ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Erdogan and Putin meet in St. Petersburg

எர்டோகனும் புட்டினும் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் சந்திக்கின்றனர்

By Halil Celik and Peter Schwarz
10 August 2016

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனும் அவரது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினும் செவ்வாயன்று ரஷ்ய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் கான்ஸ்டன்டைன் மாளிகையில் (Constantine Palace) இல் சந்தித்தனர். ஏறத்தாழ ஓராண்டுக்குப் பின்னர் இது தான் அவ்விரு ஜனாதிபதிகளுக்கும் இடையிலான முதல் சந்திப்பும், மேலும் தோல்வியடைந்த ஜூலை 15 ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் இதுவே எர்டோகனின் முதல் வெளிநாட்டு விஜயமாகும்.

கடந்த நவம்பரில் சிரியா மீது பறந்த ஒரு ரஷ்ய போர்விமானத்தை ஒரு துருக்கிய போர்விமானம் சுட்டுவீழ்த்திய பின்னர், துருக்கி மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான உறவுகள் உறைந்த நிலையை எட்டின. ஆனால் ஜூன் 29 இல், எர்டோகன் நல்லிணக்கத்தைத் தொடங்கும் ஒரு முயற்சியாக புட்டினுக்கு வருத்தம் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார். அப்போதிருந்து உறவுகள் வேகமாக வளர்ந்துள்ளன.  

எர்டோகனின் கடிதத்திற்கு அடுத்த நாள், ரஷ்ய மற்றும் துருக்கிய ஜனாதிபதிகளுக்கு இடையிலான ஒரு தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, ரஷ்ய அரசாங்கம் துருக்கிக்கான சுற்றுலா விமானங்கள் மீதான அதன் தடையை நீக்கியது. துருக்கிய மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்கள் ஜூலை 1 அன்று ரஷ்ய நகரமான சோச்சியில் சந்தித்தனர்.

செவ்வாயன்று பத்திரிகையாளர் சந்திப்பில், புட்டின் எர்டோகனின் விஜயத்தை "உறவுகளை வழமையாக்குவதற்கான ஓர் எடுத்துக்காட்டாக" வர்ணித்தார். “துருக்கி மற்றும் ரஷ்ய மக்களின் நலன்களுக்காக நமது பேச்சுவார்த்தை, நல்லிணக்கத்தைத் தொடரவே நாம் அனைவரும் விரும்புகிறோம் என்பதையே துருக்கியின் மிக கடுமையான அரசியல் நிலைமைகளுக்கு இடையிலும் இன்று உங்களது விஜயம் எடுத்துரைக்கிறது,” என்று புட்டின் துருக்கிய ஜனாதிபதியிடம் கூறினார். “துருக்கி-ரஷ்ய உறவுகள் மிகவும் வேறுபட்ட மற்றும் உறுதியான கட்டத்திற்குள் நுழைந்துள்ளது,” என்று கூறி எர்டோகன் அதை ஆமோதித்தார்.

ஜூலை 15 ஆட்சிக்கவிழ்ப்பு சதி, குறைந்தபட்சம் பகுதியாகவாவது, ரஷ்யா உடனான துருக்கியின் புதிய நல்லிணக்கத்திற்கு ஒரு விடையிறுப்பாக இருந்தது என்பதற்கு அங்கே நிறைய அறிகுறிகள் உள்ளன. உடனடியாக நிகழவிருந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியைக் குறித்து ரஷ்ய அரசாங்கம்தான் அங்காராவை எச்சரித்தது, எர்டோகன் தப்பிக்கவும், அவரது ஆதரவாளர்களுக்கு அவர் கோரிக்கைவிடவும் அது அனுமதித்தது. ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு முன்னரே திட்டமிடப்பட்டிருந்த இப்போதைய இந்த செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் விஜயம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான அங்காராவின் உறவுகள் ஏறத்தாழ முறியும் புள்ளிக்கு வந்துள்ள நிலையில் வருகிறது.

