ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The 2016 elections and the crisis of American democracy

2016 தேர்தல்களும், அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடியும்

Joseph Kishore
18 August 2016

2016 அமெரிக்க தேர்தல்கள் அமெரிக்க ஜனநாயகத்தின் ஆழ்ந்த மற்றும் நீடித்த நெருக்கடியில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. ஒன்றரை நூற்றாண்டுக்கும் அதிகமாக இருந்து வரும் அரசியல் கட்சிகள் உடைந்து வருகின்றன. புதிய அரசியல் அணிசேர்க்கைகள் எழுகின்றன, நீண்டகாலமாக கருத்தரித்து வந்திருந்த ஓர் அதிஅபாயகரமான அரசியல் வகைப்பாடு மேற்புறத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.

ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடுகளுக்குப் பின்னர், கருத்துக்கணிப்புகளில் டோனால்ட் ட்ரம்ப் இன் நிலை, குறிப்பாக போட்டி மிகுந்த முக்கிய மாகாணங்களில் கணிசமானளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. பதவியை ஜெயிப்பதற்குரிய விதத்தில் ட்ரம்ப் பாரம்பரியரீதியில் போட்டியிடவில்லையென குடியரசுக் கட்சியின் பிரதான பிரிவுகளும் மற்றும் அதனுடன் சேர்ந்துள்ள ஊடங்களும் குறை கூறுகின்றன. அவர் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டுமென்ற கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

இந்த வாரம் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இன் தலையங்க பக்கம் குறிப்பிடுகையில் "உழைப்பாளர் தினத்திற்கு (Labor Day) முன்னதாக திரு. ட்ரம்ப் அவரின் நடவடிக்கையை மாற்றிக் கொள்ளுமாறு" குடியரசு கட்சி தலைமையால் "செய்ய முடியவில்லை" என்றால், “செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையை அழியாமல் காப்பாற்றுவதன் மீது கவனம் செலுத்துவதற்காக" "அந்த வேட்பாளரை நம்பிக்கையற்றவராக நிராகரிப்பதைத் தவிர அதற்கு வேறு விருப்பத்தேர்வு இருக்காது…" என்று குறிப்பிட்டது. ட்ரம்ப் ஐ பொறுத்த வரையில், "ஜனாதிபதியாக விரும்பும் ஒருவரைப் போல அவர் நடந்து கொள்ள விரும்புகிறாரா என்பதை" அவர் "முடிவெடுத்தாக" வேண்டும்—அல்லது வேட்பாளர் பதவியை [அவருடன் துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் துணைவர்] மைக் பென்ஸிடம் ஒப்படைக்க வேண்டும்,” என்று ஜேர்னல் அறிவித்தது.

அவர் பெயரளவிற்கு தலைமை கொடுத்து வரும் கட்சியினது தலைமையிலிருந்து வரும் அதிகரித்தளவிலான கடுமையான குறைகூறல்கள் குறித்தோ அல்லது கருத்துக்கணிப்பு எண்ணிக்கை குறித்தோ ட்ரம்ப் எந்தளவிற்கு குறைவாக அக்கறை கொண்டிருப்பதாக தெரிகிறதோ அது தான் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

துல்லியமாக அவரின் குடியரசுக் கட்சி விமர்சகர்களால் கோரப்படும் விதத்திற்கு எதிர்விதமாக அவர் நிர்வாகிகளை மாற்றி ஒழுங்கமைத்ததன் மூலமாக, ஜேர்னல் மற்றும் ஏனையவர்களிடம் இருந்து வந்த குறைகூறல்களுக்கு அந்த குடியரசு கட்சி வேட்பாளர் புதனன்று விடையிறுத்தார். அவர் முக்கியமாக அவரது தற்போதைய பிரச்சார தலைவர் பௌல் மனாஃபோர்ட் (Paul Manafort) ஐ கீழ்-பதவிக்குக் கொண்டு வந்தார், Breitbart News தலைவர் ஸ்டீபன் பனன் (Stephen Bannon) ஐ நாளாந்த பிரச்சார நடவடிக்கைகளை நடத்துவதற்கான தலைவராக நியமித்தார். பனன் ஐ கொண்டு வந்து, ட்ரம்ப் "அரசியல் கண்காணிப்பின் கடைசி எச்சசொச்சங்களையும் நீக்கிவிட்டார் … சுதந்திர சிந்தனையாளர் ஒருவரை நியமித்தமை …அனேகமாக அவரின் சுதந்திரமான பாணிக்கு ஒத்துழைப்பாக இருக்கக்கூடும்,” என்று கார்டியன் பத்திரிகை எழுதியது. அது "குடியரசுக் கட்சி ஸ்தாபகத்திற்கு ஓர் அவமதிப்பாகும்" என்று வாஷிங்டன் போஸ்டின் ஒரு தலைப்பு குறிப்பிட்டது.

