ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

වතු කම්කරු වැටුප් තාවකාලිකව වැඩි කිරීම පිටුපසින් හාම්පුතුන්ගේ සැලැස්ම ක‍්‍රියාවට දැමීමේ තැතක්

இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை தற்காலிகமாக அதிகரிப்பதன் பின்னால் முதலாளிமாரின் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சி

M. Thevarajah
15 August 2016

அரசாங்கத்தின் தலையீட்டின் கீழ் தோட்டக் கம்பனிகளால் தோட்டத் தொழிலாளர்களுக்கு நூறு ரூபா தற்காலிக நாள் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்களின் நாள் சம்பளம் 620 ரூபாவில் இருந்து 720 ரூபா வரை அதிகரிக்கும். அரசாங்கம் அதற்காக அரச வங்கிகளில் இருந்து 1,000 மில்லியன் ரூபா கடனை தோட்டக் கம்பனிகளுக்கு வழங்கியுள்ளது.

எனினும் அந்த அதிகரிப்பானது தோட்டக் கம்பனிகளின் கீழ் சேவை செய்யும் தற்காலிக தொழிலாளர்களுக்கும் அரசுக்குச் சொந்தமான மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபையினதும் மற்றும் அரச கைத்தொழிலில் நிறுவனத்தினதும் தொழிலாளர்களுக்கும் இதுவரை வழங்கப்படவில்லை. அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிராக தலவாக்கலையில் அரச தேயிலை ஆராய்ச்சி நிலையத்தினால் நிர்வகிக்கப்படும் சென்கூம்ஸ் தோட்டத்தின் தொழிலாளர்கள் கடந்த 9 அன்று மறியல் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.

இந்த சம்பள அதிகரிப்பு தொழிலாளர்களின் கண்களுக்கு மண் தூவும் தற்காலிக கொடுப்பனவாகும். அது இரண்டு மாதங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்படும் என, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) உடன் 10ம் திகதி நடந்த பேச்சுவார்த்தையின் போது தொழில் அமைச்சர் W.D.J. செனவிரத்ன கூறியுள்ளார். அந்த காலத்துக்குள் தோட்டக் கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் புதிய கூட்டு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட வேண்டும் என்றும், அதற்கு அரசாங்கத்தினால் வரவு-செலவுத் திட்டத்தில் தனியார்துறை ஊழியர்களுக்காக பிரேரிக்கப்பட்ட 2,500 ரூபா கொடுப்பனவும் உள்ளடங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தற்போது நிலவும் நாள் சம்பள முறையைப் போலவே அரசாங்கத்தின் இந்த பிரேரணையும் தோட்டக் கம்பனிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட உரிமையாளர்கள், தற்போதைய வறிய மட்டத்திலான நாள் சம்பள முறையையும் கூட அகற்றி, தாம் பிரேரித்துள்ள, தொழிலாளர்களை நேரடியாக உற்பத்தித் திறனுடன் கட்டிப்போடும் சம்பள முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றனர். புதிய உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு முன்னதாக, தோட்டக் கம்பனிகளால் முன்வைக்கப்பட்டுள்ள சம்பள முறை சம்பந்தமாக தொழிற்சங்கங்கள் மற்றும் தோட்ட உரிமையாளர்களுக்கும் இடையில் உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என செனவிரத்ன சுட்டிக் காட்டினார்.

புதிய உடன்படிக்கைக்கு பொருத்தமாக தொழிற்சங்கங்களுக்கும் தோட்ட உரிமையாளர்களுக்கும் இடையில் அடுத்து வரும் நாட்களில் நடக்கவுள்ள பேச்சுவார்த்தைகளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நேரடி மேற்பார்வையின் கீழேயே இடம்பெறும் என தெரியவருகின்றது.

