது முன்கணித்து விட்டிருக்கிறது.

அவசரகால நடவடிக்கைகளுக்கும் சர்வாதிகாரத்திற்குமான தயாரிப்புகள் மிக முன்னேறிய நிலையில் இருக்கின்றன. பயங்கரவாதத் தடுப்பு சட்டங்களின் அடிப்படையில் ஒரு பிரம்மாண்டமான கண்காணிப்பு எந்திரம் எழுப்பப்பட்டிருக்கிறது. போலிசும் உளவு முகமைகளும் நெருக்கமாக வேலைசெய்கின்றன. உள்நாட்டில் தலையீடு செய்வதற்கு இராணுவம் (Bundeswehr) தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது. அந்த இரண்டு நடவடிக்கைகளுமே அரசியல்சட்டத்தால் தடை செய்யப்பட்ட விடயங்களாக இருக்கின்றன. பேர்லினில், மாநில உள்துறை அமைச்சரான பிராங்க் ஹேங்கல் (CDU) ஒரு கடுமையான சட்டம்-ஒழுங்கு பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

வெறுப்பூட்டும் வகையில் அகதிகள் வேட்டையாடப்படுவதில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் அப்பட்டமாக வெளிப்படுகிறது. தஞ்சம் கோருவதற்கான உரிமை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டிருக்கிறது. மத்திய கிழக்கிலிருந்தும் ஆபிரிக்காவில் இருந்தும் போருக்குத் தப்பி ஓடிவரும் மக்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள், சிறைமுகாம்களில் கூட்டம்கூட்டமாய் அடைக்கப்பட்டு பின் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு மாதமும் மத்திய தரைக்கடலில் நூற்றுக்கணக்கானோர் நீரில் மூழ்கி இறந்து வருகின்றனர்.

முஸ்லீம்களுக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரமானது, உத்தியோகபூர்வ கட்சிகள் அனைத்தினாலும் மற்றும் முன்னணி ஊடகங்களாலும் எரியூட்டப்பட்டு, நாஜிக்களின் யூத வெறுப்பை நினைவிற்கு கொண்டுவருகிறது. அதே நோக்கத்தையே அது பூர்த்தியும் செய்கிறது. இது தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் நோக்கம் கொண்டது என்பதோடு, AfD இன் அரவை எந்திரத்திற்கு அரைக்கப்படுகின்ற பொருளை வழங்குகின்றது.

தொழிலாளர்களுக்கு அவர்களது சொந்தக் கட்சி தேவை

சமூகத்தில் எந்த அளவுக்கு பிளவுகள் ஆழமாய் இருக்கிறதோ, அந்த அளவுக்கு நெருக்கமாக ஸ்தாபகக் கட்சிகள் நெருக்கமாய் கைகோர்த்துக் கொள்கின்றன. போர் மற்றும் சமூகத் தாக்குதல்களின் கொள்கைகளைத் திணிப்பதற்கான ஒரு உண்மையான சதியின் கூட்டாளிகளாக அவை அனைத்தும் இருக்கின்றன.

சமூக ஜனநாயகக் கட்சி மிக நியாயமான வகையிலேயே வெறுக்கப்படுகிறது. கடந்த காலத்தில் தொழிலாளர்களால் கட்டியெழுப்பப்பட்ட ஒரு அமைப்பாக இருந்தாலும், இன்னமும் அது சமூக மற்றும் ஜனநாயக வெற்றிகளை பாதுகாப்பதாக கூறிக் கொண்டாலும், அது நேரெதிரானதையே செய்து கொண்டிருக்கிறது. SPD சான்சலர் ஷ்ரோடரின் திட்டநிரல் 2010 மில்லியன் கணக்கான தொழிலாள வர்க்கக் குடும்பங்களை கடினமான வாழ்நிலைமைகளுக்குள்ளும் துயரத்திற்குள்ளும் மூழ்கடித்திருக்கிறது. இன்று, சீர்திருத்தங்கள் என்று SPD பேசுகையில், இலாபங்களையும், போலிஸ் அரசு அதிகாரங்களையும் மற்றும் இராணுவவாதத்தையும் அதிகப்படுத்துவதற்காக ஊதியங்களிலும் சமூகச் செலவினங்களிலும் வெட்டுகளைத் திணிப்பதையே அது அர்த்தப்படுத்துகிறது.