வாஷிங்டன் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்தது என்பதில் அங்கே எந்த ஐயமும் இல்லை, மேலும் அவ்வாறு செய்ததற்காக எர்டோகன் வாஷிங்டனை பகிரங்கமாக குற்றஞ்சாட்டி வருகிறார். நாட்டை விட்டு வெளியேறி பென்சில்வேனியாவில் அமெரிக்க அரசு பாதுகாப்பின் கீழ் வசிக்கும் இஸ்லாமிய தலைவர் பெத்துல்லா ஹூலானை துருக்கியிடம் ஒப்படைக்குமாறு அவர் கோரி வருகிறார்.

அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஒழுங்கமைத்தமைக்காக ஹூலானின் ஹெஜ்மென்ட் இயக்கத்தை (Hizmet movement) எர்டோகன் குற்றஞ்சாட்டி வருகிறார். அதேவேளையில் அவர் இரண்டு பிரதான முதலாளித்துவ எதிர்ப்பு கட்சிகளான கெமாலிச குடியரசு மக்கள் கட்சி (CHP) மற்றும் தீவிர வலது தேசியவாத இயக்க கட்சி (MHP) இரண்டுடன் "தேசிய ஐக்கிய" கூட்டணி ஒன்றை ஜோடிப்பதற்கு, துருக்கிக்குள் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு எதிரான பெருந்திரளான மக்கள் எதிர்ப்பை பயன்படுத்திக் கொள்கிறார். அவரது அரசியல் எதிர்ப்பாளர்களை களை எடுக்கவும் மற்றும் துருக்கிக்குள் அதீத வர்க்க பதட்டங்களை ஒடுக்கவும் இக்கூட்டணியைப் பயன்படுத்தி வரும் அதேவேளையில் அவர் ஒரு புதிய வெளியுறவு கொள்கை நிலைநோக்கை செயல்படுத்தி கொண்டிருக்கிறார்.

ரஷ்யா மற்றும் துருக்கிக்கு இடையிலான புதிய நல்லிணக்கத்தின் முன்னணியில் இருப்பது பொருளாதார பிரச்சினைகளாகும். எர்டோகன் ஒரு மிகப்பெரிய பிரதிநிதிகள் குழுவுடன் வந்திருந்தார். ரஷ்யாவின் உதவியுடன் கட்டப்பட்ட துருக்கியின் முதல் அணுமின்னாலை நிறைவு செய்யப்படும் என்றும், கருங்கடல் மற்றும் துருக்கி வழியாக தென்கிழக்கு ஐரோப்பாவிற்கு ரஷ்ய எரிவாயுவை எடுத்துச் செல்லும் துருக்கிய எரிவாயு குழாய்வழி திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என்றும் அப்பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் அறிவிக்கப்பட்டது.

மாஸ்கோவும் அங்காராவும் 2023 அளவில் அவற்றின் இருதரப்பு வர்த்தக அளவை 100 பில்லியன் டாலராக அதிகரிக்க கடந்த ஆண்டு இலக்கு நிர்ணயித்தன. துருக்கிய புள்ளிவிபர அமைப்பின் தகவல்படி, 2010 மற்றும் 2014 க்கு இடையே 30 பில்லியன் டாலருக்கு அதிகமாக இருந்த இவ்விரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் அண்ணளவாக 18 சதவீதத்திற்கு அதிகரித்திருந்தது. கடந்த ஆண்டு துருக்கிய ஏற்றுமதிகளுக்கான இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக ரஷ்யா தான் இருந்தது மற்றும் அதன் மூன்றாவது மிகப் பெரிய இறக்குமதி ஆதாரமாகவும் அது இருந்தது.

எவ்வாறிருப்பினும், சிரியா மீது பறந்த ரஷ்யாவின் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ரஷ்யா பொருளாதார தடைகளை விதித்த பின்னர், 2016 இன் முதல் ஆறு மாதங்களில், ரஷ்யாவிற்கான துருக்கியின் ஏற்றுமதிகள் 60.5 சதவீத அளவிற்கு வீழ்ச்சி அடைந்தன. நவம்பர் நெருக்கடிக்குப் பின்னர் துருக்கிக்கான சுற்றுலா திட்டங்களுக்கும் மற்றும் விமானங்களை வாடகைக்கு அமர்த்துவதற்கும் ரஷ்யா தடை விதித்தது, இது துருக்கிக்கு அதன் சுற்றுலா வருவாயில் 840 மில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தியது.

