ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Green Party convention: Left rhetoric in the service of pro-capitalist politics

பசுமைக் கட்சியின் வேட்பாளர் தெரிவு மாநாடு: முதலாளித்துவ-ஆதரவு அரசியலின் சேவையில் இடது வாய்வீச்சு

By Evan Blake
9 August 2016

அமெரிக்காவின் பசுமைக் கட்சியானது சனிக்கிழமையன்று டெக்சாஸின் ஹூஸ்டனில் நடந்த வேட்பாளர் தேர்ந்தெடுப்பு மாநாட்டில்  2016 தேர்தலுக்கான தனது ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களாக கலாநிதி ஜில் ஸ்ரைன் மற்றும் அஜாமு பராகாவை உத்தியோகபூர்வமாக பரிந்துரைத்தது. ஆகஸ்ட் 4-7 வரை ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த நிகழ்வு யூ டியூபில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது, ஒருசமயத்தில் அதிகப்பட்சமாக இதனை 4500 பேருக்கும் அதிகமான பேர் பார்வையிட்டனர். இந்த தெரிவு மாநாட்டில் பல திருத்தங்கள் நிறைவேற்றப்படுவதும் இடம்பெற்றிருந்தது. இதில் மிக முக்கியமான ஒரு திருத்தம் “முதலாளித்துவ-எதிர்ப்பு” என மோசடியான பெயரட்டையைக் கொண்டிருந்தது.

பராக் ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டனின் பெயர்களைக் குறிப்பிடாமலேயே அரசாங்கத்தின் போர்க் கொள்கைகளைக் கண்டனம் செய்து, ஸ்ரைன் வழங்கிய 35 நிமிட ஏற்புரை, பசுமைக் கட்சியின் இடது பக்கமான வாய்ச்சவடால் நகர்வாக இருந்தது. பேர்னி சாண்டர்ஸ் கிளிண்டனிடம் பரிதாபகரமாக சரணாகதி அடைந்ததில் பிரமை அகன்றிருக்கும் தீவிரப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை முதலாளித்துவ அரசியலின் பத்திரமான வடிகால்களுக்குள் மீண்டும் திசைதிருப்பும் பொருட்டு அவர்களது ஆதரவை வென்றெடுப்பதற்காக பசுமைக் கட்சியினர் முயற்சி செய்து வருகின்றனர்.

ஸ்ரைன் மற்றும் பசுமைக் கட்சியின் இடது வாய்வீச்சு, அக்கட்சியின் தோற்றுவாய்கள், வரலாறு மற்றும் வேலைத்திட்டத்தின் சீர்திருத்தவாத மற்றும் முதலாளித்துவ-ஆதரவு குணாம்சத்துடன் பொருந்தியதாக இல்லை. உண்மையில் இது, முதலாளித்துவத்தை முழுமையாக ஆதரிக்கின்ற, மார்க்சிசத்தை எதிர்க்கின்ற அத்துடன் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கு குரோதமான உயர் நடுத்தர-வர்க்கத்தின் பிரிவுகளை அடித்தளமாகக் ஒண்ட ஒரு தேசியவாத, முதலாளித்துவ அரசியல் கட்சியாகும். பசுமைக் கட்சியினர் செல்வாக்கை வென்றிருக்கின்ற அல்லது அதிகாரத்தை வென்றிருக்கின்ற இடங்கள் அனைத்திலும், குறிப்பாக ஜேர்மனியில், சொந்த நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சிக்கன நடவடிக்கைகளையும் வெளிநாட்டில் போரையும் அவர்கள் ஆதரித்திருக்கின்றனர்.

சனிக்கிழமையன்று இணையத்தில் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு பசுமைக் கட்சியின் தேசியவாதம் வெட்டவெளிச்சமாய் இருந்தது. தெரிவுமாநாட்டின் இடைவெளிகளின் போது திரையில் அமெரிக்கக் கொடி ஒளிவீசிப் பறந்தது. சாண்டர்ஸ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் போட்டு வைத்த பாதையைப் பின்பற்றி, பசுமைக் கட்சியும் ஒரு பாதுகாப்புவாத அடிப்படையில் டிரான்ஸ் பசிபிக் கூட்டை ஒழிக்கக் கோரியது, பிரதிநிதிகளில் பலரும் "TPP வேண்டாம்!” என்று கூறிய வாசகங்களைத் தாங்கியிருந்தனர்.