இடது கட்சியின் விடயத்திலும் இது உண்மையாக இருக்கிறது. இதனை அது பேர்லினில் SPD உடனான அதன் பத்தாண்டு கால கூட்டணியின் மூலமாக விளங்கப்படுத்தியிருக்கிறது. திவாலான Berliner Bankgesellschaft என்ற வங்கிக்காக பில்லியன் கணக்கான மதிப்புக்கு உத்தரவாதங்களில் கையெழுத்திட்டு அளிக்கின்ற அதேநேரத்தில், ஊதியங்கள் மற்றும் நல உதவிகளில் இத்தகையதொரு பாரிய வெட்டுகளை ஜேர்மனியில் வேறெந்த மாநில அரசும் நடத்தியிருக்கவில்லை. இடது கட்சியானது பேர்லினை வறுமையின் தலைநகராக மாற்றி விட்டிருக்கிறது. கிரீஸில் அதன் சகோதரக் கட்சியான சிரிசா, கொடுமையான சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டத்தைக் கொண்டு மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வை நாசம் செய்து விட்டிருக்கிறது.

கூட்டரசாங்க மட்டத்தில் சிவப்பு-சிவப்பு-பச்சை அரசாங்கம் என்பதாக சொல்லப்படுகின்ற SPD -இடது கட்சி- பசுமைக் கூட்டணி ஒன்றுக்கான அடித்தளங்களை அமைப்பதற்கான ஒரு பரிசோதனை ஓட்டமாகவே பேர்லின் தேர்தல் பார்க்கப்படுகிறது. அத்தகையதொரு நிர்வாகம் முன்னேற்றத்தைக் குறிக்கப் போவதில்லை. 1998 இல் SPD மற்றும் பசுமைக்கட்சியினர் சேர்ந்து உருவாக்கிய ஒரு கூட்டணி அரசாங்கம், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதன்முறையாக வெளிநாட்டு யுத்த நடவடிக்கைகளில் பங்கேற்க இராணுவத்தை அனுப்பியதுடன், ஊதியங்களையும் நல உதவிகளையும் வெட்டியது. இப்போது அடுத்த சுற்று சமூக வெட்டுகளைத் திணிப்பதற்கும் மேலதிக ஜேர்மன் இராணுவவாதத்திற்கு பாதையமைத்துத் தருவதற்கும் இடது கட்சியின் துணைகொண்டு இந்த கூட்டணிக்கு உயிரூட்டப்பட வேண்டியதாகி இருக்கிறது.

SPD மற்றும் இடது கட்சி இரண்டின் வலது-சாரிக் கொள்கைகள் ஒன்றுசேர்ந்து AfD இன் வளர்ச்சிக்கு வழிசெய்து தந்திருக்கின்றன. இடதில் இருந்தான ஒரு எதிர்ப்பு இல்லாதிருக்கின்ற காரணத்தால் தான் இந்த அதி-வலது கட்சியானது தன்னை சமூகத்தினது எதிர்ப்பின் ஒரு கட்சியாக காட்டிக்கொள்ள முடிந்திருக்கிறது. SPD மற்றும் இடது கட்சியின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள் குறித்த கோபத்தையும் ஏமாற்றத்தையும் தனது சொந்த பிற்போக்குத்தனமான நோக்கங்களுக்காக அது சுரண்டிக் கொள்கிறது. பிரான்சில் மரின் லு பென்னும் அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பும் இதேபோன்ற வகையில் தான் செயல்படுகின்றனர். AfD ஐ எதிர்த்துப் போராட விரும்புகின்ற எவரும் SPD உடனும் இடது கட்சியுடனும் முறித்துக் கொண்டாக வேண்டும்.

