ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

New book by David North
A Quarter Century of War: The US Drive for Global Hegemony 1990–2016

கால் நூற்றாண்டு போர்: உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் உந்துதல் 1990-2016

By David North
11 July 2016

டேவிட் நோர்த் எழுதிய கால் நூற்றாண்டு போர்: உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் உந்ததுல் 1990-2016 என்ற நூலுக்கான முகவுரையை இங்கே வெளியிடுகின்றோம். ஆகஸ்ட் 10 அன்று வெளியாகும் இந்நூல், மெல்லிய அட்டை மற்றும் தடித்த அட்டை ஆகிய இரண்டு வடிவங்களிலும் கிடைக்கும். இந்நூலை மேஹ்ரிங் புக்ஸ் வலைத் தளத்தில் இன்றில் இருந்தே முன்கூட்டி பதிவு செய்துகொள்ள முடியும்.

வளர்ச்சிக் காலகட்டத்தினை விடவும் நெருக்கடி காலகட்டத்தில்தான் அமெரிக்காவின் மேலாதிக்கமானது இன்னும் முழுமையாகவும், இன்னும் பகிரங்கமாகவும், இன்னும் மூர்க்கத்தனமாகவும் செயல்படும்.”

---- லியோன் ட்ரொட்ஸ்கி, 1928  

”1914 இல் ஜேர்மனியை போரின் பாதைக்குத் தள்ளிய அதே பிரச்சினைகளையே அமெரிக்க முதலாளித்துவம் எதிர்கொண்டு நிற்கிறது. உலகம் பங்கிடப்பட்டிருக்கிறதா? அது மறுபங்கீடு செய்யப்பட்டாக வேண்டும். ஜேர்மனியைப் பொறுத்தவரை அது ‘ஐரோப்பாவை ஒழுங்கமைக்கும்” பிரச்சினையாக இருந்தது. அமெரிக்காவுக்கு உலகத்தை ‘ஒழுங்கமைத்தாக” வேண்டும். வரலாறு, மனிதகுலத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எரிமலை வெடிப்புக்கு நேரெதிராக கொண்டு வந்து கொண்டிருக்கிறது.”

---- லியோன் ட்ரொட்ஸ்கி, 1934

1990-91 இல் தொடங்கிய அமெரிக்க தலைமையிலான கால் நூற்றாண்டு கால போர்களுக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பதிலிறுப்பை ஆவணப்படுத்துகின்ற அரசியல் அறிக்கைகள், பொதுக்கூட்ட உரைகள், கட்சி அறிக்கைகள், கட்டுரைகள் மற்றும் விவாதங்கள் இந்தத் தொகுதியில் இடம்பெற்றிருக்கின்றன. இங்கே வழங்கப்பட்டிருக்கும் நிகழ்வுகளின் பகுப்பாய்வுகள், அவை கட்டவிழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் எழுதப்பட்டிருந்தவை என்றாலும் கூட, காலத்துக்கு தாக்குப்பிடித்து நிற்கின்றன. ஆருடம் கூறும் படிகப் பந்து எதுவும் அனைத்துலகக் குழுவிடம் இல்லை. மாறாய் அதன் வேலைகள் அமெரிக்க மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகள் குறித்த ஒரு மார்க்சிச புரிதலை உள்வாங்கி இருப்பவை ஆகும். மேலும், மார்க்சிச பகுப்பாய்வு முறையானது நிகழ்வுகளை தனித்தனி காலகட்டங்களின் ஒரு தொடர்வரிசையாகக் காண்பதில்லை, மாறாக ஒரு பரந்த வரலாற்று நிகழ்வுப்போக்கு கட்டவிழும் தருணங்களாக ஆய்வு செய்வதாகும். வரலாற்று நோக்குநிலையுடனான இந்த அணுகுமுறையானது, சமீபத்திய அரசியல் அபிவிருத்திகளுக்கு ஒரு தோற்றப்பாட்டுவாத பதிலிறுப்பை வெளிப்படுத்துவதில் இருந்து பாதுகாக்கின்ற பாதுகாப்புச் சாதனமாக சேவைசெய்கிறது. ஒரு நிகழ்வின் அடிப்படையான காரணம், அது நிகழும் தருணத்தில் வெளிப்படையாக இருப்பது அபூர்வமே என்பதை அது அங்கீகரிக்கிறது.

முதலாளித்துவ ஊடகங்களில் பகுப்பாய்வு என்று கூறப்படுவனவற்றின் பெரும்பாலானவற்றில், ஒரு கொடுக்கப்பட்ட நிகழ்வின் தோற்றப்பாட்டுவாத விவரிப்பை, அதன் கீழமைந்த ஆழமான காரணத்துடன் சமப்படுத்துவதற்கு அதிகமாக எதுவொன்றும் இருப்பதில்லை. இந்த வகையான அரசியல் ஆய்வுகள் அமெரிக்காவின் போர்களை,  ஈராக்கில் சதாம் குசைன், சோமாலியாவில் “போர் பிரபு” ஃபரா அய்தீது, சேர்பியாவில் ஸ்லோபோடன் மிலோசெவிக், அல்கெய்தாவின் ஒசாமா பின் லாடன், ஆப்கானிஸ்தானில் முல்லா ஓமர், லிபியாவில் மும்மார் கடாபி, அத்துடன் மிக சமீபத்தில் சிரியாவில் பஷார் அல் ஆசாத், கொரியாவில் கிங் காங் உன், மற்றும் ரஷ்யாவில் விளாடிமிர் புட்டின் போன்று தீமையின் ஏதேனும் ஒரு உருவடிவத்திற்கு எதிரான அவசியமான பதிலிறுப்புகளாக அங்கீகரிக்கின்றன. அழிப்பதற்குத் தகுதியான அரக்கர்களின் அமெரிக்கப் பட்டியலுடைய எல்லையில்லாத விரிந்துகொண்டே செல்லத்தக்க பெயர்வரிசையில் புதிய பெயர்கள் தொடர்ச்சியாக சேர்க்கப்பட்ட வண்ணம் தான் இருக்கின்றன.

இத்தொகுதியில் இருக்கும் உள்ளடக்கம் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மீதான பகுப்பாய்வுக்கு ஒரு மிக மாறுபட்ட மற்றும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அணுகுமுறையாக அமைகின்ற பதிவாகும்.

முதலாவதும், மிக முக்கியமானதுமாய், அனைத்துலகக் குழுவானது 1989-90 இல் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகள் வீழ்ச்சியையும், 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதையும், இரண்டாம் உலகப் போரின் சாம்பல்களில் இருந்து தோன்றியிருந்த ஒட்டுமொத்த உலகளாவிய தேசிய-அரசு அமைப்புமுறையினதும் உயிர்வாழ்விற்கான ஒரு நெருக்கடி என்று பொருள்விளக்கமளித்தது. இரண்டாவதாய், ஸ்தாபிக்கப்பட்ட போருக்குப் பிந்திய சமநிலையின் முறிவானது துரிதமாக ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் ஒரு மறுஎழுச்சிக்கு இட்டுச்செல்லும் என்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்கணித்தது. 1990 ஆம் ஆண்டு ஆகஸ்டில், அதாவது இருபத்தாறு வருடங்களுக்கு முன்பாகவே, ஈராக் மீது புஷ் நிர்வாகம் தொடுத்த போரின் நீண்ட-காலத் தாக்கங்களை அதனால் முன்கூட்டி காணமுடிந்தது: 

இது உலகின் ஒரு புதிய ஏகாதிபத்திய மறுபங்கீட்டின் தொடக்கத்தைக் குறித்து நிற்கிறது. போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் முடிவு என்பது காலனித்துவத்திற்கு பிந்தைய சகாப்தத்தின் முடிவை அர்த்தப்படுத்துகிறது. ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கமானது “சோசலிசத்தின் தோல்வி”யை அது பிரகடனப்படுத்துகின்ற வேளையில், வார்த்தைகளில் இன்னும் இல்லை என்றாலும் நடைமுறையிலேனும், சுதந்திரத்தின் தோல்வியையே பிரகடனம் செய்கிறது. பெரிய ஏகாதிபத்திய சக்திகள் அனைத்துடனும் போட்டியிடுகின்ற ஆழமடையும் நெருக்கடியானது மூலோபாய வளங்கள் மற்றும் சந்தைகள் மீதான கட்டுப்பாட்டைப் பாதுகாத்துக்கொள்ள அவற்றைத் தள்ளுகின்றது. ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு அரசியல் சுதந்திரத்தை அடைந்து விட்டிருக்கின்ற முன்னாள் காலனிகள் மீண்டும் அடிமைப்படுத்தப்பட வேண்டியதாய் இருக்கிறது. ஏகாதிபத்தியமானது ஈராக்கிற்கு எதிரான அதன் மிருகத்தனமான தாக்குதலில், இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் நிலவியவாறாக பின்தங்கிய நாடுகளின் மீதான கட்டுப்பாடற்ற வகை மேலாதிக்கத்தினை மீட்சி செய்வதற்கு அது கொண்டுள்ள விருப்பம் குறித்து, அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. [1]

வரலாற்றுரீதியான அடித்தளத்திலான இந்த பகுப்பாய்வானது 1990-91 வளைகுடாப் போரை மட்டுமல்ல, அந்த தசாப்தத்தின் பிற்பகுதியில் தொடக்கப்பட்ட போர்களையும் அத்துடன் 9/11 க்குப் பிந்தைய “பயங்கரவாதத்தின் மீதான போரை”யும் கூட புரிந்து கொள்வதற்கான அத்தியாவசியமான கட்டமைப்பை வழங்கியது.