நேட்டோ இராணுவ கூட்டணியின் மிக முக்கிய அங்கத்துவ நாடுகளில் ஒன்றினது மூலோபாய நோக்குநிலை மாற்றத்தை, எர்டோகனின் விஜயம் சமிக்ஞை செய்கிறதோ என்று அமெரிக்கா மற்றும் இதர நேட்டோ நாடுகளில் அச்சங்கள் அதிகரித்து வருகின்றன. இது ரஷ்யாவை வாஷிங்டன் இராணுவரீதியில் சுற்றி வளைப்பதை மட்டும் பலவீனப்படுத்துவது மட்டுமல்லாது சிரியாவில் அசாத் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியையும் பலவீனப்படுத்தும்.

பிபிசி வலைத் தளம் பிரசுரித்த ஒரு கருத்துரை, “அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இரண்டுடனும் AKP அரசாங்கத்தின் உறவுகள் இப்போது 'உறைந்திருப்பதைப்' பார்க்கையில், அந்த சர்ச்சைக்குரிய ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனின் முதல் உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்திற்கு அவர் ரஷ்யாவை தேர்ந்தெடுத்த முடிவு பெரிதும் அடையாளப்படுத்திக் காட்டும் ஒன்றாக தெரிகிறது. மேற்கத்திய தலைவர்கள் பதட்டத்துடன் பார்க்கக்கூடும்,” என்று அறிவித்தது.

ஸ்ட்ராட்போர் தனியார் உளவுத்துறை சேவையின் முன்னாள் தலைவரும் ரஷ்யாவை உறுதியாக எதிர்ப்பவருமான ஜோர்ஜ் ப்ரெட்மென் அத்தகைய கவலைகளைக் குறித்து மிகவும் வெளிப்படையாக பேசினார். “சிரியாவில் அவர்கள் [துருக்கி] எங்களுக்கு உதவுவார்கள் என்பதன் மீதான நம்பிக்கைகள் காற்றில் கரைந்து விட்டது,” என்று அவர் காணொளி நேர்காணலில் தெரிவித்தார். “இந்த சமன்பாட்டின் மறுமுனையில் நாங்கள் ரஷ்யாவை அடக்கி வைக்க முயன்று வருகிறோம். ரஷ்ய விமானத்தை அவர்கள் சுட்டுவீழ்த்தியபோது நாங்கள் துருக்கியுடன் மீண்டும் ஒரு நெருக்கமான கூட்டணியில் இருப்பதாக நம்பி கொண்டிருந்தோம். இப்போது அது முடிந்துவிட்டது. ஆகவே ரஷ்ய விரிவாக்கத்தைத் தடுப்பதற்கான எங்களின் திட்டங்களும், ISIS ஐ தடுப்பதற்கான எங்களின் திட்டங்களும் இரண்டுமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

புட்டினும் சரி எர்டோகனும் சரி இருவருமே செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் இல் கருத்து தெரிவிக்கையில், இதுவரையில் ரஷ்யா மற்றும் அசாத் ஆட்சிக்கு எதிராக துருக்கி அமெரிக்காவுடன் அணிசேர்ந்திருந்த நிலையில், எதிரெதிர் நோக்கங்களைக் கொண்டிருந்த சிரியா விவகாரத்தில் அவர்கள் இப்போது இணைந்து வேலை செய்ய இருப்பதாக தெரிவித்தனர்.

அந்த விஜயத்திற்கு ஒரு நாள் முன்னதாக, எர்டோகன் ரஷ்யாவின் TASS செய்தி நிறுவனம் மற்றும் அரசு தொலைக்காட்சியான Rossiya 24 உடனான ஒரு நேர்காணலில் கூறுகையில், “சிரியாவில் சமாதானத்தைக் கொண்டு வருவதில் பிரதான நடவடிக்கையாளராக" ரஷ்ய கூட்டாட்சி இருக்கிறது என்று தெரிவித்தார், தொடர்ந்து கூறுகையில், “நாங்கள், அதாவது ரஷ்யா மற்றும் துருக்கி, ஒன்றுசேர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலமாக தான் இந்த [சிரியா] பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று நான் நினைக்கிறேன்,” என்றார்.