பசுமைக் கட்சியானது, தமது அனுபவவாத உத்திகளில், முன்னதாய் ஜனநாயகக் கட்சிக்குள்ளாக சாண்டர்ஸை ஆதரித்த சோசலிஸ்ட் மாற்று, மற்றும் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு போன்ற பல்தரப்பட்ட போலி-இடது அமைப்புகளுடன் கூட்டணிகளை உருவாக்கியிருக்கிறது. சென்ற ஜூலை மாதத்தில் பிலடெல்பியாவில் நடந்த ஜனநாயகக் கட்சியின் தெரிந்தெடுப்பு மாநாட்டில், “Bernie-or-Bust” என்றழைக்கப்படும் கன்னையில் இருந்தான நூற்றுக்கணக்கான சாண்டர்ஸ் ஆதரவுப் பிரதிநிதிகள் மாநாட்டில் இருந்து அகன்றனர். அவர்களில் பலரும் ஸ்ரைன் மற்றும் பசுமைக் கட்சியினருக்கு ஆதரவாகத் திரும்பியிருக்கின்றனர்.

பசுமைக் கட்சியின் தெரிந்தெடுப்பு மாநாட்டில் கலந்து கொண்ட 500 பிரதிநிதிகளில் - கட்சி வரலாற்றில் இது மிகப்பெரும் எண்ணிக்கையாகும் - சுமார் பாதிக்கும் அதிகமானோர் கிளிண்டனை சாண்டர்ஸ் ஆதரித்ததற்கு பின்னர் பதிவு செய்தவர்களாவர். இந்த புதிய ஆதரவாளர் அடுக்கிடம் நேரடியாகப் பேசிய ஸ்ரைன் கூறினார்: “பேர்னி சாண்டர்ஸ், ஹிலாரி கிளிண்டனை வழிமொழிந்த அந்த தினத்தில், நமது பிரச்சாரத்திற்கு மடைக்கதவுகள் திறந்தன, கூடுதல் தன்னார்வலர்கள், கூடுதல் வாக்குப்பெட்டி அணுகல் செலுத்துநர்கள், கூடுதல் நிதியாதாரம். உங்களுடன் கைகோர்த்திருப்பதில் வரலாற்றில் முன்னெப்போதினும் ஒரு மாறுபட்டதொரு பிரச்சாரத்தில் நாங்கள் இருக்கிறோம்.”

 “ஜனநாயகம் எப்படி காட்சியளிக்குமோ அவ்வாறு நாம் இருக்கிறோம்! வாருங்கள் அனைவரும் முன்னேறுவோம்! ஜனநாயகம் எப்படி காட்சியளிக்குமோ அவ்வாறு நாமிருக்கிறோம், அரசியல் புரட்சி எப்படி காட்சியளிக்குமோ அப்படி நாம் இருக்கிறோம்!” என்று வெற்றாவேசத்துடன் குரலெழுப்பி ஸ்ரைன் தனது ஏற்புரையைத் தொடங்கினார்.

ஒரு ”அரசியல் புரட்சி”க்கு சாண்டர்ஸ் விடுத்த அழைப்புக்கு - அது இப்போது கிளிண்டனால் முன்னெடுக்கப்படுவதாக அவரேயும் இப்போது கூறி வருகிறார் - இணக்கப்பட்ட வகையில், பசுமைக் கட்சியினர் இரு திசைகளிலும் களம்காண முயற்சி செய்து வருகின்றனர். சாண்டர்ஸ் ஜனநாயகக் கட்சியுடன் முழுமையாக ஒருங்கிணைந்து கொண்டதும் கிளிண்டன் மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஸ்தாபகத்தின் முன்பாக தன்னை சிறுமைப்படுத்திக் கொண்டதும் அவரது “அரசியல்-புரட்சி” என்றழைத்துக் கொண்டதன் உண்மையான உள்ளடக்கத்திற்குக் கொஞ்சமும் பொருந்தவில்லை என்ற நிலையிலும் கூட, சாண்டர்ஸ்க்கான மாற்றாய் ஒரு புறமும் அவரது பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக இன்னொரு புறமுமாய் இருவிதமாக பசுமைக் கட்சியினர் தங்களை இப்போது சித்தரித்துக் கொண்டிருக்கின்றனர்.