நியூயோர்க் டைம்ஸ் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு முகப்பு பக்க கட்டுரை ஒன்றில், பராக் ஒபாமாவின் ஜனாதிபதி பதவிக்காலத்தில் எட்டப்பட்டிருந்த ஒரு முக்கியமான மைல்கல்லின் கவனத்தை ஈர்த்தது: “திரு. புஷ் அல்லது வேறு எந்த அமெரிக்க ஜனாதிபதியை விடவும் அதிகமான காலம் இப்போது ஒபாமா போரில் பங்கேற்று வந்திருக்கிறார்.” ஆனால் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் கூட பல மாதங்கள் எஞ்சியிருக்கும் நிலையில், ஒபாமா இன்னொரு சாதனையையும் கூட பதிவுசெய்ய உள்ளார். டைம்ஸ் எழுதியது:

ஒபாமாவின் பதவிக்காலம் முடிகின்ற வரையிலும் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா தொடர்ந்து போரில் ஈடுபட்டிருக்குமாயின் —சிரியாவுக்கு 250 கூடுதல் சிறப்பு நடவடிக்கை துருப்புகளை அனுப்பவிருப்பதாக ஜனாதிபதி சமீபத்தில் அறிவித்திருப்பதை கொண்டுபார்த்தால் இது ஏறக்குறைய நிச்சயமான ஒன்றுதான்— அமெரிக்க வரலாற்றிலேயே இரண்டு முழுப்பதவிக்காலமும் தேசத்தை போரில் ஈடுபடுத்தி வைத்திருந்த ஒரே ஜனாதிபதி என்ற ஒரு அபூர்வமான மரபை அவர் ஏற்படுத்தி விட்டுச் செல்வார்.[2]

திரு.ஒபாமா தனது சாதனை படைக்கும் இலக்குடனான பயணத்தில் ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, லிபியா, பாகிஸ்தான், சோமாலியா, மற்றும் ஏமன் ஆகிய மொத்தம் ஏழு நாடுகளில் படுபயங்கரமான இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வை செய்திருக்கிறார். ஆபிரிக்காவில் தனது இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில், இந்த நாடுகளின் எண்ணிக்கை இன்னும் நீண்டு கொண்டிருக்கிறது. போகோ ஹாராம் கிளர்ச்சியை ஒடுக்குவதற்கான முயற்சியாக நைஜீரியா, கேமரூன், நைஜர் மற்றும் சாட் ஆகிய நாடுகளில் அமெரிக்கப் படைகளின் ஒரு கட்டியெழுப்புதல் உள்ளடங்கியுள்ளது.

டைம்ஸ் கட்டுரையை எழுதிய மார்க் லாண்ட்லர், 2009 இல் ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் என்பதை, எந்த நகைமுரண் உணர்ச்சியுமின்றி, குறிப்பிடுகிறார். “ஒரு போர் எதிர்ப்பு வேட்பாளராக அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயலும் ஜனாதிபதி”யாக அவர் ஒபாமாவை சித்தரிக்கின்றார். ஒபாமா ” வெள்ளை மாளிகையில் தனது முதலாவது ஆண்டு முதலாகவே [போரின்] இந்த மாற்ற முடியாத யதார்த்தத்துடன் மல்லுக்கட்டி வருகிறார்…”

“ஆப்கானிஸ்தானிற்கு 30,000 கூடுதல் துருப்புகளை அனுப்பும் உத்தரவை வழங்கும் முன்பாக ஆர்லிங்டன் தேசியக் கல்லறைகளின் நடுவே” ஒபாமா ஒரு நடை சென்று வந்தார் என லாண்ட்லர் தனது வாசகர்களுக்கு கூறுகிறார். ”போர் சிலசமயங்களில் அவசியமானதாக இருக்கிறது, சிலமட்டத்தில் போர் மனித முட்டாள்தனத்தின் ஒரு வெளிப்பாடாகவும் இருக்கிறது என்ற இரண்டு ஒத்துப்போகாததாய் தோன்றுகின்ற உண்மைகளுக்கு” மனிதகுலம் இணங்கிச்செல்ல வேண்டியதாய் இருக்கிறது என்று ஒபாமா 2009 நோபல் பரிசை பெற்றுக்கொண்டபோது இயலாமையுடன் புலம்பிய உரையின் ஒரு பத்தியை லாண்ட்லர் நினைவுகூர்ந்தார்.

இதில் ஒபாமாவின் பதவிக்காலத்தில், முட்டாள்தனம்தான் மேலோங்கியிருந்தது என்பது தெளிவு. ஆயினும் லாண்ட்லரின் நாயகர் அங்கே ஒன்றும் செய்ய இயலாதிருந்தார். தனது போர்கள் “முடிப்பதற்கு மிகவும் சிக்கல் மிகுந்தவையாக கடினமாக இருந்தன” என்பதை ஒபாமா கண்டார்.

ஒபாமா குறித்த டைம்ஸின் சித்தரிப்பில் உண்மையான துன்பியலுக்கு தேவையானதாக இருக்கும் அத்தியாவசியமான கூறு இல்லாதிருக்கிறது: அதாவது ஜனாதிபதியின் உயர்ந்த இலட்சியங்களையும் மனிதநேய அபிலாசைகளையும் நப்பாசைகளாக்கிய, அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட புறநிலை சக்திகளை அடையாளம் கண்டுகொள்வது இயலாதிருக்கின்றது. அமைதியை நேசிக்கும் இந்த மனிதர், ஜனாதிபதியாக ஆனதால், ஆளில்லா விமானக் கொலைகளை தனது சிறப்புத்தன்மையாக ஆக்க நேர்ந்ததற்காகவும் ஒரு அறநெறிரீதியான சாத்தானாக மாறத்தள்ளப்பட்டதற்காகவும் தனது வாசகர்களை கண்ணீர் சிந்தச் செய்ய லாண்ட்லர் விரும்புகிறார் என்றால், ஒபாமாவின் இந்த “துன்பகரமான” விதியை தீர்மானித்த வரலாற்று சூழ்நிலைமைகளை அடையாளம் காட்டுவதற்கு அவர் முயற்சி செய்திருக்கவேண்டும்.

ஆனால் இந்த சவாலை டைம்ஸ் தவிர்த்துவிடுகிறது. ஒபாமாவின் போர் புரியும் சாதனையை கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையினது ஒட்டுமொத்தப் பாதையுடனும் தொடர்புபடுத்திக் காட்டுவதற்கு அது தவறிவிடுகிறது. ஒபாமா 2009 இல் பதவியில் கால்வைக்கும் முன்பாகவே, அமெரிக்கா 1990-91 முதல் அமெரிக்க-ஈராக் போர் முதலாகவே ஏறக்குறைய தொடர்ச்சியானதொரு அடிப்படையில் போரில் ஈடுபட்டு வந்திருந்தது.

