ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

විශ්ව විද්‍යාල අනධ්‍යන සේවක අරගලයට සමාජවාදී ක‍්‍රියා මාර්ගයක්

இலங்கை பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்துக்கு சோசலிச வேலைத்திட்டம்

Statement of the Socialist Equality Party (Sri lanka)
28 July 2016

இலங்கை பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் சம்பந்தமான கோரிக்கைகளை முன்வைத்து ஜூலை 27 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 14 அரச பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த சுமார் 13,000 கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், கோரிக்கைகள் கிடைக்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்றும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள பல்கலைக்கழக தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டி தெரிவித்துள்ளது. முழு பல்கலைக்கழக நடவடிக்கைகளும் வேலை நிறுத்தத்தின் காரணமாக முடக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் தமிழ் பேசும் ஊழியர்கள் அனைவரும் கூட வேலை நிறுத்தத்தில் பங்குபற்றியுள்ளனர். இதன் மூலம், மூன்று தசாப்தகால போரினால் கிளறிவிடப்பட்டிருந்த இனப் பாகுபாடுகளைக் கடந்து, முதலாளித்துவ அரசாங்கத்தால் தமது வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக, பொதுவில் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் வளர்ச்சிகாணும் எதிர்ப்பையும் அதற்கு எதிராக போராட வேண்டியதன் பெரும் அவசியத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

கல்விசாரா ஊழியர்களின் போராட்டம், ஏனைய தொழிலாளர்கள் மத்தியில் பரவக்கூடிய நிலைமை பற்றி பீதியடைந்துள்ள அரசாங்கம், போராட்டத்தை குழப்புவதற்காக கருங்காலிகளை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

ரூபா 2,500 கொடுப்பனவை அடிப்படை சம்பளத்தில் சேர்த்தல், கல்விசார் ஊழியர்களுக்கு கற்கை நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் கொடுப்பனவுக்கு சமமான மாற்றுக் கொடுப்பனவு வழங்குதல், 57 வயதைக் கடந்த ஊழியர்களுக்கு சேவைக் காலத்தை நீடிக்கும் போது திணிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கி, 60 வயது வரை சேவையை நீட்டித்துக்கொள்வதற்கு வாய்ப்பு வழங்குதல், உட்பட ஏழு கோரிக்கைகள் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர்களின் அழுத்தத்தின் காரணமாக, இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்புவிட வேண்டிய கட்டாயம் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு ஏற்படுட்ள்ள போதிலும், அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும், தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பு மற்றும் போர்க்குணத்தையும், காத்திரமற்ற பிரச்சாரங்கள் மற்றும் அரசாங்கத்தின் உறுதிமொழிகளுக்கு அடிபணியச் செய்து, கரைத்து விடுவதையே இலக்காகக் கொண்டுள்ளன. தொழிற்சங்கத் தலைவர்கள், அரசாங்கத்துடனும் அரச அதிகாரிகளுடனும் நடத்தப்படும் எல்லாப் பேச்சுவார்த்தைகளின் போதும், அரசாங்கம் அது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை முன்வைத்து கோரிக்கைகள் அனைத்தையும் நிராகரிப்பதாகக் கூறுகின்றனர்.

கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் சம்பந்தமான அரசாங்கத்தின் பதிலிறுப்பு, முழுத் தொழிலாள வர்க்கத்திற்கும் விடுக்கப்படும் ஒரு கடும் எச்சரிக்கை ஆகும். கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதும் போராட்டத்தை குழப்ப கருங்காலிகளை ஏற்பாடு செய்வதும், அரசாங்கத்தின் பொருளாதார வெட்டுக்கள் மற்றும் ஒடுக்குமுறை அரசியல் கொள்கையின் ஒரு பகுதியாகும். எனவே, முதலாளித்துவ அரசாங்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டம் இன்றி, கல்விசாரா ஊழியர்கள் அல்லது தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு பகுதியினரும், தமது கோரிக்கைகள் மற்றும் உரிமைகளை வெல்ல முடியாது.

தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக வக்காலத்து வாங்கிய தொழிற்சங்க கூட்டு குழுவின் தலைவர்கள், அத்தகைய அரசியல் போராட்டத்தின் பரம எதிரிகளாவர். ஜூலை 13-14 ஊர்வலத்தின் இறுதியில் கல்விசாரா ஊழியர்கள் முன் உரையாற்றிய கூட்டுக் கமிட்டியின் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே, "போராட்டம் அரசியல் தொடர்பற்றது" என்று சுட்டிக் காட்டினர். இப்போது, அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பை திசை திருப்பும் பொருட்டு, தங்கள் கோரிக்கைகளை வழங்க உயர் கல்வி அமைச்சரும் நிதி அமைச்சரும் உடன்பட்டிருந்தாலும், "அதிகாரிகளின் எதிர்ப்பின் காரணமாக அது வெற்றியளிக்கவில்லை' எனக் கூறி, அரசாங்கத்தின் கொள்கைகளின் அடிப்படையிலேயே அதிகாரிகள் முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுக்கின்றனர் என்பதை மூடி மறைத்து, மல்வத்தகே உட்பட தொழிற்சங்க அதிகாரத்துவம், அரசாங்கத்தை வலையில் இருந்து விடுவித்து விடுகின்றனர்.

தாக்குதல்களின் மூலகாரணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம், தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தொடுக்கும் தாக்குதல்கள், சர்வதேச மூலதனத்தின், குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கட்டளையின் படியே முன்னெடுக்கப்படுகின்றன. இந்த தாக்குதல் இலங்கைக்கு மட்டும் உரியதல்ல. அதே நேரம் அது ஒரு சர்வதேச போக்காகும்.

2008ல் தொடங்கி, ஒரு பின்னடைவை நோக்கிச் செல்லும் பொருளாதார நெருக்கடியின் அனைத்து சுமைகளையும், தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சுமத்துவதே, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளும் வர்க்கத்தின் கொள்கை ஆகியுள்ளது. பெரும் முதலாளித்துவ நாடுகளில் மட்டுமன்றி, இலங்கை போன்ற சிறிய முதலாளித்துவ நாடுகளிலும், தொழிலாள வர்க்கம் இந்தக் கொள்கையின் விளைவை எதிர்கொள்கின்றது.

கடந்த இராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கையும் இதுவே. சர்வதேச நாணய நிதியத்தினால் சுமத்தப்பட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தும் போது வளர்ச்சிகண்ட வெகுஜன எதிர்ப்பின் மத்தியில், ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்தி, மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தனது ஆட்சியை நீடித்துக்கொண்டு, தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான மிகப் பெரும் தாக்குதலை முன்னெடுப்பதே, இராஜபக்ஷவின் குறிக்கோளாக இருந்தது.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் துரோக நடவடிக்கைகள்

இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக வளர்ந்த வெகுஜன எதிர்ப்பு, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கமாக வெளிப்படுவது சம்பந்தமாக கடும் விரோதமாக இருந்த, கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்கம் உட்பட ஒட்டு மொத்த தொழிற்சங்க அதிகாரத்துவமும், நவசமசமாஜக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி உள்ளடங்கலான சகல போலி இடது கட்சிகளும், பிரஜைகள் சக்தி போன்ற சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உடனும் சேர்ந்து, அந்த வெகுஜன எதிர்ப்பை சிறிசேன-ரணில் விக்கிரமசிங்க கூட்டணியின் கீழ் முடிச்சுப்போட்டு விடும் வேலையை செய்தன. சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கமானது இராஜபக்ஷ அரசாங்கம் நிறுத்திய இடத்தில் இருந்து, தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதலைத் தொடங்கியது.

தற்போதைய அரசாங்கமானது சர்வதேச நாணய நிதியத்திடம் பகுதி பகுதியாக பெறும் 1.5 பில்லியன் டாலர் கடன் தொகைக்காக விதித்துள்ள நிபந்தனைகளில், 2020 ஆண்டளவில் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்பது பிரதானமானதாகும். இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கே, கல்வி மற்றும் சுகாதாரம் உட்பட நலன்புரி சேவைகளில் பாரிய வெட்டுக்களுடன், ‘மறுசீரமைப்பின்’ கீழ் அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதை துரிதப்படுத்துவது மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைப்பதையும் அரசாங்கம் அதன் கொள்கைகளில் முதன்மையானவையாகக் கொண்டுள்ளது.