சாண்டர்ஸின் “அரசியல் புரட்சி”யானது ஆரம்பந்தொட்டே, உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்திருந்ததைப் போல, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அரசியல் தீவிரப்படல் பெருகிச் செல்வதை தலைசீவுவதற்கும் தடம்புரளச் செய்வதற்கும், முதலாளித்துவத்தின் பிரிவுகளின் சார்பாகவும் அவற்றின் ஆதரவுடனும் முன்னெடுக்கப்பட்ட ஒரு முயற்சியாக இருந்தது என்ற அடிப்படையான உண்மையை சிடுமூஞ்சித்தனமானதும் மோசடியானதுமான இந்த முன்னோக்கு மறைக்கிறது.

ஸ்ரைனின் போலித்தனமான போர்-எதிர்ப்பு வாய்வீச்சு

ஸ்ரைன் தனது உரையை முடிக்கும் தறுவாயில் வெளியுறவுக் கொள்கை மற்றும் போர் ஆகிய பிரச்சினைகளைக் குறிப்பிட்டார்: “இந்தத் தேர்தலில், நாம் ஒரு உலகத்தைக் கொண்டிருப்போமா அல்லது வருங்காலத்திற்குள் முன்னேறிச் செல்லப் போவதில்லையா என்பதைத் தீர்மானித்துக் கொண்டிருக்கிறோம். தீர்ப்பு நாள் மேலும் மேலும் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது... காலநிலையை [மாற்ற] கருத்தில் கொண்டால், அணு ஆயுதங்களைக் கருத்தில் கொண்டால் மற்றும் நாம் மறுபடியும் மேலிருந்து பல்டியடித்து மூழ்கிச் சென்று கொண்டிருக்கும் இந்த பித்தேறிய அணு ஆயுதப் போட்டியைக் கருத்தில் கொண்டால், மற்றும் உலகெங்கிலும் நம் மீது அனல் வீசிக் கொண்டிருக்கும் இந்த முடிவில்லாத மற்றும் தொடர்ந்து விரிந்து செல்கின்ற போர்களைக் கருத்தில் கொண்டால், நம்மால் உதாசீனத்துடன் வெளியில் சும்மா உட்கார்ந்திருக்க இயலாது.”

பசுமைக் கட்சி பிரச்சாரத்தின் போர்-எதிர்ப்பு வாய்வீச்சு என்பது பெரும்பாலும் சமீபத்தியதொரு கண்டுபிடிப்பாய் இருக்கிறது, ஏனென்றால் ஸ்ரைன் தனது பிரச்சாரத்தில் இப்போது வரை பெரும்பாலும் வெளியுறவுக் கொள்கை விவகாரத்தில் வாய் திறக்காமல் தான் இருந்து வந்திருந்தார். போர் மற்றும் அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தலைக் குறித்தும் கூட ஸ்ரைனின் கண்டனங்களுக்கு நேரெதிரான விதத்தில், 2014 இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட பசுமைக் கட்சியின் கொள்கைப் பிரகடன ஆவணமானது, இந்த அடிப்படையான விடயங்களில் பெரும்பாலும் ஓசையேதும் எழுப்பாமலேயே இருக்கிறது. இவை “நடவடிக்கைக்கான அழைப்பில்”, “முகவுரை”யில் அல்லது “பத்து இன்றியமையாத விழுமியங்களில்” குறிப்பிடப்படவில்லை என்பதோடு கொள்கைப் பிரகடனத்தின் எஞ்சிய 66 பக்கங்களில் ஒரேயொரு துணைத் தலைப்புக்கும் கூட தகுதி பெறவில்லை.

ஸ்ரைன் தனது உரையின் மற்ற பகுதிகளில் “ஏமனில் சவுதி அரேபியாவில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு” ஆகியவை குறித்துக் குறிப்பிடுகின்ற அதேவேளையில், கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா முழுவதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் முன்னெடுக்கப்பட்ட முடிவற்ற போர் குறித்து குறிப்பாக எதனையும் கூறவில்லை. அதற்குப் பதிலாய் “இந்த முடிவற்ற மற்றும் விரிந்து செல்லும் போர்களை” தயக்கத்துடன் விமர்சனம் செய்கிறார்.