1990 ஆகஸ்டில் குவைத்தை ஈராக் இணைத்துக் கொண்டதுதான் முதலாம் வளைகுடாப் போருக்கான போலிச்சாட்டாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் குவைத் அரசருடன் ஈராக் ஜனாதிபதி சதாம் உசைனின் மோதலுக்கு அமெரிக்கா காட்டிய வன்முறையான எதிர்வினை என்பது பரந்த உலகநிலைமைகள் மற்றும் கணிப்பீடுகளினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது. சோவியத் ஒன்றியம் விரைவில் கலைக்கப்படும் நிலையில் இருந்ததுதான் அமெரிக்க இராணுவ நடவடிக்கை நிகழ்ந்த வரலாற்றுச் சூழ்நிலை இருந்தது. அது இறுதியில் 1991 டிசம்பரில் கலைக்கப்பட்டது. ஜனாதிபதி முதலாவது புஷ் ஒரு “புதிய உலக ஒழுங்கின்”[3]  தொடக்கத்தை அறிவித்தார். சமபலத்துடன் எதிர்த்து நிற்கக்கூடிய சோவியத் ஒன்றியத்தின் இராணுவ சக்தி குறித்த நிதர்சனத்தாலோ அல்லது சோசலிசப் புரட்சியின் நிழலுருவினாலோ முட்டுக்கட்டையிடப்படாமல், அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களின் அடிப்படையில் உலகத்தை மறுகட்டுமானம் செய்ய அமெரிக்காவுக்கு இப்போது தடையேதும் இல்லாதிருக்கிறது என்பதையே இந்த அறிவிப்பின் மூலம் புஷ் அர்த்தப்படுத்தினார். “வரலாற்றின் முடிவு” என பிரான்சிஸ் ஃபுகுயாமாவினால் போற்றப்பட்ட சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயவாதிகளை பொறுத்தவரை இராணுவ ரீதியான தயக்கங்களின் முடிவைக் குறித்ததாக இருந்தது.

முதலாம் உலகப் போரின் பெருந்துயரத்திற்கு மத்தியில் மேலாதிக்க ஏகாதிபத்திய சக்தியாக அமெரிக்கா திட்டவட்டமாக எழுந்தமையானது, போல்ஷிவிக் கட்சியின் தலைமையின் கீழ் வரலாற்றின் முதல் சோசலிச தொழிலாளர் அரசு ஸ்தாபிக்கப்பட்டதில் உச்சம்பெற்ற 1917 ரஷ்யப் புரட்சியின் வெடிப்பின் அதேசமயத்தில் நிகழ்ந்ததென்பது வரலாற்றின் மாபெரும் நகைமுரண்களில் ஒன்றாகும். 1917 ஏப்ரல் 3 அன்று ஜனாதிபதி வூட்ரோ வில்சன் அமெரிக்க காங்கிஸில் அவரது போர் செய்தியை வழங்கி உலக ஏகாதிபத்திய மோதலுக்குள் அமெரிக்காவை வழிநடத்திச் சென்றார். இரண்டு வாரங்கள் தள்ளி, வி.ஐ.லெனின் புரட்சியின் பிரசவவலி கண்டிருந்த ரஷ்யாவுக்குத் திரும்பி, முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தை தூக்கிவீசுவதற்கான போராட்டத்தை நோக்கி போல்ஷிவிக் கட்சியை மறுநோக்குநிலை அமைத்தார்.

சோசலிசத்துக்கான போராட்டமானது போருக்கு எதிரான போராட்டத்துடன் பிரிக்கவியலாமல் பிணைந்திருந்தது என்பதை லெனினும் அவரது பிரதான அரசியல் சகாவுமான லியோன் ட்ரொட்ஸ்கியும் வலியுறுத்தினர். வரலாற்று ஆசிரியரான கிரேய்க் ஆர். நேஷன் வாதிட்டவாறாக:

லெனினைப் பொறுத்தவரை, புரட்சியானது ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியில் இருந்து விளைந்தது என்பதிலோ அது முன்வைத்திருந்த சங்கடநிலை சர்வதேச மட்டத்தில் மட்டுமே தீர்க்கப்பட முடியும் என்பதிலோ அங்கே எந்த சந்தேகமும் இருக்கவில்லை. ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க மேலாதிக்கத்திற்கான பிரச்சாரமும், போருக்கு எதிரான போராட்டமும், அத்துடன் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சர்வதேசப் போராட்டமும் ஒன்றேயாகும், இப்போதும் அதே ஒன்றாகத்தான் உள்ளது. [4]

உலகத்தின் தலைவிதியின் மத்தியஸ்தராக தனது நிலையை நிலைநாட்டுவதற்கு அமெரிக்கா முனைந்து கொண்டிருந்த அதேவேளையில் அது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிகாரத்திற்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த முதலாளித்துவ ஒழுங்கின் பொருளாதார, அரசியல், மற்றும் இன்னும் தார்மீகரீதியான நியாயத்திற்குமான ஒரு சவாலை, போல்ஷிவிக் புரட்சியின் வடிவத்தில், எதிர்கொண்டது. “போல்ஷிவிக்குகளின் வாக்குவன்மையும், நடவடிக்கைகளும்” வரலாற்றாசிரியர் மெல்வின் பி. லெஃப்லெர் எழுதியிருப்பதைப் போல, “அமெரிக்காவில் பயம், மனவெறுப்பையும் மற்றும் நிச்சயமற்ற தன்மையையும் பற்றவைத்திருந்தன.” [5]

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் இன்னுமொரு உணர்திறன்மிக்க வரலாற்றாசிரியர் விளக்கினார்:

அமெரிக்கத் தலைவர்களில் மிகப் பெரும்பான்மையினர் போல்ஷிவிக் புரட்சி குறித்து ஆழ்ந்த கவலை கொண்டிருந்ததற்குக் காரணம், நிலவும் ஒழுங்கிற்கு எதிராக “பொதுவான கலக உணர்வு” என்று ஜனாதிபதி வில்சன் அழைத்த ஒன்று குறித்தும், அந்த அதிருப்தியின் தீவிரம் அதிகரித்துச் செல்வது குறித்தும் அவர்கள் உளைச்சலடைந்தனர் என்பதால்தான். அந்த அதிருப்தியில் இருந்து வளர்ச்சி கண்ட அத்தனை புரட்சிகளது அடையாளமாகவும் அவர்களது மனதில் போல்ஷிவிக் புரட்சி உருவெடுத்தது. அதுவே உண்மையில் அமெரிக்க இராஜதந்திர துன்பியலுக்குள்ளான அதிமுக்கியமான உட்பார்வையாகும். [6]

புதிய புரட்சிகர ஆட்சியை அழிக்கின்ற ஒரு நப்பாசையான முயற்சியில், வில்சன், மூர்க்கமான உள்நாட்டு யுத்தத்தில் எதிர்ப்புரட்சிப் படைகளுக்கு ஆதரவாக, தாக்குதல் படையை 1918 இல் ரஷ்யாவுக்கு அனுப்பினார். இந்தத் தலையீடு ஒரு அவமானகரமான தோல்வியில் முடிந்தது.

1933 ஆம் ஆண்டின் பின்னரே இறுதியில் சோவியத் ஒன்றியத்திற்கு அமெரிக்கா இராஜதந்திர அங்கீகரிப்பை வழங்கியது. இப்போது ஸ்ராலினின் அதிகாரத்துவ சர்வாதிகாரத்தின் கீழ்வந்திருந்த சோவியத் ஆட்சி 1917 இல் போல்ஷிவிக்குகளுக்கு உத்வேகமளித்த புரட்சிகர சர்வதேசியவாதத்தை மறுதலிக்கும் நிகழ்ச்சிப்போக்கில் இருந்தது என்ற உண்மை, பகுதியாக இந்த இராஜதந்திர இணக்க ஆர்வத்திற்கு வழியேற்படுத்தி தந்திருந்தது. சோவியத் அதிகாரத்துவம் “கூட்டுப்பாதுகாப்பு” என்பதன் அடிப்படையில் ஏகாதிபத்திய அரசுகளுடன் கூட்டணிகள் ஏற்படுத்துவதற்கு சாதகமான வகையில் உலகப் புரட்சி முன்னோக்கினை கைகழுவிக்கொண்டிருந்தது. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உடன் இத்தகையதொரு கூட்டணியை ஏற்படுத்த இயலாதநிலையில் ஸ்ராலின், 1939 ஆகஸ்டில் ஹிட்லருடன் படுபயங்கரமான ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் (Non-Aggression Pact) கையெழுத்திட்டார். 1941 ஜூனில் சோவியத் ஒன்றியத்தின் மீது ஹிட்லர் படையெடுத்ததை தொடர்ந்தும், 1941 டிசம்பரில் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவும் நுழைந்ததை அடுத்தும், நாஜி ஜேர்மனி மற்றும் ஜப்பானிய பேரரசுக்கு எதிரான போராட்டத்தின் அவசர அவசியங்கள் ஜனாதிபதி பிராங்க்ளின் டெலனோ ரூஸ்வெல்ட்டின் நிர்வாகம் சோவியத் ஒன்றியத்துடன் ஒரு இராணுவக் கூட்டணியை உருவாக்க அவசியமாக்கின. ஆனால் ஜேர்மனியும் ஜப்பானும் தோற்கடிக்கப்பட்டு விட்ட பின்னர், அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகள் துரிதமாக மோசமடைந்தன. கிழக்கு ஐரோப்பாவில் சோவியத்தின் செல்வாக்கு நீட்சிசெய்யப்படுவதற்கு எதிராகவும், அத்துடன் மேற்கு ஐரோப்பாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வளர்ச்சியால் மிரட்சியடைந்தும், ட்ரூமன் நிர்வாகமானது 1948 இல் மார்ஷல் திட்டத்தைத் தொடங்கி பனிப்போர் தோன்றுவதைத் தூண்டிவிட்டது.