அவர் புட்டின் உடன் நடக்கவிருந்த கூட்டத்தை "மறுபிறப்பு" என்று வர்ணித்து அறிவிக்கையில், “ஒவ்வொன்றையும் மீண்டும் பரிசீலிக்கவும், துருக்கி மற்றும் ரஷ்ய உறவுகளில் ஒரு புதிய பக்கத்தைத் திறக்கவும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக இப்போது நான் நம்புகிறேன். கலாச்சாரம், வர்த்தகம், அரசியல், இராணுவம், பொருளாதாரம் உட்பட எல்லா துறைகளிலும் இரண்டு முக்கிய நடவடிக்கையாளர்களாக எங்களால் நிறைய செய்ய முடியுமென நான் நம்புகிறேன்,” என்றார்.

செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் சந்திப்பிற்குப் பின்னர், புட்டின் கூறுகையில், சிரிய நெருக்கடியைத் தீர்ப்பதில் ரஷ்யாவும் துருக்கியும் ஒரே பொதுவான இலக்கைக் கொண்டுள்ளன. அந்த பிரச்சினை மீதான அவர்களின் பார்வைகள் எப்போதும் ஒன்று பொருந்தியதாக இருந்ததில்லை என்று குறிப்பிட்ட அவர், என்றாலும் அவ்விரு நாடுகளும் மேற்கொண்டு விவாதித்து தீர்வுகளைப் பெற உடன்பட்டிருப்பதாக தெரிவித்தார். “எங்களின் பார்வைகள் மற்றும் அணுகுமுறைகளை மாற்றுவது சாத்தியமென நான் நினைக்கிறேன்,” என்றவர் முடித்தார்.

சிரியா மற்றும் துருக்கியில் குர்திஷ் படைகளை நோக்கிய மனோபாவம் போன்ற தீர்க்கப்படாத கருத்துவேறுபாடுகள் பல உள்ளன. குர்திஷ் PKK க்கு ரஷ்யா ஆயுதமளிப்பதாக எர்டோகன் குற்றஞ்சாட்டியுள்ளார். துருக்கி, அதன் பங்கிற்கு, சிரியாவில் உள்ளதும் மற்றும் ரஷ்யாவிலும் செயலூக்கத்துடன் ஈடுபட்டுள்ளதுமான இஸ்லாமிய குழுக்களுக்கு ஆதரவளித்துள்ளது. கிரிமியா பிரச்சினையில், துருக்கி மாஸ்கோவிற்கு விரோதமான கிரிமியா டடார்களுக்கு (Tatars) ஆதரவளித்து வருகிறது.

எர்டோகன் விஜயத்திற்கான முதல் பிரதிபலிப்புகளில் ஒன்று பேர்லினில் இருந்து வந்தது. அந்த தோல்வியடைந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் ஜேர்மன் பத்திரிகைகள் பொதுவாக எர்டோகனுக்கு மிகவும் விரோதமான இருந்துள்ள போதினும், வெளியுறவுத்துறை மந்திரி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் மிகவும் கவனமான அணுகுமுறையை எடுத்தார். “கடந்த ஆண்டு துருக்கியால் ரஷ்ய போர்விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட பின்னரும், இப்போது ஒரு நல்லிணக்கம் இருக்கிறது என்றால் அது நல்லது தான்,” என்று ஜேர்மன் நாளிதழ் Bild க்கு தெரிவித்த அவர், தொடர்ந்து கூறுகையில், “மாஸ்கோ இல்லாமல், ஈரான், சவூதி அரேபியா அல்லது துருக்கி இல்லாமல் அங்கே சிரிய உள்நாட்டு போரில் ஒரு தீர்வு இருக்காது,” என்றார்.