ஈராக்கில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மரணங்களுக்கும், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளெங்கும் இன்னும் நூறாயிரக்கணக்கிலான மரணங்களுக்கும் இட்டுச் சென்றிருக்கக் கூடிய இந்தப் போர்களை மேற்பார்வை செய்திருக்கக் கூடிய ஒபாமா, கிளிண்டன் மற்றும் புஷ் உள்ளிட்ட எந்த முன்னிலை அரசியல்வாதிகளின் பெயர்களையும் ஸ்ரைன் திட்டமிட்டு விட்டு விடுகிறார்.

“கிறுக்குத்தனமான அணு ஆயுதப் போட்டி” குறித்த அவரது மேலோட்டமான குறிப்பு ரஷ்யா மற்றும் சீனாவை இராணுவரீதியாக சுற்றிவளைத்துக் கொண்டிருக்கின்ற மற்றும் ஒரு அணு ஆயுத மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தலை தொடர்ச்சியாய் தீவிரப்படுத்திச் செல்கின்ற அமெரிக்கா ஆற்றுகின்ற மையமான பாத்திரம் குறித்து மழுப்புகிறது. இவ்விடயத்தில், புட்டினின் முகவராக ட்ரம்ப்பை முத்திரை குத்துவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற மெக்கார்த்தி பாணி முயற்சி குறித்தும், மற்றும் கிளிண்டன் மற்றும் ஜனநாயகக் கட்சியால் விசிறி விடப்படுகிற ரஷ்ய-விரோத வெறி குறித்தும் கூட ஸ்ரைன் எதுவும் குறிப்பிடவில்லை.

சமீபத்திய ஒரு பிரச்சார அறிக்கையில், ஸ்ரைன் “அபாயகரமான களங்கம் பெற்றிருக்கும் இராணுவ நிதிஒதுக்கீட்டை 50 சதவீதம் குறைக்க” அழைப்பு விடுத்து, அதனை ஒரு போர்-எதிர்ப்பு நிலையாக முன்வைக்கிறார். அரசாங்கத்தின் பெரும்பாலும் குறைமதிப்பீடு செய்யப்படுகிறதாய் இருக்கின்ற வருடாந்திர இராணுவ ஒதுக்கீடு சுமார் 500 பில்லியன் டாலர் என்ற அளவை அவர் ஒப்புக் கொள்கிறாராயின், வருடாந்திர ஒதுக்கீட்டாக 250 பில்லியன் டாலருக்கு அவர் பரிந்துரை செய்கிறார் என்பது வெளிப்படை.

உண்மையில் சாண்டர்சுக்கு ஸ்ரைன் அளிக்கின்ற நிபந்தனையற்ற ஆதரவு —சாண்டர்ஸ் பசுமைக் கட்சியில் இணைந்து அதன் வேட்பாளராக தனது இடத்தை எடுத்துக் கொள்வதற்கு சென்ற மாதத்தில் ஸ்ரைன் அழைப்பு விடுத்திருந்தார்— தான் ஸ்ரைனின் போர்-ஆதரவு முன்னோக்கின் மீதான மிகப்பெரும் அம்பலப்படுத்தலாக இருக்கிறது. சாண்டர்ஸ் தனது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார சமயத்தின் போது, ஒபாமாவின் போர்க் கொள்கைகளுக்கும் -ஆளில்லா விமானப் படுகொலைத் திட்டம் உட்பட - மற்றும் அமெரிக்கா “உலகின் மிகப்பெரும் இராணுவத்தைக் கொண்டிருந்தாக வேண்டும்” என்ற அவரது நம்பிக்கைக்கும் தொடர்ந்து தனது ஆதரவை வலியுறுத்தி வந்திருந்தார்.