கிரெம்ளின் ஆட்சியானது “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்ற ஸ்ராலினிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான தேசியவாதக் கொள்கைகளைப் பின்பற்றி உலகெங்கிலுமான தொழிலாள வர்க்க மற்றும் ஏகாதிபத்திய-எதிர்ப்பு இயக்கங்களைக் காட்டிக்கொடுத்தது. ஆனாலும் ஒரு சோசலிசப் புரட்சியில் இருந்து எழுந்த ஒரு ஆட்சி உயிருடன் இருப்பதே கூட உலகம் முழுமையாக அரசியல்ரீதியாய் ஒரு தீவிரப்படுத்துகின்ற தாக்கத்தைக் கொண்டதாய் இருந்தது. “அமெரிக்கத் தலைவர்கள் பல, பல வருடங்களுக்கும் அவர்கள் சோவியத் ஒன்றியத்திடம் இருந்த சக்தியைக் கண்டு அஞ்சியதை விடவும் அதிகமாய் புரட்சியின் உட்பொதிந்த மற்றும் மறைமுகமான சவாலுக்கே அதிக அச்சம் கொண்டிருந்தனர்” என்ற வில்லியம் ஆப்பிள்மன் வில்லியம்ஸ் கொண்டிருந்த பார்வை நிச்சயமாய் மிகச் சரியானதாய் இருந்தது. [7]

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து வந்த தசாப்தங்களில், சோவியத் ஒன்றியத்தின் இருப்பை உதாசீனம் செய்ய முடியாத நிலையில் அமெரிக்கா இருந்தது. சோவியத் ஒன்றியமும் 1949 இல் ஸ்தாபிக்கப்பட்ட சீன மக்கள் குடியரசும் “மூன்றாம் உலக”த்தில் இருந்த ஏகாதிபத்திய-எதிர்ப்பு இயக்கங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் மற்றும் பொருள் ரீதியான ஆதரவை வழங்கிய மட்டத்திற்கு, அவை அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு அதன் சொந்த நலன்களைப் பின் தொடர்வதில் தடையற்ற சுதந்திரத்தை மறுத்தன. மிகவும் குறிப்பிடத்தக்க உதாரணங்களை மேற்கோள் காட்டுவதானால், கொரியா மற்றும் வியட்நாமில் அமெரிக்காவின் தோல்விகள், கியூப ஏவுகணை நெருக்கடியில் சமரச உடன்பாடு, மற்றும் பால்டிக் பிராந்தியத்திலும் கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத்தின் மேலாதிக்கத்தை அது ஏற்றுக் கொண்டமை ஆகியவற்றில் இந்த வரம்புகள் எடுத்துக்காட்டப்பட்டிருந்தன.

சோவியத் ஒன்றியத்தின் இருப்பும் மற்றும் சீனாவில் ஒரு முதலாளித்துவ-எதிர்ப்பு ஆட்சி இருந்தமையும், உலகின் பெரும் பகுதியில், குறிப்பாக யூரோஆசிய பாரிய நிலப் பரப்பில் மனித உழைப்பு, கச்சாப் பொருட்கள், மற்றும் வாய்ப்புள்ள சந்தைகளுக்கான கட்டுப்பாடற்ற அணுகல் மற்றும் சுரண்டலுக்கான சாத்தியத்தை அமெரிக்காவுக்கு இல்லாமல் செய்தன. அமெரிக்க-சோவியத் பனிப்போரினால் வழங்கப்பட்ட தந்திரோபாய வாய்ப்புகளை சுரண்டிக் கொண்ட ஐரோப்பா மற்றும் ஆசியாவிலான முக்கியக் கூட்டாளிகள் மற்றும் சிறிய நாடுகளுடனான பொருளாதார மற்றும் மூலோபாயப் பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தைகளில் தான்விரும்பியதை விடவும் அதிகமாய் சமரசத்திற்கு உடன்பட அமெரிக்காவை இது தள்ளியிருந்தது.

அமெரிக்காவின் ஆளும் வர்க்கமானது சோவியத் ஒன்றியத்தின் கலைப்பையும், அதனுடன் சேர்த்து சீனாவில் 1989 ஜூன் மாதத்தில் தியானன்மென் சதுக்கத்தில் நடந்த படுகொலைகளை தொடர்ந்து முதலாளித்துவம் கட்டுப்பாடேதுமற்று மீட்சிசெய்யப்பட்டதையும், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சகாப்தத்தில் செய்து கொள்ளப்பட்ட சமரசங்களை மறுதலிப்பதற்கும், அத்துடன் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை ஸ்தாபிக்கும் நோக்குடன் உலக புவியரசியலை பாரியளவில் மாற்றியமைப்பதை மேற்கொள்வதற்குமான ஒரு சந்தர்ப்பமாகக் கண்டது.

சோவியத் ஒன்றியத்தின் உடைவிற்கு அமெரிக்காவினது பகட்டான பதிலிறுப்பில் சுயபிரமையூட்டிக் கொள்வதற்கான கூறு கொஞ்சமும் இருக்கவில்லை. அமெரிக்கா பனிப் போரில் வெற்றி பெற்றிருந்ததாக தம்பட்டமடிக்கப்பட்ட கூற்றுகள் உண்மையை விட அதிகமாய் கட்டுக்கதைகளின் அடிப்படையிலானவையாக இருந்தன. உண்மையில், சோவியத் ஒன்றியத்தின் திடீர் கலைப்பு அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை ஸ்தாபகம் ஒட்டுமொத்தத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது. 1987 பிப்ரவரியில், வெளியுறவு குழுவின் அமெரிக்க-சோவியத் உறவுகள் மீதான ஒரு மதிப்பீட்டை வெளியிட்டிருந்தது. அதன் இரண்டு புகழ்மிக்க சோவியத் விவகார அறிஞர்களான ஸ்ட்ரோப் டல்போட்டும் மைக்கேல் மண்டெல்பௌமும் அதனை எழுதியிருந்தனர். 1986 இல் ஜெனிவா மற்றும் ரேய்க்ஜவிக்கில் நடந்த கூட்டங்களில் ரீகனுக்கும் கோர்பச்சேவுக்கும் இடையில் நடந்த விவாதங்களை பகுப்பாய்வு செய்த அந்த அறிஞர்கள் பின்வரும் முடிவுகளுக்கு வந்திருந்தனர்:

கோர்பச்சேவ் மறுசீரமைப்பு (perestroika) என்பதை நடைமுறையில் எவ்வாறு வரையறை செய்ய முனைந்தாலும் அதேபோல பாதுகாப்பு என்பதன் உத்தியோகபூர்வ வரையறையை அவர் எவ்வாறு மாற்றியமைத்தாலும், சோவியத் ஒன்றியமானது மாற்றத்திற்கான அழுத்தத்தை, அது வெளியில் இருந்து வந்தாலும் சரி உள்ளிருந்து வந்தாலும் சரி, மேலிருந்து வந்தாலும் சரி அல்லது கீழிருந்து வந்தாலும் சரி, எதிர்க்கவே செய்யும். ஆகவே சோவியத்-அமெரிக்க உறவுகளின் அடிப்படையான நிலைமைகள் நீடிக்கவே வாய்ப்புகள் அதிகம். சோவியத்-அமெரிக்க உச்சிமாநாட்டு பேச்சுவார்த்தை சடங்குகள் இன்னும் நீண்ட காலம் செல்லும் என்பதே இதன் அர்த்தமாகிறது…. [8]

இந்த “நீண்ட காலம்” என்பது “கோர்பச்சேவிற்கு அடுத்து வருபவரின்” ஆட்சிக் காலம் மட்டுமல்ல அவருக்கு “அடுத்து வருபவருக்கு அடுத்து வருபவரது” ஆட்சி வரையும் கூட தொடரும் என்பதே டல்போட் மற்றும் மண்டெல்பௌமின் கணிப்பாக இருந்தது. அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்திற்கு இடையிலான உறவுகளில் எந்த கணிசமான மாற்றங்களும் எதிர்பார்க்கப்படவில்லை. வெளியுறவு குழுவின் இந்த இரண்டு தீர்க்கதரிசிகள் பின்வருமாறு முடிவுக்கு வந்தனர்:

வருவது யாராயிருந்தாலும் சரி, அத்துடன் இடைப்பட்ட காலத்தில் என்ன மாற்றங்கள் நடந்தாலும் சரி, 1980களின் பிற்பகுதியில் ரொனால்ட் ரீகன் மற்றும் மிகையில் கோர்பச்சேவ் ஆகியோரது ஆற்றல்களை ஈடுபடுத்தியிருந்த அதே பெரும் பிரச்சினையை, அதாவது அணுப் பேரழிவைத் தவிர்க்கும்படியாக தங்களது பகைமையை எப்படிக் கையாள்வது என்ற பிரச்சினையைக் கொண்டுதான், அடுத்த நூற்றாண்டின் அமெரிக்க மற்றும் சோவியத் தலைவர்கள் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பார்கள். [9]

இப்படி எதனையுமே முன்னெதிர்பாராதிருந்த அமெரிக்க நிபுணர்களுக்கு நேரெதிர் விதத்தில், அனைத்துலகக் குழுவோ, கோர்பச்சேவின் ஆட்சி, ஸ்ராலினிசத்தின் நெருக்கடியில் ஒரு உச்சக்கட்ட நிலையைக் குறித்ததாய் இருந்தது என்பதை அங்கீகரித்தது. 1987 மார்ச் 23 அன்றான ஒரு அறிக்கையில் அது அறிவித்தது: “உலக ஸ்ராலினிசத்தின் ஒவ்வொரு பிரிவுமே பொருளாதாரக் கொந்தளிப்புகளுக்கும் பரந்த மக்களின் எழுச்சிக்கும் முகம்கொடுக்கின்ற நேரத்தில்தான் கோர்பச்சேவின் நெருக்கடி எழுந்திருக்கிறது. பெய்ஜிங் முதல் பெல்கிராட் வரையிலும் ஒவ்வொரு விடயத்திலுமே, முன்னினும் அதிகமாய் முதலாளித்துவ மீட்சியை நோக்கிப் பகிரங்கமாய் திரும்புவதே ஸ்ராலினிச அதிகாரத்துவவாதிகளின் பதிலிறுப்பாக இருந்திருக்கிறது.” [10]

பனிப்போர் வெற்றி என்னும் சித்தரிப்பானது ஆளும் உயரடுக்கிற்குள்ளாக, அமெரிக்க முதலாளித்துவத்தின் சக்தி குறித்தும் சாத்தியவளம் குறித்துமான ஒரு நாசகரமான மிகைமதிப்பீட்டை ஊக்குவித்திருந்தது. மேலாதிக்கத்திற்கான முனைப்பானது, உலக முதலாளித்துவ நடவடிக்கையால் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த பொருளாதார மற்றும் அரசியல் மையவிலக்கு சக்திகளைக் கட்டுப்படுத்தும் திறன் அமெரிக்காவுக்கு இருப்பதாய் அனுமானித்துக் கொண்டது. அத்தகையதொரு ஆழமான செயற்திட்டம் அமெரிக்கா, அதன் சக்தியின் உச்சத்தில் இருந்த சமயத்திலும்கூட, அதன் திறன்களுக்கு மிகவும் அப்பாற்பட்டதாய் இருந்தது. ஆனால் சோவியத் ஒன்றியத்தின் முடிவு உருவாக்கிய களியாட்டத்தின் மத்தியில், ஆளும் வர்க்கமானது அமெரிக்க சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருந்த மற்றும் நீடித்த நெருக்கடியை உதாசீனம் செய்தது. 1960 மற்றும் 1990 க்கு இடையில் அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகிய இரண்டின் நிலைமைகளையும் புறநிலையாக ஆய்வு செய்யக்கூடிய ஒரு பார்வையாளர், எந்த ஆட்சி அதிகமான நெருக்கடியில் இருந்தது என்பதைக்கண்டு ஆச்சரியம் கொள்ளக்கூடும். சோவியத் ஒன்றியத்தின் கலைப்பிற்கு முந்தைய மூன்று தசாப்தங்களின் போது, அமெரிக்கா அரசியல், சமூக மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையின் உயர்ந்த மட்டங்களை வெளிப்படுத்தியது.

அந்த மூன்று தசாப்தங்களில் அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதி நிர்வாகங்களின் கதியை பரிசீலித்துப் பாருங்கள்: (1) கென்னடி நிர்வாகம், 1963 நவம்பரில், சமூகப் பதட்டங்கள் மற்றும் சர்வதேச நெருக்கடிகள் அதிகரித்துச் சென்றதன் மத்தியில், ஒரு அரசியல் படுகொலையுடன், துன்பியலாய் முடிவடைந்தது; (2) கென்னடிக்கு பின்னர் வந்த லிண்டன் ஜோன்சன், நகர்ப்புற கலகங்களின் விளைவாகவும் வியட்நாம் மீதான அமெரிக்கப் படையெடுப்புக்கு எழுந்த பாரிய எதிர்ப்பின் விளைவாகவும், 1968 இல் மீண்டும் தான் தேர்ந்தெடுக்கப்படலாம் என்பதை எதிர்பார்க்க முடியாமல் போனது; (3) ரிச்சார்ட் நிக்சனை எடுத்துக்கொண்டால், அரசியல் சட்டத்திற்கு குற்றவியல்தனமாய் குழிபறித்த குற்றச்சாட்டுகள் விவகாரத்தில், அவர் மீதான கண்டனத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரதிநிதிகள் சபையின் நீதிக்குழு வாக்களித்ததற்குப் பின்னர், 1974 ஆகஸ்டில் அவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யத்தள்ளப்பட்டார்; (4) நிக்சன் இராஜினாமாவை அடுத்து ஜனாதிபதியான ஜெரால்ட் ஃபோர்ட், நிக்சனின் குற்றங்களாலும் வியட்நாமில் அமெரிக்க இராணுவம் பெற்ற படுதோல்வியாலும் கிட்டிய மக்கள் வெறுப்புக்கு மத்தியில் 1976 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்; (5) ஜிம்மி கார்ட்டரின் ஒரே பதவிக்காலத்தில், தனித்தனி வங்கிகளால் நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதத்தை 20 சதவீதத்திற்கு உயர்த்திய ஒரு பணவீக்க நெருக்கடி, கடுமையான மூன்று மாத கால நிலக்கரிசுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், மற்றும் ஈரானியப் புரட்சியால் உருவாக்கப்பட்ட பின்னதிர்வுகள் ஆகியவை ஆதிக்கம் செலுத்தின; (6) ரொனால்ட் ரீகனின் பதவிக்காலத்தில், “அமெரிக்காவில் காலைப் பொழுது” குறித்த ஊதிப்பெருக்கல்கள் இருந்தபோதும், மந்தநிலையும், கடுமையான சமூகப் பதட்டமும், அத்துடன் மத்திய கிழக்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் வெளியுறவுக் கொள்கை பேரழிவுகளின் ஒரு வரிசையுமே, அப்பதவிக் காலத்தின் குணாம்சங்களாய் இருந்தன. நிக்கராகுவாவில் துணை இராணுவ நடவடிக்கைகளுக்கு நிதியாதாரம் அளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு சட்டவிரோத திட்டம் அம்பலப்பட்டமையானது ரீகனை கண்டனத் தீர்மானத்தின் வெகுவிளிம்புவரையிலும் கொண்டுவந்தது. அரசியல் ரீதியாகப் பலவீனமடைந்து ஞாபகமறதி நோயின் அறிகுறிகளை ஏற்கனவே வெளிப்படுத்திக் கொண்டிருந்த ஒரு ஜனாதிபதியை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கு விருப்பமில்லாமல் இருந்த ஜனநாயகக் கட்சியின் தலைமையால் அவரது நிர்வாகம் காப்பாற்றப்பட்டது.