அரசாங்கம் மற்றும் பிரதமரின் உத்வேகம், நிச்சயமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக் கொடுப்பதற்கானது அல்ல. அந்த தலையீடானது பிரதான இரண்டு குறிக்கோள்களைக் கொண்டதாகும்.  அதாவது; சம்பள அதிகரிப்பை வழங்குவதை தோட்டக் கம்பனிகள் தொடர்ந்தும் நிராகரித்து வந்திருந்தமையினால், தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சியடையும் எதிர்ப்பை தணித்து, அவர்கள் மத்தியில் அதிரிச்சியூட்டும் சமூகப் போராட்டங்கள் வெடிப்பதை தடுப்பதும், மற்றும் தோட்டக் கம்பனிகள் பிரேரித்துள்ள புதிய சம்பள திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கம்பனிகளுக்கு நிலைமைகளை வடிவமைத்துக் கொடுப்பதுமாகும்.

நிச்சயமாக தோட்டக் கம்பனிகளால் பிரேரிக்கப்பட்டுள்ள சம்பள திட்டமானது புதிய கூட்டு ஒப்பந்தத்துக்குள் சேர்த்துக்கொள்ளப்படும். தொழிற்சங்கங்களும் தோட்டக் கம்பனிகளும் தொழிலாளர்களுக்கு தெரியாமல், முன்னர் இருந்த 2013 கூட்டு ஒப்பந்தத்துக்குள் உற்பத்தி திறனை அதிகரிக்கும் நிபந்தனையை உள்ளடக்கியிருந்தனர். இந்த அடிப்படையிலேயே நாளொன்றுக்கு பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவு 16 கிலோவில் இருந்து 18-20 கிலோ வரை அதிகரிக்கப்பட்டது.

பிரேரிக்கப்பட்டுள்ள திட்டத்தை மூன்று ஆண்டுகளுக்குள் நடைமுறைப்படுத்துவதன் ஆரம்ப கட்டமாக, கலப்பு சம்பள முறையை பெருந்தோட்டக் கம்பனிகள் பிரேரித்துள்ளன. அதன்படி மாதம் 25 வேலை நாட்களில் 12 நாட்களுக்கு நாள் சம்பளம் வழங்கப்டும் அதே வேளை, எஞ்சிய 13 நாட்களுக்கு உற்பத்தித் திறன் எனப்படும் வருமானத்தைப் பங்கிடும் முறையின் அடிப்படையிலேயே ஊதியம் கொடுக்கப்படும்.

வருமானத்தைப் பங்கிடும் முறை என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் புதிய சம்பள முறையானது பழைய குத்தகை விவசாய முறையை ஒத்ததாகும். அதன்மூலம் தொழிலாளி நில உரிமையாளரின் அடிமையாக ஆக்கப்படுவது மட்டுமல்லாமல், உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடியினுள் இலங்கை தொழிற்துறை எதிர்கொண்டுள்ள அழிவின் சுமையையும் தோட்டத் தொழிலாளி சுமக்க வேண்டும்.

பெருந்தோட்ட உரிமையாளர்களும் அரசாங்கமும் கூட்டாகச் செய்யும் சதிக்கு நேரடியாக உடந்தையாக உள்ள தொழிற்சங்கங்கள், நூறு ரூபா என்ற மோசடி கொடுப்பனவுக்கும் கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கும் அரசாங்கம் தலையீடு செய்வதை ஒரு வெற்றியாக தூக்கிப் பிடிக்கின்றன.

“1992ல் இருந்தே தொழிற்சங்கங்களும் பெருந்தோட்டக் கம்பனிகளும் கூட்டு ஒப்ந்தங்களைக் கைச்சாத்திட்டு வந்தாலும் அரசாங்கம் அதில் தலையீடு செய்திருக்கவில்லை. ஆனாலும் நாங்கள் அழுத்தம் கொடுத்ததனால் இப்போது முதல் முறையாக அரசாங்கம் அதில் தலையிட்டுள்ளது. கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடும் வரை நூறு ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்கு திறைசேரியில் இருந்து 1,000 மில்லியன் ரூபாய்களை கொடுத்துள்ளது. அது எமது முதல் வெற்றியாகும்” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கனேசன் அண்மையில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் உற்சாகத்துடன் கூறினார். கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர், பெருந்தோட்டக் கம்பனிகளின் மாற்று பிரேரணை பற்றிய கலந்துரையாடல்களுக்கு எந்த “தடையும்” கிடையாது என மனோ கனேசன் சுட்டிக் காட்டினார்.