அரசாங்கத்தின் அடக்குமுறை

இந்த மக்கள் விரோத கொள்கைகளை இலகுவாக நடைமுறைப்படுத்திவிட முடியாது என்பதை அரசாங்கம் நன்கு அறியும். போராட்டங்களில் ஈடுபட உந்தப்பட்டு வரும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் உட்பட ஏனைய ஒடுக்கப்பட்டவர்களையும் நசுக்குவதற்காக, முப்பது ஆண்டுகால உள்நாட்டுப் போரின் மத்தியில் கட்டியெழுப்பிய, பொலிஸ் அரச ஒடுக்குமுறை இயந்திரத்தை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தேசிய பாதுகாப்பு, திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் தேசிய புலனாய்வு சம்பந்தமாக புதிய சட்டங்களைக் கொண்டுவந்து, வேலை நிறுத்தம் செய்தல், ஆர்ப்பாட்டங்கள் நடத்துதல் மற்றும் ஊர்வலம் செல்லுதல் உட்பட அனைத்து ஜனநாயக உரிமைகளையும் நசுக்கித் தள்ளுவதற்கு அரசாங்கம் தயாராகி வருகின்றது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் கொடூரமான அடக்குமுறை, இதற்கான தயாரிப்பையே சமிக்ஞை செய்கின்றது.

இராஜபக்ஷவின் வெகுஜன-விரோத தாக்குதல்கள் மற்றும் ஒடுக்குமுறை கொள்கைகளை எதிர்த்து தீவிரமயப்பட்டு வந்த தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும், தொழிற்சங்க அதிகாரத்துவம் உட்பட மேற்கூறிய கும்பலும், சிறிசேன-விக்கிரமசிங்க கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வருவதன் மூலம், ஜனநாயகத்தை ஸ்தாபிக்க முடியும் என மீண்டும் மீண்டும் கூறிவந்தன.

உண்மையில் 2015 ஜனவரியில் நடந்தது என்னவென்றால், தமது மூலோபாய நலன்களுக்கு எதிராக இராஜபக்ஷவுக்கும் சீனாவுக்கும் இடையே வளர்ந்து வந்த நெருங்கிய உறவுகளைப் பற்றி விழிப்படைந்த வாஷிங்டன், திட்டமிட்டு மேற்கொண்ட ஒரு ஆட்சி மாற்றமே ஆகும். அப்போது தொடக்கம், கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக, சீனாவை சுற்றிவளைக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய போர் மூலோபாயத்துடன் இலங்கை மேலும் மேலும் ஒருங்கிணைக்கப்பட்டு வந்துள்ளது.

தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் புதிய சர்வதேச எழுச்சிகள்

கிரேக்கம், ஸ்பெயின் மற்றும் பிரான்சினதும் அரசாங்கங்கள், தொழிலாளர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அது ஒரு சர்வதேச நிகழ்வுப் போக்காக வளர்ச்சியடைகின்றது. 1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து 25 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தலைதூக்கும் இத்தகைய போராட்டங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்தாபக அரசியல் கட்சிகளுக்குப் புறம்பாக வளர்ச்சியடைந்து வருவது, அதன் விசேட குணாம்சமாகும்.

எனினும் அந்த போராட்டங்கள் வெற்றியை நோக்கி நகர்வதற்கு தேவையான முன்னோக்கு மற்றும் தலைமைத்துவத்தால் ஆயுதபாணியாக்கப்படாமல் இருக்கின்ற நிலைமையை சுரண்டிக்கொண்டு, போலி இடதுகளும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களும், தொழிலாளர்களை திசைதிருப்பி, அவர்களை பல்வேறு முதலாளித்துவ கூட்டணிகளின் பின்னால் தள்ளிவிடுகின்றன. இந்தத் துரோகிகள் தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்களை, கிரேக்கத்தில் சிரிசா மற்றும் இலங்கையில் சிறிசேன-விக்கிரமசிங்க கூட்டணியின் பின்னால் கட்டிப்போட்டுள்ளனர்.