கென்னடி தொடங்கி ரீகன் வரையிலும், விடாமல் ஒரு அம்சம் இந்த நிர்வாகங்களை எதிர்கொண்டிருந்தது என்றால், அது அமெரிக்காவின் உலகளாவிய பொருளாதார நிலையில் நிகழ்ந்த தேய்வுதான். இரண்டாம் உலகப் போரின் முடிவில், அமெரிக்க நிதித்துறை மற்றும் தொழிற்துறையின் சவாலற்ற மேலாதிக்க நிலைதான், உலக முதலாளித்துவ வளர்ச்சிக்கும் ஸ்திரத்தன்மைக்குமான அடிப்படையை உருவாக்கிய பிரெட்டன் வூட்ஸ் டாலர்-தங்கம் மாற்றுநிலை அமைப்புமுறைக்கான பொருளாதார அடித்தளங்களை வழங்கியது. 1950களின் பிற்பகுதிக்குள்ளாக, இந்த அமைப்புமுறையானது அதிகமான அழுத்தத்தின் கீழ்வந்து கொண்டிருந்தது கென்னடி நிர்வாகத்தின் சமயத்தில்தான் முதன்முதலாக அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையின் சாதகமற்ற போக்குகள் கணிசமான கவலையை எழுப்பத்தொடங்கின. 1971 ஆகஸ்ட் 15 அன்று, நிக்சன், 35 அமெரிக்க டாலர்களுக்கு ஒரு அவுன்ஸ் தங்கம் என்ற சமன்பாடுடனான நிலையான சர்வதேச செலவாணிப் பரிவர்த்தனை விகிதமுடைய பிரெட்டன் வூட்ஸ் முறையை திடீரென முடிவுக்குக் கொண்டு வந்தார். 1970 கள் மற்றும் 1980 களின்போது, டாலரின் பரிவர்த்தனை விகிதத்திலான வீழ்ச்சி அமெரிக்கப் பொருளாதாரத்தின் சீரழிந்த நிலையைப் பிரதிபலித்தது.

1991 இல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பிற்கு அமெரிக்கா காட்டிய மூர்க்கமான பதிலிறுப்பு அமெரிக்க முதலாளித்துவத்தின் பலத்தை அல்ல, மாறாக பலவீனத்தையே பிரதிபலித்தது. அதன் செறிந்த இராணுவ சக்தியை நிலைநிறுத்துவதன் மூலமாக உலகப் பொருளாதார நிலையில் அதற்கு ஏற்பட்டிருந்த நாட்பட்ட தேய்மானத்தை சரிசெய்து விடலாம் என்பதான பிரமையில் இருந்தே ஒரு மிக மூர்க்கமான வெளியுறவுக் கொள்கைக்கு ஆளும் உயரடுக்கிற்குள்ளாக மிகப்பெரும் ஆதரவு எழுந்திருந்தது.

1992 பிப்ரவரியில் பாதுகாப்புத் துறையில் வரைவு செய்யப்பட்ட பாதுகாப்புத் திட்டமிட்டல் வழிகாட்டல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க அபிலாசைகளை ஒரேகுரலில் திட்டவட்டம் செய்தது:

இனி வரும் காலத்தில், பிராந்திய அளவிலான அல்லது உலகளவிலான மேலாதிக்கத்திற்கான மூலோபாய நோக்கங்களையும் ஒரு பாதுகாப்பு நிலையையும் அபிவிருத்தி செய்ய சாத்தியம் உடைய தேசங்களும், கூட்டணிகளும் இருக்கின்றன. அப்படியான வருங்கால உலகப் போட்டியாளர் சாத்தியம் எதுவும் எழுவதை முன்கூட்டித் தடுப்பதன் மீது மறுகவனம் குவிப்பதே இப்போது நமது மூலோபாயமாக இருந்தாக வேண்டும். [11]

1990களில் அமெரிக்க இராணுவ வலிமை -குறிப்பாக முதலாம் வளைகுடாப் போரில்- தொடர்ந்து பிரயோகிக்கப்படுவதும், அதனைத் தொடர்ந்து யூகோஸ்லாவியாவை உடைப்பதற்கான அதன் பிரச்சாரமும் நடந்தது. பால்கன் அரசுகள் முரட்டுத்தனமாக மறுசீரமைக்கப்பட்டதானது, உள்நாட்டில் ஒரு சகோதர யுத்தத்தைத் தூண்டி, இறுதியில் கொசோவா மாகாணத்தின் பிரிவினையை ஏற்றுக்கொள்ள சேர்பியாவை நிர்ப்பந்திக்கும் வண்ணமான அமெரிக்க-தலைமையிலான 1999 குண்டுவீச்சுப் பிரச்சாரத்திற்கு இட்டுச் சென்றது. அந்த தசாப்தத்தில் நடந்த மற்ற முக்கிய இராணுவ நடவடிக்கைகளில் சோமாலியத் தலையீடு (இது பெருநாசத்தில் முடிந்தது), ஹைத்தி இராணுவ ஆக்கிரமிப்பு, சூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான குண்டுவீச்சு, மற்றும் ஈராக் மீதான தொடர்ந்த குண்டுவீச்சுத் தாக்குதல்கள் ஆகியவையும் அடங்கும்.

2001, செப்டம்பர் 11 அன்றான நிகழ்வுகள், மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் (அடிக்கடி) ஆபிரிக்கா முழுவதிலுமான இராணுவ நடவடிக்கைகளுக்கான சகல நோக்கங்களுக்குமான ஒரு நியாயப்படுத்தலாக பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடிய “பயங்கரவாதத்தின் மீதான போரை” தொடக்குவதற்கான வாய்ப்பை  வழங்கின. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கான ஒரு முறையான மற்றும் இயல்பான சாதனமாய் போரை நிலைநிறுத்துவதற்கான ஒரு சாக்கை புஷ் நிர்வாகத்திற்கு அவை ஏற்படுத்தித் தந்தன.

ஜனாதிபதி இரண்டாம் புஷ்ஷின் நிர்வாகம் 2001 இலையுதிர்காலத்தில் ஆப்கானிஸ்தான் படையெடுப்புக்கு உத்தரவிட்டது. 9/11 ஐத் தொடர்ந்த உரைகளில் புஷ் “இருபத்தியோராம் நூற்றாண்டின் போர்கள்” என்ற சொல்லாடலைப் பயன்படுத்தினார். வழக்கமாய் வார்த்தை நுட்பமில்லாத ஜனாதிபதி இந்த விடயத்தில் துல்லியத்துடன் பேசினார். “பயங்கரவாதத்தின் மீதான போரானது” ஆரம்பத்தில் இருந்தே, உலகெங்கும் இராணுவ நடவடிக்கைகளது ஒரு முடிவில்லா வரிசையாக சிந்திக்கப்பட்டது. ஒரு போர் அத்தியாவசியமாக இன்னொன்றுக்கு இட்டுச் செல்லும். ஈராக் படையெடுப்புக்கான ஒரு ஒத்திகையாக ஆப்கானிஸ்தான் நிரூபணமானது.

அமெரிக்காவின் இராணுவ மூலோபாயமானது 2002 இல் அமெரிக்கா ஏற்றுக் கொண்ட “தடுப்புப்போர்” என்னும் புதிய சித்தாந்தத்திற்கேற்ப திருத்தப்பட்டது. நிலவிய சர்வதேசச் சட்டத்தினை மீறியதாக இருந்த அந்த சித்தாந்தம், இராணுவரீதியாக மட்டுமல்லாது பொருளாதாரரீதியாகவும் கூட அமெரிக்க நலன்களுக்கு ஒரு அச்சுறுத்தலை முன்நிறுத்தும் சாத்தியம் கொண்டதாக தீர்மானிக்கப்படுகின்ற உலகின் எந்த ஒரு நாட்டிற்கு எதிராகவும் அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று தீர்ப்பளித்தது.

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு, ஈராக்கின் “பேரழிவு ஆயுதங்கள்” முன்நிறுத்திய உடனடியான அச்சுறுத்தலுக்கான பதிலிறுப்பாக மேற்கொள்ளப்பட்ட முன்கூட்டி தாக்கும் ஒரு போர் என்று கூறி, ஈராக் படையெடுப்பை புஷ் நிர்வாகம் வார்த்தை இலாவகத்துடன் நியாயப்படுத்தியது. சதாம் உசேனின் பேரழிவு ஆயுதங்களைப் போலவே அந்த அச்சுறுத்தலும் கூட அப்படியொன்று அங்கே இருந்திருக்கவில்லை என்பதே உண்மை. எப்படியிருப்பினும், அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பிற்கு ஒரு உடனடி அச்சுறுத்தல் இருக்கிறதோ இல்லையோ எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்துவதற்கான அமெரிக்காவின் உரிமையைத் திட்டவட்டம் செய்ததன் மூலமாக முன்கூட்டி தாக்கும் போருக்கும், தடுப்புப் போருக்கும் இடையிலான வித்தியாசம் எதனையும் புஷ் நிர்வாகம் அர்த்தமில்லாததாகச் செய்துவிட்டது. அமெரிக்க ஜனாதிபதிகள் பிரச்சார நோக்கங்களுக்காக என்னவிதமான வார்த்தையாடல்களைக் கையாண்டாலும் சரி, அமெரிக்காவானது தடுப்புப் போர் என்ற சட்டவிரோதமான சித்தாந்தத்தினைப் பின்பற்றியே நடந்து வருகிறது.