தமிழ் முற்போக்கு கூட்டனியானது, பி. திகாம்பரத்தின் தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) வி. ராதாகிருஷ்னனின் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.), மனோ கனேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.) ஆகியவற்றின் ஒரு கூட்டமைப்பாகும். இந்த மூன்று தலைவர்களும், முதலீட்டளர்களதும் தோட்ட நிறுவனங்கள் உட்பட இந்த நாட்டின் பெரும் முதலாளிகளின் நலன்களை பாதுகாக்கும் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் மைத்திரிபால சிறிசேன-ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் அமைச்சர்களாவர்.

நூறு ரூபா கொடுப்பனவை வழங்குவது பற்றி இ.தொ.கா. தலைவர் தொண்டமான், விக்கிரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்ததோடு புதிய கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடும் வரை அதை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். தொண்டமான், முன்னைய மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சராக இருந்ததோடு சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தில் இணைந்துகொள்வதற்கு ஏங்கிக்கொண்டிருக்கின்றார். பெருந்தோட்ட உரிமையாளர்கள் அல்லது முதலாளித்துவ வியாபாரிகளைப் போலவே முதலாளித்துவ அரசியல்வாதிகளான இவர்களது நோக்கங்களுக்கும், பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் முதலாளித்துவ அரசாங்கத்தினதும் நலன்களுக்கும் இடையில் வேறுபாடுகள் கிடையாது.

இ.தொ.கா. உட்பட பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள், பிரேரிக்கப்பட்டுள்ள கலப்பு முறை பற்றி கைத்தொழில் மற்றும் தொழிற்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க உடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக ம.ம.மு. பொதுச் செயலாளர் ஏ. லோரன்ஸ் உலக சோசலிச வலைத் தளத்துக்குத் தெரிவித்தார். சில “உடன்பாடின்மைகள்” இருந்த போதிலும், சகல தொழிற்சங்கங்களும் கலப்பு முறைக்கு உடன்பட்டுள்ளதாக அவர் கூறினார். நாள் சம்பள முறையின்படி, 15 நாட்களுக்கும் மற்றும் உற்பத்தி திறனை அடிப்படையாகக் கொண்ட 10 நாட்களுக்கும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய வழங்குமாறு தொழிற்சங்கங்கள் கோருவதாக அவர் கூறினார். உழைப்பை சுரண்டுவதை தீவிரமாக்கும் திட்டங்களுக்கு தொழிலாளர்களை அடிபணியச் செய்வதற்காக தொழிற்சங்கங்களும் பெருந்தோட்ட உரிமையாளர்களும் அரசாங்கமும் சதியில் ஈடுபட்டுள்ளன என்பதற்கு லோறன்சின் கருத்து தெளிவான ஆதாரமாகும்.

உத்தேச கலப்பு சம்பள முறையும் தொழிற்சங்கங்களின் பிற்போக்கு செயற்பாடுகளும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை கிளறிவிட்டுள்ளன. மிவும் விரைவாக கலப்பு முறையை செயற்படுத்துவதாக தோட்ட முகாமையாளர் ஒருவர் கூறியதாக உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய டிக்கோயா தோட்டத்தின் ஒரு பெண் தொழிலாளி கூறினார். “அப்போது எங்களுக்கு வராத்தில் மூன்று நாட்கள் பழைய சம்பள முறைப்படியே வேலை செய்ய நேரும். எஞ்சிய நாட்களில் தற்காலிக அடிப்படையில்தான் வேலை செய்ய முடியும். அப்படி நடந்தாலும், தற்போதுள்ள சம்பள முறையை விட மோசமான முறையின் கீழேயே நாங்கள் வேலை செய்ய நேரும்” என அவர் மேலும் கூறினார்.

புதிய முறையின் கீழ், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் பற்றி, தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு எதையும் தெரிவிக்கவில்லை எனக் கூறிய அவர், “தொழிற்சங்கங்கள் தேர்தல் காலத்தில் 1,000 ரூபா சம்பள உயர்வு பெற்றுக்கொடுப்பதாக கூறிய போதிலும், இப்போது அதைப் பற்றிய பேச்சே இல்லை. எல்லா சங்கங்களும் எங்களை ஏமாற்றுகின்றன” என கோபத்துடன் கூறினார்.