"சூழலியல் சோசலிசமும்” “உற்பத்தி மீதான அரசுடைமை”க்கு பசுமைக் கட்சியின் குரோதமும்

அமெரிக்காவிற்குள்ளான உள்நாட்டுப் பிரச்சினைகளை குறித்துப் பேசிய ஸ்ரைன் மீண்டும் இடது வாய்வீச்சாகத் தோன்றுவதைக் கையிலெடுத்தார். அமெரிக்க சமூகம் ஒரு “முன்கண்டிராத நெருக்கடி”யில் சிக்கிக் கொண்டிருப்பதாக அவர் விவரித்தார். அவர் பிரகடனம் செய்தார், “இது ஒரு மீட்சி என்று நம்மிடம் சொல்லப்படுகிறது, ஆனால் உண்மையில் இன்னும் கூட இது ஒரு அவசரகால நிலை தான். நாம் இழந்த நல்ல வேலைகள் பகுதி-நேர, குறைந்த ஊதிய, தற்காலிக, பாதுகாப்பற்ற வேலைகளால் பிரதியீடு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு இளம் தலைமுறை, மாணவர் கடனுக்குள் சிறைப்படுத்தப்படுகிறது, கறுப்பினத்தவர் நெருப்பின் மேல் வாழும் நிலை இருக்கிறது, குடியேற்ற மக்கள் பாரிய அளவில் திருப்பி அனுப்பப்படும் நிலையை எதிர்கொள்கின்றனர், எண்ணெய்க்கான போர்கள் நம்மீது பெரும் ஆவேசத்துடன் எதிர்விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது, காலநிலை மாற்றம் நமது நாகரிகத்தை நமது வாழ்நாளில் மிக மோசமாய் அச்சுறுத்துகிறது [...] ஆக, நாம் ஒரு கலகத்தில் இருக்கிறோம்!”

அமெரிக்காவின் படுபயங்கர நிலைமைகள் சிலவற்றைக் குறிப்பிடுகின்ற ஸ்ரைன் மற்றும் பசுமைக் கட்சியினர், ரம்மியமான தாராளவாதத்திற்கு சற்று மேலான ஒன்றாக கருதக் கூடிய தீர்வுகளை வழங்குகின்றனர். ஸ்ரைன் தனது உரையில் எந்த இடத்திலும் “தொழிலாள வர்க்கம்”, “வர்க்கப் போராட்டம்”, “முதலாளித்துவம்” அல்லது “சோசலிசம்” ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை. உற்பத்தி சாதனங்களின் பொது உடைமை அல்லது நிதிப் பிரபுத்துவத்தின் சொத்துகளைப் பறிமுதல் செய்வது ஆகிய இரண்டு அடிப்படையான சோசலிஸ்ட் கோட்பாடுகளுக்கும் தெரிவு மாநாட்டில் பேசிய எந்தவொரு பேச்சாளரும் அழைப்பு விடுக்கவில்லை. சொத்துகளில் கணிசமான அளவில் மறுவிநியோகம் இருந்தாக வேண்டும் என்று பசுமைக் கட்சியின் வேலைத்திட்டம் கூறவில்லை, பதிலாக மக்களின் ஒட்டுமொத்தமான “மிகைநுகர்வின்” மீதே அது கவனம்குவிக்கிறது.

மாநாட்டில் பசுமைக் கட்சியினர் தமது கொள்கைப் பிரகடனத்தில், “முதலாளித்துவ-எதிர்ப்பு” பிரகடனமாகச் சொல்லப்படுகிற திருத்தம் 8-35 ஐ நிறைவேற்றினர். உண்மையில் இந்தத் திருத்தமானது, முதலாளித்துவத்தின் கீழாய் இப்போது நிலவுகின்ற சொத்து உறவுகளை குறிப்பிடத்தக்க வகையில் சவால் செய்வதற்கு பசுமைக் கட்சி எதனையும் செய்யாத அதேநேரத்தில் அதற்கு ஒரு தீவிரப்பட மேற்பூச்சை வழங்குவதை மட்டுமே வெறுமனே நோக்கமாய்க் கொண்டுள்ளது.

அவர்களது வேலைத்திட்டத்தில் “சிறு வணிகத்தை, பொறுப்பான பங்குதாரர் முதலாளித்துவத்தை, மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் பரந்த மற்றும் விரிந்த வடிவங்களை” ஊக்குவிக்கின்ற இப்போதைய பத்தியை இந்த திருத்தம் பிரதியீடு செய்கிறது. ஆயினும், “பங்குதாரர் முதலாளித்துவத்தை” ஊக்குவிக்கும் தமது முந்தைய நிலைப்பாட்டைக் குறித்த எந்த விமர்சனமும் மாநாட்டில் இல்லை.