மிகவும் முக்கியமாக, பனன் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நடைமுறை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைக் காட்டிலும் அரசியல் உள்நோக்கங்கள் உள்ளன. நச்சுத்தன்மையான மிகவும் தேசியவாத இராணுவவாத மற்றும் பாசிசவாத அரசியலை ஊக்குவித்து வரும் கீழ்தரமான வலதுசாரி பத்திரிகைகள், வலைப்பதிவு வலையமைப்புகள் மற்றும் ரேடியோ உரையாடல் நிகழ்ச்சிகளின் மையத்தில் Breitbart News இருக்கிறது.

புதனன்று Daily Beast இல் பிரசுரமான ஓர் அறிக்கை, Vdare, தேசிய கொள்கைக்கான பயிலகம், Alt-Right மற்றும் அமெரிக்க மறுமலர்ச்சி போன்ற வெள்ளையின மேலாதிக்கவாத அமைப்புகளுடனான Breitbart இன் தொடர்புகளைச் சுட்டிக்காட்டியது. 2012 இல் அவர் இறக்கும் வரையில் Breitbart இன் ஸ்தாபகராக இருந்த Andrew Breitbart, பனன் ஐ அங்கீகரிக்கும்ரீதியில் ஒரு நாஜி பிரச்சாரவாதி மற்றும் திரைப்பட தயாரிப்பாளரை மேற்கோளிட்டுக் காட்டி "Tea கட்சி இயக்கத்தின் Leni Riefenstahl” என்று அவரை குறிப்பிட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. போஸ்ட் செய்தியின்படி, பனன் ட்ரம்ப் ஐ "அப்பட்டமான தேசியவாதியாக" போட்டியிடுமாறு ஊக்கப்படுத்துகிறார்.

ட்ரம்ப் பிரச்சாரத்திற்கான முன்னாள் நிர்வாகி Corey Lewandowski, Breitbart பத்திரிகையின் சொந்த செய்தியாளர்களில் ஒருவரான மைக்கேல் ஃபீல்ட்ஸை தாக்கினார் என்ற குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக அவரை பனன் சமீபத்தில் நியாயப்படுத்திய போதுதான் பனன் அசைவுகளை உருவாக்கி இருந்தார். அதற்குப் பின்னர் ட்ரம்ப் க்கான ஒரு பிரச்சார வலைத் தளம் என்ற அளவிற்கு ப்ரீய்ட்பார்ட் மாறிவிட்டது.

முன்னணி குடியரசு கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களில் ட்ரம்ப் வெளிப்படையாக ஆர்வமின்றி இருப்பது, அவரது பிரச்சாரத்தின் போக்கில் அவர் அபிவிருத்தி செய்துள்ள ஓர் அரசியல் நோக்குநிலையின் வரிசையில் இருக்கிறது. தேங்கி நிற்கும் சமூக கோபம் மற்றும் ஏமாற்றத்தை "உயரடுக்கு" மீதான வெற்று குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அதிதீவிர வலதின் திசையில் திருப்பிவிட முடியும் என்று அவர் கணக்கிட்டு வருகிறார். "மில்லியன் கணக்கான மக்களின் பொருளாதார மற்றும் சமூக பாதுகாப்பின்மைக்கு ஒரு முறையீடு செய்யக்கூடிய அரசியல் சாத்தியத்திறனை ஏதோவொரு வலதுசாரி வனப்புரையாளர் கண்டுகொள்வதற்கு அதிகளவு காலம் பிடிப்பதில்லை,” என்று மார்ச்சில் வேட்பாளர் ஆவதற்கான ட்ரம்ப் இன் சூப்பர் செவ்வாய் தொடர் வெற்றிகளை அடுத்து உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டது.