கல்விசாரா ஊழியர்கள் உறுதிப்பாட்டுடன் போராட்டத்தில் குதித்தவுடன், அரசாங்கத்தின் மீது விசாலமான அழுத்தத்தை திணிப்பதன் மூலம் தமது கோரிக்கைகளை வெற்றி கொள்ள முடியும் என்ற மாயையை விதைத்து, தொழிலாளர்களை குழப்பியடித்து, அவர்களது தைரியத்துக்கு குழிபறிப்பதற்கு தொழிற்சங்க அதிகாரத்துவம் ஆரம்பத்தில் இருந்தே செயற்பட்டது. பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழுவின் தலைவர்கள், கடந்த 22 அன்று உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவையும் சந்தித்து பேச்சுவார்தை நடத்தினர். நடக்கவேண்டியவாறே, மாதாந்த மாற்றுக் கொடுப்பனவை அடிப்படை ஊதியத்தில் நூற்றுக்கு 25 சதவீதமாக ஏற்றுக்கொண்டு, இந்த போராட்டத்தை முடித்துக்கொள்வதற்கு அதிகாரத்துவம் நாட்டம் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

சோசலிச வேலைத் திட்டமும் புரட்சிகர தலைமைத்துவமும்

கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகள் உட்பட தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக கோரிக்கைகளை, நெருக்கடி நிறைந்த முதலாளித்துவ அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் பெற முடியாது. உலகம் முழுவதும் உள்ள தொழிலாள வர்க்கம் தமது அனுபவத்திலேயே இதை உணர்ந்துள்ளது. தம் மீதான தாக்குதலின் தோற்றுவாயான இந்த நெருக்கடி மிகு முதலாளித்துவ அமைப்பு முறையை, உலக அளவில் திட்டமிடப்படும் சோசலிச உற்பத்தி பொருளாதாரத்தின் மூலம் பதிலீடு செய்வதற்கான ஒரு அரசியல் போராட்டத்தை நடத்துவதற்கு தொழிலாளர்கள் முன்னணிக்கு வர வேண்டும். துரோக தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து விலகிக்கொள்ள வேண்டியது அதற்கான ஒரு முன் நிபந்தனையாகும். தொழிலாளர்கள் தமது சொந்த நடவடிக்கை குழுக்களை அமைத்துக்கொண்டு, தெற்கு ஆசியாவிலும் உலகம் பூராவும், சோசலிசத்துக்கான போராட்டத்தின் ஒரு பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்ற வடிவத்திலான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை  ஆட்சிக்கு கொண்டுவர போராட வேண்டும்.

அந்த அரசாங்கங்களில், பெருநிறுவனங்களும் பெருந்தோட்டங்களும் வங்கிகளும் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவது உட்பட சோசலிச கொள்கைகள் அமுல்படுத்தப்பட்டு, சமூகத்தின் பெரும்பான்மையான மக்களின் நலன்களின் பேரில் உற்பத்தி ஒரு அறிவார்ந்த முறையில் மறுசீரமைப்பு செய்யப்படும். அது அனைத்து வெளிநாட்டு கடன்களையும் இரத்து செய்யும்.

இத்தகைய அடிப்படையில் மட்டுமே, இலவசக் கல்வி, இலவச சுகாதாரம் மற்றும் நலன்புரி சேவைகளையும் தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற, கிராமப்புற ஏழை மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க முடியும்.

இந்த முன்னோக்கு பற்றி ஆழமாக கலந்துரையாடப்படும் சோசலிச சமத்துவக் கட்சியின் கூட்டம் ஒன்று, ஆகஸ்ட் 9 அன்று மாலை 4.00 மணிக்கு கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. அதில் பங்குபற்றுமாறு கல்விசாரா ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.