ஏற்றுக் கொள்ளப்பட்ட திருத்தம் கூறுகிறது, “சூழலியல் மற்றும் அதிகாரப் பரவல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாற்று பொருளாதார அமைப்புமுறையை -ஏறக்குறைய அனைத்து உற்பத்தியின் மீதுமான தனியார் உடைமைத்துவத்தை பராமரிக்கின்ற முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் ஜனநாயகரீதியான, உள்ளூர் மட்ட முடிவெடுத்தல் இல்லாமல் தொழிற்சாலைகள் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க எண்ணுகிற அரசு-சோசலிச அமைப்புமுறை இரண்டையுமே நிராகரிக்கின்ற ஒரு மாற்றாகும் இது - கட்டியெழுப்புவதற்காக பசுமைக் கட்சி பாடுபடுகிறது. முதலாளித்துவம் (உற்பத்தியின் தனியார் உடைமை) மற்றும் அரசு சோசலிசம் (உற்பத்தியின் அரசுடைமை) ஆகியவற்றின் பழைய மாதிரிவடிவங்கள் சூழலியல்ரீதியாக வலுவானவையாகவோ, சமூகரீதியாக நியாயமானவையாகவோ, அல்லது ஜனநாயகரீதியானதாகவோ இல்லை என்றும் இரண்டுமே அநீதிகளை முன்னெடுக்கக் கூடிய உட்பொதிந்த கட்டமைப்புகளைக் கொண்டிருக்கின்றன என்றும் நாங்கள் நம்புகிறோம்.”

சர்வதேசரீதியாக தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த முனைவதற்குப் பதிலாக, பசுமைக் கட்சியானது, தேசியவாத-அடிப்படையிலான பொருளாதாரங்களில் இருந்து அராஜகவாத மாதிரியிலான கற்பனாவாத, உள்ளூர்-அடிப்படை “கூட்டுவாழ்க்கைவாதத்தை” நோக்கி பின்னோக்கித் திரும்ப முனைகிறது. திருத்தத்தில் அவர்கள் எழுதுகின்றனர், “பெரியளவு பசுமை பொதுப் பணிகள், நகராட்சிமயமாக்கம், மற்றும் வேலையிட மற்றும் சமுதாய ஜனநாயகம் ஆகியவற்றின் அடிப்படையிலான ஒரு பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்புவோம். இந்த அதிகாரப்பரவல் கொண்ட அமைப்புமுறையை சிலர் ‘சூழலியல் சோசலிசம்’ என்றும் ‘கூட்டுவாழ்க்கைவாதம்’ அல்லது ‘கூட்டுறவு காமன்வெல்த்’ என்றும் அழைக்கின்றனர்.

மத்திய பொருளாதார திட்டமிடலுக்கும்  உற்பத்தி சாதனங்கள் அரசுடைமை ஆவதற்கும் பசுமைக் கட்சி அடிப்படையாய் எதிராய் நிற்கிறது என்பதை இந்தத் திருத்தம் தெளிவாக்குகிறது. ரஷ்யப் புரட்சியானது ஸ்ராலினிசத்தை தவிர்க்கவியலாமல் உருவாக்கியது என்ற வரலாற்றுமோசடியான வாதத்தை அடிப்படையாகக் கொண்டே “அரசு சோசலிசம்” (“state socialism”) தவிர்க்கவியலாமல் எதேச்சாதிகாரமாக ஆகிறது என்ற அவர்களது கூற்று அமைந்திருக்கிறது. இந்தத் திருத்தமானது “முதலாளித்துவ-எதிர்ப்புடையதாக” சித்தரிக்கப்படுகின்ற அதேநேரத்தில், உண்மையில் இது சோசலிசத்திற்கான எதிர்ப்பின் மற்றும் முதலாளித்துவ சொத்துறவுகளின் ஒரு ஓசையற்ற பாதுகாப்பின் அறிவிப்பாகவே இருக்கிறது.

ஜனநாயகக் கட்சியும் அடையாள அரசியலும்

ஜனநாயகக் கட்சியை உள்ளிருந்து சீர்திருத்திவிட முடியும் என்று கூறிய சாண்டர்ஸின் பிரச்சாரத்திற்கு நேரெதிராய், இரண்டு பெரிய கட்சிகளுக்கும், குறிப்பாக ஜனநாயகக் கட்சிக்கு, வெளியிலிருந்து அழுத்தமளிக்கின்ற ஒரு குழுவாக சேவை செய்வதும், பெருகும் எதிர்ப்புணர்வை மீண்டும் முதலாளித்துவ அரசியலின் கட்டமைப்பிற்குள்ளாகத் திருப்புவதுமே பசுமைக் கட்சியின் அரசியல் மூலோபாயமாக இருக்கிறது.