அவர் நவம்பரில் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, புலம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதல்கள், இஸ்லாமிய-விரோத மனோபாவம், ஒரு பாசிசவாத மற்றும் தேசியவாத இயக்கத்திற்கான அடித்தளத்தை ட்ரம்ப் உருவாக்கிக் கொண்டிருக்கிறார், “சட்டம் ஒழுங்கிற்கு" அழைப்புவிடுப்பதுடன், பொலிஸ் மற்றும் இராணுவம் மீதான எல்லா தடைகளையும் முடிவுக்குக் கொண்டு வர கோருகிறார். இந்த இயக்கம், ட்ரம்ப் அல்லது வேறொரு வனப்புரையாளரின் தலைமையில், தேர்தல்களுக்குப் பின்னரும் நீடிக்கும்.

இதில் தொடர்புபட்ட விதத்தில், கிளிண்டன் மற்றும் ஜனநாயகக் கட்சியினருக்கு ஆதரவாக தேர்தல்கள் சீர்குலைக்கப்பட்டுள்ளதாக அதிகரித்தளவில் குற்றச்சாட்டை உயர்த்தி வருவது முக்கியமானதாகும், ஆனால் கிளிண்டனின் ஜனாதிபதி பதவிகாலம் ஆரம்பத்தில் இருந்தே முறைகேடாக தான் இருக்கும் என்பற்கான தெளிவான அறிகுறிகள் இருக்கின்ற போதும் இது நடக்கிறது.

பகுப்பாய்வின் இறுதியாக கூறுவதானால், ட்ரம்ப் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுக்காக பேசுகிறார் அதற்கு அதன் பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புமுறையின் நெருக்கடி மற்றும் சமூக எதிர்ப்பின் வளர்ச்சி குறித்து நன்றாக தெரியும் என்பதுடன் மிகவும் சர்வாதிகார மற்றும் வன்முறையான ஆட்சி வடிவங்களுக்குத் தயாரிப்பு செய்து வருகிறது.

ட்ரம்ப் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தீவிர அபாயத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறார். இருப்பினும் ஒடுக்கப்படும் மக்களின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை அவரால் கேட்க செய்ய முடிகிறதென்றால் அது, அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவின் "இடது" அரசியலினது திவாலான மற்றும் பிற்போக்குத்தனமான குணாம்சத்தையே சாரும். “நெளிவுசுளிவான ஹிலாரி" மீதான ட்ரம்ப் இன் குற்றச்சாட்டுக்கள், ஊடகங்களில் அவரின் தாக்குதல்கள், தாராளவாத உயரடுக்கின் "சரியான அரசியல் தன்மைக்கு" எதிராக அவரின் தாக்குதல்மிக்க உரை ஆகியவை ஏழரை ஆண்டுகால ஒபாமா நிர்வாகத்திற்குப் பின்னர் ஜனநாயக கட்சி மீது பூதாகரமாக வளர்ந்துள்ள ஆழ்ந்த கோபத்தைக் கைப்பற்றுவதற்காக ஆகும்.      

கடந்த மாதங்களில் உலக சோசலிச வலைத் தளம் கிளிண்டனை அரசியல் நடைமுறையில் இருப்பதைப் பேணும் வேட்பாளராக குணாம்சப்படுத்தியமை முன்பினும் அதிகமாக அதிவிரைவிலேயே உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போது அவர், ஈராக்கில் போர்-நாடிய ரோபர்ட் காகன் போன்ற நவ-பழமைவாத குடியரசு கட்சியினரில் இருந்து முன்னாள் சிஐஏ தலைவர்கள் மைக்கேல் மோரால் மற்றும் மைக்கேல் ஹேடன் போன்ற உளவுத்துறை அதிகாரிகள் வரையில், ஒபாமா நிர்வாகம், ஒட்டுமொத்த தொழிற்சங்க எந்திரம் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்குப் போட்டியிட்ட முன்னாள் போட்டியாளர் பேர்ணி சாண்டர்ஸ் வரையில் ஒவ்வொருவரினாலும் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரிக்கப்படுகிறார். இந்த பட்டியலில் பிரதான தனியார் முதலீட்டு நிறுவன பில்லியனர்களையும் மற்றும் பெரும்பாலான ஊடகங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.    