அரசியல் நிகழ்வுகளில் சுயாதீனமாகத் தலையீடு செய்ய, தொழிலாளர்களுக்கு அவர்களது சொந்தக் கட்சி அவசியமாயிருக்கிறது. ஆகவே தான் சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்புவது இன்றியமையாததாகும். நாங்கள் உருவடிவம் கொடுத்திருக்கும் வரலாற்றுப் பாரம்பரியமும், நாங்கள் பிரதிநிதித்துவம் செய்கின்ற கோட்பாடுகளுமே எங்களது பலமாகும். ICFI இன் ஒரு பிரிவாக, ஆகுஸ்ட் பேபெல்லின் ஆரம்பகால SPD, ரோசா லுக்சம்பேர்க் மற்றும் கார்ல் லீப்னெக்ட், ரஷ்யப் புரட்சி மற்றும் ஸ்ராலினிசத்திற்கு எதிரான லியோன் ட்ரொட்ஸ்கியின் இடது எதிர்ப்பு ஆகிய மார்க்சிசத்தின் பாரம்பரியங்களின் வழி நாங்கள் நிற்கிறோம்.

PSG இன் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவளியுங்கள்!

பேர்லினிலான எமது தேர்தல் பிரச்சாரம் போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தின் பகுதியாகும்.

எமது வேலைத்திட்டத்தை விவாதிப்பதற்காக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருக்கின்ற ICFI இன் பிரதிநிதிகளைக் கொண்டு பொதுக் கூட்டங்களுக்கு நாங்கள் ஒழுங்கமைத்துக் கொண்டிருக்கிறோம். சோசலிசம் என்பது உண்மையில் என்ன என்பதையும், ஸ்ராலினிசத்தில் இருந்தும் முன்னாள் கிழக்கு ஜேர்மனி மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் என்ன என்பதையும் நாங்கள் விளக்கவிருக்கிறோம்.

எமது பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம். சோசலிசத்திற்கான செயலூக்கமான போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்! இந்தப் பிரச்சாரம் வெறுமனே வாக்குகள் சம்பந்தப்பட்டதல்ல, போர் மற்றும்  முதலாளித்துவத்திற்கு எதிராகப் போராடுகின்ற ஒரு சோசலிசக் கட்சியைக் கட்டியெழுப்புவது குறித்ததாகும்.

பல வழிகளில் இதில் நீங்கள் பங்குபெற முடியும். எமது தேர்தல் பிரச்சார அறிக்கைகளை விநியோகிக்கலாம். உங்கள் பகுதியில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் சகாக்கள் இடையே இந்த பிரச்சாரம் அறியப்பட வழி செய்யலாம். சாத்தியமான அளவுக்கு மிகவும் செயலூக்கமான பிரச்சாரத்தை நாங்கள் நடத்த இயலுகின்ற வகையில் PSGக்கு நன்கொடையளிக்கலாம்.

தமது வேலைகளுக்காகவும் வாழ்க்கைத் தரங்களுக்காகவும் போராடுகின்ற அனைவருக்கும், முதலாளித்துவம் வருங்காலத்திற்கென எதனையும் வழங்காமல் இருக்கின்ற நிலைக்கு முகம்கொடுக்கின்ற அல்லது புதிய போர்களில் இறக்க விரும்பாமல் இருக்கின்ற இளைஞர்கள் அனைவருக்கும் நாங்கள் சொல்வது இதுதான்: இது உங்கள் பிரச்சாரம்! இன்றே உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்!

எமது வலைத்தளமான gleichheit.de க்கு விஜயம் செய்து எமது பிரச்சாரத்திற்கு எங்ஙனம் நீங்கள் ஆதரவளிக்க முடியும் என்பதை கண்டுகொள்ளுங்கள்.