இந்த முன்னோக்கு பசுமைக் கட்சியினரின் கொள்கைப் பிரகடனத்தில் அவர்களாலேயே விரிவாகக் கூறப்படுகிறது, அதில் அவர்கள் தெரிவிக்கின்றனர் : “அமெரிக்கா ஒரு நச்சுச் சுழற்சிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது, இரண்டு பெருநிறுவனக் கட்சிகளுமே தமது 1 சதவீத எஜமானர்களுக்கு மேம்பட்ட வகையில் சேவை செய்வதற்கு முனைகின்ற நிலையில், ஒரு உண்மையான எதிர்க்கட்சி எதிராய் இல்லாத நிலையில், இந்த இருகட்சி அரசியல், இரட்டைஏகபோகமானது இன்னும் அதிகமானதொரு வேகத்தில் மேலதிகமாய் வலது நோக்கித் திரும்பும் என்பது இதில் மேலும் மேலும் அதிகமாய் தெளிவாகியிருக்கிறது.”

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒரு “உண்மையான எதிர்க் கட்சி”யாக பசுமைக் கட்சி பெறுகின்ற வெற்றிகள் அமெரிக்க அரசியல் மேலதிகமாய் வலது நோக்கித் திரும்புவதை மாற்றி விடுமாம். இந்த முன்னோக்கானது சாண்டர்ஸினது முன்னோக்கிற்கு சளைக்காத அளவுக்கு திவாலானதாகும், இன்னும் சொன்னால், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்கு ஸ்ரைன் திரும்பத் திரும்ப பாராட்டளிப்பதில் விளங்கப்படும் விதமாக, இந்த இரண்டு முன்னோக்குகளுமே ஒருமிக்கப்படுகின்றன.

ஜனநாயகக் கட்சியையும் ISO மற்றும் சோசலிச மாற்று போன்ற அதன் போலி-இடது துணைக்கோள்களையும் போலவே, பசுமைக் கட்சியானது அடையாள அரசியலை அதன் மிகத் தீவிர வடிவங்களில் ஏற்றுக் கொண்டுள்ளது. சனிக்கிழமையன்று ஏறக்குறைய ஒவ்வொரு பேச்சாளருமே நிற மற்றும் பாலினப் பிளவுகள் தான் அமெரிக்க சமூகத்தின் மைய சக்திகளாய் இருப்பதாகப் பிரகடனம் செய்தனர். “வெள்ளை மற்றும் ஆண் மேலாதிக்கம்” மற்றும் “வெள்ளையர் சிறப்புசலுகை” மீதான பன்முனைக் கண்டனங்கள் இருந்தன.

ஸ்ரைன் தனது உரையில், தொழிலாள வர்க்கத்தின் அத்தனை பிரிவுகளையும் பாதிக்கக் கூடிய போலிஸ் வன்முறையை ஒட்டுமொத்தமாக “நிறவெறி காவலின்” அடிப்படையிலான பிரச்சினையாக வருணித்தார். “ஒவ்வொரு சமுதாயத்திலும்” “போலிஸ் மீளாய்வு குழுக்களை” அமைப்பதன் மூலமாக இந்தப் பிரச்சினையைத் தீர்க்கலாம் என்பதாய் அவர் ஆலோசனை வைத்தார். உண்மையில் இத்தகைய ஆலோசனைகள் நாடு முழுமையிலுமான போலிஸ் கொலைகளின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர எதுவொன்றும் செய்யப் போவது கிடையாது.