கிளிண்டனின் ஜனாதிபதி ஆட்சிகாலம் வோல் ஸ்ட்ரீட் மற்றும் பெருநிறுவன அமெரிக்கா, இராணுவ-உளவுத்துறை எந்திரம் மற்றும் இனம், பாலினம், பாலியல் சம்பந்தப்பட்ட அடையாள அரசியலின் அடிப்படையில் ஜனநாயக கட்சியுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் உயர்மட்ட நடுத்தர வர்க்க அடுக்குகளின் ஒரு கூட்டணியைப் பிரதிநிதித்துவம் செய்யும். கிளிண்டன் நிர்வாகம், குறிப்பாக மத்தியக் கிழக்கு மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்க இராணுவ தலையீடுகளைப் பரந்தளவில் விரிவாக்குவதிலும், ஒபாமா நிர்வாகத்தின் சீன-விரோத "ஆசிய முன்னிலையைத்" தீவிரப்படுத்துவதிலும் ஒருமுகப்பட்டிருக்கும். 

அமெரிக்கா மற்றும் உலகெங்கிலுமான மக்களுக்கு போர் பரந்த விளைவுகளைக் கொண்டிருக்கும் என்றாலும் கூட, ஜனநாயக கட்சியினரும் ஊடகங்களும் போருக்கு ஓர் உரிமைக்கட்டளை பெறுவதற்குள் தேர்தல்களைத் திருப்பி விட முயன்று வருகிறார்கள். கிளிண்டன் பிரச்சாரம் ட்ரம்ப் மீதான அதன் விமர்சனங்களை அவரது பாசிசவாத கொள்கைகள் மீது மையப்படுத்தவில்லை, மாறாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உடன் அவருக்கு தொடர்புகள் உள்ளது என்று கூறுவதன் மீதும், அரசியல்ரீதியான மற்றும் மனோரீதியான காரணங்களுக்காக அவர் அமெரிக்க தலைமை தளபதியாக சேவையாற்ற பொருத்தமற்றவர் என்பதன் மீதும் மையப்படுத்தி உள்ளது.    

குறிப்பாக முன்னொருபோதும் இல்லாதளவில் உயர்மட்ட உளவுத்துறை மற்றும் இராணுவ அதிகாரிகள் தலையீடு செய்துள்ள நிலையில், கிளிண்டன் பிரச்சாரத்தின் இயல்பு அதன் சொந்த வழியிலேயே முதலாளித்துவ வர்க்க ஜனநாயகத்தின் நெருக்கடியை எடுத்துக்காட்டுகிறது. தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்துவதும், ஏற்கனவே புஷ் மற்றும் ஒபாமா ஆல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதற்கும் கூடுதலாக அரசியலமைப்பு ஆட்சி வடிவங்களைக் கலைப்பதும் அவர் தயாரித்து வரும் வேலைத்திட்டத்திற்கு அவசியப்படுகிறது. 

சில காலமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வந்த நடைமுறைகள் 2016 தேர்தல்களில் முன்னுக்கு வந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்க உச்சநீதிமன்றத்தால் ஒரு தேர்தல் களவாடப்பட்டு ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் பதவிக்குக் கொண்டு வரப்பட்டு இப்போது பதினாறு ஆண்டுகள் ஆகின்றனது, அந்த சம்பவத்திற்கு முன்னதாக, ஹிலாரி கிளிண்டன் கணவருக்கு எதிராக தயாரிக்கப்பட்ட பாலியல் மோசடி அடிப்படையில் ஒரு முறைகேடு பிரச்சாரம் நடத்தப்பட்டிருந்தது.     

2000 தேர்தல்களுக்குப் பின்னர் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் நடந்தன, இது மிக குறைந்தபட்சமேனும் அரசு எந்திர பிரிவுகளுக்கு முன்கூட்டியே தெரிந்தே நடத்தப்பட்டது. “பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட 9/11 தாக்குதல்கள், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் படையெடுப்புகளையும், லிபியா மற்றும் சிரியாவில் போர்கள் மற்றும் ஈராக்கில் ஒரு புதிய போர், தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் உள்நாட்டு உளவுபார்ப்பு, குவாண்டனாமே பே, சிஐஏ சித்திரவதை மற்றும் டிரோன் தாக்குதல்களையும் கொண்டு வந்தது. சோவியத் ஒன்றிய கலைப்பில் இருந்து முதலாம் புஷ் நிர்வாகத்தால் ஒரு "புதிய உலக ஒழுங்கு" பிரகடனப்படுத்தப்பட்டது வரையில் பின்னோக்கி ஒரு கால் நூற்றாண்டு போரானது, இராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புகளின் அதிகாரம் மற்றும் செல்வாக்கு அளப்பரிய அளவிற்கு வளர இட்டுச் சென்றுள்ளது.   

அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்டகால சீரழிவு, அதனுடன் சேர்ந்து நிதியியல்மயமாக்க நிகழ்முறை, அத்துடன் ஒட்டுண்ணித்தனம் மற்றும் ஊக வணிகங்களில் இருந்து கற்பனை செய்ய இயலாத மட்டங்களில் செல்வவளத்தைத் திரட்டியுள்ள ஒரு புதிய பிரபுத்துவத்தின் வளர்ச்சி ஆகியவையே ஜனநாயக ஆட்சி வடிவங்களின் நெருக்கடிக்கு அடியில் உள்ளன. சமூக சமத்துவமின்மை சாதனை மட்டங்களில் உள்ளது, மக்களில் மிகப் பெரும்பான்மையினர் வேலைவாய்ப்பின்மை, பொருளாதார பாதுகாப்பின்மை மற்றும் வறுமை-மட்டத்திலான ஊதியங்கள் என ஏதோவொன்றை அல்லது கூடுதலானதை எதிர்கொள்கின்றனர்.

மக்கள் உணர்வின் அடிப்படை போக்கு இடதை நோக்கி உள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் கிளிண்டன் மற்றும் ட்ரம்ப் உட்பட ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறையையும் வெறுப்போடு மற்றும் அவமதிப்போடு பார்க்கிறார்கள் என்ற மறுக்கமுடியாத உண்மையை சமீபத்திய கருத்துக்கணிப்புகள் உறுதிப்படுத்துகின்றன. மக்களின் பரந்த பிரிவுகள் பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வில் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்கு ஒரு வழியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் சாண்டர்ஸ் இன் பிரச்சாரத்திற்குக் கிடைத்த பரந்த ஆதரவு எடுத்துக்காட்டியது. இந்த உணர்வு அரசியல் வெளிப்பாட்டைக் காணாது என்பதை உலக சோசலிச வலைத் தளம் முன்உணர்த்தி அதற்கு எதிராக மீண்டும் மீண்டும் எச்சரித்ததையே சாண்டர்ஸ் பிரச்சாரத்தின் இறுதிமுடிவு உறுதிபடுத்தியது.

உழைக்கும் மக்கள் அரசியல்ரீதியில் ஒழுங்கமைக்கப்படவில்லை என்பதுடன் அவர்கள் எதிர்கொண்டிருக்கும் பணியில் அவர்கள் நனவுப்பூர்வமாக இல்லை என்பது தான் உழைக்கும் மக்கள் முகங்கொடுக்கும் மிகப்பெரிய அபாயமாகும். சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் தொழிலாள வர்க்கத்தின் நனவையும், சுயாதீனமான அரசியல் அமைப்பையும் அபிவிருத்தி செய்ய துல்லியமாக நோக்கம் கொண்டுள்ளது. 

அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் முன்னிருக்கும் அபாயங்களைத் தந்திரோபாய சூழ்ச்சிகள் மூலமாகவோ அல்லது நல்லெண்ணங்களைக் கொண்டோ தீர்க்க முடியாது. என்ன அவசியப்படுகிறதென்றால், முதலாளித்துவ வர்க்க ஜனநாயகத்தின் நெருக்கடி ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடியைப் பிரதிபலிக்கிறது என்ற புரிதலின் அடிப்படையில் ஒரு சளைக்காத அரசியல் போராட்டமாகும்.

சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்புவது மிகவும் அவசரமான அரசியல் பணியாகும். சோசலிச சமத்துவக் கட்சியில் இணைவதற்கும் மற்றும் அதன் தேர்தல் பிரச்சாரத்தை ஆதரிப்பதற்கும் இதுவே சரியான தருணமாகும்.