இராணுவ நடவடிக்கைகளுக்கான தொடுஎல்லை தொடர்ந்து விரிந்து சென்றது. பழைய போர்கள் முடியாத நிலையிலேயே புதிய போர்கள் தொடங்கப்பட்டன. 2011 இல் லிபியா மீது போர் நடத்துவதற்கும் மும்மார் கடாபியின் ஆட்சியைத் தூக்கிவீசுவதற்கும் மனித உரிமைகள் என்ற சாக்கு சிடுமூஞ்சித்தனத்துடன் கையிலெடுக்கப்பட்டது. சிரியாவில் ஒரு பினாமிப் போரை ஒழுங்கமைக்கவும் அதே கபடவேட சாக்கு பயன்படுத்தப்பட்டது. மனித உயிர்சேதாரங்கள் மற்றும் துயரங்களைக் கொண்டு கணக்கிட்டால், இந்த குற்றங்களின் பின்விளைவுகள் கணக்கிலடங்காதவை ஆகும்.

சென்ற கால் நூற்றாண்டு காலத்தில் அமெரிக்காவினால் தூண்டப்பட்ட போர்களை, இடைத்தொடர்புள்ள நிகழ்வுகளின் ஒரு சங்கிலியாக ஆய்வுசெய்யப்பட வேண்டும். உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முனைப்பின் மூலோபாய தர்க்கமானது மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவிலான நவகாலனித்துவ நடவடிக்கைகளை தாண்டி நீண்டுசெல்வதாகும். ரஷ்யா மற்றும் சீனாவுடன் துரிதமாய் தீவிரப்பட்டுச் செல்லும் அமெரிக்காவின் மோதல்களது பாகக் கூறுகளாகவே நடைபெற்று வரும் போர்கள் இருக்கின்றன.

மூலோபாயரீதியாய் மிக முக்கியத்துவம் வாய்ந்த யூரோஆசிய நிலப்பரப்பின் மீதான கட்டுப்பாட்டை திட்டவட்டம் செய்வதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் என்ற கண்ணாடிப்பெட்டகத்தின் வழியாகவே 1990-91 நிகழ்வுகளின் அத்தியாவசியமான முக்கியத்துவம் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆயினும், ரஷ்யா மற்றும் சீனா உடனான மோதலின் இருதயத்தானமாய் அமைந்திருக்கக் கூடிய, உலக மேலாதிக்கத்திற்காய் நடைபெற்று வருகின்ற போராட்டத்திலான சமீபத்திய கட்டமானது, அமெரிக்காவுக்கும் ஜேர்மனி (எதிரியாகும் சாத்தியம் கொண்ட மிக முக்கியமான நாட்டைக் குறிப்பிடுவதானால்) உள்ளிட்ட அதன் இன்றைய நாள் ஏகாதிபத்தியக் கூட்டாளிகளுக்கும் இடையிலான உட்பொதிந்த மற்றும் வெடிப்புசாத்தியம் கொண்ட பதட்டங்களை மேற்பரப்புக்குக் கொண்டுவந்து கொண்டிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்கள் தவறான புரிதல்களால் விளைந்தவையல்ல. கடந்தகாலம் அறிமுக உரை மட்டுமே. 1990-91 இல் அனைத்துலகக் குழு முன்னெதிர்பார்த்தவாறாக, உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முயற்சியானது உலக அரசியலின் மேற்பரப்பின் கீழ் கொதிநிலைக்கு வந்து கொண்டிருந்த ஏகாதிபத்தியங்களுக்கு-இடையிலான பகைமைகளை மீண்டும் பற்றவைத்திருக்கிறது. உலக விவகாரங்களின் இறுதியான மத்தியஸ்தராக அமெரிக்காவின் பாத்திரம் மீதான அதிருப்தி ஐரோப்பாவிற்குள்ளாக வெளிப்படையாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. உத்தியோகபூர்வ அங்கீகரிப்புடைய வெளியுறவுகளுக்கான அமெரிக்க கவுன்சிலது இதழான வெளியுறவு விவகாரங்கள் இதழில் வெளியான ஒரு ஆத்திரமூட்டும் கட்டுரையில், உலக மேலாதிக்கத்தை அமெரிக்கா அனுமானித்துக் கொள்வதை ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான பிராங்க் – வால்டர் ஸ்ரைன்மையர் அப்பட்டமாக சவால் செய்திருக்கிறார்:

ஈராக் போரின் விளைவுகளால் அமெரிக்கா துவண்டிருந்த நிலையிலும் ஐரோப்பிய ஒன்றியம் வரிசையான நெருக்கடிகளில் போராடிக் கொண்டிருந்த நிலையிலும், ஜேர்மனியானது தனது காலை திடமாக ஊன்றி நின்றது ….  

இன்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இரண்டுமே உலகத் தலைமையை கொடுக்க தடுமாறிக் கொண்டிருக்கின்றன. 2003 ஈராக் ஆக்கிரமிப்பானது உலகில் அமெரிக்காவின் நிலையை பாதிப்படையச் செய்துள்ளது. சதாம் உசேன் வெளியேற்றப்பட்டதன் பின்னர், பிரிவினைவாத வன்முறை ஈராக்கை கிழித்துப் போட்டது, அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் அதிகாரம் பலவீனப்படத் தொடங்கியது. ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் நிர்வாகம் பிராந்தியத்தில் படைவலிமை மூலமாக ஒழுங்கை மீண்டும்நிலைநாட்டத் தவறியது மட்டுமல்ல, இந்த சாகசத்தின் அரசியல், பொருளாதார, மற்றும் கவர்ந்து இழுக்கும் செலவுகள் அமெரிக்காவின் ஒட்டுமொத்த நிலையைப் பலவீனப்படுத்தியிருக்கின்றன. ஒற்றைத் துருவ உலகத்தின் பிரமை தேய்ந்து போனது. [12]

அமெரிக்காவுக்கான ஒரு கண்டனமாய், ஸ்ரைன்மையர் எழுதுகிறார்: “எங்களது வரலாற்று அனுபவம், எந்த தேசத்திற்குமான தேசிய பிரத்யேகவாதத்தின் மீதுமான எந்த நம்பிக்கையையும் அழித்து விட்டிருக்கிறது.” [13]

மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் “பயங்கரவாதத்தின் மீதான போர்” ஆகியவற்றின் உத்தியோகபூர்வ சித்தரிப்பின் சட்டகத்திற்குள் சிந்திக்கக் கூடிய செய்தியாளர்களும் கல்வியாளர்களும் 1990-91 வளைகுடாப் போர் தொடங்கி, கிழக்கு நோக்கி எண்ணூறு மைல்களுக்கு இப்போது விரிவடைந்திருக்கக் கூடிய நேட்டோவின் இப்போதைய விரிவாக்கம் மற்றும் அமெரிக்காவின் “ஆசியாவை நோக்கிய முன்னிலை” வரையிலும் மோதல்கள் முன்னேறியிருப்பதை விளக்க முடிவதில்லை. அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும், கிழக்கு ஐரோப்பாவில், ரஷ்ய எல்லைகளுக்கு மிக நெருக்கமான இடங்களிலும், அத்துடன் சீனக் கடல் பகுதிகளில் மூலோபாயரீதியாக அதிமுக்கியமான நீர்நிலைகளிலும் போர் ஒத்திகைகளை நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. திட்டமிட்ட கணக்கின் விளைவாகவோ அல்லது பொறுப்பற்ற தப்புக்கணக்கின் விளைவாகவோ நிகழ்வுகள் அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான ஒரு மோதலாக வெடிக்கின்ற ஒரு நிலையை சிந்தித்துப் பார்ப்பது கடினமானதல்ல. 2014 இல், முதலாம் உலகப் போரின் நூற்றாண்டு நெருங்கிய நிலையில், ஏராளமான கல்வி நிறுவன ஆய்வறிக்கைகள் 1914 இல் பேரழிவில் விளைந்த நிலைமைகளுக்கும் இன்றைய தின பதட்டங்களுக்கும் இடையில் நிலவிய ஒற்றுமைகளுக்குக் கவனத்தை ஈர்த்தன.