சனிக்கிழமையன்று ஸ்ரைனுக்கு முன்னால் பேசிய, முன்னாள் சாண்டர்ஸ் ஆதரவாளரும் செயல்பாட்டாளருமான YahNé Ndgo நிறவெறியை நீக்கமற நிறைந்த ஒன்றாகவும் ஒடுக்கி வைக்க முடியாததாகவும் வருணித்தார். அவர் அறிவித்தார், “இங்கே இருக்கக் கூடிய நிறவெறியாளர்கள் அனைவரையும் எழுந்து நிற்கக் கோருகிறேன்”. கொஞ்சம் பேர் எழுந்து நின்றதன் பின்னர் அவர் மற்றவர்களையும் அதனையே செய்ய அழுத்தமளித்தார். அவர் வாதிட்டார், “இப்போது உட்கார்ந்திருக்கக் கூடிய அனைவரும் கொஞ்சம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. ஏனென்றால் இந்த அமைப்புமுறையில் வளர்க்கப்பட்டு ஒரு நிறவெறியாளராக இல்லாமல் உங்களால் இருக்க முடியாது. அது சாத்தியமில்லை!”.

கேட்டுக் கொண்டிருந்த பசுமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த அதி நிறவெறிவாத தர்க்கத்தால் அலைக்கழிக்கப்பட்ட நிலையில், Ndgo பிரகடனம் செய்தார், “இது உங்கள் பிழையன்று, ஆனால் அதை ஒத்துக் கொள்ளவே உங்களால் முடியவில்லை என்றால் அதனை மாற்றுவதற்கு உங்களால் எதுவும் செய்ய முடியாது. ’ஹலோ, என் பெயர் _____, நான் ஒரு நிறவெறியர்!’ என்று நீங்கள் சொல்வதே எனக்கு வேண்டும்.” அவர் தொடர்ந்து வாதிடுகையில் ஊடகங்கள், திரைப்படங்கள் மற்றும் பள்ளிகளின் முயற்சிகளால், ”அத்தனை அமெரிக்கர்களுமே ஒருவர் மற்றவருக்கு எதிராகவும் தங்களுக்கு எதிராகவுமே கூட இனவெறியராக இருக்கும்படி நிரலிடப்பட்டிருக்கிறார்கள்” என்றார்.

Ndgo இன் கூற்றுகள் ஏறக்குறைய அன்றாடம் நியூயோர்க் டைம்ஸ் மூலமாக உமிழப்படுவதும், ஜனநாயகக் கட்சியினர் சென்ற மாதத்தில் நடந்த தமது சொந்த வேட்பாளர் தெரிவுமாநாட்டில் பயன்படுத்திக் கொண்டதுமான இனவெறிவாதத்தின் தர்க்கரீதியான நீட்சியே ஆகும். இத்தகைய பிற்போக்குத்தனமான மனோநிலைகள் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தி கவனத்தை பொருளாதார சமத்துவமின்மை மற்றும் போர் முனைப்பு ஆகிய அடிப்படைப் பிரச்சினைகளில் இருந்து திருப்புவதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன.

சமீபத்திய கருத்துக்கணிப்புகளின் படி, பசுமைக் கட்சியினர் நவம்பரில் சுமார் ஐந்து சதவீத வாக்குகளைப் பெறுவர் என்றும், 30 வயதிற்குக் கீழானவர்களின் வாக்குகளில் சுமார் 16 சதவீதத்தினைப் பெறுவர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது அவர்களது 2012 பிரச்சாரத்துடன் ஒப்பிட்டால் கணிசமான அதிகரிப்பாகும். தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் கிளிண்டன் மற்றும் ட்ரம்ப்பின் வலது-சாரி பிரச்சாரங்களை எதிர்ப்பதற்கான ஒரு வழியை எதிர்நோக்கியிருப்பதால், பசுமைக்கட்சி வரும் மாதங்களில் இன்னும் தொடர்ச்சியான வளர்ச்சியைக் காணும்.

ஆயினும், ஒரு உண்மையான மாற்றை எதிர்நோக்கியிருப்பவர்கள், பசுமைக் கட்சியின் பொய்யான போலி-இடது வாய்வீச்சை அடையாளம் கண்டுகொண்டு உண்மையான சோசலிச சர்வதேசியவாதத்திற்கான போராட்டத்தைக் கையிலெடுத்தாக வேண்டும். இந்த முன்னோக்கிற்காகப் போராடுவதற்காகவும் போர், சமூக சமத்துவமின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு எதிராக வரவிருக்கும் போராட்டங்களில் அவசியமான தலைமை கொடுப்பதற்காகவும் சோசலிச சமத்துவக் கட்சி அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக ஜெர்ரி வையிட்டையும் துணை ஜனாதிபதி வேட்பாளராக நைல்ஸ் நிமூத்தையும் முன்நிறுத்தியுள்ளது.