அமெரிக்காவுக்கும் சீனா மற்றும்/அல்லது ரஷ்யாவுக்கும் இடையிலான போர் தவிர்க்கமுடியாததாக ஆகலாம் என்பதான உணர்வு அரசியல் மற்றும் இராணுவ மூலோபாயவாதிகள் இடையே அதிகரித்து வருவது இன்றைக்கும் 1914க்கும் இடையிலான ஒற்றுமைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த விதிவசவாத முதற்கோளானது அரசின் உச்சமட்டத்தில் இருக்கின்ற முக்கியமான முடிவெடுப்பவர்களது தீர்ப்புகளையும் நடவடிக்கைகளையும் தீர்மானிப்பதாக பெரும்பாலும் இருப்பதால், போரின் வெடிப்பை அதிக சாத்தியமாக்குகின்றதான ஒரு செயலூக்கமான காரணியாக அது ஆகிவிடுகிறது. சர்வதேச புவியரசியல் நிபுணர் ஒருவர் சமீபத்தில் பின்வருமாறு எழுதியிருந்தார்:

போர் தவிர்க்கமுடியாததாக அனுமானிக்கப்பட்டு விட்டால், தலைவர்கள் மற்றும் இராணுவங்களின் கணக்குகள் அதற்கேற்ப மாறிவிடுகின்றன. போர் என்பது வருமா வர வேண்டுமா என்பதெல்லாம் அதன்பின் ஒரு கேள்வியாக இராது, மாறாக போரை எப்படி அனுகூலமான விதத்தில் நடத்திச் செல்ல முடியும் என்பதே கேள்வியாக இருக்கும். போர் குறித்து ஆர்வத்துடனோ அல்லது நம்பிக்கையுடனோ இல்லாதவர்களும் கூட தவிர்க்கவியலாமையின் கட்டமைப்புக்குள் இயங்கும்போது போரிடும் தெரிவை மேற்கொள்ளலாம். [14]

இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பின்னர் உலகப் போரின் அபாயம் இத்தனை பெரிதாக இருந்ததில்லை. போர் அச்சுறுத்தல் குறித்த வெகுஜன விழிப்புணர்வு மிகவும் குறைவாக இருக்கிறது என்ற உண்மை இந்த அபாயத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது. எஸ்தோனியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஒரு மோதல் ஏற்படுமாயின், அந்த சிறிய பால்டிக் நாட்டினைப் பாதுகாத்து அமெரிக்கா போரில் இறங்குவதற்கு ஜனாதிபதி பராக் ஒபாமா முறைப்படி உறுதியளித்திருப்பதை அமெரிக்க மக்களில் எத்தனை சதவீதம் பேர் அறிந்திருக்கிறார்கள்? என்று எவரும் கேட்க முடியும். ரஷ்யாவுக்கு எதிரான அல்லது சீனாவுக்கு எதிரான அல்லது ஒரேசமயத்தில் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் எதிரான அமெரிக்காவின் ஒரு அணுஆயுதப் போர் நடந்தால் அதில் எத்தனை மனித உயிர்கள் பலியாக வேண்டியிருக்கும் என்பதைக் கூறுமாறு ஜனாதிபதியைக் கேட்காமல் ஊடகங்கள் கண்ணியத்துடன் ஒதுங்கியிருந்து வருகின்றன.

ஒட்டுமொத்த மனித கலாச்சாரத்தையும் ஒரு பேரழிவு அச்சுறுத்திக் கொண்டிருப்பதாக இரண்டாம் உலகப் போரை ஒட்டி லியோன் ட்ரொட்ஸ்கி எச்சரித்தார். அவர் கூறியது சரியென நிரூபணமானது. அதற்கு ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலத்தில், இரண்டாம் உலகப் போரானது ஐம்பது மில்லியனுக்கும் அதிகமான மக்களின் உயிர்களைக் காவு கொண்டிருந்தது. இப்போது மீண்டும் எச்சரிக்கை மணி ஒலித்தாக வேண்டும். அமெரிக்காவிற்குள்ளும் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இளைஞர்களுக்கும் உண்மை கூறப்பட்டாக வேண்டும்.

உலகளாவிய ஒருங்கிணைப்பு கொண்ட ஒரு உலகப் பொருளாதாரத்தின் முற்போக்கான அபிவிருத்தியானது முதலாளித்துவத்திற்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இணக்கமற்றதாக இருக்கிறது. போர் தடுத்து நிறுத்தப்பட்டு ஒரு உலகளாவிய பேரழிவு தடுத்து நிறுத்தப்பட வேண்டுமாயின், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டதும், புரட்சிகர வர்க்கப் போராட்டத்தின் கோட்பாடுகளால் மூலோபாயரீதியாக வழிநடத்தப்படுவதுமான ஒரு புதிய மற்றும் சக்திவாய்ந்த சர்வதேச வெகுஜன இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும். தேசிய அரசுகள் பிராந்திய மற்றும் உலக மேலாதிக்கத்திற்காக மிருகத்தனமாக சண்டையிடுகின்ற ஏகாதிபத்திய புவியரசியலுக்கு எதிராய், அனைத்துலகக் குழுவானது உலக சோசலிசப் புரட்சியின் மூலோபாயத்தை அதற்கெதிராய் முன்வைக்கிறது. ட்ரொட்ஸ்கி அறிவுறுத்தியதைப் போல, நாம் “ போர் வரைபடத்தை அல்ல மாறாக வர்க்கப் போராட்டத்தின் வரைபடத்தையே பின்பற்றிச் செல்கிறோம்...” [15]

2003 ஈராக் படையெடுப்புக்கு முந்தைய வாரங்களில், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் போர்க் கொள்கைகளுக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மில்லியன் கணக்கானோர் வீதிகளில் இறங்கினர். ஆனால் போர் தொடங்கிய பின்னர், பொதுமக்கள் எதிர்ப்பு என்பது ஏறக்குறைய காணாமல் போய்விட்டது. வெகுஜன எதிர்ப்பு இல்லை என்பதன் அர்த்தம் போரை அவர்கள் ஆதரித்தார்கள் என்பதல்ல. மாறாக, பழைய நடுத்தர-வர்க்க ஆர்ப்பாட்ட இயக்கம் ஏகாதிபத்தியத்திற்கான அதன் முந்தைய வியட்நாம்-சகாப்த எதிர்ப்பை மறுதலித்ததையே இது பிரதிபலித்தது.

தொழிலாள வர்க்கத்தின் மற்றும் இளைஞர்களின் கணிசமான பிரிவுகளிடையே அரசியல் தீவிரப்படலின் பெருகும் அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த தீவிரப்படலானது, போருக்கான நனவான எதிர்ப்பாக எழுவதற்கு, நீண்ட நேரமெடுக்கும் எடுக்கப்போவதில்லை. புதிய போர் எதிர்ப்பு இயக்கத்திற்கு ஒரு புரட்சிகர சோசலிச மற்றும் சர்வதேசிய முன்னோக்கையும் வேலைத்திட்டத்தையும் கொடுப்பதே இந்த நூல் திரட்டின் நோக்கமாகும்.

Notes:

[1] See “August 1990: On the Eve of the First US-Iraq War,” Part 1, A Quarter Century of War.

[2] Mark Landler, “For Obama, an Unexpected Legacy of Two Full Terms at War,” New York Times, May 14, 2016.

[3Public Papers of the Presidents of the United States: George H.W. Bush, State of the Union address, January 29, 1991. www.presidency.ucsb.edu/ws/?pid=19253

[4] R. Craig Nation, War on War: Lenin, the Zimmerwald Left, and the Origins of Communist Internationalism (Durham and London: Duke University Press, 1989), p. 173.

[5] Melvyn P. Leffler, The Specter of Communism: The United States and the Origins of the Cold War, 1917–1953 (New York: Hill and Wang, 1994), p. 6.

[6] William Appleman Williams, The Tragedy of American Diplomacy (New York and London: W.W. Norton & Company, 1972), pp. 105–06.

[7] Ibid., p. 105.

[8] Michael Mandelbaum and Strobe Talbott, Reagan and Gorbachev, (New York: Vintage Books, 1987), p. 189.

[9] Ibid., p. 190.

[10] Statement of the International Committee of the Fourth International, “What is Happening in the USSR? Gorbachev and the Crisis of Stalinism,” Fourth International, June 1987, p. 37.

[11] US Department of Defense, Defense Planning Guidance (as published by the New York Times, March 8, 1992), http://nsarchive.gwu.edu/nukevault/ebb245/doc03_extract_nytedit.pdf. Also known as the Wolfowitz Doctrine, the February 18, 1992 twenty-four-page memorandum was leaked to the New York Times on March 7, 1992.

[12] Frank-Walter Steinmeier, “Germany’s New Global Role: Berlin Steps Up,” Foreign Affairs vol. 85, no. 4: (July/August, 2016), p. 106–107.

[13] Ibid., p. 110.

[14] Steven E. Miller, “The Sarajevo Century—1914 and the Rise of China,” in Richard N. Rosecrance and Steven E. Miller, eds., The Next Great War? The Roots of World War I and the Risk of U.S.-China Conflict, (Cambridge, MA: The MIT Press, 2014), p. xi.

[15] “War and the Fourth International,” Writings of Leon Trotsky 1933–34 (New York: Pathfinder Press, 1998), p. 305.